செவ்வாய், 23 அக்டோபர், 2018

அழிவை நோக்கி சிபிஐ


சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானாவை இடைநீக்கம் செய்ய நேரடியாகவும் எழுத்துபூர்வமாகவும் நேற்று (அக்டோபர் 23) பரிந்துரைத்துள்ளார். 
அஸ்தானா சிபிஐயில் பணிபுரியத் தகுதியற்றவர் என்பதால் அவரை குஜராத்துக்கே அனுப்புமாறும் பிரதமர் அலுவலகத்தைக் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையில் ராக்கேஷ் அஸ்தானா தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானவை என்று கூறி அதனடிப்படையில் நடந்துவரும் விசாரணைக்குத் தடை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தார். 
அந்த வழக்கின் விசாரணையானது நேற்று (அக்டோபர் 23) நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். வழக்கின் விசாரணையானது தற்போதைய நிலையில் அப்படியே தொடர வேண்டும் என்றும், அடுத்த விசாரணை வரும் 29ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர். 

அது மட்டுமின்றி வரும் 29ஆம் தேதி வரை அஸ்தானாவை கைது செய்யவும் தடை விதித்துள்ளனர்.
ஏற்கெனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிபிஐ போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் தேவந்தர் குமாருக்கு ஏழு நாட்கள் காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயர்ந்த உளவுத் துறை நிறுவனமாகவும் சாதாரண மக்களிடம்கூடப் புகழ் பெற்றதுமான சிபிஐயின் தலைமையிலேயே மோதல்கள் நடந்துவருவது இந்நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை இழக்க வைத்து சேதத்தை ஏற்படுத்திவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனால் கடந்த ஞாயிறன்று பிரதமர் அலுவலகமே இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு அரசின் புகழுக்கு இழுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 
அதற்கு அடுத்த நாளே தேவந்தர் குமாரின் அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. நிலைமை இப்படித் தீவிரமாகும் அளவுக்கு சிபிஐயில் என்னதான் நடக்கிறது?

சிக்கலான இந்த வழக்கைப் புரிந்துகொள்ள முதலில் இதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களையும் அவர்களின் பின்னணியையும் புரிந்துகொள்வோம். பிரச்சினையின் மூலகர்த்தாவாக உள்ள சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானாவிலிருந்து தொடங்குவோம். 

இவர் 2002இல் குஜராத் மத கலவரங்களுக்கு அடிப்படையாக இருந்த சபர்மதி ரயில் எரிப்பு வழக்கை விசாரித்தவர். அன்றைய மோடி அரசுக்கு ஆதரவாக முடிவறிக்கை தந்தவர்.
இதனாலேயே மோடி பிரதமரானவுடன் 2017இல் சிபிஐயின் இயக்குநராக மோடியால் நியமிக்கப்பட்டார். 

அப்போது காமன் காஸ் என்ற அரசு சாரா நிறுவனம், சிபிஐ இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தது. அந்த நிறுவனம் குஜராத்திலுள்ள ஸ்டெர்லிங் என்ற பயோ டெக் கம்பெனியிடமிருந்து லஞ்சம் பெற்றவர்களின் பட்டியல் ஒரு டைரியில் இருந்ததாகவும், அந்தப் பட்டியலில் அஸ்தானாவின் பெயரும் இருந்ததாகவும் தெரிவித்தது.

தற்போதைய சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா டெல்லியில் முன்னாள் போலீஸ் ஆணையராக இருந்தவர். 
குஜராத் ஸ்டெர்லிங் பயோடெக்கில் லஞ்சம் வாங்கியவர்களின் பட்டியலில் ரஸ்தானா பெயர் இருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் சிபிஐயின் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்படுவதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர். 
ராக்கேஷ் அஸ்தானா


அதே சமயத்தில், வர்மா இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழக டெண்டர் விஷயத்தில் லாலு பிரசாத் யாதவ் ஊழல் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக அஸ்தானாவால் குற்றம்சாட்டப்பட்டவர். 

அந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டுவரும் சிபிஐ அதிகாரிகளின் பணிகளில் தலையிட்டு வருபவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர். இந்த வழக்கில் இன்னொரு கதாபாத்திரமான மொய்ன் குரோஷி இவரிடமிருந்து லஞ்சம் பெற்றதில் இருந்துதான் பிரச்சினை வெளியே வந்தது.

மொய்ன் குரோஷி என்பவர் இறைச்சி ஏற்றுமதியாளர். 
இவர் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றம் செய்து ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. 
இவரின் வழக்கை சிபிஐக்குள் விசாரிக்க அஸ்தானா சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 

மொய்ன் குரோஷியைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசத்தில் அவர் ஒரு சாதாரண சிறிய இறைச்சிக் கடை வைத்திருந்தவர். பின்னர் அவர் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டார். 
காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்திப் பெரிய இறைச்சி ஏற்றுமதியாளராக மாறினார். 
அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், அவர் சிபிஐயின் அன்றைய இயக்குநர் ஏ.பி.சிங் என்பவருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

அன்றைய காலகட்டத்தில், மொய்ன் குரோஷியின் செல்வாக்கும் வெற்றியும் பரவலாகத் தெரியத் தொடங்கியது. அப்போது உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசும்போது, மொய்ன் குரோஷி மீது வருமான வரிச் சோதனை வராமல் தடுத்து சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார் என்றார். 

மோடி ஆட்சிக்கு வந்ததும் 2014இல் அமலாக்கத் துறையினர் குரோஷி வீட்டில் சோதனை நடத்தி ரூ.200 கோடி கறுப்புப் பண மோசடி நடந்துள்ளதாக வழக்குத் தொடர்ந்தனர்.
அலோக் வர்மா


இந்தக் கறுப்புப் பணப் பரிமாற்ற மோசடி வழக்கிலிருந்து குரோஷியை விடுவிக்கவே சத்தீஷ் சானா என்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் இடைத்தரகராக உள்ளே நுழைகிறார். இதைக் கண்டுபிடித்த சிபிஐ அவரை விசாரிக்கிறது. 
அக்டோபர் 4ஆம் தேதியன்று சத்தீஷ் சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில் அஸ்தானா குரோஷியிடம் வழக்கிலிருந்து விடுவிக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார். 
தொடர்ந்து சத்தீஷை சிபிஐ விசாரித்ததில் தனக்கும் இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், ஒருமுறை சத்தீஷ் துபாய்க்குச் சென்றபோது அங்கு முதலீட்டு வங்கியாளராக உள்ள மனோஜ் பிரசாத் என்பவரைச் சந்தித்துள்ளார். 
அந்தச் சந்திப்பின்போது குரோஷியின் வழக்கை டாப் லெவல் சிபிஐ அதிகாரி மூலம் (ராக்கேஷ் அஸ்தானா) சீக்கிரமாக சுமுகமாக முடித்துக் கொள்ளலாம் என்றும் அந்த சிபிஐ உயரதிகாரி இதற்காக 5 கோடி ரூபாய் கேட்கிறார் என்றும் பேரம் பேசியுள்ளார். மனோஜ் பிரசாத்தின் சகோதரா் சோமேஸ் பிரசாத், அஸ்தானா பேசியதற்கான ஆதாரமாகத் தனது மொபைலில் அவர் பேசியது புகைப்படத்துடன் பதிவானதைக் காட்டியுள்ளார். 
பின்னர் சத்தீஷ் குரோஷியின் சார்பாக தான் அந்தப் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததாகக் கூறியுள்ளார். இந்த இடைத்தரகர்கள் இருவரும் ஒரு ரா நிறுவனத்திலுள்ள உயரதிகாரியின் மகன்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்த விவரமானது சிபிஐயின் இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் இடைத்தரகராகச் செயல்பட்ட மனோஜ் பிரசாத்தைக் கைது செய்தனர். 
அவர் மாஜிஸ்திரேட்டின் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில் ரா அமைப்பில் இரண்டாம் நிலையிலுள்ள சாமந்த் குமார் கோயல் என்ற உயர்நிலை அதிகாரியும் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு குரோஷியின் வழக்குகளை முடித்துவிடலாம் என்று கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
ஆனால், கோயலின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குரோஷியின் வழக்கை விசாரித்து வந்த சிபிஐயின் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் தேவந்தர் குமாரும் இந்த இடைத்தரகு வேலையிலும் பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளார் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
வழக்கு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா, சிபிஐ போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் தேவந்தர் குமார், இடைத்தரகர்களான துபாயைச் சேர்ந்த மனோஜ் பிரசாத், அவரது சகோதரர் சோமேஸ் பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மோடியால் நியமிக்கப்பட்டவரும் அவரின் செல்லப்பிள்ளையுமான ராக்கேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு புகழ்பெற்ற நிறுவனம் அதன் அழிவில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். 
சிபிஐ, சிபிஐயுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ நிறுவனம் எப்படி அரசியல் நலன்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இவ்வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது. 
பிரதமர் அலுவலகத்திற்கு இரண்டாம் முறையாக அலோக் வர்மாவை வரச் சொன்னபோது அஸ்தானாவையும் வரவழைத்துள்ளனர்.
 எதற்காக அஸ்தானாவும் வரவழைக்கப்பட்டார் என்பது மர்மமாக உள்ளது. ஒருவேளை பிரதமர் மோடி அஸ்தானாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டாலும் அவ்வளவு சுலபமாக சிபிஐயின் தற்போதைய இயக்குநர் அலோக் வர்மாவை ஓரங்கட்டிவிட முடியாது. இத்தகைய நபரான அஸ்தானாதான் விஜய் மல்லையாவின் வழக்கை விசாரித்து வருகிறார். 
அந்த வழக்கின் விசாரணைக்கு என்ன நேரும் என்பதை விளக்க வேண்டியதில்லை. அஸ்தானாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் உள்ளதால் அவர் கைது செய்யப்பட வேண்டும். 
தற்போதைய இயக்குநர் அலோக் வர்மாவின் பதவிக் காலம் ஜனவரியில் முடிவுற உள்ளது. 
அடுத்த இயக்குநராகப் பதவி ஏற்கும் இயக்குநர் அஸ்தானாவின் வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து நடத்துவாரா என்பதே இப்போதைய கேள்வி.
                                                                                                                                                                                                          -

-சேது ராமலிங்கம்

நன்றி:மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...