வியாழன், 20 அக்டோபர், 2011

அன்னாவும்,பூசனும்


அண்ணா ஹசாரே பிரஷாந்த் பூஷன்
அண்ணா ஹசாரே - பிரஷாந்த் பூஷன்
‘நல்லவனெப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்’ – கிராமப்புறங்களில் ‘நல்லவர்களைப் போல’ வேடமிடுபவர்களைக் குறித்த சொலவடை இது. நாமும் முன்பே சொன்னோம். நாம் சொன்னதை லேசுபாசாய் சந்தேகித்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் சந்தேகத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இதோ, கடந்த வாரம் ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதை அடுத்து அண்ணாவின் பக்த கோடிகள் போட்டுக் கொண்டு திரிந்த ‘நல்லவன்’ முகமூடி கிழிந்து தொங்குகிறது.
கடந்த பண்ணிரண்டாம் தேதி தனது அலுவலகத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த ப்ரஷாந்த் பூஷனை, இந்தர் வர்மா என்கிற இந்து பயங்கரவாதி கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திலேயே மடக்கிப் பிடிக்கப் பட்ட இந்தர் வர்மா, தற்போது விசாரணைக் காவலில் இருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இவரது கூட்டாளிகளான தாஜிந்தர் பால் சிங் மற்றும் விஷ்னு குப்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏன் இந்தத் தாக்குதல்? சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ப்ரஷாந்த் பூஷன், அங்கே சமாதான முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லையென்றால் காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதனடிப்படையில் சுமூகமாக தீர்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றும், இதே விஷயத்தை முன்னாள் பிரதமர் நேருவும் கூட சொல்லியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பகுத்தறிவோடும் நியாய உணர்வோடு சிந்திக்கும் எவருமே இதில் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்தின் கோரத்தாண்டவங்கள் இன்று வரை தொடர்ந்து வருவதும் நாம் அறிந்தது தான்.
ப்ரஷாந்த் பூஷனின் மேற்கண்ட பேட்டியைத் தொடர்ந்து கடும் ஆத்திரமுற்ற இந்து பயங்கரவாதிகள், தங்களது ட்விட்டர் பக்கத்தில் ப்ரஷாந்த் பூஷனைத் தாங்கள் ‘தண்டிக்கப்’ போவதைக் குறித்து வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு ட்விட்டர் தளத்தில் எழுதிய தாஜிந்தர், “அவன் என் தேசத்தைப் பிளக்க முயற்சித்தான்; நான் அவன் மண்டையைப் பிளக்க முயற்சித்தேன்” என்று எழுதியுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இம்மூவருமே சங்பரிவார் பயங்கரவாத கும்பலோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இதில், தாஜிந்தர் பால் சிங் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவில் செயல்பட்டவர். எல்.கே அத்வானி உள்ளிட்ட அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார். இவரும் இவரது இன்னொரு கூட்டாளி விஷ்னு குப்தாவும் சேர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் ‘பகத்சிங் க்ராந்தி சேனா’ என்கிற ஒரு அமைப்பைத் துவக்கியிருக்கிறார்கள். பின்னர் இவர்களோடு ‘பிங்க் ஜட்டி’ புகழ் ஸ்ரீராம் சேணாவைச் சேர்ந்த இந்தர் வர்மாவும் இணைந்து கொள்கிறார்.
மேற்கண்ட சம்பவம் எதிர்பாராத ஒன்று இல்லை. சும்மா இருந்த தென்காசியில் சும்மா ஒரு எழுச்சியை உண்டாக்க சும்மா ஒரு குண்டு வைத்துப் பார்ப்போமே என்று சும்மா திட்டமிட்டு முயற்சித்துப் பார்த்த ‘நல்லவர்கள்’ அல்லவா இந்த ‘இந்து பயங்கரவாதிகள்’ . ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் இருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இணையதளங்களிலும் அதற்கு வெளிப்படும் எதிர்விணைகளில் அண்ணா பக்தர்களின் மேக்கப் இல்லாத ஒரிஜினல் முகம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது தான் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது.
அண்ணா தீவிரமாக சர்க்கஸ் நடத்திக் கொண்டிருந்த காலங்களில் ‘எங்கள் நோக்கமே ஊழல் ஒழிப்பு ஒன்று தான். எங்களுக்கு அரசியல் சார்பே கிடையாதாக்கும்’ என்றெல்லாம் நீட்டி முழக்கியவர்கள் இவர்கள். இந்த அரசியலற்றவாதம் போற்றுதலுக்குரியதாக கருதப்பட்டது.அண்ணா ஹசாரேவின் கோரிக்கைகளில் இருந்த மொண்ணைத்தனம் கூட இந்த அரசியலற்றவாதத்தின் பின்னே தான் பதுங்கிக் கிடந்தது. நம்ம உள்ளூர் காக்கி டவுசர் ஜெயமோகனே ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரேவை சீசன் பார்த்து ஆதரித்த போதும் கூட பார்வையாளர்களுக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை. ஆனாலும் நாம், சென்னையில் கூடிய அண்ணா பக்தர்கள் பலரின் பட்டாபட்டி காக்கி நிறத்தில் பல்லிளித்ததை நமது நேரடி ரிப்போர்ட்டில் அப்போதே பதிவு செய்திருந்தோம்.
ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தில் வெளியாகியிருந்த செய்திக் கட்டுரையின் மறுமொழிகளில் அண்ணா பக்தர்கள் அவரைத் தாளித்துக் கொட்டினர். ஆயிரக்கணக்காக நீளும் அந்த மறுமொழிகளில் அண்ணா கும்பல் போற்றும் அரசியலற்றவாதத்தின் கோர முகம் குறுக்கும் நெடுக்குமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை கண்மூடித்தனமாய் ஆதரித்திருந்த அண்ணா ரசிகர்கள், ப்ரஷாந்த் பூஷனை சும்மா தாக்கியதோடு நிறுத்தியிருக்கக் கூடாது என்றும், அவரது எலும்புகளை ஒடித்திருக்க வேண்டுமென்றும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், ப்ரஷாந்த் பூஷன் மட்டுமில்லாமல் அருந்ததி ராய் போன்ற ஜனநாயக உணர்வுள்ள பிறரையும் குறிப்பிட்டு ‘வெட்டு, குத்து, கொல்லு’ பாணியில் வெறியைக் கக்கியிருக்கின்றனர்.
அரசியலற்றவாதமென்பதே தீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் முகமூடி தானென்பதற்கு இந்த சம்பவம் மிக அண்மைய உதாரணம். வேறு விதமாகச் சொல்வதானல், அரசியலற்றவாதமும் வலதுசாரி இந்து பயங்கரவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம். உதாரணமாக, நமது மைலாப்பூர் ‘பார்த்தசாரதிகள்’ கூட அரசியலற்றவர்கள் தான். இவர்கள் எந்த கட்சியின் அரசியலோடும் தம்மை இணைத்துக் கொள்வதை பார்க்க முடியாது தான். தேவைப்பட்டால் பாரதிய ஜனதாவைக் கூட சில சந்தர்பங்களில் விமர்சிக்கவும் செய்வார்கள். ஆனால், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் இவர்களின் சிந்தனையும் துக்ளக்கின் சிந்தனையும் ஆச்சர்யப்படுமளவிற்கு மிக எதார்த்தமாகவும் இயல்பாகவும் ஒத்துப் போவதை கவனித்திருப்பீர்கள். சிறுபாண்மையினர், தலித்துகள், இடஒதுக்கீடு, இந்தியா, இந்தி போன்ற குறிப்பான விஷயங்களில் இவர்கள் அப்படியே ஆர்.எஸ்.எஸ் பேசுவது போலவே பேசுவார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் இரட்டைக் குவளை பிரச்சினை பற்றி நான்’காண்டு’களுக்கு முந்தைய தமிழ் வலைப்பதிவர்களில் ‘நூல்’ கம்பேனியார் உதிர்த்திருந்த முத்துக்களைத் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
இது ஒருபுறமிருக்க, ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா கும்பலின் பிற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களும் பால் தாக்ரேவின் குரலாகவே ஒலித்திருக்கிறது. காஷ்மீரைக் காக்க உயிரையே தரத் தயார் என்று சவடால் அடித்த அண்ணா ஹசாரே, ப்ரஷாந்த் பூஷனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். மேலும் அவர் தமது குழுவில் தொடர்வதைப் பற்றி குழுவின் மையக் கூட்டத்தின் வைத்து முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளார். இதே போன்ற கருத்தையே கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், சந்தோஷ் ஹெக்டே மேதா பட்கர் போன்ற பிறரும் தெரிவித்துள்ளனர்.
மிகச் சிக்கலான காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் தீர்வு எதுவாக இருக்க வேண்டுமென்றாலும் அது அம்மக்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகக் கோரிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்க முடியும். ஆனால், வல்லாத்தளையாக அந்த மக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அகண்ட பாரதக் கனவில் மிதக்கும் இந்து பயங்கரவாதிகள் காலம் காலமாக சொல்லி வருவது தான். இதைத் தான் இப்போது அண்ணா கும்பலும் அவரது ரசிகர் பட்டாளமும் வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆக, அரசியலற்றவாதமும் – மத பயங்கரவாதமும் அடிப்படையில் வேறு வேறானதல்ல என்பதை இச்சம்பவம் இன்னுமொரு முறை பொட்டிலடித்தாற் போல் உணர்த்தியிருக்கிறது. ஊழலை ஒழித்து இந்தியாவையே புரட்டிப் போட்டு விடுவோமென்று சவடாலடிக்கும் அண்ணா கும்பலின் ஊழல் பற்றிய புரிதலே அடிமட்டத்தில் இருப்பது ஒருபுறமென்றால், இவர்கள் பார்ப்பன இந்து பயங்கரவாதம், மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் போன்ற கேந்திரமான பிற விஷயங்களில் என்னவிதமான கருத்துக்களை வைத்திருக்கிறார்களென்பது வெகு சில சந்தர்பங்களில் தான் வெளிப்பட்டிருக்கிறது. முன்பு மோடியை அண்ணா ஹசாரே புகழ்ந்ததும் இப்போது ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதும் அவைகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இனிமேலும் அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை நம்பி பின்னே செல்லத் தான் வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

 

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் : அப்துல் கலாம்!

கோவை: கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்துல் கலாம் கூறினார். கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு சார்பில் தொழிலதிபர் ஜிகே.சுந்தரம் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்றார். பின்னர் மாணவர்கள், பொதுமக்களின் கேள்விகளுக்கு, அப்துல் கலாம் அளித்த பதில்கள்: இந்திய தொழில்நுட்ப கழகமான ஐஐடியின் தரத்தை சிறந்த ஆசிரியர்கள் நியமனம், போதுமான பயிற்சி, சிறந்த பாடத்திட்டம் மூலம் மேலும் மேம்படுத்த முடியும்.  இந்தியாவில் தற்போது 235 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. 2020ல் 400 மில்லியன் டன்னாக அதிகப்படுத்த வேண்டும். காற்று, சூரிய சக்தி, நீர், பயோ டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அணுமின் உற்பத்தி தவறில்லை. அணுமின்சாரம் தவிர்க்க முடியாதது. அதே நேரம் அணுமின் நிலையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் வராது என்பதையும், அதன் பாதுகாப்பையும் விஞ்ஞானிகள் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

புதன், 5 அக்டோபர், 2011

உள்ளே போகும் அமைச்சர்கள்


தி.மு.க. பிரமுகர்களுக்கு எதிராக ‘இதோ வருகிறது.. அதோ வருகின்றது’ என்று கூறப்பட்டுவந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் தீவிரமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் வீடு, மற்றும் அவரது உறவினர் வீடுகள் உட்பட, 11 இடங்களில் நேற்று (செவ்வாய் கிழமை) அதிரடி சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க. பிரமுகர்களை தேர்தல் வேலைகளில் இருந்து ஒதுக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் ஆளும் கட்சிக்கு உள்ளது. அதற்காக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நில அபகரிப்பு வழக்குகள், ஆட்களை ஜாமீனில் வெளியே வரவும் விட்டுவிடுகிறது.
இதற்கு மேலும் தி.மு.க. தலைகளை வெளியே வராமல் உள்ளே வைத்திருக்க ஒரே வழி, சொத்துக் குவிப்பு புகார்கள்தான் என ஆட்சி மேலிடத்துக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கடந்த வார இறுதியில் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்ட இரு போலீஸ் உயரதிகாரிகளுடன், முதல்வரே நேரில் இதுபற்றி அரை மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்ததாகத் தெரியவருகின்றது. போலீஸ் அதிகாரிகளிடம், குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்களின் பைல்களையும் கையோடு எடுத்து வருமாறு கார்டனில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
வார இறுதியில் நடைபெற்ற ஆலோசனையின் அதிரடி ஆக்ஷன்தான், செவ்வாய்க் கிழமை அரங்கேறியது என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில். “இருந்து பாருங்கள், இது வெறும் தொடக்கம்தான். அடுத்தடுத்து பல இடங்களில் ரெய்டு நடக்கப் போவதைக் காணப்போகிறீர்கள்” என்றால் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.
ரெய்டுக்கு உள்ளாகிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் கடலூர். அங்குள்ள முட்டம் கிராமத்தில் அவர் வீடு உள்ளது. அங்கே சோதனை நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் நடாத்திவரும் கல்லூரிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன. அங்கும் ரெய்டு நடந்துள்ளது. நாட்டார்மங்கலத்தில் இரண்டு கல்லூரிகள், பழஞ்சாநல்லூரில் மூன்று கல்லூரிகள் என்று அந்த லிஸ்ட் உள்ளது.
இதைத் தவிர, இந்த முன்னாள் அமைச்சருக்கு ஏகப்பட்ட பினாமிகள் உள்ளனர் என்பது ஊரெல்லாம் தெரிந்த ரகசியம். அந்த வகையிலும் அவரது உறவினர்கள் பலரது வீடுகள் அதிரடி ரெய்டுக்கு உள்ளாகியுள்ளன. முட்டம், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், வடலூர், திருமுட்டம், கூரைநாடு (மயிலாடுதுறை) ஆகிய இடங்களில் உள்ள அவரது பல உறவினர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் போய் இறங்கினார்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார்.
சொந்த ஊர் வீட்டைத் தவிர, அமைச்சர் சென்னைக்கு வரும்போது தங்குவதற்காக அவருக்கு பாலவாக்கம், 5-வது குறுக்கு தெருவிலும் ஒரு வீடு உள்ளது. அங்கும் சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகளின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சரின் மெயின் டாக்குமென்ட் காப்பகமே இந்த வீடுதான் என்கிறார்கள். மற்றைய இடங்களில் உள்ள சொத்துக்கள் பலவற்றைப் பற்றிய விபரங்கள், மற்றும் அவை தொடர்பான கணக்குகள் அனைத்தும் சென்னை வீட்டில் வைத்தே மெயின்டெயின் பண்ணியதாகவும் கூறப்படுகின்றது.
அவற்றில் பல ஆவணங்கள் இப்போது போலீசின் கைகளில்!
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் இடங்களில் நடைபெற்ற ரெய்டு தமக்கு வெற்றி என்கிறார்கள் ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள். இந்த ரெயிடுக்கு முன்னர் பல தகவல்களை கடந்த சில வாரங்களாகவே அவர்கள் திரட்டி வந்திருப்பதாகவும் அந்த அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடைபெற்ற ரெய்டு, பல தி.மு.க. மாஜிகளை கலங்க வைத்திருப்பதாக தி.மு.க. வட்டாரங்களிலேயே கூறுகின்றார்கள். உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் உற்சாகமாக இறங்க தயாராக இருந்த சில முன்னாள் அமைச்சர்களே, இப்போது லேசாகப் பின்னடிக்கத் தொடங்குகிறார்கள்.
இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா என்ற ரீதியில் போகிறதாம் அவர்களின் நினைப்பு.
இதற்கிடையே தி.மு.க. வட்டாரங்களில் பரவலாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மற்றொரு கதை, மிக விரைவில் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரும் ரெய்டு வளையத்துக்குள் வருவார்கள் என்பதுதான். சொந்தக் கட்சிக்காரர்களே இதுபற்றி வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு, இவர்கள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அவ்வளவாக லைம்-லைட்டுக்குள் வராத ஆள். அவரது சொத்துக்கள் மீது நடாத்தப்பட்டது ஒரு ட்ரையல் ரன்தான் என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.
நன்றி:விறுவிறுப்பு
                           மச்சக்கன்னி......
              ,

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...