திங்கள், 20 ஜூன், 2011

ஆன்மிக விபசாரிகள்,,,


தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார். ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி. கேரளாவின் கோட்டக்கல்லில் சிவா சிரிங்க ஆஸ்ரமத்தை நடத்தி வந்த ஞானசைதன்யா என்ற சாமியாரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் சந்திக்கிறார்.
வில்லியம்ஸின் தொழில் சிக்கலுக்கு ஞானசைதன்யாவின் ஆன்மீகத் தீர்வு என்ன? வில்லியம்ஸின் மகள் அமரந்தா முற்பிறப்பில் சைதன்யாவின் மனைவியாக இருந்தவளாம். இப்பிறப்பிலும் அந்த உறவு தொடர்ந்தால்தான் வில்லியம்ஸின் பிரச்சினை தீருமாம். இதை அந்த வெள்ளையர் ஏற்றுக்கொண்டு தனது மகளை சாமியாருக்கு மணமுடிக்கிறார். சீர் வரிசையாக பதினைந்து இலட்சம் பணமும், டாடா சஃபாரி காரும் கொடுக்கப்படுகிறது. நாலைந்து மாதம் குடும்பம் நடத்திய பிறகு சாமியாரின் சித்திரவதை தாங்காமல் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஆசிரமத்திலிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தற்போது சாமியார் சிறையில்!
சாமியாரின் பூர்வாசிரமப் பெருமைகள் என்ன? சுதாகரன் என்ற பெயர் கொண்ட அந்தச் சாமியார் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மூவரைக் கொன்ற ஒரு கொலை வழக்கில் பதினான்காண்டுகள் சிறையிலிருந்து பின்னர் ஆசிரமம் ஆரம்பித்து ஞானசைதன்யாவாக அவதாரம் எடுத்தவர்.
வில்லியம்ஸின் கதையை நம்ப முடிகிறதா? சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாகரீக உலகில் வாழும் ஒரு பணக்கார வெள்ளையரது குடும்பம் ஒரு பக்கா கிரிமினலிடம் ஏமாந்ததை என்னவென்று சொல்ல? இதை வெறும் முட்டாள்தனம் என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது.
மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து, “ஆன்மீகத்தை அண்டினால் உடனடிப் பயன் கிடைக்கும்’ என்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்பிக்கையூட்டும்படி மக்களிடம் உபதேசிப்பதுதான் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப்படும் மதத்தின் இரகசியம். மதத்தைச் சுரண்டல் லாட்டரி போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்
இந்தியாவில் உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருபது ஆண்டுகளில் தரகு முதலாளிகள் மட்டும் செழிக்கவில்லை, பல பணக்காரச் சாமியார்களும் தலையெடுத்திருக்கிறார்கள். இவர்களின் வர்த்தக மதிப்பு நீங்கள் எதிர்பாராத அளவிலானது.
பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி. டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஆண்டு வர்த்தகம் 350 கோடி. நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு 300 கோடி.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் 400 கோடி. பணக்காரர்களுக்காக மட்டும் சில ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி. இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். இவர்களின் சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக அமிர்தானந்த மாயியின் சொத்து மதிப்பு மட்டும் 1200 கோடியைத் தாண்டுகிறது.
பங்காரு சாமியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர். ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சாயிபாபா ஆசிரமங்களின் மதிப்போ சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே “குணமாக்கி’ நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.
அமெரிக்காவில் வெள்ளையர்க ளுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத்தரும் தீபக் தாக்கூர், இந்தியாவின் ஆன்மீகப் “பெருமையை’ மேற்குலகில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்து ஒரே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும், இளம் தலைமுறையின் தொழில் முனைவராகவும் விளங்குகிறார்.
ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்குவதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.
“”எல்லாவற்றையும் இலவசமாக செய்வோமென்று நாங்கள் வாக்குறுதி ஏதும் தரவில்லை. அது சாத்தியமில்லை. வணிகரீதியில்தான் நாங்கள் இயங்க முடியும்” என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒத்துக்கொள்கிறார் பாபா ராம்தேவ். “”நாங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனம் போலத் தான் இயங்கமுடியும், எங்களை நாடி வரும் பக்தர்களுக்குரிய தரமான வசதிகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று வர்த்தகரீதியாகச் செயல்படுவதை நியாயப்படுத்துகிறார் ரவி சங்கர்.

வாழ்வின் நெருக்கடி சாமியார்களின் வளர்ச்சிப்படி

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்
ஆன்மீக குருஜீக்களின் ஆசிரமங்கள் பன்னாட்டு நிறுவனங்களைப் போல பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மெல்லவும், விரைவாகவும், இடத்திற்கேற்ப அரித்தும் அழித்தும் வரும் புதிய பொருளாதாரக் கொள்கை நடுத்தர மக்களுக்கு சில வழிகளில் தற்காலிகமாகவேனும் முன்னேற்றத்தைக் காட்டி வருகிறது. ஆயினும் இது ஒரு பாதிதான். மறுபாதியில் அந்த முன்னேற்றம் வாழ்க்கையில் புதுப்புதுச் சிக்கல்களை அன்றாடம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.
செலவு பிடிக்கும் உயர் கல்வி, மருத்துவ மற்றும் காப்பீட்டுச் செலவுகள், உயர்ந்து வரும் வீட்டுக்கடன் வட்டி, வாழ்க்கைத்தரத்திற்காக வாங்க வேண்டிய வாகனக் கடன்கள் எல்லாம் சேர்ந்து அச்சுறுத்துகின்றன. ஒரு நாளில் நடைபெறும் பங்குச்சந்தையின் குறியீட்டெண் வீழ்ச்சியோ, ரியல் எஸ்டேட்டின் மதிப்புச் சரிவோ இலட்சக் கணக்கான நடுத்தர வர்க்கத்தினரின் சில ஆண்டு நிம்மதியைக் குலைக்க போதுமானது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஏ.எஸ், மருத்துவபொறியியல் படிப்புகள் அரசு பதவிகள், வங்கி வேலைகள், தனியார் நிறுவன உயர் பதவிகள், அதி வருவாய் கிடைக்கும் கணினித் துறையின் முக்கியப் பதவிகள் முதலானவை எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆயிரக்கணக்கான துணை இயக்குநர்கள் துணை நடிகர்கள் மத்தியில் ஒரு சிலருக்குத்தான் வெள்ளித்திரையின் கடாட்சம் கிடைக்கும்.
எனினும் அனைவருக்குள்ளும் “வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிடமுடியும்’ என்ற மாயை நீக்கமற நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இலக்கு உருவாக்கும் ஆசை, ஆசை ஏற்படுத்தும் போட்டி, போட்டிக்குப் பின்னான தோல்வி… இறுதியில் சித்தத்தின் சமநிலை சீர் குலைகிறது. கிடைக்காத வாழ்க்கை மாயமானாக ஓடுகிறது. கைக்கெட்டிய வாழ்க்கையோ கறிக்கடையைச் சுற்றி வரும் நாய்போல ஏக்கத்தில் உழல்கிறது.
சமூக இயக்கத்திற்கான உற்சாகத்தைத் தரவேண்டிய ஓய்வு, பரபரப்பாய் பசி அடக்கி பிணியெழுப்பும் நொறுக்கு தீனியாகியிருக்கிறது. வாழ்வின் முன்னேற்றத்தை, பண்பாட்டை கனவு கண்டு, நனவில் படைக்கத் தூண்டவேண்டிய பொழுதுபோக்கு என்பது வக்கிரத்தின் வடிகாலாகப் பரிணமித்திருக்கிறது. மனிதனின் உழைப்பு நேரத்தை மிச்சப்படுத்தி ஓய்வு தந்து அவனது ஆளுமை பரிணமிக்க உதவ வேண்டிய நவீனத் தொழில் நுட்பமோ எதிர்த்திசையில் பயன்படுகிறது. உழைப்பின் சுமையை சகிக்கவொண்ணாதவாறு கூட்டுகிறது.
நகர வாழ்க்கை, பரபரப்பு, வேகம், போட்டி, பொறாமை, சதி, வஞ்சகம்,வெறி, வக்கிரம், இயலாமை, பதட்டம், மன அழுத்தம், மனச்சிதைவு, இரத்த அழுத்தம், முதுமையில் வரவேண்டிய சர்க்கரை நோயும் மாரடைப்பும் இளமையையே காவு கேட்பது…… என முடிவேயில்லாமல் அலைக்கழிக்கிறது வாழ்க்கை என்ற இந்த நச்சுச் சுழல். வாழ்வின் பிரச்சினை சிந்தனையில் சீர் குலைந்து, உடல் நலிவாய் வெளிப்பட்டு, “என்னை மீட்பார் யாருமில்லையா’ என்று புலம்புகிறது, குமுறுகிறது, அழுகிறது, வெடிக்கிறது, சில வேளை தற்கொலையிலோ, வேறு வகை வன்முறைகளிலோ முடிகிறது.
இருப்பினும் ஆகப் பெரும்பான்மையினர் இந்த விஷச்சூழலிலிருந்து சிறிதாகவோ, பெரிதாகவோ பணம் செலவழித்து கடைத்தேறிவிட முடியும் என்ற நம்பிக்கையை நவீன ஆன்மீக ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. நடப்பில் சாதாரணமாகவும், கனவில் அசாதாரணமாகவும் வாழும் நடுத்தர வர்க்கம் இந்த ஆன்மீகச் சந்தையின் வலையில் சிக்கிக் கொள்வதற்குக் காத்திருக்கிறது. தங்களது தனித்துவத்தை மார்க்கெட் செய்துகொள்ளும் திறமை மட்டுமே ஆன்மீகவாதிகளுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் தனிநபர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் காட்ட வேண்டியதில்லை.

சாமியார்களின் தனித்துவம் சோப்புக்கட்டிகள் பலவிதம்!

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்
மஹரிஷி மகேஷ் யோகியின் சீடராக இருந்த ரவிசங்கர் பிரிந்து வந்து, “வாழும் கலை’ என்ற கவர்ச்சிகரமான “கான்செப்ட்’ஐ உருவாக்கி ஸ்ரீஸ்ரீ ரவி சங்கராக தனது பேரரசைப் பரவச்செய்தார். தியானம், யோகம், அறிவுத் திறன் வகுப்புக்கள் முதலானவற்றைக் கலந்து ஒரு புதிய கட்டமைப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் புதிய சோப்புக்கட்டி போல அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றார். இவரது குருவான மரித்துப் போன மகேஷ் யோகி மேலை நாடுகளில் மணிக்கு சில ஆயிரங்கள் டாலர் கட்டணத்தில் ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக்கொடுத்து பிரபலமானார். இதே சரக்கை ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஏற்ப விற்று, அவர்கள் மூலம் புகழ் பெற்றார் தீபக் தாக்கூர்.
ஒத்த பெயர் கொண்ட ஷிர்டி சாயி பாபாவின் மகிமையைப் பயன்படுத்திக்கொண்டு பஜனைகள் மூலமும், பல நூறு கோடி நன்கொடையின் சிறு பகுதியை தர்ம காரியங்கள் செய்தும், முக்கியமாக மாஜிக் வழியாக லிங்கங்கள், மோதிரங்கள், நகைகளை வினியோகித்தும் பெயர் பெற்றார் சாயி பாபா. இவரது சிறிய நகல்தான் தற்போது கடலூர் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் பிரேமானந்தா.
சாயி பாபாவின் சத்ய நகர் ஆசிரமத்தில் சில ஆண்டுகள் தங்கி பின்பு கேரளாவில் தனி ஆசிரம் ஆரம்பித்தவர் அமிர்தானந்த மாயி. மற்ற குருமார்களைப் போல வாய் சாமர்த்தியம் இல்லாத மாயியை அம்மன் போல அலங்காரம் செய்து, பக்தர்களைக் கட்டிப் பிடிக்கும் டெக்னிக்கைப் பயன்படுத்திப் பிரபலமடைய வைத்தார்கள். கடந்த 30 ஆண்டுகளில் மாயி அரவணைப்பால் “ஆன்மீக ரீசார்ஜ்’ செய்யப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாம்.
வட இந்தியாவில் யோகாசனத்தையும், ஆயுர்வேத மருந்துகளையும் வைத்து எய்ட்ஸைக் கூட குணப்படுத்த முடியும் என்று பிரபலமானவர் பாபா ராம்தேவ். இதை அறிவியலும், மருத்துவர்களும் உண்மையல்ல என்று நிராகரித்து விட்டாலும் மக்களை புற்றீசல் போல இழுப்பதில் ராம்தேவ் தோல்வியடையவில்லை. ஆஸ்ரம் பாபு, சுதன்ஜி மகாராஜ், மற்றும் முராரி பாபு முதலானோர் டெல்லியின் பண்ணை வீடுகளில் பணக்காரர்களுக்கு மட்டும் தலைக்கு ரூபாய் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு ஆன்மீக வகுப்பு நடத்துகிறார்கள். முடிந்தபின், இதே பண்ணை வீடுகளில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் கேளிக்கைக் கூத்துக்களை நடத்துவது வழக்கம்.
90ஆம் ஆண்டு இறந்து போன ரஜனீஷ் சாமியாரின் நிறுவனம் முன்பு போல் வீச்சாக இயங்கவில்லை என்றாலும் செக்ஸ் குரு என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரஜனீஷீன் புத்தகங்கள், ஒலிஒளிக் குறுந்தகடுகள் பல பத்து மொழிகளில் இன்றும் கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. செக்ஸ், நிர்வாணம், தியானம், யோகம் முதலியவற்றைக் கலந்து பிரபலமான ரஜனீஷின் பக்தர்களில் வெளிநாட்டவர் அதிகம். வாழ்வின் வற்றாத இன்பங்களைத் தேடி அலைந்த மேலைநாட்டவருக்கு இவர் வடிகாலாகத் திகழ்ந்தார்.
நடனம், பஜனை, கிருஷ்ண வழிபாடு மற்றும் ஆச்சாரமான பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்திய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் 80,90களில் உச்சத்தை அடைந்தது. இவர்களுக்கும் உலகெங்கும் கிளைகள் உண்டு. இயற்கை வாழ்வு, யோகம், தியானம் முதலானவற்றை முன்னிறுத்தி ஈஷா யோக மையத்தை நடத்தி புகழ் பெற்றவர் ஜக்கி வாசுதேவ். “வாழ்க வளமுடன்’ என்ற முத்திரையுடன் பிரபலமானவர் வேதாத்ரி மகரிஷி.
மேல் மருவத்தூரின் பங்காரு சாதரணமக்களை ஈர்க்கும் வண்ணம் சிவப்பாடை, பெண்கள் பூசை, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம், வருடம் முழுக்க சடங்குகள் என்று வளர்ந்திருக்கிறார். மேல் மருவத்தூர் சென்றால் நோய் தீரும், திருமணம் நடக்கும், வியாபாரம் செழிக்கும் என்று பல கதைகளை பக்தர்களே இலவசமாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வசதியான தனிநபர்களின் மன அமைதி, மகிழ்ச்சி, கலைத் தவங்கள் என்று பிரபலமானது பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம். சங்கர மடம் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. கல்லூரிகள், மருத்துவமனைகள் போக அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், முதலாளிகள் முதலான மேல்மட்டத்தின் பிரச்சினைகளைத் தேர்ந்த தரகன் போல தீர்த்து வைத்து தனி சாம்ராச்சியத்தையே உருவாக்கியவர் ஜெயந்திரர்.
நற்செய்திக் கூட்டங்களில் “முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள்’ என்று சாட்சியங்களை சொல்ல வைத்து, பெரும் மக்கள் கூட்டத்தை நம்பவைத்து பெயரெடுத்தவர் டி.ஜி.எஸ் தினகரன். தொலை பேசி எண்ணில் பிரச்சினைகளைச் சொல்லி கட்டணத்தை அனுப்பி வைத்தால் பிரார்த்தனை செய்து தீர்ப்பதற்கென்றே ஒரு பெரும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். பரிசுத்த ஆவியை எழுப்பி, அதை வைத்து ஒரு பல்கலைக் கழகத்தையும் சேர்த்து எழுப்பியிருக்கிறார்.
இந்தியாவில் பள்ளிக்கூடங்களை விட கோவில்களும் சாமியார்களும் அதிகம். எனவே, பட்டியலை இம்மட்டோடு நிறுத்திக் கொள்வோம். சாமியார்களில் பழைய பாணி சாமியார்களை விட நவீன பாணி சாமியார்களுக்கு மவுசு அதிகம். இருப்பினும் இரண்டு பாணிகளும் சொல்வது ஒரே மாதிரியான விசயங்களைத்தான்.
“”குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள்”, முதலான பொத்தாம் பொதுவான விசயங்களைத்தான் அனைத்து குருமார்களும் ஓதுகின்றனர். இது போக சாமியார்களின் மகிமைகளை பக்தர்களே கண் காது மூக்கு வைத்து ஊதிப்பெருக்கிப் பிரச்சாரம் செய்வதும் இயல்பாக நடக்கிறது.

ஆன்மீக “அமைதியும்’ அறிவியல் உண்மையும்!

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட் !உண்மையில் பக்தர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை மேற்கண்ட சாமியார்களின் விதவிதமான முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமா? பலராலும் பூடகமாக வியந்தோதப்படும் ஆன்மீகத்தின் பொருள் என்ன? பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படும் யோகா முறை ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தருமா? நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சாமியார்களின் உரைகளில் சீடர்களுக்கு தெளிவு பிறக்க வாய்ப்புள்ளதா?
“மனதைக் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்தினால் இறுதியில் பேரானந்தம்’ என்பது ஆன்மீகம் என்பதற்கு இவர்கள் தரும் இலக்கணம். மனதையே ஆன்மா, ஜீவன், உடலுக்கும் உயிருக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் கற்பித்துக்கொள்கிறார்கள். இத்தகைய அரூபமான விளக்கத்தில் உண்மையோ, பொருளோ இல்லை. அறிவியல்பூர்வமாக மனது என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று. அதே சமயம் அதற்கென்று தனித்துவமான இடமும் உண்டு. ஆனால் அது தனியாய் பிறந்து வளர்ந்து செயல்படுவதில்லை. மனிதனின் உடற்கூறியலைக் கொண்டு குழந்தையின் மூளை இயல்பாக மனித மூளையாக உருவாகியிருந்தாலும் ஆரம்பத்தில் அது தன்மையில் விலங்குகளின் மூளையைப் போன்று சாதாரணமாகவே இருக்கிறது. புற உலகோடு கொண்டுள்ள தொடர்பால் மட்டுமே அது மனித மூளையின் செயல்பாட்டைப் பெறுகிறது.
உடலுக்கு வெளியே சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையை, சமூகத்தை, முழு உலகைப் புரிந்து கொள்வதாலும், தொடர்பு கொண்டு வினையாற்றுவதன் வாயிலாகவும்தான் தனித்துவத்தைப் பெறுகிறது மனித மனம். சூழ்நிலையும், வாழ்நிலையும்தான் மனதின் அகத்தை வடிவைமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. உணர்ச்சிகளாலும், அறிவுத்திறனாலும், மனிதர்கள் வேறுபடுவதன் காரணமும் இதுதான்.
மனதின் தோற்றமும், இருப்பும், செயல்பாடும் இவையென்றால் அதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? மனதின் பிரச்சினை என்பது மனிதனின் பிரச்சினை; மனிதனின் பிரச்சினை என்பது அவன் வாழ்வதற்காகப் புற உலகோடு கொண்டுள்ள தவிர்க்கமுடியாத உறவினால் ஏற்படும் பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகளினால் மனிதனிடம் இரண்டுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியானது. இரண்டாவது கருத்து ரீதியானது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தும் பிரிந்தும் வினையாற்றுகின்றன.
உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளில் மூளையும், அதனால் பாதிக்கப்படும் ஏனைய உடல் அங்கங்களும் அடக்கம். கருத்து ரீதியான பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக உறவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் மனிதன், பிரச்சினை வரும்போது சமூகத்தில் தனது இடம் குறித்த குழப்பமும், பயமும், அடைகிறான். இது முற்றும் போது சமூகத்தோடு முரண்படத் துவங்குகிறான். முரண்படுதலின் வீரியத்திற்கேற்ப அவனது சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
ஆக மனிதனது உடல் நலமும் அல்லது மூளை நலமும், சிந்தனை முறையும் ஒத்திசைந்து இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். ஆயினும் வர்க்க சமூகத்தில் இந்த ஒத்திசைவு குலைவது தவிர்க்க இயலாதது. வர்க்கப் பிளவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் இன்றைய உலகமயமாக்க காலம், மக்கள் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதையும், சாமியார்கள் வாழ்க வளமுடன், வாழுவதே கலையென்று ஆடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும் மன நலன் மற்றும் சமூக நலன் இரண்டையும் சீரடையச் செய்வதற்குரிய பொருத்தமான மருந்துகள் சாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. ஏன்?
வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனிதனும், மனதும் பாதிக்கப்படுகின்றனர் என்றால் மூளை பாதிக்கப்படுகிறது என்பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோர்வு, விரக்தி, சோகம், பதட்டம், படபடப்பு, மன அழுத்தம், போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள். குறிப்பிட்ட காரணங்களால் இவை அடிக்கடி ஏற்பட்டு நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் மனம் மெல்லமெல்லச் சிதைவது நடக்கிறது. மனச் சிதைவின் விளைவால் மூளையில் உள்ள உயிர்ம வேதியல் சக்திகளின் சமநிலை குலைகிறது. இதன் தொடர் விளைவால் பல உடல் பிரச்சினைகளும், வாழ்க்கை மீதான விரக்தியும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வென்ன?
மூளை இழந்து விட்ட சக்திகளை திரும்பப் பெறுவதன் மூலமே புண்ணாண மூளையையும், மனதையும் நேர் செய்ய முடியும். அதை மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக்கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டுபிடித்துக் குணமாக்க முடியும். மாறாக, தியானம் செய்வதன் மூலமாக, மூளை இழந்த பௌதீக ரீதியான சக்திகளைப் பெறமுடியாது.
ஏனெனில், இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளுக்கு கருத்து மருந்தல்ல. எளிமையமாகச் சொல்வதாக இருந்தால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, எலும்பு முறிவு, மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான்.
இருப்பினும், மனம் நோய்வாய்ப்படுவதற்கும், உடல் நோய்வாய்ப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. உணவின்மை, சத்துக்குறைவான உணவு, சுகாதரச் சீர்கேடுகள், நுண்கிருமிகள் முதலியவற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ, வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகிறது.
இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலைந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து, செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது, சாமியார்கள் அடிமுட்டாள்தனமாக “குணப்படுத்துவேன்’ என்று திமிராகப் பேசுவது அயோக்கியத்தனம். நியாயமாக இவர்களை போலி மருத்துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி.
யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் அவை ஒரு உடற் பயிற்சிக்குரிய நன்மையைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனிதனின் உடல் நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச் சத்து, சுகாதாரம், போதுமான ஓய்வு, உறக்கம் போன்றவையுடன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன் னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது.
அடுத்து, தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு நல்ல இசையைக் கேட்பதிலோ, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.
மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்துவமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, மனதைச் சிதைத்து வதைக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத்துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. “நான்’ எனப்படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை, உண்மையில் “நாம்’ எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு, வெறுப்பின்படி அமைந்ததல்ல; அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்.

வாழ்வின் சிக்கல்களை அருளுரைகள் தீர்க்காது!

முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்
முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்
ஆன்மீகமோ அதன் காரணங்களை அறியக்கூடாது என்பதில்தான் குறியாயிருக்கிறது. விதியும், வினைப்பயனும், மரணத்துக்குப் பிந்தைய சொர்க்கமும் நிகழ்காலத் துயரங்களுக்காக மதம் கட்டியமைத்த கற்பனையான எதிர்காலங்கள். கூடவே விதிக்கப்பட்ட வாழ்வை அல்லது அடிமைத்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கு மட்டுமின்றி அதனை ஆன்மீக ருசியுடன் இரசிப்பதற்கும் நவீன சாமியார்கள் கற்றுத் தருகிறார்கள். பக்தர்கள் தமக்குக் கிடைத்த வாழ்க்கையை இனிமையாக வாழுவதற்கு சாமியார்கள் தேனொழுகப் பேசுவதெல்லாம் ஆளும் வர்க்கம் அடக்கப்படும் வர்க்கத்திற்குச் செய்யும் உபதேசமேயன்றி வேறல்ல.
ஏற்றத்தாழ்வான, அநீதியான இந்தச் சமூக அமைப்பே மனிதர்களின் துன்ப துயரங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த அமைப்பை மாற்றாத வரை துயரங்களுக்கும் விடிவில்லை. ஆன்மீகவாதிகளோ இதற்கு நேரெதிராக நிலவும் சமூக அமைப்பைத் தக்க வைப்பதில்தான் கருத்தாயிருக்கிறார்கள். அதனாலேயே தனி மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வக்கற்றும் இருக்கிறார்கள்.
தங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நன்கொடைப் பணம் எத்தகைய வழிகளில் சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஒருவேளை, “”நேர்மையற்ற முறையில் வரும் பணத்தையும், கருப்புப் பணத்தையும் ஏற்கமாட்டோம்” என்று அவர்கள் அறிவித்தால் அடுத்த கணமே தெருவுக்கு வந்துவிடுவார்கள். ஆன்மீக நிறுவனங்கள் உயிர்வாழ்வதன் அச்சாணியே இதுதானென்றால் தனி மனிதனின் நன்னடத்தைக்கும், நிம்மதிக்கும் எப்படி வழிகாட்ட முடியும்?
பங்குச் சந்தையில் சில சமயம் இலாபமடையும் நடுத்தர வர்க்கம், பல நேரங்களில் இந்தச் சூதாட்டத்தில் சில இலட்சங்களையும் கூடவே நிம்மதியையும் இழக்கிறது. இவர்களுக்கு சாமியார்கள் என்ன தீர்வு தர முடியும்? “”பங்குச் சந்தை என்பது சூதாட்டம், அதில் முதலீடு செய்யாதீர்கள் என்று சாமியார்கள் கூறுவதில்லையே!” “”பேராசைப் படாதீர்கள், சிறிய அளவு இலாபத்துடன் திருப்தி அடையுங்கள், முதலீடு செய்யும் போது சற்று எச்சரிக்ககையாக இருங்கள்” என்றுதானே உபதேசிக்கிறார்கள்?
தற்போது துணை நடிகை பத்மாவின் பாலியல் லீலைகளை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக நாறடிக்கின்றன. இவரைப் போன்ற விளம்பர உலகில் இருக்கும் பெண்களுக்கு சாமியார்கள் என்ன நிம்மதியைத் தந்துவிட முடியும்? துகிலுரித்து தோலைக் காண்பிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்கள் இத்தொழிலை தலைமுழுகினால் மட்டுமே நிம்மதி பெற முடியும் என சாமியார்கள் வழிகாட்டுவதில்லை. மாறாக, பல திரை உலக நடிகர்களைப் பக்தர்களாகப் பெற்று தமது விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்ற பிரிவினரைவிட ஊதியம் அதிகம் பெறுவதோடு ஊக்கத்தொகையாக பிரச்சினைகளையும் கணிசமாகப் பெறுகின்றனர். இரவுப் பணி, முடிவற்ற வேலைப் பளு, இரக்கமற்ற பணியிறக்கம், வேலை நீக்கம், பண்பாட்டுச் சீர்கேடுகள், நுகர்வு வெறி, தனிநபர் வாதம், வாழ்க்கை உறவுகள் நசித்துப் போதல், முதலியனவற்றால் அல்லலுறும் இவர்களுக்குத் தேவைப்படும் தீர்வென்ன? ஒரு துடிப்பான தொழிற்சங்கங்கத்தைக் கட்டியமைத்தால் குறைந்த பட்சமாக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சுயமரியாதையுடன் பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொள்ளலாம். ஊழியர்களை எந்திரம் போலத் தேய்த்துவரும் முதலாளிகளை அடக்கியும் வைக்கலாம்.
ஆயினும் இந்தத் தீர்வை எந்தச் சாமியாரும் தர இயலாது. மாறாக, ஊழியர்களின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் முதலாளிகள், சாமியார்களை வைத்து யோகா, ஆன்மீக வகுப்புக்களையும் நடத்துகின்றனர். மொத்தத்தில் கேளிக்கை என்ற மதுவை ஊட்டி, ஆன்மீகம் எனும் அடிமைத்தனம் கற்றுத்தரப்படுகிறது. தொழிற்சங்கத்தைக் கட்டாமல் இருக்க அடியாட்களை நியமிக்கும் “அநாகரிகம்’ தேவைப்படாமல், தற்போது அந்தப் பணியினை ஆன்மீகவாதிகளை வைத்தே முடித்துக்கொள்கிறார்கள் முதலாளிகள்.

அம்பலமானாலும் ஆன்மீக அடியாட்கள் வீழ்வதில்லை!

ஆன்மீக அடியாட்கள்
அதனால் சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் ஆளும் வர்க்கம் அவர்களைக் கைவிடுவதில்லை. ஜெயேந்திரனின் வண்டவாளங்கள் சந்தி சிரித்த பின்னும் ஊடகங்கள் அவரை சங்கராச்சாரியார் என்று மரியாதையுடன்தான் அழைக்கின்றன. சீடர்களை பாலியல் உறவு கொள்ளச் சொல்லி ரசித்துப் பார்ப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ரஜனீஷ் அமெரிக்கா சென்று ரோல்ஸ்ராய்ஸ் காரில் சென்றால் சமாதி நிலை அடைவதாக 96 கார்களை வாங்கிக் குவித்தார். வரி ஏய்ப்பு, இதர மோசடிகளுக்காக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்து செத்துப்போன ரஜனீஷின் அருளுரைகள் இன்றும் தமிழில் வெற்றிகரமாக விற்கப்படுகின்றன.
சாயிபாபா குழந்தைகளையும், இளைஞர்களையும் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தும் வக்கிரம் கொண்டவர் என்பதை இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையும், ஒரு ஆவணப்படத்தின் மூலம் டென்மார்க் அரசுத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதன் பொருட்டே ஐ.நா.சபை சாயிபாபா ஆசிரமத்துடன் சேர்ந்து செய்ய விருந்த நலப்பணித் திட்டங்களை ரத்து செய்தது. புட்டபர்த்தியில் பல பாலியல் வக்கிரக் கொலைகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் சாயிபாபா இந்திய ஊடகங்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறார். முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் பாபாவின் பிறந்த நாளில் கலந்து கொள்கிறார். ஐ.நா.செயலர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் பாபாவின் மாஜிக் மோசடிகளை அற்புதங்கள் என்று புகழ்கிறார். கருணாநிதி தன் மனைவியை பாபாவின் காலில் விழச்செய்கிறார்.
மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு தலா 40 இலட்சம் வாங்கும் அமிர்தானந்த மாயியின் காலில் அத்வானியும், மத்திய அமைச்சர் அந்தோணியும் விழுகிறார்கள். மாயியின் வருமான வரி ஏய்ப்புக்கு அரசே வழி செய்கிறது. வேறெங்கும் வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்கள் மாயியின் “கட்டிப்பிடி’ ஆன்மிகத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.
விதர்பா பகுதியில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவதற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று திமிராகப் பேசும் இரவி சங்கரை தகவல் தொழில் நுட்ப யுகத்தின் குரு என்று பத்திரிக்கைகள் செல்லமாக அழைக்கின்றன.
அயோத்திப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து நின்ற ராம்விலாஸ் வேதாந்தி, பைலட்பாபா, கீர்த்தி மஹாராஜ் முதலான சாமியார்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு, பலகோடி ரூபாய் கருப்புப் பணத்தைக் வெள்ளைப் பணமாக மாற்றித் தரும் மோசடியை சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி கையும் களவுமாக அம்பலப்படுத்தியது. ஆயினும் சங்கபரிவாரங்கள் இச்சாமியார்களைக் கைவிடவில்லை.
அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன சாமியார்கள்.
________________________________________
புதிய கலாச்சாரம், செம்படம்பர் 2007

ஞாயிறு, 19 ஜூன், 2011

குற்றவாளிகள்,,,,,,

பெண்களும் ஈடுபடும் பயங்கரம் ஆபத்தான ஆசனவாய் கடத்தல்

% ஆசனவாய் மூலமாக நகைகள், ரத்தினக் கற்கள் போன்றவற்றை கடத்துபவர்களுக்கு குடல் புண், வயிற்று வலி ஏற்படும். புண் அதிகமாகி புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று டாக்டர்கள் கூறினர்.

வெளிநாடுகளில் இருந்து தங்க பிஸ்கட், வைர கற்கள் போன்றவற்றை ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் இவ்வாறு கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த கடத்தில் பெண்களும் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:

முதலில் கடத்தப்பட வேண்டிய நகை, ரத்தினக் கற்கள் போன்றவற்றை ஆணுறையில் நிரப்பி நூல் போன்றவற்றால் கட்டுகின்றனர். இதை ஆசனவாய் வழியாக உள்ளே திணித்து கடத்துகின்றனர். வாய் வழியாக என்றால், ஆணுறையை தேனில் நனைத்து விழுங்க செய்கின்றனர். 48 மணி நேரத்தில் எளிதாக வெளியே வந்து விடும். இனிமா கொடுத்தால் உடனே வந்துவிடும் என்பதால் கடத்தலுக்கு இம்முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
உயிருக்கு ஆபத்து இல்லை. என்றாலும், வயிற்றுவலி, குடலில் புண் போன்ற கோளாறு உள்ளவர்கள் இவ்வாறு செய்தால் தீராத பிரச்னைகளை ஏற்படுத்தும். புண் அதிகமாகி புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது. வயிற்றுக்குள் ஆணுறை எதிர்பாராதவிதமாக கிழிந்தால், கடத்தல் பொருட்கள் வெளியேறி, குடலை அறுத்துவிடும் அபாயமும் இருக்கிறது.  ஆபத்து இல்லை என்று கருதி பெண்களும் இத்தொழிலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...