புதன், 29 நவம்பர், 2017

சீரழிக்க காத்திருக்கும் பிட்காயின் ?

பினராயிக்கு எதிராக ஏவப்படும்  சிபிஐ 

லாவ்லின் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றமற்றவர் என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, மோடி அரசின் சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.1998-ஆம் ஆண்டு கேரள மின்சாரத்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய முதல்வர் பினராயி விஜயன், மூன்று முக்கிய நீர் மின்நிலையங்களில் உள்ள இயந்திரங்களை பராமரிக்க கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி – லாவ்லின் நிறுவனத்திற்கு 372 கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்தார் என்றும், அதில் முறையான டெண்டர் விபரங்கள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. 
உண்மையில், 1995-ஆம் ஆண்டு கேரளத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிதான் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல், பந்தியாறு, செங்குளம் நீர் மின் நிலையங்களை சீரமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவ்லின் நிறுவனத்திற்கு டெண்டர் விட்டது.
ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குள் 1996-இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கேரளத்தில் ஆட்சிக்கு வந்தது. 
எனினும், முந்தைய காங்கிரஸ் அரசு விடுத்த டெண்டரை ரத்து செய்யாமல் அதனை செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 
ரூ. 375 கோடியே 5 லட்சம் செலவில் மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், எஸ்.என்.சி. லாவ்லின் நிறுவனத்தை டெண்டர் மூலம் தேர்வு செய்த காங்கிரஸ் அரசே, திடீரென இந்தத் திட்டத்தின் மூலம் கேரள அரசுக்கு 266 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. 

2001-இல் ஆட்சிக்கு வந்ததும், விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் பினராயி விஜயன் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் ஒன்பது பேர் மீது வழக்கும் பதிவு செய்தது.
எர்ணாகுளம் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையும் துவங்கியது.ஆனால், லாவ்லின் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு இல்லை என்று அவரை 2013-ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. எனினும் ராம்குமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கேரள உயர் நீதிமன்றமும் கடந்த ஆகஸ்ட் மாதம், பினராயி விஜயனுக்கும் லாவ்லின் முறைகேட்டுக்கும் தொடர்பு இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்து விட்டது. 
தற்போது கேரள முதல்வராக இருக்கும் பினராயி விஜயன், மாட்டிறைச்சி விவகாரம், பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வெறுப்பை விதைக்கும் லவ் ஜிகாத் பிரச்சாரம் ஆகியவற்றில் மத்திய பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். 
அனைத்துச் சாதியினரை அர்ச்சகராக்கும் திட்டம், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி போன்ற விஷயங்களிலும் தனது முற்போக்கான நடவடிக்கை மூலம், சங்-பரிவாரங்களின் பழமைவாதத்திற்கு பெரும் அடி கொடுத்து வருகிறார்.
இதனால், தங்களின் இந்துத்துவ வெறுப்புக் கொள்கையை கேரளத்தில் விதைக்க முடியாமல் ஆத்திரத்தில், கேர ளத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும், ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகவும் சங்-பரிவாரங்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகின்றன. 
பாஜக தலைவர்கள் அமித்ஷா, அருண் ஜெட்லி, ஆதித்யநாத் போன்றோரும் அண்மையில் கேரளத்திற்கு சென்று கலவர முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அதில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.இந்நிலையிலேயே, தனது ஏவல்படையாக இருக்கும் சிபிஐ-யை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக மோடி அரசு ஏவி விட்டு, லாவ்லின் வழக்கில் மேல்முறையீடு செய்ய வைத்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீரழிக்க காத்திருக்கும் பிட்காயின் ?

உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்ற வேட்கையோடு முதலாளித்துவம் நடத்தி வரும் சதுராட்டங்களால் 2008ம் ஆண்டு ஏற்பட்டு மிகக்கடுமையான நெருக்கடியைப் போலவோ அல்லது அதைவிட இன்னும் கடுமையானதாகவோ பொருளாதார நெருக்கடி ஏற்படும் என சர்வதேச பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.


வெறும் 900 டாலர் மதிப்பு கொண்ட பணத்தை அல்லது பொருளை பிட்காயின் என்று சொல்லப்படுகிற டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் உலவ விடுவதன் மூலம் 10,000 ஆயிரம் டாலர் மதிப்பு அளவிற்கு இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை யுகத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற சூழலை பெரும் கார்ப்பரேட்டுகள் உருவாக்கியுள்ளன. 

நவீன வரலாற்றில் இப்படி ஒரு கொள்ளை லாபம் எதிலும் பார்க்கப்பட்டதில்லை.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் ஏடு வெளியிட்டுள்ள செய்தியில், எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாமல் – புதிதாக எந்தவொரு மதிப்பையும் உற்பத்தி செய்யாமல் டிஜிட்டல் பணம் என்ற பெயரில் பல நூறு மடங்கு லாபம் பார்க்கப்படுகிறது; 
இதற்கு முன்பு பணத்தின் மதிப்பில் இத்தனை பெரிய லாபம் பார்க்கப்பட்டது என்றால் அது 1915ம் ஆண்டுதான்; 
அப்போதும் கூட 82 சதவீதம் அளவிற்குத்தான் லாபம் பார்க்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமையிடமாக அமைந்துள்ள வாஷிங்டனின் வால்ஸ்ட்ரீட் பகுதியே உலக அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் இயங்கு தளமாக இருக்கிறது; வால்ஸ்ட்ரீட்டை மையமாகக் கொண்டு செயல்படும் மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் உலகம் முழுவதும் நிதிச் சந்தைகளில் லட்சக்கணக்கான கோடி டாலர்களை கொட்டுகின்றன; 
டிஜிட்டல் பணம் என்ற வடிவத்தில் கொட்டப்படும் இந்தப் பணம் எந்த உற்பத்தியும் செய்யப்படாமல் மீண்டும் அங்கிருந்து லட்சக்கணக்கான கோடி டாலர்களை லாபமாக அள்ளிச் செல்கிறது.
இது முற்றிலும் தங்கு தடையற்ற – உலகையே லாப வேட்டைக்காடாக மாற்றியிருக்கிற – யாராலும் நிறுத்த முடியாத மோசடியாக அரங்கேறி வருகிறது; டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் கடன் கொடுப்பதற்கோ, வட்டி வசூலிப்பதற்கோ, பண பரிவர்த்தனை செய்வதற்கோ எந்தவிதமான வரையறைகளோ, விதிமுறைகளோ, சட்டதிட்டங்களோ இல்லை; 

இதனால் நுகர்வோரின் பணத்திற்கு எந்த பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது ஒட்டுமொத்த மக்களையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நோக்கி தள்ளிவிட்டுள்ளன. 
இதன்பின்னணியில் மிகப்பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபமே இருக்கிறது. இந்தத் துறையில் முதலீடு என்ற பெயரில் பெரும் நிறுவனங்கள் மத்திய வங்கிகளில் அல்லது பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெருமளவு பணத்தை கடனாக பெற்று அதை முதலீடு செய்கின்றன.
பங்குச் சந்தையிலும் அந்தப் பணத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது. 
வங்கிகளின் கணக்குகளில் மிகப்பெருமளவு பணம் இருப்பது போல இந்த நிறுவனங்கள் காட்டினாலும் உண்மையில் ஒட்டுமொத்த பணத்தையும் இந்நிறுவனங்கள் அல்லது பெரு முதலாளிகள் சூறையாடி வேறு இடத்திற்கு கொண்டுசென்று மீண்டும் மீண்டும் டிஜிட்டல் பண வடிவில் நிதிக்கட்டமைப்பிற்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். 
அதன்மூலமாக ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் இவர்களே ஆதிக்கம் செய்கிறார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஏடு விவரித்துள்ளது.
சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகில் பிட்காயின் என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் பண முறையை 2009ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த சதோஷி நகாமோட்டோ என்பவர் தலைமையிலான முதலாளிகள் குழு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

முதலில் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்று முன்மொழியப்படும்.
எளிதானது என்று நம்பவைக்கப்படும்; மக்கள் இந்த வடிவத்திற்கு பழகியதற்கு பிறகு மத்திய வங்கிகள் மற்றும் அரசின் சட்டவிதிமுறைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு டிஜிட்டல் பண வரித்தனை என்பதே முற்றிலும் அராஜகம் நிறைந்த, சர்வாதிகாரம் நிறைந்த வடிவமாக மாறும். 
விதிமுறைகள் அனைத்தும் மீறப்படும் நிலையில் இந்தப் பணம் எளிதில் கையாள முடியாத ஒன்றாக – பெரும் துயரத்தை தரக்கூடியதாக மாறும். 
அது படிப்படியாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும். 
அதன் விளைவாக இந்த உலகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று சர்வதேச நிதி விவகார வல்லுநரான ஆன்ட்ரே தாமோன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் எச்சரித்திருக்கிறார்.
==============================================================================================


சைம(சீமா)னின் கொள்கை விளக்க தத்துவம்

டிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியன் தலைமறைவாகி விட்டார். 
தலை மறைவானாலும் அவரது காசு செல்வாக்கு அங்கிங்கெனாதபடி சகல இடங்களிலும், ஆட்களிடத்திலும் பகிரங்கமாக வெளியே வருகிறது. 
சீனு ராமசாமி, வெற்றி மாறன், கலைப்புலி தாணு துவங்கி பலரும் அன்புச் செழியனுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கின்றனர்.
முத்தாய்ப்பாக நாம் தமிழர் சீமான் களத்திற்கு வந்து விட்டார். “மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் ஃபைனான்ஸ், தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா…?” என்று அவர் சாடியுள்ளார். 
நன்றி:வினவு.

 “முத்தூட் ஃபைனான்ஸ் என்று போடுகிறீர்களே, முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்” என்று கொதிக்கிறார்.
வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.
2011 தேர்தில் அ.தி.மு.க எனும் கொள்ளைக் கூட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு காசு இல்லாமல் அவரது ‘தம்பி’ ஒருவரிடம் வட்டிக்கு ஐந்து இலட்சம் கடன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்தாராம். 
அதே போல அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும் என்கிறார்.
வெளிப்படையான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எவையும் அரசு நிர்ணயத்திருக்கின்ற வட்டியைத் தாண்டி வசூலிக்க முடியாது. அப்படி தாண்டினால் அதுதான் கந்து வட்டி என்பது கூட அறிஞர் சீமானுக்கு தெரியவில்லை. 
சட்டப்பூர்வமாக கடன் கொடுக்கும் வங்கிகள் மக்களிடம் அடித்து வசூலிப்பதை நாம் எதிர்த்துப் போராடுவதைப் போல அன்புச் செழியன் போன்ற மாஃபியாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
சீமானோ முன்னதைச் சொல்லி நியாயம் பேசுவது போல அன்புச்செழியனை விடுதலை செய்கிறார். சீமானின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் அமீர் கூறுகிறார்.

ஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்?
கந்து வட்டி கொடுத்தாலும் ,அதை வாங்கி மீள முடியாமல் மாண்டாலும் இருவரும் தமிழினம் என்றால் எதுவுமே தப்பில்லை.என்பதுதான் சைமன் என்கின்ற சீமானின் கொள்கை விளக்க தத்துவம்.
அதுவே மார்வாடிஇன்னும்  பிற வந்தேறிகள் என்றால் கந்துவட்டி கொடுமைக்கு தூக்கிலிட வேண்டும் என்பதுதான் இதன் "உள்ளடக்கம்."
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கொலை வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷாவை ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ண லோயாவின் மரணம், கொலை என அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சொராபுதீன் கொலை வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ண லோயா. 

அவரது உறவினர்கள், ‘காரவன்’ என்கிற ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் இந்தகுற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். 
2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நீதிபதி பி.எச்.லோயாவின் உடல், உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் சக நீதிபதியின் மகளது திருமண விழாவில்பங்கேற்க லோயா சென்றிருந்தார். 
முதல்நாள் இரவு 11 மணிக்கு மனைவி ஷர்மிளியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அன்றைய தினம் நடந்தவற்றை அப்போது மனைவியிடம் தெரிவித்துள்ளார். நாக்பூரில் அரசுவிருந்தினர் மாளிகையான ரவி பவனில் சக நீதிபதிகளுடன் உள்ளதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு மறுநாள் காலை அவரது மரணச்செய்தியைத் தான்அவரது குடும்பத்தினரால் கேட்கமுடிந்தது. மாரடைப்பை தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 
ஆனால், அவரது உடல் நலம் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும், அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
நாட்டில் மிகப்பெரும் விவாதத்துக்குள்ளான சொராபுதீன் என் கவுண்ட்டர் வழக்கை மட்டுமே அந்தநேரத்தில் லோயா விசாரித்துவந்தார். 

நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவை 2005-06 காலகட்டத்தில் நடந்த 2 என்கவுண்டர் கொலைகளில் குற்றவாளியாக சிபிஐ சேர்த்திருந்தது. 
சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த சொராபுதீன் ஷேக்கையும் அவரு மனைவி கொளசர்பீஷயையும் குஜராத் காவல்துறையினரின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் 2005 நவம்பரில் கைது செய்து காவலில் எடுத்துக்கொண்டனர். பின்னர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் எனக் குற்றம்சாட்டி போலி என்கவுண்டர் நாடகத்தின் மூலமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். 
 இச்சம்பவத்தில் சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006 டிசம்பரில் கொலை செய்யப்பட்டது அமித்ஷா மீதான இரண்டாவது வழக்காகும்.
வழக்கு விவரங்களை ஒற்றை நீதிபதி விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மூன்று நீதிபதிகள் மாறிமாறி வந்தனர். 
சாட்சிகளிடம் விசாரணை நடத்தத் தொடங்கி ஓராண்டு கடந்தபின்னர் 2014 ஜுனில் முதல் நீதிபதி ஜெ.டி.உல்பதி மாற்றப்பட்டார்.

அடுத்து லோயா வந்தார். அவரதுமரணத்திற்கு பிறகு வந்த எம்.பி.கோசவி, தன்னை குற்றமற்றவராக கோரும் அமித்ஷா தரப்பு வாதத்தை 2014 டிசம்பர் 15 முதல் 3 நாட்கள் கேட்டார். 
டிசம்பர் 30இல் 75 பக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் அமித்ஷா அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
  • லோயாவின் உடலைப் பார்த்த போது ரத்தத் துளிகள் அவரது உடைகளில் காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
  • தலையின் பின்பக்கம் அடிபட்டிருந்தது.பெல்ட் எதிர்பக்கமாக திரும்பியும், முழுக் கால்ச்சட்டையின் பெல்ட் சொருகும் கிளிப்புகள் கிழிந்த நிலையிலும் காணப்பட்டன.
  • மறு உடற் கூராய்வு நடத்துவதற்காக அவரது சகோதரியும் மருத்துவருமான பியானி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் லோயாவின் நண்பர்களும்சக நீதிபதி உள்ளிட்டோரும் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனகேட்டுக்கொண்டனர்.
  • விருந்தினர் மாளிகையிலிருந்து லோயாவை ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அன்று இரவு அவருடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த விருந்தினர் மாளிகையிலிருந்து அதிக தூரத்தில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. உடனடியாக ஆட்டோ கிடைப்பதும் சிரமம். அந்த நள்ளிரவில் எப்படி ஆட்டோ பிடித்தார்கள் என்று குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 அது மட்டுமல்ல, லோயாவை மருத்துவமனையில் அனுமதித்த போதும் உடனிருந்தவர்கள் குடும்பத்தினருக்கு விவரம் தெரிவிக்கவில்லை. 
லோயாவுக்கு மருத்துவமனையில் அளித்த சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் மறுக்கவும் செய்துள்ளது. 
மருத்துவமனை ஊழியர்களும் லோயாவுடன் இருந்தவர்களும் காவல்துறையினரும் நடந்துகொண்ட விதம் சந்தேகமளிக்கும் விதத்தில் இருந்ததாக, பியானி கூறினார். சிறிய அளவில் இருமல் வந்தால் கூட, மருத்துவரான தன்னைச் சந்திக்கும் லோயாவுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு உடல்நிலை இருந்ததில்லை எனவும் பியானி தெரிவித்துள்ளார்.
லோயாவின் உடற்கூராய்வு அறிக்கையில் ரத்த சம்மந்தமுள்ள சகோதரர் கையெழுத்து பதித்துள்ளதாக ஆவணங்களில் காணப்படுகின்றன. ஆனால் அதுபோன்ற ஒரு உறவு தங்களுக்கு இல்லை எனவும், கையெழுத்திட்ட நபர் குறித்து எந்தவிவரமும் தெரியாது எனவும் பியானி தெரிவித்துள்ளார். 
ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளரான ஈஸ்வர் பஹேட்டி என்பவர்தான் லோயாவின் மரணத்தை அவரதுஉறவினர்களுக்கு தெரிவித்துள்ளார்.  இவருக்கும் லோயாவுக்கும் என்ன தொடர்பு என்கிற விவரமும்குடும்பத்தினருக்கு தெரியாது. 
நான்கு நாட்களுக்குப் பிறகேலோயாவின் செல்போன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லோயாவின் மரணச் செய்தியை ஊடகங்கள் உரிய முறையில் கையாளவில்லை.
சொராபுதீனின் சகோதரர் ரூபாபுத்தீன் நீதிபதியின் மரணம்தொடர்பாக சிபிஐக்கு கடிதம் எழுதியிருந்தார். 

புதன், 22 நவம்பர், 2017

எதிர்ப்பிற்கு என்ன காரணம்?

சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, 'பத்மாவதி' படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

உயிரோடு எரிப்போம், தலையை வெட்டுவோம் என்றெல்லாம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. 

ஆனால், 111 ஆண்டுகளாக, சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு, நாடகமாக, புத்தகமாக, சினிமாவாக வெளி வந்துள்ளது. 
அப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு இப்போது தலை எடுத்தால் கோடி என்று எழுகிறது?
பட விளம்பரத்துக்காக இருக்கலாமோ?

பத்மாவதி படம் இன்னும் தணிக்கைக்கு கூட போகவில்லை.
அதற்குள் ஆட் சேபனைக்குரிய காட்சிகளை  கண்டறிந்தது எப்படி ?
இதில் நமது விஸ்வரூபம் வாடை அடிக்கிறது அல்லவா?
தணிக்கையாகும் முன்பே எதிர்ப்பைக் கிளப்ப ஆட்சியாளர்காளால் மட்டும்தான் முடியும்.சித்தூர் கோட்டையை மூடி சுற்றுலாப் பயணிகளை போராட்டக் காரர்கள் விரட்டி அடிக்கும் நிலை அங்குள்ள ஆள்வோர் துணையின்றி நடக்குமா என்ன?
இதற்கு முன்னர் எத்தனையோ ராணி பத்மனி கதைகள் புத்தகம், நாடகம்,திரைப்படம் ,தொலைக்காட்சி தொடராக பலவடிவங்களில் வந்துள்ளது.நமது தமிழில் கூட 'சித்தூர் ராணி பத்மினி' என்று வந்துபோயுள்ளது.

அதற்கில்லா எதிர்ப்பு இப்போது தலை விரித்து ஆடி தலைவாங்குமளவு போவது பின்னணி இல்லாமலா இருக்கும்.?

கடந்த, 1906ம் ஆண்டு பெங்காலி மொழி கவிஞரும், நாடக ஆசிரியருமான கிஷிரோத் பிரசாத் வித்யாவினோத் என்பவர், பத்மினி வாழ்க்கை வரலாற்றை நாடகமாக வெளியிட்டார். 
தற்போது எதிர்ப்பு கூறப்படும் அலாவுதீன்கில்ஜி, சித்தூர் ராணா, ராணி பத்மினி ஆகியோரை சுற்றியே இந்த நாடகத்தின் கதை களம் இருந்தது. 

1909ம் ஆண்டு அபனிந்திரநாத் தாகூர் என்பவர், ' ராஜ் கஹானி' என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். 
இதுவும், ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தான் கூறியது.

கடந்த, 1963ம் ஆண்டு, 'சித்தூர் ராணி பத்மினி' என்ற பெயரில் தமிழ் திரைப்படம் வெளியானது. 
இதில், பத்மினியாக, நடிகை வைஜெயந்தி மாலா, பத்மினியின் கணவர் ராணா ரத்தன் சிங்காக, நடிகர் சிவாஜி, அலாவுதீன் கில்ஜியாக, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்தனர்.
 இந்த படத்திற்கு அப்போது எந்த எதிர்ப்பும் இல்லை. 
இந்த திரைப்படம் வெற்றியம்  பெறவில்லை. 

அதற்கு ஒரு ஆண்டுக்கு பிறகு, 'மகாராணி பத்மினி' என்ற பெயரில் இந்தி திரைப்படம் வெளியானது. இதில், பத்மினியாக அனிதா குஹா, அவரது கணவராக ஜெய்ராஜ், கில்ஜியாக சாஜன் ஆகியோர் நடித்தனர். 
இந்த படமும் வெற்றி படமாக அமையவில்லை. 

இருப்பினும், முகமது ரபி, ஆஷா பேஸ்லே, சுமன்கல்யாண்புர், உஷா மங்கேஷ்கர் ஆகியோரின் பாடல்கள் பிரபலமாகின. 
இந்த படத்திற்கும் எந்த எதிர்ப்பும் இல்லை.


இதன் பிறகு, 2009ம் ஆண்டு சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் என்ற நிறுவனம் சார்பில், ' சித்துத் கி ராணி பத்மினி கா ஜோஹுர்' என்ற பெயரில் ஒரு 'டிவி' தொடரை துவக்கியது. 
ஆனால், படபிடிப்பு செலவுக்கு ஏற்றவாறு, டி.ஆர்.பி., ஆதரவு இல்லாததால், இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. 

இந்த தொடர்களுக்கும் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 
ஷியாம் பெனகல், சித்தூர் ராணி பத்மினி கதையை 'டிவி' தொடராக வெளியிட்டார். 

'பாரத் ஏக் கோஜி' என்ற பெயரில் வெளியான அந்த தொடரில் அலாவுதீன் கில்ஜியாக நடிகர் ஓம்பூரி, பத்மினியாக சீமா கேல்கர், ரணா ரத்தன் சிங்காக, ராஜேந்திர குப்தா ஆகியோர் நடித்து இருந்தனர்.

பத்மாவதி படத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது: 

"இந்தப்படம் இதுவரை மத்திய தணிக்கை குழுவின் சான்றிதழை பெறவில்லை. அந்நிலையில் இதுபற்றி முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர இயலாது. எனவே தடை செய்ய கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறோம் "
என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அலாவுதீன் கில்ஜியாக  ரன்வீர் சிங்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 பத்மாவதி எனும் ராணி வரலாறு என்ன  தெரியுமா?
  • மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய சூஃபி கவிஞர் மத்திய இந்தியாவில் பேசப்படும், தற்போது இந்தியின் ஒரு அங்கமாகக் கருதப்படும் 'அவதி' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத்' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
  • தற்போதைய ராஜஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மாவதி, ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி என்று ராஜபுத்திரர்கள் கூறுகின்றனர். வாய் வழி வரலாற்றில் அவர் ரத்தன் சிங் என்று அறியப்படுகிறார்.
  • ரத்தன் சிங் போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி மேவார் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய சித்தோர்கார் மீது படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து தப்பிக்க பத்மாவதி தனது கணவனின் சிதையில் உடன் கட்டை ஏறியதாக ராஜபுத்திரர்கள் நம்புகின்றனர்.
  • அவருடன் பல ராஜபுத்திர பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு இறந்ததாக ராஜஸ்தானில் ஒரு வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.
  • அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே உறவு இருந்ததாக தவறான செய்தி இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும், ராணி பத்மாவதியை தெய்வமாக வணங்கும் ராஜபுத்திரர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
  • பத்மாவதி கற்பனை பாத்திரம்தான், அவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கிய கர்னி சேனா அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கி அவரின் சட்டையைக் கிழித்தனர்.
  • கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா, சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று வியாழன்று கூறியிருந்தார்.
  • சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.
  • யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு அத்திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.
  • இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன்  "எனக்கு தீபிகாவின் தலையை (உயிரை) பாதுகாக்க வேண்டும். அவரின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்.அதைவிட அவரது சுதந்திரத்தை. அதை அவருக்கு கிடைப்பதற்கு மறுக்காதீர்கள்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
======================================================================================

புதன், 15 நவம்பர், 2017

"தொடர்பு எல்லைக்கு வெளியே" ரிலையன்ஸ் !

''ரிலையன்ஸ் செல்போனிலிருந்து யாருக்கும் போன் பேசமுடியவில்லை... எந்த அழைப்புகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் வருவதில்லை...'' என்று கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு முழுக்க ரிலையன்ஸ் செல்போன் வாடிக்கையாளர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர். 
இந்நிலையில், 'ரிலையன்ஸ் நிறுவனம் தனது செல்போன் சேவையை நிறுத்திவிட்டது!' என்று மக்களிடையே கிளம்பியிருக்கும் செய்தி அதன் வாடிக்கையாளர்களை நிலைகுலையச் செய்திருக்கிறது.
இதற்கிடையில், ரிலையன்ஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவந்த விநியோகஸ்தர்களும் விற்பனையாளர்களும் ரீசார்ஜ் கூப்பன்களை விற்க முடியாமலும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமலும் விக்கித்து நிற்கின்றனர். 
ஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்களைக் கையில் கொடுத்து, மிகப்பெரிய செல்போன் புரட்சியைத் தொடங்கி வைத்த 'ரிலையன்ஸ்' நிறுவனம்மீது, கோடிக்கணக்கில் மோசடி குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது. 
ரிலையன்ஸ் செல்போன் ரீசார்ஜ் கூப்பன்களை விற்கும் ,சில கடைக்காரர்கள்  மல்லையாவுக்கும், அனில் அம்பானிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மல்லையா  மாட்டிக் கிட்டார் ,அனில் அம்பானியை இன்னும் 'டிக்ளேர்' பண்ணலை... அவ்வளவுதான். ரீசார்ஜ் கூப்பன்களை லட்சக்கணக்கில் கையில் வைத்துக்கொண்டு, விற்கவும் முடியாமல், கம்பெனிக்கே திருப்பி ஒப்படைக்கவும் முடியாமல்,  ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தவிக்கிறோம்" என்றனர்.

ரிலையன்ஸ் செல்போன் குறித்து வருகிற தகவல்கள் அனைத்தும் உண்மைதான். 
 ரிலையன்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நூற்றுக் கணக்கானோர் தீர்வுக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.
 'ஐநூறு ரூபாய்க்கு இரண்டு செல்போன்கள்' என்று அனில் அம்பானி, டிசம்பர் 2002-ல் ஒரு திட்டம் கொண்டு வந்தபோது, அதில் சி.டி.எம்.ஏ. மட்டுமே இருந்தது. 
அதாவது ரிலையன்ஸ் சிம் கார்டை செல்போனிலிருந்து வெளியில் எடுக்கவோ, வேறு நிறுவன சிம் கார்டுகளை அந்த செல்போனில் பொருத்தவோ முடியாதவாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடி சி.டி.எம்.ஏ. திட்டம் சரியாகப் போகாததால், அனைத்து 'சிம்' கார்டுகளும் ரிலையன்ஸ் செல்போனுக்கும் பொருந்தும் விதமாக ஜி.எஸ்.எம். சிஸ்டத்தைக் கொண்டு வந்தார்கள். 
ஆனால், அந்த ஜி.எஸ்.எம் சிஸ்டமும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் மார்க்கெட்டில் சரிவரப் போகவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான், ரிலையன்ஸ் செல்போன்களுக்கு வரக்கூடிய  'டவர்-லைன்' (சிக்னல்)களை மொத்தமாக சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். 
'ரிலையன்ஸ் டவர் எங்கேயும் கிடைக்கவில்லை'  என்று ஹெட் ஆபீசுக்குப் பொதுமக்கள் யாரும் போவதில்லை. லோக்கலில் ரீ சார்ஜ் செய்த கடைக்கும், செல்போன்களை வாங்கிய கடைக்கும்தான் போய் சண்டை போடுகிறார்கள் .


 'ட்ராய்' விதிகளின் படி, 90 நாட்களுக்கு முன்பாக ஓர் அறிவிப்பு கொடுத்துவிட்டுத்தான், நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். 
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் அப்படி எதையுமே செய்யவில்லை.  டாக்-டைம் ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களில் தொடங்கி, விற்பனையாளர்கள் வரையில் அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' என்ற நிலை வந்த பிறகுதான் எந்த நிறுவனமும் தங்களின் நெட் வொர்க்கை இப்படி நிறுத்த முடியும். அப்போதுதான் வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் நஷ்டம் வராது. 
மேலும், குறிப்பிட்ட செல்போன் சர்வீஸிலிருந்து வேறு செல்போன் நிறுவன சர்வீஸுக்கு மாறுவதற்கு ஏதுவாக  மொபைல் நம்பர் போர்டிங் (porting) வசதியை பழைய நிறுவனமே செய்துகொடுக்கும். 
பழைய நிறுவனம் அப்படிச் செய்யாமல் போனால், புது நம்பர் வாங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆதார், கியாஸ், வங்கி என அனைத்து இடங்களிலும் ரிலையன்ஸ் சிம் நம்பரைத் தொடர்பு எண்ணாகக் கொடுத்து வைத்தவர்களின் நிலைமை பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. 
இப்போது வேறு வழியில்லாமல், கடைக்காரர்களே சில செல்போன்  நிறுவனங்களிடம் பேசி, இந்தப் பிரச்னைகளை தீர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள் . அந்த எண்களை பிற செல்போன் நிறுவனங்களுக்கு மாற்றி இணைப்பை தரக்கூறுகிறார்கள்.
ஆனால் ரீசார்ஜ்,டாப் அப் சிறுகடைக்காரர்களிடம் தேங்கிக்கிடப்பதை மீண்டும் பணமாக்கும்  பிரச்னையைத்தான் தீர்க்க முடியவில்லை. 
ரீசார்ஜ் கூப்பனில் ஆரம்பித்து பல விஷயங்கள், நஷ்டத்தில்  தேங்கிக் கிடக்கின்றன. 
தமிழ்நாட்டில் மட்டும் பல கடைக்காரர்களும் 5 கோடி ரூபாய்க்கும் மேல்  நஷ்டம். 
இந்திய அளவில் இது எத்தனை கோடிகளைத் தாண்டியிருக்குமோ?. 
 ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பதில் சொல்ல ஆட்கள் இல்லை. தொடர்பு எல்லைக்கு வெளியே ரிலையன்ஸ் நிர்வாகம் ஒளிந்திருக்கிறது .
டிராயும் ,அரசும்  இதில் தலையிட்டு வாடிக்கையாளர்கள்,விற்பனையாளர்களை காப்பாற்ற நல்ல முடிவைச் சொல்லவேண்டும்.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

மாபியா கடலில் சிறு துளி?


வருமான வரித்துறையின் சூறாவளி சோதனையில் சிக்கியுள்ள சசிகலா மற்றும் அவரைச் சார்ந்த மன்னார்குடி கும்பல், பலரது வயிற்றெச்சரிச்சலை கொட்டி, அடாவடியாக சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளது. 
அவர்களின் பெரும்பாலான சொத்துக்களின் பின்னணியில், அதன் உரிமையாளர்களின், வேதனையும், கண்ணீரும் மறைந்திருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, வீடியோ கேசட்டை வாடகைக்கு கொடுத்தவர் சசிகலா. இன்றோ, சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துப் பட்டியலில், 50க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இடம் பெற்றுள்ளன. 
இவை, கடலில் ஒரு துளி போன்றதே. இது மட்டுமின்றி, ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, விவசாயம், ஆயத்த ஆடை என, சசி கும்பல், ஜெ.,வின் பெயரைக்கூறி, சொத்து சேர்க்காத துறையே கிடையாது.

ஜெ.,வை பயன்படுத்தி பெற்ற, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தில், சொத்துக்களை வாங்கி குவிக்க, 'லெட்டர் பேடு' நிறுவனங்களை வைத்து கணக்கு காட்டியதில் துவங்கி, உரிமை யாளர்களை மிரட்டி சொத்துக்களை வாங்கியது வரை, அவர்கள் செய்த, தில்லாலங்கடி வேலைகள் கணக்கில் அடங்காதவை.
'ஜெயா பப்ளிகேஷன்ஸ்' எனும், லெட்டர்பேடு நிறுவனத்தின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டதை, உதாரணமாக கூறலாம். 

அந்நிறுவனத்திடம், அதற்காக, கோடிக்கணக்கில் பணம் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அந்நிறுவனத்தை, நிர்வகிக்கும் அதிகாரத்தை, சசிகலாவுக்கு, ஜெ., வழங்கி இருந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி, குன்ஹா, 'ஜெயலலிதா, தவறான வழியில் சேர்த்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை நிர்வகிக்கவே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர், ஜெ., இல்லத்தில் தங்க அனுமதிக்கப்பட்டனர். 

'இவர்களின் நிறுவனங்கள், 3,000 ஏக்கர் நிலங்களை சொந்தமாக வைத்து உள்ளன. அவை, எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை் குற்றவாளிகளால் கூற முடிய வில்லை' என, தெரிவித்திருந்தார்.
போலி கம்பெனிகள் வழியாக பண பரிவர்த் தனை செய்தது ஒருபுறம் இருக்க, பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகளை, வீட்டுக்கே வர வழைத்து, ஏராளமான நிலம், கட்டடங்களை, முறையான வழிமுறைகளை பின்பற்றாமல், பத்திரப்பதிவு செய்த கதை ஊரே அறியும். 

கடந்த, 1991ல், அரசு நிறுவனமான, 'டான்சி' நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானதும், ரூட்டை மாற்றினர்.

சசிகலாவும், அவரது சொந்தங்களும், தமிழகம் முழுவதும், முக்கியமான இடங்களில் உள்ள, கட்டடங்கள், நிலங்களை குறி வைத்து, பலப் பிரயோகம் செய்து, கைப்பற்ற துவங்கினர். 
அவர்களிடம், அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கினர். 
நிலத்தை விற்றோர், இந்த விபரங்களை வெளியில் கூற முடியாமல், மனதுக்குள் குமுறினர்.

அவ்வாறு, மன்னார்குடி கும்பலிடம், நிலத்தை இழந்தவர்களில், தமிழக மக்களுக்கு நன்கு அறிமுக மான, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், கங்கை அமரனும் அடக்கம். 
பழைய மகாபலிபுரம் சாலை யில், பையனுார் என்ற இடத்தில், அவருக்குச் சொந்தமான, 22 ஏக்கர் பண்ணை வீட்டை, ஜெ.,வின் பெயரைக் கூறி, தினகரனின் சகோதரர் பாஸ்கரன் வாங்கினார். அது குறித்து, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவிடம் பூச்செண்டு கொடுத்தது மட்டும் தான், கங்கை அமரன் கடைசியாக, மகிழ்ச்சியாக செய்த காரியம். 
பின், அவரது வீட்டுக்கு பத்திரப் பதிவு அதிகாரிகளுடன் சென்று,சசிகலா கும்பல், 13 லட்சம் ரூபாய்க்கு, அதை எழுதி வாங்கியது. 

இது குறித்து, கங்கை அமரன் வெளிப்படையாக கூறியும் ஒன்றும் நடக்கவில்லை. செல்வாக்கு மிக்க ஒருவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளர், பாலுவின் மர்மமான மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் இன்று வரை தீரவில்லை. 
வேளச்சேரி, 'பீனிக்ஸ்' வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும், 11 திரையரங்குகள் அடங்கிய, 'லுாக்ஸ் மல்டிபிளக்ஸ்' திரையரங் கத்தை, 2015ல், 'ஜாஸ் சினிமா' வாங்கியது. 

அது, இளவரசியின் பெயரில் இருந்த நிறுவனம். 'மிடாஸ்' மது ஆலையில் இயக்குனர் களாக உள்ள, சிவகுமார், இளவரசியின் மருமகன், கார்த்திகேயன் கலியபெருமாள் ஆகியோர் தான் அதன் இயக்குனர்கள்.அதை, தற்போது, இளவரசியின் மகன் விவேக் நிர்வகித்து வருகிறார்.

 சத்யம் திரையரங்க வளாகத்தின் உரிமையாளர்களை மிரட்டி, அவற்றை வாங்கிய தாக, அரசியல் கட்சிகள், அப்போதே சுட்டிக்காட்டின. 
இதுபோல், மேலும் பல திரையரங்குகளை அவர்கள் வாங்கி குவித்துள்ளனர்.கோடநாடு எஸ்டேட்டை யும், வெளிநாட்டைச் சேர்ந்த, அதன் உரிமையாள ரிடம் இருந்து, கட்டாயப்படுத்தி வாங்கியதாகவும், அவரது வாரிசுகள் கூறி வருகின்றனர். 

சென்னை, மயிலாப்பூரில் உள்ள, அமிர்தாஞ்சன் மாளிகையை, அதன் உரிமையாளரிடம் இருந்து பறித்தது மற்றொரு கதை.காஞ்சி மாவட்டம், சிறுதாவூர், கருங்குழிபள்ளம் உள்ளிட்ட இடங்களில், 112 ஏக்கர் நிலத்தையும், இக்கும்பல் மிரட்டி வாங்கியுள்ளதாக, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. 

சசிகலா, இளவரசி மற்றும் இளவரசியின் மகன் விவேக், சுதாகரன் ஆகியோரின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, 1996 வரை, சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள், பின், அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் கிடைத்த லஞ்சப் பணம் மற்றும் ஊழல் பணத்தை, வேறு விதமாக குவித்து வைத்தனர். 

நமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா, 'டிவி' உள்ளிட்ட அவர்களின் வேறு நிறுவனங்களில், பல்வேறு வழிகளில் குவிந்த வருவாயை, 'ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்ெவஸ்ட்மென்ட்ஸ்' போன்ற போலி நிறுவனங்களுக்கு மாற்றினர்.

ஊழல் பணத்தை முறைகேடாக பதுக்கி வைக்க, மோசடி ஆசாமிகள், இரு வழிகளை கையாள்கின்றனர். ஷேர்அப்ளிகேஷன் பெண்டிங்' என்ற முறைப் படி, பணத்தை, போலி நிறுவனங்களில் முதலீடு செய்வர்.

இரண்டாவதாக, 'அன் செக்யூர்டு லோன்' என்ற வழிமுறை. 
இதில்,எவ்வித பிணைப்பத்திரம் இல்லாமல், கடன் வாங்குபவரின் நம்பகத் தன்மையை வைத்து, கடன் தரப்படுகிறது. 
அதுபோன்ற, வழிமுறைகளை கையாண்டு, பெரும் தொகையை, போலியான வேறு நிறுவனங்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டு வர். 

அவர்களுக்கு, 100க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள், சொந்தமாக இருக்கலாம் என, நினைக்கிறோம்.
இவ்வாறாக, மோசடி வழியில் வந்த பணம், இந்த போலி நிறுவனங்களில் உலவியபடி இருக்கும். 

அத்தனை நிறுவனங்களுக்கும், அன்செக்யூர்டு லோன், ஷேர் அப்ளிகேஷன் பெண்டிங் ஆகியவற்றை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததாக கணக்கு காட்டி இருப்பர். 
அந்த நிறுவனங்கள், அத்தொகையில், சொத்துக் களில் முதலீடு செய்ததாக கணக்கு காட்டப் படும்.அந்த நிறுவனங்களின் வேலையே இதுவாகவே இருக்கும்; 
அவற்றில், வேறு பணிகள் நடக்காது.

 அவர்கள் துவங்கிய போலி நிறுவன பங்குகளை வாங்க, பெரும் தொகையை கொடுத்தது போல் கணக்கு காட்டுவர். 

அதுபோல், சசிகலா குடும்பத்தினர், 43 போலி நிறுவனங்களை துவங்கினர். 
இதுபோன்ற, 10 நிறுவனங்களுக்கு, சசிகலா சகோதரர் சுந்தரவதனத்தின் மருமகன், கே.எஸ். சிவகுமார், சசிகலாவின் சகோதரர் மனைவி இளவரசியின் சம்பந்தி, கலிய பெருமாள் ஆகியோர் இயக்குனர்களாக உள்ளனர்.
இதுபோலத்தான், 'ஹாட் வீல்ஸ் இன்ஜினி யரிங்' என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த சசிகலா குடும்பத்தினர், அதன் பங்குகளை, மேலும், 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக கணக்கு காட்டி, அந்த நிறுவனங் களை தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 
பின், அதை, 'ஜாஸ் சினிமாஸ்' என, பெயர் மாற்றினர். 


அதுவும், வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நிறுவனங்களில் ஒன்று.இது, மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்டடங்கள், சொத்துக்களையும் வாங்கி குவித்தனர். 
அதன் உரிமையாளர்களை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்கினர். 
ஜெ., பார்ம் அவுஸ், ஜெ.எஸ்.ஹவுசிங் டெவலப்மென்ட், ஜெ., ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், ஜே.எஸ்.லீசிங் அண்ட் மெயின்டனென்ஸ், மெட்டல் கிங், சூப்பர் டூப்பர், 'டிவி' - ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், லெக்ஸ் பிராபர்டி டெவலப்மென்ட், 

ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ்.மெடோ அக்ரோ பார்ம்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ், ஏ.பி.அட்வர்டைசிங் சர்வீசஸ், விக்னேஸ்வரா பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்டிரக் ஷன்ஸ், கோபால் புரமோட்டர்ஸ், சக்தி கன்ஸ்டிரக் ஷன்ஸ், நமச்சிவாய ஹவுசிங், அய்யப்பா பிராபர்டி டெவலப்மென்ட்ஸ், சீ இன்கிளேவ், நவசக்தி கான்ட்ராக்டர்ஸ், ஓஷியானிக் கன்ஸ்டிரக் ஷன்ஸ், 

கிரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ், மார்பிள் மார்வல்ஸ்.வினோத் வீடியோ விஷன், பேக்ஸ் யூனிவர்சல், பிரெஷ் மஷ்ரூம்ஸ், கோடநாடு டீ எஸ்டேட், வோர்ல்ட் ராக் நிறுவனம், மிடாஸ், கியுரியோ ஆட்டோ மார்க், சிக்நெட் எக்ஸ்போர்ட்ஸ், பேன்சி ஸ்டீல்ஸ், காட்டேஜ் பீல்டு ரிசார்ட்ஸ், ஸ்ரீஜெயா பைனான்ஸ் அண்ட் இன்வஸ்ட்மென்ட்ஸ்.


ஸ்ரீஹரி சந்தனா எஸ்டேட்ஸ், ஜாஸ் சினிமாஸ் மற்றும் கசானா பின்வெஸ்ட் என, மொத்தம், 43 நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை, வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.மேற்கண்ட நிறுவனங்களில், பல நிறுவனங்கள், செயல்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள, இசையமைப்பாளர் கங்கை அமரனின், பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை, 13 லட்சம் ரூபாய்க்கு, மிரட்டி வாங்கினர். 

இது, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான். 
தமிழகம் முழுவதும், விசாரித் தால் பல கண்ணீர் கதைகள் வெளிவரும். 
சசிகலா மாபியா கும்பல் என்பதில் யாருக்குமே மறுகருத்து இராது.
ஆனாலும் இந்த சோதனையை அரசியல் சார்ந்து கண்டிக்கிறார்கள்.அது தவறு.
சசிகலா ஊழல்பணத்திக்குவித்தாலும் ஆட்சி அதிகாரத்தைக் காட்டி அப்பாவிகளை மிரட்டி சொத்துக்களை குவித்துள்ளார்.
கங்கை அமரன்,சத்யம் திரையரங்கு  போன்ற பலரை தாக்குமளவு சென்று அடிமாடு விலைக்கு வீடு,திரையரங்கு,நிறுவனங்களை வாங்கியுள்ளார்.
இதுபோன்ற தாதா த்தனங்கள்,கண்ணீர்கள் நிறைந்ததுதான் சசி குடும்ப சொத்துக்கள்.
அப்பா இறந்த பின்னர் ஜெயலலிதா வீட்டில் வளர்ந்த 24 வயது விவேக் கிற்கே அவர் பெயரில் 3000கோடிகளுக்கு சொத்து இருக்கிறது.இது அவர் பெயரில் உள்ளது.பினாமியில் இதைவிட அதிக அளவில்தான் இருக்கும்.
அந்த பினாமிகள் இவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவே தெரியாது.எத்தனை பினாமிகளோ.?
இதுவரை கணக்கிடப்பட்டதும் ,கைப்பற்றப்பட்டதும் சசிகலா மாபியா கடலில் பெரிய மீனாக  தெரியலாம் .
ஆனால் பல திமிங்கலங்கள் மறைந்திருக்கின்றன.
சோதனைகளை நடத்துவதில் காட்டும் தீவிரத்தை பாஜக அரசு மேல்நடவடிக்கைகள் எடுப்பதில் காட்டுவதில்லை.
அதை எதிரிகளை மிரட்டும் ஆயுதமாகவே வைத்திருப்பது உண்மைதான்.
ஆனால் அதற்காக சசிகலா போன்ற மாபியா கும்பல் மீது ஆய்வு நடத்த்தாக கூடாது என்பது சரியானது அல்ல.
ஆவணமாகிவிட்ட இதை அடுத்துவரும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க உதவும்.அவர்களும் எடுக்காவிட்டால் யாரவது சொத்துக்குவிப்பு வழக்கு போல் சமூகநல வழக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.
என்ன ஆண்டுகள் தான் பலவாகிவிடும்.

வியாழன், 9 நவம்பர், 2017

கேபிள் டி.வி ஆப்ரேட்டர்களின் மோசடி .


விரைவில் உங்கள் வீடு தேடி வர இருக்கும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பற்றி சில விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறேன்.
அணைத்து வீடுகளுக்கும் இலவச அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் திட்டம் பல இடங்களில் கொடுக்க தொடங்கி விட்டார்கள் விரைவில் உங்கள் வீடு தேடி வரும்.
இந்நிலையில் இலவச செட்டப் பாக்ஸ் க்கு ஆப்ரேட்டர்கள் 500 ,600 ஏன் 1000 வரை கூட வசூலித்து வருகிறார்கள். எனவே ஏமாறாமல் இருக்க கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் குறித்த சில முக்கிய தகவல்களை நான் பகிர விரும்புகிறேன்.
 முதலில் ..... 200 ரூ இன்ஸ்டாலேஷன் பீஸ் என்று கேட்பார்கள் . ஆம் அது உண்மை தான் அந்த 200 ரூ நாம் தர தான் வேண்டும்.
 ஆக்டிவேஷன் பீஸ் என்று 100 ரூ கேட்பார்கள் கேட்டால் அரசு வசூலிப்பதை தான் கேட்கிறோம் என்பார்கள்...சுத்த பொய் அரசு அப்படிஎந்த கட்டணமும் கேட்க வில்லை.

 மாதம் தோறும் ரீச்சார்ஜ் என்று gst அது இது எல்லாம் சேர்த்து 200 ,250 க்கு கிட்ட தட்ட கேட்பார்கள்.
இது ஓரளவு சரி தான் ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது ,அதில் 125 பேக்.. 175 பேக் என்று பல வகை உள்ளது. யாவற்றையும் நீங்கள் ஆப்ரேட்டர் வழியாக தான் கட்ட போகிறீர்கள் என்பதால் அவர்கள் உங்களுக்கு எந்த பேக் ஆக்டிவ்ட் செய்துள்ளார்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று கவனிக்கவும் (125 ரூ க்கு கிட்ட தட்ட 200 சானல் வரும் )
 இதை தவிர வேறு எந்த கட்டணமும் இல்லை உங்கள் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசம் தான் .வேறு கட்டணம் கேட்டால் தைரியமாக காரணம் கேளுங்கள். குறிப்பாக கிராம புற மக்கள் போதிய தகவல் இல்லாமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக கேபிள் டிவி சார்ந்த புகார்களை அளிக்க வேண்டிய நம்பர் கொடுக்கிறேன்..குறித்து கொள்ளுங்கள்.
18004252911
அதே போல மேலும் தங்களுக்கு அரசு கேபிள் டிவி சார்ந்த பொது தகவல்களுக்கு,குற்றச்சாட்டுகளுக்கு  எழும்பூரில்  உள்ள தலைமை அலுவலக தொலைபேசி எண் 04428432911 -இல் தொடர்பு கொள்ளுங்கள்.
விழிப்புடன் செயல் படுங்கள்...கொள்ளையர்களிடம் ஏமாறாதீர்கள்.

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...