புதன், 12 ஜூலை, 2017

நடிகர் திலீப் (சிக்கிய) கதை.

 நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பை கைது செய்ய, கேரள குற்றப்பிரிவு போலீஸ் ஐ.ஜி., தினேந்திர காஸ்யப் தலைமையிலான போலீசார் குழு, 81 நாட்கள் பொறுமையாக காத்திருந்தனர். 
திலீப்பின், 12 வினாடிகள் மொபைல் போன் பேச்சு தான் அவரை மாட்டி விட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

நடிகை பாவனா, கடந்த பிப்.,17 ம் தேதி, கேரள மாநிலம், கொச்சி அருகே காரில் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் பல்சர் சுனில் கைது செய்யப்பட்ட உடன், இந்த வழக்கில் சதி திட்டம் ஏதும் இல்லை என்று கேரள போலீசார் தொடர்ந்து தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் உஷார் அடைந்து விட கூடாது என்பதற்காகவே கேரள போலீசார் இந்த திட்டத்தில் ஈடுபட்டனர். 


மேலும், சதி திட்டம் குறித்து விசாரிக்க வேண்டும் என்றால், பல்சர் சுனில் தொடர்ந்து சிறைக்குள் இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். எனவே, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவனுக்கு நிபந்தனை ஜாமின் கூட கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர். 

சிறையில் தனிமையில் இருக்கும் பல்சர் சுனில் ஒரு கட்டத்தில் கொதித்து எழுவான். நடிகையை கடத்தும் வேலையை தனக்கு அளித்தவர்களுடன் கண்டிப்பாக தொடர்பு கொள்ள முயற்சி செய்வான் என கேரள போலீசார் உறுதியாக நம்பினர். சிறைக்குள் அவனது நடமாட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 

சிறை வளாகத்தில், காசு போட்டு பேசும் போன் வசதி உள்ளது. அந்த போன் மூலம், சிலருடன் பல்சர் சுனில் பேசினான். இதை தான் போலீசாரும் எதிர்பார்த்தனர். நடிகர் திலீப்புக்கு நெருக்கமானவர்களுடன் தான் அவன் போனில் பேசினான். நடிகர் திலீப், அவரது மேலாளர் அப்புண்ணி, திலீப்பின் நண்பரும் திரைப்பட இயக்குனருமான நாதிர் ஷா ஆகியோரின் போன் எண்களை பெறவே அவன் முயற்சி செய்தான் என்பது தெரிய வந்தது. 


இதையடுத்து அந்த மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர். பல்சர் சுனில் போன் செய்த போது, நடிகர் திலீப்பும், அவரது குழுவினரும் அமெரிக்கா செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். நடிகை பாவனா வழக்கு முடிந்து விட்டது; பல்சர் சுனில் தான் முதல் குற்றவாளி என குறிப்பிட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது; இதற்கு மேல் விசாரணை இருக்காது என்றே அவர்கள் நம்பினர். எனவே தான் அமெரிக்காவுக்கு செல்ல உற்சாகமாக பணியாற்றினர். 


எனினும், நடிகர் திலீப் நடித்த, ' வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' என்ற படத்தில், சிறு வேடத்தில் நடித்த போலீஸ் அதிகாரி ஒருவர், போலீசாரின் நடவடிக்கைகளை திலீப்பிடம் போட்டு கொடுத்து விட்டார். அந்த நேரத்தில், பல்சர் சுனில் சிறையில் இருந்து எழுதிய கடிதம் வாட்ஸ் ஆப் மூலம் திலீப்பிற்கு கிடைத்தது. 

உடனே, போலீசாரை திசை திருப்ப, ' நான் பாதிக்கப்பட்டவன், பல்சர் சுனில் பணம் கேட்டு மிரட்டுகிறான். இந்த வழக்கில் என்னை மாட்டி விட பார்க்கிறான்' என, திலீப் போலீசாரிடமே ஏப்., 20ம் தேதி புகார் அளித்தார். அத்துடன் பல்சர் சுனில் போனில் பேசியதற்கான ஆதாரத்தையும் அளித்தார்.

அது தான் அவருக்கு வில்லங்கமாக அமைந்து விட்டது. அந்த உரையாடலில், ' ஒரு சூப்பர் ஸ்டார், முன்னணி தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகை ஆகியோர் திலீப் தான் குற்றவாளி என போலீசாரிடம் கூறும்படி தன்னை மிரட்டுகின்றனர்' என, பல்சர் சுனில் பேசி இருந்தான். ஆனால், போலீசாரை திசை திருப்ப திலீப்பும், நாதிர்ஷாவும் நடத்திய நாடகம் இது என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

பாவனா வழக்கில் விரைவில் திலீப் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவ துவங்கியதும், ஒரு பெரிய நடிகரும் அவரது இரண்டு சகாக்களும் திலீப்பை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், மலையாள சினிமா கலைஞர்கள் சங்கமான, 'அம்மா'வின் உறுப்பினர்கள் சிலர், கொச்சியில் அளித்த பேட்டியின் போது தெரிவித்த சர்ச்சை கருத்துக்கள், அந்த பெரிய நடிகரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது. 


கடந்த ஜூன், 28 ம் தேதி நடிகர் திலீப், அப்புண்ணி, நாதிர் ஷா ஆகியோரிடம் போலீசார், 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன் பிறகு ஜூலை, 10ம் தேதியான நேற்றும், 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று மதியம், தனது குற்றத்தை திலீப் ஒப்புக் கொண்டார். அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர். திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன், அவரது தாய் சியாமளா ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. 

நேற்று திலீப்பிடம் விசாரணை நடத்தியது குற்றப்பிரிவு ஐ.ஜி., தினேந்திர காஸ்யப். பல்சர் சுனில் மீது திலீப் அளித்த புகார் குறித்து விசாரிக்கிறோம் என்று கூறியே அவரிடம் இருந்து பல முக்கிய தகவல்களை காஸ்யப் தலைமையிலான போலீஸ் குழு சாதுர்யமாக பெற்றது. காஸ்யப் ஏற்கனவே தயாரித்த கேள்வி பட்டியலை வைத்து, திலீப்பை விசாரித்து உண்மையை கறந்து விட்டனர். 
நடிகர் திலீப்பின் சொந்த ஊர் ஆலுவா. அதன் அருகே தான் நடிகை பாவனா கடத்தப்பட்டார். இந்த விவகாரத்தின் பின்னணியில் நடிகர் திலீப் தான் இருக்கிறார் என்பதற்கான முதல் கட்ட தகவல் ஆலுவாவில் தான் போலீசாருக்கு கிடைத்தது. இது குறித்த தகவல் வெளியானதும் திலீப் மிக உருக்கமாக பேசினார். 

பத்திரிகைகள் மீது வழக்கு போடப்படும் என மிரட்டினார். ஆனால், நடிகர் திலீப் கூறியதை ஆலுவா மக்கள் சிறிது கூட பொருட்படுத்தவேயில்லை. ஜூன், 28 ம் தேதி ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்பில் தான், திலீப் மற்றும் நாதிர் ஷாவிடம், 13 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது உள்ளூர் மக்கள் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; போராட்டம் எதுவும் நடத்தவில்லை. 
இந்த வழக்கில், பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதும், திலீப் பெயரும் அடிப்பட துவங்கியது. இதை போலீசார் நேரடி உறுதி செய்யவில்லை. எனினும், மறைமுகமாக உறுதி செய்தனர். ஆலுவாவில் ஒரு அரண்மனை உள்ளது. அதன் அருகே தான் நடிகர் திலீப் வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு சில வாரங்களுக்கு முன் போலீசார் சென்று முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வாகனங்களை அரண்மனை வளாகத்தில் விட்டு விட்டு சென்றனர். அங்கு உள்ளூர் அரசியல்வாதிகள் இருந்தனர். ஆனால், திலீப் வீட்டுக்கு போலீசார் சென்றதை அவர்கள் கவனிக்கவில்லை. அரண்மனை முன் பிரமாண்ட சுவர் ஒன்று உள்ளது. அந்த சுவர் திலீப் வீட்டை அவர்கள் பார்வையில் இருந்து மறைத்து விட்டது. உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு விஷயம் தெரிந்து, திலீப் வீட்டிற்கு செல்வதற்குள் பத்திரிகைகளுக்கு தகவல் சென்று விட்டது. எனவே, உள்ளூர் அரசியல் வாதிகளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 
நடிகை பாவனா, கடந்த பிப்., 17 ம் தேதி இரவு காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். ' இந்த தகவல் உங்களுக்கு எப்போது தெரியும்?' என்ற போலீசாரின் கேள்விக்கு நடிகர் திலீப்,' பிப்., 18 ம் தேதி காலை திரைப்பட தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் எனக்கு போன் செய்தார். அவர் மூலம் தான் எனக்கு இந்த தகவல் தெரியும்' என, கூறி இருந்தார். 

இதன் பிறகு ஆன்டோ ஜோசப்பிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், ' நடிகை தாக்கப்பட்ட தகவலை கேட்ட உடன், நடிகர் திலீப்பை போன் மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. அடுத்த நாள் காலை 9:30 மணிக்கு திலீப் என்னுடன் போனில் பேசினார். அப்போது நடந்த விஷயத்தை கூறினேன். ஆனால், அவர் எதுவும் பேசாமல் போன் இணைப்பை துண்டித்து விட்டார்' என, தெரிவித்தார்.

ஆன்டோ ஜோசப்புடன், திலீப் போனில், 12 வினாடிகள் தான் பேசினார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இது திலீப் அளித்த தகவலுடன் முரண்படுவதும் போலீசாருக்கு புரிந்தது. ஆன்டோ ஜோசப் மூலம் தான், நடிகை தாக்கப்பட்ட விவகாரம் தெரிய வரும் என தெரிவித்து இருந்த திலீப், அதற்கான போன் உரையாடல், 12 வினாடிகள் மட்டும் தான் நீடித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. 
தன் மீது எந்த சந்தேகமும் வந்து விட கூடாது என்பதில் திலீப் தெளிவாக இருந்துள்ளார். 
அதனால் தான் அடுத்த நாள் காலை ஆன்டோ ஜோசப்புடன் போனில் பேசியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். அந்த 12 வினாடி போன் உரையாடல் தான், இந்த விவகாரத்தில் திலீப்புக்கு தொடர்பு உள்ளது என்பதை போலீசுக்கு புரிய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கைதான திலீப்புக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

காங்கிரசார் திலீப்புக்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் ஆதரவளித்தார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் முதல்வர் பிரனாயி விஜயன்தான் பாவனா கடத்தல் புலனாய்வுக்குபோலீஸ் ஐ.ஜி., தினேந்திர காஸ்யப் தலைமையிலான  தனிப்படையே அமைத்தார்.
திலீப் சம்பந்தப்பட்டிருப்பது ஆதாரப்பூர்வமாக தெரிந்த உடனேயே கைது செய்ய அனுமதித்துள்ளனர்.அவர் மனைவி காவ்யாவை கைது செய்யவும் காவல்துறையை முடுக்கி விட்டுள்ளார்.திலீப்புக்கு ஆதரவாக இருந்தால் அவர் இந்த விவகாரத்தை ஆறப்போட்டிருக்கலாம்.ஏன் போலீஸ் ஐ.ஜி., தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை ஆழப்படுத்த வேண்டும் என்று எதிர் தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.

நடிகர் திலீப் 
 கேரள நடிகர்கள் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் நெருங்கி பழகி வருகின்றனர்.
 ரியல் எஸ்டேட், ஓட்டல் தொழில் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். 
இது தவிர, ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர். 

நடிகர் திலீப்பிற்கு சொந்தமாக பல தியேட்டர்கள், ஓட்டல்கள், படபிடிப்பு யூனிட்கள் உள்ளன. 
தன் சொல்படி கேட்காத திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை மிகவும் கஷ்டப்படுத்துவார். 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, நடிகை பாவனா - நடிகர் திலீப் இடையே மோதல் உருவாகி விட்டது. அதன் காரணமாக, மலையாள திரைப்படங்களில் பாவனாவிற்கு வாய்ப்பு கிடைப்பதை திலீப் தடுத்து வந்துள்ளார். 


கேரள திரையுலகம், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் மற்றும் திலீப் ஆகிய மூவேந்தர்கள்  கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 
தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவரையும் மூன்று பேர் கட்டுப்படுத்தி வைத்து உள்ளனர். 

யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால், அவ்வளவு தான். வாழ விட மாட்டார்கள். 

திரைப்பட இயக்குனர் வினயன், நடிகர் திலீப் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். 
அவர் கூறுகையில், '' தன்னை எதிர்ப்பவர்களை, திலீப் மன்னிக்கவே மாட்டார். அவர்களை பழி வாங்குவதில் தீவிரமாக இருப்பார். அவர் அளவுக்கு பழி வாங்கும் போக்கு அரசியல்வாதிகளிடம் கூட இருந்தது இல்லை,'' என்றார். 

கேரளாவில், 19 திரைப்பட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மலையாள திரைப்பட தொழிற்கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தன. 
கடந்த 2007 ம் ஆண்டில் இந்த சங்கத்தின் பொதுச் செயலாளராக இயக்குனர் வினயன் இருந்துள்ளார். 

அப்போது இயக்குனர் துளசிதாஸ் என்பவரிடம் முன்பணம் வாங்கி விட்டு அவரது படத்தில் நடிக்க திலீப் மறுத்துவிட்டார். படபிடிப்பு நடந்து கொண்டு இருந்த இடத்தில் திலீப்பை சந்திக்க துளசிதாஸ் சென்ற போது, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எதிரே இருந்த மற்றொரு நாற்காலியில் இரண்டு கால்களையும் போட்டபடி திலீப் அமர்ந்து இருந்தார். 
எதிரே துளசிதாஸ் நின்றபடி தான் பேச வேண்டும் என்ற நிலையை திலீப் ஏற்படுத்தினார். அவர் கூறிய கதைகள் எதுவும் சரியில்லை என்று விமர்சனம் செய்தார். 

துளசிதாஸ் அவமானப்படுத்தப்பட்ட விஷயத்தை வினயன் தீவிரமாக எடுத்துக் கொண்டார். திலீப், படபிடிப்பில் பங்கேற்க தடை விதித்தார். 

இதன் விளைவு, வினயன் பொதுச் செயலாளராக இருந்த சங்கம் இரண்டாக உடைக்கப்பட்டது. நடிகர்கள் சங்கமான, 'அம்மா', இயக்குனர் வினயனுக்கு தடை விதித்தது.
கேரள திரையுலகில், மூத்த நடிகர் திலகனுக்கு பெரிய பெயர் இருந்தது. மூன்று முறை தேசிய விருது பெற்றவர்; பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். 
ஆனால், இயக்குனர் வினயன் படத்தில் நடிக்க திலகன் முன்வந்ததால், திலீப் கோபத்திற்கு ஆளானார். 
கேரளா அரசு நம் கமல்ஹாசனுக்கு விருது வழங்கியது.அந்த பட்டியலில் திலீப்பும் இருந்தார் ஆனால் போட்டியில் கமல்ஹாசன் வென்றதால் அந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள "அம்மா"சங்கம் கேரள நதிகளுக்கு தடை விதித்தது.அதன் பின்னணியில் நடிகர் திலீப் தான் இருந்தார்.

அந்தத் தடையை தவறு என்று கூறியதுடன் விழாவில் கலந்து கொண்டு கமலை வாழ்த்தியும் பேசினார் திலகன். இதனால் திலீப் மிகவும் கோபங்கொண்டார்.

அப்போது திலீப் நடித்து வந்த, 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்ற படத்தில் இருந்து திலகன் நீக்கப்பட்டார். 
இதானால் படங்களில் நடிக்க முடியாமல் திலீபன் தவித்தார்.ஆனால் இறுதிவரை மன்னிப்பு கேட்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு வினயனுக்கு விதிக்கப்பட்ட தடையை, கடந்த மாதம் தான், 'அம்மா' அமைப்பு விலக்கி கொண்டது. அந்த அளவுக்கு வினயனை திலீப் பழிவாங்கினார்.

 நடிகர் திலகனுக்கு கடைசி வரை மன்னிப்பே வழங்கப்படவில்லை. கேரள திரையுலகத்தால் விலக்கி வைக்கப்பட்ட நடிகர் திலகன் மிகுந்த சோகத்தில் கடந்த 2012ல் இறந்து போனார். 
அவர் கடைசி வரை, ' திலீப் என் எதிரி' என்று வெளிப்படையாகவே கூறி வந்தார். 

இதைபோல், கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தையும் திலீப் கடந்த மாதம், இரண்டாக உடைத்தார். இதற்கு மம்முட்டி, மோகன்லால் ஆசிர்வாதமும் இருந்தது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் லிபர்ட்டி பஷீர் கூறுகையில்,' திலீப் கைதுக்கு பிறகு கேரள திரையுலகில் மாபியா ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துள்ளது' என்றார். 
திலீப் கைதுக்கு பிறகு, பல இயக்குனர்கள் வெளிப்படையாக பேச துவங்கியுள்ளனர். மும்பை திரையுலகை தாவூத் கும்பல் மிரட்டி வருவது போல, கேரள திரையுலகத்தை திலீப் கும்பல் மிரட்டி வந்துள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். சக நடிகர்களின் படங்கள் வெளியாவதையும் அவர் தடுத்து வந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். 


திரைப்பட விமர்சகரும், சமூக சேவகருமான கே.எம். ஷாஜகான் கூறுகையில், '' வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கறுப்பு பணம், கேரள திரையுலகில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், இதை மாநில அரசு கண்டு கொள்வது இல்லை. 

நடிகர் மம்முட்டி நடித்த கடைசி வெற்றி படம், 2015ம் ஆண்டு வெளியான, ' பாஸ்கர் தி ராஸ்கல்' படம் தான். ஆனால், அதன் பிறகு படங்கள் ஓடாவிட்டாலும் தொடர்ந்து நடிந்து கொண்டு தான் இருக்கிறார். இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது,'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

பதில்தான் தெரியவில்லை.                                                   யூகிக்க முடிகிறது.
                                                                                                                           -பிரஸ் ஏட்டய்யா  குமாரவேல் 
                                                                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...