செவ்வாய், 11 ஜூலை, 2017

குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த செய்தியாளர் ருப்ஸா சக்ரவர்த்தி, இந்துத்துவத்தின் சோதனைச்சாலையான குஜராத்தில் மாமிச உணவு சாப்பிடுவதற்கு தான் பட்ட பாட்டை விவரிக்கிறார்.
மோடி பிரதமரானால் இந்தியாவையே குஜராத் ஆக்கிவிடுவார் என்றார்கள் சங்கிகள். குஜராத் ஆக்கிக் கொண்டுதான் இருக்கிறார் மோடி. முழுவதுமாக குஜராத் ஆனால் எப்படி இருக்கும்? இது ஒரு சாம்பிள்.
000
2014 மார்ச். சுட்டெரிக்கும் வெயில்.  பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத்தில், இளம் பத்திரிக்கையாளராக நான் கால் பதித்தேன். நகரம் இந்திய அரசியல் சூழலின் மையப்புள்ளியாய் மாறியிருந்தது,  அது இந்தியாவைப் புரட்டிப்போட்ட மக்களவைத் தேர்தல் நேரம். ஒரு இளம் பத்திரிகையாளராக    செய்தியறையின் அதீத பரபரப்பை நேரில் காண்பதென்பது  அத்துறையில் என்னை முன்னேற்றிக் கொள்ளக் கிடைத்த அருமையானதொரு வாய்ப்பு. எனக்குள் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி.
ஆனால், என்னுடைய நாக்கில் குடிகொண்டிருந்த நாசமாய்ப்போன கறி தின்னும் ஆசை, என் மகிழ்ச்சியில் மண்ணள்ளிப் போடப்போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.
மார்ச், 12, 2014. அன்றுதான் அகமதாபாத் நகரில் எனது முதல் நாள். கம்மியான வாடகைக்கு ஒரு அறை கிடைக்குமா என்று தேடி அலைவதில் அன்றைய பொழுது கழிந்தது.  கடைசியில், முஸ்லீம்கள் அதிகம் வாழும் வேஜல்பூருக்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியில் என்னுடைய பட்ஜெட்டுக்கு தோதான வாடகையில் ஒரு வீட்டைக் காட்டினார் தரகர்.  எனது புதிய அலுவலகத்திலிருந்து மிக அருகில் இருந்ததால் அந்த வீட்டை தெரிவு செய்தேன்.
வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுநாள் வந்தேன்.  கண்டிப்பான குரலில் கேள்விகளை அடுக்கத் தொடங்கினார் வீட்டின் உரிமையாளர். கல்யாணம் ஆகிவிட்டதா, குடிப்பழக்கம் உண்டா, என்ன படித்திருக்கிறாய், என்ன வேலை, நண்பர்களெல்லாம் எப்படி… ? ஒரு கேள்விக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த கேள்வி. இறுதியில் அவர்  கடைசியாக கேட்ட கேள்விக்கும் நான் பதிலளித்தேன். என் பதிலைக் கேட்டவுடன் அவர் முகம் மலர்ந்தது. முதன்முறையாக அவர் முகத்தில் புன்முறுவலைக் கண்டேன்.
என்ன மதம் என்று கேட்டார்.
நான் ஒரு இந்து, பிராமின் என்று பதிலளித்தேன்.
அப்போதுதான் அவர் புன்னகைத்தார். அதோடு சரி. அப்புறம் வேறு கேள்விகளே கிடையாது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் வாடகை ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டார்.
குஜராத்தில் பார்ப்பனர்கள் பொதுவாக சைவ உணவுப் பேர்வழிகள்.  ஆனால் வங்காளத்திலோ அப்படியே தலைகீழ். மீன் தான் எங்கள் பிரதான உணவு.  தண்ணீர் இல்லாமல் கூட எங்களால் வாழ முடியும்: ஆனால் மாமிச உணவில்லாமல் முடியாது.  என் வீட்டு உரிமையாளருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை.
என் போதாத காலம், இங்கே பக்கத்துல  மீன் மார்க்கெட் எங்கே சார் இருக்கிறது என்று கேட்டு விட்டேன்.  உடனே அவரது முகம் வெளிறிப் போனது. கையில்  ஒப்பந்தப் பத்திரத்தைப் பிடித்தபடி, “நீ ப்ராமின் என்கிறாய். அப்படியானால் உனக்கு மீன் மார்க்கெட்டில் என்ன வேலை?” என்று கோபமாகக் கேட்டார்.
என் தவறு என்ன என்று மண்டையில் உரைத்து விட்டது. விளக்கம் கேட்பதற்கெல்லாம் அவர் தயாராக இல்லை. ஒப்பந்தம் ரத்து.
அதிருஷ்டவசமாக, அதே பகுதியில் அன்றைக்கே இன்னொரு வீட்டை தேடித் தந்தார் தரகர். இங்கே குழப்பமே கிடையாது. அசைவத்துக்கு அனுமதியில்லை என்ற தெளிவான முன் நிபந்தனையுடன்தான் அந்த இடம் கிடைத்தது.
முதலில் நடந்த சம்பவத்தைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அது ஏதோ ஒரு விதி விலக்கான நிகழ்வு என்றெண்ணி விட்டு விட்டேன். ஆறு மாதத்துக்குப் பின், என் சக ஊழியருடன் சேர்ந்து தங்க முடிவெடுத்தேன்,  அப்போது வேறு பகுதியில் ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்தேன்.
மீண்டும் அதே இக்கட்டான நிலைமை. ஆம், வீட்டு உரிமையாளரிடமிருந்து மீண்டும் அதே கேள்விகள் வர, நானும் அதே பதில்களைக் கூறினேன்.
“நான் ஒரு இந்து.”
“நான் ப்ராமின்.”
“நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன்.”
“நான் முட்டை கூட சாப்பிட மாட்டேன்.”
என் வாழ்க்கையில் முதல் முறையாக என் பெற்றோருக்கு நன்றி கூறினேன். அவர்கள் பார்ப்பன சாதியில் பிறந்திருக்கிறார்களே, அதற்காக.

புது வீட்டுக்கு குடிபோன பின்னர் தினமும் காலையில் அப்பகுதியிலுள்ள டீக்கடைக்குச் சென்று டீ குடிப்பது பழக்கமாகிப் போனது. அப்படியே கடைக்கார ரோடு கொஞ்சம் அரட்டை. ஒரு நாள் என்னுடைய கேள்வியின் விபரீதம் புரியாமல், பக்கத்தில் கறிக்கடை, மார்க்கெட் ஏதாவது இருக்கிறதா என்று அந்த டீக்கடைக்காரரிடம் கேட்டு விட்டேன். அவர் என் கேள்வியையோ காதில் போட்டுக் கொள்ளவில்லை. எனக்கு எரிச்சல் வரவே, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன்.
“கொஞ்சம் பொறும்மா, அந்தாள் போகட்டும்,,,, அப்புறம் சொல்றேன் ” என்று கிசுகிசுத்தார் கடைக்காரர்.  அந்த ‘அவர்’ யாரென்று  சுற்றிமுற்றிப் பார்த்தேன்.  சற்று தள்ளி 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் என்னை முறைத்த படி நின்றிருந்தார். என் கேள்வியை அவர் ஒட்டுக் கேட்டிருக்கிறார்.  அந்தாள், அருகிலுள்ள கோயிலின் அர்ச்சகராம். காலை நேரத்தில் இறைச்சி உண்பவரின் நிழலைக்கூட மிதிக்க மாட்டாராம். இந்த விசயம் அப்புறம்தான் எனக்குத் தெரிய வந்தது.
“நானும் ப்ராமின்தான், இப்போ அதுக்கென்ன” என்று கடைக்காரரிடம் அவசரமாகப் பதிலுரைத்தேன்.
22 மாத கால குஜராத் வாசத்தில், நாக்கை அடக்கி, அசைவ உணவின் மீதான என் ஆசையை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டேன்.  குடியிருக்கும் பகுதியிலுள்ள சூழலுக்கு பயந்து, வீட்டிலும் அசைவம் சமைப்பதில்லை. வெளியிலிருந்து வரவழைத்தும் சாப்பிடுவதில்லை. அதற்கு நாங்கள் துணியவில்லை. நல்ல வேளையாக, என்னுடைய ரூம் மேட்டும் தீவிர அசைவ உணவுப் பிரியை. எனவே, அவ்வப்போது இருவரும் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பத்தியார் கலிக்கு சென்று விடுவோம். அது அகமதாபாதில் சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற பகுதி. அசைவ உணவுக்கு அதுதான் மையம். அலுவலகத்தில் மற்ற ஊழியர்களையும் அசைவ ஆசை பிடித்தாட்டுவதை தெரிந்து கொண்டேன். பிராமினாக இருந்து கொண்டு அசைவ உணவை எப்படி விரும்பலாம் என்று யாரும் என்னை ஒரு அருவெறுப்பு பார்வை பார்க்கவில்லை. தங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, நான் அசைவ உணவு உண்பதை இயல்பாக அங்கீகரித்தனர்.
2012 ல், உயர்கல்விக்காக கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு வந்து 3 வருடங்கள் தங்கியிருந்தேன். அங்கு எனது பார்ப்பன அடையாளத்தை பயன்படுத்த வேண்டிய தேவையோ அசைவ உணவு சாப்பிட மாட்டேன் என்று பொய் சொல்லவேண்டிய தேவையோ ஏற்படவில்லை. கொல்கத்தா,  பெங்களூரு அல்லது மற்ற நகரங்களில் அகமதாபாத்தில் நடந்ததைப் போன்ற  சம்பவங்களே நடப்பதில்லை என்று நான் சொல்லவில்லை.  அதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் வேறெங்கும் ஏற்படவில்லை.
ஒவ்வொரு புதிய நகரத்திலும், இந்தியன் எனப்படுபவன் புதுப்புது விதங்களில்  வகைப்படுத்தப் படுவதை நான் காண்கிறேன். கொல்கத்தாவைப் பொருத்தவரை, அரசியல் ஈடுபாடு உள்ள இந்தியர்கள், மற்றும் அரசியலற்ற இந்தியர்கள். பெங்களூருவில், வட இந்தியர்கள் அல்லது தென்னிந்தியர்கள் என்ற வகைப்பாடு. ஆனால், குஜராத்தில் தான் சைவ உணவு சாப்பிடும் இந்தியர்கள் மற்றும் அசைவ உணவு சாப்பிடும் இந்தியர்கள்  என்ற புதியதொரு பிரிவினையை நான் தெரிந்து கொண்டேன்.
மாட்டுக்கறி உண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 50 வயது மனிதர் ஒருவர்,  மதத்தின் பெயரால், தாத்ரியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழும் வரை, எனக்கு ஏற்பட்ட குஜராத் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை. அசைவ உணவு ஒருவரை மதமற்றவராக்குகிறதா?  நான் ப்ராமின் தான். எனினும், மட்டன் கீமா, சில்லி சிக்கன், மீன் வறுவல் மற்றும் மாட்டின் கால் போன்றவைகளை  சாப்பிட எனக்குப் பிடித்திருக்கிறது. அதனாலென்ன?
இத்தகைய வகைப்பாடுகளும் பிரிவினைகளும் நமக்குள் ஊறியிருக்கின்றன. அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்தில் வீடு கிடைக்காமல் திண்டாடும் ஒரு பெண்ணுக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பதற்கும், ஒரு மனிதனைக் கொலை செய்வதற்கும் தயங்காத அளவுக்கு நம்முள் ஊறியிருக்கின்றன. 
பல்வேறு சாதிகளாகவும் மதங்களாகவும் இந்தியா ஏற்கனவே பிளவுண்டு கிடக்கிறது. கூடுதலாக, உணவின் அடிப்படையில் இன்னொரு பிரிவினையையும் சேர்த்துக் கொள்வது அவசியம்தானா?
நன்றி: ரூப்ஸா சக்ரவர்த்தி, யூத் கி ஆவாஸ் இணையதள கட்டுரை.
I’m A Non-Veg Brahmin And Here’s Why I Never Dared To Bring Meat In My Gujarat Homeமொழியாக்கம்: சங்கரி.                                                                                             நன்றி:வினவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...