வியாழன், 8 ஜூன், 2017

ஜிஎஸ்டி உண்மையில் உதவுமா?

லாபம் என்பது மோசமான வார்த்தை அல்ல ஆனால், கொள்ளை லாபம் என்பது மோசமான வார்த்தைதான் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி பற்றி பேசும்போது கூறினார்.
வர்த்தகத்தின்மூலம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை அவர் குறை கூறினாரா அல்லது கம்பெனிகள் தங்களது பொருள்களை விற்பனை செய்வதன்மூலம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை குறை கூறினாரா அல்லது சேவை நிறுவனங்கள் என்ற பெயரில் பல அமைப்புகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்று குற்றம் சாட்டினாரா எனத் தெரியவில்லை.
அமைச்சர் உரையிலிருந்து அகில இந்திய அளவில் பொதுமக்களுக்கு உதவுகின்ற உற்பத்தி, வர்த்தக, சேவை நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்று கருதுகிறார் என்பது மட்டும் நிச்சயம்.
ஒருவேளை மூன்று வகையான நிறுவனங்களுமே சேர்ந்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்றுகூட அவர் கருதுகிறார் எனக் கூறலாம்.
தொழிற்துறை, வியாபாரம், சேவை ஆகிய மூன்று பிரிவுகளும் கொள்ளை லாபம் அடிப்பதை முற்றுப்புள்ளி வைக்க ஜிஎஸ்டி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் உரத்த குரலில் கோஷமிடலாம்.
ஆளும் கட்சியினரும் அதே குரலில் முழக்கமிடலாம். ஆனால், சம்பந்தப்பட்ட தொழில் துறையினர் இந்தச் சட்டம் பற்றி என்ன நினைக்கிறார்கள். பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்பது அவசியம்.
இந்த பரிசீலனைக்கு முன்னால், முன்னெச்சரிக்கையாக ஒரே ஒரு கருத்தை மனத்தில் கொள்வது அவசியமாகும். ஜிஎஸ்டி தொடர்பான பல விசயங்கள் இன்னும் அரைகுறையாக உள்ளன.
அனைத்து பொருள்களுக்கும் வரிவிகிதம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதே போல சேவை துறையிலும் இன்னும் பல விசயங்கள் முடிவு செய்யப்படவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஜிஎஸ்டி சட்டங்களுக்கு இன்னும் விதிகள் வகுக்கப்படவில்லை. இந்த விதிகளை மாநிலங்கள் தனியாக தயாரிக்கப்போகின்றனவா அல்லது அதற்கு வழிகாட்டப்போகின்றனவா என்று இன்னும் தெளிவாகவில்லை.
அதற்கு முன்னால், சில விசயங்களை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரிகள் எல்லாம் ஜிஎஸ்டி, அதாவது, பொருள்கள் – சேவை – வரியில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இதன்படி மத்திய அரசு வசூலிக்கும் எக்ஸைஸ் வரி தனியாக இனிமேல் வசூலிக்கப்படமாட்டாது. மாநில அளவில் வசூலிக்கப்படுகின்ற வாட் வரி அல்லது சேல்ஸ் டாக்ஸ் வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, ஆக்ட்ராய் வரி ஆகியவை இனிமேல் இந்திய வரி வரலாற்றில் வரப்போவதில்லை.
ஜிஎஸ்டியை பொறுத்தமட்டில் கடந்த 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு, வரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான புரட்சியாகக் கருதப்படுகிறது.
அரசு தந்த தகவலின்படி கி.பி. 2000த்தில் வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்தபோது, ஜிஎஸ்டி வரி பற்றி விவாதிக்க ஒரு உயர் அதிகாரம் உள்ள குழுவை அமைத்து பிள்ளையார் சுழி போட்டார். அந்த குழுவின் தலைவராக மேற்கு வங்க நிதிஅமைச்சர் அசீம்தாஸ் குப்தா நியமிக்கப்பட்டார்.
இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்திருக்க வேண்டும். அவை எல்லாம் அரசு படிக்கட்டுகளைத் தாண்டவில்லை. 2002ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட வரிச் சீர்த்திருத்த பணிக்குழுவாகிய கேல்கர் கமிட்டி முதன்முதலாக ஜிஎஸ்டி சட்டம் பற்றி பேசியது.
தேசிய அளவில் இத்தகைய சட்டம் 2010ஆம் ஆண்டு முதல் அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு நிதிஅமைச்சராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில் பட்ஜெட் உரையில் இந்த திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது.
2007இல் மாநில நிதிஅமைச்சர்கள் அடங்கிய உயர் அதிகார குழு, பட்ஜெட் அறிவிப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தது.

2011 ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவோம் என இன்றைய குடியரசு தலைவரும் அன்றைய நிதிஅமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அறிவிப்பு செய்தார். ஆனால், தற்போது அவர் குடியரசு தலைவராக இருக்கையில் ஜிஎஸ்டி சட்டம் 2017 ஜூலை முதல் அமலுக்கு வர உள்ளது.
ஜிஎஸ்டி சட்டத்தினால் ஆலைப்பொருள்கள் விலை குறைய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதியாகக் கூறியுள்ளார். ஆனால், எந்த தொழில் நிறுவனமும் வரிகுறைப்புக்கு ஏற்ப விலையைக் குறைப்பேன் என்று கூறவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.
கேரள அமைச்சர் ஐசக் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
மற்றொரு விசயத்தில் அருண்ஜெட்லி மிகவும் உறுதியாக கருத்து தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சட்டம் காரணமாக வரி விதிப்பு மாறும்பொழுது பண வீக்கம் நிச்சயமாக ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். இதே கருத்தை இந்திய ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது.
வரி குறைப்பினால் ஏற்படும் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய லாபம் அடிப்பதை தடுப்பதற்கென ஜிஎஸ்டி சட்டத்திலேயே ஒரு ஷரத்து சேர்த்திருக்கிறோம் என அருண்ஜெட்லி கூறியிருக்கிறார்.
இந்த முறையைப் பின்பற்றாத தொழில் நிறுவனங்களை பொறுத்தமட்டில் அரசு நடவடிக்கை எடுத்து விலையைக் குறைக்கவேண்டும் என்பது ஐசக்கின் அடுத்த வேண்டுகோள். அதனை காம்பெட்டிசன் கமிஷன் பார்த்துக்கொள்ளும் என்று அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உள்நாட்டில், கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டன. தாராளமயமாக்கல் கொள்கை சேர்த்துக்கொள்ளப்பட்டது. சேவைத்துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. உற்பத்தி துறையில் மட்டும் இந்தியா இன்னும் முன்னேறுவதற்கு நீண்ட தூரம் கடந்தாகவேண்டும். அதற்கு ஜிஎஸ்டி உதவும் என நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி கருதுகிறார்.
ஜிஎஸ்டி போன்ற ஒரு சட்டம் தேவை என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் கோரினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால், மின்சாரம் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. நிலக்கரி, இரும்பு தாது முதலியன வடமாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கிடைக்கிறது. வேறு சில மாநிலங்கள் முதலீட்டு துறையில் பல மானியங்களை வழங்குகின்றன. விற்பனை வரித்துறையில் 10 ஆண்டு காலம் விற்பனை வரியைச் செலுத்தாமல் தொழில் நடத்த வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. இப்படி எல்லா மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு, வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளைத் தந்தால், சிறிய தொழில் நிறுவனங்கள் என்ன செய்ய முடியும். அதனால், மத்திய மாநில அரசுகள் தொழில் துறைக்கென விதிக்கும் வரி ஒரே அளவில் அமைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை சிறு தொழில் துறை ஆலோசனைக் கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் திட்டக் கமிஷன் கூட்டங்களிலும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஜிஎஸ்டி எப்படி மற்ற மறைமுக வரிகளை உள்வாங்கி ஜீரணித்துவிட்டு புதிய வரியாக உருப்பெற்றதோ அதுபோல சிறுதொழில்துறையின் ஒரே வரிவிகித கொள்கையும் இணைந்துபோயிற்று.
தமிழகத்தில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக, மாநில அளவிலான இரண்டு அமைப்புகள் முதல் போராட்ட குரலையும் ஆட்சேப குரலையும் வெளியிட்டிருக்கின்றன.
ஒன்று தமிழக ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம். மே 30ம் தேதி ஜிஎஸ்டியை எதிர்த்து வேலை நிறுத்தத்திற்கு அதன் தலைவர் வெங்கடசுப்பு அழைப்பு விடுத்திருக்கிறார்.
மருந்து பொருள்களை மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்லைனில் விற்பதற்கு எதிராக அகில இந்திய அளவில் மே 30ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு பார்மஸிஸ்ட்டுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மருத்துவ நிலையங்களில் உள்ள மருந்து கடைகள் நீங்கலாக மற்ற மெடிக்கல் ஸ்டோர்கள் எல்லாம் வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்தால் பொருள்களின் விலைவாசி குறையாது, அதிகரிக்கும் என தமிழகத்தில் இயங்கும் வர்த்தக சங்கம் ஒன்றின் தலைவரான விக்கிரமராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அகில இந்திய அளவில் தொழில்துறைக்கான பிரதிநிதியாக மத்திய, மாநில அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு. இது புதிய ஜிஎஸ்டி சட்டம் பற்றி பல முக்கியமான கோரிக்கைகளையும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளது.
முன்பு எக்ஸைஸ், வாட் ஆகியவற்றின்கீழ் விதிவிலக்குகளை நிறுவனங்கள் பெற்றிருந்தன. இப்பொழுது இந்திய அளவில் ரூ. 20 லட்சம் வரை விற்றுமுதல் உடைய நிறுவனங்கள் விதிவிலக்கு பெறுவதாக ஸ்ரீநகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எக்ஸைஸ் வரி ரூ 1.5 கோடி வரை செலுத்தும் நிறுவனங்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டிருந்தது. இப்பொழுது ரூ. 20 லட்சம் மட்டுமே விதிவிலக்கு என்றால், சிறுதொழில் நிறுவனங்கள் ரூ. 20 லட்சத்திற்கும் மேல் தொழில் செய்யும்போது நடைமுறை மூலதனத்திற்கு என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.
மதுபானம் தயாரிக்க பயன்படுத்தும் சாராயம் ஒரு மூலப்பொருளாக தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உண்மையை ஜிஎஸ்டி கவுன்சில் உணர்ந்துகொள்ள தவறிவிட்டது. அதனால், மதுபானம் தயாரிக்க பயன்படும் சாராயத்திற்கு விதிக்கப்படுகின்ற உயர்ந்தபட்ச வரியும் உத்தேச செஸ் வரியும் தொழில்துறையின் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் சாராயத்திற்கும் விதிக்கப்படுகிறது. தொழில்துறையின் வளர்ச்சிக்கு இது எப்படி உதவும்?
சேவை துறையில் உயர்ந்தபட்ச வரி அளவு முன்பு 15%தான். இனி அது 18 சதவீதமாக உயர்கிறது. இந்த 3 சதவீத உயர்வு ஒட்டுமொத்தமாக தொழிற்துறையில் கடுமையான விளைவுகளை உருவாக்கக்கூடும். அதன் விளைவாக, நிச்சயமாக விலைகள் உயரும், பணவீக்கம் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
சேவை துறையோடு இணைந்ததாக நிதிசேவை துறை உள்ளது. இந்த நிதிசேவை துறையோடு வங்கிகள் விதிக்கும் ஏடிஎம்களுக்கான சேவை கட்டணம் 18 சதவீதமாக உயர்கிறது.
வரைவோலை முதல் வங்கிகள் செய்யும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை யாருடைய ஒப்புதலுக்கும் காத்திராமல் வங்கிகள் உயர்த்திக்கொண்டே போகின்றன. சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத்தொகை என்ற பெயரால் ஸ்டேட் வங்கி முதல் எல்லா வங்கிகளும் அபராதம் விதித்து வருகின்றன.
இது தொழில்துறையில் சிறிய நடுத்தரத் தொழில்களையும் வங்கிக் கணக்குகளை பராமரித்து இயக்கிக்கொண்டுள்ள நடுத்தர வகுப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
பங்கு முதலீட்டு துறையில் பங்கு முதலீட்டை பராமரிப்பதற்கென மூலதன சொத்து பராமரிப்பு நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு கட்டண விகிதம் ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது. இது முதலீட்டு துறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இன்ஸூரன்ஸ் கம்பெனிகள் பிரிமியம் கட்டணங்களை வசூலிப்பதும், இன்ஸூரன்ஸ் நிறுவனங்களுக்கான சேவை கட்டணங்களை நிர்ணயம் செய்வதும் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகும்.
பொது  இன்ஸூரன்ஸ் மட்டுமல்லாது, பயிர் இன்ஸூரன்ஸ், மோட்டார் வாகன இன்ஸூரன்ஸ், தீ விபத்துக்கான இன்ஸூரன்ஸ் ஆகியவைகளும் கட்டண உயர்வுக்காக காத்திருக்கின்றன.
3 மாதங்களுக்கு ஒரு முறை பாலிசிக்கு ரூ. 20,000 செலுத்தும் அலுவலக ஊழியர் ஜூலை முதல் தேதியிலிருந்து 600 ரூபாய் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் கூற முடியுமா?
வீடு கட்டும் துறையிலும் ஜிஎஸ்டி புகுந்து பெரும் கலவரத்தை உருவாக்கியுள்ளது. ஒப்பந்த முறையில் வீடு கட்டித் தருவோர் 12 சதவீதம் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கட்டுமான செலவு ரூ 1 கோடி என்றால் அதற்கான கட்டணச் சேவை செலவு ரூ. 12 லட்சமாகும். கட்டுமானத்திற்கு தேவைப்படும் இரும்பு, சிமெண்ட், மணல், கல், பிளாஸ்டிக் பொருள்கள் விலை ரூ.18 முதல் ரூ. 28 சதவீதம் வரை பல அளவுகளில் உயர்த்தப்பட்டுள்ளன. கட்டுமானச் செலவு குறைந்தபட்சம் 40 சதவீதம் உயர்ந்துவிடும். இது கட்டுமானத் தொழிலை கடுமையாகப் பாதிக்கும். கட்டுமானத் தொழில் தேக்க நிலையை அடையும்போது, படிப்பறிவு இல்லாத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிச்சயம் குறைக்கப்படும். அதன் விளைவாக நகர்ப்புறங்களில் சில்லறை குற்றங்கள் எண்ணிக்கை பெருகும். சமூகத்தின் அமைதி குலையும்.
இப்படி எட்டுத் திசைகளிலும் எல்லாத் துறைகளிலும் வரி உயர்வு வந்து மிரட்டும்போது விலை உயர்வும் பணவீக்க உயர்வும் இருக்காது என்று எந்த சோதிடரும் கூற முன்வரமாட்டார். அதனால் ஜிஎஸ்டி உண்மையில் நமக்கு உதவுமா? இந்த கேள்விக்கு இப்பொழுது நாம் என்ன சொன்னாலும் அருண்ஜெட்லி ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் அவரே உணர்ந்தால்தான் ஜிஎஸ்டி வரி உயர்வின் பாதிப்பு அவருக்கு புரியும்…

ரா.குமாரவேல்,                                                                                                                                            - வல்லம் கரு. சந்தானம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...