வெள்ளி, 30 ஜூன், 2017

பணமதிப்பிழப்பும்...., ஜி.எஸ்.டி ,யும்......!

வரி சம்மந்தமான எந்த ஒரு திட்டத்தையும் அல்லது மாற்றத்தையும், நிதியாண்டு தொடக்கத்தில் அமல்படுத்துவது தான் மத்திய மாநில அரசுகளின் நடைமுறை. 

ஆனால் நிதி ஆண்டின் மத்தியில் , ஜூலை 1 ம் தேதி ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமலுக்கு கொண்டு வருகிறது பாஜக அரசு. 2011ம் ஆண்டு முதலாகவே காங்கிரஸ் அரசு முன் வைத்த திட்டம் தான் ஜிஎஸ்டி. திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கான சாஃப்ட்வேர் இன்னும் தயாராகவில்லை. ஆனாலும் அவசர அவசரமாக ஜிஎஸ்டியை அமல்படுத்த அரசு காட்டும் வேகம் குறித்து கேள்வி எழுகிறது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு, எக்சைஸ் டூட்டி முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. எக்சைஸ் டூட்டி சட்டத்தின் படி, வரி செலுத்தாமல் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் வாசலை தாண்ட முடியாது. 
அரசு அலுவலர்கள் எக்சைஸ் டூட்டி கட்டியதற்கான சான்றிதழை சரிபார்த்தப் பிறகே, பொருட்களை வெளியே அனுப்புவார்கள். 

ஜிஎஸ்டி சட்டத்தின் படி, எந்த நிறுவனத்திலும் முன்னால் எக்சைஸ் டூட்டி அதிகாரிகளோ அல்லது ஜிஎஸ்டி வரி அதிகாரிகளோ சோதனை செய்யப் போவதில்லை. திட்டம் முழுவதும், முழுக்க முழுக்க E Form என்று சொல்லப்படுகிறது படிவத்தில் நிறுவனங்கள் அளிக்கும் விவரங்களைப் பொறுத்தே செயல்படுத்தப் படுகிறது. 

இந்த E Form ஐ பூர்த்தி செய்து , சரக்குடன் அது சென்று சேருமிடம் வரை, சரக்கு வாகனத்துடன் அனுப்ப வேண்டும். 

வழியில் சோதனை செய்யப்படும் போது அதைக் காட்ட வேண்டும்.E Form இல்லாவிட்டால் சரக்குகள் பறிமுதல் செய்யப்படும். இரண்டு வாரங்களுக்கு முன்னால் தான் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒரு குண்டைத் தூக்கி போட்டார். 

அதாவது E Form க்கு உரிய சாஃப்ட்வேர் இன்னும் தயாராக வில்லை. அதற்கான டெண்டர் கூட இன்னும் விடப்படவில்லை. எந்த நிறுவனம் அதை வடிவமைக்கும் என்பது கூட இன்னும் தெரியாது என்றெல்லாம் கூறியிருந்தார். 

நாடு முழுவதும் ஒரே வரி என்பதுடன் வரி ஏய்ப்பை தடுப்பதுவும் ஜிஎஸ்டி திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். E Form மூலம், நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து, யாரிடமிருந்து யாருக்குச் சென்றது போன்ற விவரங்கள் அரசின் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். 

அதைக் கொண்டு, நிறுவனங்கள் தாக்கல் செய்யும் விவரங்களுடன் ஒப்பிட்டு வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க முடியும். அரசிடம் தகவல்கள் ஏற்கனவே இருப்பதால் நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்ய மாட்டார்கள். 
இன்னும் E Form சாஃப்ட்வேர் ரெடியாகவில்லை என்பதால், அச்சடிக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். வழியில் சோதனை செய்யாவிட்டால் நிறுவனங்கள் அதை கிழித்துப் போட்டு விட்டு வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புள்ளது.

 ஜிஎஸ்டியின் அடிநாதமான E Form க்குரிய முக்கியமான சாஃப்ட்வேர் இல்லாமலே அரசு ஏன் இத்தனை அவசரமாக ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும். அதுவும் 7 ஆண்டுகளாக இழுபறியாக இருக்கும் இந்தத் திட்டத்திற்கு, நிதியாண்டின் மத்தியிலேயே என்ன அவசரம். 

ஏப்ரல் 1ம் தேதி வரை காத்திருக்க முடியாதா என பல கேள்விகள் எழுகின்றன. தற்போது சுமார் 40 சதவீத பொருளாதாரம் அரசின் கணக்கில் வரவில்லை. 

அரசு காட்டி வரும் பொருளாதார குறியீடு உண்மையான அளவை விட குறைவாகும். உதாரணத்திற்கு உண்மையான பொருளாதார குறியீடு 100 என்றால் அரசுக் கணக்கில் வருவது 60 மட்டுமே. 
நாற்பது சதவீத நிறுவனங்கள் பொருளாதார குறியீட்டுக் கணக்கில் வராமல் இருப்பவைகள். எக்சைஸ் டூட்டிக்கு 1 கோடி ரூபாய் உற்பத்தி வரைக்கும் விலக்கு அளித்த அரசு, ஜிஎஸ்டிக்கு 20 லட்சமாக குறைத்துள்ளது.

இதன் மூலம் அனைத்து நிறுவனங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வைக்கிறார்கள். இதுவரையிலும் பொருளாதார குறியீட்டுக் கணக்கில் வராத நிறுவனங்களை உள்ளே கொண்டு வருகிறார்கள். 
500.1000 பணமதிப்பிழப்புக்குப்  பிறகு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதை அனைவரும் அறிவார்கள். 

இது வரையிலும் கணக்கில் வராத நிறுவனங்களின் பொருளாதார கணக்கையும் கொண்டு வருவதன் மூலம், அரசின் மொத்த பொருளாதார குறியீட்டுக் கணக்கை ஒரளவுக்கு அதிகமாக்கிக் காட்ட இயலும்.. பாஜக அரசு பொருளாதாரத்தை மீட்டுவிட்டது. 

எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் என்றெல்லாம் காட்டுவதற்கு இத்தகைய மோசடி வித்தைகள் உதவும். 

கணக்கை மாத்திக்காட்டி மக்களை ஏமாற்றும் வித்தைக்காகத் தான் அவசரக் கோலத்தில் ஜிஎஸ்டியை நிதியாண்டின் மத்தியிலேயே அரசு செயல்படுத்த முன்வந்துள்ளது. 
பணமதிப்பிழப்பு  மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை மூடி மறைக்கவே, பாஜக அரசு ஜிஎஸ்டி திட்டத்தை அசுர வேகத்தில் செயல்படுத்துகிறது. 

எந்த ஒரு திட்டத்தையும் ' Right at First Time' 'முதல் தடவையே முற்றிலும் சரி' அடிப்படையில் செயல்படுத்துவது தான் பொருளாதாரத்தின் முக்கிய கோட்பாடு ஆகும். 
சரியான திட்டமிடுதல், செயலாக்கம் இல்லாததால் தான் பணமதிப்பிழப்பு   மிகப்பெரும் தோல்வியை தழுவியது. 

பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுத்தது பணமதிப்பிழப்பு வழியில் தற்போதைய ஜிஎஸ்டியும் செல்வதற்கான அத்தனை அறிகுறியும் தெரிகிறது. அவசரக்கோலத்தில் செய்யும் காரியம் சரிவராது என்பதை பாஜக முன்பே அறிந்தும் இப்படி அவசரப்படுவது பணமதிப்பிழப்பில் பெயர் கெட்டது போல்  ஆபத்தாகவே முடியும்.

அவசரத்தில் அண்டாக்குள் கூட கை  போகாது.
                                                                                                                                            - கரிசல் பிரபு
ஆசிரியர் பிரஸ் ஏட்டய்யா குமாரவேல்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...