ஞாயிறு, 18 ஜூன், 2017

காலங்கனியவில்லை

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஏப்ரல் 18ம் தேதி அனுப்பிய கடிதத்தில் 

 'ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு  பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை நிரூபிக்கும் ஆவணங்கள் சிக்கியுள்ளதை ஏப்ரல் 9ம் தேதி வருமான வரித்துறையினர்  தெரிவித்தனர். பணம் கொடுத்தது நிரூபிக்கவும் பட்டது.
வாக்ககிளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவது இபிகோ 171பி  பிரிவின் கீழ்  குற்றமாகும். 
இந்த விவகாரத்தில் கிடைத்துள்ள தகவல்களை பரிசீலித்த தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே வழக்குப்பதிய ஆர்.கே .நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உத்தரவிடுகிறது. 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி தினகரன் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது 

உடனே வழக்குப்பதிந்து காவல்துறை  எடுத்த நடவடிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு  தமிழ் நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி, விரைவில்தகவல் தெரிவிக்க வேண்டும். "
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

அக்கடிதம் ஏப்ரல் 18ம் தேதியே தொலைநகல் ,மின்னஞ்சல்  மூலம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கிடைத்துள்ளது.
ஆனால் அவர் அக்கடிதப்படி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.பதிலும் அனுப்பவில்லை.
ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பியதுடன் தனது பணியை முடித்துக்கொண்டார்.
என்னவாயிற்று என்று கேட்கவில்லை.

ஆர்கே நகர தேர்தல் அலுவலரோ மாநில அரசின் எடுபிடி அதிகாரி அவர் எப்படி முதல்வர்,அமைச்சர்கள் மீது  வழக்கு பதிவார்.?

இதை ராஜேஷ் லக்கானி அல்லவா நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாகவே தனது தேர்தல் ஆணையப் பணிக்காலத்தை அர்ப்பணித்த அவரும் கண்டு கொள்ளவில்லை.
அது கூட ஜெயலலிதாவால் அப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இரு மாதங்களாக தனது ஆணைக்கு எந்த வித நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட்டது என்று இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை கேட்காதது ஏன்?

நடவடிக்கையை விரைவாக்க என்ன அறிவுரைகளை ராஜேஷ் லக்கானிக்கு வழங்கியது.?

இந்த வழக்கு பதிவு ஆணையே தகவல் உரிமை சட்டத்தின் கீழ், சென்னையை சேர்ந்த வழக்குரைஞர், வைரக்கண்ணன் இந்திய தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்காமல் இருந்தால் வெளியே தெரிந்திருக்காது.

அதிமுக முதல்வர் எட்டப்பாடியும்,அமைச்சர்களும்,ராஜேஷ் லக்கானியும் தங்கள் பதவிக்காலத்தை நினைவூட்டு அனுப்பியே அனுபவித்து கவிழ்ந்திருப்பார்கள்.
அப்படி இந்த ஆட்சி கவிழ்ந்த பின்னர் வழக்கு பதிவை பார்த்துக்கலாம் என்று நாஞ்சில் சம்பத் வழியில் காத்திருந்திருப்பார்களோ?

இப்படி இந்திய தேர்தல் ஆணையம் ஆமை அல்லது மங்குணித்தனமாக செயல்பட்டால் அதன் மீது தேர்தலில் போட்டியிடும் பணமுதலைகளுக்கு ,பணப்பட்டுவாடா நபர்களுக்கு எங்கிருந்து பயம் வரும்.
தடாலடி நடவடிக்கையை கையில் ஆதாரத்தை வைத்துக்கொண்டும் எடுக்காமல் இருந்தது தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனம் என்பதா?

இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்ற குற்றசாட்டு உண்மைதான் என்பதாகுமா?

மத்திய ஆளுங்கட்சி கண்ணசைவுக்கேற்ப இந்த தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் நடந்து கொள்வது உண்மைதான் என்று எடுத்துக்கொள்வதா?

மொத்தத்தில் தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் வாக்களிக்கும் மக்களிடம் இந்திய தேர்தல் ஆணையம் மீது நல்லெண்ணத்தை உண்டாக்குவதாக இல்லை.

வாக்குகளிக்க பணம் பெற்றால் கைது என்று பூச்சாண்டி காட்டிய தேர்தல் ஆணையம் பணம்கொடுத்தவர்களை கடைசி வரை கொடுக்கவிட்டு வேடிக்கை பார்த்து விட்டு தேர்தலுக்கு முதல் நாள் தாளமுடியாத ஆதாரங்களால் தேர்தலை நிறுத்துவது அதன் பெருமைக்கு அழகல்ல.சேஷன் போன்றவர்கள் சிங்கமாக ஒளிர்ந்த தேர்தல் ஆணையம் அசிங்கமாக போய் கொண்டிருக்கிறது.

துணை ராணுவம் வரை கொண்டுவந்து தேர்தல் நடத்தும் வசதி உள்ள தேர்தல் ஆணையம்,தீவிரவாதிகள்,நக்சல்கள் பகுதியிலும் தேர்தலை நட்ச்த்திக்காட்டும் தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் போன்ற சின்ன தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்கமுடியவில்லை என்று புலம்புவது ,அங்கு தேர்தல் நடத்த இன்னும் காலங்கனியவில்லை என்று அறிக்கை விடுவதும்.இந்திய மக்களாட்ச்சி தத்துவத்தை பெரிதாக இன்னமும் எண்ணிக்கொண்டிருக்கும் பாமரனால் நம்ப முடியவில்லை.

யானை தனது பலம் அறியாமல் சின்ன மனிதனுக்கு அடங்கி நடப்பது போல் இந்திய தேர்தல் ஆணையம் இருக்கிறது என்பது கவலைதருகிறது.

அதிமுகவினரால் உயிருக்கு குறிவைக்கப்பட்டபோதும் நடுநிலையுடன் செயல்பட்ட சேஷன் போன்ற சிங்கங்கள்  தேர்தல் ஆணையத்துக்கு இனி வருவார்களா என்பதே இன்றைய மக்களின் பெரு மூச்சு விடும் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...