வியாழன், 1 பிப்ரவரி, 2018

பொய் சொல்லும் பொருளாதார அறிக்கை.?பிப்ரவரி 1-ம் தேதி, 2018-19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அதற்கு முன்னதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நிதி ஆண்டு2017-18-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். 
2017-18 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக என்னவெல்லாம் நடந்தது, அரசு இந்த ஆய்வறிக்கையில் என்னவெல்லாம் சொல்கிறது என்று பார்க்கையில், 2017-18 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்த நிதி ஆண்டு குறித்த விவரங்களைக் காட்டிலும் வரும் நிதி ஆண்டு 2018-19-ல் என்னவெல்லாம் நடக்கும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதன் விவரங்கள்தாம் அதிகமாக இடம்பெற்றுள்ளன. 
2017-18 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.75 சதவிகிதமாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், வரும் நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன், இந்தியா உலக அரங்கில் வளர்ந்து வரும் நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. 
எப்படி, அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, வழிகள் என்ன என்பதைக் குறித்து எந்த விவரங்களும் இல்லை.
வரும் நிதி ஆண்டில் வேளாண்மைக்கு ஆதரவு வழங்கவும், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கவும், வங்கித்துறையை மேம்படுத்தவும் கொள்கைகள் வகுப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வேளாண் துறையில் இருக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், புதிய கொள்கைகள் என்று ஒவ்வோர் ஆண்டும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். 
ஆனால், இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்தும் இருக்கும் வகையில்தான் இருந்தது. ஆனால், சொன்ன எதுவும் நடக்கவில்லை. 
நீர் பாசனத்துக்கு ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 
எங்கே பாசனம் நடத்தப்பட்டது? 
தனியார்மயமாக்கல் என்பதை அரசு தீவிரமாக முன்னெடுப்பதில் உள்ள நோக்கம் என்னவென்று தெளிவாகவே தெரிகிறது. அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்காக அரசு நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. 
தனியார் நிறுவனத்தால் சிறப்பாகச் செய்ய முடிந்த ஒரு தொழிலை, அரசால் ஏன் சிறப்பாகச் செய்ய முடியவில்லை என்ற கேள்விக்கு அரசிடம் என்ன பதில் இருக்கிறது?
பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக கண்காணிப்பு கொள்கை கொண்டுவர வேண்டிய அவசியம் இருப்பதாக நிதி அமைச்சர் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். 
விலையில் கட்டுக்குள் வைக்க பல நிபுணர்கள் Anti profitting provision வழியைக் கூறிவருகிறார்கள். 
ஆனால், அதை இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக தினசரி விலை மாற்றத்தைத்தான் அமலுக்குக் கொண்டு வந்தது. 
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பின் வரி விதிப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதன் பின்னர் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. 
அதன் மூலம் மற்ற நாடுகளைக் காட்டிலும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வரிகள் குறைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி வரி நடைமுறைக்குப் பின் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை தற்போது பாசிட்டிவான போக்கு நிலவிவருவது உண்மைதான். ஆனால், ஜிஎஸ்டியால் அழிந்துபோகும் நிலைக்கு ஆளான சிறு, குறு தொழில்களுக்கு என்ன மாற்றுவழியை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது கேள்விக்குறி.
தனியார் முதலீடுகளை அதிகரிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் முதலீடுகள் என்பது முற்றிலும் குறைந்தே காணப்படுகிறது.
 ஏற்றுமதியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடையவில்லை. 
வரும் ஆண்டில் இவை இரண்டிலும் முன்னேற்றம் இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சியும் கணிசமாக இருக்கும்.
வாராக் கடனை மீட்க திவால் சட்டம் மூலம் தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு வரவழைத்து, அவருடைய சொத்துக்களிலிருந்து அவர் தர வேண்டிய கடனை வசூலித்துவிட்டால் உண்மையிலேயே அது அரசின் சாதனைதான். 
சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நல்ல விஷயம். ஆனால், எந்த ஒரு பொருளோ, சேவையோ விலை குறையவில்லையே?
நீதித்துறையில் வழக்குகள் தேக்கம் மற்றும் தாமதத்துக்குத் தீர்வுகள் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கூடவே, தீர்வு காண எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம். 
நடப்பு நிதி ஆண்டில் ரூ. 2,0339 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
கடன் தள்ளுபடி பெற்ற அந்த ஏழை விவசாயிகளின் பட்டியல், மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை விவரங்களை வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 
இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில அம்சங்கள்: தூய்மை பாரதம் திட்டம் மூலம் இந்திய கிராமப்புற சுகாதாரம் 2014ல் 39 சதவிகிதமாக இருந்தது. 
தற்போது 76 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறதாம்! 
நகரத்தை நோக்கி நகரும் மக்கள் அதிகரிப்பதால் விவசாயத்தில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது. ஆண் குழந்தை பிறக்கும் வரை குழந்தைகள் பெற்றுக்கொள்வதைப் பெற்றோர்கள் தொடர்கிறார்கள். 
காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். 
2019 மக்களவைத்  தேர்தல்களை ஒட்டியாவது மக்களுக்கு ஓரளவேனும் நல்ல விஷயங்கள் நடக்கட்டும் என்ற மனநிலை இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. 
எனவே, இந்த நிதி ஆண்டிலாவது அரசின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

                                                                                                                          -ஜெ.சரவணன்,(விகடன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...