செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அமைச்சர்களை வளைக்கும் அமலாக்கத்துறை!

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து, சி.பி.ஐ விசாரணையை நோக்கி வழக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. 
'வருமான வரித்துறையினரின் ஆய்வில் கிடைத்த ஆவணங்களுக்கு ஆதாரங்களை அளிப்பதற்காக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார் விஜயபாஸ்கர். மூத்த அமைச்சர்களை குறிவைத்து விசாரணை நடந்து வருகிறது" என்கின்றனர் அதிகாரிகள். 
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி ரூபாய் விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரத்தை, கடந்த 7-ம் தேதி பறிமுதல் செய்தது வருமான வரித்துறை. இந்த ரெய்டின் மூலம் ஆளும்கட்சி வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. "போலியான ஆவணத்தைக் கையில் வைத்துக் கொண்டு பேசுகிறார்கள். 
இதில் எந்த உண்மையும் இல்லை' என தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் பேசி வந்தனர். நேற்று அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி அளித்த பேட்டியில், 'அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஐந்து லட்ச ரூபாய் வாங்கியது உண்மைதான். 
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் தங்கியிருந்த ஓட்டலுக்குக் கட்டணம் செலுத்துவதற்காக வாங்கப்பட்டது. ஜெயலலிதாவின் கைரேகையை எடுத்ததற்காக வாங்கப்படவில்லை' என ஒப்புக் கொண்டார். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை தினகரன் எதிர்பார்க்கவில்லை. 
"சேகர் ரெட்டியைக் கைது செய்வதற்கு என்ன ஆதாரங்கள் போதுமானதாக இருந்ததோ, அதே அளவுக்கு விஜயபாஸ்கர் வீட்டில் இருந்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இருந்து அவ்வளவு எளிதில் அவர் தப்ப முடியாது.
 நேற்று நடந்த விசாரணையில், '89 கோடி ரூபாய் எந்தெந்த வழிகளில் கொண்டு வரப்பட்டது?' 
என்ற கேள்விகளை விஜயபாஸ்கர் முன்னால் வைத்தோம். 
அவரிடம் இருந்து உறுதியான பதில்கள் கிடைக்கவில்லை. 'வரி ஏய்ப்பின் மூலம் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தைத்தான் விநியோகித்தார்கள்' என்பதற்குப் போதுமான அளவுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு விளக்கம் கேட்டபோது, 'அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் கொடுங்கள்'  என்றார். 
இதையடுத்து, வரும் வியாழக்கிழமை ஆதாரங்களைக் கொண்டு வந்து கொடுக்க இருக்கிறார் விஜயபாஸ்கர். 
தேர்தலுக்காக மூத்த அமைச்சர்கள் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பெரும் பணத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
விஜயபாஸ்கர்
இதுதொடர்பாக, எம்.எல்.ஏக்கள் விடுதி, அமைச்சரின் கல்குவாரிகள், மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமியின் வீடு, அ.தி.மு.க முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு என 35 இடங்களில் சோதனையை நடத்தினோம். 
இதில், 5 கோடி ரூபாய் ரொக்கப் பணமும் வாக்காளர்களுக்கு மூத்த அமைச்சர்கள் பணத்தை விநியோகம் செய்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தன. 
அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தலா முப்பதாயிரம் வாக்காளர்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கு பணம் விநியோகிக்கும் முக்கிய கேந்திரமாக விஜயபாஸ்கரின் வீடு இருந்துள்ளது. 
எங்களது கேள்விகளையும் அவர் சரியான வகையில் எதிர்கொள்ளவில்லை. சேகர் ரெட்டியின் வர்த்தகத்தில் விஜயபாஸ்கரின் தொடர்புகள் குறித்த கேள்விகளையும் அவரிடம் கேட்டோம். அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. 
பணம் விநியோகம் தொடர்பான புகாரில் சேலத்தை நோக்கி அடுத்தகட்ட விசாரணை நடக்க இருக்கிறது" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.
"சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் உள்ளிட்டவர்களிடம் இருந்து பணம், தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதன்பேரில் அடுத்தடுத்து சிலரது வீடுகளிலும் ரெய்டு நடந்தது. 
தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. ஆர்.கே.நகர் பண விநியோக விவகாரத்தில், ஆளும்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் அனைவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
இந்தளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் ஆதாரங்கள் சிக்கியதில்லை. அனைத்து பரிவர்த்தனைகளையும் வெளிப்படையாகவே நடத்தி வந்திருக்கிறார்கள். 
இந்த ஆவணங்களின் அடிப்படையில், மூத்த அமைச்சர்கள் சிலரும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர். வாக்காளர்களுக்கும் கொடுத்த விவகாரம் நிரூபிக்கப்பட்டால், தினகரனால் மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. 
சோதனையில் கிடைத்த விவரங்களை, அமலாக்கத்துறையின் பார்வைக்கும் அனுப்பியிருக்கிறோம்" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள். 
‘அமைச்சர் விஜயபாஸ்கர் எந்நேரமும் கைது செய்யப்படுவார்' என்ற தகவல், அரசியல் வட்டாரத்தில் வலம் வருகிறது. 'எதற்கும் தயாராக இருங்கள்' என்ற தகவல், கார்டன் வட்டாரத்தில் இருந்து அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
அடுத்து நடக்கப் போகும் காட்சிகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். 
                                                       விகடன் தளம் உதவியுடன்.ரா.குமாரவேல் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...