செவ்வாய், 29 ஜனவரி, 2019

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வழங்கியது பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் முக்கிய வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கிறது என சிபிஐ கருதுகிறது. அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.
தீபக் கோச்சார்,           சாந்தா கோச்சார்,         வேணுகோபால் தூத்.


சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை தனக்குச் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக ‘ஜனநாயக’ அமைப்புகளின் துணையுடன் தூக்கி அடித்தது மோடி அரசு. சுதந்திரமான அமைப்பான சிபிஐ-க்கு இந்த நிலைமையா எனக் கூப்பாடு போட்டாலும் மோடி அரசு அதை பொருட்படுத்தவில்லை.
சிபிஐ இயக்குனரை அவமானப்படுத்தி அனுப்பியதோடு, பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்த மோடி அரசுக்கு ‘ஒத்துழைக்காத’ சிபிஐ அதிகாரிகள் தூக்கி அடிக்கப்பட்டனர்.

அனைத்தையும் ஐசிஐசிஐ – வீடியோகான் போன்ற சில வழக்குகளில் குறைந்தபட்சமாக செயல்பட பார்க்கிறது சிபிஐ. எதேச்சதிகாரத்துடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி கும்பலுக்கு அது எரிச்சலை, குடைச்சலைத் தருகிறது.
திசு புற்றுநோய் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா சென்றிருக்கிறார். அவருடைய உடல்நலன் குறித்த தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக வைக்கப்பட்டிருக்கிறார்.

தங்களுடைய ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்குக்கூட வர இயலாத நிலையில் உள்ள அருண் ஜேட்லி, புற்றுநோய் படுக்கையில் இருக்கும் அருண் ஜேட்லி ஐசிஐசிஐ – வீடியோகான் முறைகேட்டில் சிக்கிய புள்ளிகளை காப்பாற்றும் பொருட்டு சிபிஐயின் விசாரணையை ‘புலனாய்வு சாகசம்’ என தனது முகநூலில் எழுதுகிறார்.
“புலனாய்வு சாகசத்துக்கு தொழில்ரீதியான புலனாய்வுக்கு அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கிறது” என ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிப்போன இந்திய தொழிலதிபர்களின் நண்பரான அருண் ஜேட்லி, ஐசிஐசிஐ மோசடியாளர்களுக்கு ஒத்து ஊதும் பதிவை தொடங்குகிறார்.

“ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கிறேன்.

ஐசிஐசிஐ வழக்கின் முக்கியமான இலக்குகளின் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் மீண்டும் அது வந்து போனது. முக்கியமான இலக்குகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, போகத் தெரியாத இடத்துக்கு (அல்லது எல்லா இடங்களிலும்) பயணம் மேற்கொள்ளப்படுகிறதா? வங்கித் துறையில் உள்ள அனைவரையும் ஆதாரம் இருந்தோ இல்லாமலோ சேர்க்கும்போது, நாம் என்ன விளைவுகளை உருவாக்குகிறோம் அல்லது காயப்படுத்துகிறோம்?” என வங்கி மோசடிகளை விசாரிப்பதில் மோசடியாளர்களின் சார்பாக பதற்றம் கொள்கிறார் அருண் ஜேட்லி.

இதைச் செய்வது யார்? நிதியமைச்சராக இருந்தவர்.

இந்தியா திரும்பி வந்தால் இப்போது நிதியமைச்சர் ஆகக் கூடியவர். அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், மேற்கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க முட்டுக்கட்டை போடுகிறார் அமைச்சர்.

இந்த வழக்கின் பின்னணி என்ன? யாரெல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறார்கள்?
2012-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார், வீடியோ கான் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை கடனாகக் கொடுத்தார்.

 வீடியோ கான் நிறுவனம், இந்த பணத்தை, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு அப்படியே மாற்றிவிட்டது.
இந்த முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார் சந்தா கோச்சார்.
சிபிஐ முறைகேட்டில் தொடர்புள்ள மூவர் மீது வழக்கு பதிவு செய்தது.

ஆனால், முறைகேடு இவர்கள் மூவரோடு முடியவில்லை.
ஐசிஐசிஐ-யின் தற்போதைய செயல் அதிகாரி சந்தீப் பாஸ்கி, பிரிக்ஸ் நாடுகளின் வங்கியான நியூ டெவலப்மெண்ட் பாங்கின் தலைவர் கே.வி. காமத், கோல்மென் சாக்ஸின் தலைவர் சஞ்ஜோய் சாட்டர்ஜி, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் கே. ராம்குமார்.

ஐசிஐசிஐ புருடென்ஸியல் லைஃப் செயல் அதிகாரி என். எஸ். கண்ணன், ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கியின் செயல் அதிகாரி ஸாரின் துருவாலா, டாடா கேப்பிடல் செயல் அதிகாரி மற்றும் தலைவர் ராஜீவ் சபரிமால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹோமி குருஸ்ரோகான் ஆகியோர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர்.
கிட்டத்தட்ட இந்தியாவின் வங்கி – நிதித்துறை வட்டத்தில் உள்ள பெரிய ‘தலைகள்’ பாதி பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்தியாவின் வங்கி – நிதிச் சூழல் இத்தகைய கேடு கெட்ட நிலையில் இருப்பது குறித்து கொஞ்சமாவது கூச்சநாச்சத்துடன் கவலைப்பட்டிருக்க  வேண்டிய அல்லது கவலைப்படுவதாக நடித்திருக்க வேண்டிய அருண் ஜேட்லி, வெளிப்படையாக நோய் படுக்கையில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பாற்றத் துடிக்கிறார்.

  சிபிஐ சாகசத்துடன் இந்த அதிகாரிகளின் பெயர்ப்பட்டியலை ஊடகங்களில் கசியவிட்டிருப்பதாக கவலைப்படுகிறார் ஜேட்லி.

“மத்திய நிதியமைச்சர் சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் கருத்து சொல்வது சரியானதல்ல.  சிபிஐ தொடர்ந்து பலரை விசாரித்து வருகிறது,  அது சுதந்திரமாக தன்னுடைய பணியைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

“எந்த ஒரு நீதிமன்றமும் அதிகாரமும் சுதந்திரமான புலனாய்வு அமைப்பான சிபிஐ எப்படி செயல்பட வேண்டும் என சொல்ல முடியாது.  மேற்பார்வையில் நடப்பது என்பதும்கூட பரந்துபட்ட மேற்பார்வை என்பதுதான் பொருளே அன்றி, குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் தலையிடுவது அல்ல” என்கிறார்  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கே.

கடந்த நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சியில் ‘ஜனநாயக’ப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு, ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் துணை அமைப்புகளை காலில் போட்டு மிதித்தது.

 கார்ப்பரெட் கயவாளிகள் ஆயிரக்கணக்கானக் கோடியைத் தூக்கிக் கொண்டு, போகும் முன் நிதியமைச்சருக்கு ‘டாடா’காட்டி விட்டு சொகுசு நாடுகளுக்கு சென்று விட்டனர்.
மீதமிருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய தல மோடி நாட்டை விற்று விட்டார்.
 இதெல்லாம் அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகிவிட்ட பிறகும், ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.
 


                                                                                                                     -கலைமதி
 நன்றி :வினவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...