வெள்ளி, 19 ஜனவரி, 2018

பிரச்னை ஆண்டாள் அல்ல.!

ஆண்டாள் தான் இன்று பரபர செய்தி,தமிழ் நாட்டின் அத்தனை அவலங்களுக்கும் காரணம் கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தேவதாசி குலம் என்று சொன்னதால்தான் என்று அவாள் கூட்டம் போராடுகிறது.
வைரமுத்து மன்னிப்பு கேட்டால் தமிழ்நாடே செழிப்பாக்கி விடும் என்பது போல் கலகம் செய்து வருகிறார்கள்.
பார்ப்பன சூழ்ச்சி தெரியாமல் அவர்களால் தீட்டு என்று ஒதுக்கி வைத்தவர்களும் அவாள் சாணக்கியத்தனத்துக்கு   ஒத்து ஊதுவதும் ,வைரமுத்து தலைக்கு கோடிகளை விலை வைப்பதுதான் மிக வேதனை.

இன்று போராடும் கூட்டம் தமிழ் நாட்டின் மக்கள் பிரச்னைக்கு என்றாவது எதிர் குரல் கொடுத்துள்ளதா?

ஜல்லிக்கட்டு,மீத்தேன்,நியூட்ரான்,கெயில்,ஸ்டெர்லைட்,குடிநீர் பிரச்சனை,விலைவாசி உயர்வு ,பணமதிப்பிழப்பு சோகங்களுக்கு எதிராக ,பெட்ரோல் விலை உயர்வு என்று எதிலாவது இந்த ஆன்மிக அரசியலை இவர்கள் ,இந்த கும்பல் செய்துள்ளதா?

முதலில் இந்து என்ற ஒரு குறிப்பிட்ட மதம் கிடையாது.ஒவ்வொருவருக்கும் ஒரு சாமி இருக்கிறது.வழிபாடு முறை இருக்கிறது.
ஒரு வழிபாட்டின் சைவம்.மற்றோருவினர் அசைவம்.
ஒரு கூட்டத்துக்கு மாடு (பசு)கோமாதா.
சிலருக்கு எளிமையாக கிடைக்கும் உணவே மாட்டு இறைச்சிதான்.

சில சாமிகளுக்கு சக்கரைப்பொங்கல்,புளியோதரை நைவேத்தியம் .
எளியோர் சாமிகளுக்கு பன்றிக்கறியும்,சாராயமும்தான் படையல்.
இதுதான் இந்தியா முழுக்க உள்ள வழிபாடுகள்.

இந்தியாவுக்கு கைபர் கணவாய் வழியே வந்த ஆரியக் கூட்டம் திராவிடர்களை சிந்து நதிக்கரையில் இருந்த தள்ளித்தள்ளி தென்பகுதிக்கு ஒட்டியது.
வெள்ளைத்தோலையும் ,வஞ்சக வார்த்தைகளைக்காட்டியும் திராவிடர்களை இந்திய பூர்விகர்களை அவர்களை விட தங்களை மேம்பட்டவர்கள் என்று காட்டியது ஆர்ய கூட்டம்.
மக்களின் உழைப்பை சுரண்ட தங்களை ஆண்டவனுக்கு தரகர்களாக்கியது.

சிதறிய பல சாமிகள் வழிபாட்டையும் ஒன்றாக்கி அவர்களை இந்துக்கள் என்றாக்கியது.
ஏற்கனவே தமிழர்களின் வழிபாட்டில் இருந்த சிவன்,முருகன் ஆகியோர்களை அதை வழிபடுபவர்கள் சைவ உணவினர் என்பதால் தங்கள் வைணவ மதத்துடன் ஒட்டிக்கொண்டனர்.

சிவன்,பார்வதி முருகன் என்ற குடும்பத்தில் தங்கள் உருவாக்கிய பிள்ளையார் என்ற விநாயகரை நுழைத்தனர்.சிவனுக்கு முதல் பிள்ளையாக்கினார்.

பூணுல் இல்லா சிவன், முருகனுக்கு பூணுல் பூண்ட விநாயகர் எப்படி மகனாவார்?


பழைய தமிழ் நூல்களில் சிவன்,முருகன் வருகிறார்கள்,விநாயகர் பிற்கால கதைகளில்தான் வருகிறார்.
தலைச்சங்க இலக்கியங்களில் சிவன்,முருகன் என்ற அரசர்கள் பெயர்கள் உள்ளது.அவர்கள்தாம் ஒருகாலக்கட்டத்தில் அவர்களின் சிறப்பான ஆட்சி மூலம் கடவுளர்களாகி இருக்கலாம் என்பதே கணிப்பு.
இந்துக்கடவுள்களின் வரலாறு இப்படித்தான் உள்ளது.

இதில் தமிழில் திருவெம்பாவை பாடிய ஆண்டாளுக்கு சம்ஸ்கிருத ஆரியர்கள் வக்காலத்து வாங்கியது,வாங்குவது  ஏன்?
அவர் தமிழில் பாடியதாலேயே அப்படி "ஆண்டாள் என்று ஒருவர் பார்ப்பன குடும்பத்தில் இருந்திருக்க மாட்டார்.அவர் கற்பனையாக உருவாக்கப்பட்டவர் .திருவெம்பாவை பாடியது மாணிக்க வாசகர்,அப்பர் போன்ற வேறு ஆள்தான்" என்கிறார்.அவாள்களின் மூதறிஞர் ராஜகோபாலச்சாரியார் .

பின் ஏன் அவர்கள் எழுச்சி "அங்கேதான் இருக்கிறது அவாள்களின்  சூழ்ச்சி"
எத்தனையோ முறை நோட்டாவிடம் போட்டியிட்டாலும் அதை வெல்ல முடியா பாஜகவை தமிழ் நாட்டில் காலூன்ற வைக்க முயற்சி.அதற்காக மத வெறியை தட்டி எழுப்பி குளிர் காய இந்த வேலை.
ஆனால் இந்த முயற்சியும் வீண்.

காரணம் பெரியார்,கலைஞர் போன்றோர் பேசியும் எழுதியும் உருவாக்கி வைத்துள்ள பகுத்தறிவு.
இன்று ஆண்டாளுக்காகப் போராடுவது பார்பனக் கும்பல்தான்.சில பாஜகவினர்தான் .
ஆண்டாளுக்காக குரல் கொடுப்பவர்களின் பேச்சுகளில் அசிங்கமும்,நரகல் வாடையும்,கொலை வெறியும் தான் மேம்பட்டுள்ளது.
பேசிய பேச்சுகளுக்காக எச் .ராஜா ,நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருந்தாரா,இல்லையா என்று தெரியாதவரைப்பற்றி தேவதாசி(பொட்டு கட்டுப்பட்டவர் ) ஏன்று ஏற்கனவே கூறப்பட்ட கருத்தை சொல்லியதற்காக  வந்தவுடன் வைரமுத்துவும்,தினமணி நாளிதழும் மன்னிப்பு கேட்ட பின்னரும் பாஜக ராஜா வைரமுத்து தாயாரை அசிங்கமாக பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.யார் அந்த தைரியம் தந்தது?

இந்த வார்த்தைகளை ராஜா கூறியதற்காக வைரமுத்து அவர் மீது வழக்கு தொடுக்கலாம்.
ஆனால்  தமிழர்களின் பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

திராவிடர்களின் இந்த பெருந்தன்மைதான் ஆரியர்களை நம்மை சூத்திரர்களாக்கியுள்ளது.
தலைக்கு விலை,நாக்கை அறுக்க விலை வைப்பதெல்லாம் பாஜக,ஆர்.எஸ்.எஸ் சினரின் வழக்கம்.
அதை தான் அவர்கள் மத்தியில் தீண்டத்தகாதவன் என்பதை அறியாமலேயே தன் இனத்துக்கு எதிராகவே நயினார் நாகேந்திரன் என்ற முன்னாள் அதிமுக,இந்நாள் பாஜகக்காரர் பயன்படுத்தியுள்ளார்.
இது நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்தும் ஹௌடில்யரின் ஆரிய தந்திரம்.
இதற்கு அவர் துணை  போனதுதான் நம் இன பலகீனம்.

வைரமுத்து தலைக்கு கோடி ரூபாய் என்று நயினார் நாகேந்திரன் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தப் பின்னரும் அவர் மீது காவல்துறை இதுவரை வழக்கு தொடராதது ஏன்?
இங்கு ஆட்சி என்று ஒன்றும்,சட்டம்-ஒழுங்கு என்று ஒன்றும் இல்லையா?

இருபக்கமும் நடுநிலையாக இருந்து பேசி இந்த சூழலை மாற்ற வேண்டிய கட்டாயம் ஆள்வோருக்கு இல்லையா?
அல்லது இங்கு நடப்பது பாஜகவின் அடிமைகள் ஆட்சிதானா?

இந்த ஆண்டாள் பிரச்னையை தூண்டிவிடுவது தினத்தந்தி,தினமலர் நாளிதழ்களும்,தந்தி  தொலைக் காட்சியும்தான்.

இதன் பின்னணியைப் பார்த்தால் NDTV பிரணாய் ராய் வெளிக்காட்டிய பாஜகவின் திட்டத்திற்கான வேலை நடக்க ஆரம்பித்து விட்டது.

அதற்காக பிரபலமான ரங்கராஜ் பாண்டே தலைமையிலான தினத்தந்தி ,ரஜினிகாந்த் கூட்டம் களமாட ஆரம்பித்து விட்டன.
பகுத்தறிவு அரசியலில் இருந்து தமிழ் நாட்டை ஆன்மிக அரசியல் பக்கம் நகர்த்த பாஜக களம் இறங்கி விட்டது என்ற உண்மைதான் வெளியாகிறது.

அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பலியாகி விடக்கூடாது என்பதே தற்போதைய வேண்டுகோள்.
தற்போது பிரச்னை ஆண்டாள் அல்ல.ஆட்சி தான்.

=======================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...