புதன், 8 நவம்பர், 2017

ஓராண்டை எட்டியத் துயரம்!

2016 ஆண்டு இதே நாளில் தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அதிர்ச்சி தரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 


ரூ.1000,ரூ.500 நோட்டுகள், இனி செல்லாது என்பதே அந்த அறிவிப்பு. 
ம் 4 முக்கியமான காரணங்களை அவர் அடுக்கினார்.

1) கருப்புப்பணம் ஒழிப்பு, 
2) கள்ள நோட்டு ஒழிப்பு, 
3) தீவிரவாதத்திற்கு நிதி தடுப்பு 
4) லஞ்ச, ஊழல் ஒழிப்பு.
மக்கள் இந்த அறிவிப்புகளை நம்பினார்கள், சில நாட்கள்துன்பத்தை தாங்கிக் கொள்ளலாம் என்றும் கூட நினைத்தார்கள்.

பிரதமர் மோடி தனது அறிவிப்பை கமுக்கமாக வைத்திருந்ததாக கூறப்பட்டது, ரிசர்வ் வங்கியை கட்டாயப்படுத்திஇதற்கான தீர்மானம் போட வைக்கப்பட்டு, அனைத்து அமைச்சர்களும் நவம்பர் 7 ஆம் தேதி மாலை அழைக்கப்பட்டனர் .

அவர்களின் கைபேசிகளை காவலர்கள் பெற்றுக்கொண்டனர். 
5 நிமிடங்களில் எல்லாம் முடிந்தது.

நாட்டிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் தொலைக்காட்சியின் வழியாகத் தான் இந்தச் செய்தியை அறிந்துகொண்டன. 
அதுவரைபுழக்கத்திலிருந்த பணத்தில் 86 விழுக்காடு செல்லாதென்றால், அதன் விளைவு மிகக் கடுமையாக இருக்கும்என்பதை பொருளாதார வல்லுநர்களும், இடதுசாரிகளும்விமர்சித்தோம்.இந்திய நாட்டுக் குடிமகன், தான் உழைத்து சம்பாதித்த,சேமித்த பணம் செல்லாது என்று அரசு அறிவித்தது. 

மக்களாட்சி நடப்பதாக சொல்லப்படும் ஒரு நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு எப்படி மக்களை ஏமாற்றமுடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட கடுமையாக சாடினார்.
இங்கிலாந்தில் பிரதமர் மார்கரெட் தாட்சர் இப்படியான அடாவடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியபோது அவருடைய ஆலோசகர்கள் சொன்ன எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது. 
அவர்கள் ‘ஜனநாயகமும், கட்டற்ற சந்தையும் கூட்டாளிகள் அல்ல, எதிரிகள்’ (Democracy and the free market are rivals, not allies) என்று எச்சரித்தனர். 

அரசின் இந்த முடிவால் மக்கள் வங்கிகள் முன் காத்துக்கிடக்கும் நிலைமை ஏற்பட்டது. 
தான் சேமித்த பணத்தை தவணை முறையில் பெற்றுக்கொண்ட அவலம் அரங்கேறியது. பொதுமக்கள், சிறுவர்த்தகர்கள், வங்கி ஊழியர்கள் என பலரையும் பணமதிப்பு நீக்கம் பலிகொண்டது. 

மற்றொரு பக்கம், புதிய ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாகபெற்று கோடீஸ்வரர்கள் செழித்தனர். 
சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப் பட்ட புதிய நோட்டுகள் எப்படி அவரிடம் வந்தன என்பதற்கு ரிசர்வ் வங்கியிடமே பதிவுகள் இல்லை என்கிறார்கள்.

செல்லா நோட்டு அறிவிப்பு, கருப்புப் பணத்தை தடுக்கவில்லை மாறாகபுதிய கருப்புச் சந்தையை உருவாக்கியது. கள்ள நோட்டுகளும் உடனே புழக்கத்துக்கு வந்தன. 
இந்த அறிவிப்பு வாரச் சந்தைகளைத்தான் நிலைகுலையச் செய்தது. பணப்புழக்கம் இல்லாத இந்தியா என்ற அடுத்த முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். 

டிஜிட்டல் இந்தியா,ஆதார் இணைப்பு என எல்லாமே பெரு முதலாளிகளுக்கு பயன்கொடுக்கும் அறிவிப்புகளாகவே அமைந்தன.
அவற்றின் தொடர்ச்சியாக, ‘சரக்கு மற்றும் சேவை வரியும்’ கூட்டுறவு கூட்டமைப்பு முறை என்றவிளம்பரத்துடன் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் அரசாங்கம், எந்த சர்வாதிகாரியாலும் செய்ய முடியாத வேலைகளை கடந்த 12 மாதங்களில் செய்து முடித்துவிட்டது. 
காங்கிரசின் பலவீனமும், மாநிலக் கட்சிகள் பாஜகவுடன் செய்துகொண்ட சமரசங்களும், 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதும் அதற்கு அந்த துணிவைக் கொடுத்திருக்கிறது.

அந்நிய முதலீடுகளுக்கு வசதியாக தொழிலாளர் சட்டங்கள் உட்படஅனைத்துச் சட்டங்களும் திருத்தப்படுகின்றன. இந்திய, பன்னாட்டு பெருமுதலாளிகள், மோடியின் அரசாங்கம் நம்முடையது என வர்க்கபாசத்துடன் பாராட்டு மலர்களைத் தூவுகின்றனர். 


உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் பாராட்டுகிறார்கள். ஊடகங்களோ அரசின்பிரச்சனைகளை அனுசரித்து, அதற்கேற்ற வகையில் நடந்துகொள் கின்றன. 

இதையெல்லாம் தாண்டி, மறைக்க முடியாத வகையில் இந்தஅரசின் தோல்விகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. சில வார இதழ்களும், பொருளாதார இதழ்களும் அதனை வெளிப்படுத்துகின்றன.
இந்தியா தொழில் நடத்த சாதகமான நாடு என்று உலகவங்கி சான்றிதழ் கொடுத்தபின்னரும், உற்பத்தித் துறையில் எந்த அசைவும் ஏற்படவில்லை. 

சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்குதலால் உற்பத்தி உயர்வும்இல்லாமல் ஆகிவிட்டது. பொருளாதாரத் தேக்க நிலை, பிஎம்ஐ (PURCHASING MANAGERS INDEX) வழியே வெளிப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடத்தப்பட்ட ஆய்வு, அங்குசெயல்படும் தோல் பொருள் நிறுவனங்கள், உள்ளாடைதயாரிப்பு, இஞ்சினியரிங் தொழில்கள், விவசாயம் மற்றும் சோடா தயாரிப்பு என அனைத்தும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், நத்தை வேகத்தில் நகர்வதாகவும் தெரிவிக்கிறது. 

இந்தியாவில் மொத்த தோல் பொருள் ஏற்றுமதியில் 16 விழுக்காடு கான்பூரிலிருந்து ஏற்றுமதியாகிறது. தோல்பொருள் தயாரிப்பில் 4 லட்சம் பேர்வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 

இதில் கடந்த ஆண்டுநவம்பர் முதல் 400க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்டதொழில்கள் இயங்கவில்லை. 
உள்ளாடைத் தயாரிப்பில் இருந்தவர்களில் பலர் கடந்த 6 மாதமாக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்கள், சுமைப்பணியாளர்கள் நிலைமை பரிதாபமாக ஆகியுள்ளது.

திருப்பூர் குறித்து ஆய்வு செய்தபோது, கடந்த ஆண்டுநவம்பரில் 1200 நிறுவனங்கள் உள்ளாடை தயாரிப்பில்ஈடுபட்டன. ரூ.15000 கோடி மதிப்பிலான வர்த்தகம்மேற்கொள்ளும் திருப்பூரில் இப்போது 40 விழுக்காடாவது மிச்சமுள்ளதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 


செல்லா நோட்டு அறிவிப்பிற்கும் பின், சுற்றோட்டத்தில் பணம் உறிஞ்சப்பட்டதால், ஜாப் வொர்க் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

நிட்டிங், பிரிண்டிங், பேக்கிங் என ஏராளமான ஜாப் வொர்க் நிறுவனங்களானதே திருப்பூராகும்.6 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகளைக் கொடுத்துவருகிற திருப்பூர்இப்போது நெருக்கடியில் இருக்கிறது. 

இதில்வியப்பு என்னவென்றால், திருப்பூரின் முதலாளிகள்சங்கத்தின் தலைவர்கள், தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்குஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள்.

திருப்பூரும் குஜராத்தைப் போல வளர்ச்சியடையும் என்று பிரச்சாரம் செய்தார்கள். மோடியின் ‘குஜராத் மாடல்’ திருப்பூரை சூறையாடிவிட்டது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் நிலவரமும் மிக மோசமானது. இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகத்தில் 15 விழுக்காடு வரை உல்லன்துணி உற்பத்தியாகும்.
அங்குள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் 1.6 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களின்வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி பற்றி தெளிவு இல்லைஎன முதலாளிகள் புலம்புகின்றனர். தெளிவுபெற்றிட உதவியாக ஜி.எஸ்.டிஅலுவலர்களும் நடந்துகொள்வதில்லை, தில்லியிலிருந்தும் உதவிகள் இல்லை என்கிறார்கள் அவர்கள்.

மகாராஷ்டிராவின் பிவந்தி, பவர் லூம் தொழில்கள் இயங்கிவரும் பகுதியாகும். இங்கே 50 விழுக்காடு வர்த்தகம் செல்லா நோட்டு அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. 
28 நாட்கள் தொடர்ந்து இயங்கும் தறிகள், வேலை நாட்கள் பாதியாகக் குறைந்துவிட்டன.
2 சிப்ட் வேலைஇருக்கும் இடங்களில் தற்போது ஒரே சிப்ட் மட்டும் ஓட்ட முடிகிறது. 

1982 ஆம் ஆண்டுகளில் மும்பை வேலை நிறுத்தங்களைத் தொடர்ந்து பிவந்திக்கு ஆலைகள் இடம்மாறின. 2.5 லட்சம் பவர் லூம்கள் அங்கே செயல்படுகின்றன.

 செல்லா நோட்டு அறிவிப்பு அனைத்தையும் சிக்கலாக்கியிருக்கிறது. ஜாப் வொர்க் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி பெரும்தடையாக வந்திருக்கிறது. 
30 கோடி மீட்டர்கள் துணி உற்பத்தி நடைபெற்ற இடத்தில் இப்போது 17.5 கோடி மீட்டர் துணி உற்பத்திதான் நடந்திருக்கிறது.

4 மாநிலங்களில், 4 மிக முக்கியமான தொழில் பிரதேசங்களின் நிலையை மட்டுமே இங்கே உதாரணமாக குறிப்பிட்டுள்ளேன். இது நாடுமுழுமைக்குமான பாதிப்பின் ஒரு பகுதியாகும். 
அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பல சிதைந்திருக்கின்றன, சில பாதிக்கப்பட்ட நிலைமையில் உள்ளன. 

மோடி அறிவித்தபடி, பணமற்ற பொருளாதாரம் உருவெடுக்கவில்லை என்பது மிக முக்கியமான உணரவேண்டிய விசயமாகும்.
இந்தியா போன்ற வளரும் நாட்டில் 70 விழுக்காடு கிராமப்புறம் வேளாண்மையை நம்பியிருக்கும் ஒரு நாட்டில், மேற்கத்திய சந்தைப்பொருளாதாரத்தைத் திணிக்க முயற்சிப்பது, பெரும்பகுதி இந்தியர்களை,தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதரவற்றநிலையில் கொண்டு விடும். 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற மோடியின் பகட்டு வார்த்தைகளை மக்கள் நம்பினார்கள். 

வேலைவாய்ப்புக்கான நியாயமான ஏக்கம் மக்களிடம் இருக்கிறது.
ஆனால் இந்த அரசு புதிய வேலைகளை உருவாக்காதது மட்டுமல்ல, இருக்கும் வாய்ப்புகளையும் பறித்துள்ளது. இதைக் கண்டித்து வலுவானகுரல்கள் ஒலிக்க வேண்டும். 
மாற்றுக் கொள்கைக்கான போராட்டம் வலுப்படவேண்டும்.


    இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அளித்துள்ள தகவலின் படி, இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை சுமார் 15 லட்சம் பேர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. 


ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் பணி புரிவோர் எண்ணிக்கை 40,65,00,000 லிருந்து 40,50,00,000 ஆக குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே கால கட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்தோரை விட இது பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த வேலை இழப்பு அனைத்து பிரிவுகளிலும் மற்றும் அனைத்து பெரிய நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் மருந்து உற்பத்தி மற்றும் மோட்டார் வாகனத் துறை ஆகிய இரு துறைகளிலும் ஓரளவு வேலை வாய்ப்பு அதிகமாகி உள்ளது என்றும் தகவல் அளித்துள்ளது. 


தினசரி ஊதியம் பெறுபவர்களும், கீழ் மட்ட பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அதிகமாக காணப்படுவதாகவும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் அளித்துள்ளது. 


தகவல் தொழில் நுட்பத் துறை அனைத்து மட்டத்தில் உள்ள ஊழியர்களும் பணி இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல உற்பத்தித் துறையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல மூடப்பட்டதால் வேலை இழப்பு அதிகம் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்த வேலை இழப்புக்கு காரணம் மோடி 2016  நவம்பரில் அறிவித்த பணமதிப்பிழப்பும்,அதானால் ஏற்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட பணத்தட்டுப்பாடும்தான் காரணம் என்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.


தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு சேகர் ரெட்டி,சசிகலா,போன்றவர்களுக்கு ஏற்படவில்லை என்பதும், பணத்தட்டுப்பாடு காலத்தில் ஒருவர் இரண்டாயிரம் மட்டும்தான் புதிய பணம் பெறலாம் என்று இருந்தக்காலத்தில் சேகர் ரெட்டி 300 கோடிகளுக்கு புதிய 2000 தாட்களை வங்கிகளில் இருந்து பெற்றது எப்படி என்று தெரியவில்லை.


அதை விட அசிங்கம் அவருக்கு அவ்வளவு பணம் எப்படி போனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று புதிய பணத்தை களத்தில் இறக்கிய,புதிய பணத்தை வெளியிட்டு இந்தியா முழுக்க வங்கிகள் மூலம் மக்களுக்கு வழங்கிய பொறுப்பு மிக்க இடத்தில் உள்ள   ரிசர்வ் வங்கி பொறுப்பே இல்லாமல் சொல்வதுதான்.


இந்த ஒரு வார்த்தையே பணமதிப்பிழப்பு யாருக்கு நனமை செய்துள்ளது என்பதை அறிய.

122 உயிர்கள் கணக்கில் தெரிந்து போனதற்கு இந்த பணமதிப்பிழப்புதான் கரணம்.அதை தவிர இதனால் இந்தியாவுக்கு கிடைத்ததது ஒன்றுமே இல்லை.      
                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...