வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பெட்ரோலிய விலை உயர்வு – மோடியின் கிழிந்த கோவணத்திற்கு ஒட்டு !

வ்வொரு முறை நீங்கள் பெட்ரோலிய பொருட்களை வாங்கும் போதும் தேச வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிக்கிறீர்கள்… இந்த விலையுயர்வெல்லாம் கடந்து போக கூடியது தான்” – இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள யோக்கியர் வேறு யாருமல்ல, பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக உள்ள அமித் மாலவியா தான். இதே மூன்றாண்டுகளுக்கு முன் காங்கிரசு ஆட்சி செய்து வந்த காலத்தில் தனது கட்சி பெட்ரோல் விலை உயர்வுக்காக நாடெங்கும் போராட்டம் நடத்தியதை பா.ஜ.க மைனர் குஞ்சுகள் வேண்டுமானால் மறந்திருக்கலாம், 
ஆனால் மக்கள்?
மேற்படி தத்துவத்தோடு ஒரு படத்தை இணைத்திருந்தார். அதில் மாநில அரசுகளுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் எவ்வளவு நிதி சென்று சேர்கிறது என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது. மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியான 14.98 ரூபாயும், மத்திய கலால் வரியான 21.48 ரூபாயில் 42 சதவீதமான 9.02 ரூபாயும் சேர்ந்து மொத்தம் 27.44 ரூபாய் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலின் விற்பனையிலிருந்து (தில்லியின் விலையான 70.48 ரூபாயை அவர் கணக்கெடுத்திருந்தார்) மாநில அரசுக்கு செல்கிறது எனக் குறிப்பிட்டிருந்தது.
14.98 ரூபாயை 9.02 ரூபாயுடன் கூட்டினார் 24 ரூபாய் தான் வர வேண்டும்; இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர் என்பதால் குமாரசாமி கால்குலேட்டரில் கணக்குப் போட்டு 27.44 ரூபாய் என்கிறார். போகட்டும்.
முதலில் அவர் சொன்ன கணக்கின்படி மாநில அரசின் வரி வருவாய் என்பது மத்திய அரசு இடும் பிச்சை அல்ல; 
மாறாக அரசியல் சாசன சட்டத்தின் 270 -ம் பிரிவு உத்திரவாதப்படுத்தியுள்ள உரிமை. அடுத்து, மத்திய கலால் வரியிலிருந்து கிடைக்கும் 42 சதவீதம் என்பது அப்படியே எல்லா மாநிலங்களுக்கு சென்று சேர்வதில்லை. மாறாக, மொத்தமாக கணக்கிட்டு ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு சதவீதக் கணக்கில் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அப்படித் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் சதவீதம் 4.023 ; உத்திரபிரதேசத்துக்கு 17.959 சதவீதம்.
இந்தப் புள்ளிவிவர மோசடிக் கணக்குகள் ஒருபுறம் இருக்கட்டும். 2011 -ம் ஆண்டு வாக்கில் கச்சா எண்ணை பேரல் சராசரியாக 100 டாலருக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த போது 65 ரூபாயாக இருந்த பெட்ரோலின் விலை, இப்போது அதே கச்சா எண்ணையின் சர்வதேச விலை நிலவரம் சராசரியாக 50 டாலர்களுக்குள் இருக்கும் போது 70 ரூபாய்க்கு விற்பது ஏன்?
இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் நுகர்வில் சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையிலிருந்தே ஈடுகட்டப்படுகின்றது. கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அதிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை உள்ளிட்டவைகளைப் பிரித்தெடுத்து சந்தைக்கு அனுப்புகின்றன. இவ்வாறு சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வந்து சேரும் பெட்ரோலின் அடக்கவிலை (உற்பத்திச் செலவுகள் மற்றும் லாபம் சேர்த்து) 30.47 ரூபாய். 
இதன் மேல் முகவர் கழிவான 3.57 ரூபாயையும் சேர்த்துக் கொண்டால் 34.04 ரூபாய். ஆனால் நுகர்வோருக்கு வந்து சேரும் போது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் மத்திய வரி 21.48, மாநில வரி 14.99 ரூயாயும் சேர்ந்து ஒரு லிட்டர்  பெட்ரோலின் விலை 70.51 ரூபாய் ஆகிவிடுகின்றது.
ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலின் விலையிலும் 50 சதவீதத்துக்கும் மேல் வரிகளின் மூலம் நம்மிடம் இருந்து மத்திய மாநில அரசுகள் கொள்ளையடிக்கின்றன. 2014 – 2015 காலகட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் 1.70 லட்சம் கோடிகளாக இருந்தது. 2016 – 2017 காலகட்டத்தில் 3.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது (இதில் மத்திய கலால் வரியின் மூலம் மட்டும் 2.43 லட்சம் கோடிகள் சுருட்டியுள்ளனர்). 
அதே போல் 2014 – 15 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு சுமார் 1.69 லட்சம் கோடிகளாக இருந்த வருவாய், 2016 – 17 காலகட்டத்தில் 1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இப்படி மக்களிடமிருந்து கொள்ளையடித்த காசில் தான் மோடி தனது விளம்பரங்களுக்கு மட்டும் ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்துள்ளார்; நாடு நாடாக சுற்றுலா சென்று வருகிறார். 
மோடியின் சிந்தையில் உதித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதம் சரிந்துள்ளது; அதாவது 2 சதவீத வீழ்ச்சி. இந்த பொருளாதார இழப்பின் மதிப்பு  2 லட்சம் கோடி. ஏறுக்குமாறாக திணிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை இன்னொரு முனையில் இருந்து பொருளாதாரத்தை அடியறுத்து வருகின்றது.
மொத்தப் பொருளாதாரத்தையும் புதைகுழியில் சிக்க வைத்துள்ள மோடி கும்பல், அதை ஈடுகட்டுவதற்கு பெட்ரோலிய பொருட்களின் மேல் வரிக்கு மேல் வரியாகப் போட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடித்து வருகின்றது. 
எனவே தான் கச்சா எண்ணையின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் இந்தியச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
நன்றி;வினவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...