வியாழன், 27 ஜூன், 2013

கலெக்டர் ஆ.முருகேசன்

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்ட கலெக்டர் முருகேசன் துணிச்சலுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற பயணிகள், அங்கு பெய்த பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியில் சிக்கி தவித்தனர்.
இவர்களை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை மூலம் மீட்டு அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.

இந்த மீட்பு பணியில், சமோலி மாவட்டத்தைச் சேர்ந்த கலெக்டர் ஆ.முருகேசன் துணிச்சலுடன் ஈடுபட்டு வருகிறார். இவர் தமிழ் நாட்டில், சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகில் உள்ள செலவடை கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை ஆறுமுகம். ஓய்வு பெற்ற ஆசிரியர். தாயார் லெட்சுமி. மனைவி, மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த தேவி பிரியா. ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முருகேசன், உத்தரகாண்ட் மாநில பணிக்கு ஒதுக்கப்பட்டார்.

அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்துமே மலைப்பகுதிகளாகும். எல்லா இடங்களும் வெள்ளமும், நிலச்சரிவும் இருப்பதால், எங்கேயும் மோட்டார் வாகனம் மூலமாகவோ, படகுகள் மூலமாகவோ செல்ல முடியாது. ஹெலிகாப்டரில் செல்வது தான் ஒரே வழி.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கலெக்டர் ஆ.முருகேசன் ஹெலிகாப்டரில் சென்று, மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன், நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். மேலும் ஒவ்வொருவரையும் மீட்டு ராணுவ ஹெலிகாப்டர் தளம் உள்ள தாலுகா தலைநகர் ஜோஷிமட் கொண்டு வந்து சேர்க்கிறார். தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபடும் கலெக்டர் ஆ.முருகேசனை பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பாராட்டுகிறார்கள்.

இந்த நிவாரண பணி குறித்து ஜோஷிமட்டில் உள்ள ராணுவ ஹெலிகாப்டர் தளத்தில், ஆ.முருகேசன்  கூறியதாவது:-
"சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பகுதியில் புகழ்பெற்ற கோவில்களும், ஹேம்குந்த் சாகிப் என்ற சீக்கியர்களின் புனித தலமும் உள்ளன. இந்த இடங்களுக்கு, மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய வரமுடியும். மீதம் உள்ள 6 மாதங்களில் பனி மூடிவிடும் என்பதால் அங்கு போகவே முடியாது. கோவிலையும் மூடிவிடுவார்கள். இந்த 6 மாதங்கள் மட்டும் மாநிலத்தின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்கள் சமோலி மாவட்டம் பத்ரிநாத் பகுதிகளுக்கு வந்து உணவு விடுதிகள், சிறு கடைகள், குதிரை சவாரி, சுமை தூக்குவது போன்ற பல தொழில்களை செய்வார்கள். பனி மூடியவுடன் இவர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.

சராசரியாக ஆண்டுக்கு 15 லட்சம் பக்தர்கள் புனித யாத்திரையாக இந்த பகுதிக்கு வருகிறார்கள். இந்த முறை வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்ட நேரத்தில் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கொஞ்சம், கொஞ்சமாக மீட்டு அனுப்பி உள்ளோம். தற்போது 3 ஆயிரம் பேர் அங்கு இருக்கிறார்கள். அவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மழையும் மேகமூட்டமும் இருப்பதால் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் 3 நாட்களில் அனைவரும் மீட்கப்பட்டு விடுவார்கள். இன்றுள்ள நிலவரப்படி இரவு நேரங்கள் மட்டுமல்லாமல் காலை 11 மணி முதல் அவ்வப்போது மழையும் தொடர்ந்து மேக மூட்டமும் அதிகமாக காணப்படுவதால் ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியவில்லை. என்றாலும் வானிலை கொஞ்சம் சீரடைந்தவுடன் ஹெலிகாப்டரில் நிவாரண பணிகளை தொடங்கி விடுவோம்."
ஆந்திர மாநில பக்தர்களை ஊருக்கு அழைத்து செல்வதில் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் இடையே போட்டி ஏற்பட்டது. இதில், டேராடூன் விமான நிலையத்தில் இரு கட்சியினரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

இயற்கை பேரழிவால் பெரும்பாதிப்புக்குள்ளாகி உள்ள உத்தரகாண்டில் இருந்து, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்களை மீட்டு அழைத்து செல்வதற்காக மாநில காங்கிரஸ் அரசின் சார்பிலும், எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் சார்பிலும் விமானங்கள் டேராடூன் சென்றிருந்தன. இந்த விமானங்கள் அங்குள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் நேற்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இரண்டு விமானங்களில் எந்த விமானத்தில் பக்தர்களை அழைத்து செல்வது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இவ்விரு கட்சியினருக்கும் இடையே விமான நிலையத்தில் வைத்து பயங்கர மோதலும் உருவானது.

காங்கிரஸ் எம்.பி. ஹனுமந்தராவ், தெலுங்குதேசம் எம்.பி.க்கள் ரமேஷ் ரத்தோடு, கே.நாராயணா ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பும் அரங்கேறியது. இவ்வளவும் தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் நடந்தது.
இந்த களேபரத்துக்கு மத்தியில் இரு கட்சி தொண்டர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிர்கோஷங்களையும் முழங்கினர். இதனால் விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஹனுமந்தராவ் கூறுகையில், ‘‘பக்தர்களை ஏற்றிச்செல்வதற்காக ஆந்திர அரசு அமர்த்தியுள்ள விமானம் தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் ஐதராபாத் செல்வதற்கு ஏற வந்த பக்தர்களை, தாங்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் தடுத்து விட்டனர்’’ என்றார்.
பக்தர்களை அழைத்துச்செல்லும் பணியை மேற்பார்வையிடுவதற்காக ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டியால் அனுப்பப்பட்டிருந்த மாநில சிவில் சப்ளை துறை மந்திரி ஸ்ரீதர்பாபு, அரசு கடமை ஆற்றுவதை தெலுங்கு தேசம் தடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

ஆனால் காங்கிரஸ் எம்.பி.யின் கூற்றை தெலுங்கு தேசம் எம்.பி.ரமேஷ் ரத்தோடு மறுத்தார். இது பற்றி அவர் கூறுகையில், ‘‘எங்கள் கட்சி அமர்த்தியுள்ள விமானத்தில் ஏறுவதை தடுக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகின்றனர். பக்தர்களை ஏற்றி வருகிற பஸ் வந்து சேருவதை அவர்கள் தாமதப்படுத்தினர்’’ என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவிக்கையில், ‘‘இது துரதிர்ஷ்டவசமானது. இது நடந்திருக்கக்கூடாது. ஒரு துயர சம்பவத்தின்போது, போட்டி போடக்கூடாது. அதே நேரத்தில் கடைசி பக்தர் திரும்பும்வரை எங்கள் பணிகள் ஓயாது’’ என கூறினார்.
உத்தரகாண்டில்  பொதுவாக வானிலை மோசமாகவே இருந்தது. இருப்பினும் இன்னும் 8 ஆயிரம் பேரை மீட்க வேண்டி உள்ளது.உத்தரகாண்ட் பகுதியில் அடிக்கடி வானிலை பாதிக்கப்படுவதால் மீட்பு பணிகள் முடிவடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
 எனவே மோசமான வானிலைக்கு மத்தியிலும் டேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் இருந்து 5 ‘மி–17’ ரக ஹெலிகாப்டர்கள் புறப்பட்டு சென்றன. உத்தர்காஷி மாவட்டத்தில் ஹார்ஷில் பகுதியில் இருந்து  மதியம் வரை 230 பேர் மீட்கப்பட்டனர்.

கைப்பற்றப்பட்டுள்ள உடல்கள் அழுகி வருவதால் தொற்றுநோய் உண்டாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 எனவே அத்தனை உடல்களையும் மொத்தமாக தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டி உள்ளது.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கனிமொழி................................   எம்.பி."


டெல்லி மேல்–சபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை சந்தித்து, வெற்றிபெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

டெல்லி மேல்–சபைக்கு தமிழக அரசில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 6 பதவிகளுக்கு, 7 பேர் போட்டியிட்டதால், 17 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த வாக்குப்பதிவில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட 231 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.
தேர்தல் முடிவு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 4 பேரும், அக்கட்சியின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராஜாவும் பெற்றனர். இந்த வெற்றி ஏற்கனவே தெரியும் என்றாலும், 6–வதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. யார்? என்பதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், காங்கிரஸ், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியோரின் ஆதரவை பெற்று, தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.
கருணாநிதியிடம் வாழ்த்து
வெற்றி பெற்றவுடன், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டுக்கு இரவு 8 மணியளவில் வந்தார். அவருக்கு முன்னதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் காசிமுத்துமாணிக்கம் உள்பட தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கனிமொழி எம்.பி. காரில் வந்தவுடன் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டுக்குள் சென்ற கனிமொழி எம்.பி., தி.மு.க. தலைவர் கருணாநிதி, தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அதனைத்தொடர்ந்து தொண்டர்கள் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
 மேல்–சபை தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இந்த வெற்றி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. என்னை 2–வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்க வாக்களித்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், புதிய தமிழகம் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...