செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

கா(வ)தல் துறை .

பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படாமல் தடுக்க ஒவ்வோர் அரசு, தனியார் அலுவலகத்திலும் விசாகா கமிட்டி என்ற பெயரிலான ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று 1997ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழ்நாடு காவல் துறையில் இப்படி ஒரு கமிட்டி 2018 வரை இல்லை என்பதும், ஒரு பெண் போலீஸ் அதிகாரியே பாலியல் தொல்லைகளால் பாதிப்பு ஏற்பட்டுப் புகார் கொடுக்க விசாகா கமிட்டியைத் தேடி அலைந்ததும் தமிழ்நாட்டில் நடந்திருக்கிற விநோத வேதனை.

1992ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பன்வாரி தேவி அம்மாநிலத்தில் குழந்தைத் திருமணம் ஒன்றைத் தடுத்து நிறுத்தக் கடுமையாக முயன்று அதன்படியே தடுத்து நிறுத்தினார். 

இதனால் கோபமான உயர் சாதி இளைஞர்கள் பன்வாரி தேவியைக் கும்பலாக வன்புணர்வு செய்தனர். அது அப்போது அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியுடன் பேசப்பட்டது.
சளைக்காத பன்வாரி தன்னைச் சிதைத்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், வழக்கம்போல உயர் சாதி செல்வாக்கினால் கீழமை நீதிமன்றத்தால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

இதை எதிர்த்து பன்வாரி தேவியும், ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பட்டுவரும் விசாகா என்ற பெண்கள் அமைப்பும், மேலும் சில பெண்கள் அமைப்புகளும் உச்ச நீதிமன்றம் வரை போராடினார்கள். இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் 1997ஆம் ஆண்டு, பெண்களுக்குப் பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க ஒவ்வொரு தனியார், அரசு அலுவலகத்திலும் ஒரு குழு உண்டாக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவே விசாகா கமிட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பின்படி, பத்துக்கு மேற்பட்ட பெண்களைப் பணியில் அமர்த்தி வேலை வாங்கும் ‘அனைத்து அலுவலகங்களும்’, அங்கு அவர்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்துப் புகார் அளிக்க, அந்தப் புகாரை விசாரிக்க, ஐசிசி எனப்படும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’ என்ற உள் புகார் கமிட்டியை அமைக்க வேண்டியது கட்டாயம்.

அந்தக் கமிட்டிக்கு அலுவலகத்தில் மூத்த பெண் பணியாளர் தலைவராக இருக்க வேண்டும். கமிட்டியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்க வேண்டும். ஓர் உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்தக் கமிட்டி ஆண்டுதோறும் தன் செயல்பாடுகளை அறிக்கையாகத் தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.

அரசு இயந்திரம் ஜடமாக இருப்பதற்கு உதாரணமாகத் தமிழகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 21 ஆண்டுக்குப் பிறகு தமிழகக் காவல் துறையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தலைவரான ஐஜி முருகன் மீது அத்துறையிலேயே பணியாற்றும் போலீஸ் பெண் எஸ்பி பாலியல் புகார் தெரிவித்த பிறகே இந்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.
ஊழல் தடுப்புப் பிரிவு (விஜிலென்ஸ்) ஐஜியான முருகன் மீது விஜிலென்ஸ் பெண் எஸ்பியே புகார் கொடுத்திருக்கிறார்.

“ஐஜி எனக்கு வாட்ஸ் அப்பிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார். நான் அவரிடம் இப்படியெல்லாம் பண்ணாதீங்க என்று சொன்னேன். ஆனால், அவர் கேட்கவில்லை. மதிய நேரம் தன்னுடைய அறைக்கு என்னை அழைத்துப் பேசிக்கொண்டே இருப்பார். இதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். டிபார்ட்மென்ட் ரீதியாக ஏதாவது இருந்தால் பேசுங்கள், வேறு மாதிரி பேச்சுகள் வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. மேலதிகாரி என்பதால் நான் அவரை ஓர் அளவுக்கு மேல் எச்சரிக்கை செய்ய முடியவில்லை.
 ஐஜி முருகன்


இந்த நிலையில் ஒரு நாள் அவரது அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது என்னை போட்டோ எடுத்தார். நான் எதற்காக போட்டோ எடுக்கிறீர்கள் என்று கேட்டேன். 
‘உன் போட்டோவை என் மனைவிக்கு அனுப்பப் போகிறேன். பார் எவ்வளவு தைரியமான பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று உன்னை உதாரணமாகக் காட்டுவதற்காக உன் போட்டோவை என் மனைவிக்கு அனுப்பப் போகிறேன்’ என்று சொன்னார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி என்னை தன் அறைக்கு அழைத்தார். பேசியே டார்ச்சர் செய்யப் போகிறார் என்று நினைத்துக்கொண்டே நான் சென்றேன். ஆனால் வழக்கத்துக்கு மாறாக திடீரென நான் உள்ளே சென்றதும், அறைக் கதவைப் பூட்டி, கட்டிப் பிடிக்க முயன்றார். 
நிலைமை விபரீதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக நான் உடனடியாக திமிறிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடிவந்து விட்டேன்” என்று இருக்கிறது அந்தப் புகாரில்.

இந்தப் புகாரைக் கண்ணீரோடு டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடமும், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தியிடமும் கொடுத்த அந்தப் பெண் எஸ்பி, “இனியும் என்னை இந்த ஆபீஸில் வைத்திருக்காதீர்கள். என்னை இடமாற்றம் செய்துவிடுங்கள்” என்று அப்போதே கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
ஐஜி முருகனால் பாலியல் தொல்லைக்குள்ளானதுடன் பலவிதமாக இழிவுபடுத்தப்பட்ட அந்தப் பெண் எஸ்பி மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

முருகன் மத்தியப் புலனாய்வுப் பிரிவான சிபிஐயில் பணியாற்றியபோது சிபிஐயின் தென்னிந்தியத் தலைமை அதிகாரியாக இருந்தவர் அசோக் குமார். அப்போதே முருகனின் மனைவி அசோக் குமாரை நேரடியாகச் சென்று சந்தித்து முருகனின் நடத்தை மீது பல்வேறு புகார்களை அடுக்கினார். 

இதுபற்றி முருகனை அழைத்து எச்சரித்தார் சிபிஐ தலைமை அதிகாரியாக இருந்த அசோக் குமார். இது அப்போதே சிபிஐ அதிகாரிகளிடையே பெரும் சலசலப்பாகப் பேசப்பட்டது.

சமீபத்தில் ஐஜி சந்திரசேகர் ஓய்வுபெற்றபோது பிரிவுபசார விழா நடந்தது. அதில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார் பேசும்போது சில விஷயங்களை உடைத்தார்.
“இங்கே இருப்பவர்கள் எல்லாருமே 18 வயதைத் தாண்டிய எல்லாம் தெரிந்த போலீஸ் அதிகாரிகள்தான். அதனால் எனக்கு இதை வெளிப்படையாகப் பேசுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. 

நான் காவல் துறை அதிகாரியாகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது என்னோடுதான் வனிதாவும் பயிற்சி பெற்றார், முருகனும் பயிற்சி பெற்றார். நானும் வனிதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது அப்போது அங்கே பயிற்சியில் இருந்த அனைவருக்கும் தெரியும், முருகனுக்கும் அது தெரியும்.

நான் உட்கார்ந்திருப்பேன், எனக்கு இந்தப் பக்கம் வனிதாவும், அந்தப் பக்கம் முருகனும் உட்கார்ந்திருப்பார்கள். பயிற்சி வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது காதல் கவிதைகள் எழுதி அதை என்னிடமே கொடுத்து, வனிதாவிடம் கொடுக்கச் சொல்வார். நான் வனிதாவிடம் கொடுப்பேன். 
 டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 


வனிதா அதைப் படித்து சிரிப்பார். 
நானும் வனிதாவும் காதலிக்கிறோம் என்பது தெரிந்தும் முருகன் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் பாருங்கள்’’ என்று பேச, கூட்டத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு எழுந்தது.

முருகன் பணியாற்றும் அதே விஜிலென்ஸ் துறையில் பணியாற்றும் ஒரு பெண் ஏஎஸ்பி அதிகாரி அண்மையில் டிஜிபி ராஜேந்திரனை சந்தித்தார். டிஜிபியின் சமூகத்தைச் சேர்ந்தவர் அந்த அதிகாரி. “என்னை முருகன் டார்ச்சர் பண்றாரு. எப்படியாவது இங்கேர்ந்து என்னை மாத்திவிடுங்க’’ என்று உரிமையோடு டிஜிபியிடம் கண்ணீரோடு முறையிட்டிருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி. 

உடனே டிஜிபி அந்தப் பெண் அதிகாரியின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் இருக்க, காதும் காதும் வைத்த மாதிரி அவரை விஜிலென்ஸிலிருந்து இட மாறுதல் செய்திருக்கிறார்.

அண்மையில் ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது ஐஜி முருகன் பெங்களூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபாவையே சுற்றிச் சுற்றி வந்தார் என்கிறார்கள் அந்தப் பயிற்சிக்கு சென்றுவந்த அதிகாரிகள்.
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தது பற்றி விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஊடகங்களில் பிரபலமானார். 

அப்போதே அவரைப் பற்றித் தெரிந்துகொண்ட முருகன், ஹைதராபாத் பயிற்சியின்போது ரூபாவிடமே பேசிக்கொண்டிருப்பது, அவரை செல்போனில் போட்டோ எடுப்பது என்று எல்லை மீறினார் என்கிறார்கள் அவர்கள்.

இதுபோன்ற சில சம்பவங்களில் ஏற்கெனவே முருகனின் பெயர் அடிபட்டிருக்கும் நிலையில் இப்போது பெண் எஸ்பி கொடுத்திருக்கும் புகாரிலும் உண்மை இருக்கிறது என்கிறார்கள் விஜிலென்ஸில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்.


முருகன் மீது இவ்வளவு பாலியல் புகார்கள் சொல்லப்பட்ட நிலையில் தமிழக காவல் துறையில் முதன்முதலாக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல்கட்டக் கூட்டமும் நடந்திருக்கிறது.
இந்த நிலையில் முருகன் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் தரப்பு நியாயமாகச் சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

“நான் சிபிஐயில் இருந்தபோது பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்த சுமதி ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுத்தேன். அவர் மீது விஜிலென்ஸிலும் விசாரணை இருக்கிறது. அதிலிருந்து சுமதியை விடுவிக்குமாறு ஐபிஎஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். 

இப்போது புகார் கொடுத்திருக்கிற பெண் அதிகாரியும் அந்த அழுத்தம் கொடுத்தவர்களில் ஒருவர். நான் அவர்களின் அழுத்தத்துக்கு அடிபணிய மறுத்ததால் என் மீது இப்படிப் பாலியல் புகாரைச் சுமத்துகிறார்கள்” என்று தனக்கு நெருக்கமான டிபார்ட்மென்ட் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ஐஜி முருகன்.

அவருக்கு அரசியல் நண்பர்களும் உண்டு. அவர்களிடத்திலும் இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார் முருகன்.

“இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விஜிலென்ஸில் ஊழல் புகார் இருக்கிறது. உயர் நீதிமன்றமே இதுகுறித்து ஆராய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சில அதிகாரிகள் மீது ஊழல் புகார் இருக்கிறது. 

அதிலும் நானே நடவடிக்கை எடுத்துவருகிறேன். இந்த நிலையில் என் மீது இப்படி மலினமான புகார்களைக் கிளப்பினால் நான் அரசு மேலிடத்தில் இருப்பவர்களின் மீதான ஊழல் புகார்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடுவேன் என்று எதிர்பார்த்து இப்படிச் செய்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார் முருகன்.

ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களின் ஊழலுக்கு எதிராகத் தான் போராடுவதால் தன் மீது இப்படிப் பாலியல் முத்திரை குத்தப்படுகிறது என்பதுதான் முருகன் ஏந்தி நிற்கும் கேடயம்.
ஆனால், இது குறித்தும் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தன் மீதான பாலியல் புகார்களில் இருந்து தப்பிக்கத் தன்னை ஏதோ நேர்மையாளர் போல சித்திரித்துக்கொள்ள முயல்கிறார் முருகன். ஆனால், இதே ஐஜி முருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடந்த நாட்களில் எத்தனை முறை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்தார் என்பதை முதல்வர் வீட்டு சிசிடிவி கேமராவைக் கேட்டாலே சொல்லும். 

முதல்வர் மீதான புகார்களின் நிலை பற்றி அவரிடமே வீடு தேடிப் போய் விளக்கிவிட்டு வந்திருக்கும் ஐஜி முருகன், அந்தப் புகாரின் மேல் தான் நடவடிக்கை எடுப்பதால்தான் குறிவைக்கப்படுவதாகச் சொல்லியிருப்பது பொய் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.


உண்மையிலேயே முதல்வருக்கு இப்படி உள்நோக்கம் இருந்திருந்தால் முருகனைத் தன் வழிக்குக் கொண்டுவர அவருக்கு வேறு வாய்ப்புகளே இல்லையா, இதுபோன்ற புகார்களையா முதல்வர் தரப்பில் திட்டமிட்டுக் கட்டமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் கோட்டை வட்டார உயர் அதிகாரிகள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஐஜி மீது கூறப்பட்டுள்ள பாலியல் தொல்லை புகாரை விசாரிப்பதற்குப் பதிலாக அதிமுக அரசு அந்த ஐஜியைப் பாதுகாப்பதிலேயே முனைப்புடன் செயல்படுகிறது. 

இந்தப் புகாருக்குப் பிறகு தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் டி.கே. ராஜேந்திரன் அமைத்துள்ள துறை சார்ந்த விசாரணை கமிட்டியும் (விசாகா கமிட்டி), உச்ச நீதிமன்றம் அளித்துள்ள “விசாகா வழக்கு” வழிகாட்டுதல்களின்படி இல்லை என்பதால், விசாரணைக் குழு ஏதோ ஆழ்ந்த உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகக் காவல் துறை விசாகா கமிட்டியில் போலீஸ் அல்லாத ஓர் உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முருகனைக் காப்பாற்றுகிறாரா என்று சந்தேகப்படுகிறார் ஸ்டாலின்.

தன்னை தண்டிக்க முதல்வர் முனைவதாக முருகன் சொல்லிவருகிறார். ஆனால் விசாகா கமிட்டியின் செயல்பாடுகளோ முருகனைக் காப்பாற்றும் வகையில் இருப்பதாகவே படுகிறது என்கிறார் ஸ்டாலின்.


விஜிலென்ஸ் அதாவது லஞ்ச ஒழிப்புத் துறை என்றாலே சில பத்து வருடங்களுக்கு முன் அதற்கென்று ஒரு கம்பீரம் இருந்தது. சுத்த சுயம்பிரகாச நேர்மையாளர்கள் மட்டுமே விஜிலென்ஸில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கறை படியாத கரம் கொண்டவர்களே விஜிலென்ஸ் முழுதும் நிறைந்திருப்பார்கள்.

ஆனால் 2003க்குப் பிறகு இது முற்றிலும் மாறிவிட்டது. 
முன்னாள் ஆட்சியாளர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் விஜிலென்ஸைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதனால், ஆட்சியாளர்களுக்குத் தோதாக வளைந்துகொடுக்கும் முதுகு உள்ளவர்களே விஜிலென்ஸுக்குள் நுழைக்கப்பட்டார்கள். 

இன்னும் சொல்லப் போனால் விஜிலென்ஸால் விசாரணைக்கு உள்ளான ஊழல் அதிகாரிகளே, விஜிலென்ஸுக்குப் பொறுப்பான அதிகாரிகளாகக் கொண்டுவரப்பட்டார்கள் என்று துறையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படியாகத் தரம் இழந்த விஜிலென்ஸ் இன்று தன்மானமும் இழந்து நிற்கிறது!
                                                                                                                                      நன்றி:மின்னம்பலம் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...