வெள்ளி, 1 ஏப்ரல், 2011

ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக‌


கடந்த இரண்டு நாட்களாக உலகம் அதிர்ச்சியோடு ஜப்பானைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. துறைமுகப் பேரலை எனும் பொருள்தரும் ஸுநாமி எனும் ஜப்பானியச் சொல்லையே உலகம் முழுதும் பயன்படுத்தி வந்தாலும் 2004 டிசம்பருக்கு முன்னால் இந்தியாவில் சுனாமி என்றால் யாருக்கும் தெரியாது. சுனாமியின் பாதிப்புகள் எப்படி இருக்கும் என அறிந்தவர்கள் கூட ஜப்பானைத் தாக்கிய இந்த சுனாமியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல் கார்களும் வீடுகளும், விமானங்களும் கூட. இதுவரை 1600 பேர் மரணமடைந்திருப்பதாகவும், இன்னும் இது தொடர்ந்து உயரும் எனவும் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. பொருட் சேதங்களோ முழுமையாய் கணக்கிடுவதற்கே சில வாரங்கள் தேவைப்படலாம்.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கியிருக்கிறது. இது வரை உலகம் சந்தித்த சுனாமிகளில் இரண்டாவது பெரிய சுனாமி இதுவென்று செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சென்டாய் எனும் ஊர் முற்றிலுமாக நிலைகுலைந்து போயிருக்கிறது. மினாமிஸன்ரிகு என்ற ஒரு துறைமுக நகரில் மட்டும் பத்தாயிரம் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. நூறுபேர்களை ஏற்றிச்சென்ற பயணிகள் கப்பலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று ரயில்களைக் காணவில்லை. மீட்புப் பணிகளில் உதவுவதற்காக உலக நாடுகள் தங்கள் மீட்புக்குழுக்களை அனுப்பியுள்ளன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐந்து அணு உலைகள்  பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஃபுகுஷிமா அணு உலை வெடித்து விட்டதாகவும் ஆனால் அணுக்கதிர்கள் பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 20 கிமி சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஏனைய உலைகளின் வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க குளிரூட்டும் இயந்திரங்களை அனுப்பிவைத்திருக்கிறது. மின்கலன்களாலும், கடல் நீரை உபயோகித்தும் வெப்பம் ஏறாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், ஐஏஇஏ அறிக்கை வெளிவந்தவுடன் தான் அணு உலைகளைப் பற்றிய முழுமையான நிலவரம் தெரியவரும்.
இதற்கிடையில் எதிர்வரும் 19ம் தேதி பூமியின் துணைக்கோளான நிலவு தன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை மிகக் குறுகிய தூரத்தில் நெருங்குகிறது. இதை சூப்பர் மூன் எனக் குறிப்பிடுகிறார்கள். கடந்த பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமுறை நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக அதாவது சுற்றுவட்ட சராசரியை விட 18000 கிமி நெருங்கி 2.21,500 கிமி தூரத்தில் வருகிறது. கடந்தமுறை 2005ல் சூப்பர் மூன் நிகழ்வின் போது தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமி வந்தது, இந்தமுறை ஜப்பானை சுனாமி தாக்கியிருக்கிறது. இனி பூமியெங்கும் பேரழிவுகள் தொடரும் என்றெல்லாம் ஆரூடங்கள் உலவுகின்றன.
இயற்கைப் பேரழிவுகளை மனிதன் இன்றைய அறிவியலைக் கொண்டு தடுத்துவிட முடியாது. ஒரு எல்லைவரை வரை அதை முன்னறிந்து தற்காத்துக் கொள்ளவே முடியும். கல்வி என்பதே இயற்கையை அறிதலும், அதில் வினை புரியும் மாற்றங்களைக் கொண்டு மனித குலத்தின் வளர்ச்சியை சாத்தியப்படுத்துவதும்தான். ஆனால் இந்தப் பாட்டையிலிருந்து விலகி, பெருநிறுவனங்களின், முதலாளிகளின் லாபத்தை தங்கள் உழைப்பிலிருந்து செதுக்கித் தரும் பொருட்டு தம்மை கூர்தீட்டிக் கொள்வதே கல்வி என்றாகிவிட்டது. ஜப்பனில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் நேர்ந்த பேரழிவுகளை விட பலமடங்கு பேரழிவை அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்திவிடும் ஆபத்து காத்திருக்கிறது. சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் பல லட்சம் மக்களை, பல தலைமுறையினரை ஊனப்படுத்திவிடக்கூடிய வாய்ப்பை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் அணு உலைகள், லாபத்திற்காக கடும் அலட்சியத்துடன் கையாளப்படுகின்றன. ஐஏஇஏ யின் விதிகள் நிலந‌டுக்கத்தை தாங்கும் அளவில் அணு உலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை உறுப்படுத்துகிறது. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டதும் உடனடியாக அணு உலையின் செயல்பாடுகளை ஜப்பானிய அரசு நிறுத்தி விட்டது, ஆனாலும் உலையை குளிர்விக்கும் அமைப்புகள் முழுமையாக சேதமடைந்திருக்கின்றன. என்றால் செய்யப்பட்ட விதிகள் யாருக்காக? அந்த விதிகளை கண்காணிப்பது யார்? எல்லாம் முடிந்தபின், பல லட்சம் உயிர்கள் காற்றில் கரைந்து போனபின், விபத்து என்றும் இயற்கைச் சீற்றம் என்றும் செய்தியை வாசித்து விட்டு போய்விட வேண்டுமா?
உலகம் முழுவதும் 32 நாடுகளில் சற்றேறக் குறைய 450 அணு உலைகள் இயங்கி வருகின்றன. மின்சாரத் தேவைகளுக்காக என்று கூறப்பட்டாலும் ஆயுதத் தயாரிப்புகளுக்காகவே பெரும்பாலும் அவைகள் பயன்படுத்தப்படுகின்றன. வளர்ந்த நாடுகள் அனைத்தும் புதிய அணு உலைகள் நிறுவுவதையும், புதுப்பிப்பதையும் கிட்டத்தட்ட‌ நிறுத்தி விட்டன. அதேநேரம் காலாவதியான தொழில்நுட்பங்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளிடம் திணிக்கின்றன. மின்சாரத்திற்காக ஆபத்தற்ற, எளிமையான வழிகள் இருக்க அவைகளை விட்டுவிட்டு அணு உலைகளை மடியில் கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் கொள்ளை லாபத்தைக் குவிப்பது என்பதை தவிர வேறு காரணங்கள் இருக்க முடியுமா?
பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர உயர நாடு முன்னேற்றத்தில் உயர்வதான ஒரு மாயையை திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஜப்பான் நிலநடுக்கம், சுனாமியை தொடர்ந்து ஆசியப் பங்குச் சந்தை வீழ்ந்து கிடக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றுவதால் அது மீண்டு வருவது வரையிலான நெருக்கடிகள் மக்கள் தலையிலேயே விடியும். முன்னேற்றம் முன்னேற்றம் என ஜல்லியடித்தவர்களெல்லாம் சுனாமிச் செய்தி வந்ததும் முன்னேற்றத்தை மூலையில் விட்டுவிட்டு தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் ஜப்பானின் மீள் திரும்பலை விலைவாசி உயர்வாகவும் வரிகளாகவும் உலக மக்கள் தங்கள் தலையில் சுமக்க வேண்டும்.
ஆயிற்று, நிலநடுக்கம் இயற்கைச் சீற்றம் தான், சுனாமி இயற்கைச் சீற்றம் தான். அவை ஆடிய ஊழித்தாண்டவத்தில் பல்லாயிரம் உயிர்கள் போயின, கோடிகளின் மடங்குகளில் பொருட்சேதங்கள் ஆயின. லட்சக் கணக்கான மக்கள் வீடிழந்து, ஊனமுற்று வீதிகளில் நிற்கிறார்கள். இனி மறு நிர்மாணப் பணிகளைத் தொடங்கியாக வேண்டுமே, காத்திருக்கின்றன பகாசுர நிறுவனங்கள். நிலநடுக்கம் அழிக்க, அழிக்க, சுனாமி சுருட்டச் சுருட்ட, இயற்கை சீறச் சீற அத்தனையும் அந்த நிறுவனங்களுக்கான வாய்ப்புகள். ஆண்டுகள் பல கடந்தபின்னும் தமிழக கரையோர மக்களுக்கு இன்னும் முழுமையாக சுனாமி மாற்று வசதிகள் செய்து தரப்படவில்லை. இதைவிட தரத்திலும் நிவாரணப் பணிகளிலும் ஜப்பான் மேம்பட்டிருக்கலாம், ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அந்த நிறுவனங்களுக்கான வாய்ப்பாக மாறி லாபத்தைக் கொட்டும்.
தெளிவாகச் சொன்னால் இயற்கைச் சீற்றங்களின் பாதகங்கள் மக்களுக்கு அதனால் ஏற்படும் சாதகங்கள் முதலாளிகளுக்கு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...