சனி, 10 நவம்பர், 2018

தமிழ் ராக்கர்ஸ்: முடக்கவே முடியாது

சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்துக்காட்டியுள்ளது. 
சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் கடந்த நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியானது.

முன்னதாக, சர்கார் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் வெளியிடக்கூடாது என்று கூறி அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது. 
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சர்கார் திரைப்படத்தை திரையரங்கம் தவிர்த்து சட்டவிரோதமாக இணையதளங்கள், கேபிள் டிவிக்கள், சிடி-டிவிடிக்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்ததது.
கடந்த 4ஆம் தேதியன்று தமிழ் ராக்கர்ஸ் பெயரிலுள்ள ஒரு ட்விட்டர் பக்கத்தில், சர்கார் திரைப்படம் வெளியாகும் நாளன்றே அதன் எச்.டி பதிப்பை தங்களது இணையதளத்தில் வெளியிடுவோமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதையடுத்து, தமிழ் ராக்கர்ஸ் விடுத்துள்ள சவாலை முறியடிப்போம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், "சமூக வலைதளங்களில் நம் உழைப்பைச் சுரண்டும் திருடன் தமிழ் ராக்கர்ஸ் சர்கார் படம் வெளியான மாலையே ஹெச்டி பிரிண்டில் வெளியிடுவதாக சவால் விடுத்துள்ளார்கள். இதற்கு நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட்டு தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்ல விடாமல் கண்காணிப்பு ஆட்களை நியமித்து, படம்பிடிப்பவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி, அனைத்து திரையரங்கிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டுமென்றும் திரையரங்கங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திட்டமிட்டபடி நவம்பர் 6ஆம் தேதியன்று காலை தமிழ்நாடு மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சர்கார் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அத்திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புக்கள் தரவாரியாக தனித்தனியே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
சட்டரீதியான நடவடிக்கை மற்றும் திரையரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மீறி சர்கார் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கோடிக்கணக்கான பணம், பல மாத உழைப்பில் உருவாகும் கிட்டத்தட்ட அனைத்து திரைப்படங்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி அல்லது சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியாவது தொடர்கதையாகி வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு வரை சிடி-டிவிடிக்களில் புதிய திரைப்படங்கள் வெளியாவது பெரிய பிரச்சனையாக இருந்தது. 
அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்ததோ, இல்லையோ மலிவான விலையில் வேகமான இணையதள சேவைகள் கிடைக்க தொடங்கிய பிறகு இணையதளங்களில் சட்டவிரோதமாக திரைப்படங்கள் வெளியாக தொடங்கியது. 
அந்த விவகாரம் தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
திருட்டு சிடிக்களை ஒழிப்பதற்கு காவல்துறையினர் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைளை போன்று, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடைசெய்வதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 
அதாவது, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முதன் முதலாக தொடங்கப்பட்டதாக அறியப்படும் tamilrockers.com என்ற இணையதளத்துக்கு சென்று பார்த்தீர்களானால் "நீங்கள் பதிவிட்ட இணையதள முகவரி இந்திய தொலைத்தொடர்புத்துறையின் வழிகாட்டுதலின்படி தடைசெய்யப்பட்டுள்ளது" என்று வரும். 
அதைத்தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளமானது .cc, .to, .be, .pm, .ac, .la, .ws போன்ற பல்வேறு டொமைன்களில் தொடங்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டன.
மேற்குறிப்பிட்ட தமிழ் ராக்கர்ஸின் அனைத்து இணையதள முகவரிகளும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு பெயரில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு சர்கார் உள்ளிட்ட புதிய படங்கள் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டு வருகிறது.
புதுப்புது பெயரில் முளைத்து திரைப்படத்துறை, தொலைத்தொடர்பு துறை, சைபர் கிரைம் பிரிவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸை முற்றிலும் தடைசெய்வது சாத்தியமா?
நாம் நினைத்ததைவிட மிகவும் சாதுர்யமாக தமிழ் ராக்கர்ஸ் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இதை நடத்துபவர்கள் தொழில்நுட்பத்தில் உள்ள ஓட்டையை நன்கறிந்தவர்களாகதான் இருக்க வேண்டும். ஏனெனில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலிருந்து ஒரு படத்தை பதிவிறக்கம் செய்பவரே, அதே படத்தை பதிவிறக்கம் செய்யும் மற்றொருவருக்கு தான் பதிவிறக்கம் செய்த தரவுகளை கொடுத்து உதவுவது போன்ற Peer to Peer என்ற முறை பயன்படுத்தப்படுவதால், முதலில் யார் பதிவேற்றியது என்பதை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம்
தற்போதுள்ள செயல்முறையின்படி, ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை தடைசெய்வதற்கு நீண்டகாலம் ஆகிறது. எனவே, இதுபோன்ற பைரஸி இணையதளங்கள் புதுப்புது டொமைன்களில் தொடங்கியவுடன் உடனடியாக தடைசெய்வதற்கு சிறப்பு குழுக்களை அமைப்பது தற்காலிக தீர்வாக அமையலாம்.
Tamilrockers என்ற வார்த்தையை கொண்டு மீண்டும் ஒரு புதிய இணையதளம் பதிவுசெய்யப்படுவதையே முற்றியும் தடைசெய்ய முடியுமா என்று கேட்டபோது, "உலகம் முழுவதும் புதிய இணையதள முகவரிகள் பதிவுசெய்வதை கண்காணிக்கும், ஒழுங்குபடுத்தும் பணியை அமெரிக்காவை சேர்ந்த ஐகான் (The Internet Corporation for Assigned Names and Numbers) என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. 
Tamilrockers என்ற வார்த்தையை முற்றிலும் தடைசெய்யக்கோரி இந்திய தொலைத்தொடர்புத்துறை ஐகானுக்கு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் இது சாத்தியமாகலாம். 
ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வாங்கி பதிவு செய்யும்போது தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இணையதள சேவை வழங்கும் நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.
இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்தி வருபவர்கள் குறித்த தகவலை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்புள்ளதா என்று பார்த்தால் கிடைக்கும் தகவல் இயலாது என்றே.

 ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை ஆரம்பித்தவர்கள் குறித்த அடிப்படை தகவல்களை யார் வேண்டுமானாலும் இணையத்தில் தேடி (who's data என்றழைக்கப்படுகிறது) தெரிந்துகொள்ளலாம். ஆனால், ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து ஒரு இணையதளத்தை பதிவு செய்பவர் நினைத்தால் கூடுதலாக சிலநூறு ரூபாய் கொடுத்து அவர்களது who's தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ளும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 
எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் குறித்த விவரங்களை பெறுவது இயலாத காரியம்.
தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தை நடத்துபவர்கள் தங்களது டொமைன் ஒவ்வொரு முறை முடக்கப்படும்போதும் சாதாரணமான முறையில் புதிய டொமைனை பதிவுசெய்வதில்லை என்றே தெரிகிறது .
 மாறாக, தனிப்பட்ட சர்வரை வாங்கிவிட்டு ஸ்டாட்டிக் ஐபி முகவரியை வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எண்ணற்ற இணையதளங்களை உருவாக்கும் முறையை கடைபிடிக்கிறார்கள் என்றே தெரிகிறது .
 அதுமட்டுமின்றி, இணையதளங்களை முறைப்படுத்துவதற்கென சர்வதேச சட்டங்கள் ஏதுமில்லாத காரணத்தால் குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கத்திடமோ, அமைப்பிடமோ இதுதொடர்பாக எவ்வித கோரிக்கை வைப்பதிலும் பயனில்லை.
 உதாரணமாக, தமிழ் ராக்கர்ஸ் ரஷ்யாவை மையமாகக்கொண்டு செயல்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஐகான் போன்ற அமைப்புகள் விடுக்கும் கோரிக்கையை ரஷ்யா மறுப்பதற்கு வாய்ப்புள்ளது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியாது, புதிய டொமைன்கள் உருவாக்குவதை நிரந்தரமாக முடக்க முடியாது, சர்வதேச சட்டங்களை பயன்படுத்தியும் எதுவும் செய்யமுடியாது . 
சரி .இதற்கு எப்படி எதிர்த்து செயலாற்றுவது.?

இணையம் உருவான காலத்திலிருந்து ஹாலிவுட் திரைப்படங்களும்  இதுபோன்ற பைரஸி தளங்களின் காரணமாக கடும் சவாலை சந்தித்து வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித முன்னேற்றத்தையும் ஹாலிவுட் படத்தயாரிப்பாளர்களால் கூட  எட்டமுடியவில்லை. 
அதுமட்டுமின்றி, பைரஸி இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்யப்படும் மென்பொருள்களினால் ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழந்து வருகிறது. 
அதுவும் இதுவரை முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவே உள்ளது. மக்கள் இதுபோன்ற தளங்களை நாடுவதற்கான காரணம் என்ன என அறிந்து மக்கள் தரமில்லாத இந்த படங்களைப்பார்ப்பதை உணர்த்தி அதை சரிசெய்வதற்கான முயற்சியில் திரையுலகம் ஈடுபட வேண்டும்.
ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் கட்டணத்தைக்கூட்டும்,சிற்றுண்டிகளை,தண்ணீரை  யானை விலைகொடுத்து தங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் ,வாகனங்களை நிறுத்த வாகனத்தின் விலையில் பாதியை கேட்பது போன்ற ரசிகர்கள் ,பொதுமக்கள் மீதான திரையரங்குகள் தாக்குதலை நிறுத்துவார்களா என்பதே தமிழ் ராக்கர்ஸை ஒழிக்கும் வழியைத்தேடுவதில் கிடைக்கும் கேள்வி.
தற்போதைய திரையரங்குகளின் கொள்ளையில் இருந்து காப்பாற்றும் ராபின் ஹூட் டாகவே தற்போது திரைப்பட ரசிகர்கள் தமிழ் ராக்கர்ஸைப் பார்க்கிறார்கள்.
அதை மாற்றுவது திரையுலகினர் கையில்தான் உள்ளது.நடிகர்கள் ஊதியமாக பலகோடிகளை கொட்டுவதை நிறுத்தி படம் தயாரித்தால் உண்டாகும் நட்டம் குறைவாகவே இருக்கும்.
600 கோடிகளில் 2.0 படத்தை எடுத்தால் எத்தனை திரையரங்குகளில் ,எவ்வளவு கட்டணத்தில்,எவ்வளவு நாள் அரங்கு நிறைந்து ஓடினால் லாபம் வரும்.கணக்கிட்டால் நட்டமே பதிலாக வருகிறது.
அதை ராஜபக்ஷே நண்பர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் தாக்குப்பிடிக்கும்.காரணம் கொட்டிக்கிடக்கும் கருப்புப்பணக்குவியல் மலை அவரிடம் உள்ளது.
அவர் தொடர்ந்து படம் எடுப்பார்.ஆனால் பாரம்பரியமிக்க ஏ.வி.எம்,ஜெமினி,சூப்பர் குட்,படம் எடுப்பதில்லையே .காரணம் தேவையற்ற செலவினம்,நடிகர்கள் ஊதியம் என  கோடிகளை கொட்டி நட்டப்பட அவர்கள் தயாரில்லை.
இன்று சினிமா உலகில் அலையும் பணம் குறுக்குவழியில் பணம் சம்பாதித்தவர்கள் கறுப்புப்பணம்.வெள்ளையாக்கும் முயற்சிதான்.அவர்களுக்கு நட்டமே தேவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...