மரியாதைக்குரிய தந்தி டி.வி.மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு,
தினத்தந்தி குழுமத்திலிருந்து ஒரு தொலைக்காட்சி வருகிறது என்ற செய்தி அறிந்தவுடன் மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.காரணம் உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் ஒருதலைப்பட்சமான செய்தி ஊடகங்களில் இருந்து மாறுபட்டு தந்தி டி.வி பணியாற்றும் எனக்கருதினோம்.
A
ஆனால்,நிலைமை என்னவோ மிகவும் மோசமாக ஆகிவிட்டது.
நான் தி.மு.க.உறுப்பினர் இல்லை;
ஆனால்,ஆதரவாளன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் ரங்கராஜ் (பாண்டே)(பாண்டே என்பது ஜாதிப்பெயர்-அதனை எப்படி தந்தி டி.வி.யில் அனுமதிக்கிறீர்கள் என்று தெரியவில்லை-ஆதித்தனார் எங்கேயாவது தனது பெயருக்கு பின்னால் தனது ஜாதிப்பெயரைப் போட்டுக்கொண்டதுண்டா?சிவந்தி ஆதித்தனார்தான் அப்படிச் செய்ததுண்டா?)மற்றும் ஹரிஹரன் என்ற இருவரும் தி.மு.க.வை நோக்கியே எல்லாக் குற்றச்சாட்டுகளையும் வைக்கிறார்களே தவிர,அதே கேள்விகளை பா.ஜ.க.,அ.தி.மு.க.வை நோக்கி எழுப்புவதில்லை.இதுதான் நடுநிலையா?வெட்டவெளிச்சமாக இவர்களது ஜாதிப் பற்று தெரியுமளவிற்கு கேள்விகள் அமைந்தபோதும்,தந்தி டி.வி.தமிழர்களின் டி.வி.என்கிற காரணத்தாலும்,ஜனநாயகத்தை மதிக்கும் மாண்பு உள்ள காரணத்தாலும் தி.மு.க.வினர் தந்தி டி.வி.விவாதங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தந்தியில் தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டி ஒளிபரப்பு குறித்த விளம்பரம் வந்துள்ளது.அதன் தலைப்பே என்னை இந்தக் கடிதம் எழுதவைத்தது.

முதல் இடமா?மூன்றாவது இடமா? என்பதுதான் அந்தத் தலைப்பு.
நேயர்களை பார்க்கத்தூண்டுவதற்காக இப்படிக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்.அதனையே விளம்பரத்துக்கும் பயன்படுத்தலாம்.
அது பத்திரிகை உத்தி.தவறில்லை.இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொன்னார் என்பதும் எனக்குத் தெரியாது.இன்று அந்நிகழ்ச்சியைப் பார்க்கும்போதுதான் அறியமுடியும்.
என் கேள்வி இதேமாதிரி இன்னொரு பெரிய கட்சியின் தலைமையிடம் கேட்டுவிடமுடியுமா?குறிப்பாக உங்களது பத்திரிகைக்கு விளம்பரம் தரும் அ.தி.மு.க.அரசின் தலைவர் ஜெயலலிதாவிடம் கேட்கமுடியுமா?
உங்கள் நிருபரை அழைத்து தேர்தல் அறிக்கை கொடுத்தாரே அவரிடம் இதுபோல ஒரு பேட்டிக்கு அழைப்பு விடுக்கமுடியுமா?அப்படி அழைப்பு விடுக்கும் நெஞ்சுரம் உங்களுக்கு உண்டா?ஒரு வேளை அப்படி அழைத்து அவரும் வந்து உட்கார்ந்தால்...
அம்மையார் ஜெயலலிதா அவர்களே...
1) சொத்துக் குவிப்பு வழக்கை நீங்கள் இழுத்தடிக்கிறீர்கள் என்று நீதிபதி கூறுகிறாரே.இதற்கு உங்கள் பதில் என்ன?
2)அரசு வழக்கறிஞரையே உங்களுக்கு ஆதரவாளராக மாற்றிவிட்டீர்களே.இதுபோல நீதிமன்ற வரலாற்றில் நடந்ததில்லை என்கிறார்களே.உங்கள் பதில் என்ன?
3)உங்களைப்போலவே அரசு வக்கீலும் உடல்நிலை சரியில்லை என்று கூறியதை ஏற்காத நீதிபதி,அவருக்கு 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளாரே?இது பற்றி உங்கள் கருத்து என்ன?
4)நீங்கள் நிரபராதி என்றால்,எந்தக் குற்றமும் செய்யாதவர் என்றால் ஏன் வழக்கில் ஆஜராகி பொய்க்குற்றச்சாட்டு என்பதை நிரூபித்து விடுதலை பெற்றிருக்கலாமே?
5)இந்த முறை ஆட்சி பொறுப்பேற்ற போது அளித்த முதல் பேட்டியில்,
இனிமே வாரந்தோறும் நிருபர்களை சந்திப்பேன் என்றீர்களே?கடந்த 3 ஆண்டுகளில் 150 வாரங்கள் கடந்துவிட்டன.இதுவரை எத்தனை வாரங்கள் நிருபர்களைச் சந்தித்தீர்கள்?
6)இலவசங்களே கூடாது என்பதுதான் எனது இலட்சியம் என்றீர்களே?ஏன் இலவசப் பொருட்களை இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறீரீகள்?
7)சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையில் கூறினீர்களே?இப்போது ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?சேது சமுத்திரத் திட்டம் வந்தால் அது இலங்கைக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறதே.அப்படியானால் நீங்கள் இலங்கை அரசின் ஆதரவாளரா?
8) ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தபட்டு உங்களைப்போல நீதிமன்றங்களுக்குப் பயந்து பதுங்காமல்,வழக்கைத் துணிச்சலாகச் சந்தித்துவரும் ஆ.ராசாவுக்கு தி.மு.க.சீட்டுக் கொடுத்ததைக் கண்டிக்கும் நீங்கள்,டான்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி,மீண்டும் அரசிடமே வாங்கிய நிலத்தை ஒப்படைத்ததன் மூலம் நீங்களே குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டீர்களே.
அப்படியானால் இப்போது எப்படி நீங்கள் முதல்வர் பதவியில் நீடிக்கலாம்?பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம்?
9)உங்களை நம்பிய கம்யூனிஸ்டு கட்சிகளை கடைவரை கூடவே வைத்துக்கொண்டும்,சட்டமன்றத்தில் அவர்களை உங்களுக்கு லாலி பாட வைத்துகொண்டும்,அவர்களின் டெல்லி தலைவர்களை உங்கள்வீட்டுக்கு அழைத்து வந்து கம்யூனிஸ்டுகள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்து விட்டு,40 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு,ஒரு தொகுதிதான் என்று அவர்களை அழைக்கழித்து தூக்கி எரிந்துவிட்டீர்களே.இது உங்கள் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிடாதா?
10)கடந்த முறை உங்கள் ஆதரவில் ஆட்சி அமைத்த வாஜ்பாய்,நீங்கள் ஆட்சியைக் கழித்த அன்று இரவுதான் நிம்மதியாகத் தூங்கினேன் என்று கூறினாரே.அது பற்றி தங்களின் கருத்து என்ன?இதே போல இந்த முறை நீங்கள் ஆதரிக்கும் கட்சிக்கும் நம்பகமான ஆதரவைத் த்ருவீர்களா?
------- இந்தக் கேள்விகளை தந்தி டி.வி.பத்திரிகை ஊடகப் புலிகளால் ஜெயலலிதாவுக்கு நேருக்கு நேராகக் கேட்க முடியுமா?