திங்கள், 30 அக்டோபர், 2017

சும்மா கிடக்கும் சங்கை .....

ட்டபொம்மனில் ஆரம்பித்த போக்குவரத்துக் கழகங்கள்,மாவட்டங்கள்  பெயர்,பெரும்பிடுகு வரை போய் 500பேர்கள் மட்டுமே உள்ள சாதியினர் கூட தங்கள் சாதி தலைவர் பெயரை வைக்கக்கோரி போராடும் அளவு போனது.
அம்பேத்கார் பேருந்து மீது பசும்பொன் முத்துராமலிங்கம் பேருந்து ஆதரவாளர்கள் கல்வீசவும்,அவர்கள் திருப்பி இவர்கள் பேருந்தை  எரிப்பதுமாக போர்க்களமாகியது தமிழகம் .

எந்தப்பேருந்தை எந்த சாதிக்காரன் தாக்குவனோ என்ற பயம் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் அளவு தமிழகம் பாதுகாப்பில்லாமல் போனது பலருக்கு மலரும் நினைவில் இருக்கலாம்.

சாதி தலைவர்கள் பெயரை சூட்டுவதால் உண்டான பலனை தமிழகம் அனுபவித்தப்பின்னர்தான் தலைவர் கலைஞர் மாவட்டங்கள்,போக்குவரத்துக்கழகங்களில் இருந்து அவர்கள் பெயரை நீக்கி கலவரங்களுக்கு முடிவு கட்டினார்.
ஆனால் அதை அவரது மகனே மீண்டும் துவக்குவது சரியல்ல. விடுதலைப் போராட்ட வீரர்கள்,அரசியல் தலைவர்களை சாதிய ரீதியில் அணுகும் போக்கு தலை தூக்கி உள்ள நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கும் வேலையை தளபதி செய்யக் கூடாது.
ஏற்கனவே மதுரை விமான நிலையத்துக்கு காரராஜர் பெயரை வைக்க கோரி நாடார் சங்கங்கள் கோரிக்கை நிலுவையில் உள்ளதை தளபதி நினைவில் கொள்ளவில்லையே.


காமராஜர் தற்போது தமிழத்தின் பெருந்தலைவராக இல்லை.நாடார் சங்கங்கள் அவரை தங்கள் சாதி தலைவராக குறுகிய வட்டத்தில் அடைத்து விட்டார்கள்.


இந்திய அரசியலிலே பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் காமராஜர் படத்தை வீடுகளில் வைத்ததற்காக என்னை நீ அந்த சாதியா என்று கேட்டவர்கள் பலர்.கல்விக்கண் திறந்த காமராஜருக்கே அந்நிலை என்றால் தனது வாழ் நாளில் தனது சாதிக்காக  உழைத்த காங்கிரஸ்,பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த தலைவர் முத்துராமலிங்கம் நிலை எப்படி என்று தெரியாதா?

சுபாஷ் சந்திர போஸின் பார்வர்ட் பிளாக் கட்சியில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தது போய் பார்வர்ட் பிளாக் என்றால் தேவரின அமைப்பாக மாறிப்போனது வரலாறு.


முத்துராமலிங்கத் தேவர்,காமராஜர்,வ.உ.சி.போன்றோரை சாதிகள் முன்னிறுத்தும் போக்கு இருக்கையில் வீண் குழப்பத்தை உண்டாக்காமல் இருக்க தலைவர்கள் பெயரை சூட்டாமல் அந்தந்த இடத்தின்,ஊரின் பெயர்களை வைப்பதுதான் அமைதிக்கான வழி .அதுமட்டுமல்ல வெளி நாடுகளில் உள்ளவர்கள் யார் பெயர் எந்த ஊர் என்று குழம்பாமல் இருக்கவும் உதவும்.


தேவர் பிறந்தநாளில் ஏதாவது சொல்லவேண்டும் என்று அரசியல்வாதிகள் சொல்வது எதிர்தரப்பை அவர்கள் மீது அவநம்பிக்கையை வைக்கத்தான் உதவும்.
தொகுதிகளை சாதி வாக்குகளை
கணக்கிட்டு பார்த்துக்கொடுப்பதே தவறு.


சொல்லப்போனால் பிற சாதியினர் வாக்குகள் ஒட்டு மொத்தமாக அதிகமாகத்தான் இருக்கும்.அவர்கள் திட்டமிட்டு கட்சிகளின் சாதி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால்?


அந்நிலை விரைவில் வரப்போகிறது.சாதி வெறியை அரசியல் கட்சிகள்தான் தூண்டுகின்றன.அதற்கு திமுகவும் விலக்கல்ல என்ற அவப்பெயர் வேண்டாம் தளபதி அவர்களே?


வெள்ளி, 27 அக்டோபர், 2017

மூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும்,

வரலாற்றில் மூலதனத்தின் இடமும்.

150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்கட்டுரைக்குள் நுழையும் முன்பாகச் சில வார்த்தைகள்…
மாமேதை கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் தொகுதியின் முதல் பாகம் வெளியிடப்பட்டதன் 150 – ஆவது ஆண்டு நிறைவு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மூலதனத்தின் மரணத்தைப் பிரகடனம் செய்த இந்நூல், தொடர்ந்து உலக முதலாளி வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்துத் தனது மூலதனம் நூல் வழியாக உலகிற்கு எடுத்துரைத்த மாமேதை காரல்மார்க்ஸ்.
மூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல, தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் மூலதனத்தைப் படிப்பதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர்.
1867, செப்டம்பர் 14-ஆம் தேதியன்று மூலதனத்தின் முதல் தொகுதி ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி அந்த மாபெரும் படைப்பை இருட்டடிப்பு செய்து விட முதலாளி வர்க்கம் முயன்றது. இருப்பினும், 1872-இலேயே அதன் ரசிய மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது. தொடர்ந்து பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகின.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை மார்க்ஸால் முடிக்க இயலவில்லை. முற்றுப்பெறாத கையெழுத்துப் படிகள் அனைத்தையும் எங்கெல்ஸிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார் மார்க்ஸ்.
தனது சொந்த ஆய்வுப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை முடிப்பதை மட்டுமே தனது வாழ்நாள் கடமையாக்கிக் கொண்டார் எங்கெல்ஸ். “இதற்கு மேல் மார்க்ஸின் கையெழுத்துப் பிரதியில் தொடர்ச்சியில்லை” என்ற எங்கெல்ஸின் துயரம் தோய்ந்த குறிப்புடன் நின்று போகிறது மூன்றாவது தொகுதி.
1867 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனம் – முதல் தொகுதியின் முகப்பு அட்டை.
முதல் தொகுதி வெளிவந்த இரண்டாண்டுகளில் மார்க்ஸ் ரசிய மொழி கற்கத் தொடங்கினார். 1870-இல் சிக்பிரீட் மேயர் என்ற தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார் மார்க்ஸ். “ஜெர்மன்-ரோமானிய மொழிக் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு மொழியை கற்றுத் தேர்வதற்கு இந்த வயதான காலத்தில் நான் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். இருப்பினும் நிச்சயமாக இது பயனுள்ள முயற்சிதான்.
ரசியாவில் தற்போது தோன்றியிருக்கும் அறிவுத்துறை இயக்கம், அந்தச் சமூகத்தின் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருக்கும் கொந்தளிப்புக்குச் சான்று பகர்கிறது. கண்ணுக்குத் தெரியாத இழைகள் மூலம் மனிதர்களின் உடல்களுடன் அவர்களது சிந்தனைகள் இணைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன” என்று அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.
அந்த மாமேதையின் புரட்சிகர உள்ளுணர்வு வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் உண்மையென்று பின்னாளில் ரசியப் பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. இது மூலதனம் நூலின் 150-ஆவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு. மூலதனம் பயில்வோம். மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்துவோம்!

***

“தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட, பெரிதும் தூற்றப்பட்ட மனிதர் மார்க்ஸ்” என்று அவருடைய கல்லறையில் நிகழ்த்திய உரையில் எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.
அத்தகைய வெறுப்புக்கும், தூற்றுதலுக்கும் மார்க்ஸ் இலக்கானதற்குக் காரணம், முதலாளித்துவ சமூகத்தின் உயிர்நிலையையே தாக்கும் இரண்டு விஷயங்களைத் தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தியதுதான்.
முதலாவதாக, முதலாளித்துவம் மனித குல வரலாற்றில் இயல்பாகப் பரிணமித்ததோ, காலத்தால் அழியாததோ அல்ல என்பதை மார்க்சின் ஆய்வு நிறுவியது.
ஏனென்றால், பெரும் திரளான மக்களை, அவர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களிலிருந்து பலவந்தமாகவும், மோசடியாகவும் பிரித்து வீசி, அந்தச் சாதனங்களைத் திருடிக் கைப்பற்றித் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டவர்களைச் சார்ந்து வாழும்படி மக்களைக் கட்டாயப்படுத்திய வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் மீதுதான் முதலாளித்துவம் நிற்கிறது.  இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையின் அடிப்படையில் உருவான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தவிர்க்க முடியாமல் தன் முடிவைச் சந்திக்கும் என்கிறது மார்க்ஸின் ஆய்வு.
தோழர் ஏங்கெல்ஸ்
இவ்வாறு முதலாளித்துவம் அழிந்துபடும்போது, மனித குலத்தையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.
இரண்டாவதாக, தொழிலாளர்கள் உபரி மதிப்புக்காக எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், அவ்வாறு சுரண்டப்பட்ட உபரி மதிப்பை (இலாபம்) தமக்குள் பிரித்துக் கொள்வதில் ஆலை முதலாளிகளும், வணிகர்களும், நிலவுடைமையாளர்களும், வட்டிக் கடன்காரர்களும் எவ்வாறு போட்டி போடுகிறார்கள் என்பதையும், இந்த முரண்பாடுகள் சர்வதேச அளவில் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான போட்டியாகவும், காலனி ஆதிக்கமாகவும் ஏகாதிபத்தியமாகவும் வெளிப்படுவதையும் இயக்குகின்ற முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பான விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.
அதாவது, முதலாளித்துவத்தை இயக்குவது வெறும் உலகளாவிய அரசியல் பொருளாதாரமல்ல; அரசுகளையும் அவற்றுக்கிடையிலான உறவுகளையும் மையமாகக் கொண்ட அரசியல் பொருளாதாரம் என்பதை அவர் நிறுவினார்.
150 ஆண்டுகளுக்கு முன்பு, 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட “மூலதனம்” நூலின் முதல் பாகம் மேற்கண்ட முதல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு, மேற்கண்ட இரண்டாவது முடிவை விளக்கிக் கூறுகிறது.
இந்த முடிவுகள் இரண்டுவிதமான பொருட்களில் வரலாற்றுப் பூர்வமானவை. முதலாவதாக, முதலாளித்துவம் என்பது காலத்துக்கு அப்பாற்பட்டதோ, என்றென்றும் நிலைத்திருப்பதோ அல்ல. முதலாளித்துவத்தின் தோற்றம் என்பது வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தைச் சார்ந்தது. மனிதகுல வரலாற்றின் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தோற்றம் பெற்றதைப் போல, எதிர்காலத்தில் அதற்கு ஒரு முடிவும் உண்டு.
வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்களும் குறிப்பிட்ட வர்க்கத்துக்குள் நடக்கும் போராட்டங்களும் தேசங்களுக்கிடையேயான போராட்டங்களும் ஒரு தேசத்துக்குள்ளேயே நடக்கும் போராட்டங்களும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் நிரம்பிய கொந்தளிப்பான வரலாற்றை நமக்குக் காட்டுகின்றன. முதலாளித்துவம் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் வர்க்கங்கள் அடங்கிய மனித குலம், தனது தெரிவின் மூலம் அதனை முடித்து வைக்கவும் இயலும் என்பதை “மூலதனம்” நூல் நமக்குக் காட்டுகிறது.
அதனால்தான், “மூலதனம்” என்ற இந்த நூல் வேறெந்த நூலைக் காட்டிலும், முதலாளித்துவ உலகத்தின் வரலாற்றிலிருந்தே பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்கி வருகிறது. அதனால்தான் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1990-களுக்கு முன்பு வரை, சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கும் பாட்டாளி வர்க்க இயக்கங்களும், புரட்சிகளும், மக்கள் போராட்டங்களும் மார்க்ஸின்  “மூலதனம்” பாய்ச்சிய ஒளியில்தான் நடைபோட்டன.
மார்க்ஸ் விடை கண்ட கேள்விகள்
இன்று புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்டன. முதலாளித்துவத்தின் தாயகங்களாக விளங்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இளம்தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கோர்பின் (பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர்), சாண்டர்ஸ் (அமெரிக்க சமூக ஜனநாயகவாதி) போன்ற தலைவர்கள் மற்றும் சோசலிச கட்சிகளின் பின்னால் அவர்கள் திரண்டு வருகின்றனர். இந்தச் சூழல், இந்நாடுகளின் வரலாறுகளுக்குள்ளே மார்க்சின் மூலதனத்தை மீண்டும் அழைத்து வருமா?
150 ஆண்டுகளாக “மூலதனம்” நூலின் உள்ளடக்கத்தை மேற்குலகம் திரித்துப் புரட்டியிருக்கிறது. அந்தத் திரிபுகள் மூலதனம் நூலின் மீது குவிந்து, அதனை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அகற்றுவதென்பது, நமது அறிவுத்துறை பாரம்பரியம் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவற்றையும், மார்க்சிய மைய நீரோட்டம் என்பனவற்றையும் அகற்றுவதாக இருக்கும். இவ்வாறு அகற்றப்படவேண்டியவை நாம் கற்பனை செய்வதை விட மிகவும் அதிகமானவையாக இருக்கும்.
செவ்வியல் பொருளாதாரவியல் 17-ம் நூற்றாண்டில் வில்லியம் பெட்டி-யின் எழுத்துக்களில் தொடங்கி, 1776-இல் பதிப்பிக்கப்பட்ட ஆடம் ஸ்மித்தின் “தேசங்களின் வளங்கள்” என்ற நூலில் உருப்பெற்று, 19-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் ரிக்கார்டோ மரபினரால் வளர்த்துச் செல்லப்பட்டது.
இந்தக் கட்டத்தில், “மதிப்பு என்பது என்ன? உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது? முதலாளித்துவ நெருக்கடிகள் ஏன் நிகழ்கின்றன? ஒரு நாட்டில் இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் போக்கை எப்படி விளக்குவது?” என்பன போன்ற சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் செவ்வியல் பொருளாதாரம் தடுமாறி நின்றது.
கனடா – மாண்டிபா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுத்துறை பேராசிரியர் ராதிகா தேசாய்
மார்க்சின் மூலதனம் அனைத்துக்கும் விடையளித்தது. மதிப்பு என்பது என்ன, உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது, நெருக்கடிகள் ஏன் ஏற்படுகின்றன, இலாப விகிதம் ஏன் குறைகிறது, ஊதியங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடையளித்தது. சுரண்டல் தன்மை வாய்ந்ததும், நெருக்கடிகளிலிருந்து தப்ப முடியாததும், சர்வதேச வல்லாதிக்கத் தன்மை வாய்ந்ததுமான முதலாளித்துவத்தின் இயல்பை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், செவ்வியல்
முதலாளித்துவத்தின் உண்மை இயல்பு உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட்டது. உழைக்கும் வர்க்கங்கள் மென்மேலும் தமது வர்க்கநலன் குறித்துத் தெளிவு பெறத் தொடங்கினர். முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதென்பது மென்மேலும் சாத்தியமற்றதாக மாறத் தொடங்கியது. முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற புதியதொரு பொருளாதாரக் கோட்பாடு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது. சொல்லி வைத்தாற்போல அது வந்து சேர்ந்தது.
மார்க்சின் மூலதனத்தை எதிர்கொள்ள கொச்சைப் பொருளாதாரவியல்!
“மூலதனம்” நூல் வெளியான மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே 1870-இல் இங்கிலாந்தின் ஜெவோன்ஸ் தலைமையிலான அறிவுஜீவிகள் குழு உருவாக்கிய மார்ஜினலிச கோட்பாடு, வேண்டலை (Demand) ஆளும் விதிகளையும் வழங்கலை (Supply) ஆளும் விதிகளையும் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தி, பொருளின் விலை இதன் வழியே தீர்மானிக்கப்படுவதாகக் கூறியது.
இதைப் புரிந்து கொள்ள  “சரக்குகளின் மாய்மாலம்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது அகிலத்தின் மார்க்சியத் திரிபுகளை எதிர்த்துப் போராடிய தோழர் ரோசா லக்சம்பர்க்
முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களில் மனித உழைப்பு சமூகமயமாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு எளிய சட்டையில், அதன் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்கள், பருத்தி-நூல்-துணி, பிளாஸ்டிக்-பட்டன், இரசாயனம்-சாயம், உலோகங்கள்-தையல் எந்திரம் என நூற்றுக்கணக்கான பொருட்களின் உற்பத்தி சங்கிலிகள் ஒவ்வொன்றிலும் ஈடுபடும் உழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான ஏன், இலட்சக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவும் இந்தச் சமூகமயமான உற்பத்திச் சங்கிலியில் ஒரு சிறு பகுதி உழைப்பை செலுத்தி, அதற்குப் பதிலாக ஒட்டு மொத்த சமூக உற்பத்தியில் உருவாக்கப்படும் பொருட்களில் ஒரு பகுதியைத் தமது பங்காகப் பெற்றுக் கொள்கின்றனர்.
இவ்வாறு முதலாளித்துவ சமூகத்தில், உழைப்பின் சமூகத்தன்மை பொருட்களைச் சந்தையில் விற்பதற்கான சரக்குகளாக உற்பத்தி செய்வதன் மூலம் வெளிப்படுகிறது; எனவே, மனிதர்களுக்கிடையேயான சமூக உறவாக வெளிப்படாமல், சரக்குகளுக்கிடையேயான சமூக உறவாகவும் மனிதர்களுக்கிடையேயான பொருளாயத உறவாகவும் வெளிப்படுகிறது; வெளிப்பார்வைக்கு புலப்படாமல் மறைக்கப்படுகிறது; இதிலிருந்து பல போலியான தோற்றங்களும், பொய்யான கருத்துக்களும் பரவி ஆதிக்கம் செலுத்துகின்றன.
மூலதனம் நூலில் சரக்குகளின் மாய்மாலம் (Commodity fetishism) என்ற தலைப்பின் கீழ், கொச்சைப் பொருளாதாரவியல் (Vulgar economics) என்று மார்க்ஸ் சாடிய, எள்ளி நகையாடிய இந்த போலித் தோற்றங்களையும், பொய்யான கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட தொகுப்புதான் மார்ஜினலிசம் எனப்படுவது.
கொச்சைப் பொருளாதாரவியலை உருவாக்கிய குழுவின் தலைவர் வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ்
இந்தப் போலி பொருளாதாரவியல், சரக்கு சந்தையில் விற்கப்படுவதை ஆய்வு செய்யும் போது, பொருளின் உற்பத்தியையும், வாங்குபவரின் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியையும் விட்டு விடுகிறது. விலைகளை ஆய்வு செய்யும்போது விலைகளுக்கு அடிப்படையான மதிப்புகளை புறக்கணிக்கிறது. (இந்த அணுகுமுறையின் வக்கிரத்தைப் புரிந்து கொள்ள ஜுலை, 2017, பு.ஜ. இதழில் வெளியான விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.) உற்பத்தியில் ஈடுபடும் சமூக வர்க்கங்களை புறக்கணித்து விட்டு, தனிநபர்கள் மீது கவனத்தைக் குவிக்கிறது.
“வேண்டலும், வழங்கலும் சமமாகும் போது விலை தீர்மானிக்கப்படுகிறது” என்ற கொச்சையான, அறிவியலுக்குப் புறம்பான சமநிலை கோட்பாடு, முதலாளித்துவத்தில் அடங்கியிருக்கும் உள்ளார்ந்த முரண்பாடுகளையும், நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் நிகழ்ச்சிப் போக்கையும் புறக்கணிக்கிறது. இருப்பினும், நெருக்கடிகள் இருப்பதை மறுக்கவியலாமல், போர், பஞ்சம், மோசடி போன்ற வெளிப்புற காரணிகள்தான் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறது இந்த கொச்சைப் பொருளாதாரவியல்.
பொருளாதாரத்திலிருந்து சமூகவியலைப் பிரிக்கிறார் மேக்ஸ் வேபர் !
19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், பொருளாதாரத்துறையில் பயிற்சி பெற்றவரான மேக்ஸ் வேபர், பொருளாதாரவியலிலிருந்து சமூகவியலைப் பிரித்தெடுத்து ஒரு புதுவிதமான சமூக அறிவியல் உழைப்புப் பிரிவினையைத் தோற்றுவித்தார். “நவீன முதலாளித்துவ சமூகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியாக இயங்குவதால், அவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வாதிட்டு, சமூகவியல் என்ற புதிய துறையைத் தனியாக உருவாக்கினார்.
ஏனென்றால், பொருளாதாரவியல் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவது முதலாளிகளுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஏனென்றால், இந்த வழிமுறையின் மூலம்தான் தமது பொருளாதார நடவடிக்கைகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலேயே, பொருளாதாரத்தின் வேகத்தையும் தன்மையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவர்கள் தங்கள் கையில் வைத்துக்கொள்ள முடியும்.
முதலாளித்துவ சமூகவியல் துறையை உருவாக்கிய மேக்ஸ் வேபர்
இத்தகைய செயற்கையான அறிவுத்துறை பிரிவினை தோற்றுவிக்கும் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆய்வாளர்கள் மேலோட்டமாகவே உணர்ந்திருக்கின்றனர். சமூக அறிவியல் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது குறித்து புலம்புகின்றனர். “துறைகளுக்கிடையேயான ஆய்வு’’, “பல்துறை ஆய்வு” போன்ற வித்தைகளின் மூலம் இந்தக் குறைபாட்டைச் சரிக்கட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், சமூகத்திலிருந்து வரலாற்றைப் பிழிந்து வெளியேற்றியிருக்கும் மேற்கண்ட ஆய்வுமுறை ஏற்படுத்தியிருக்கும் பெருந்தீங்கைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்
மார்க்ஸ் முன்வைக்கும் வரலாற்றியல் ஆய்வு முறை என்ன? வர்க்கங்கள், கட்சிகள், அரசுகள் முதலான அமைப்பாகத் திரண்ட மனிதக் குழுக்கள், தமக்கு வரலாற்றுவழியில் கையளிக்கப்பெற்ற சூழலில் இயங்குகிறார்கள். தமது முடிவுகளாலும் செயல்பாடுகளாலும் எதிர்கால வரலாற்றைப் படைக்கிறார்கள்.
மேக்ஸ் வேபர் போன்றோர் பெற்றெடுத்த புதிய சமூக அறிவியல்களின்படி, “முந்தைய தலைமுறை மனிதர்கள் மேற்கொண்ட வரலாற்று வழியிலான முடிவுகளும், செயல்பாடுகளும், அந்தப் பின்புலத்திலிருந்து பிய்த்தெடுக்கப்படுகின்றன. அவையனைத்தும் வரலாற்றுத் தேர்வுகளின், முடிவுகளின் விளைவுகளே என்பதற்குப் பதிலாக, மண்டியிட்டு நிறைவேற்ற வேண்டிய விதிகளாக நம் முன் நிறுத்தப்படுகின்றன.”
“வரலாற்றின் கருவிகளாக இயங்கும் மனிதர்களின் நடவடிக்கை, இனி வரவிருக்கும் வரலாற்றின் செயற்களத்தை மாற்றியமைத்த வண்ணம் இருக்கிறது என்ற உண்மையையும் மறுக்கிறது. இப்போதைய வரலாற்றை முந்தைய காலத்து கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் உருவாக்கிச் சென்றிருப்பதைப் போல இப்போதைய கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் தமது செயல்களால் எதிர்கால வரலாற்றை உருவாக்குகின்றன என்பதை அது கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை.”
“இத்தகைய சமூக அறிவியல் அனைத்தையும் ஒரு எளிய நிகழ்கால மொழியில் சித்தரிக்கிறது. கட்சிகள் இதைச் செய்கின்றன – அரசுகள் இப்படிச் செய்கின்றன – பணவீக்கம் – வேலையில்லாத் திண்டாட்டம் இப்படிச் செய்கிறது – என்று பேசுகிறது. ஒரு காலகட்டத்தில் தோன்றும் பணவீக்கம் அல்லது வேலைவாய்ப்பின்மை முந்தைய காலகட்டங்களின் பணவீக்கம் அல்லது வேலை வாய்ப்பின்மையிலிருந்து வேறுபட்டது என்பதைப் புறக்கணிக்கிறது.”
வரலாற்று வழியில் தோன்றியிருக்கும் தேசிய வர்க்கங்களும் கட்சிகளும் அரசுகளும் தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளின் மூலமாக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கையாள்கின்றன என்ற உண்மையை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்கிறது இந்த அறிவியல்.  மார்க்ஸின் மூலதனம் கையாளும் ஆய்வுமுறைக்கும் வேபர் வகைப்பட்ட இந்த அறிவியலுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.
நிதி மூலதனத்தின் தோல்வி : அமெரிக்காவில் நடந்த வால் வீதி முற்றுகைப் போராட்டத்தில், முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்துவரும் போரை நிறுத்தக் கோரும் பதாகையை ஏந்திவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 
முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக உற்பத்தி முறைகளிலிருந்து முதலாளித்துவத்தைப் பிரித்துக் காட்டுவது, அது பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்வதாக இருப்பதுதான் என்பதை மார்க்சின் மூலதனம் எடுத்துக் காட்டியது.
முந்தைய சமூகங்களில் (உதாரணம் : இந்திய கிராம சமுதாயம், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை) பயன் மதிப்பை உற்பத்தி செய்யும் மனிதர்கள், சமூக உறவுகளின் அடிப்படையில் (சாதிய உறவுகள் அல்லது பண்ணையடிமை முறை) அவற்றை தமக்குள் பரிமாறிக் கொள்வது முதன்மையாக உள்ளது. சந்தை பரிவர்த்தனைக்கான உற்பத்தி மிகக் குறைந்த அளவே உள்ளது.
மாறாக, முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருட்களின் பயன் மதிப்பை (எ.கா – சட்டையின் பயன்மதிப்பு உடலுக்கு பாதுகாப்பு, அழகு) உருவாக்கும் மனித உழைப்பின் (ஆலை உற்பத்தி, வடிவமைப்பு, தையல்) நேரம், அந்தப் பொருள் சந்தையில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பைத் தீர்மானிக்கிறது.
அதாவது உழைப்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட பொருட்களுக்குள் உறைந்திருக்கும் உழைப்பின் அளவீடுதான் அது.
முதலாளிகளுக்கிடையேயான சந்தைப் போட்டி, புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் பொருட்களின் மதிப்பு, சமூகரீதியில் அவசியமான அளவுக்கு வீழ்த்தப்படுகிறது. அதாவது அவற்றின் உற்பத்திக்குத் தேவையான சமூகரீதியிலான உழைப்பின் அளவு தொடர்ந்து குறைந்து செல்கிறது; சமூக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது, புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள் என உற்பத்தி சக்திகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.
முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான சுரண்டல் உறவு தோற்றுவிக்கும் முரண்பாடு – ஒற்றுமை, முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் தேசிய அரசுகளின் கீழ் திரண்டு செயல்படும் மூலதனங்களுக்கிடையேயான போட்டி மற்றும் ஒற்றுமை என்ற இரண்டு வகை முதலாளித்துவ முரண்பாடுகளை உள்ளடக்கிதான் முதலாளித்துவம் மதிப்பை உற்பத்தி செய்கிறது. தனக்கேயுரிய அராஜகம் மற்றும் அநீதியின் காரணமாக, ஒரு நெருக்கடி முடிவதற்குள் இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடுகிறது. தன்னுடைய இருத்தலுக்கான நியாயத்தையும் இழக்கிறது.
மூலதனத்தின் ஆய்வுமுறையை மறுக்கும் முதலாளித்துவ மார்க்சியர்கள் !
வரலாற்றுரீதியாக முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பாக அமைவதும், முரண்பாடாக இருப்பதும், அதனை முன்னோக்கி செலுத்தும் சக்தியாக விளங்குவதும், அது, “பரிவர்த்தனை மதிப்பை” உற்பத்தி செய்கிறது என்பதுதான். புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடுகள், இந்த தனிச்சிறப்பான தன்மையை முதலாளித்துவத்திடமிருந்து அகற்றிவிடுவதால், முதலாளித்துவம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாகவும், நிலையானதாகவும், நிரந்தரமானதாகவும், மாற்றமில்லாததாகவும் நமக்கு காட்டப்படுகிறது. இதன் காரணமாக நெருக்கடிகள், போர்கள், ஒடுக்குமுறைகள் நிரம்பிய முதலாளித்துவத்தின் கொந்தளிப்பான வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான மையச் சரடை நாம் இழந்து விடுகிறோம்.
அறிவுத்திறன் வறண்டுபோன மேற்கண்ட சமூக அறிவியல்களின் புரிதல்கள், மார்க்சின் மூலதனத்துக்கு அருகில் நிற்பதற்குக் கூட அருகதையற்றவை. ஆனால், மார்க்சியவாதிகள் எனப்படுவோரே, எதிரிகளின் படைக்கலன்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதிய செவ்வியல் பொருளாதாரம் என்ற டிரோஜன் குதிரையை, மார்க்சிய கோட்டைக்குள் உருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களே!
மார்க்சியம் தோன்றிய ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதனால் ஈர்க்கப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் வந்து சேர்ந்த அறிவுத்துறையினர் பலர் தமக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்பட்ட கொச்சைப் பொருளாதாரவியலைத் தம்மோடு இழுத்து வந்தார்கள். இளம் வயதிலேயே பதிய வைக்கப்பட்ட இந்தக் கல்வி, அதற்குரிய விளைவை ஏற்படுத்தியது.
அறிவியல் அடிப்படையிலான மார்க்சிய ஆய்வுமுறையைக் கற்று, தமது முந்தைய கொச்சைப் பொருளாதாரக் கல்வியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மார்க்சியத்துக்கு நேரெதிரான அந்தக் கொச்சைப் பொருளாதாரக் கோட்பாடு மற்றும் ஆய்வு முறையியல் சட்டகத்துக்குள் மார்க்சியத்தைப் பொருத்துவதில் அவர்களில் சிலர் ஈடுபட்டனர்.
1889-ல் உருவாக்கப்பட்டு 1916 வரை நீடித்த இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்திலேயே இந்தப் போக்கு ஆரம்பித்திருந்தது.
முதலாளி தான் குவித்திருக்கும் பணத்தைப் பயன்படுத்தி உற்பத்திச் சாதனங்களையும், கூலி உழைப்பையும் சந்தையில் வாங்கிய பிறகுதான் உற்பத்தி நடைபெறுகிறது, தொழிலாளியிடமிருந்து உபரி உழைப்பைக் கறப்பதன் மூலம் போடப்பட்ட முதலீட்டை விட அதிக மதிப்பை உள்ளடக்கிய சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சரக்குகளை சந்தையில் விற்றுப் பணமாக மாற்றி, அந்தப் பணம் மீண்டும் மூலதனமாக மாற்றப்பட வேண்டும். இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற்றால்தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்க முடியும்.
இந்த மூலதனத்தின் மறுஉற்பத்தி சுற்றோட்டம் பற்றிய பகுப்பாய்வு, மார்க்சின் இறப்புக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளிலிருந்து தொகுத்து எங்கெல்சால் “மூலதனம்” 2-ஆம் பாகமாக வெளியிடப்பட்டது. இந்தப் பகுப்பாய்வுக்காக மார்க்ஸ் உருவாக்கிய முறையியல், மூலதன மறுஉற்பத்திச் சுற்றோட்டத்தில் அடங்கியிருக்கும் முரண்பாடுகளையும் விகிதாச்சார குலைவையும் வெளிப்படுத்துகிறது.
ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளின்போதே, இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை மறுதலித்து, புதிய செவ்வியல் பொருளாதாரவாதமான முதலாளித்துவ உற்பத்தியே அதற்கான சந்தை வேண்டலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை தூக்கிப்பிடித்தனர். இதை எதிர்த்து ரோசா லக்சம்பர்க் போராடினார். அறிவியலையும், வரலாற்றையும் பிரிக்கும் பாசிட்டிவிசமாக இரண்டாம் அகிலத்தின் மார்க்சியம் மாறியதற்கும்கூட இந்தப் போக்கு பின்புலமாக இருந்தது.
இன்று இது, “மார்க்சிய விரோத மார்க்சியப் பொருளாதாரவியல்” ஆக வளர்ந்து, “மூலதனம்” நூல் குறித்துக்கொச்சைப் பொருளாதாரவியல் அடிப்படையிலான பல அபத்தமான கேள்விகளை முன்வைத்து விவாதிக்கிறது.
முதலாவதாக, உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் மதிப்பு, சந்தை போட்டியில் விலையாக எப்படி உருமாறுகிறது என்ற பிரச்சினை மூலதனத்தில் விளக்கப்படவில்லை என்ற  வாதம்.
இரண்டாவதாக, முதலாளித்துவ உற்பத்தியில் மிகை உற்பத்தியும் வேண்டல் பற்றாக்குறையும் இல்லை என்ற அடிப்படையிலான வாத பிரதிவாதங்கள்.
மூன்றாவதாக, இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் பிரச்சினையை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை என்ற வாதம்.
நான்காவதாக, மார்க்சின் பணம் பற்றிய கோட்பாடு சரக்கு அடிப்படையிலானது என்ற வாதங்கள்  என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
இன்னும் சில, ‘மார்க்சிய’ ஆய்வாளர்கள், “பொருளாதார நிர்ணயவாதம்” குறித்து எச்சரிக்கின்றனர். “பொருளாதார நிர்ணயவாதம்” என்ற பேச்சே பொருளாதாரவியலைப் பிற சமூக அறிவியல்களிலிருந்து பிரித்து ஆய்வு செய்யும் முதலாளித்துவ அணுமுறையில்தான் சாத்தியமாகும்.  “மூலதனம்” நூலுக்கும் இத்தகைய அணுகுமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மேலே சொன்ன போக்குகளின் ஊடாக, “மூலதனம்” நூலைப் பல பத்தாண்டுகளாக மாணவர்களுக்குக் கற்பித்தவர்களான சில நட்சத்திர அறிஞர்கள், “மூலதனம்” நூலில் வரலாறே இல்லை என்று சாதிக்கும் கண்கொள்ளாக் காட்சியும் நமக்குக் காணக் கிடைக்கிறது.
மூலதனத்தில் உறைந்திருக்கும் வரலாற்றை மீட்போம்! 
முதலாளித்துவத்திலிருந்தும் மீள்வோம்!
சரி. இன்றைக்கு மூலதனம் நூலினைப் படிக்க விரும்புகிறவர் மேற்கூறியவற்றிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும்? தன்னோடு சேர்த்து ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இந்த பூமிப்பந்தையும் அழிவுக்குக் கொண்டு செல்வதற்கு முன் முதலாளித்துவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால்,  “மூலதனம்” கற்பிக்கும் ஆய்வின் வழியிலான வரலாற்றை நாம் படைக்க வேண்டும். மூலதனம் மீண்டும் வரலாற்றுக்குள் நுழைய வேண்டுமானால், மூலதனம் நூலுக்குள் உறைந்திருக்கும் மூலதனத்தின் வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
இதற்கு வரலாற்று நீக்கம் செய்யப்பட்ட பொருளாதாரவியல் கல்வியையும், சமூக அறிவியல் கல்வியையும் உங்கள் மூளையிலிருந்து கழற்றி வாசலிலேயே விட்டுவிட்டு, அதன் பின்னர் மூலதனம் நூலுக்குள் நுழையுங்கள். தற்போது இருக்கும் இடத்துக்கு மனிதகுலம் எப்படி வந்து சேர்ந்தது என்பதையும், எத்தகைய எதிர்காலத்தை நோக்கி நாம் செல்லக்கூடும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு அந்தக் கல்விகள் ஒருபோதும் உதவாது. மார்க்ஸ் கற்பிப்பதைப் படியுங்கள். “மூலதனம்” நூல் கடினமானது, என்று சொல்பவர்களின் பேச்சைக் கடுகளவும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் சொல்ல வருவதெல்லாம், “நான் எழுதிய புத்தகத்தை முதலில் படியுங்கள்” என்பதுதான்.
நம்மிடம் இருக்கும் அவகாசம் மிகக் குறைவு, அதை “மூலதனம்” வாசிப்பதற்குச் செலவிடுவோம். ஒரு அறிமுக நூலைப் படிப்பது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், எர்னஸ்ட் மன்டேலின் அறிமுகத்தைப் படியுங்கள். அது சுருக்கமானது. இக்கட்டுரையில் நாம் விவரித்துள்ள பிரச்சினைகள் இல்லாதது.
நினைவிற்கொள்ளுங்கள். மூலதனம் நூல் ஒரு தொழிலாளர் பத்திரிகையில் (1872-இல் பிரெஞ்சு தொழிலாளர் பத்திரிகையில்) தொடராக வெளியிடப்பட்டிருக்கிறது.  நீங்கள் இன்றைய தொழிலாளி வர்க்கம். வரலாற்றின் உள்ளே வாருங்கள் என்று உங்களை வரவேற்கும் அழைப்பிதழ்தான் – மூலதனம்.
கட்டுரையாளர், பேராசிரியர் ராதிகா தேசாய், கனடாவின் வின்னிபெக் மாநிலத்தில் உள்ள மான்டிபா பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வுத் துறை பேராசிரியர். 150-வது ஆண்டில் மார்க்சின் “மூலதனம்’’: “மூலதனத்தில்” வரலாறும், வரலாற்றில் “மூலதனம்” நூலும் –  என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது. அவசியமான இடங்களில் மட்டும் வாசகர்களின் புரிதலுக்காகக் கூடுதல் விளக்கங்கள் சேர்த்து தரப்பட்டுள்ளது.
மொழியாக்கம்:  அப்துல்                                                                                                                நன்றி:வினவு,    

வியாழன், 26 அக்டோபர், 2017

கந்துவட்டி: அரசுதான் குற்றவாளி !


சக்கிமுத்து குடும்பத் தற்கொலையை பார்த்து தமிழகம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அந்தக் குழந்தை கையில் தின்பண்டத்துடன் தீயில் வேகும் காட்சி இப்போதைக்கு நம்மை விட்டு அகலாது. இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொலைக்காட்சிகள் முதல் நடுப்பக்க கட்டுரைகள் வரை பேசப்படுகின்றன.
நீட் அனிதா தற்கொலையின் போது அந்த மாணவி ஏன் வேறு படிப்பை தெரிவு செய்யவில்லை, அவளது தாழ்வு மனப்பான்மைக்கு கவுன்சிலிங் கொடுத்திருக்க வேண்டும், தரமான கல்வி – தேர்வு பயிற்சிக்கு தமிழகம்  தயாராக வேண்டும் என்று துக்க வீட்டில் சேட்டு கல்யாண விருந்தின் சரி தவறுகளை பீறாய்ந்தார்கள் பாஜக, அதிமுக மற்றும் கேரியருக்கு கொலை வெறியோடு வாரியராக அலையும் நடுத்தர வர்க்க அறிஞர்கள்.
கந்து வட்டிக்கும் அதே பீறாய்தல் தொடர்கிறது. இசக்கி முத்து ஏன் கடன் வாங்கினார், விரலுக்குத் தகுந்த வீக்கமாக செலவை அமைத்துக் கொள்ள வேண்டும், அறியாமை, குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடாமை, ஆன்மீக எண்ணம் குறைதல் … இப்படி சில பல விட்டைகளை பாஜக, அதிமுக மற்றும் கருத்து கந்தசாமி – காயத்ரிக்கள் இறைத்து வருகின்றனர்.

இசக்கி முத்துவின் முடிவுக்கு தள்ளிய கலெக்டர், காவலர்கள் மீது பலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். கந்து வட்டி தடைச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் என்கின்றனர். அவ்வளவுதானா?
“தி இந்து” கட்டுரை ஒன்றில் (25.10.2017) தெரியவரும் ஒரு செய்தியைப் பார்ப்போம். தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கந்து வட்டி கொடுமையால் மட்டும் சுமார் 823 பேர் தற்கொலை செய்ததாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்திலும் கூட இந்த மரணங்கள் நிகழ்வதாக கந்துவட்டிக்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் அமைப்பாளர் ரவி கூறுகிறார்.
இந்தியா ஒரு ஏழை நாடு. எல்லா ஏழை நாடுகளிலும் கடன் இல்லாமல் மக்கள் வாழ்க்கை இல்லை. குறிப்பாக 90 -களுக்குப் பிறகு உலகமயமாக்கத்தின் வருகைக்கு பிறகு கடன் என்பது  மிகவும் அதிகரித்து வருகிறது. கல்வி, மருத்துவம், வேலை ஆகியவற்று மக்கள் கடன் வாங்கியே முயற்சிக்கிறார்கள். அன்றாடம் சுமார் 500 ரூபாய் வருவாய் பெறும் ஒரு குடும்பம் தனது குழந்தைகளின் ஆண்டு கட்டணத்திற்காகவும், அவ்வப்போது வரும் பெரும் நோய்கள் சிகிச்சைகளுக்காகவும் பெருந்தொகையை கடனாக வாங்க வேண்டியிருக்கிறது. துண்டு துக்காணி நகைகளை கடன் வைப்பது முடிந்ததும் வேறு வழியின்றி கந்து வட்டிக்காரர்களிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது.
தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசு பள்ளிகளில் படித்தால் எதிர்காலம் இல்லை என்பது மிகத்தீவிரமாக மக்களிடம் உறுதியடைந்திருக்கிறது. தனியார் கல்வியை அறிமுகம் செய்து மிகத்தீவிரமாக அமல்படுத்தி வரும் அரசு அன்றி இதில் மக்களை எப்படிக் குற்றம் சாட்ட முடியும்?
தலையில் அடிபட்ட ஒரு நபரை அருகாமை தனியார் மருத்துவமனையில் அவசரம் கருதி சேர்க்கிறார்கள். முதல்வர் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், அதில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு எந்தெந்த சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தலை சிகிச்சை வராது எனும் போது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு வேறு அரசு மருத்துவமனைகளுக்கு போக முடியாது. வேறு வழி? கடன்தான்.
அரசு பேருந்துகளில் ஐயாயிரம் ரூபாய் தற்காலிக சம்பள வேலைக்கே சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் அறிஞர்கள், அந்த இளைஞர்கள் வேறு வழியின்றியே அதை கொடுக்கிறார்கள், அப்படிக் கொடுத்தாலும் அந்த வேலையில் நிம்மதியோ இல்லை உத்திரவாதமான வருமானமோ இல்லை என்பது தெரியாது.

பள்ளி இறுதி கல்வி முடித்த பிறகு பிள்ளைகள் ஆசைப்படும் கல்வியை அளிக்கவோ, இல்லை குடும்பத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் கனவுடன் கடன் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்வது என்பது பெற்றோர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
இதன்றி நுகர்வுக் கலாச்சாரம், திருமணங்கள். திருமணத்திற்கு குறைந்தபட்சமாக செலவு செய்வதாக இருந்தாலும் ஓரிரு இலட்சம் இன்றி சாத்தியமில்லை. நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வங்கி, அலுவலக கடன்கள் மூலம் வீடு, கார், நிலம் வாங்குகிறார்கள். பிறகு அதற்கே தமது ஆயுளை தாரை வார்க்கிறார்கள்.
சாதாரண மக்களுக்கு அந்த வங்கி, அலுவலக வாய்ப்பில்லை. கட்டிட வேலை மற்றும் திருப்பூரில் தொழிலாளியாக பணியாற்றிய இசக்கி முத்துவுக்கு ஐசிஐசிஐ வங்கியிலோ, இல்லை ஸ்டேட் வங்கியிலோ கடன் வாங்குவது குறித்து கனவு கூட  காண முடியாது.
மோடியின் பணமதிப்பழிப்பு, பொருளாதார வீழ்ச்சி, ஜி.எஸ்.டி வரி தாக்குதல் காரணமாக உழைக்கும் மக்கள் அடைந்துள்ள துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த தீபாவளிக்கு கடன் வாங்கித்தான் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று இலட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கருதவில்லையா?
பிறகு அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ்களுக்கு தர வேண்டிய லஞ்சம். நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தைக் கூட முழுசாக பார்க்க முடியாத நாடு இது. அதை வங்கியில் போட்டாலும் அந்தக் கழிவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். இது போக விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, ஆட் குறைப்பு என்று நமது மக்களை அச்சுறுத்தும் ஆயுதங்கள் ஏராளம்.
கந்து வட்டி கும்பலின் நெட்வொர்க்கில் தொந்தி வளர்க்கும் காவல் துறையை கூண்டோடு ஒழிக்காமல் கந்து வட்டிக் கும்பலை எப்படி ஒழிக்க முடியும்? இந்த வலைப்பின்னலில் ஓட்டுக் கட்சிகளின் வட்டார பிரமுகர்களும் உண்டு. அதிமுக எனும் கொள்ளைக் கூட்டத்தின் ஆட்சியில் கந்து வட்டிக் கும்பல்கள் இன்னும் வீரியமாக செயல்படுகின்றன என்பதை மிகவும் சாதாரண உண்மையில்லையா?
பொருளாதாரத்தில் ஏழ்மை, வருமானமோ வாழ்க்கைக்கு போதுமானது அல்ல, கடனோ கந்து வட்டியில் மட்டும்…. பிறகு இசக்கி முத்து சாகாமல் என்ன செய்வார்?

புதன், 25 அக்டோபர், 2017

கேள்வி கேட்கும் அதிகாரம்

இன்றைய அரசக் கட்டளை. 


"தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கும் அதிகாரம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை "

 -பிரதமர் மோடி
இதுவரை இந்தியா மக்களாட்சி நடக்கும் நாடகத்தான் இருந்தது.மோடி ஆட்சி வந்ததுமே ,ஆட்சியைப் பற்றி விமரிசிப்பவர்கள் தேச விரோதிகளாகி விட்டனர்.

யாரும் அரசுத் திட்டங்களை குறை சொல்லி பேச,சமூக வலைத்தளங்களில் இடுகை இட மிரட்டல் என்றாகி காவி சர்வாதிகார நாடாக இந்தியா மாறிவருகிறது.

பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத்துக்கு மட்டும் பாஜக சொல்கின்ற தேதியை அறிவிக்க காத்திருக்கிறது.

இது எவ்வளவு பெரிய மோசடித்தனம்.தேர்தல் ஆணையம் சில காலமாகவே தமிழகத்தில் அதிமுகவுக்கும்,இந்திய அளவில் பாஜகவுக்கும் இணக்கமாகவே நடந்து வருகிறது சாதாரண வாக்காளர்களுக்கு கூட தெரிந்த உண்மை.


ஆர்.கே நகர் இடைத்தேர்தல் 86 கோடிகள் வாக்காளர்களுக்குப்பட்டுவாடா என்று சொல்லிதான் நிறுத்தப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த முறைகேட்டின்  மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அடுத்து தங்களுக்கு சாதகமாக வந்தவனுடன் தேர்தல் டிசம்பரில் என்கிறது ஆணையம்.

எதற்காக நிறுத்தப்பட்டதோ அதற்கான கரணம் இன்னும் நிலுவைதான்.

"நாங்கள் பட்டுவாடா நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கூறி தமிழக அரசுக்கு பெயர்களுடன் அறிக்கை அனுப்பி விட்டோம் "என்கிறது ஆணையம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிஉடன்பட அமைசசர்கள் பெயர்கள் உள்ள அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எப்படி எடுக்கும்.

ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தணடனை வழங்கப் பட்டதா என்று கண்காணிக்க வேண்டிய,தண்டனைவழங்க அறிவுறுத்த வேண்டிய  பொறுப்பும்,கடமையும்  தேர்தல் ஆணையத்துக்கு கிடையாதா?
இல்லை என்றால் இந்த தேர்தல் தடை ஏன்?நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் ஏன்?
மொத்தத்தில் தேர்தல் ஆணையர்கள் வீண் என்றுதானே எண்ணத் தோன்றுகிறது.

தற்போது நடந்த உள்ளாட்சி,கூட்டுறவு தேர்தல்களில் சுத்தமாக பாஜக படு தோல்வியை சந்தித்தது அதனால் மோடியும் ,பாஜக அரசும் வரும் சட்டமனறத்தேர்தலில் வெற்றி பெற குஜராத் மக்களை தயார் செய்ய பல சலுகைகளை அறிவிக்கவே தேர்தல் ஆணையத்தை தேர்தல் ஆணையத்தை பணித்து தேர்தல் தேதியை தாமதமாக அறிவிக்க வைத்தது.

குறிப்பிட்ட கட்சி சொல்லுவதை கேட்டு ஆடும் தேர்தல் ஆணையம் எப்படி நடுநிலை கொண்டதாக இருக்கும்,இயங்கும்.?

மோடியும் பல சலுகைகளை அறிவித்து விட்டார்.
குஜராத் பாஜக அரசும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு ஊதிய உயர்வை,பல சலுகைகளை வழங்கி விட்டது.

எதிர்ப்பு குரல் எழுப்பிய படேல் சமுதாய போராட்டக்குழு உறுப்பினர்கள் இருவரை விலைக்கு வாங்கி பாஜகவில் இணைத்து அங்கும் குழப்பத்தை உண்டாக்கி விட்டாயிற்று.

இனி தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கலாம்.

அதனால்தான் தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள்  யாரும்  கேள்வி கேட்கக்கூடாது என்று மோடி திருவாய் மலர்ந்துள்ளார்.
கேள்வி கேட்க முடியா அளவு தேர்தல் ஆணையம் நடந்து கொண்டிருக்கிறதா?

குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தால் அங்கு நடக்கிற வெள்ள நிவாரணப்பணிகள் நின்று விடுமாம்.
இது தேர்தல் ஆணையம் சொல்கின்ற சொத்தைக் காரணம் .
வெள்ளம் முடிந்து இயல்பு வாழ்க்கை இருக்கும் நிலையில் இது வேடிக்கையானது.

மேலும் தேர்தல் அறிவித்தல் புதிய திட்டங்கள்,சீரமைப்புகள் தான் கூடாது.ஆனால் ஏற்கனவே உள்ள,நடைபெறும்  பணிகளுக்கு எந்தத்தடையும் கிடையாது.
சாதாரணமானவர்களுக்கே தெரிந்த இந்த விதி ஆணையர்களுக்கு தெரியாமலா இருக்கும்.

அப்படியே இருந்தால் கூட தேர்தல் நடைமுறை களில் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு விலக்கு என்று குறிப்பிட்டாலே போதுமே.
தேதியை அறிவிக்காமல் போனதற்கு நல்ல காரணத்தை தேர்தல் ஆணையம் இனி கண்டு பிடித்து வைத்துக்கொள்ளட்டும்.


ஆனால் மோடி அரசை எதிர்த்து பேசக் கூடாது,தவறு செய்யும் நடுநிலை நிறுனங்கள் எனும் ரிசர்வ் வங்கி,தேர்தல் ஆணையம் போன்றவற்றின் மோசமான செயல்பாடுகள் குறித்து யாரும் வாயைத்திறந்து கேள்வி கேட்கக் கூடாது என்பது வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோது போட்ட வாய்ப்பூட்டு சட்டம் மறுவடிவு என்றுதான் உணர முடிகிறது.

தற்போதைய திரைப்படம் மோடி அரசின் வரியை விமரிசித்தால் அதற்கான பதிலை தர வக்கில்லாமல் படத்தயாரிப்பாளர்,நடிகர்களை மிரட்டுவது என்ன வகை அரசியல்,மக்களாட்சி.
இட்லிக்கும்,மருந்துக்கும் ஜி.எஸ்.டி,வரியை போட்டவர்கள் சாராயத்துக்கு போடாதது ஏன்?என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைதான் அவர்கள் இந்த உளறல்களுக்கு மூலக்காரணம்.

எதற்கெடுத்தாலும் முறையின்றி வெட்டி நியாயம் பேசும் தலைவர்கள் இருப்பது மக்கள் விரோத மோடி அரசை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அம்பலப்படுத்த வேறு கட்சி ஆட்களே தேவைப்படா நிலையை உண்டாக்கியுள்ளது.

அது தொடரட்டும்.இந்திய அளவில் மோடி,அமித் ஷா,தமிழகத்துக்கு தமிழிசை,ஏச்சு.ராஜா பணிகள் தொடரட்டும்.
  

சனி, 14 அக்டோபர், 2017

ஊழல் எதிரி மோடி...!

பிஜேபி அமித் ஷா & மோடி தொடர்புடைய குஜராத் மாதவ்புரா வங்கி ஊழல்...
மாதவ்புரா கூட்டுறவு வங்கி குஜராத்தின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக இருந்தது. 2000ஆம் ஆண்டில் அதில் சுமார் 50 ஆயிரம் முதலீட்டாளர்கள் இருந்தனர். வங்கியிடம் சுமார் 1300 கோடி ரூபாய் இருந்தது. கேதன் பரேக், மும்பையின் ஸ்டாக் புரோக்கர்.
மாதவ்புரா வங்கி, கேதன் பரேக்குக்கு 1030 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இன்னும் சில புரோக்கரேஜ் நிறுவனங்களுக்கும் கடன் வழங்குகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, பங்குச் சந்தை தரகர்களுக்கு வங்கிகள் 15 கோடிக்கு மேல் கொடுக்கக்கூடாது.
மாதவ்புரா வங்கியின் பணத்தைக்கொண்டு கேதன் பரேக் உள்ளிட்டவர்கள் 2001 ஆரம்பத்தில் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டபோது செமையாக காசு பார்த்தார்கள்.
ஆனால் பங்குச்சந்தை ஊழல் வெடித்தது. சரிவு ஏற்பட்டது.
மாதவ்புரா வங்கி கேதன் பரேக்குக்கு பெரும்தொகை கடன் கொடுத்த விவகாரம் 2001 மார்ச்சில் வெளியாகிறது.
வங்கியில் பணம் போட்டவர்கள் திருப்பி எடுக்க வருகிறார்கள். ஆனால் பணம் இல்லை.


ரிசர்வ் வங்கி ஆய்வு செய்கிறது. வங்கியின் நிர்வாகிகள், தமது இஷ்டத்துக்கு தமக்குத் தெரிந்தவர்களின் பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வங்கியிடமிருந்த 1300 கோடி ரூபாய் மதிப்பில் 1200 கோடி ரூபாய் ஸ்வாகா என்று தெரிகிறது. மார்ச் 14ஆம் தேதி நிர்வாகக் குழு கலைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் சார்பில் நிர்வாகி நியமிக்கப்படுகிறார். ஆகஸ்ட் மாதம், பத்தாண்டுகளில் வங்கியை சீரமைக்க ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது.
வங்கியின் சேர்மன் ரமேஷ் சந்திர பரேக் என்பவரின் மகன் வினீத் சந்திர பரேக் என்பவர் பங்குச் சந்தையில் 50 கோடி ரூபாய் இழந்தார். அவருக்கு வங்கிப் பணம் தரப்பட்ட விவகாரம் பின்னர் தெரிய வந்தது. (11 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த (!) வினீத் சந்திர பரேக் கைது செய்யப்பட்டார் என்று 2016 ஜனவரி 8ஆம் தேதி செய்திகள் தெரிவிக்கின்றன.)
முக்கிய மோசடி செய்தவர் கேதன் பரேக். 1030 கோடி ரூபாய். வழக்கு தொடரப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 380 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று அவர் சொல்கிறார். நீதிமன்றமும் அனுமதித்து பெயிலில் விடுகிறது.
அவர் சொன்னபடி பணம் தரவில்லை என்பதால் அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் 2003இல் மாதவ்புரா வங்கி உச்சநீதிமன்றத்தில் ஒரு எஸ்எல்பி மனு போடுகிறது.
அட பரவாயில்லையே என்கிறீர்கள் இல்லையா...? இனிதான் இருக்கிறது திருப்பம்.
*
ஊழல் விவகாரம் வெடித்து, நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாக்க் குழு அமைக்கப்படுகிறது அல்லவா? அதில் ஒரு டைரக்டராக இருந்தவர் அமித் ஷா. ஆமாம், இன்றைய பாஜக தலைவர் அமித் ஷாவேதான்.
இப்போதைக்கு இந்த விஷயத்தை இங்கே நிறுத்தி விட்டு இன்னொரு விஷயத்துக்கு வருவோம்.
*
2005 ஆகஸ்ட் 1.
குஜராத் மாநில அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், சிஐடி, குல்தீப் ஷர்மா மூன்று பக்க அறிக்கை ஒன்றைத் தயாரிக்கிறார், அதை குஜராத் மாநில தலைமைச் செயலர் சுதீர் மன்கட் என்பவருக்கு அனுப்புகிறார். ஊழல் ஒன்று நடந்திருப்பதற்கான ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதை நிறுவி, அது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.
அரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஷர்மா உடனே சிஐடி டிபார்ட்மென்ட்டிலிருந்து தூக்கியடிக்கப்படுகிறார். குஜராத் ஆடு மற்றும் கம்பளி மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்!
ஊழல் குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா? அமித் ஷா மீது.
ஆமாம், இன்றைய பாஜக தலைவர் அமித் ஷா மீதுதான்.
அன்று குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அவரது வலது கரமாக – உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மீதுதான் அந்தக் குற்றச்சாட்டு.
“நா காவூங்கா, நா கானே தூங்கா” (நான் ஊழல் செய்ய மாட்டேன், செய்ய விடவும் மாட்டேன்) என்று இன்று முழங்குகிற மோடி, தனது அரசின் காவல் துறை அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை டிஜிபியை தூக்கியடித்தார் என்பது வரலாறு.
ஐந்தாண்டுகள் அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அமித் ஷா மீதான குற்றச்சாட்டு என்ன தெரியுமா? மாதவ்புரா வங்கியை நாசம் செய்த முக்கியக் குற்றவாளி கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட லஞ்சம் வாங்கினார் என்பதுதான். அதற்கான ஆதாரங்களை தெளிவாக அறிக்கையில் வைத்திருந்தார் சிஐடி டிஜிபி.
1030 கோடி ரூபாய் மோசடி செய்த கேதன் பரேக் 380 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லி திருப்பித்தர ஆரம்பித்திருந்தார். ஆனால் மூன்றாண்டு காலத்தில் அந்தப்பணம் வராததால், அவருடைய பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று மாதவ்புரா வங்கி உச்சநீதிமன்றத்தில் எஸ்எல்பி (SLP (criminal) No. 1701/2003) போட்டது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அமித் ஷா இங்கே எங்கே வருகிறார் என்பதை சிஐடி டிஜிபி வைத்த அறிக்கையிலிருந்து விவரமாகப் பார்ப்போம்.
மாதவ்புரா வங்கியின் டைரக்டராகவும் இருந்த அமித் ஷா, 2004 ஆகஸ்ட் 31ஆம் தேதி, வங்கி அதிகாரிகள், காவல் துறை டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து ஒரு கூட்டம் நடத்துகிறார். “கேதன் பரேக் மூன்றாண்டுகளுக்குள் 380 கோடி செலுத்தவில்லை. எனவே அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்கிறார்.
ஆனால் அக்டோபர் முதல் வாரத்தில் கிரீஷ் தானி என்கிற அரசியல் தரகர் ஒருவர் அமித் ஷா - கேதன் பரேக் இடையே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எஸ்எல்பி-யை மாதவ்புரா வங்கி திரும்பப் பெற்றுக் கொள்கிறது!! உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்கிறது! ஜாமீன் போய்விடுமோ என்ற அச்சம் தேவையில்லாமல் சுதந்திர மனிதர் ஆகிறார் கேதன் பரேக்.

ஆக, ஆகஸ்ட் மாதம் கேதன் பரேக் பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய அமித் ஷா, அக்டோபர் மாதம் வழக்கை ரத்து செய்கிறார் என்றால், இடையில் நடந்தது என்ன?
2004 அக்டோபர் 1ஆம் தேதி கேதன் பரேக் அகமதாபாத் வருகிறார். கேதன் பரேக் – தானி – அமித் ஷா ஆகிய மூவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை முன்வைத்து, மூவரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கினார். அமித் ஷா, குஜராத் அரசில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். எனவே அவருடைய நடத்தை குறித்த எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. எனவே மாதவ்புரா வங்கி விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்து வரும் சிபிஐ இதையும் விசாரிக்க வேண்டும் என்கிறார்.
கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கினார் என்பதற்கு என்ன ஆதாரம்?
கேதன் பரேக்கை விடுவிக்க, அமித் ஷா இரண்டரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று அகமதாபாதைச் சேர்ந்த ஹஸ்முக் ஷா என்பவர் எழுத்துவடிவிலான புகார் கொடுத்தார். அந்தப் புகாரைத் தொடர்ந்துதான் விசாரணை நடைபெற்று, ஆகஸ்டில் கேதன் பரேக்குக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு அக்டோபரில் அவருக்கு ஆதரவாக வழக்கு திரும்ப்ப் பெறப்பட்டது என்பதை சிஐடி அறிக்கை தெளிவாகக் காட்டியது.
ஆனால் பத்தாண்டுகள் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் அமித் ஷாவைக் காப்பாற்றியவர் நரேந்திர மோடி.
கேதன் பரேக்குக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் – இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி
சிறிதும் பெரிதுமான முதலீட்டாளர்களைக் கொண்டிருந்த மாதவ்புரா வங்கியின் லைசென்சை ரிசர்வ் வங்கி 2013இல் ரத்து செய்கிறது. கூட்டுறவு வங்கிகளின் ஊழல் என்று வரும்போது இப்போதும் ரிசர்வ் வங்கியால் உதாரணம் காட்டப்படுவது மாதவ்புரா வங்கிதான்.
*
கொசுறாக இன்னும் பல தகவல்களை சொல்லலாம்.
1030 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு 390 கோடி ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு இந்த வழக்கில் தண்டனையே இல்லாமல் தப்பி (வேறு வழக்கில் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும் தண்டனை அனுபவித்து) சுதந்திரமாக உலவுகிறார் கேதன் பரேக்.
*
2001 மார்ச் 9ஆம் தேதி ஊழல் விவகாரம் வெடித்ததும் வங்கியின் தலைவர் ரமேஷ், மும்பை மேலாளர் ஜகதீஷ் பாண்டியா இருவரும் கைது செய்யப்படுகிறார்கள். இதன் முக்கிய சதிகாரராக இருந்த வங்கியின் சிஈஓ தேவேந்திர பாண்டியா ஏப்ரல் 26ஆம் தேதி கைது செய்யப்படுகிறார்.
ஒன்றரை மாதம் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த தேவேந்திர பாண்டியா, எப்படியாவது பெயில் வாங்கி விடலாம் என்ற எண்ணத்துடன் இந்தோரிலிருந்து அகமதாபாதுக்கு இரவில் வந்து சேர்ந்தவரை கைது செய்தோம் என்றார் அப்போதைய உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா. இந்த ஹரேன் பாண்டியா யார், என்ன ஆனார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?
*
2001இல் குஜராத்தில் முதல்வராக இருந்தவர் கேஷுபாய் படேல். ஹரேன் பாண்டியா குஜராத்தில் விரைவாக வளர்ந்து வந்த இளம் பாஜக - ஆர்எஸ்எஸ் தலைவர். பாஜக அரசு ஊழலில் சிக்கி செல்வாக்கை இழந்து கொண்டிருந்த நேரத்தில்கூட தனது தொகுதியில் தொடர்ந்து அபார வெற்றி கண்டு வந்தவர். படேலின் வலது கரமாக இருந்தவர்.


2001 அக்டோபரில் நரேந்திர மோடி முதல்வர் ஆகிறார். முதல்வர் ஆகி விட்டதால் பாதுகாப்பான ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும். அவருக்குக் கண்ணில் படுகிறது ஹரேன் பாண்டியாவின் தொகுதி. ஹரேன் பாண்டியா மறுக்கிறார். அதைத் தொடர்ந்து ஹரேன் பாண்டியா ஓரம் கட்டப்படுகிறார்.
2002 குஜராத் கலவரம் நிகழ்கிறது. அரசுத் தரப்பில் என்ன செய்தார்கள் என்று ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயரின் தலைமையிலான தனிநபர் விசாரணைக் குழுவுக்கு ஹரேன் பாண்டியா ஒரு ரகசிய வாக்குமூலம் தருகிறார்.
மோடியின் முதன்மைச் செயலர் பாண்டியாவைக் கண்காணிக்க உத்தரவிடுகிறார். பாண்டியா வாக்குமூலம் கொடுத்த்து உண்மைதான் என்று தெரிய வருகிறது. தனிநபர் விசாரணைக் குழுவுக்கு வாக்குமூலம் என் கொடுத்தீர்கள் என்று கட்சித் தலைமை ஹரேன் பாண்டியாவைக் கேட்கிறது. ஹரேன் பாண்டியா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். ஆகஸ்டில் அவுட்லுக் பத்திரிகைக்கு பெயரில்லாத அமைச்சர் பெயரால் பேட்டி தருகிறார். தன் பெயர் வெளியே வந்தால் கொல்லப்படுவோம் என்றும் சொல்கிறார்.
2002 டிசம்பர் குஜராத் தேர்தலில் ஹரேன் பாண்டியாவுக்கு அவருடைய தொகுதியை தர முடியாது என்கிறார் மோடி. ஆர்எஸ்எஸ் பாஜக இரண்டின் தலைமைகளும் மோடியை நிர்ப்பந்தம் செய்கின்றன. ஆனால் தனக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்கிறார் மோடி. இரண்டு நாட்கள் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியில் கட்சி மோடிக்கு அடங்கிப் போகிறது. ஹரேன் பாண்டியாவுக்கு சீட் மறுக்கப்படுகிறது.
அரசியலிலிருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஹரேன் பாண்டியா, 2003 மார்ச் 26ஆம் தேதி, வழக்கமாக நடைபயணம் போகும் இடத்தில் காரில் பிணமாக்க் கிடக்கிறார். வழக்கு ஊத்தி மூடப்பட்டது. அவரை யார் கொலை செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது. அந்தக் கொலை, சாட்சியங்கள், வழக்கு ஆகியவற்றைப் பற்றி கடைசியில் உள்ள இணைப்பில் படித்துப்பாருங்கள். நமது காவல்துறை / நீதித்துறை குறித்து அருமையான புரிதல் கிடைக்கும்.
*
இரவு உறக்கம் வராமல் எதையெதையோ தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும்போது இப்படியும் ஒரு செய்தி கண்ணில் பட்டது —
குஜராத் சிஐடி ஏடிஜிபி மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது ஒரு மெட்ரோபொலிடன் நீதிமன்றம். மாதவ்புரா வங்கியின் 1100 கோடி ஊழல் விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் கூறியது.
இந்தச் செய்தியின் தேதி - 2017 மே 7
ஊழல் ஒழிந்து விட்டதுதானே!
By Shahjahan R

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரூபாய் 80,00,00,000 ஊழல்

ஊழலுக்கு எதிராகப் பேசிப் பேசித் தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என்று காட்டிக் கொண்டவர் மோடி.
பெங்களுர் எடியூரப்பா தொடங்கி மும்பையைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வரை ஊழல் பேசப்பட்டது.
இப்பொழுது ஜீ.... பூம்பா பூதத்தைப் போல ‘ஜெய் ஷா குண்டால்’ என்ற மாபெரும் ஊழல், அமித்ஷா மகன் வடிவில் உருவெடுத்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் ரூபாய் 50,000 இல் நிறுவனம் தொடக்கம். முதலாண்டில் 6,230 ரூபாய், 2013 இல் 1,724 ரூபாய், 2014 இல் 18,728 ரூபாய் இழப்பு ஏற்பட்ட இந்த நிறுவனத்திற்கு 2015 - 2016 நிதியாண்டில் மட்டும் 80 கோடி ரூபாய் வரவு செலவு ஆகியுள்ளது.
இது எப்படிச் சாத்தியமானது-? இதற்குப் பின்புலமாக இருந்தவர் அன்றய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல். இது எப்படி மிஸ்டர் கிளீன் மோடிக்குத் தெரியாமல் போயிருக்கும்.
பாஜக மோடி ஆட்சியின் மிகப் பெரும் ஊழல் மட்டுமன்று, அதிகார வரம்பு மீறலும் இதில் உள்ளடங்கிருக்கிறது.
பத்துமடங்கு வருமானம் உயர்ந்தாலே அத்தனை துறைகளையும் பயன்படுத்தி விசாரணை செய்யும் மோடி, ஜெய் ஷா நிறுவன வருமானம் ஒரே ஆண்டில் மட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதை மோடி விசாரணை நடத்தாதது ஏன் என்று ராகுல்காந்தி குரல் எழுப்-புகிறார். இவர் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்.
ஆனால், பாஜகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவே இந்த ஊழலுக்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறார்.

அமித் ஷா மகன் ஜெய் ஷாவைப் பாதுகாக்க மத்திய அமைச்சர் இவ்விவகாரத்தில் இறங்கி உள்ளதாகவும் -
இந்த மாபெரும் ஊழல் குற்றச்சாட்டில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட் ஜென்ரல் துஷார் மேத்தா, இந்தத் தனிநபர் வழக்கில் எப்படி வாதாடலாம், மத்திய சட்ட அமைச்சகம் இதற்கு எப்படி அனுமதி அளித்தது, இது மிகப்பெரும் விதிமீறல், ஊழல் என்கிறார்கள் யஷ்வந்த் சின்ஹா, சந்துருகன் சின்ஹா.
முந்தய காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலுக்கு எதிராக என்று சொல்லி அன்னா அசாரே, கிரன்பேடி போன்றோரை வைத்துப் போராட்டம் நடத்தினார் மோடி.
இன்று அசாரேயைக் காணவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிரன்பேடிக்குக் கிடைத்துவிட்டது.
ஜெய் ஷா ஊழலுக்கு மோடி வாய்திறக்காமல் இருப்பது ஏன்-? விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்-?.
பதில் சொல்லும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
பாஜக ஆட்சியின் சரிவுக்கு விழுந்த பெரிய அடி இது.
 கருஞ்சட்டைத் தமிழர்

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...