ஞாயிறு, 16 டிசம்பர், 2018

வல்லவனுக்கு வல்லவன்.

தமிழக அரசை பி.ஜே.பி.தான் நடத்துகிறது!
அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள்!...என்று கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக விமர்சனம் வெளுத்துகட்டுகிறது.

தமிழகத்தின் எதிர்கட்சிகள் மட்டுமில்லாது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் என்று அக்கம்பக்க மாநில பேர்வழிகளே கழுவி ஊற்றும் நிலையில்தான் சூழல் இருக்கிறது.

டெல்லி லாபியிடம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் அடிபணிந்து செல்ல காரணம், ’எதிர்த்தால் ரெய்டு நடக்கும் என்கிற பயம்!
ரெய்டு நடந்தால் இதுவரையில் குவித்துள்ள சொத்துக்கள் பறிபோகும், சிறை செல்ல நேர்ந்தாலும் ஆச்சரியமில்லை எனும் நடுக்கம்!
 ஆட்சி கலைக்கப்பட்டு அதிகாரம் பறிபோகும் எனு அச்சம்! ஆகியவையே.’ என்கிறார்கள் விமர்சகர்கள்.

அதனால்தான் டெல்லி எவ்வளவுகுட்டினாலும், குனிந்து தலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது தமிழக அரசு! என்று அரசியல் பார்வையாளர்கள் வெளுக்கிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. முக்கியஸ்தர்களின் இந்த போக்கில் கடந்த நான்கைந்து நாட்களாக பெரும் மாற்றம் துவங்கியுள்ளது! என்று ஆச்சரியப்படுகிறார்கள் அதே விமர்சகர்கள்.

 மாற்றத்தின் காரணமாக அவர்கள் குறிப்பிடுவதும், உதாரணங்களாக அவர்கள் மேற்கோள் காட்டுவதும் இப்படி அமைகின்றன...“தமிழக அரசினை நிர்வகிக்கும் அதிகாரத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் பயந்தது பி.ஜே.பி.யை பார்த்து இல்லை.
மாறாக, அதன் கையிலிருக்கும் அதிகாரத்தைப் பார்த்துதான்.
அவர்கள் நினைத்தால் வருமான வரித்துறை, சி.பி.ஐ. என்று யாரையும் தங்கள் மேல் ஏவிவிட முடியும் என்கிற அச்சமே, அடிபணிதலுக்கு அடித்தளமாக இருந்தது.

ஆனால், கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன் வெளியான ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்த அச்சத்தை பெருமளவில் குறைத்துள்ளன.
அதாவது ஐந்து மாநில தேர்தல்களில் மிகப்பெரிய சரிவையும், அடியையும் வாங்கிக் கட்டியுள்ளது பி.ஜே.பி. மோடியின் அலை முடிந்ததா? என்று விமர்சனங்கள் வெடிக்குமளவுக்கு சூழல்கள் மாறிவிட்டன.

 மோடிக்கு ஆதரவு நிலை கொடிகட்டிப் பறந்த வட நாட்டிலேயே இந்த அடியென்றால், மோடியை தினம் தினம் தூற்றித் தள்ளும் தென்னிந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு எந்தளவுக்கு பி.ஜே.பி.க்கு சரிவை தரும்! என்று யோசிக்க துவங்கிவிட்டார்கள்.

இந்த திடீர் இமாலய சரிவை பி.ஜே.பி.யும் எதிர்பார்க்கவுமில்லை, அதனை ஜீரணிக்கவும் முடியவில்லை.
 தலை சுற்றி நிற்கிறார்கள் மோடியும், அமித்ஷாவும். இந்த தடுமாற்றத்தை வெளிப்படையாக உணர்ந்துவிட்டுதான் தமிழ்நாட்டில் எடப்பாடியாரின் அமைச்சரவை பி.ஜே.பி.யை துணிந்து உரச துவங்கியுள்ளனர்.
 தேசமெங்கும் பெரும்பான்மை மாநிலங்களில் எங்கள் ஆட்சி! என்று மார் தட்டிக் கொண்டிருந்த பி.ஜே.பி.யின் அதிகார பரப்பளவு சுருங்கிவிட்டது

. ஆக பலவீனப்பட்டு நிற்கிறது பி.ஜே.பி. இந்த சூழலில் அவர்களை சாத்தினால்தான், நமது மரியாதையை சொந்த மாநிலத்தி காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று திட்டமிட்டுள்ள அ.தி.மு.க. அதற்கு ஏற்றபடி மோடி தரப்பை தாக்க துவங்கிவிட்டது.


 அதன் வெளிப்பாடாகதான் எடப்பாடி அமைச்சரவை சகாக்கள் மோடி மற்றும் மத்திய அரசின் மீது பாய துவங்கியுள்ளனர்...‘பத்து லட்சம் பேர் இறந்தால்தான் பிரதமர் தமிழகத்துக்கு வருவாரா?
 கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட அவர் வராதது பெரும் வருத்தத்தை தருகிறது.
அவரை வர்புறுத்தி தமிழக பி.ஜே.பி. அழைக்காமல் இருப்பது தவறு.’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கினார்.
 
கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரையில் நிவாரணம் வழங்கவில்லை. தமிழக முதல்வர் பிரதமரை நேரில் வலியுறுத்தியும் இதுவரை நிதி வரவில்லை.
கஜா புயல் நிவாரண நிதி பெற, தமிழக அரசிடமிருந்து அறிக்கை வரவில்லை! என மத்திய அரசு சொல்வது சரியான காரணமில்லை.
முதலில் உத்தேசமாக நிவாரண தொகையை வழங்கிவிட்டு கூட அறிக்கையை பெறலாம்.’ என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டுத் தாக்கியுள்ளார்.

 ’பி.ஜே.பி.யின் வாக்கு வங்கிக்கு ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை!
அவர்களின் தோல்விக்கு நாங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கெத்தாக கிண்டலடித்துள்ளார்.

ஆக யானை போன்ற பி.ஜே.பி.க்கு அடி சறுக்கியிருக்கும் நேரத்தை பயன்படுத்தி ‘எப்படியானாலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு நம்மிடம் இவர்கள் வரவேண்டும்!’ எனும் தைரியத்தில் தொடர்ந்து தாக்குகிறது அ.தி.மு.க!
 

அ.தி.மு.க.வின் அமைச்சரவை முக்கியஸ்தர்கள் தங்கள் மேல் பாய்வதை கண்டு கொதித்தேவிட்டார் அமித்ஷா.


இந்த கடுப்பை மோடியின் கவனத்துக்கு அவர் கொண்டு செல்ல, அடுத்த சில மணி நேரங்களிலேயே பாய துவங்கிவிட்டது சி.பி.ஐ.


குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரையும், மாஜி அமைச்சர் ரமணாவையும் ஆஜராக சொல்லும்படி சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது சி.பி.ஐ. ‘சரி விசாரிப்பார்கள், அனுப்பிவிடுவார்கள்.’ என்ற எண்ணத்தில்தான் கேம்பஸினுள் நுழைந்தார் விஜயபாஸ்கர்.

அதுவும் பத்திரிக்கை மற்றும் மீடியாவுக்கு தெரியாமலே உள்ளே வந்தார்.

சிட்டிங் மற்றும் மாஜி அமைச்சர்களிடம் கேட்பதற்காக மொத்தம் இருநூறு கேள்விகளை தயாரித்து வைத்திருந்திருக்கிறது சி.பி.ஐ. ஏதோ ஒன்றிரண்டு மணி நேரங்களில் விசாரணையை முடிப்பார்கள் என்று நினைத்த டாக்டருக்கும், இந்த அனுமார் வால் கொஸ்டீன் பேப்பர் தலைசுற்றலை கொண்டுவந்துவிட்டது.

ஒன்று இல்லை, ரெண்டு இல்லை...கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் வெச்சு செய்துவிட்டது சி.பி.ஐ. தனக்கும் இந்த முறைகேடுகளுக்கும் சம்பந்தமில்லை, தான் எங்கேயும் பணம் வாங்கவில்லை, அதை நிரூபிக்க முடியுமா?
 என்று லேசாக கெத்து காட்டிப் பார்த்த விஜயபாஸ்கரிடம், ‘உங்களுக்காக உங்க நண்பர் சரவணன் பணம் வாங்கியதாக வாக்குமூலம் வந்திருக்கிறதே!’ என்று ஒரு கொக்கியை போட்டு, அதற்கான சில ஆதாரங்களையும் எடுத்து அடுக்கியிருக்கிறார்கள்.

அந்த ஏஸியிலும் வியர்த்துவிட்டது விஜயபாஸ்கருக்கு.
விஜயபாஸ்கருக்கு கொடுக்கப்பட்ட ட்ரீட்மெண்டின் மூலம் மற்ற அமைச்சர்கள் அலர்ட் ஆகி, தங்களை உரசுவதை உடனே நிறுத்துவார்கள்! என்று நம்புகிறது பாஜக.

இன்னமும் மோடி பாஜக அரசின் கையில்தான் வருமானவரித்துறை,சி.பி.ஐ,அமுலாக்கப்பிரிவுகள் இருக்கிறது என்பதை அதிமுக தலைகள் மறந்து விடக்கூடாது.
கறைபடியாத தல ஒன்று கூட அதிமுகவில் இல்லை என்பது இந்தியாவே நாறிப்போன உண்மை.
அதேபோல்தான் பாஜக.இரு வல்லவர்களாக பாஜக,அதிமுக இருக்கலாம்.ஆனால் நல்லவர்கள் இல்லையே இருவரும்.
                                                                                                
  
-ரா.குமரவேல்.
உதவி: asianet,செவ்வாய், 11 டிசம்பர், 2018

ரிபப்ளிக் டிவியின் தேசபக்தி’?

பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாகவும் உடல்ரீதியாகும் துன்புறுத்திய சம்பவத்தில் ஒரு புதிய செய்தி. ‘தேசபக்தி’ புகழ் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா என்பவர் இதற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ‘மேலிடத்து’ அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் பேசுகையில், நடந்த சம்பவம் குறித்து அவர் விவரித்தார்.

வழக்கமாக பணியிலிருந்து வீட்டிற்குச் செல்கையில் அருகில் உள்ள வீதியில் தனது கூட்டாளி ஒருவனுடன் அனிருத்தா நின்று கொண்டிருந்ததாகவும், அவ்வழியே தாம் செல்கையில் கத்தியை தன் கழுத்தில் வைத்து மிரட்டி, பலவந்தப்படுத்தி அவரது வீட்டிற்கு தன்னை இழுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
‘தேசபக்தி’ ரிபப்ளிக்டிவியின் செய்தியாளரான அனிருத்தா பாகத் சூட்டியா
மேலும் இது குறித்துக் கூறுகையில், “வீட்டிற்குள் இழுத்துச் சென்றதும் எனது கைகளை நாற்காலியில் கட்டி வைத்து என்னை தாக்கத் தொடங்கினார் அனிருத்தா.
 அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததும், பாலியல் ரீதியாக என் மீது தாக்குதலைத் தொடுத்தார். அவரது தாயாரும் அந்த வீட்டில் அனிருத்தாவுக்கு உடந்தையாக இருந்தார்.
அதன் காரணமாகத்தான் அவரது பெயரையும் நான் புகாரில் சேர்த்திருக்கிறேன்.

சில நேரத்துக்கு பின் எனது கைகள் விடுவிக்கப்பட்டன. அச்சமயத்தில் நான் உடனடியாக எனது பையில் இருக்கும் அலைபேசியை எடுத்து என்னுடன் பணிபுரியும் நண்பர்களுக்கு தகவலை கூறினேன். அவர்கள் பிரதான வாயில் வழியாக வந்து ஒரு வழியாக என்னை மீட்டனர்” என்கிறார், அந்த பத்திரிகையாளர்.

அதன் பின்னர், அருகில் உள்ள திஸ்பூர் போலீசு நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த பெண் பத்திரிகையாளர். அசாம் உள்ளூர் ஊடகங்கள் அளிக்கும் தகவலின்படி இந்திய தண்டனை சட்டம் 354, 341, 392, 323, 506 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் டிவி பத்திரிகையாளரை விசாரிக்க, கைது செய்து அழைத்துச் சென்றது போலீசு. ஆனால் மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக டிசம்பர் 3-ம் தேதி அவரை வெளியே விட்டது.
புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் இது குறித்து, ‘தி வயர்’ இணையதளத்திடம் பேசுகையில், “போலீசு மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகத்தான் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தாமல், விடுவித்திருக்கிறது.” என்றார்


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தால் குற்றம் சாட்டப்பட்ட நபரை முறையாக நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டும்.
ஆனால் அதற்கு பதிலாக போலீசார் அவரை விடுத்திருக்கின்றனர். முறையாக பின்பற்றப்பட வேண்டிய எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

புகார் கொடுப்பதில் போலீசு தமக்கு தவறான வழிகாட்டுதல் கொடுத்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார், பாதிக்கப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்.
 மேலும் அவர் கூறுகையில், “என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள், அன்று இரவு என்னை அனிருத்தா வீட்டிலிருந்து மீட்ட பிறகு நாங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் பதிவு செய்தோம். நான் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்தேன். புகார் வாக்குமூலத்தை அளிக்கும் நிலையில் நான் இல்லை. ஆகவே எனக்கு பதிலாக என்னுடன் பணிபுரியும் நண்பரை புகார் எழுதுமாறு போலீஸ் நிலையத்தில் கேட்டுக் கொண்டனர்.

அனிருத்தா தனது கூட்டாளியுடன் சேர்ந்து என்னை கத்திமுனையில் கடத்தியதை அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை. என் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அதை கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகவே கொலை முயற்சி மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
 இதன்மூலம் இந்த வழக்கை பலவீனப்படுத்தி இருக்கிறது போலீசு.” என்றார்.

மேலும், அங்கிருந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு தவறான வழக்கு எண்ணை கூறியிருக்கின்றனர். 3637 என்ற எண்ணிற்கு பதிலாக 3636 என்ற எண்ணை கூறியிருக்கின்றனர்.

திஸ்பூர் போலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி பிரேன் பருவா இது குறித்துக் கூறுகையில், “சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட அனிருத்தாவை திங்கள் கிழமை அன்று விடுவித்துவிட்டோம்.
அவரை நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தவில்லை.
அவர் எங்களது விசாரணைக்கு ஒத்துழைப்பார். நாங்கள் அவரை போலீஸ் நிலையத்திற்கு வரக் கூறியிருக்கிறோம்.” என்று அப்பெண் பத்திரிகையாளர் கூறிய தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பான ஏதேனும் தேதியில் அவர் போலீஸ் நிலையத்திற்கு வருவாரா என தி வயர் இணையதளம் கேட்டபோது, அது குறித்து தனக்குத் தெரியாது என்றும் விசாரணை அதிகாரி மட்டுமே அதை அறிவார் என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
“விசாரணை அதிகாரி, இதுகுறித்து கருத்து எதுவும் கூற மறுத்து விட்டார்.
மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக மேலதிக தகவல்கள் எதுவும் தர முடியாது என்றும் அவர் கூறினார்.” என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.

இதுவரையிலும், புகார் அளித்த பெண் பத்திரிகையாளரின் வாக்குமூலத்தை போலீசு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இச்சம்பவம் குறித்து ரிபப்ளிக் டிவியின் ‘சவுண்ட்’ அர்னாப் கோஸ்வாமியிடம் ‘தி வயர்’ இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

மோடியின் ஆட்சியில், மதவெறிப் படுகொலைகளை நியாயப்படுத்தும் ஊடகங்களுக்குள் அனிருத்தாக்கள் நிறைந்திருப்பதிலும், அவர்களைக் காப்பதற்கு ‘மேலிடத்து’ அழுத்தங்கள் வருவதிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

தமிழாக்கம்: நந்தன்
நன்றி:வினவு, The wire.

மகிழ்ச்சி ! எனினும் மெத்தனம் கூடாது !

ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக படு தோல்வி

"ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் “மோடி மேஜிக்” பல்லிளித்து விட்டதைக் காட்டுகின்றன". 

ராஜஸ்தான், சட்டிஸ்கரில் பாஜக-வின் தோல்வி உறுதியாகிவிட்டது. ம.பி-யிலும் அநேகமாக பாஜகவின்  தோல்வி உறுதி.
பார்ப்பன பாசிசம் ஒழியவேண்டுமென்று எண்ணுபவர்கள் அனைவருக்கும் இந்த தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாஜக-வின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் விவசாயிகளின் கோபம். புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதிலிருந்தே விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்ற போதிலும், மோடியின் ஆட்சிக்காலத்தில் அது ஒரு உச்சத்தை எட்டிவிட்டது.

விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்காமல் தானியங்களையும், காய் கனிகளையும், பாலையும் வீதியில் கொட்டி விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும், விவசாயிகள் மீது அரசு ஏவிவிட்ட வன்முறையையும், கந்து வட்டிக் கடனின் விளைவாக அதிகரித்து விட்ட விவசாயிகள் தற்கொலைகளையும் மோடி தனது சவடால் பேச்சை வைத்து சமாளிக்க முடியவில்லை.

நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பில்லை. விவசாயம் நலிவுற்றதால் முன்பு கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்த மக்கள், நகரத்திலும் வேலைவாய்ப்பில்லாத காரணத்தால் மீண்டும் கிராமம் நோக்கி செல்வதும், அங்கேயும் விவசாயத்தின் நலிவினால் வேலையில்லை என்ற நிலையும்தான் நகர்ப்புறங்களின் நிலைமை.

பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி யில் தொடங்கி மோடியின் அடுக்கடுக்கான தோல்விகளையும், ஊழல்களையும், கிரிமினல் நடவடிக்கைகளையும் கார்ப்பரேட் ஊடகங்கள் முடிந்த மட்டும் இருட்டடிப்பு செய்தபோதிலும் அவற்றையெல்லாம் மீறித்தான் வந்திருக்கிறது இந்த தேர்தல் முடிவு.

“சப் கா சாத், சப் கா விகாஸ்” என்ற 2014 நாடாளுமன்றத் தேர்தல் நடிப்பு இப்போது செல்லாது என்று தெரிந்துதான்,  அயோத்தி விவகாரத்தையும் ஆர்.எஸ்.எஸ் துணைக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது.

இந்த மூன்று மாநிலங்களில் மோடியைப் போல இரண்டு மடங்கு அதிகமாக ஆதித்யநாத்தை பிரச்சாரத்தில் இறக்கியிருப்பதும், 2019 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமே.
விலை கிடைக்காத வெங்காயத்தை வீசி எரியும் விவசாயிகள்

ராஜஸ்தானும் மத்திய பிரதேசமும் சாதி – மத உணர்வுகள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்ற, பண்பாட்டு ரீதியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள். விவசாயிகளின் கோபத்தை திசை திருப்புவதற்காக சாதி, மத உணர்வுகளைத் தூண்டுவதற்கு பல கோணங்களில் பாஜக முயன்றிருக்கிறது.
 இருப்பினும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியிலிருந்து (anti – incumbancy) மக்களைத் திசை திருப்புவதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இன்று மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் தனது வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர் போன்ற அடிப்படை உழைக்கும் மக்களின் நலனுக்கான திட்டங்களை காங்கிரஸ் அரசு வகுத்து அமல்படுத்துமா?
புதிய தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் மூர்க்கத்தனத்தில் வேண்டுமானால் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடு இருக்கலாமேயொழிய, இந்த கொள்கைச் சட்டகத்திற்கு வெளியே காங்கிரசோ அல்லது டி.ஆர்.எஸ்  உள்ளிட்ட மாநிலக் கட்சிகளோ இயங்கப்போவதில்லை.

புதிய தாராளவாதக் கொள்கை என்பது இந்தியாவைப் போன்ற நாடுகளை மறு காலனியாக்கும் ஏகாதிபத்தியங்களின் கொள்கை.
 இயற்கை வளங்களையும், பொதுச்சொத்துகளையும் ஆக்கிரமிக்கும் காலனியாதிக்கத்தையே ஒரு கொள்கையாக அமல்படுத்தும் எந்த ஒரு அரசாங்கமும், ஜனநாயகத்தன்மை கொண்டதாக நடந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை.
அதிலும் உலக முதலாளித்துவம் மீள முடியாத ஒரு கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியிருக்கும் காலம் இது. சந்தைகளின் தேக்கநிலையும், தானியங்கிமயமாதல் – செயற்கை அறிவு போன்றவையும் ஏற்கனவே இருக்கின்ற வேலைவாய்ப்புகளையே மென்மேலும் சுருக்கி வரும் காலம் இது.
இந்த சூழலில், எத்தகைய ஊழலற்ற நல்லாட்சியை வழங்குவதாக யார் பீற்றிக் கொண்டாலும், இந்தக் கட்டமைப்புக்குள் எந்த ஒரு அரசும் புதிய தாராளவாதக் கொள்கையை அமல்படுத்தும் கங்காணியாக மட்டுமே செயல்பட முடியும்.

ஒரு வலிமையான கங்காணி வேண்டும் என்பதற்காகத்தான் “அண்டர் பெர்ஃபார்மர்” மன்மோகன் சிங்குக்கு பதிலாக, மோடியை ஆளும் வர்க்கம் தெரிவு செய்தது. தான் தெரிவு செய்த அந்த கைப்பாவையை மக்களும் தெரிவு செய்யுமாறு நாட்டையே மூளைச்சலவை செய்தது. இன்று மக்கள் வேறு தெரிவைத் தேடுகிறார்கள் என்பது பாரதிய ஜனதாவை மட்டும் கவலைக்கு உள்ளாக்கியிருக்காது.
 அம்பானி, அதானி உள்ளிட்ட குஜராத்தி, மார்வாரி தரகு முதலாளிகளையும், வங்கிக் கொள்ளையர்களையும், பன்னாட்டு முதலாளிகளையும் நிச்சயம் கவலைக்குள்ளாக்கியிருக்கும். அந்தக் கவலையின் ஒரு வெளிப்பாடாகத்தான் ராமனுக்கு மீண்டும் மவுசு வந்திருக்கிறது.

“அயோத்தியில் கோயில் கட்ட சட்டமியற்று” என்று 2019 தேர்தலுக்கான புதிய நிகழ்ச்சி  நிரலை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கிளப்பியிருக்கிறார்கள்.


கடந்த 30 ஆண்டுகளில் “வளர்ச்சி – இந்துத்துவம்” என்ற இரண்டு முழக்கங்களையும் தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு, இதன் ஊடாக, தனது வாக்காளர் அடித்தளத்தையும் அரசியல் அடித்தளத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் மெல்ல மெல்ல விரிவு படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

அதிகார நிறுவனங்களையும் கைப்பற்றிக் கொண்டு விட்டார்கள்.
நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரம் மெல்ல மெல்ல காவிமயமாகி விட்டது. சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அரசியலிலிருந்தும் மைய நீரோட்டத்திலிருந்தும் ஒதுக்கி வைப்பது ஒரு புதிய எதார்த்தமாகவே மாறிவருகிறது.

இது மட்டுமின்றி, தேர்தல் அரசியலுக்கு வெளியே பல்வேறு அரங்குகளிலும் தமது அமைப்புகளை பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் – சக்திகள், தேர்தல் அரசியலின் வரம்புக்கு வெளியே, மக்கள் மத்தியில் அத்தகைய அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவில்லை. இது நம் அனைவரின் கவலைக்குரிய உண்மை.
தேர்தல் அரசியலின் வரம்புக்குள் நின்று பார்க்கும்போது “மோடியை விட காங்கிரசோ மற்ற மாநிலக் கட்சிகளோ பரவாயில்லை” என்ற கருத்துக்கு ஒருவர் வரலாம். பிரச்சினையை “மோடி” என்று மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது. மோடி, பார்ப்பன பாசிசத்தின் ஒரு பிரதிநிதி.

பார்ப்பன பாசிசம், கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அரசியிலில் அழுத்தமாக காலூன்றி விட்டது.
எனவே, எதிர்க்கட்சிகள் எனப்படுவோர் பார்ப்பன பாசிசத்தை இந்திய அரசியல் அரங்கிலிருந்து நிரந்தரமாக அகற்றும் நோக்கம் கொண்டவர்களா, அத்தகைய ஆற்றல் பெற்றவர்களா என்பதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.

தற்காலிகத் தீர்வாக, “பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது” என்பது வேறு.
 அதையே “நிரந்தரத் தீர்வாக நம்புவது” என்பது வேறு. புதிய தாராளவாதக் கொள்கையையும் மிதவாத இந்துத்துவ கொள்கையையும் பின்பற்றும் கட்சிகள் ஒருக்காலும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்ள முடியாது.

பாஜக-வின் பார்ப்பன பாசிச அரசியலைக் கண்டு அஞ்சியும், அதன் ஆதிக்க சாதி சமூக அடித்தளத்தை திருப்திப்படுத்தவும் ராகுல்காந்தி நடத்தி வரும் கோயில் யாத்திரைகள் இதற்கொரு சான்று.
எல்லாவற்றிலும் வீழ்ச்சி.
  நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் பாசிசமயமாவது என்பது, புதிய தாராளவாதக் கொள்கையின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவு.
 மேலை நாடுகளில் நிறவெறியாகவும், இனவெறியாகவும், பிற நாடுகளில் மதவாத எதேச்சாதிகார ஆட்சிகளாகவும், அமெரிக்காவில் டிரம்ப்பாகவும் இது உருவெடுக்கிறது. இந்தியாவுக்கு – பார்ப்பன பாசிசம்.

புதிய தாராளவாதமும் பார்ப்பனியமும் இணைந்த கலவையே பார்ப்பன பாசிசம். இந்தப் புரிதலுடன் மக்கள் இயக்கங்களையும் போராட்டங்களையும் கட்டியமைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பாஜக வின் இந்தத் தேர்தல் தோல்வியை, பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக மக்களை திரட்டுவதற்குரிய ஊக்க மருந்தாகக் கருதலாமே தவிர, அரசியல் மெத்தனத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.
'இந்திய நாட்டு மக்களை குறிப்பாக தமிழர்களை ஒரு வழி செய்யாமல் விடமாட்டோம்"

                                                                                                                  நன்றி:வினவு.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தப்பினார்

மோடியிடமிருந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தப்பினார் .!
 
இந்திய மக்கள்.?

 
மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடந்து வந்த மோதலின் விளைவாக, ரிசர்வ் வங்கியில் கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் மோடி அரசு ஆதிக்கம் செலுத்த பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உர்ஜித் பட்டேல் பதவி விலகியிருக்கிறார்.

இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக பட்டேல் தெரிவித்துள்ளார்.

உர்ஜித் பட்டேலின் பதவி விலகல் இந்தியாவின் நிதி கொள்கைகளை செயல்படுத்துவதில் ஆட்டத்தை காணவைக்கும் என்கிறது த வயர் இணைய தளம்.

வயர் போன்று பல ஊடகங்கள் சொல்லும் கருத்துக்களை பார்ப்போம்.

முதலாவதாக, இந்திய பங்குச்சந்தைகளில் இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அடுத்து, மத்திய வங்கியின் இடைக்கால கவர்னராக பொறுப்பேற்கப் போவது யார்? இறுதியாக, மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில்,  நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன நடக்கும்?டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72.50 ஆக சரிந்துள்ள நிலையில், பட்டேலின் ராஜினாமா தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது மெக்லாய் நிதி சேவை நிறுவனம். இந்த சரிவு செயல்பாட்டு அடிப்படையற்றது என்கிற அந்நிறுவனம், அரசியல் காரணங்களால்தான் இந்த சரிவு என்கிறது.

அதுபோல பங்குச் சந்தைகளும் எதிர்மறையாக விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் நிதி சேவை நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. சொன்னதுபோல இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 10400 கீழே சரிந்தும் உள்ளது.
ரூபாயின் மதிப்பு 1.5% சரிவைக் கண்டுள்ளது.

பட்டேலின் ராஜினாமா அறிவிப்பு மோடி அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்கின்றன ஊடகங்கள். வழக்கமாக, மத்திய அரசின் செய்தி நிறுவனத்தின் வாயிலாக கவர்னர் பதவி விலகல் அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்படும்.
 பட்டேல் ராஜினாமா திடீரென்று எதிர்கொண்ட மோடி அரசு, தன்னுடைய அதிர்ச்சியை மறைக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவிக்கிறது.

ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “பட்டேலின் ராஜினாமா வங்கித் துறைக்கு பெரும் இழப்பு” என்கிறார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கிக்காக பட்டேல் செய்த பணிகளை பாராட்டுவதாக ட்விட்டரில் தெரிவிக்கிறார்.
ரிசர்வ் வங்கி இயக்குனராக உள்ள ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, பட்டேலின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை கையாளத்தெரியாமல் கீழ் நிலைக்குத் தள்ளியது காவி கும்பல். தன்னிச்சையான அமைப்புகளை சர்வாதிகாரத்தன்மையுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாஜக அரசு தீவிரமான முயன்றது.
அந்த வகையில் உர்ஜித் பட்டேலின் ராஜினாமாவை இவர்கள் எதிர்பார்த்தார்கள் எனலாம்.
 மோடி அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கு ஐந்து விசயங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது.

1. ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியை மோடி அரசு கேட்டது. அதைத்தர பட்டேல் மறுத்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய குழு அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
2. பலவீனமான நிலையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கச் சொன்னது மோடி அரசு. ஆனால், ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்வது புத்திசாலித்தனம் அல்ல என தெரிவித்தது.
3. வங்கிகளுக்கான மூலதன நெறிகள்: கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் இதற்கு ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. சர்வதேச மூலதன நெறிமுறைகளின் ஒரு பகுதியை தளர்த்த ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
4. சிறு, குறு தொழில்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு உதவும் விதமாக விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்கிற மத்திய அரசின் கோரிக்கையையும் ஆர்.பி. ஐ. நிராகரித்துவிட்டது.
5. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பு உடைக்க மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், மோடி அரசு ரிசர்வ் வங்கி, துணை கமிட்டிகளை அமைக்குமாறு வலியுறுத்தியது. இந்த கமிட்டியில் அரசு நியமிக்கும் உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கியின் பல்வேறு செயல்பாடுகளை கவனிப்பார்கள் என கூறியது.

ரிசர்வ் வங்கி கவர்னரின் ராஜினாமா இந்த ஐந்து விசயங்களில் இருந்த முரண்பாட்டில் விளைவாக நடந்திருக்கிறது என ஊடகங்கள் பல கருத்துரைக்கின்றன.

ஆனால் இது வரை மோடி அரசின் தவறுகளுக்கு ரிசர்வ் வங்கி உடன்பட்டு போயிருப்பதை அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. இது குறித்து மேலே உள்ள புதிய ஜனநாயகம் கட்டுரை இணைப்பில் நீங்கள் விரிவாக காணலாம். அதிலிருந்து சில பத்திகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.


தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. 
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. 
குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.
உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 
அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.
ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.
எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, 
ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். 
அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். 
 பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.
மோடி கும்பலால் முன்னிறுத்தப்பட்ட உர்ஜித் பட்டேல் இறுதியில் தனக்குப் பழி வரும் என்பதால் பதவி விலகியிருக்கிறார்.

 ஆனால் மோடியின் பொருளாதார்த் தாக்குதலில் இருந்து இந்திய நாட்டு மக்கள் தப்பிக்கதான் வழியே இல்லை.


ஞாயிறு, 9 டிசம்பர், 2018

புதிருக்கு விடை....,


செந்தில் பாலாஜியை எதிர்த்து திமுகவில் போட்டியிட்டவர், கரூர் சின்னசாமி.  
 
கரூரில் துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்கப் போன சின்னசாமியிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள்

அப்போது அவர் செந்தில் பாலாஜிக்கு எதிராக இனி எதையும் செய்ய வேண்டாம்..’ என்று சொல்ல... அவருக்கு நெருக்கமான நண்பர்களோ ஆச்சரியத்துடன் கேட்டபோதுதான் விவரம் தெரிய வந்திருக்கிறது.

செந்தில் பாலாஜி இங்கே நம்ம கட்சிக்கு வர்றதுக்கு ஓகே சொல்லியிருக்காரு. மகேஷ் மூலமாக பேசியிருக்காங்க. அரவக்குறிச்சியில் நம்ம கட்சி சார்பாகவே அவருதான் நிற்கப் போறாரு.  

தலைமையில் இருந்தும் கூப்பிட்டு சொல்லிட்டாங்க. எனக்கு எம்.பிக்கு கொடுக்கிறதா சொல்லிட்டாங்க. எம்.பி. தேர்தலுக்கு இங்கே ஆகும் செலவை அவரு பார்க்கிறதா சொல்லிட்டாராம்
 சீக்கிரமே அவரு இங்கே வந்துடுவாரு
  
அதனால யாரும் அவரைப் பத்தி தப்பா வாய்விட்டுட வேண்டாம்...’ என்று சொல்ல... திமுகவினர் அதிர்ந்துவிட்டார்களாம்.  
இந்த தகவல் கரூர் திமுக வட்டாரத்தில் தீயாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது.

அண்மையில் திருச்சியில் உள்ள நட்சத்திர  ஹோட்டலுக்கு வந்த அன்பில் மகேஷ் அங்கு ரூம் போட்டு தங்கியுள்ளார். 
அவர் வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏவான செந்தில் பாலாஜியும் அதே ஹோட்டலுக்கு வந்திருக்கிறார்.  

ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து காபி குடித்தவர், யாரிடமோ நீண்ட நேரம் போனிலும் பேசியிருக்கிறார். அதன் பிறகு அன்பில் மகேஷ் தங்கியிருந்த அறைக்குப் போய் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக இருவரும் பேசியிருக்கிறார்கள்.

இந்த சந்திப்புக்குப் பிறகு கரூரில் தினகரன் அணி சார்பாக நடந்த ஜெயலலிதா நினைவு நாள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை
 சென்னையில் நடந்த ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலத்துக்கும் அவர் வரவில்லை

 ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக, நவம்பர் இறுதி வாரத்தில் கரூரில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் காலண்டருக்கு ஆர்டர் கொடுப்பார் செந்தில் பாலாஜி.  
இந்தமுறை ஆர்டர் கேட்டுப் போன பிரஸ் உரிமையாளரிடம், ‘இப்போ காலண்டர் வேண்டாம். நான் அப்புறம் சொல்றேன்என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்

ஜெயலலிதா நினைவு நாளில், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையிலும் செந்தில் பாலாஜியின் விளம்பரம் இல்லை. இப்படியாக அவரது செயல்பாடுகள் எல்லாமே கடந்த இரண்டு வாரங்களாகப் புதிராகவே இருக்கிறது.

 கரூர் சின்னசாமிதான் இப்புதிருக்கு விடையளித்துள்ளார்..
 -------------------------------------------------------------------------------------------------------------------------------------
காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை.
ராணுவ வீரர் கைது.

உத்தர பிரதேசம் காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபரான ராணுவ வீரர் உத்தர பிரதேச காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜீதேந்திர மாலிக் என்ற அந்த ராணுவ வீரரை, கடந்த 36 மணி நேரமாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து ராணுவத்தால் ஜீதேந்தர் உ.பி. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஷுபோத் குமார் சிங்


இதுகுறித்து மூத்த அதிகாரியான அபிஷேக் சிங் கூறும்போது, ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் 12.50 மணி அளவில் ராணுவத்தால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.


அவரிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து அவர் புலந்தஷகர் அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் ஸ்ரீநகரில் பணியில் இருந்து வருகிறார். இவர் 15 நாள் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊரான புலந்தஷகர் வந்திருந்தார், அந்த நேரத்தில் பசுகாவலர்களால் நடத்தப்பட்ட வன்முறையில் ஜீதேந்தரும் ஈடுபட்டது பல வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.

 மேலும் வன்முறையில் காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த அன்று மாலையே ஜீதேந்தர் தனது பணிக்கு திரும்பியுள்ளார்.
 மேலும், ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் தான் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டாரா என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, ஜீதேந்திர மாலிக் தான் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் என்பது விரைவில் தெரியவரும் என்றார்.

ஜீதேந்திர மாலிக்
இதுதொடர்பாக வன்முறை நடந்த எடுக்கப்பட்ட வீடியோவில், அவனுடைய துப்பாக்கியை எடு என்ற ஒரு குரல் பின்னால் கேட்கிறது. இதேபோல், புலந்தஷகர் காவல் நிலையம் அருகே நடந்த வன்முறையில் ஜீதேந்தர் இருப்பது பல வீடியோக்களில் பதிவாகி உள்ளது.

இதனிடையே, சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில், நேற்று அந்த மாவட்டத்தில் உள்ள உயர்போலீஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 மூத்த காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங் லக்னோவிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 அவருக்கு பதிலாக, சிதாப்பூரை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளளார்.
இதேபோல், மேலும் இரண்டு காவலர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எடப்பாடிக்கு வந்த நெருக்கடி?
 அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் முன்பு  எப்போதும் இல்லாத அளவுக்கு சாதி ரீதியிலான உரசல்கள் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

அண்மையில் முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய தொழிலதிபர்கள் சென்னையில் ஒரு இடத்தில் கூடி கொங்கு மண்டல அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பணம் கொழிக்கும்  முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சரின்  சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம் தான் இருக்கின்றன  என்றும், இதை இப்படியே விட்டால் நமக்கு எதிர்காலமே இருக்காது என்று ஆரம்பித்து அந்த கூட்டத்தில் பயங்கர கடுப்பாகியுள்ளனர் அமைச்சர்கள்..முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் கைகளில்தான் முழு அதிகாரமும் உள்ளதாக  அவர்கள் கொந்தளிதுள்ளனர். 

முன்பு அவர்களது துறைகளில் மட்டுமே கோலோச்சிய அந்த அமைச்சர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் தங்கள் அதிகாரத்தைத் காட்டத் தொடங்கியுள்ளதால் மற்ற அமைச்சர்கள் நொந்து போயுள்ளனர்.


இதே போல் அந்த கொங்கு மண்டல அமைச்சர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு  சிலர் மாவட்ட அளவிலும்  சிலர் மொத்த ஒப்பந்த பணிகள்,  பணி நியமனங்கள், பணி மாறுதல்களை போன்றவற்றை முடிவு  செய்கிறார்களாம் இதற்கு அதிகாரிகள் முழு அளவில் ஒத்துழைப்பு தருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்து நிற்கிறார்கள்.


இந்த கொங்கு அமைச்சர்களின் அதிகாரத்தால்  வருவாய் இல்லாமல் போவதுடன் கட்சிகளுக்குள் சொந்த மாவட்டத்திலேயே மரியாதை இல்லை என்றும் அவர்கள் புலம்பியுள்ளனர்.

தற்போதுள்ள அமைச்சர் பதவிக்கு பல கோடிகளை கொட்டித்தான் வந்திருக்கிறோம் என்றும், இதையெல்லாம் எப்படி திருப்பி எடுப்பதும் என்றும் அநத் அமைச்சர்கள் புலம்பியுள்ளனர்.


தற்போது  இந்த ஆட்சி எப்போது கவிழும் என்றே தெரியாத நிலை அதையெல்லாம் எப்போது திரும்பி எடுப்பது என்றும் கொந்தளிக்கிறார்கள்.  இதையடுத்து  அந்த மூன்று அமைச்சர்கள் துறைகளில் எங்கு? எப்படி? ஊழல் நடைபெறுகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 இது குறித்து உளவுத்துறை மூலம் தகவல் கிடைக்கவே அப்செட்டான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

 ஆனால் இபிஎஸ்க்கு எதிரான மனநிலையில் உள்ள அமைச்சர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாகவும், அதனால் ஒரு நெருக்கடியான சூழல் ஓடிக் கொண்டிருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
                                                                                                                                                                                                                       தகவல்:செல்வநாயகம்,
நன்றி:ஆசியாநெட்.    


வெள்ளி, 7 டிசம்பர், 2018

இறுதி காணொளி...?

மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 ’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மூலிகை பெட்ரோல் சோதனையை நிரூபிக்கவும்,  மூலிகை பெட்ரோல் சோதனை தொடர்பான ரகசியங்களையும் வெளியிடுவேன்.
ஆனால், அதற்கு முன்பாக மரணத்தின் விளிம்பில் நின்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
 அவர்  தனது வீடியோ பதிவில்,  ’’என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.

  இது என்னுடைய இறுதி காணொளி.
இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன்.
  இது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.  என் உயிரை பணயம் வைத்தாவது உங்கள் கையில் சேர்ப்பேன் என்று  நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன்.

அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன்.
10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோல் பார்மூலாவை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்.
நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன்.
அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள்.

 நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.
நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள்.

 இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள்.
நான் தயாராக இருக்கிறேன்.
 நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

 நான் வருகின்ற 11ம் தேதி உயிருடன்  இருப்பேனா?
இல்லையா?
 என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது.

10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணொளி காட்சி ஒன்று வெளியாகும்.

 என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள்.
 அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள்.
 இது உறுதி’’ என்று கூறியுள்ளார்.

திணறலில் பிரம்மாண்ட படம்  ! 

வசூல் 'கிறக்கத்தில்' கிடக்கும் தயாரிப்பாளர்... 

பாவம் .என்னடா நடக்குது ஸ்டார் ஹோட்டல்ல?


பல விஷயங்களை ஓப்பனாக உடைச்சே சொல்லலாம்!
 ஆனா சில ரகசியங்களை ஒளிச்சு வெச்சுதான் பேசியாகணும். நாம பார்க்கப்போற இந்த விஷயம் செகண்ட் கேட்டகரி.

சமீபத்தில் திரைக்கு வந்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் அது. டெக்னிக்கலா ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிதான் ரிலீஸ் பண்ணினாங்க.
 ‘ஒரு வாரத்துக்கு ஆன்லைன் புக்கிங் கதறும் பாருங்க. அப்புறம் நார்மல் டிக்கெட்டிங்கே நாலு வாரத்துக்கு ஹவுஸ் ஃபுல்லாய் ஓடும்.’ என்று ஏக பில்ட் அப்களை அள்ளி வீசியது இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பு. 


படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன், ப்ரொடக்‌ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்  என மூன்று நிலைகளுக்கும் பல கோடிகளை அள்ளி வீசியிருந்ததுன் தயாரிப்பு தரப்பு.
ஆண் நடிகர்கள் இருவருக்கும், இயக்குநருக்கும் கொடுக்கப்பட்ட சம்பளத்தின் கூட்டு தொகையிலேயே மூன்று மெகா பட்ஜெட் படங்களை இயக்கிடலாம்! என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 இது போக கிராபிக்ஸ் கிச்சு கிச்சு வேலைகளுக்காக மட்டும் கரைந்த பணத்தை வெச்சு டெல்டாவில் ரெண்டு கிராமங்களை முழுசாம் மீட்டெடுத்து, ஹைடெக்காக உருவாக்கிடலாமாம்.
அந்தளவுக்கு கரைச்சு  ஊத்தியிருக்காங்க பணத்தை. உணவு உபசரிப்பில் துவங்கி உலகளாவிய விளம்பரம் வரை ஒட்டுமொத்தமா  படத்தின் பட்ஜெட் ஐநூற்று நாற்பத்து மூன்று கோடின்னு தகவல்.


படத்தின் ரஷ் பார்த்துட்டு ஹீரோ, ஆன்ட்டி ஹீரோ, தயாரிப்பாளர் எல்லாரும் இயக்குநரை பெருமையுடன் திரும்பிப் பார்க்க, அவரோ ‘முதல் நாலு நாட்கள்ளேயே போட்ட பட்ஜெட் கைக்கு வந்துடும். அடுத்த ஒரு வாரத்தில் இரு நூறு கோடிக்கு மேலே லாபம் ஈட்டுவோம்.
ஒட்டு மொத்தமா பார்த்தால் லாபம் மட்டுமே முதலீடு தொகையை தொட்டாலும் ஆச்சரியமில்லை.’ எனும் ரேஞ்சுக்கு கெத்து பில்ட் - அப் கொடுத்தாராம். தயாரிப்பு தரப்போ குஷியில் நாலு நாளைக்கு ரவுண்டு ரவுண்டாய் உள்ளே தள்ளி சந்தோஷப்பட்டதாம்.

படம் ரிலீஸாச்சு. கதை, கிதை, சதையெல்லாம் பற்றி கேட்காதீங்க!
டெக்னிக்கலா உலகத்துக்கே பாடம் சொல்லியிருக்குது தமிழ் சினிமா!
என்று விமர்சனங்கள் வந்து விழுந்தன.
சர்வதேசமெங்கும் கொண்டாடப்பட்டது அந்த சினிமா.
இந்த தகவல்கள் அப்படியே தயாரிப்பாளரின் காதுகளுக்கு போயின. அவரோ ‘பெருமை பேசுறதெல்லாம் கிடக்கட்டும். வசூல் என்னாச்சு?’ என்றாராம்.

அங்கேதான் ஆரம்பிச்சது சிக்கல். காரணம்,  எதிர்பார்க்கப்பட்ட ஓப்பனிங் வசூலில் பாதியைக் கூட தொடவில்லை! என்கிறார்கள்.
தயாரிப்பாளருக்கு நெஞ்சு அடைத்துவிட்டது.
 இயக்குநரோ ‘ஒண்ணும் வொர்ரி பண்ணாதீங்க.
இன்னும் மூணு நாள்ள மேஜிக்கலா இருக்கும் பாருங்க வசூல்’ என்று தேற்ற, ஏதோ அதை நம்பி கிராண்ட் பார்ட்டி ஒன்றை படக்குழுவுக்கு ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர்.
அந்த ஒரு இரவுக்கு செலவான தொகையை கேட்டாலே உங்களுக்கு தலை சுற்றிவிடும்.

அடுத்தடுத்த நாட்கள் படத்தின் கலெக்‌ஷன் ரிப்போர்ட் தயாரிப்பாளருக்கு போனது.
ம்ஹூம் மனுஷனுக்கு மகிழ்ச்சி கிட்டவில்லை. ரிலீஸாகி எட்டு நாட்களாகியும். படத்தின் பட்ஜெட்டுக்கும் பல கோடிகளுக்கும் கீழே இருந்திருக்கிறது வசூல். அவர் இயக்குநருக்கு போன் போட, ‘அவசரப்படாதீங்க. ஒரே வாரத்துக்குள்ளேயே போட்ட பட்ஜெட்டை கலெக்‌ஷன் நெருங்குறது அதிசயம். வெயிட் ப்ளீஸ்.’ என்றிருக்கிறார்.
 அதற்கு தயாரிப்பாளரோ ‘நோ நோ ஜி.
இந்தப் படம் எனக்கு நஷ்டமாகும்னு நான் சொல்லலை.

போட்டது ஐநூற்று நாற்பத்து மூணு, ஐநூற்று நாற்பத்து நாலு கிடைச்சாலும் ஒரு கோடி லாபம்தான் எனக்கு. ஆனால் எனக்கு அவ்வளவு மோசமான லாபம் தேவையில்லை. நீங்க சொன்ன மாதிரி போட்டதை விட டபுள் லாபம் கிடைக்கணும்.
அப்போதான் எனக்கு இண்டர்நேஷனல் லெவலில் மரியாதை.
 எண்ணூறு கோடியே வசூலானாலும் என்னைப் பொறுத்தவரை அது நஷ்டமே.

உங்க மேல இருக்கும் நம்பிக்கை பொய்யாகிடுச்சுன்னு அர்த்தம்.” என்று சொல்லி போனை கட் பண்ணிவிட்டாராம்.
 இயக்குநர் இதை அப்படியே மெயின் ஹீரோவுக்கு கொண்டு போக, அவரோ ’ஏன் ஏன் ஏன்?
 இப்படி வசூல் டல்?’ என்று கேட்க,
 “சார் உங்களுக்கே தெரியும் படத்தோட விளம்பரத்துல ரொம்பவே கையை சுருக்கிட்டார் . அதோட விளைவுதான் இது. நிச்சயமா போட்டதை விட பல கோடிகள் லாபம் அள்ளும். ஆனால் டபுளாகணும்னு அடம்பிடிச்சால் எப்படி?
 நாம ரிலீஸாகியிருக்கிற நேரம் கஜா புயல் பிரச்னை. ஆக கிட்டத்தட்ட எட்டு பத்து மாவட்ட மக்கள்  தியேட்டருக்கு வரவே தயாரில்லை.
 சோற்றுக்கே கை ஏந்துறப்ப, சினிமா பார்க்கிறது எப்படி?
ஸ்கூல்களில் அரைவருட பரீட்சை துவங்கபோகுது, மழை அதுயிதுன்னு ஆகிடுச்சு.

இது போக நம்ம படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆகுறதுக்குள்ளேயே உங்களோட அடுத்த படத்துக்கான ப்ரமோஷனை தெறிக்க விடுது தயாரிப்பாளர் தரப்பு.
இந்த தயாரிப்பாளர் மேலே இருக்கிற பொறாமையை விளம்பரத்துல காட்டி, நம்ம படத்தை டல்லடிக்க வைக்கிறார் உங்களோட தயாரிப்பாளர்.
” என்று நீட்டிக் கொண்டு போக.... “வெயிட் வெயிட் வெயிட். நான் உங்களை அகெயின் கூப்பிடுறேன்” என்று கட் செய்துவிட்டாராம் மாஸ் ஹீரோ.

முழு இடியும் தன் தலையில் இறங்கியதால் நொந்து உட்கார்ந்த இயக்குநருக்கு போன் போட தயாரிப்பாளர்...”பாகுபலி 2 படத்தை வெறும் 250 கோடியில எடுத்தாங்க.
ஏப்ரல் 2017ல் ரிலீஸான படம் இந்த நவம்பர் வரைக்கும் ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் வசூல் பண்ணி கொடுத்திருக்குது. அதைவிட டபுள் மடங்குக்கும் அதிகமான பட்ஜெட் நம்ம படம். அதனால லாபமும் அதைவிட டபுளா இருக்கணும். கீப் இட் இன் யுவர் மைண்ட்.” என்றாராம்.

 கடுப்பேறிப்போன இயக்குநர் ஒரு கட்டத்தில் தன் காஸ்ட்லி காரை எடுத்துக் கொண்டு இயக்குநரை சந்திக்க சென்றிருக்கிறார்.
ஆனால் அவரோ ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு அடைந்தே கிடக்கிறாராம். தெளிய தெளிய மீண்டும் மீண்டும் தீர்த்தம் எடுத்துக் கொண்டே இருக்கிறாராம்.
 மனைவி, குடும்பம் எல்லாம் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தலைசுற்றலிலேயெ இருக்கிறாராம். வாயை திறந்தாலே ‘ரெண்டே வருஷத்துல நாலாயிரம் கோடி வசூலாகணும் என் படம்.
இல்லேன்னா நான் கேவலம்.’ என்று புலம்புகிறாராம்.
எப்போது தெளியுமோ?
                                                                                                      -வினோத் குமார்
                                                                                                               ஆசியாநெட்டில்.                                                          
                            
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 4 டிசம்பர், 2018

திட்டமிட்ட படுகொலை.

உத்தரப்பிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை, சங்-பரிவாரக் கும்பல் படுகொலை செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

"ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா மற்றும்பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு, இந்த  படுகொலையைசெய்திருப்பது அம்பலமாகியுள்ளது."

தற்போது இச்சம்பவம் தொடர்பாக, பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் யோகேஷ்ராஜ் உட்பட 87 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள தனிப்படை காவல்துறையினர், அவர்களில் 3 பேரை கைது செய்துள்ளனர்.


கொலைச் சதியின் பின்னணி
கடந்த 2015-ஆம் ஆண்டு, மாட்டிறைச்சிவைத்திருந்ததாக கூறி, முகம்மது அக்லக் என்ற இஸ்லாமியர் பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அவரது மகன் தானிஷ் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

அப்போது, இந்த வழக்கை விசாரித்து, அக்லக் வைத்திருந்தது மாட்டிறைச்சி அல்லஎன்று கூறியவர்தான் காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதிலும் தீவிரமாக இருந்துள்ளார்.

இதற்கு பழிவாங்கவே, சுபோத் குமார் சிங்கை, சங்-பரிவாரங்கள் தற்போது படுகொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சங்-பரிவாரின் சூழ்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாஹர்மாவட்டத்திற்கு உட்பட்ட ஸயானா என்ற கிராமத்தில்தான் சுபோத் குமார் சிங் படுகொலைநடந்துள்ளது. திங்களன்று காலை ஸயானா கிராமத்திற்கு வெளியே 25 பசுக்களின் இறைச்சி குவித்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறி, அவற்றை சங்-பரிவாரத்தினர் டிராக்டரில் அள்ளிப்போட்டுக் கொண்டு, சிங்க்ராவதி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

 அங்கு, மாடுகளைக் கொன்றவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்ட அவர்கள், காவல்நிலையத்தின் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த வாகனங்களையும் தாக்கிதீயிட்டுக் கொளுத்தி வெறியாட்டம் போட்டுள்ளனர்.
நிலைமை மோசமானதால், அங்கு வந்தகூடுதல் காவல்துறையினர், தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும்,வன்முறைக் கும்பலைக் கலைக்க முயன் றுள்ளனர்.

 இதற்கிடையேதான், காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை குறிவைத்த வெறிக்கும்பல் ஒன்று, ஜீப்பிலேயே வைத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.
துப்பாக்கிகளாலும் அவரை சரமாரியாக சுட்டுள்ளது. 11 ரவுண்டுகள் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சுபோத் குமார் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


உயிரை எடுப்பதில் குறியாக இருந்த வெறிக்கூட்டம்
சங்-பரிவார கும்பலின் கல்வீச்சில்தான் சுபோத் குமார் இறந்தார் என்று முதலில் செய்திகள் வெளியாகின.

ஆனால், சுபோத்குமார் சிங் தலையில் 32 மி.மீ. அளவிற்கு துளை இருப்பதும், துப்பாக்கியால் சுடப்பட்டதன் மூலமாகவே இவ்வளவு பெரிய காயம்ஏற்பட்டுள்ளதும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கூர்மையான மற்றும்கனமான ஆயுதம் மூலம் அவர் தாக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.சுபோத் உயிர் பிழைக்கக் கூடாது என்று,வன்முறையாளர்கள் மிகவும் கவனமாகஇருந்துள்ளனர்.
சுபோத் குமார் சிங்கின் கார் ஓட்டுநர் ராம் அஸ்ரே-வின் வாக்குமூலமும் அதை உறுதிப்படுத்துகிறது.

“ஆபத்தான நிலையில் இருந்த சுபோத்குமாரை மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றேன்; ஒரு கும்பல் திடீரென்று வழிமறித்து கற்களால் தாக்கியது; அதோடு அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் இருந்து குண்டுகளும் பறந்துவந்தன; இதனால் என் உயிரை காக்க ஓடிவிட்டேன்; அதன்பின் என்ன நடந்தது என்றுதெரியாது. கூடுதல் போலீசாரோடு வந்துபார்த்த போது இன்ஸ்பெக்டர் இறந்திருந் தார்” என்று அஸ்ரே தெரிவித்துள்ளார்.

சதியை உறுதிப்படுத்தும் வட்டாட்சியரின் சந்தேகங்கள்
சுபோத் குமார் சிங் படுகொலை, இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை, புலந்த்சாஹர் வட்டாட்சியர் ராஜ்குமார் பாஸ்கரின் சந்தேகங்களும் வலுவாக்கியுள்ளன.
“பசுக்கள் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டதுதான் வன்முறைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பசுக்கள் கொல்லப்பட்டு, அதன்தோல் கரும்புத் தோட்டத்தில் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று போடப்பட்டுள் ளது.

மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றுநினைப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்.எனவே, வேண்டுமென்றே மக்களுக்கு இதுதெரிய வேண்டும் என வெளியே தொங்கவிட்டு சென்று இருக்கிறார்கள்” என்று வட்டாட்சியர் கூறியுள்ளார்.
மேலும், “இந்த விஷயம் தெரிந்ததும் அந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கில் பசுப் பாதுகாவலர்கள் வந்து உள்ளனர். ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா, பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த 400-க்கும் அதிகமான நபர்கள்அங்கு வந்து இருக்கிறார்கள். அவர்கள் மாட்டிறைச்சியை வைத்து கலவரம் செய்ய தொடங்கி உள்ளனர்.


அந்த பசுக்காவலர்கள் எல்லோரும், ஏற்கெனவே டிராக்டரில்தயாராகி இருந்தது போல வந்துள்ளனர்.
சரியாக புகார் வந்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். அவர்கள் தயாராகி இருந்தால் மட்டுமே இத்தனை ஆட்களை அழைத்துக் கொண்டு வர முடியும்.
எனவே, இது திட்டமிடப்பட்ட கலவரமாகஇருக்குமோ? என்று சந்தேகம் வருகிறது” என்றும் வட்டாட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

“மாட்டிறைச்சி போடப்பட்ட பகுதிக்குஅருகில், இஸ்லாமியர்களின் 3 நாள் திருவிழா ஒன்று திங்களன்று துவங்கியுள்ளது. ‘இதெமா’ என்ற பெயரிலான இந்த விழாவில், கலவரம் உருவாக்க வேண்டும்; அது இந்து - இஸ்லாமிய பிரச்சனையாக மாற வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம்” என்று போலீசாரும் தங்களின் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆதித்யநாத் அரசே காரணம்
2015-இல் படுகொலை செய்யப்பட்ட முகம்மது அக்லக் வழக்கை விசாரித்துவந்ததே, சுபோத் குமார் சிங் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவரின் சகோதரிதெரிவித்துள்ளார்.

மேலும், இப்படுகொலைக்கு உத்தரப்பிரதேச ஆதித்யநாத் அரசு மற்றும் அதன் காவல்துறையின் சதி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
 மேலும், முதல்வர் ஆதித்யநாத், எந்நேரமும் மாடு, மாடு என்று திரிவதாகவும் விமர்சித்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக, பெயர் தெரிந்த 27 பேர் மீதும், அடையாளம் தெரியாத 60 பேர் மீதும் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 வன்முறை தொடர்பாக காவல் துறையினர் இதுவரை 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது ஐபிசி 147,148, 149 (வன்முறையில் ஈடுபடுதல்),
332 (அரசு ஊழியரைப் பணிசெய்யவிடாமல் தடுத்தல்),
353 (பணியின்போது அரசு ஊழியரைத் தாக்குதல்),
341 (சட்டவிரோத கூடுதல்),
302 (கொலை),
307 (கொலை முயற்சி),
436 (தீ வைத்தல்) ஆகிய9 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.படுகொலை செய்யப்பட்ட சுபோத் குமார்சிங்கின் குடும்பத்திற்கு ஆதித்யநாத் அரசு ரூ. 40 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வன்முறையின்போது,
நண்பரை ஊருக்கு அனுப்புவதற்காக அந்த பகுதிக்கு வந்து -

 வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுமித் என்ற 19 வயது இளைஞரின் குடும்பத்திற்கும் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்லவனுக்கு வல்லவன்.

தமிழக அரசை பி.ஜே.பி.தான் நடத்துகிறது! அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பயந்து நடுங்குகிறார்கள்!...என்று கடந்த ஒன்றரை...