வெள்ளி, 11 நவம்பர், 2011

ஜெயலலிதா எப்பவுமே ஈழ எதிரிதான்...


சீமான் ,நெடுமாறன் போன்றவர்கள் இதைக் கவனித்தார்களா? 

இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.
சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்த்து. விவாதத்தின் இறுதியில் “தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வீர்களா?” என்று அதில் பங்கேற்ற அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் மைத்ரேயனிடம் கேட்டபோது, “இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைத்ரேயன். “கூட்டணி அமைக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லவில்லை. பதிலளிக்க மாட்டோம் என்றுதான் கூறுகிறீர்கள்” என்று கூறிச் சிரித்தார் தொலைக்காட்சி நிருபர். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ஈழப்பிரச்சினை பற்றிப் பேசும்போது கூட காங்கிரசை ஜெயலலிதா தாக்குவதில்லை. கருணாநிதியைத்தான் குற்றம் சாட்டுகிறார்.
இருப்பினும், ஜெயலலிதாவின் “தமிழீழ ஆதரவு போர்முழக்கத்தை” வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் “ஜெயலலிதா மீது தங்களுக்கு எவ்வித பிரமையும் கிடையாது” என்று கூறிக்கொண்டே தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. “காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் நோக்கம்” என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். “ம.க.இ.க வின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மறைமுகமாக காங்கிரசுக்கு உதவுவதாகவே அமையும்” என்றும் இவர்களெல்லாம் கருதுகிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் பகுத்தறிவுப் பேச்சாளர்கள் பக்தர்களை இடித்துரைப்பதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்பது அந்தப் பாட்டு.  பாட்டைப் பாடிக்காட்டிவிட்டு,  “இவனையெல்லாம் திருத்தமுடியுமா?” என்று பக்தர்களை எள்ளி நகையாடுவார்கள் பேச்சாளர்கள். தற்போது “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், இரட்டை இலையை மறந்து விடாதீர்கள்” என்று வீதி தோறும் பிரச்சாரம் நடக்கிறது.
அம்மையாரின் தமிழ் விரோத, ஈழ விரோத நடவடிக்கைகள் பற்றி வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிந்த அளவுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்தவரை அம்மாவின் வரலாற்றைக் கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம். வரலாறு தெரியாத தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும், வரலாற்றை மறந்துவிட்ட மூத்தோருக்கும் இது உதவக்கூடும். வரலாற்றை மறைக்க விரும்புவோருக்கும் தங்கள் சொந்த மூளையிலிருந்தே அவற்றை அகற்றிவிட விரும்புவோருக்கும் நிச்சயம் இவை உதவ மாட்டா.
காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் இலக்கு என்று கூறிக்கொள்வோருக்கு ஒரு கேள்வி. காங்கிரசு எல்லாத் தொகுதிகளிலும் தோற்று, அதிமுக எல்லாத் தொகுதிகளிலும் வென்று, அம்மையார் டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து அரசும் அமைத்து விட்டால்…? அப்படி ஒரு விபரீதம் நடக்கக்கூடாது என்று இஷ்டதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்ளலாம். மீறி அப்படி நடந்துவிட்டால்? அதை எப்படி விளங்கிக் கொள்வது?
“நம்மைப் பொருத்தவரை காங்கிரசுக்குப் பாடம் கற்பித்து விட்டோம். தன் பங்குக்கு ஜெயலலிதாவும் நமக்குப் பாடம் கற்பித்து விட்டார். இரண்டு பேருடைய நோக்கமும் நிறைவேறியது” என்று விளங்கிக் கொள்ளலாமா? ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வது என்பது காங்கிரசுக்குச் செய்யும் நேரடி உதவியா, மறைமுக உதவியா?
சிந்திக்க வேண்டும். “பாடம் கற்பிப்பதற்கு” முன், வரலாறு கற்பிக்கும் பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஏதோ “நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் – இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.
  • ராஜீவ் கொலைக்கு முன்:
தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்
  • ஜூலை 1991:
ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.
  • செபடம்பர் 1991:
சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.
‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.
1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.
ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.
ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.
ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.
  • 1992
தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.
‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.
1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.
தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை – அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி – கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.
                 
  • 1993
புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.
1993 மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.
கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.
பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.
ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.
1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.
  • 2002
புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.
  • ஜூலை 2002:
விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.
  • செப்டம்பர் 2002:
பயங்கரவாத – பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
  • செப்டம்பர் 2007
தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.
  • 2008:
அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.
மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இப்படி எல்லாம் செய்யும் ஜெயலலிதாவை ஈழப்புலிகள் ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்ளும் சீமான்,நெடுமாறன் வகையறாக்கள் எதைக்கொண்டு ஈழமக்களுக்கு நல்லதை செய்வார் என ஜால்ரா தட்டுகிறார்கள்?
இதோ மூவரின் தூக்கு விடயத்தில் அவரின் சுயரூபம் வெளியாகிவிட்டதே.

                        

வியாழன், 20 அக்டோபர், 2011

அன்னாவும்,பூசனும்


அண்ணா ஹசாரே பிரஷாந்த் பூஷன்
அண்ணா ஹசாரே - பிரஷாந்த் பூஷன்
‘நல்லவனெப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்’ – கிராமப்புறங்களில் ‘நல்லவர்களைப் போல’ வேடமிடுபவர்களைக் குறித்த சொலவடை இது. நாமும் முன்பே சொன்னோம். நாம் சொன்னதை லேசுபாசாய் சந்தேகித்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் சந்தேகத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இதோ, கடந்த வாரம் ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதை அடுத்து அண்ணாவின் பக்த கோடிகள் போட்டுக் கொண்டு திரிந்த ‘நல்லவன்’ முகமூடி கிழிந்து தொங்குகிறது.
கடந்த பண்ணிரண்டாம் தேதி தனது அலுவலகத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த ப்ரஷாந்த் பூஷனை, இந்தர் வர்மா என்கிற இந்து பயங்கரவாதி கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திலேயே மடக்கிப் பிடிக்கப் பட்ட இந்தர் வர்மா, தற்போது விசாரணைக் காவலில் இருக்கிறார். மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இவரது கூட்டாளிகளான தாஜிந்தர் பால் சிங் மற்றும் விஷ்னு குப்தா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏன் இந்தத் தாக்குதல்? சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ப்ரஷாந்த் பூஷன், அங்கே சமாதான முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லையென்றால் காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதனடிப்படையில் சுமூகமாக தீர்த்துக் கொள்வது சரியாக இருக்கும் என்றும், இதே விஷயத்தை முன்னாள் பிரதமர் நேருவும் கூட சொல்லியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பகுத்தறிவோடும் நியாய உணர்வோடு சிந்திக்கும் எவருமே இதில் இருக்கும் ஜனநாயகப்பூர்வமான உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்தின் கோரத்தாண்டவங்கள் இன்று வரை தொடர்ந்து வருவதும் நாம் அறிந்தது தான்.
ப்ரஷாந்த் பூஷனின் மேற்கண்ட பேட்டியைத் தொடர்ந்து கடும் ஆத்திரமுற்ற இந்து பயங்கரவாதிகள், தங்களது ட்விட்டர் பக்கத்தில் ப்ரஷாந்த் பூஷனைத் தாங்கள் ‘தண்டிக்கப்’ போவதைக் குறித்து வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். தாக்குதலுக்குப் பிறகு ட்விட்டர் தளத்தில் எழுதிய தாஜிந்தர், “அவன் என் தேசத்தைப் பிளக்க முயற்சித்தான்; நான் அவன் மண்டையைப் பிளக்க முயற்சித்தேன்” என்று எழுதியுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இம்மூவருமே சங்பரிவார் பயங்கரவாத கும்பலோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். இதில், தாஜிந்தர் பால் சிங் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவில் செயல்பட்டவர். எல்.கே அத்வானி உள்ளிட்ட அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களோடு தொடர்பில் இருந்துள்ளார். இவரும் இவரது இன்னொரு கூட்டாளி விஷ்னு குப்தாவும் சேர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் ‘பகத்சிங் க்ராந்தி சேனா’ என்கிற ஒரு அமைப்பைத் துவக்கியிருக்கிறார்கள். பின்னர் இவர்களோடு ‘பிங்க் ஜட்டி’ புகழ் ஸ்ரீராம் சேணாவைச் சேர்ந்த இந்தர் வர்மாவும் இணைந்து கொள்கிறார்.
மேற்கண்ட சம்பவம் எதிர்பாராத ஒன்று இல்லை. சும்மா இருந்த தென்காசியில் சும்மா ஒரு எழுச்சியை உண்டாக்க சும்மா ஒரு குண்டு வைத்துப் பார்ப்போமே என்று சும்மா திட்டமிட்டு முயற்சித்துப் பார்த்த ‘நல்லவர்கள்’ அல்லவா இந்த ‘இந்து பயங்கரவாதிகள்’ . ஆனால், இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் இருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இணையதளங்களிலும் அதற்கு வெளிப்படும் எதிர்விணைகளில் அண்ணா பக்தர்களின் மேக்கப் இல்லாத ஒரிஜினல் முகம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது தான் நாம் குறிப்பாக கவனிக்க வேண்டியது.
அண்ணா தீவிரமாக சர்க்கஸ் நடத்திக் கொண்டிருந்த காலங்களில் ‘எங்கள் நோக்கமே ஊழல் ஒழிப்பு ஒன்று தான். எங்களுக்கு அரசியல் சார்பே கிடையாதாக்கும்’ என்றெல்லாம் நீட்டி முழக்கியவர்கள் இவர்கள். இந்த அரசியலற்றவாதம் போற்றுதலுக்குரியதாக கருதப்பட்டது.அண்ணா ஹசாரேவின் கோரிக்கைகளில் இருந்த மொண்ணைத்தனம் கூட இந்த அரசியலற்றவாதத்தின் பின்னே தான் பதுங்கிக் கிடந்தது. நம்ம உள்ளூர் காக்கி டவுசர் ஜெயமோகனே ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரேவை சீசன் பார்த்து ஆதரித்த போதும் கூட பார்வையாளர்களுக்கு சந்தேகிக்கத் தோன்றவில்லை. ஆனாலும் நாம், சென்னையில் கூடிய அண்ணா பக்தர்கள் பலரின் பட்டாபட்டி காக்கி நிறத்தில் பல்லிளித்ததை நமது நேரடி ரிப்போர்ட்டில் அப்போதே பதிவு செய்திருந்தோம்.
ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியா தளத்தில் வெளியாகியிருந்த செய்திக் கட்டுரையின் மறுமொழிகளில் அண்ணா பக்தர்கள் அவரைத் தாளித்துக் கொட்டினர். ஆயிரக்கணக்காக நீளும் அந்த மறுமொழிகளில் அண்ணா கும்பல் போற்றும் அரசியலற்றவாதத்தின் கோர முகம் குறுக்கும் நெடுக்குமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகளை கண்மூடித்தனமாய் ஆதரித்திருந்த அண்ணா ரசிகர்கள், ப்ரஷாந்த் பூஷனை சும்மா தாக்கியதோடு நிறுத்தியிருக்கக் கூடாது என்றும், அவரது எலும்புகளை ஒடித்திருக்க வேண்டுமென்றும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும், ப்ரஷாந்த் பூஷன் மட்டுமில்லாமல் அருந்ததி ராய் போன்ற ஜனநாயக உணர்வுள்ள பிறரையும் குறிப்பிட்டு ‘வெட்டு, குத்து, கொல்லு’ பாணியில் வெறியைக் கக்கியிருக்கின்றனர்.
அரசியலற்றவாதமென்பதே தீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் முகமூடி தானென்பதற்கு இந்த சம்பவம் மிக அண்மைய உதாரணம். வேறு விதமாகச் சொல்வதானல், அரசியலற்றவாதமும் வலதுசாரி இந்து பயங்கரவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம். உதாரணமாக, நமது மைலாப்பூர் ‘பார்த்தசாரதிகள்’ கூட அரசியலற்றவர்கள் தான். இவர்கள் எந்த கட்சியின் அரசியலோடும் தம்மை இணைத்துக் கொள்வதை பார்க்க முடியாது தான். தேவைப்பட்டால் பாரதிய ஜனதாவைக் கூட சில சந்தர்பங்களில் விமர்சிக்கவும் செய்வார்கள். ஆனால், எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் இவர்களின் சிந்தனையும் துக்ளக்கின் சிந்தனையும் ஆச்சர்யப்படுமளவிற்கு மிக எதார்த்தமாகவும் இயல்பாகவும் ஒத்துப் போவதை கவனித்திருப்பீர்கள். சிறுபாண்மையினர், தலித்துகள், இடஒதுக்கீடு, இந்தியா, இந்தி போன்ற குறிப்பான விஷயங்களில் இவர்கள் அப்படியே ஆர்.எஸ்.எஸ் பேசுவது போலவே பேசுவார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டால் இரட்டைக் குவளை பிரச்சினை பற்றி நான்’காண்டு’களுக்கு முந்தைய தமிழ் வலைப்பதிவர்களில் ‘நூல்’ கம்பேனியார் உதிர்த்திருந்த முத்துக்களைத் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
இது ஒருபுறமிருக்க, ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா கும்பலின் பிற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களும் பால் தாக்ரேவின் குரலாகவே ஒலித்திருக்கிறது. காஷ்மீரைக் காக்க உயிரையே தரத் தயார் என்று சவடால் அடித்த அண்ணா ஹசாரே, ப்ரஷாந்த் பூஷனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். மேலும் அவர் தமது குழுவில் தொடர்வதைப் பற்றி குழுவின் மையக் கூட்டத்தின் வைத்து முடிவெடுப்போம் என்று அறிவித்துள்ளார். இதே போன்ற கருத்தையே கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால், சந்தோஷ் ஹெக்டே மேதா பட்கர் போன்ற பிறரும் தெரிவித்துள்ளனர்.
மிகச் சிக்கலான காஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரையில் தீர்வு எதுவாக இருக்க வேண்டுமென்றாலும் அது அம்மக்களின் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகக் கோரிக்கையாகவும் விருப்பமாகவும் இருக்க முடியும். ஆனால், வல்லாத்தளையாக அந்த மக்களை தனது இரும்புப் பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அகண்ட பாரதக் கனவில் மிதக்கும் இந்து பயங்கரவாதிகள் காலம் காலமாக சொல்லி வருவது தான். இதைத் தான் இப்போது அண்ணா கும்பலும் அவரது ரசிகர் பட்டாளமும் வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆக, அரசியலற்றவாதமும் – மத பயங்கரவாதமும் அடிப்படையில் வேறு வேறானதல்ல என்பதை இச்சம்பவம் இன்னுமொரு முறை பொட்டிலடித்தாற் போல் உணர்த்தியிருக்கிறது. ஊழலை ஒழித்து இந்தியாவையே புரட்டிப் போட்டு விடுவோமென்று சவடாலடிக்கும் அண்ணா கும்பலின் ஊழல் பற்றிய புரிதலே அடிமட்டத்தில் இருப்பது ஒருபுறமென்றால், இவர்கள் பார்ப்பன இந்து பயங்கரவாதம், மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் போன்ற கேந்திரமான பிற விஷயங்களில் என்னவிதமான கருத்துக்களை வைத்திருக்கிறார்களென்பது வெகு சில சந்தர்பங்களில் தான் வெளிப்பட்டிருக்கிறது. முன்பு மோடியை அண்ணா ஹசாரே புகழ்ந்ததும் இப்போது ப்ரஷாந்த் பூஷன் தாக்கப்பட்டதும் அவைகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இனிமேலும் அண்ணா ஹசாரே என்கிற இந்த இந்துத்துவ கோமாளியை நம்பி பின்னே செல்லத் தான் வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

 

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் : அப்துல் கலாம்!

கோவை: கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அப்துல் கலாம் கூறினார். கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு சார்பில் தொழிலதிபர் ஜிகே.சுந்தரம் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்றார். பின்னர் மாணவர்கள், பொதுமக்களின் கேள்விகளுக்கு, அப்துல் கலாம் அளித்த பதில்கள்: இந்திய தொழில்நுட்ப கழகமான ஐஐடியின் தரத்தை சிறந்த ஆசிரியர்கள் நியமனம், போதுமான பயிற்சி, சிறந்த பாடத்திட்டம் மூலம் மேலும் மேம்படுத்த முடியும்.  இந்தியாவில் தற்போது 235 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. 2020ல் 400 மில்லியன் டன்னாக அதிகப்படுத்த வேண்டும். காற்று, சூரிய சக்தி, நீர், பயோ டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அணுமின் உற்பத்தி தவறில்லை. அணுமின்சாரம் தவிர்க்க முடியாதது. அதே நேரம் அணுமின் நிலையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் வராது என்பதையும், அதன் பாதுகாப்பையும் விஞ்ஞானிகள் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

புதன், 5 அக்டோபர், 2011

உள்ளே போகும் அமைச்சர்கள்


தி.மு.க. பிரமுகர்களுக்கு எதிராக ‘இதோ வருகிறது.. அதோ வருகின்றது’ என்று கூறப்பட்டுவந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் தீவிரமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் வீடு, மற்றும் அவரது உறவினர் வீடுகள் உட்பட, 11 இடங்களில் நேற்று (செவ்வாய் கிழமை) அதிரடி சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அதிகாரத்தின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
உள்ளாட்சித் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க. பிரமுகர்களை தேர்தல் வேலைகளில் இருந்து ஒதுக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் ஆளும் கட்சிக்கு உள்ளது. அதற்காக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நில அபகரிப்பு வழக்குகள், ஆட்களை ஜாமீனில் வெளியே வரவும் விட்டுவிடுகிறது.
இதற்கு மேலும் தி.மு.க. தலைகளை வெளியே வராமல் உள்ளே வைத்திருக்க ஒரே வழி, சொத்துக் குவிப்பு புகார்கள்தான் என ஆட்சி மேலிடத்துக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கடந்த வார இறுதியில் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்ட இரு போலீஸ் உயரதிகாரிகளுடன், முதல்வரே நேரில் இதுபற்றி அரை மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்ததாகத் தெரியவருகின்றது. போலீஸ் அதிகாரிகளிடம், குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்களின் பைல்களையும் கையோடு எடுத்து வருமாறு கார்டனில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
வார இறுதியில் நடைபெற்ற ஆலோசனையின் அதிரடி ஆக்ஷன்தான், செவ்வாய்க் கிழமை அரங்கேறியது என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில். “இருந்து பாருங்கள், இது வெறும் தொடக்கம்தான். அடுத்தடுத்து பல இடங்களில் ரெய்டு நடக்கப் போவதைக் காணப்போகிறீர்கள்” என்றால் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்.
ரெய்டுக்கு உள்ளாகிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டம் கடலூர். அங்குள்ள முட்டம் கிராமத்தில் அவர் வீடு உள்ளது. அங்கே சோதனை நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் நடாத்திவரும் கல்லூரிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன. அங்கும் ரெய்டு நடந்துள்ளது. நாட்டார்மங்கலத்தில் இரண்டு கல்லூரிகள், பழஞ்சாநல்லூரில் மூன்று கல்லூரிகள் என்று அந்த லிஸ்ட் உள்ளது.
இதைத் தவிர, இந்த முன்னாள் அமைச்சருக்கு ஏகப்பட்ட பினாமிகள் உள்ளனர் என்பது ஊரெல்லாம் தெரிந்த ரகசியம். அந்த வகையிலும் அவரது உறவினர்கள் பலரது வீடுகள் அதிரடி ரெய்டுக்கு உள்ளாகியுள்ளன. முட்டம், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், வடலூர், திருமுட்டம், கூரைநாடு (மயிலாடுதுறை) ஆகிய இடங்களில் உள்ள அவரது பல உறவினர்களின் வீடுகளில் ஒரே நேரத்தில் போய் இறங்கினார்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார்.
சொந்த ஊர் வீட்டைத் தவிர, அமைச்சர் சென்னைக்கு வரும்போது தங்குவதற்காக அவருக்கு பாலவாக்கம், 5-வது குறுக்கு தெருவிலும் ஒரு வீடு உள்ளது. அங்கும் சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகளின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சரின் மெயின் டாக்குமென்ட் காப்பகமே இந்த வீடுதான் என்கிறார்கள். மற்றைய இடங்களில் உள்ள சொத்துக்கள் பலவற்றைப் பற்றிய விபரங்கள், மற்றும் அவை தொடர்பான கணக்குகள் அனைத்தும் சென்னை வீட்டில் வைத்தே மெயின்டெயின் பண்ணியதாகவும் கூறப்படுகின்றது.
அவற்றில் பல ஆவணங்கள் இப்போது போலீசின் கைகளில்!
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் இடங்களில் நடைபெற்ற ரெய்டு தமக்கு வெற்றி என்கிறார்கள் ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள். இந்த ரெயிடுக்கு முன்னர் பல தகவல்களை கடந்த சில வாரங்களாகவே அவர்கள் திரட்டி வந்திருப்பதாகவும் அந்த அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடைபெற்ற ரெய்டு, பல தி.மு.க. மாஜிகளை கலங்க வைத்திருப்பதாக தி.மு.க. வட்டாரங்களிலேயே கூறுகின்றார்கள். உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் உற்சாகமாக இறங்க தயாராக இருந்த சில முன்னாள் அமைச்சர்களே, இப்போது லேசாகப் பின்னடிக்கத் தொடங்குகிறார்கள்.
இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா என்ற ரீதியில் போகிறதாம் அவர்களின் நினைப்பு.
இதற்கிடையே தி.மு.க. வட்டாரங்களில் பரவலாக அடிபட்டுக் கொண்டிருக்கும் மற்றொரு கதை, மிக விரைவில் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரும் ரெய்டு வளையத்துக்குள் வருவார்கள் என்பதுதான். சொந்தக் கட்சிக்காரர்களே இதுபற்றி வெளிப்படையாகப் பேசும் அளவுக்கு, இவர்கள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அவ்வளவாக லைம்-லைட்டுக்குள் வராத ஆள். அவரது சொத்துக்கள் மீது நடாத்தப்பட்டது ஒரு ட்ரையல் ரன்தான் என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.
நன்றி:விறுவிறுப்பு
                           மச்சக்கன்னி......
              ,

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

அன்னா கசாரே-ஒரு மாய பிம்பம்.


 “நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே”  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி)
கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார். அதாவது சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஊர்ப்புறங்களில் ராப்பகலாக சைக்கிள் மிதிக்கும் சைக்கிள் வீரர் நிகழ்ச்சியையே பெரிய சைஸில் நடத்தியது போலிருந்த இந்தப் போராட்டத்தில், கொட்டு அடித்து நோட்டீஸ் கொடுக்கும் நபரின் பாத்திரத்தை கிரண் பேடியும் அருண் கேஜ்ரிவாலும் செய்தனர். ஓயாமல் தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த கிரண் பேடி, “நம்முடைய அண்ணா நன்றாக இருக்கிறார்” என்று அவ்வப்போது  அறிவித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் கூடியிருந்த கூட்டம், ஐஸ் கிரீம், பாப்கார்ன், நொறுக்குத்தீனியைத் தின்றபடியே, “அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சிக்கொடி, அரசியலையே வெறுக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு தேசியக் கொடி போலிருக்கிறது!
ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றவில்லையென்றால், “உணவைத் துறப்பேன்” என்று ஹசாரே ஒருபுறம் எச்சரிக்க, “மசோதாவை நிறைவேற்றவில்லையென்றால் நான் உடையைத் துறப்பேன்” என்று அரசை எச்சரித்தார் விளம்பர நடிகை சலீனா வாலி. ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களோ தங்களது வருமானத்தையே துறந்து, “ஊழலுக்கு எதிராகப் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க, யாரும் காசு தர வேணாம்” என்று அறிவித்தன. இப்படி பல வகையறாக்களின் ஆதரவையும் பெற்றிருந்த ஹசாரே, அவர் யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ அந்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.
ஆகஸ்டு 16  ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக  ஹசாரேயை அழைத்து வந்து மேற்படி போராட்டக்களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது  ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.
                       
என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதாவைத் தயாரித்தனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். “எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்”  அதாவது பட்டினிப் போர்  என்று அறிவித்தார் ஹசாரே.
தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், “அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன்,  ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.
“மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்”  என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்” என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் ‘சும்மனாச்சிக்கும்’ ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு, மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.
குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக  வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, “வெற்றி வெற்றி” என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.
ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே  பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து  அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி “செபி” யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.
இப்பேர்ப்பட்ட  யோக்கியர்கள் திடீரென்று ஒரு ‘மாபெரும்’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின்நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.
தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.
ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும்  இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சேர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பதுசிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள்.  இன்று தனியார்மயக் கொள்கைகள்,  ஊழலை முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன.  எனினும் ‘தனியார்மயத்தை ஒழி’ என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.
ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று ‘சர்வ வல்லமை பொருந்திய’ ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை  உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணியாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.
கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மய தாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘புனிதர்கள்’ சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரேயின் அணி.
நன்றி:வினவு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
             

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...