சனி, 29 ஜூலை, 2017

இந்தியா 300% பணக்கார நாடானது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 300% உயர்ந்திருப்பது தொடர்பான செய்திகள் இணையதளங்களில் திடீரென நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜ்யசபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்து அமித்ஷா போட்டியிடுகிறார்.

 இத்தேர்தலுக்காக அமித்ஷா வேட்பு மனுவும் தாக்கல் செய்துள்ளார். 

 300% உயர்வு அமித்ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள 
அவரது சொத்து மதிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த 5 ஆண்டுகளில் அமித்ஷாவின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து 300% அதிகரித்துள்ளது. 

மித்ஷாவின் அசையும் சொத்துகள் ரூ1.90 கோடியில் இருந்து ரூ19 கோடியாக அதிகரித்துள்ளது. 
மனைவிக்கு தனியே  ரூ10.38 அசையும் சொத்து இருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சொத்துகள் 80% உயர்ந்துள்ளது. 
2014-ம் ஆண்டு ரூ 4.91 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது ரூ.8.88 கோடியாக அதிகரித்துள்ளது.

திடீர் நீக்கம் இச்செய்தியை ஆங்கில இணையதளங்கள் செய்திகளாக வெளியிட்டிருந்தன. 
ஆனால் திடீரென இந்த செய்தி மட்டும் அந்த இணையதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 
கூகுள் சர்ச் அதேநேரத்தில் கூகுள் சர்ச்சில் நீக்கப்பட்ட செய்திகளின் லிங்குகள் இப்போதும் இருக்கின்றன. 


அமித்ஷாவின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருப்பது தொடர்பாக பெரும்பாலான வட இந்திய ஊடகங்கள் மவுனம் காத்தே வருகின்றன. 

மவுனம் ஏன்? தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் சொத்து மதிப்புகள் இப்படி விஸ்வரூபமெடுத்திருந்தால் வட இந்திய ஊடகங்கள் கிழித்து தொங்கவிட்டிருக்கும். 
கருத்தியல் முறை கணக்கீட்டில் ஊழல் எனப்படும் 2ஜி ஏலத்தை ஊழல் என்று இன்றுவரை முக்கிய இடம் கொடுத்து எழுதித்தள்ளும் வட இந்திய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது ஊடகத்தர்மத்தை வெளிக்காட்டுகிறது.
ஏற்கனவே வெளியான செய்தியை யாருக்கு பயந்து நீக்கின ?

இப்படி கால்நடுங்கும் தைரிய ஊடகங்கள் மற்றவர்கள் ஊழல் பற்றி பேச என்ன தகுதியை பெற்றிருக்கின்றன.?

அமித்ஷா விவகாரத்தில் மட்டும் எந்த ஒரு ஊடகமும் வாயே திறக்காமல் இருப்பதுதான் பத்திரிகை தர்மமா? என்பது பொதுமக்களின் கேள்வி.

ஊழல் அல்லாமல் ஒருவரின் சொத்து மதிப்பு 300 மடங்கு கூடுவது எப்படி?

தொழில் செய்யாமல் முழு நேர கடசித்தலைவராக இருப்பவர் சொத்து எந்த வழியில் இப்படி 300 மடங்காகும்.

 ஊழலை ஒழிக்க அவதார் எடுத்திருக்கும் மோடி கார்ப்பரேட் கட்சி பாஜக இதை பற்றி விக்குமா?
மற்றவர்கள் எலும்பை பரிசோதித்து அறிக்கை விடும் எலும்பு எச்ச.ராசா இதற்கு என்ன சொல்லப்போகிறார்.?

அமித்ஷா சொத்து மதிப்பு செய்தி வெளியிட்டு பின் நீக்கப்பட்ட ஆங்கில தளப் பக்கங்கள்.


புதன், 26 ஜூலை, 2017

கீழடி....அழித்தொழிப்பு...

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த ஆதாரங்கள் பழந்தமிழ் சமூகத்தின் நகர நாகரிகத்திற்கான விஞ்ஞானப்பூர்வமான ஆதாரம் என்றும், கீழடியை இந்துத்துவா சக்திகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். 

‘கீழடி அகழ்வாய்வு என்பது திராவிடர் மற்றும் தமிழர் வரலாறு மற்றும் நாகரிகத்திற்கு கிடைத்த கொடை’ 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட தொல்லியல் மேட்டில் 50 செண்ட் அகழ்வாய்விலேயே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.

 ‘‘கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு பொருட்களின் ஆய்விலும், பெண்களின் கல்வியறிவு, கடல் சார்ந்த வணிகம், நீர்மேலாண்மை, சமயமற்ற வாழ்முறை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல்துறையின் ஐந்து பிரிவுகளில் ஒரு பிரிவு தான் தென்னிந்தியாவில் உள்ளது. 
நாற்பதுஆண்டுகளில் இத்துறை ஐந்து சதவீத அளவுக்கு கூட தமிழகத்தில் ஆய்வு நடத்தவில்லை. நீண்டஇடைவெளிக்கு பிறகு மைசூர் மத்திய தொல்லியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்ற அமர்நாத் ராமகிருஷ்ணன் என்கிற தமிழர், வைகை நதிக்கரையிலும் ஒரு நாகரிகம் இருந்தது, அதை ஆய்வு செய்வோம் என பணியைத் தொடங்கினார். 

இந்த ஆய்வின் ஒவ்வொரு படிக்கும் முன்பு பெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது. ர ஒரு சமூகப் புறக்கணிப்பின் வலியுடன் தொடங்கப்பட்ட ஆய்வே கீழடி. இன்னும் அதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டே இருக்கிறோம்.

அசோகரின் கல்வெட்டே இந்தியாவின் வரலாற்று காலகட்டத்தை மாற்றியது. ஒரு கல்வெட்டைத் திறந்தால் பல கற்பிதங்கள் தகர்ந்துவிடும். கீழடியைக் கண்டு அஞ்சுவதற்கும், கீழடி தமிழர்க்கு மகத்தான ஆயுதமாக மாறியதற்கும் இதுதான் காரணம்.

உலகிலேயே மிக அதிகமாக சுமார் 1 லட்சம்கல்வெட்டுக்கள் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 65 ஆயிரம் தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டவை. 

அதில் பழமையான பிராமி எழுத்துகள் கொண்டவை 93.அவற்றில் 24 கல்வெட்டுக்கள் வைகை நதிக்கரையில் தான் கிடைத்துள்ளன. எனவே அங்கு நதிக்கரை நாகரிக, கல்விகற்ற சமூகம் இருந்ததற்கான அடையாளம் உறுதியாகிறது.

கீழடி தொல்லியல் ஆய்வில் இதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களாக இரண்டாயிரம் ஆண்டு முந்தைய புத்தர் கால மண் கலயம், அசோகர் கால கல்வெட்டு, ஆப்கான் சூது பவளம், தந்தத்தில் சீப்பு, சதுரங்கம், தாயக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் ஒரு தொழிற்சாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள குடியிருப்புகளில் மூன்று விதமான வடிகால் அமைப்பு, ஒரே மாதிரியான 33 செ.மீ செங்கற்களால் அமைந்த அஸ்திவாரமில்லா குடியிருப்புகள், எழுத்துக்களைக் கொண்ட 72 பானை ஓடுகள் என கணிதம், கல்வி, கட்டுமானம், தொழில் அனைத்திலும் சிறந்து விளங்கியதற்கான சுமார் ஐயாயிரத்து 800 பொருட்கள் ஆதாரங்களாக கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைத்த ஆவணங்களை ஆய்வுக்கு அமெரிக்கா அனுப்ப அனுமதி கோரப்பட்டது. ஆனால் 10 மாதிரிகளில் இரண்டை மட்டுமே ஆய்வுக்கு அனுப்பஅனுமதித்து வெறும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கியது மத்திய மோடி அரசு.

அதே வாரம் அயோத்தியில் ராமர் அருங்காட்சியகம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. ர ஏன் தமிழர் வரலாற்று ஆவணங்கள் முடக்கப்படுகின்றன என்பதற்கு இதை விட பெரிய விளக்கம் தேவையில்லை.

கி.மு 200-கி.மு 195 ஆம் ஆண்டுகளில் மக்கள்வாழ்ந்ததற்கான தொல்பழங்காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தமிழரின் ஆதாரங்கள் கீழடியில் இருக்கின்றன.
சங்க இலக்கியங்களில் தமிழர் நாகரிகத்தின் அனைத்து அம்சங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இலக்கியங்களை வரலாறாக ஏற்கமாட்டார்கள்.

இப்போது அதைவிட மேன்மையான சமூகமாகதமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரம் கீழடியில் கிடைத்திருக்கிறது. கீழடியில் கிடைக்கப்பெற்ற ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களில் ஒரு பொருள் கூட மதம் சார்ந்த பொருட்களாக இல்லை. 

இந்நிலையில் அதை யாரும்அழித்து விடக்கூடாது. 

வரலாற்றை திரித்து விடக்கூடாது என்பதில் மார்க்சியர்கள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் கவனமாக இருந்து கீழடியை பாதுகாக்க வேண்டும்.


திங்கள், 24 ஜூலை, 2017

கறுப்பு ஜூலை ........

ஆடிக்கலவரம் என்ற கருப்பு ஜூலை என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.
 இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை படையினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு ஜூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
jy 25
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். 
இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
25-7-1983-இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். 
அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள். ரெஜஸ்-துணைத் தலைமை சிறை அதிகாரி, சமிதரத்ன-சிறை அதிகாரி, பாலித-காவலதிகாரி. ஆகிய மூன்று சிறை அதிகாரிகளுமே இனப் படுகொலைக்கு சிறைக்குள்ளே திட்டம் போட்ட சூத்ரதாரிகள்.
திட்டமிட்டபடி இவ்வதிகாரிகள் குறிப்பிட்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். அந்த நேரத்தில் சிறைச்சாலை உயரதிகாரிகள் மதிய உணவுக்காகத் தத்தம் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். 
உயர் அதிகாரிகள் சிறையில் இல்லாதபோது நடந்த வன்முறையெனத் தப்பித்துக் கொள்ள இந்த ஏற்பாடு.
தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். 
தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின.
வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. 
குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. 
இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன.
சிங்கள சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்கள சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள். 
கொலைகள் முடிந்தவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்ற இராணுவ வீரர்கள் (தமிழ் அரசியல் கைதிகள் தப்பியோடாது இராணுவ வீரர்கள் வெலிக்கடையில் தொடர்ந்து காவலுக்கு நின்றார்கள்) உள்ளே அழைக்கப்பட்டார்கள். உள்ளே வந்த இராணுவ வீரர்கள் கொலை வெறிக்கு உரமூட்டினார்கள்.
ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதே காரணத்திற்காகக் குட்டிமணி குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார்.
 சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து “”ஜெயவேவா” (மகிழ்ச்சி ஆரவாரம்) கோஷம் எழுப்பிக் குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர்.
குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். 
அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். 
ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர்.
பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். 
இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர்.
சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். 
இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து “”சில்” அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர்.
சிறுவன் மயில்வாகனத்திற்கு ஏற்பட்ட மரணம் மனதை உருக்குவதாகும். இச்சிறுவன் கப்பற்படையினரின் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு (பவுசர்) பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான்.
இச்சிறுவன் சப்பல் கட்டடத்திற்கு வெளியே சாதாரண கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில் மறைந்திருந்ததைக் கண்ணுற்ற சிறை அதிகாரி சமிரத்ன அச்சிறுவனின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் கத்தியால் அவன் குரல்வளையை வெட்டினான். இரத்தம் பீறிட்டுவர அச்சிறுவனும் புத்தருக்குக் காணிக்கையாக்கப்பட்டான். 
இச்சிறுவனைப் படுகொலை செய்த சமிதரத்ன ஒரு பட்டதாரியாவான் என்பதும் வெட்கக் கேடான உண்மையாகும்.
சிறைச்சாலை வாகனத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களின் உடல்கள் முழு நிர்வாணமாகப் போடப்பட்டன. 
அந்த உடல்களின் மத்தியில் உயிர்ப் பிரிவின் முனகல் கேட்டபோது கொலை வெறியர் பொல்லால் அடித்து கம்பியால் குத்தி அவ்வொலிகளை நிரந்தரமாக நிறுத்தினார்கள்!
ஆக யூலை மாதம் பிறந்தநாளைக் கொண்டாடுவோரும் ஆண்டு விழாக்களை கொண்டாடுவோரும் கூட அந்த நாட்களை சிலநேரம் மறந்துவிடலாம். 
ஆனால் உலகில் வாழும் தன்மானத் தமிழர்கள் எவரும் யூலை மாதக் கலவரத்தையும் சிறைப் படுகொலைகளையும் என்றும் மறக்க மாட்டார்கள். அப்படி மறப்பவர்களாய் இருந்தால் அவர்கள் தமிழராக இருக்க மாட்டார்கள்.
இந்த வரிசையில் வரலாறு படைத்த தோழர்கள் குட்டிமணி தங்கதுரை ஜெகன் மற்றும் கொல்லப்பட்ட அனைத்து தோழர்களும் இன்று தமிழர் வரலாற்று சின்னங்களாக திகழ்கின்றார்கள். அவர்களுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.
                                                                                                                                   ரா.குமரவேல்,
ஆந்தை  ரிப்போர்ட்டர் உதவியுடன்,
=======================================================================================

வியாழன், 20 ஜூலை, 2017

இவர் யார் என்று புரிகிறதா?

இவர்   " தீ "  என்று     தெரிகிறதா?
ஆக மொத்தத்தில் கமல்ஹாசனை அரசியல் சாக்கடைக்குள் அதிமுக,பாஜக கூட்டணியினர் இழுத்துவிட்டனர் என்றே தெரிகிறது.
ஆனால் "இந்த வகை அரசியல் எனக்கு பிடிக்கவில்லை.

அப்படி வந்தால் துப்பாக்கியுடன் வருவேன்" என்று ஆரம்பகால கமல் ஒரு பெட்டியில் கூறியிருந்தார்.அப்போது இளம் ரத்தம்.அதனால் அப்படி கூறியிருப்பார்.
ஆனால் அன்றிருந்ததை விட  அரசியல் மிகவும் அசிங்கமாக,ஊழலே மூச்சாக மாறிபோனது கமலை மிகவும் உறுத்தியதால் இன்றைய அனுபவம் ஏறிய பொறுப்புடன் கூறிய வார்த்தைகள் அவரை அரசியல் சூறாவளியில் சுழற்றி விட்டுவிட்டது.
இன்றைக்கு வருவேன்,நாளைக்கழித்து வருவேன்,போரடித்தால் மன்னிக்கவும் போர் வந்தால் வருவேன் என்று கூறியே அரசியல் செய்யும்  நடிகர்  ரஜினிகாந்த் ஆண்டவன் சொல்லி வருவதற்குள் ஆண்டவனை நம்பாத அவரது நண்பர் கமல்ஹாசன் அரசியலில் வந்து விட்டது போல் தோற்றம் உருவாகியுள்ளது.
ஆனால் அரசியல் வேண்டாம் என்று அடிக்கடி கூறும் கமல் கட்சியினை துவக்குவாரா,அல்லது இணைவாரா என்பது காலம் கையில்.

இந்தி திணிப்புக்கு குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்து விட்டதை முதுகெலும்பு அறிஞர் ,அரசியல் ஞானி ஏச்சு.ராஜா வுக்கு கமல் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதற்கு முன்பே ஈழத்தமிழர் பிரச்னைக்கு தனது ரசிகர்களை வைத்து நடத்திய ஊர்வலத்தின் போதே அவரது அரசியல் வெளிப்பட்டு விட்டது.
கமல்ஹாசன் எப்போதும் சொல்லுவார் வாக்களிக்க கையை கறையாக்கும் ஒவ்வொருவரும் அரசியலில்தான் இருக்கின்றனர்.
உண்மை.
எந்த கட்சிக்கு வாக்கு என்பது தீர்மானிப்பது அரசியல் அல்லாமல் வேறென்ன?
 தற்போது அதிகமாக கமல்ஹாசனை அரசியலுக்கு இழுத்துவர முயற்சித்த அதிமுக அமைச்சர்கள்,பாஜக வினருக்கு பதில் தர ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அதிமுக ஆட்சி ஊழல் குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்புங்கள் ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலக நாயகன் கமல்ஹாசனின் கடிதம்.

கமலஹாசன்  முழுக்க அரசியல் பேச்சாக இல்லாமல் தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என்பதற்கு அதிமுக அமைச்சர்கள் தரும் பதிலை விட பாஜக கட்சியினர் கடுமையாக தரும் பதில் தான் மிகவும் வியப்பாக உள்ளது ,

ஊழல் தமிழகத்தில் பெருகி விட்டது என்றால் தேவையே இல்லாமல் பாஜக உள்ளே நுழைந்து அரசியலுக்கு வந்து பார்,முதுகெலும்பு இல்லை ,சேவை செய்த பின்னர்தான் அரசியலுக்கு வரவேண்டும் ,கோழை என்று கமலஹாசனை விமரிசிப்பது தேவையற்ற ஒன்று .

இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் செய்த தூய்மை இந்தியாவின் 7 பிரதிநிதிகளில் கமல்ஹாசனும் ஒருவராக மோடியால் நியமனம் செய்யப்பட்டார்.அப்போது நடந்த விழாவில் கமலுடன் வாளியை தூக்கி போட்டோவுக்கு நின்றவர் பாஜக தலைவி தமிழிசைதான்.அது சமூக சேவை இல்லையா?

அல்லது அப்போது கமலுக்கு முதுகெலும்பு இல்லாதது  உங்களுக்கும், எலும்பு நிபுணர் ஏச்சு.ராஜாவுக்கும் தெரியாதா?
இதுதான் பலரது கருத்து.

ஆனால்  பாஜக ரஜினியை அரசியலுக்கு வா,வா என்கிற காலக்கட்டத்தில் கமலை கண்டு மட்டும் பயம் கொள்வது ஏன்?

நடிகர் ரஜினி பாஜக ஆதரவான இந்துத்துவா கருத்துக்கொண்டவர்.
ஆனால் கமல் ஹாசன் திரையுலகை மட்டுமின்றி நடப்புலகிலும் ரஜினிக்கு போட்டியான கருத்துக்களைக்கொண்டவர்.

திராவிட ,பகுத்தறிவு,இடதுசாரி கருத்துக்களை கொண்டவர்.இந்தி எதிர்ப்பாளர்.
ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவுடனே ஒத்து செல்வார்  என்ற  எதிர்பார்ப்பு உண்டு.ஆனால் கமல் மாட்டிறைச்சி,ஜல்லிக்கட்டு,இந்தி திணிப்பு ,ஜி.எஸ்.டி,உடன்பட எல்லா வகையிலுமே மோடி அரசை விமரிசிப்பவர்.

இவை எல்லாவற்றையும் விட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கலந்துரையாடலில் "மோடியின் இஸ்ரேல் பயணத்தை கடுமையாக விமரிசித்தார்.

அதுமட்டுமின்றி தற்போது 100 ஆண்டு போராட்டத்தின் பயனாக பஜ்ரங் தள் ,ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றி விட்டது.அதை இளைஞர்கள்தான் போராடி நாட்டை காப்பாற்ற வேண்டும் அதற்கான பணிகளை  D Y F I (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் )முன்னெடுப்பு செய்யவேண்டும்" என்றும் கூறினார் .

இந்த  செய்திகளை வழக்கம் போல் நமது நடுநிலை உணர்வுமிக்க ஊடகங்கள் மக்கள் பார்வைக்கே வரவிடவில்லை.

ஆனால் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் பாஜக,அதிமுகவுக்கு போகாமல் இருக்குமா?

இப்போது  தமிழ் நாட்டை ஆள்வது யார் என்று    புரிகிறதா?
கமலின் அரசியல் பேச்சுக்கு பாஜக அலறுவது ஏன் என்று தெரிகிறதா?

விஸ்வருபம் பாடல்தான் நினைவில்

"இவன்  யார்  என்று  புரிகிறதா?

இவன்  " தீ "  என்று     தெரிகிறதா?

திங்கள், 17 ஜூலை, 2017

கையில் பணமிருந்தால் கைதி கூட ராணிதான்.

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ரூ.2 கோடி செலவில் நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூரின் பரப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு தனது வசதிக்காக சிறையையே மாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூர் சிறையில் சிறை துறை டிஐஜி ரூபா மேற்கொண்ட ஆய்வில் சசிகலாவுக்கு ரூ.2 கோடி செலவில் சமையல் அறை, படுக்கை அறை, தனி குளியல் அறை, யோகா செய்ய தனி அறை என்று சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், அந்த சமையல் அறையில் தானே சமைத்து சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.அந்த சிறப்பு வசதிக்காக சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் லஞ்சமாக கொடுத்தது மட்டுமல்லாமல், ஓரிரு முறை சிறையை விட்டு வெளியே சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில வசதிகளுக்காக பணத்தை அள்ளி வீசுகிறாராம். சசிகலாவுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள அறையில் பாதுகாப்புக்காக மற்ற யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தடுப்பு சுவர் வைக்கப்பட்டிருந்தது. மேலும், வெளியில் இருந்து சசிகலாவை சந்திக்க வரும் இடத்தில் கேமரா வசதியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக சசிகலா சிறையில் 5 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதிகளுடன் சொகுசாக இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பரபப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்திய சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா, ஆய்வில் கிடைத்த தகவல்கள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பிய புகார் கடிதத்தில், குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி கசிந்தது.
கர்நாடக மாநில சிறைத் துறை இயக்குநர் (டிஜிபி) சத்யநாராயண ராவுக்கும், சிறைஅதிகாரிகளுக்கும் ரூ.2 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறையில் சசிகலாவுக்காக தனிச் சமையலறை கட்டப்பட்டது. சமையல் செய்ய ஒரு கைதி ஒதுக்கப்பட்டார் என ரூபா கூறிய குற்றச்சாட்டுகளை சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக் முதலவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அப்பொழுது சிறைத் துறை உதவி ஆய்வாளர் (டிஐஜி) ரூபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர். 'சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவது தொடர்பாக நான் அளித்துள்ள அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன்.
இந்த விவகாரத்தில் என் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்  என்று கூறியிருந்தார்.
இந்த அறிக்கை விவகாரத்தில் ஊடகங்களில் பேட்டியளித்தற்காக விளக்கம் கோரி கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக சிறையில் சசிகலாவுக்கு விருந்தினர்களை சந்திக்க என்று தனியாக குளிர்சாதன அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறை கேமராவில் பதிவாகியிருக்க கூடிய இது தொடர்பான சிசிடிவி பதிவுகள் உடனுக்குடன் அழிக்கப்படுவதாகவும் இரண்டாவது அறிக்கையினையும் டிஐஜி ரூபா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்
 கர்நாடக சிறைத்துறை டிஐஜியான ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக  தற்பொழுது, திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தில் ஆர். அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் ரூபா. வேறு எந்தக் காரணமும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கூறினார்
----------------------------------------------------------------------------------------------------------------------------------

😨மாட்டின் பயன்கள் பற்றி  ஆய்வு செய்ய ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

19 பேர்களை உறுப்பினர்களாகக் கொண்டது இக்குழு.

 இந்தக்குழுவில் ஆர்.எஸ்.எஸ். , வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றுள்ளனர்.

‘நேசனல் ஸ்டீரிங் கமிட்டி’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்தக்குழுவில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த ராம்கோபல் ராவ், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மன்ஷேல்கர், நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஜய் பட்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார்.
மாட்டு குழு.
ஆய்வு துவக்கப்பட்ட போது  

மாட்டின் கோமியம்,பஞ்ச கவ்யம் பற்றி ஆய்வு செய்வதுதான் குழுவின் முக்கிய நோக்கம்.

அடுத்த மாதம் இந்தக்குழுவிற்கான முதல் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக்குழுவின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.🤔

🤥"பாஜக அரசின் இந்த குழுவை பாரட்டி வரவேற்கிறோம்."
என முதல்வர்கள் நிதிஷ் குமார்,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதலாவது ஆட்களாகக் வரவேற்றனர்.

"இந்த ஆய்வின் மூலம் ஜிஎஸ்டி வரி பாதிப்பினால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் குறையும்.இந்தியா பொருளாதர வல்லரசாக உருவெடுக்கும்" என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

😗"விவசாயிகள்  பஞ்ச கவ்யத்தை வயல் வெளிகளில் தெளிப்பதின் எல்லா வயல்களிலும் பாஸ்மதி அரிசி விளைந்து அவர்களின் பிரச்னை எல்லாம் தீரும்" என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கூடுவாஞ்சேரி விமான நிலையைத்தில் பேட்டியளித்தார்.
(அவரின் துறை அவருக்கே தெரியாததால் குறிப்பிட முடியவில்லை.)

😆"கோமியத்தை இந்த ஆய்வின் மூலம் அதிக அளவு உறபத்தி செய்து காவிரி பிரச்னையை தீர்க்கலாம்.கர்னாடகாவிடம் இனி தண்ணீர் கேட்டு கெஞ்ச வேண்டாம்.இதை எதிர்க்கும் ஸ்டாலினும்,கமல்ஹாசனும் இன்னும் அரசியலில் பக்குவ‌மடையவில்லை "என தமிழிசை கருத்து தெரிவித்தார்.

😎"மாட்டின் கோமியம்,பஞ்சகவ்யம் பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்ததன் மூலம் இன்னுமொரு "புதிய இந்தியா'  பிறந்துள்ளது.வாழ்த்துகள்"என்று இன்ப சுற்றுலா சென்றுள்ள பிரதமர் மோடி  அன்டார்டிகாவில் இருந்து டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.


மக்கள் அல்லாடும் பிரசனைகளுக்கு இந்தியாவில் வறுமையா என்ன?

வேலைவாய்ப்பு,குடிநீர்,விவசாயம்,நீட்,ஜி.எஸ்.டி  என்று எத்தனையோ  வருகிறது.
எதற்காவது இந்த பாஜக அரசு முதலாவது குழு அமைத்து ஆய்வு செய்து முடிவெடுத்ததா?
பாஜக அரசே திட்டமிட்டு மக்கள் மீது திணித்த பண மதிப்பிழப்பு,நீட்,மாட்டிறைச்சி என்று எதிலாவது மக்கள் கேட்க ஓர் ஓரமாக  மனதிலாவது நினைத்ததா?

ஏன் .மாட்டின் மீது மட்டும் இந்த பாசம்,பரிவு,
இதில் நூற்றில் ஒரு பங்காவது தனக்கு வாக்களித்து நாடு,நாடாக சுற்றுலா போக வைத்திருக்கும் மக்கள் மீது மோடி காட்டுகிறாரா?

தன்னை சந்திக்க வரும் நடிகைகளுக்கு ஒதுக்கும் நேரத்தை அவரால் விவசாயிகள்,மக்கள் பிரச்னைக்காக வருபவர்களை சந்திக்க ஒதுக்க முடிகிறதா?

இதில் வேறு உலகிலேயே தன்னை ஆள்வோர் மீது நம்பிக்கை வைத்துள்ள நாடுகளில் இந்தியாதான் (74%)முதலிடமாம்.

நாட்டை ஒரு வழி செய்வதில் மோடிக்கு இருக்கும் ஆர்வத்தை விட இந்திய மக்களுக்குத்தான் அதிக ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.

மாற்றி யோசித்தால் எப்படியோ இந்த வாழ்வில் இருந்து அப்படியாவது தப்பிக்கலாமா என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.

ஞாயிறு, 16 ஜூலை, 2017

மாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல்

டந்த மே மாதம் பாஜக அரசு மாட்டு விற்பனை ஒழுங்குமுறை அரசாணையை வெளியிட்ட பின்னர், பல்வேறு மடங்களைச் சேர்ந்த சாமியார்கள், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்துமத அமைப்புகள், மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வியாபாரிகளின் மாடுகளையும் வாகனங்களையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.
இதில் குறிப்பாக இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., பாஜகவைச் சேர்ந்தவர்கள் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இந்த அரசாணை இத்தகைய கும்பல்களுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, மாட்டை பாதுகாப்பதற்காக அல்ல.

சமீபத்தில் பழனியில் ஒரு விவசாயி வீட்டிற்கு எடுத்துச் சென்ற மாட்டை வாகனத்தோடு மடக்கி போலீசு நிலையத்திற்கு ஒரு இந்து மதச் சாமியார் கொண்டு சென்றுள்ளார். இதே போல, கிருஷ்ணகிரி, பெருந்துறை எனப் பல இடங்களிலும் நடந்து வருகிறது.
மாடு பாதுகாப்பு என்ற பெயரில் இயங்கி வரும் இத்தகைய ரவுடிகளுக்கும், கட்டப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் ஆதரவாக மாநில அரசும் மவுனம் சாதிக்கிறது.
தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த அரசாணையால், சுமார் பத்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கே தண்ணீர் இன்றி கடும் பிரச்சினைக்குள் விவசாயிகள் சிக்கிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் எப்படி பால் கொடுப்பதை நிறுத்தி விட்ட மாடுகளைப் பாதுகாக்க முடியும்? பால் உற்பத்திக்கு புதிய மாடுகளை வாங்க வேண்டுமெனில், அவர்கள் பழைய மாடுகளை விற்பதைத் தவிர வேறு வழியில்லை. தற்போதைய சட்டத்தால் அவர்களால் உபயோகப்படாத மாடுகளை விற்க முடிவதில்லை.
அதே போல், ஆம்பூர், வாணியம்பாடி தோல் தொழிற்சாலை மற்றும் அது சார்ந்த தொழில்கள், மாதம் சுமார் 8000 கோடி பணம் ஈட்டக் கூடியவையாகும். அந்தத் தொழில்களும் இதனால் நசிந்து போயுள்ளது. மாட்டு எலும்பை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 இலட்சம் பேர் பாதிக்கப்படுவர்.
இந்த அரசாணை வெளியான பிறகு கடந்த 10 நாட்களாக போலீசும் வாகனங்களில் கால்நடைகளை ஏற்றக் கூடாது எனக் கெடுபிடி விதிக்கிறது. எந்தச் சட்டத்தின் அடிப்படையில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றக் கூடாது என்பது குறித்து பதிலேதும் கூறாமல், மொட்டையாக கலவரம் வரும் என்பதால் அனுமதிக்க முடியாது என்கிறது போலீசு. கலவரத்தைத் தடுப்பது தான் போலீசின் வேலை. அதை விட்டுவிட்டு, கலவரம் வரும் என்பதால் மாடுகளை வாகனங்களில் ஏற்றக் கூடாது என்று சொல்வது தான் போலீசின் வேலையா? அப்படியெனில் இந்த அரசு கலவரக்காரர்களுக்கு பயப்படும் அரசாக இருக்கிறதா?
கர்நாடகா, மே.வங்கம், கேரளம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இந்த அரசாணையைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாக அறிவித்திருக்கின்றனர். ஆனால் எடப்பாடி அவர்களோ அரசாணை வெளியிடப்பட்ட உடன் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கக் கோரினால், அதனை முழுமையாகப் படிக்கவில்லை என்றார். அரசாணை வெளியிடப்பட்டு 2 மாதம் ஆகியும் இன்னமும் இது குறித்து வாய் திறக்கவில்லை.

மே மாதத்திற்குப் பின்னர் பல்வேறு இடங்களில் மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை இடைமறித்து போலீசு நிலையத்திற்கு இட்டுச் செல்கின்றனர். கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதியன்று, பொன்னேரியில் மாடு ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்து காவல் நிலையத்திற்கு கொண்டு போய் 7 பேர் மீது வழக்கு தொடுத்து, 51 மாடுகளையும் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட மாடுகளை கோசாலைகளுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மாடுகளை மாநகராட்சி கோசாலைகளுக்கு அனுப்பாமல், தனியார் கோசாலைகளுக்கு அனுப்பினர். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது அங்கு கொண்டு போய் சேர்க்கப்பட்ட 51 மாடுகளில் 10 மாடுகள் இறந்து விட்டதாக தனியார் கோசாலை நடத்துபவர்கள் கூறுகின்றனர். குறுகிய காலகட்டத்தில் 10 மாடுகள் இறந்திருக்கின்றன என்றால், தனியார் கோசாலைகளில் மாடுகளின் உயிருக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
தமிழகத்தில் பல்வேறு தனியார் கோசாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டேரியில் பல தனியார் கோசாலைகள் செயல்படுகின்றன. இராஜஸ்தானிலிருந்தும் இங்கு வந்து கோசாலைகள் நடத்துகிறார்கள். இவர்கள் மாடுகளை ஒழுங்காகப் பராமரிப்பது கிடையாது. கோசாலைகள் என்ற பெயரில் மாடுகளைக் கடத்தி விற்கிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் சுமார் பத்தாயிரம் மாடுகள் கோசாலைகளில் இறக்கின்றன என்று கூறுகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், மாட்டு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கால்நடை இயக்குனரகம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் படி பறிமுதல் செய்யப்படும் மாடுகள் அரசாங்க கோசாலைகளுக்குத் தான் அனுப்பப்பட வேண்டும். ஆனால் அந்த விதிமுறை எப்போதுமே பின்பற்றப்படுவதில்லை.
பொதுவாக, மாடுகள் வாகனத்தில் ஏற்றி அனுப்பப்படுவதில் விதிமீறல்கள் குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறும் சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் கோசாலைகளில் ஒப்படைக்கப்படும். அவ்வழக்குகள் முடிவடைந்த பின்னர் நீதிமன்றங்கள் மாடுகளை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கூறி உத்தரவிடுவர். வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் அரசாங்கக் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தால், அவை உடனடியாக திருப்பித் தரப்படுகின்றன. ஆனால் தனியார் கோசாலைகளுக்கு அனுப்பப்பட்ட மாடுகள் இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகச் சரித்திரம் இல்லை.
தனியார் கோசாலைகள், மாடுகளை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க நீதிமன்றங்கள் போடும் உத்தரவுக்கு முட்டுக்கட்டையாக, உடனடியாக வேறு ஒரு நீதிமன்றத்தில் தவறான தகவல்களைக் கூறி வேறு ஒரு வழக்கைப் போட்டு மாடுகளை ஒப்படைக்காமல் தப்பிவிடுகின்றன. இப்படிப்பட்ட பல மோசடியான வழக்குகள் இன்னமும் நிலுவையிலேயே உள்ளன. அதனால் தான் தனியார் கோசாலைகள் மூடப்பட வேண்டும் என மாட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாடுகளை ஏற்றிச் செல்ல அரசு அளித்துள்ள விதிமுறை மீறல்களுக்காக போலீசால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டால், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் கடத்தப்பட்ட மாடுகள் பறிமுதல் என்று செய்திகளை வெளியிடுகின்றன. வெளிமாநிலங்களுக்கோ, உள்ளூரிலோ கொண்டு செல்லப்படும் மாடுகள் அனைத்தும் முறையான இரசீதோடு தான் கொண்டு செல்லப்படுகின்றன. விதிமுறை மீறலுக்காக பறிமுதல் என்று எழுதாமல், மாட்டு வியாபாரிகளைக் கடத்தல்காரர்களைப் போல் சித்தரித்து ஊடகங்கள் எழுதுகின்றன. பணம் கொடுத்து வியாபாரிகள் வாங்கி வரும் மாடுகளை கோசாலை என்ற பெயரில் தடுத்து நிறுத்தி நீதிமன்ற வழக்குகளின் துணையோடு வியாபாரிகளிடம் இருந்து மாடுகளைப் பறித்துச் செல்லும், தனியார் கோசாலைகளே கடத்தல்காரர்கள்.
விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி, மாடுகளை ஏற்றிச் செல்வதற்கு அச்சட்டம் விவரிக்கின்ற நீளம், அகலம், உயரம் கொண்ட வாகனங்கள் இந்த நொடி வரையிலும் இந்தியாவில் எங்கும் உற்பத்தியிலோ, விற்பனையிலோ இல்லை. ஆனால் அப்படி ஒரு வாகனத்தில் தான் ஏற்றிச் செல்லவேண்டும் என சட்டம் சொல்கிறது. இதற்கு வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? அரசாங்கம் தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் கால்நடை இயக்குனரகம் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி 16 மாடுகளை ஒரு லாரியில் ஏற்றிச் செல்லலாம். என அவர்கள் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு நடைமுறையில் 16 மாடுகளை ஏற்றுவதை அனுமதிக்க மறுக்கிறார்கள். அந்த தீர்மானத்தை சட்டமாக்கவும் மறுக்கின்றார்கள்.
மாடுகளை லாரிகளில் ஏற்றிச் செல்லும் போது ‘ஓவர்லோடு’ கணக்குப் பார்த்து லாரிகளை பறிமுதல் செய்கிறார்கள். ஆனால் மனிதர்களின் போக்குவரத்திற்காக அரசாங்கம் இயக்குகிற பேருந்துகளில் சட்டப்படி 55 பேர் தான் பயணிக்க வேண்டும், ஆனால் அன்றாடம் நூற்றுக்கணக்கான பேர் தொங்கிக் கொண்டு போகிறார்கள். அவ்வாறு மக்களை அள்ளிச் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலோ, மற்ற தனியார் போக்குவரத்துகளின் மேலோ, இரயில்வேயின் மீதோ எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட்டதில்லை.
கால்நடைகள் குறித்து ஒரு சட்டம் இயற்றுவதற்கு முன்னால், அது சம்பந்தப்பட்ட நபர்களிடம் (வியாபாரிகள், விவசாயிகள்) கருத்துக் கேட்டு, கலந்துரையாடி அதன் பின்னர் தானே சட்டம் இயற்றவேண்டும்? ஆனால் இங்கு அப்படி என்றுமே நடைபெறுவதில்லையெனில் இது என்ன ஜனநாயகமா அல்லது மன்னராட்சியா?
மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்திடம் ஏற்கனவே மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் பின்வருமாரு:
  • போலீசு, வாகனங்களில் கால்நடைகளை ஏற்றுவதற்கு விதிக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.
  • தமிழகத்தில் இருக்கும் தனியார் கோசாலைகளை இழுத்து மூட வேண்டும். மாநிலம் முழுவதும் தமிழக அரசே கோசாலைகளை நிறுவ வேண்டும். தனியார் கோசாலைகளில் இதுவரை இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையையும், நிலைமைகளையும் பெற்று தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்
  • கடந்த ஆண்டுகளில் தனியார் கோசாலைகளிடம் ஒப்படைக்கப்பட்ட மாடுகளை, விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் திரும்பி ஒப்படைக்கச் செய்ய வேண்டும்.
  • மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
  • ஒரு மோட்டார் வாகனத்தில் 20 கால்நடைகள் வரை ஏற்றிச் செல்வதற்கு அனுமதியளித்து மோட்டார் வாகனச் சட்டத்தில் அனுமதியளிக்க வேண்டும்.
  • மாட்டை முன் வைத்து அரசியல் செய்யும் மதவாத அமைப்புகளை தமிழக அரசும் காவல் துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
  • கால்நடைச் சந்தைகளில் கால்நடைகளைப் பராமரிப்பதற்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை முன் வைத்திருக்கும் மாட்டு வியாபாரிகள் சங்கத்தினர், இதன் மீது அரசு கவனம் செலுத்தாவிட்டால், அடுத்தகட்டமாக தமிழகம் தழுவிய அளவில், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர்.
                                                                               "வினவி"ல் இருந்து பிரஸ் ஏட்டைய்யா    குமாரவேல்                 

வெள்ளி, 14 ஜூலை, 2017

பத்தும் செய்யும் பணம்.

டெல்லி  காவல்துறையினர் தினகரன் மீதான லஞ்ச மோசடி வழக்கில் இருந்து அவரை கழட்டி விட்டு விடுவார்கள் என்றே தெரிகிறது.இன்றைய நிலவரம் அதுதான்.

தினகரனிடம் இரட்டை இல்லை சின்னம் தேர்தல் ஆணையத்திடம் பெற்றுத்தர கையூட்டு வாங்கிய  சுகேஷ் சந்திரா மீது குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.அதில் இந்த கையூட்டு,தினகரன் என்ற  விபரங்களே இல்லை.

வி.பி.ஐ  என போலி ஆவணங்களை உண்மை ஆவணங்கள் போல் பயன்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக மட்டுமே உள்ளன.இரட்டை இல்லை சின்ன லஞ்சம் விபரங்கள் இல்லை. ஐ.பி.சி., எனப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சுகேஷ் சந்திரா மீது குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் சிறை தண்டனைவிதிக்க முடியும். 

இது தொடர்பாக டெல்லி காவல்துறையை கேட்டால் "சசிகலா அக்கா மகன் தினகரன், அவருடைய நண்பர் மல்லி கார்ஜுனா, ஹவாலா புரோக்கர்கள் நாது சிங், லலித் குமார் ஆகியோர் தற்போது, ஜாமினில் வெளியே உள்ளனர். அவர்கள் தொடர்பான  ஆவணங்களை சேகரித்து வருகிறோம். 
கிடைத்ததும் அதனடிப்படையில் குற்ற சாட்டுகளை பதிவு செய்வோம் " என்கின்றனர்.

அப்படி என்றால் இதனடிப்படையில் தினகரனை கைது செய்தனர்?

வலுவான ஆதாரம் இல்லாமலா அவரை கைது செய்தனர்?
அது தவறு அல்லவா?
இவைகளை எல்லாம் வைத்துப்பார்த்தால் இது அரசியல் சதுரங்க வேட்டை .

தினகரன் ஆட்சியை கைப்பற்றி விடக்  கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ராஜதந்திர கைதோ என்ற  ஐயம் வருகிறது.

இரட்டை இல்லை சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்துக்கு கோடிகளில் கையூட்டு என்றால் தரகர், தினகரனை கைது செய்தவர்கள் கையூட்டு பெற காத்திருந்த தேர்தல் ஆணைய  அலுவலர்கள் பற்றி இதுவரை இம்மி அளவு கூட தகவல்களை வெளியிடவில்லை, சுட்டு விரல்  நீட்டி யாரையும் இனம் காட்டவில்லை,குற்றப்பத்திரிகை யில் பெயர் இடம் பெறவே இல்லை.

என்ன நடைமுறை இது.என்னவகையான சட்டம் இவை.
சுகேஷ் சந்திரா         ,தினகரன்

கையூட்டு கொடுப்பவர் கைது.அதை கொண்டு சென்று கொடுத்த தரகர் கைது.ஆனால் கையூட்டு பெற்றவர்கள் மட்டும் அதிகாரத்தில் அட்டகாசம் செய்கிறார்கள்.அவர்கள் யாரென்றே காவல்துறை இனம்காட்டவில்லை.மறந்து விட்டதா?
அல்லது மறைக்கப்படுகிறார்களா?

தேர்தல் ஆணையம் கூட இதுவரை இது தொடர்பாக தனது ஆணையத்துக்குள் எந்த விசாரணையையும் துவக்கியதாக தகவல்களே இல்லை.

இனியும் தினகரன் தங்கள் இசைக்கு தில்லானா ஆடவில்லை என்றால் மட்டுமே குற்ற பத்திரிகையில் அவர் பெயர் இடம் பெறும் என எச்சரிக்கப்பட்டிருக்கலாமோ?

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் இந்தியாவில் பணமும் அதிகாரமும் இணைந்தால் அடுத்த நொடி இந்தியா புரோக்கர்கள் மூலம் ரியல் எஸ்டேட் காரர்கள் மூலம் மனைகளாக விற்கப்பட்டு விடும்.அந்த அபாயம் நெருங்கி விட்டது.

சித்தி சசிகலா பரப்பன சிறையை பணம்கொடுத்து போயஸ் தோட்டமாக்கி விட்டார்.

அவர் அக்கா மகன் தினகரன் பணம் கொடுத்து ..டெல்லியை தமிழ்நாடாக்கி விட்டாரோ ?
                                                                                                                  =  பிரஸ் ஏட்டய்யா குமாரவேல் 
=================================================================== ============================
ஜிஎஸ்டியின் ‘மாஜிக்’ பலிக்குமா?எதற்காக கார்ப்பரேட்டுகள் ஜிஎஸ்டி முறைமையை வரவேற்கிறார்கள்?

ஏற்கெனவே வரி முறைமையில் மறைமுக வரிகளின் பங்கு அதிகமாக உள்ளது. 
ஜிஎஸ்டி முறைமையும் மறைமுக வரிகள் தொடர்பானதே. இதனால் வருமானம் அதிகரித்தால் அது இன்னும் மொத்த வரிகளில் மறைமுக வரிகளின் பங்கையே அதிகரிக்கும். நேரடி வரிகளை அரசாங்கம் மேலும் குறைத்தால் சமன்பாட்டில் அதன் தாக்கம் மேலும் அதிகமாகும்.ஏற்கெனவே மொத்த வரிகளில் நேரடி வரிகளைக் காட்டிலும் மறைமுக வரிகளின் அளவு இரண்டு மடங்கு ஆகும். இதன் பொருள் வரிச்சுமையை அதிகமாகச் சுமப்பது சாதாரண மக்கள் என்பதே. 
செல்வ வரி ஒழிப்பு, மறைமுக வரி விகித அதிகரிப்பு ஆகிய இரண்டு அடிப்படையான அம்சங்களின் பின்புலத்திலேயே ஜிஎஸ்டி முறைமை அறிமுகமாகிறது.இது கார்ப்பரேட்டுகள் விரும்புகிற பாதை என்பதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். வரவேற்கிறார்கள்.

ஆனால் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் நேரடி வரி வசூலில் அதிகரிப்பும் இருந்திருக்கிறதே?
உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய ஓர் காலக்கட்டத்தில் நேரடி வரி வசூலில் அதிகரிப்பு இருந்தது உண்மைதான். ஆனால் அது கார்ப்பரேட் லாபங்களின் மீதான வரி விகித அதிகரிப்பால் கிடைத்த கூடுதல் தொகை அல்ல. 
அரசின் பொருளாதாரப் பாதையில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்ததன் விளைவாக கார்ப்பரேட் லாபங்களில் ஏற்பட்ட உயர்வின் பிரதிபலிப்பே அது. 
விகிதம் கூடாமல் நடந்தேறிய விபரீதம் அது. ஆனால் அதற்குப் பின்னர் குறிப்பாக 2011- 12க்குப் பிறகு ஆஜரான ‘‘நிதிச்சுருக்க’’ கொள்கைகளின் காரணமாக போராடி வரிகளின் பங்கு குறைந்துவிட்டது. பொது முதலீடுகள் வெளியிடவும், மறைமுக வரிகளின் வாயிலான வருமானம் அதிகரிக்கப்பட்டதும் இந்த காலத்தில் நிகழ்ந்துள்ளது.

நவீன தாராளமயப் பாதையோடு ஜிஎஸ்டி முறைமைக்கு உள்ள தொடர்பு என்ன?
நவீன தாராளமய காலத்திய வளர்ச்சியின் உள்ளடக்கம் பாரபட்சமானது. அது உச்சபட்ச பொருளாதார அகழியை உருவாக்கியுள்ளது. நவீன தாராளமயப் பாதை இன்றைய மூலதனக் குவிப்பின் காரணமாக தன்மையில் ஓர் அடிப்படையான முரணை கொண்டுள்ளது. 
அம்முரண்பாடு என்ன? ஒரு புறம் மலிவான உழைப்பு, ஆழமான சுரண்டலுக்குரிய வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்துகிறது. மூலதனக் குவிப்பிற்காக இந்நடவடிக்கைகளை அது சார்ந்துள்ளது. மறுபுறம் இத்தகைய நடவடிக்கைகள் கிராக்கியைத் தடுக்கின்றன. உழைப்பாளர்களின் ‘உற்பத்தித் திறன் அதிகரிப்பையும் பாதிக்கிறது. இது மூலதனக் குவிப்பிற்கு தடையை உருவாக்குகிறது.
இச்சூழலில் ஜிஎஸ்டி வரி முறைமை அறிமுகம் வருமானத் திரட்டலுக்கான பெரும் தேவையாக அரசுக்கு உள்ளது. சர்வதேச விலைகள் வீழ்ச்சியடைந்த போதிலும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான எக்சைஸ் வரிகளை பெருமளவு போட்டு மக்களின் பாக்கெட்டுகளில் கைவைப்பதைப் பார்க்கலாம்.

மலிவு உழைப்பும், ஆழமான சுரண்டலும் மூலதனக்குவிப்பில் ஏற்படுத்திட, முரண்பாட்டை மீறியும் இப்பாதையில் அதிகம் பயணிப்பது ஏன்?
விவசாய வருமானங்களில் வீழ்ச்சியும் மலிவான உழைப்பைப் பெறுவதற்கான சூழலை உருவாக்கித் தந்துள்ளது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் உண்மை ஊதியமும் கடந்த 25 ஆண்டுகளில் தேக்கத்திலேயே உள்ளது. 
மதிப்பு அதிகரிப்பில் உழைப்பாளிகளின் பங்கு 10 சதவீதத்திற்கும் கீழே போய்விட்டது.இவற்றின் பயனாக பெரும் தொழிலகங்களின் உபரியும், லாபப் பங்குகளும் அதிகரித்துள்ளது. உயர் ஊதியம் பெறுகிற சிறு பகுதியினரும் பயன்பெற்றுள்ளனர்.இச்சூழ்நிலை தனிநபர் சராசரி சரக்கு உற்பத்தி, மலிவு உழைப்பை அதிகரித்திருப்பதால் உலகச் சந்தையில் ‘‘போட்டி’’ போடுகிற வாய்ப்பை பெரும் தொழிலகங்களுக்கு தந்துள்ளன. 
கார்ப்பரேட்டுகளின் இலாபப் பங்கு அதிகரிக்கும்போது அவர்களின் முதலீடுகளும் இயல்பாகவே அதிகரிக்கின்றன.

ஆனால் முதலீடுகள் அதிகரித்தாலும் சந்தை வேண்டுமே?
அதுதான் மூலதனக் குவிப்பில் இங்கே எழும் முரண்பாட்டை மீறிப் பயணிக்க முயற்சிப்பதன் ரகசியம். குறைவான வருமானம் உள்ள பொருளாதாரத்தில் உள்நாட்டு கிராக்கி வளராது. 
அதனால் சந்தையும் விரிவடைய முடியாது. மறுபுறம் வருமான உயர்வு கிடைக்கிற சிறு பகுதியினரின் தேவைகள் ஏற்படுத்துகிற கிராக்கியும், சந்தையும் வித்தியாசமானது. 
நிறைய சேவைகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது கிராக்கியின், சந்தையின் தன்மையில் ஒரு பாரபட்சத்தை உருவாக்கியுள்ளது.இதன் காரணமாக இறக்குமதிகளைச் சார்ந்த சந்தையை இங்கு ஊக்குவிக்க வேண்டியுள்ளது.உள்நாட்டில் மலிவான உழைப்பை உறுதி செய்தாலும் அது ஏற்றுமதி வளர்ச்சியில் பிரதிபலிக்கவில்லை. ஆகவே நெருக்கடி ஆழமானதாகவும், மிக நீண்டதாகவும் தற்போது மாறியுள்ளது. அதுவே அவர்களின் பயணம் அறிவிக்கப்பட்ட இலக்குகளை எட்ட முடியவில்லை.

ஜிஎஸ்டி முறைமை எல்லா பொருளாதார நோய்களுக்கும் மாமருந்து என்கிறார்களே?
இன்றைய நெருக்கடிக்கான தீர்வு பொது முதலீடுகளை அதிகரிப்பது, அதன் வாயிலாக ஆதாரத் தொழில் வளர்ச்சி, விவசாயத்திற்கு புத்துயிர் சேவைகள் விரிவாக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது என்பதிலேயே அடங்கியிருக்கிறது.
யார் அதிகமாக வரி செலுத்துகிற சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனரோ அவர்களிடமிருந்து வருவாய் திரட்டலை உறுதி செய்கிற வழிமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.ஆனால் சர்வதேச நிதி மூலதனமும், இந்தியப் பெரும் தொழிலகங்களும் இத்தகைய தீர்வுகளை முற்றிலும் நிராகரிக்கின்றன. 
ஆகவே இந்திய அரசாங்கம் ‘‘நிதிச் சுருக்கத்தோடு’’ காதலித்து கரம் பிடித்துள்ளது.எனினும் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கவில்லை. நவீன தாராளமய கட்டமைப்புக்குள்ளேயே தீர்வைத் தேடுகிறார்கள். இத்தகைய திவாலாகிப் போன சிந்தனையின் வெளிப்பாடே ஜிஎஸ்டி ‘‘மாஜிக்’’ பலிக்கும் என்பது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி - ஜூலை 9, 2017, இதழில் சுர்ஜித் மஜூம்தார் எழுதியுள்ள கட்டுரையின் சாரம்   க.சுவாமிநாதன்

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...