சனி, 30 மார்ச், 2013

கட்ஜு க்கு என்னவாயிற்று....?

முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இதுவரை கூறிய கருத்துக்கள் பெரும்பாலான  இந்தியர்களின் கருத்துக்களுடன் ஒத்து போவதாக இருந்தது.ஆனால் இப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் முன்னாள் நீதிபதியாக இருந்தவரின் கருத்து என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை .சஞ்சய்தத் பெற்ற தண்டனை பற்றிய பற்றிய கருத்துக்கள் முரணானவை.
சில மாதங்களுக்கு முன் 90 சத இந்தியர்கள் முட்டாள்கள் எனவும், 90 சத நீதிபதிகள் முட்டாள்கள் ‌எனவும் கருத்து தெரிவித்தார்.
 பின்னர் காங்., மற்றும் பா.ஜ. முதல்வர்களை விமர்சித்தார் . 
மார்க்கண்டேய கட்ஜு 
இப்போது மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்கிறார். அதையே பலவழிகளில் கூறியும் வருகிறார்.

இப்போது ஆங்கில தொலைக்காட்சி  ஒன்றில் :-

" நான் பேசும் கருத்துக்கள் விளம்பரம் தேடுவதற்காக அல்ல. மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.
 நாட்டில் எல்லா வாக்காளர்களும் முட்டாள்கள் தான். [முன்பு இந்த சதவிகிதம் 90 ஆக இருந்தது.]
தேர்தலில் நான் ஓட்டளிக்கமாட்டேன். ஏனென்றால் எனது ஒரு ஓட்டினால் எந்த பிரயோஜனமும் இல்‌லை. விளம்பரம் தேடிக்கொள்வதற்காக [?]நான் எப்போதும் கருத்து தெரிவிக்கவில்லை. 
ஆனால் அது போன்ற சூழ்நிலை என்னை தொடர்ந்து வருகிறது. என்னால் என்ன செய்ய முடியும். நாட்டில் நடந்து வரும் தற்போதைய சூழ்நிலையை வேடிக்கை பார்க்க நான் செவிடனோ, ஊமையோ அல்ல.
 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய்தத் பெரும் மனவருத்தத்தில் உள்ளார். இந்த விஷயத்தில் அவருக்கு ஆறுதலாக இருக்க காங்கிரஸ் கட்சி தயங்குகிறது. அவரது தந்தை சுனில் தத் முன்னாள் காங். எம்.பி.யாக இருந்தார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி அவருக்கு எதுவும் செய்யவில்லை. "
என்று அவர் கூறியுள்ளார்.
ஒருவர் தண்டனை விதிக்கப்பட்டால் மனவருத்தம் கொள்ளாமல் எப்படி இருப்பார்.?அதற்காகத்தானே தண்டனையே வழங்கப்படுகிறது.மார்க்கண்டேய கட்ஜு சஞ்சாய் தத் குற்றம் இழைக்கவில்லை என்கிறார்.மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது,ஆயுதங்களை மறைவாக ஒளித்து வைக்க உதவியது,வெடி பொருட்களை வைத்திருந்தது எல்லாம் தேச பக்தி செயல்களா?மும்பையில் குண்டு வெடிப்பில் என்ன காரணத்தினால் தான் இப்படி உடல் சிதறி சாகிறோம் என்று தெரியாமலேயே உயிரை விட்டா நூற்றுக்கணக்கானொர் சிந்திய ரத்தத்தில் சஞ்சய்தத் கைகளும் கறை படிந்திருப்பது ஏன் கட்ஜுக்கும் ,இங்குள்ள நடிகர் ரஜின்காந்துக்கும் தெரியவில்லை.
இப்போது தண்டனையைப்பார்த்து அழுவதாலும் ,மனவருத்தம் அடைவதாலும் சஞ்ச்சய்த்துக்கு விடுதலை அளிக்க வெண்டும்.அவர் அப்பா காங்கிரசு மக்களவை உறுப்பினராக இருந்தார் என்பதாலும் விட முடியுமா?
அதுவும் நீதியை கட்டிக்காத்த இடத்தில் இதுவரை அமர்ந்திருந்தவர் சொல்லுகிற வசனமா இது.?

எதற்கென்று தெரியாமல்,யார் என்று தெரியாமல் வீட்டை வடைகைக்கு கொடுத்த பொருளை கொண்டு சென்ற பேரறிவாளன் போன்றோருக்கு தூக்குத்தணடனை விதிக்கப்பட்டு நாளை என்னிக்கொண்டிருக்க்கிரார்களே அவர்களை பற்றி இந்த ரஜினியும்-கட்ஜும்இதுவரை கருத்து கந்தசாமிகளாக மாறாததுஏன் ?  
சஞ்சய் தத் தெரிந்தே தவறு செய்துள்ளார்.கையுங் களவுமாக மாட்டியும் உள்ளார்.ஆதாரங்களும் உள்ளன.குற்றமும் நிருபிக்கப்பட்டுள்ளது.ஆனால் சந்தேகத்தின் பேரிலேயே பேரறிவாளன்,சாந்தன்,முருகன் உள்ளெ உள்ளனர்.அவர்கள் கையும் களவுமாக மாட்டவும் இல்லை.
நடிகர் என்றால் ஒரு வழக்கு அப்பாவி மக்கள் என்றால் ஒரு வழக்கா?கசாப்,அப்சல் குருக்கள் கூட எதோ லட்சியத்துக்காக் போராடுவதாகத்தான் சொல்லி குண்டுகளை வேடிக்கச்செய்தார்கள் அவர்களை தூக்கில் போட்டது தப்பான செயலா?
இந்திய சுதந்திரத்துக்காக ,இந்தியமக்களை கொன்று குவித்ததற்காக குண்டு வீசிய பகத்சிங்-சுகதேவ்-ராஜகுருவை கூட இங்கு காரணமே கேட்காமல் தூக்கில்தான் போட்டார்கள்.அதற்கு இங்கிருந்த காந்தியும் துணைதானே போனார்.விடுதலைப்போராட்ட வீரர்களுக்கே இந்த தண்டனை .அப்படியென்றால் தீவிரவாதிகளுக்கும் அதற்கு துணை போன-போகிறவர்க ளுக்கும் எப்படிப்பட்ட தண்டனை வழங்க வே ண்டும்.

----------------------------------------------------------------------------------------------

வைரஸ்களிடமிருந்து தப்பிக்க....  

 நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், அந்த தகவல்களை தேவையான நேரம் பார்வையிடவும் -பயன்படுத்தவும் ,தகவல்களை எளிதாக  எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் (USB) பயன்படுத்தப்படுகின்றன.
இத்தனை வசதி மிக்க பென் டிரைவகளை கணினி வைரஸ்கள் எளிதாக தாக்கி விடுகின்றன.பலர் நாம் கொடுக்கும் பென் டிரைவ்களை கையால் வாங்கி தங்கள் கணினிகளில் பயன்படுத்த மறுக்கிறார்கள். பென் டிரைவ்களை    வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது .
உங்களையும் உங்கள் பென் டிரைவ்களையும் காக்கும் ஒரு மென்பொருள் பாதுகாக்கிறது.
மேலும் தொடர 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நச்சு ஆலைக்கு மூடு விழா?

" தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடசென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
 ஸ்டெர்லைட்  நச்சு ஆலையில் இருந்து கந்தக டை ஆக்சைடு வாயு அடிக்கடி சட்டவிரோதமாக வெளியேறுவதால் ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஆலையை மூட வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு தரப்புகளிலும் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வந்தது. இதனையடுத்து ஆலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடிகோட்டாட்சியருக்கு  உத்திரவிடப்பட்டது.
அவர் பரிந்துரை மற்றும் நகர மக்களின் கடுமையான் போராட்டம் காரணமாக  ஆலையை மூடுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் பரிந்துரை செய்தார்.அதை  அடுத்து ஆலையை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பித்தது.. முதல் கட்டமாக ஆலைக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்ட து.
 முற்றிலுமாக ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ஹோலி "சாயம் பூசிவிளையாடி ன களைப்புதான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டு நடப்பு பார்க்கிற மாதிரியா இருக்கு?

வெள்ளி, 29 மார்ச், 2013

"கொசு "த் தொல்லை.

கொசு வில்  3000 வகை கள் இருக்கின்றன.
ஆர்க்டிக் துருவத்திலிருந்து ஆப்பிரிக்கக் காடுகள் வரை அவை வாசம் புரியாத பகுதிகளே பிரபஞ்சத்தில் கிடையாது. மனித இரத்தமே அதன் பிரதான ஆகாரம். விடியக்காலைப் பொழுதும் இரவு துவங்கும் பொழுதும் அவை உணவு உண்ணத் தேர்ந்தெடுக்கும் உல்லாச நேரங்கள்.
கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆர்க்டிக் பகுதிக்குச் சென்று கொசுக்கடி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். கை, கால் மற்றும் நுடம்பின் சில பகுதிகளில் கொசுக்களை கடித்துச் சவைக்க அனுமதித்தார்கள். கொசு கடிக்காது. அதற்குப் பல் கிடையாது. ஆனால், கொடுக்கு மூலம் இரத்தத்தை உறிஞ்சும். ஆனால், நாம் அனைவரும் கொசு கடிக்கிறது என்றே கூறி வருகிறோம். கனடா நாட்டு விஞ்ஞானியின் மேனியில் 9000 கடிகள் கடிக்க கொசுவை அனுமதித்தார்கள். அதற்கு இரண்டு மணி நேர அவகாசம் அளித்தார்கள். விளைவு என்ன தெரியுமா? அந்த விஞ்ஞானியின் உடம்பில் உள்ள இரத்தத்தில் கலோரி அளவு குறைந்து விட்டது.
1,20,000 கொசுக்கள் கடிக்க ஒரே ஒரு முறை அனுமதித்தால் போதும். உங்கள் உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் கூட மிஞ்சாது.
பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் ஆண், பெண் கொசுக்களின் திறன் (அதாவது கடிப்பது) பற்றி ஆய்வு மேற்கொண்டார்கள். மனிதர்களுக்கு இணையாக ஆண் கொசுக்களின் காதுகளில் பாலுணர்வைத் தூண்டும் செல்கள் உள்ளதாகவும், அதன் மூலமாக தங்கைக் கடந்து செல்லும் பெண் கொசுக்களுடன் இரண்பொரு விநாடிகளில் கூடிக் கலவி செய்து இனப்பெருக்கம் செய்யக் கூடியவை என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். பெண் கொசுக்கள், இந்த இனவிருத்தி விஷயத்தில் அவ்வளவு இலகுவில் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்பதும் இந்த ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு. இருந்த போதிலும் கொசு உற்பத்தியின் வேகம், சூப்பர் ஸானிக் ஜெட் வேகத்துடன் போட்டிப் போட கூடியதே.
ஆண் கொசுக்கள், பழச்சாறு, தேன் தாவரங்களில் உள்ள நீர்ச்சத்து இவற்றையே உணவாகக் கொள்கிறது. ஆனால் பெண் கொசுக்கள், மனித இரத்தத்தையே முக்கிய ஆதாரமாகக் கொண்டு உயிர் வாழ்கிறது. மனித இரத்தத்தில் உள்ள புரோட்டின் அதற்குத் தேவை. இதைக் கொண்டு, அவை தன்னுள் “முட்டை’யை உருவாக்கிக் கொள்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கொசுக்களின் “சைஸ்’ தற்போது உள்ளதைப் போல மூன்று மடங்கு பெரியது. காலப்போக்கில் இவற்றின் உருவம் சிறுத்துவிட்டது. (நல்ல வேளை)
கொசுக்களின் முகங்களின் பெரும்பகுதியைக் கண்களே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. (அவ்வளவு பெரிய கண்கள்)
மனிதர்கள் சுவாசத்தின் போது வெளியேற்றும் கரியமில வாயுவை நுகர்ந்து பார்ப்பதன் வாயிலாகவே, மனித இருப்பைக் கொசு உணர்கிறது. மணிக்கு ஒன்றரை மைல் வேகத்தில் பறக்கக் கூடியது. உங்கள் கையில் அகப்படாமல் பெரும்பான்மையான சமயங்களில் தப்பித்து விடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரன் மீது பரணி பாடியதாகத் தமிழில் ஒரு இலக்கிய நூல் (கலிங்கத்துபரணி) இருக்கிறது. நூறு கொசுக்களையாவது அடித்துக் கொன்ற ஒரு வீரன் மீது யாராவது ஒரு புதுக் கவிஞர் பரணி பாட முன் வரக் கூடாதா?
கொசுவினால் (கடியினால்) விளையக்கூடிய வியாதிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அவற்றுள் லேட்டஸ்ட், டெங்கு!
ஆப்பிரிக்காவில் மலேரியாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை பத்து லட்சம்.
எயிட்ஸ் நோயாளிகளின் இரத்தத்தைக் குடிக்கும் கொசு செத்து மடியாது. காரணம், எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தில் உள்ள வைரஸ் கிருமிகளை, கொசுவின் குடல் ஜீரணித்து ஏற்றுக் கொண்டு விடும்.
நைஜீரியாவில் உள்ள அபூஜர் என்ற நகரில் உலகின் மிகப் பெரிய கொசு வலையை உருவாக்கியிருக்கிறார்கள். 2000ம் ஆண்டு இதைத் திறந்து வைத்த நாட்டுக்கு (உலகுக்கு) அர்ப்பணித்துள்ளார்கள். இருநூறு குழந்தைகள் ஒரே நேரத்தில் இந்தக் கொசுவலையில் படுத்துத் தூங்கலாம்.
கொசுக்கடியால் ஏற்படக் கூடிய வியாதிகள் ஒழிப்பு விழிப்புணர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தப் பிரம்மாண்டமான கொசுவலை.
கனடா நாட்டில் உள்ள கோமர்னோ, மானிடோபா என்ற பகுதியைக் கொசுக்களின் தலைநகரம் என்று அழைக்கிறார்கள். இங்கு கொசுவின் பிரமாண்ட சிலை ஒன்று நிறுவியிருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய கொசு சிலை இதுவே. (உக்ரேனிய மொழியில் கோமர்னோ என்றால் கொசு என்று அர்த்தம்)
1984ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கொசு சிலை உருக்கினால் ஆனது. கொசுவின் இறக்கை மட்டுமே 15 அடி.
காற்று, மழை, பனி, வெயில் என்ற இயற்கை கால மாறுபாட்டினாலும் இந்தச் சிலைக்கு எந்தப் பிரச்சினையும் வராது.
“ஏடிஸ்’ எனும் வகைக் கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் உண்டாகின்றது.
அதற்கான அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, தசைவலி, உடலில் சிவப்புத் திட்டுகள் தோன்றும்.
சிறிய குழந்தைகளுக்குக் காய்ச்சல் மற்றும் சிவப்பு திட்டுகள் ஏற்படும்.
பெரிய குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் அறிகுறிகள் மூன்று நாட்களுக்குப் பின்பே தெரியவரும்.
டெங்கு காய்ச்சலால் வரும் பின்விளைவுகள்: இரத்தத்தில் தடங்களின் (அடர்த்தி) எண்ணிக்கை குறைந்து உடலில் ரத்தக் கசிவு ஏற்படும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு தோன்றும். ரத்தசோகை உண்டாகும்.

நன்றி:மாடர்ன் கிச்சன்

வியாழன், 28 மார்ச், 2013

சிங்கள விஷ[ம]ம்இலங்கை ராஜபக்சேக்கு எதிரான உலகத்தமிழர் எழுச்சி இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.
அதனை தனது குள்ளநரி தனத்தால் இந்திய ஒற்றுமைக்கே உலை வைக்கும் விதமாக கையாலத்துவங்கி விட்டது.
அதன் விஷமப்பிரச்சாரத்தை இந்தியாவில் தூதர் என்பவர் மூலமே ஆரம்பித்து விட்டது.
டெல்லியில் உள்ள இலங்கைக்கான் தூதர் வட இந்திய ஊடகங்களுக்கு ஒரு செய்தியை தனிப்பட்ட கவனத்துக்கு என்று அனுப்பியுள்ளார்.
"இலங்கை மக்கள்தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான்.
எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவழியினர் எனக் கருதி கவலைப்படக் கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவழியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும் .
இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களின் பூர்வீகக் குடிமக்கள்.
அசோக சக்கரவர்த்தி ஆட்சி நடைபெற்ற போது , அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே  வட இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இருந்த உறவுகள் பதிவாகி உள்ளன. அப்போது புத்தமதத்தை பரப்ப வட இந்தியாவில் இருந்து சென்ற வட இந்தியர்கள்தான் இன்று சிங்களர்களாக உள்ளனர்.
அதன் பின்னர் வந்த முகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதை தற்போது சிங்கள மக்கள் புதுப்பித்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டரை லட்சம் இலங்கையர்கள் இந்தியா வந்து செல்கின்றனர். வட இந்தியாவுடன் வரலாற்று தொடர்புள்ள இனம்தான் சிங்களர்.
இந்தி, வங்காளி, ஒரியா ஆகியவற்றின் மூல மொழி சமஸ்கிருதம். அதுதான் சிங்களத்துக்கும் மூலம்.அதை சிங்களரால் பேசவும் எழுதவும் முடியும்."
என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு.
இதைத்தானே இலங்கையில் செல்வநாயகம் முதல் மாவீரன் பிரபாகரன் வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள்.வந்தேறிகள்தான் சிங்கள காடையர்கள் என்று. 
வங்கம்,ஒரிசா,பீகார் என்று பிழைக்க வந்தவர்கள் தான் இவர்கள்.அவர்களின் ஒற்றுமையும் கலப்பும்தான்  இவர்கள் ஒரு புது இனமாக -சிங்களனாக வடிவெடுத்து விட்டன ர்.
அனால் பழைய வரலாறை சொல்லி வட இந்தியர்களிடம் ஆதரவு தேடுவது  தமிழர்களை கொன்று குவித்ததற்கான பாதுகாப்பு தேடி எழுப்பப்படும் பிரசாரம்.ஆனால் இந்திய அரசும் ,வட இந்தியத் தலைவர்களும் இப்போதும் சிங்கள வெறியர்களுக்கு ஆதரவாகத்தானே செயல்படுகிறார்கள்.
இந்த கரிய வாசம் எழுதிய கரிய வாசகம் வட இந்திய முதல்வர்களுக்கும்-அங்குள்ள எதிர்கட்சித்தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் அசோகர் காலத்தில்தான் இலங்கையில் வடஇ ந்தியர்கள் அதாவது இன்றைய சிங்களர்கள் இலங்கையில் பிழைக்கப் போனது  வெளிச்சத்துக்கு வந்து விட்டது.அதற்கு முன் இருந்தே தமிழன் இலங்கையை ஆண்டு வந்ததும் சிங்களன் வாயாலே வெளி வந்து விட்டது.
ஒண்ட வந்த பிடா ரி ஊரில் உள்ளவர்களை விரட்டிய கதை உலக்குக்கு எடுத்துகாட்டப்பட்டு விட்டது.
கரிய வாசமும் இலங்கை அரசும் இந்த பிரச்னையை இப்போது கையில் எடுத்தாலும்.அதனால் தமிழர்களுக்கு ஒரு துன்பமும் புதிதாக வந்து விடப்போவதில்லை.
காரணம் வட இந்தியர்கள் ஏற்கனவே தமிழர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள்.
ராஜபக்ஷேவை விருந்துக்கு அழைத்து தமிழர்கள் மனதை நோக அடித்தவர்தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
இலங்கைக்கு எதிராக மக்களவையில் ஒரு தீர்மானம் கொண்டுவரக்கூட விடாமல் வட இந்திய கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது சமீபத்திய செய்திதான்.
இந்தியாவில் தமிழன் தனித்தீவகத்தான் உள்ளான்.
காரணம் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு மூத்த குடி மக்கள் இன்று  சொந்த நாடற்ற இனமாக உள்ளதுதான்.இறக்கும் தமிழ் நாட்டையும் வட இந்தியனிடம் அடகு வைத்து அவனின் வென்கொற்றக்  குடையின் கீழ்தான் காலம் தள்ளுகிறான்.தமிழன்.
கரிய வாசம் எழுதிய கரிய வாசகம் தமிழர்களுக்கு எதிராக பயன் படுவது போல் தமிழர்களுக்கும் இலங்கைக்குமான உரிமையையும் ஒரு பக்கம் எடுத்துக் காட்டியுள்ளது.
ஆனாலும் ஒன்றுபட்ட இந்தியாவில் தூதராக இருந்து கொண்டு ஒற்றுமையை சிதைக்கும் கரிய வாசம் போன்றவர்கள் ஒரு நாட்டின் தூதராக இருக்க உரிமை இழந்து விட்டார்.அவரை வெளியெற்றுவதுதான் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு நல்லது.

புதன், 27 மார்ச், 2013

சரியான வழியல்ல .....,

'மாணவர்கள் போராட்டம் இதுவரை சரியான வழியில் தான் பொய் கொண்டிருக்கிறது.ஆனால் அதை திசை திருப்பி வன்முறையால் தடம் மாறி சென்று விடும் அபாயம் இப்போது வருகிறது.அப்படி சென்றால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்ட மரியாதை மரியாதையை இழந்து விடும்.
காங்கிரசுக்காரனை எதிர்த்து போராடலாம்.ஆனால் அதை வன்முறையின் மூலம் திசைமாறிட செய்திடக்கூடாது.


பேனர்களை கிழிப்பது மாணவர்களிடம் காங்கிரசின் மேல் இருக்கும் வெறுப்பை உணர்த்துகிறது.அதை வெளிக்காட்டும் முறையில் சில கட்சியினரால் குறிப்பாக நாம்தமிழர் கட்சியினரால் வன்முறை பாதையை மா ணவர்களுக்கு காட்டி வருவது பயத்தை தருகிறது.
காரணம் இருபக்கமும் கூர்மையான ஆயுதம் வன்முறை.
அதானால் மாணவர்கள் கைது .அதனால் அவர்கள் போராட்டத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.காவல்துறை -அரசு நடவடிக்கைகள் என்று பல வழிகளில் போராட்டம் சென்று அதன் நோக்கமே சின்னாபின்னமாகிவிடும்.
ஈழப்பிரச்னையை மட்டுமே வைத்து தங்கள் அரசியலை செய்து வருவோர் மாணவர்களை தங்கள் கையில் எடுக்க இப்படி இளம்வயது வேகத்தை வன்முறை -பரபரப்பு என்று கொண்டு சென்று விடுவார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது போராட்ட நோக்கமான ஈழத்தமிழர் நலமும்,மாணவர்களின் எதிர்காலமும்தான்.
மத்திய அரசை வழியுறுத்த இதுவரை மாணவர்கள் கூறிய வரிகொடா இயக்கம்,மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை.பூட்டுதல்.
ஆங்காங்கே மத்திய காங்கிரசு அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்,பேரணிகள் நடத்துவது சரியான முறைகள்தான்.
ஆனால் தமிழனாக இருந்தாலும் காங்கிரசு கட்சியில் இருப்பதால் ஈழப்பிரச்னையில் தவறாக நடந்துவரும் தமிழர்களுக்கு உணர்வைஉண்டாக்கும் விதம் நடந்து கொள்ளுங்கள்.
வரும் தேர்தலில்  காங்கிரசு என்று கூறிவாக்கு கேட்டு வரும் உணர்ச்சியற்ற ஜென்மங்களை  தெருவில் நுழைய விடாமல் துரத்துங்கள்.உங்கள் பகுதியில் அதற்கு ஆதரவாக ஒரு வாக்குகூட விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த மனித தன்மையற்ற காங்கிரசுடன் கூட்டணியில் எந்த கட்சி இருந்தாலும் அதற்கும் தேர்தல் முன்பணத்தை[டெபாசிட்] வாங்கமுடியாத அளவு செய்யுங்கள்.அதற்காக உழியுங்கள்.உங்கள் வாக்குகளை மட்டுமல்ல உங்கள் பெற்றொர்,உறவினர்கள்,தெரிந்தவர்கள் வாக்குகளையும் மொத்தத்தில் பதிவாகும் வாக்குகள் ஒவ்வொன்றையும் காங்கிரசு எதிர்ப்பு வாக்குகளாக பதிவாக ச்செய்யுங்கள்.
பின்னர் பார்ப்போம் .காங்கிரசுக்கு விழும் மரண அடி அடுத்து மத்தியில் வரும் ஒவ்வொரு அரசுக்கும் தமிழர்கள் கற்று தந்த பாடமாக அமையட்டும்.
இந்த முறையால் முன்பு இப்போதைய முதல்வருக்கு மக்களவை தேர்தலில் தமிழம் 40க்கு 40 என்று பாடம் கற்பித்ததும்,அவரை வழிக்கு கொண்டு வந்ததும் நினைவில் இல்லையா?
மனித தன்மை-யோசனை இல்லாமல் காங்கிரசுக்காரனிடம் மோதுவதும் ஒன்றுதான் உணர்ச்சியற்ற குட்டிச்சுவரில் மோதுவதும் ஒன்றுதான்.வலி மோதியவனுக்குத்தான் .குட்டி சுவர் அசையாமல்தான் இருக்கும்.
மனிதாபிமானமும்-தமிழன் என்ற உணர்வும் இருந்தால் சோனியா போன்ற தமிழின விரோதிகள் செய்யும் இத்தனையையும் கண்டபின்னரும் காங்கிரசில் இருப்பானா? அப்படி இருப்பவனும் மனிதனாக இருப்பானா?
கடைசியில் மாணவர்களுக்கு  சொல்ல விரும்புவதெல்லாம் சில பரபரப்பு அரசியல்வாதிகள் கையில் சிக்கி வன்முறை பாதைக்கு திரும்பி விடாதிர்கள்.இந்த வயதில் அது கவர்ச சியான ஒன்றாகக் கூட இருக்கும்.இது போன்ற பேனர் கிழிப்பு,கல்வீசுதல் போன்றவற்றை அக்கட்சியினரையே செய்து கொள்ளச்சொல்லிவிடுங்கள் .கைகளில் நீங்கள் கற்களையும்-கம்புகளையும் தொடாதீர்கள்.அது உங்களை எங்கேயோ கொண்டு சென்று விடும்.இதுவரை உங்களின் மற்றைய போராட்டங்கள் ,பேருந்து நாள் கொண்டாட்டங்கள் உங்களை பற்றி மக்கள் மனதில் உருவாக்கியிருந்த பிம்பங்கள் இப்போதைய போராட்டங்கள் மூலம் கரைந்து உங்கள் மீது மதிப்பையும்,நம்பிக்கையையும் உருவாக்கி வருகிறது.
திருச்சி சம்பவம் உங்கள் போராட்டத்தையும்-கூடவே  வாழ்க்கையையும் திசை மாற்றிவிடும்.
திருச்சியில் நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

"தமிழகத்தில்  முன்னொடி யாக ஈழத்தமிழர்களுக்காகவும் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி கிளையைதேனி மாவட்டம் தேவாரம் கிராம மக்கள் கலைத்து முதல் விதையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்."
இதையே அனைத்து ஊர்களிலும் வழி மொழிவோம். 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 26 மார்ச், 2013

ஸ்டெர்லைட் :-நச்சு ஆலை

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தான் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக நச்சு ஆலை  ஸ்டெர்லைட் உள்ளது .
இந்த ஆலை யை மூட வெண்டும்.அகற்ற வேண்டும் மக்கள் வாழ்வை காப்பாற்ற வே ண்டும்  என்று தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆனால் மத்திய ,மாநில அரசுகள் இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

இந்தியாவில் எல்லா மாநிலங்களும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை இதன் நச்சுத்தன்மையை கணக்கில் கொண்டு  தங்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி மறுத்த போது இந்தியாவின் வீர மங்கை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்வர்.அவர் வீரத்தை காட்டி பயப்படாமல் [போனால் மக்கள் உயிர்தானே போகிறது.ஆனால் வருவது...?என்ற கணக்கில் ]தமிழகத்தில் அதுவும் தூத்துக்குடி பகுதியில் இடம் ஒதுக்கி சிகப்பு கம்பளம் விரித்தார்.
பலன் அவருக்கும்,சசிகலாவுக்கும்,சிதம்பரத்துக்கும் [இதில் எல்லாம் ஒற்றுமையாக செயல்படுவார்கள்]வேதாந்தாவின் பங்குகள் பணபபெட்டியுடன் கிடைத்தது.
அப்போது முதல் இந்த ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருகிறது.
அரசியல் கட்சியினரும் முதலில் போராடினார்கள் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை அவர்களை கவர்[த ]ந்ததால்  நழுவி விட்டனர்.
போராடிய மக்களை நடுத்தெருவில் விட்டதுடன்.சிலர் ஆலை  ஏகப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பையும் ,நல்ல வாழ்வையும் தருகிறதாக வேறு பேசவும்,சுவரொட்டிகளை அவ்வப்போது பணம் வரும் போதும்.மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் போதும் ஓட்ட ஆரம்பித்து கைகூலிகளாகவே  ஆகி விட்டனர்.
 ஸ்டர் லைட் ஆலை இயங்க ஆரம்பித்தவுடனே அதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்து விட்டது.அருகில் உள்ள கிராமங்கள் நிலங்கள் விசத்தன்மையுடன் பாலையாகி விட்டது.செடிகள்-பயிர்கள் கருகி விட்டன.
அப்பகுதில் உள்ள குட்டைகளில் நீர் அருந்திய கால் நடைகள் நூற்றுக்கண க்கில் மடிந்து விழுந்தன.
ஆனால் அப்பகுதில் உள்ளவர்கள் கோரிக்கைகள்-குறைகள் ஆட்சியாளர்களின் காதுகளில் விழுவதே இல்லை.
தனது ஆட்சியில் ஜெயலலிதா அனுமதி கொடுத்து அடிக்கல் நாட்டியது முதல் அடுத்து வந்த கலைஞர் ஆட்சியிலும் ஆலை ஆட்சியினரால் பாதுக்காக்கப்பட் டதே  ஒழிய மக்கள் கோரிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.இப்போது அரசியல் கட்சி என்று பார்த்தால் நல்ல கண்ணுவும் ,வைகோவும் தான் ,ச்டேர்லைடை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.ஸ்டெர்லைட் டுக்கு எதிரான வழக்கில் வைகோ வாதாடியும் வருகிறார்.
இந்த ஆலையில் இருந்து விசா வாயுக்கள் வருவதையும்,நிலத்தடி நீர் விசமானதையும்,நிலங்கள் சாகுபடிக்கு பயனின்றி விசத்தன்மையுள்ளதாக மாறிவருவதாகவும் முதலில் அறிக்கை தந்த மத்திய அரசின் மாசு தொடர்பான ஆய்வு நிறுவனம் "நீரி"வழக்கு எதிர்ப்பு என்றானதும் அரசு துறைக்கே உரிய குட்டிக்கரணம் போட்டு ஆலைக்கு ஆதரவாக அறிக்கை தந்து மக்களை அரசின் பாதுக்காப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டது.
ஸ்டெர்லை ஆலையால் சுற்றுப்புறம் மட்டும் உயிர் இழக்கவில்லை.மனிதர்களும் தங்கள் உயிரை இழந்து வருகிறார்கள்.அவ்வப்போது ஆலை வெளியிடும் நச்சுக்காற்றால் சிறு வயதினரும்-வயதானவர்களும் திடீரென இறந்து வருகிறார்கள்.
ஆலையில் தினசரி விபத்து வாடிக்கையான ஒன்று.வார,வாரம் யாரா வது தொழிலாளி இறந்து கொண்டிருக்கிறார்.அவர்களுக்கு விபத்து எற்பட்டால் உடனே மதுரை போன்ற வெளியூர் மருத்துவமனைக்கு கொண்டூ சென்று  விடுவார்கள்.இறந்ததும் அப்படியே வழியனுப்பி வைத்து விடூவார்கள்.90 விழுக்காடு ஒப்பந்த தொழிலாளர்கள்.அதுவும் வடமாநிலத்தில் இருந்து பிழைக்க வந்தவர்கள் என்பதால் இங்கு தமிழகத்தில் அதிர்வுகள் தெரியாதூ.இறந்தவர் குடு ம்பத்திற்கு ஒரு தொகை அவர்கள்வாயை அடைக்க கொடுத்தும் விடுகிறார்கள்.
அதையும் அதாண்டி மதாமாதம் ஒரு விபத்து என்ற பெயரில் ஸ்டெர்லைத செய்யும் கொலைகள் வெளியே  வந்து ம்விடுகிறது.அது அரசின்-காவல்துறையின் ஒத்துழைப்புடன் மறைக்கவும் பட்டு விடுகிறது.
இதை மறைப்பதிலும் -ஸ்டெர்லைட் பற்றிய எதிர்மறை செய்திகள் வந்து விடக்கூடாது என்பதில் ஆலையை விட பத்திரிக்கைகளும்-அரசும்தான் ஆர்வம் காட்டுகிறன.
தினத்தந்தி,தினகரன் ,மாலைமுரசு பொன்ற பத்திரிகைகள் மறந்தும் ஸ்டெர்லை ஆலை ஆளைக் கொன்று விட்டது.அதில் இருந்து விசா வாயு கசிவு என்று போடுவதில்லை.ஒரு ஆலையில் இருந்து கொஞ்சம் வாயு கசிவு ,ஒரு ஆலையில் வேலை பார்த்தவர் விபத்தில் மரணம்.இவ்வாறுதான்  செய்திகளை  வெளியிடுவார்கள்.
பத்திரிக்கை முதலாளிகளுக்கு ஸ்டெர் லைட் தரும் விளம்பரம்-நிரு பருக்கோ ஸ்டெர்லைட் தரும் புத்தாண்டு உடைகள்,காலண்டர்,டைரி ,இனிப்பு,அப்புறம் முக்கியமான கவர் ,இது தவிர அவ்வப்போது உற்சாகப்பான விருந்து,நல்ல நாள் -பொல்லாத நாள்களில் தரும் கவர்-அன்பளிப்புகள்,வெள்ளி,தங்க நாணயங்கள் போதாதற்கு விளப்பரங்க்கள் மூலம் கிடைக்கும் கழிவுத்தொகைகள் இவ்வளவு ஸ்டெர்லைட் தரும்போது வாயைத்திறக்க மனாசாட்சியுள்ள நிருபருக்கு முடியமா?ஸ்டெர்லைடில் இறந்த தொழிலாளியோ அல்லது இறக்க காத்திருக்கும் மக்களோ இப்படி அள்ளி தருவார்களா?
அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் மூலம் இந்த கிராமத்தில் இந்த நற்பணி செய்யப்பட்டது என்ற செய்திகள் மட்டும் பரவலாக வரும்.
இப்போது ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியின் போது தாமிரத்தாதுமணலில் தாமிரத்தை பிரிக்கும்போது தாமிரம் மட்டும் கிடைப்பதில்லையாம்.உடன் தங்கம்,பிளாட்டினம்,வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களும் கிடைக்கும்.ஆனால் அவற்றை அரசுக்கு தெரியாமல் அவ்வப்போது கடத்தி விடுகிறார்கள்.இப்படி கடத்தும் போது பலமுறை பிடிபட்டும் இருக்கிறது.ஆனால் வழக்கம் போல் அரசும் ஸ் டெ ர்லைட்டும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் வழக்குகள் என்னவாயிற்று என்றெ தெரியாமல் பொய் விட்டன.வரி எய்ப்பு,வழமையான ஒன்று .இப்படி மக்களையும் ,அரசையும் ஒரே நேரம் ஏமாற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன்தான்.
இரு நாட்களுக்கு முன் இந்த ஆலை செய்த வேலை.இப்போது இந்த ஆலைக்கு எதிராக மக்களை மீண்டும் போராட தட்டி எழுப்பியுள்ளது.
காரணம் தன் உற்பத்திக்கு அதிகமாக உள்ள விஷவாயுவை அவ்வப்போது திறந்து விடும்.அதுவும் அதிகாலையில்.ஒரு கன மீட்டருக்கு 80 மெக்ரோ கிராம் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றிக் கொள்ளலாம் என்று மக்கள் நல அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அப்படி திறக்கும்போதுதூக்ககலக்கத்தில்  கொஞ்சம் அதிகம் திறந்து விட்டது.
அன்று குறைவாக 65 மெக்ரோ கிராம் மட்டுமே கந்தக டை ஆக்சை டு வெளியேறி இருப்பதாக தமிழ் நாடு   மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தார்.
ஆனால் அதற்கே தூத்துக்குடியின் பலபகுதிகளில் மக்கள் சுவாசிக்க முடியாமல்,துன்பப்பட்டனர்.இருமல்,மூக்கடைப்பு,உடல் அரிப்பு ,கண்களில் எரிச்சல் பார்க்கமுடியாமலும்-சுவாசிக்க முடியாமலும்-பே சக்கூட முடியாமலும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தஞ்சம் புக அங்கு மருத்துவருக்கும் அதே தொல்லை.
இதை விட அபாயம்.செடிகள்,மரங்கள் கருகி விட்டது.ஸ்டெர்லைட் அருகில் உள்ள வீடுகளில் உள்ள மரங்கள் இலைகள் கருகி மொட்டையாகி விட்டன.
ஆனால் மாவட்ட ஆட்சியரோ அரசின் சொல்படியோ அல்லது ஸ்டெர்லைட் ஆளை சொல்லிக்கொடுத்தபடியோ
" ஒரு ஆலையில் இருந்து அனுமதித்த அளவை விட கொஞ்சம் குறைவாகத்தான் கந்தக் தை ஆக்சைடு வாயு வெளியேறியுள்ளது.அதனால் மக்கள் சிறிது பாதிப்புக்கு உள்ளானது உண்மைதான் .அதனால் மார்ச் 28-ம் தேதிக்குள் ஆலை நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்."
-என்று அறிக்கை விட்டுள்ளார்.
முதலில் வழக்கம் போல் தனது ஆலையில் இருந்து எந்த வாயு கசிவும் இல்லை என்ற ஸ்டெர்லைட் பின்னர் வெறு வழியில்லாமல் வாயை மூடி க்கொண்டுள்ளது.வாயு வெளியேறுவதற்கு முதல் நாள்தான் ஆலையில் பாஸ்பரிக் அமிலத்தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி அதில் விழுந்து இறந்து போய் மக்கள் சாலை மறியல் செய்து ஓய்ந்திருந்தார்கள்.
ஆக .ஆலை என்ன விளக்கம் தரும்."நான்தான்  குற்றம் செய்து விட்டேன்.நான்தான் வாயுவை திறந்து அல்லது கசிய விட்டேன் என்றா? "
கண்முன்னே பல ஆதாரங்கள் கிடைத்தும் ஸ்டெர்லைட்  ஆலைக்கு ஆதரவாகவே அரசு நடந்து கொள்கிறது.இதில் மட்டும் என்ன விதி விலக்கு இருக்கும்.விசாரணை என்ற பெயரில் இந்த குற்றம் பல நாட்கள் கழித்திடும்.வழக்கம் போல் மக்கள் இச்சம்பவத்தை தங்கள் அன்றாட பணிகளில் மறந்திடுவார்கள்.அப்போது பெயருக்கு ஒரு சின்ன கண்டிப்புடன் ஸ்டெர்லைட் விட்டு விடப்படும்.அதுவும் பத்திரிக்கைகளை வராமல் ஸ்டெர்லைட் பார்த்துக்கொள்ளும்.அவ்ளோதான்.
அனுமதிக்கப்பட்ட கந்தக டை  ஆக்சைடு வாயுவை வெளி யெற்றும் 80 மேக்ரோகிராமில் 15 கிராம் பாக்கியிலேயே  இந்த பாதிப்பு என்றால்?
80 கிராமும் வெளியானால்???
இப்போது மாசுக்கட்டுப்பாடுக்கும் ,அரசுக்கும்  வர வேண்டிய கேள்வி .அனுமதிக்கப்பட்ட அளவு பற்றி மறு பரிசீலனை செய்யவது.அல்லது வாயுவின் கடுமை குறிப்பிட்டத்தை விட கடுமையான அடர்த்தியில் ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்து வழக்கம்போல் ஏமாற்றி வருகிறதா?என்பதை ஆய்வு செய்வது.!

இப்போது இந்த சம்பவத்தி னால் கொஞ்சம் ஓய்ந்திருந்த ஸ்டெர்லை எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.கடையடைப்பு ஆர்ப்பாட்டம் என்று பரபரப்பாகியுள்ளனர்.
ஆனால் அது இந்த விலை போன அரசுகளை என்ன செய்யும்.?
அணில் அகர்வாலின் கவனிப்பை இந்த வாக்குகள் மட்டுமே போடும் மக்களால் தர இயலுமா?
மராட்டிய மாநில இரத்தினபுரி மக்கள் இதே ஸ்டெர்லைட் ஆலையை தங்கள் மண்ணில் இருந்து விரட்ட எடுத்த ஆயுதங்களை தமிழக மக்களும் எடுப்பதுதான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வாகுமா?
அதைத்தான் ஸ்டெர்லைட் அணில் அகர்வாலும்,மத்திய-மாநில அரசுகளும் விரும்புகின்றனவா?

சனி, 23 மார்ச், 2013

மன்னித்து விட வேண்டுகிறேன்

மன்னித்து விட வேண்டுகிறேன் என்று இங்குள்ள நடிகர் ரஜினிகாந்த் அரசை வேண்டுகிறார்.இது சும்மா மன்னித்து விடும் குற்றமா?அப்சல் குருக்கு ,தூக்கு இவருக்கு மன்னிப்பு.சரியாகுமா?

பிரபலமானவர் என்றால் விடுதலையா?  1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு தொடர் குண்டு வெடிப்பு  13 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டது.
தாவூத் இப்ராகிம் இதற்கு மூளையாக செயல் பட்டான்.
இந்த குண்டுகள் வெடிப்பில் 257 அப்பாவிகள்  கொல்லப்பட்டனர்.
713 பேர் காயமடைந்தனர்.இப்போது ஊணமுற்றவ்ர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
 நாட்டிலேயே முதன் முறையாக ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பில் அன்றைய மதிப்பில் ரூ.28 கோடி அளவில் சேதம் எற்பட்டது.இது இந்தியா மட்டுமன்றி,உலக அளவில் அதிர்சியையும் பரபரப்பையும் -அனுதாபத்தையும் எற்படுத்தியது.
 இந்தத் தாக்குதலில் தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் மற்றும் அவரது சகோதரர் அயூப் மேமன் ஆகியோர் முக்கியப் பங்காற்றியது விசாரணையில் வட்ட வெளிச்சமாகியது.. இவர்கள் மூவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர் .
இந்த குண்டு வெடிப்பின் போதான விசாரணையின் போது நடிகர் சுனில் தத்தின் மகனும் நடிகருமான சஞ்சய்தத் இந்த குண்டு வெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.அவரின் வீட்டில் சோதனை போட்டபோது குற்றவாளிகள் பயன் படுத்திய ஏ.கே.47 துப்பாக்கி, மற்றும் குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருட்கள்.ஆர்டி எக்ஸ் மருந்து கண்டு பிடிக்கப்பட்டது.அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டை விதிக்கப்பட்டது.மற்றவர்களுக்கு தூக்கு,ஆயுள் வழங்கப்பட்ட போதும் காங்கிரசில் அவரின் தந்தை சுனிதத் உறுப்பினராக இருந்ததாலும் இப்போது போல் அரசியல்,திரையுல தலையீடாலும் மிக குறைந்த பட்ச தண்டனையே வழங்கப்பட்டது.அதில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்து பிணையில் வெளியெ வந்துள்ளார்.
இப்போது அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு  தண்டனை வழங்கப்பட்டு விட்டது.
"முக்கிய குற்றவாளியான யாகுப் அப்துல் ரசாக்கிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. மேலும் ஏற்கனவே 18பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையில் 16பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது. இவர்கள் சாகும் வரை சிறையிலேயே தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும்,சஞ்சய் தத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறை தண்டனையை 5 ஆண்டாக குறைத்து ம் . . ஏற்கனவே பிணையில் வெளியே வந்தவர்கள் இன்னும் நான்கு வாரகாலத்தி ற்குள் மீண்டும் சிறையில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சஞ்சய் தத் 1.5 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டதால் மீதமுள்ள 3.5 ஆண்டு சிறைவாசம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஆனால் அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் தங்கள் பணம் மோசம் போய்விடும் என்பதால் அவரின் தண்டனையை எப்பாடாவது பட்டு நீக்க முயற்சிக்கிறார்கள்.
அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு கட்சி மெனக்கெ டுகிறது.
நம்மஊர் நடிகர் ரஜினிகாந்தும்  அறிக்கை விடுகிறார்.

பிரபலமானவர் என்பதாலும் ,நடிகர் என்பதாலும் ஒருவருக்கு தீவிரவாத நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட தண்டனையை நீக்க சொல்வது எவ்வளவு பெரிய தேச விரோதம்.சட்ட விரோதம்.நடிகர் என்ன சினிமாவில் வைக்கும் டம்மி வெடியை வைப்பவர்களுக்கு உதவினாரா?அல்லது இறந்து கிடந்தவர்கள் காட்சி முடிந்ததும் எழுந்து சென்று விட்டார்களா?என்ன இது திரைப்பட பட பிடிப்பு சம்பவமா?இரக்கமற்ற தீவிரவாதம்.பழியானவை அப்பாவி இந்தியர்களின் உயிர்.இது ஒன்றுமே தெரியாமாலா -குண்டு வெடிப்புகள் பற்றியே அறியாமலா தீவிரவாதிகளின் துப்பாகிகளையும் ,வெடி மருந்துகளையும் வாங்கி தனது வீட்டில் மறைத்து வைத்தார் தத்.
தனது தந்தை காங்கிரசு மாநிலங்கவை உறுப்பினர்,தான் நடிகர் தனது வீட்டில் சோதனை நடக்காது என்ற தைரியம்தானே?
சஞ்சய்தத் ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் வந்திருப்பவர் மீது பணம் கட்டி படம் எடுக்கும் தொழிலை செய்பவர்கள் முதலிலேயே அதை சிந்தித்திருக்க வேண்டும் .தெரிந்து தானே இந்த படத் தயாரிப்புகளையே செய்கிறர்கள்.
இதற்கு துணை போன நடிகருக்கு அவரின் பிரபலம் வைத்து விடுதலையா?பிரபலமானவரின் புகழில் தப்பிக்க நினைப்பவர்களுக்கு கடும் தண்டனை அல்லவா வழங்க வே ண்டும்.நடிகன் பிரபலம் என்பதால் குடித்து விட்டு காரை ஒட்டி உயிர்களை பலி வாங்கினாலும்,சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தாளும்மான் வேட்டை ஆடினாலும்,குடித்து விட்டு பொது இடத்தில் அரசு அலுவலர்களை தரக்குறைவாக பேசினாலும் ஒன்றுமே நடவடிக்கை கிடையாதா?நடவடிக்கை எடுத்தாலும் அதை நீக்க சொல்லுவதா?
அப்போது இது போ ன்று நடந்து கொள்ளும் மற்ற சாமானியர்களுக்கு தண்டனை வழங்க இந்த சட்டத்திற்கும்,நீதிமன்றத்துக்கும் என்ன உரிமை இருக்கிறது?அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.
கன்றுக்காக தனது மகனின் உயிரையே பறித்த கதை கதையாகி ரொம்ப காலமாகி விட்டதால் பொறுப்பில் இருப்பவர்களுக்கு நீதி என்றால் விருப்பப்படி வளைப்பதற்கு என்ற எண்ணம் உண்டாகி விட்டதோ?மத்திய அமைச்சர் ஷிண்டே இந்த தண்டனையை தவிர்க்க வழி தேடுகிறாராம்.சொல்லுகிறார்.
இது போன்று அப்சல் குருவுக்கும் ,கசாப்புக்கும் தண்டனை தீவிரவாதத்திற்கு வழங்கியது தவறு.அதைத்தானே இந்த சஞ்சய் தத் விவகாரம் வரும் காலங்களில் சொல்லும்.
கசாப்.அப்சல் குருவும் தான் தங்கள் தீவிரவாதம் மூலம் இந்திய புகழ் அடைந்து விட்டார்களே.பிரபலமாகி விட்டார்களே?அவர்களை தெரியாதவர்கள் தற்பொது இந்தியாவில் இருப்பதாகவே தெரியவில்லை.ஏன் அவர்கள் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகவோ-விடுதளையாகவோ மாற்றப்படவில்லை.
இது சஞ்சய்தத்துக்கு விடுதலை அளித்தால் வரும் காலங்களில் தீவிரவாதிகள் கேட்கும் கேள்வியாகி விடும்.இந்திய அரசியல் சட்டம் மட்டும் அல்ல.அரசி பாதுகாப்பும் கேலிக்குரியதாக்கி விடும்.ஏற்கனவே இத்தாலி க்காரர்கள் இப்போதுதான் கே லிக்கூத்தாக்க எண்ணி பின்னர் போனால் போகிறது என்று இந்தியா வந்துள்ளார்கள்.
நாமே நமது சட்டத்திட்டங்களை ஆளுக்கு தகுந்தாற்போல் வளைத்துஅசிங்கப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
இத்தாலியில் இருந்து திரும்பி வந்த இரு கொலைக் குற்றவாளிகள் 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நோக்கியாவின் புரிந்துணர்வு.....

ரோப்பாவிலுள்ள பின்லாந்து நாட்டைச் சேர்ந்த கைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா குறித்துப் புதிதாக அறிமுகப்படுத்தத் தேவையில்லை. தமிழக அரசு, பலத்த போட்டிக்கிடையே, பல சலுகைகளை அளித்து, அந்நிறுவனத்தைத் தமிழகத்திற்கு அழைத்து வந்தது. நோக்கியாவின் வருகை சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவும், தமிழகத்தின் நவீன அடையாளமாகவும் காட்டப்பட்டது. இப்படி ஆளும் கும்பலால் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்ட நோக்கியா, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ள திருட்டுக் கூட்டம் என்ற உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.
சிறீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா ஆலையிலும், பெருங்குடியில் அமைந்துள்ள அதன் அலுவலகத்திலும், டெல்லியை அடுத்துள்ள குர்கானில் அமைந்துள்ள அதன் துணை நிறுவனங்களிலும் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரே சமயத்தில் வருமான வரிச் சோதனை நடத்திய அதிகாரிகள், நோக்கியா, பின்லாந்திலுள்ள அதன் தாய் நிறுவனத்திடமிருந்து மென்பொருளை இறக்குமதி செய்ததில் 3,000 கோடி ரூபாய் முதல் 18,000 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதைக் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர். பின்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மென்பொருட்களை, கச்சாப் பொருளாகக் காட்டி இந்த வரிஏய்ப்பை நோக்கியா நடத்தியிருக்கிறது.
நோக்கியாஅரசுக்குச் செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வரியைக் கட்ட நோக்கியா முன்வருமா? அல்லது நீதிமன்றத்தில் முறையிட்டு, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து, வோடாஃபோன் நிறுவனம் போல ஏய்த்த வரியைக் கட்டாமல் தப்பித்துக் கொள்ளுமா என்ற சுவாரசியமான காட்சிக்கு நாம் இன்னும் சில காலம் காத்திருக்கத்தான் வேண்டும்.
நோக்கியா நிறுவனம் தமிழகத்தின் சிறீபெரும்புதூர் ஆலையில் போட்டுள்ள மொத்த மூலதனம் 22.5 கோடி அமெரிக்க டாலர்கள். இது (இந்திய ரூபாயில்) இன்றைய மதிப்பின்படி 1,125 கோடி ரூபாய். நோக்கியா நிறுவனம் தனது ஆலையைத் தமிழகத்தில் அமைப்பதற்காக, “அந்நிறுவனம் இந்தியாவினுள் விற்கும் அதனின் கைபேசிகள் மீது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பிற வரிகள் அனைத்தையும் அந்நிறுவனத்திற்கே மானியமாக அளிப்பதாக” ஒப்புக் கொண்டது, தமிழக அரசு. இதன் காரணமாக நோக்கியா சிறீபெரும்புதூர் ஆலையில் உற்பத்தியைத் தொடங்கியதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு 645.4 கோடி ரூபாயை வரிச் சலுகைகளாகவும் மானியமாகவும் தமிழக அரசிடமிருந்து பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நோக்கியா தொழிலாளர்கள்
இதுவொருபுறமிருக்க, நோக்கியா நிறுவனம் சிறப்புப் பொருளாதார மண்டலமாகக் கருதப்படுவதால், 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு மைய அரசு அளித்துள்ள சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி விலக்குச் சலுகை ஏறத்தாழ 681.38 கோடி ரூபாய். மேலும், 2006-07, 2007-08, 2008-09 ஆகிய மூன்று ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிச் சலுகைகள் மற்றும் ஏற்றுமதி வரிச் சலுகைகள் ஆகியவை காரணமாக அந்நிறுவனம் அடைந்துள்ள மறைமுக இலாபம் ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய். இவ்வளவு வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கும் அந்நிறுவனத்தை மூடி சீல் செய்திருக்க வேண்டும்; இந்த வரி ஏய்ப்பில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் தலைவர், அதிகாரிகள் என்ற கொள்ளைக் கூட்டத்தின் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டிருக்க வேண்டும்.
இவை எதுவுமே நடைபெறவில்லை. ஆனாலும், நோக்கியா உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகள், தங்கள் மீது வருமான வரித் துறை அதிகாரிகள் வேட்டை நாயைப் போலப் பாய்வதாகவும், இது முதலீட்டுச் சூழலைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் அந்நிறுவனம் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்திருப்பதும், அந்த இலாபம் முழுவதும் இந்தியாவிலிருந்து பின்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும். நோக்கியா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு ஆண்டொன்றுக்குத் தரும் சராசரி ஊதியம் 29 இலட்சம் ரூபாய். இது, சென்னையில் உள்ள நோக்கியா ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிக்குத் தரப்படும் ஆண்டு ஊதியத்தைவிட 45 மடங்கு அதிகம். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்த உழைப்புச் சுரண்டல்தான் அந்நிறுவனத்திற்கு ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிரடி இலாபத்தை அள்ளித் தந்திருக்கிறது.
இந்தியாவைக் கொள்ளையடித்துத்தான் இங்கிலாந்து வளமான நாடாக மாறியது என்பது காலனியக் காலக்கட்டத்தில் நிரூபணமான உண்மை. அன்றிருந்தது கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒரு நிறுவனம்தான். இன்றோ பல நூறு பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயம்-தாராளமயம் என்ற பெயரில் நாட்டைச் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் கொள்ளையடித்து வருகின்றன.
2005-06 நிதியாண்டில் மட்டும் 1,915 பன்னாட்டு நிறுவனங்களுள் 411 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட உண்மையை நாடாளுமன்றத்திலேயே போட்டு உடைத்தார், நிதித்துறை துணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். வோடாஃபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்த தகிடுதத்தம் கடந்த ஆண்டு அம்பலமாகியது. இவையன்றி, பெட்ரோலிய நிறுவனமான ஷெல், இணைய தள நிறுவமான கூகுள் ஆகியவையும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது சமீபத்தில் அம்பலமாகியிருக்கும் உண்மைகள். கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 95,000 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து அந்நிய நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது, குளோபல் இன்டகிரிட்டி என்ற தன்னார்வ அமைப்பு.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவைக் கொள்ளையடிக்கத்தான் குதித்திருக்கிறார்கள் என்பதையும், உமிகூட கொண்டு வராமல் அவலைத் தின்னும் பகற்கொள்ளைக் கூட்டம்தான் பன்னாட்டு நிறுவனங்கள் என்பதையும் இந்த உண்மைகளிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஆனால் மன்மோகன் சிங் கும்பலோ, பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஏதோ இந்தியாவை வளமாக மாற்றுவதற்கும் இங்குள்ள ஏழைபாழைகளுக்கு வேலை கொடுப்பதற்கும்தான் அமெரிக்க டாலர்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு இங்கு வருவதாகவும், அதைத் தடுப்பது நாட்டின் முன்னேற்றத்தையே தடுப்பதாகும் எனத் திரும்பத்திரும்பப் பச்சையாகப் புளுகி வருகிறார்கள்.
தனியார்மயம்-தாராளமயம் திணித்துள்ள உழைப்புச் சுரண்டலும், அக்கொள்கைகளின் விளைவாக நடந்துவரும் மூலதனக் கடத்தலும்தான் இந்திய மக்கள் வறுமையில் வாடுவதற்கு முதன்மையான காரணமாகும். இவையிரண்டையும் தடுப்பதற்குப் பதிலாக, தொழிற்சங்கச் சட்டங்களை மேலும் தாராளமயமாக்க வேண்டும் எனச் சாமியாடி வருகிறார், மன்மோகன் சிங். இதன் பொருள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இன்னும் கூடுதலாக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதுதான். ப.சிதம்பரமோ, வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்படவிருந்த வரி ஏய்ப்புத் தடுப்புச் சட்டம் என்ற பூதத்தை நாங்கள் புதைத்துவிட்டோம் என நிதியாதிக்கக் கும்பலிடம் உறுதியளிக்கிறார். இதன் பொருள் வரி ஏய்ப்பைச் சட்டபூர்வமாக்குவதுதான்.

நன்றி;"வினவு" 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
யாரென்று தெரிகிறதா?

"கருணாநிதியின் துரோகத்தின் மறுபக்கம்....!"

இன்றைய ஊடகங்கள் பல கருணாநிதி வெளியெ வந்தது நாடகம் என்று பக்கம்,பக்கமாக எழுதியுள்ளது.ஆனால் இதே ஊடகங்கள்தான் முன்பு கருணாநிதி சரியானவராக இருந்தால் மத்திய ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதியவை.
அதேபோல் 2009 இல் ஈழத்தமிழர் பிரச்னையில் துரோகம் செய்து விட்டதாகவும்  மீண்டும்,மீண்டும் எழுதி வந்தன.
இங்கே நான்  ஒன்றை பதிவு செய்ய விரும்பிகிறேன்.நான் திமுக வோ,அல்லது கருணாநிதி ஆதரவாளரோ கிடையாது.என்பதுதான் அது.உண்மை நிகழ்வுகளை சிலர் திட்டம் போட்டு தங்கள் வசம் ஊடக பலம் இருப்பதால் மறைத்து திசை திருப்பி வருவதை கண்டு மனம் பொறுக்காமல்தான் இதை மீண்டும் பதிவு செய்கிறேன்.
முன்பிருந்தே ஈழப்பிரச்னையில் கருணாநிதி தனது ஆதரவை தந்துதான் வருகிறார்.அதனால் இரு முறை தனது ஆட்சியை இழந்தும் இருக்கிறார்.ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டதும் அதில்  அதிகம் பாதிக்கப்பட்டவர் கருணாநிதிதான்.பாதிக்கப்பட்ட இயக்கமும் திமுக தான்.காரணம் அதன் புலிகள் ஆதரவு போக்குதான்.ஆனால் ராஜீவ் கொலையால் பலன் அடைந்தவர் ஜெயலலிதா .அதிமுக அதிக அளவில் வென்று ஆட்சியமைத்தது.
ஆனால் பிரபாகரன் எம்ஜியார் ஆதரவாளர்.அதற்கு காரணம் புலிகள் இயக்கம் மற்றைய சக தமிழ் ஈழப்போராளிகளை அழித்து ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டதை கருணாநிதி கண்டித்ததுதான்.அதானால் தான் முந்தைய டெசோ மூலம் திரட்டப்பட்ட தொகையை விடுதலை இயக்கங்களுக்கு [பிளாட், போன்ற] திமுக பிரித்து கொடுத்த பணத்தை பிரபாகரன் வாங்க மறுத்தார்.
ஆனாலும் திமுக அனைத்து தமிழீழ இயக்கங்களை ஒன்றாகவே பார்த்து வந்தது.
2009 இல் கருணாநிதி முதல்வர்.இலங்கையில் நடந்த  போரோ ஒருஅண்டை  நாட்டின்  உள்னாட்டு யுத்தம்.
அதில் இந்திய அரசே தலையிடக் கூடாது.அப்படி நிலையில் ஒரு மாநில முதல்வர் பொறுப்பில் உள்ளவர்.என்ன செய்ய இயலும்.என்ன செய்திருக்கலாம்.என்ன செய்திருக்க வே ண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?தமிழ் நாட்டின் காவல்துறையை அல்லது
திமுகவினரை கொண்டு சென்று இலங்கை ராணுவத்துடன் சண்டை செய்ய வேண்டுமா?
அல்லது என்ன செய்ய இயலும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.
எல்லோருக்குமே அப்போதைய போரில் சிங்கள ராணுவம் தமிழ் மக்களை கொன்று குவிப்பதை தடுக்க துடிப்பு இதய பூர்வமாக இருந்தது.ஆனால் என்ன செய்ய முடிந்தது.?
இன்று 2009 இல் கருணாநிதி படுகொலைகளை தடுக்காமல் துரோகம் இழைத்து விட்டார் என்று பேசியும்,எழுதியு வருகிறார்களே இவர்கள் அப்போதும் உயிருடந்தானே இருந்தார்கள்.இந்த தமிழகத்தில்தானே வசித்தார்கள் இவர்கள் அப்போது ஏன் ஒன்றுமே செய்யவில்லை.அல்லது படுகொலையைஏன்  தடுக்க வில்லை?
முன்பு பிரபாகரன் வலுவான நிலையில் துணிச்சலுடன் கள்ளத்தோணியில் சென்ற ,அதை விளம்பரப்படுத்திக்கொண்ட ஈழக்காப்பாளர் வைகோ போரின் போது ஆதரவு கொடுக்க அதே கள்ளத்தோணியில் ஏன் செல்லவில்லை.போரில் கலந்து கொள்ளவில்லை.
இனப்படுகொலையை தடுக்கவில்லை.அது துரோகம் இல்லையா?
இப்போது ஈழத்தாய் அப்போதைய மைனாரிட்டி அரசின் எதிர்கட்சித்தலைவர் என்னதான் செய்தார்  ?கருணாநி தியாவது உண்ணாவிரத நாடகத்தை நடத்திக்காட்டினார்.
ஜெயலலிதாவோ "உள்னாட்டு போரில் மக்கள் குண்டடிப்பட்டு சாவது ஒன்றும் புதியது அல்ல.இயற்கைதான் என்றாரே.அதற்கு முன்னர் பிரபாகரனை கைது செய்து தமிழக சட்டமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றெல்லாம் முழக்கமிட்டாரே அதெல்லாம் துரோகம் இல்லையா?
இதை ஏன் ஊடகங்கள் இப்போது கண்டு கொள்ளவே இல்லை.?
காரணம் ஊடகங்கள் கருணாநிதி கூறுவது போல் அவாள் கையில் உள்ளது.இனப்பாசம்.தங்கள்  இனத்தவர் முதல்வராக வே ண்டும் அதுமட்டும்தான் முக்கிய-முதல் நோக்கம்.
எனவேதான் கருணாநிதி துரோகம் செய்ததாக திரும்ப,திரும்ப இப்பத்திரிக்கைகள் எழு தின.  எழுதிய-எழுதி வரும்பத்திரிக்கைகள் வரிசையை பாருங்கள் உங்களுக்கே பின்னணி புரியும். தினமலர்,தினமணி,இந்தியாடுடே,என்டிடிவி.,ஆனந்த விகடன்,ஜூனியர் விகடன்,குமுதம்,ரிப்போர்டர் இந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,துக்ளக் .
ஆனால்  இப்போதுகூட கருணாநிதி டெசோ அப்படி ,இப்படி என்று இலங்கை பிரச்னையில் 
தனது பணியை செய்கிறார்.இப்பத்திரிக்கைகள் கூட சேர்ந்து பேசும் சீமான்,நெடுமாறன் போன்றோர் ஜெயலலிதா வை புதிய ஈழத்தாய் அளவுக்கு பேசுகிறார்களே அவர் இப்போது என்ன இப்பிரச்னையில் செய்துள்ளார்.தீர்மானம் கடைசி நாளில் பெயருக்கு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். இப்போது ஆட்சி,அதிகாரம் அம்மாவிடம் இருக்கிறதே துரோகம் செய்வதாக மூச்சு கூட ஊடகங்களில் எழவில்லையே.காரணம்.
இது நம்ம ஆளு.
மொத்தத்தில் கருணாநிதி ஈழப்பிரச்னையில் துரோகம் செய்ததாக எனனைபொறுத்தவரை தெரியவில்லை.
ஆனால் துரோகம் என்று மீண்டும்,மீண்டும் எழுதி கோயபல்ஸ் பாணியில் மக்களிடம் கருணாநிதியின் பெயரை கெடுத்தவ்ர்களையும் அதன் பின்னணியும் மட்டும்தான் தெரிகிறது.
இப்போது கூட மத்திய ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் தினமணியும்,ஞா நி யும் துரோகப்பாட்டையே மீள்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் .
இப்போதைய நிகழ்வுகளை மக்கள் கண்டு கொள்ளாமல் பழைய பாடல்களையே பாட வெண்டும் என்பதே இவர்கள் எண்ணம்,திட்டம்.
இலங்கை பிரச்னையில் மட்டுமல்ல 2ஜி முறைகெடுகளிலூம் திமுகவை மட்டுமே குற்றாவாளியாக்க்கீறார்கள்.அதில் காங்கிரசின் பங்குதான் 90 சதவிகிதம் ஆ.ராசா பலியாடுதான் என்று இப்போது வருகின்ற உண்மைகளை மக்களுக்கு எழுதிட தங்களின் தார்மீக ஊடக தர்மத்தை இவர்கள் கண்டு கொ ள்ளவில்லை. 
மின்தடை பற்றிய விவகாரத்திலும் இந்த பத்திரிகைகளின் எழுத்து வித்தியாசத்தை தொடர்ந்து படிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள்.ஆனால் அதை கண்டு கொள்ள முடியாதபடி இவர்கள் எழுத்துக்கள் அமைந்துள்ளது.இரண்டு மணி நேர மின்தடை அதுவும் நேரம் குறிப்பிட்ட தடையையே உலகமும்-வாழ்வும் இருண்டு விட்டதாக கருணாநிதி வீட்டில் எல்லா மின்சாரத்தையும் ஊழல் செய்து வைத்து அமுக்கி விட்டது போலவும் எழுதிய இவர்கள் இப்போத்தைய 18-20 மணிநேர மின்தடையை மட்டும் இயற்கையின் சதி,மத்திய அரசு ஜெயலலிதாவை பழி வாங்குகிறது,கருணாநிதி முன்பு  செயல்படாததுதான் காரணம் என்று புதிது,புதிதாக கண்டு பிடித்து பத்திரிக்கையின் பக்கங்களை நிரப்புகிறார்கள்.மக்கள் மனதி ஜெயலலிதா பெயர் மின்தடையின் மூலம் கேட்டு போ ய்விடக்கூடாது என்பதை மட்டுமே நோக்கமாக வைத்திருப்பது தெரிகிறது.
பேருந்து கட்டணம்,பால்விலை ,விலைவாசி எதிலும் ஜெயலலிதாவின் கொடுமை இல்லை.முன்பு கருணாநிதி செய்யாததால் அம்மா எல்லாவற்றையும் பொறுப்புடன் மக்கள் நலனுக்காக செய்கிறார் என்று லாவணி மட்டுமே பாடுகிறார்கள்.குற்றம் சாட்டுவதில்லை.குற்றம் செய்வது-செய்தது கருணாநிதி மட்டும்தான்.இதைதான் மீண்டும் ,மீண்டும் சொல்லி எழுதி வருகிறார்கள்.
இதில் தா.பாண்டியன் கூட விலைவாசிகளை ஜெயலலிதா கூட்டியதற்கு,வரிகளை 3800 கொடிகளுக்கு பட்ஜெட்டுக்கு முன்பே போட்டதற்கு கருணாநிதிதான் காரணம் என்றதையும்,
இப்போது மத்திய அரசில் இருந்து விலகியதை மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் இதுவரை செய்த துரோகம் போல் இதுவும் ஒன்றுதான் ,என்று கூறிஉள்ளதும்.இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கூறிக்கொண்டு பால் விலை,பேருந்து கட்டணம் வகையில் ஏழைகளை பாதிக்கிறது என்ற வகையில் போராட வில்லை.ஜெயலலிதா விலையை கூட்டியது மக்கள் நலனுக்கு நல்லது.கருணாநிதி தமிழ் நாட்டின் பொருளாதாரத்தையே கெடுத்து விட்டு பொய் விட்டார்.அம்மாதான் சரி செய்கிறார் என்று அதிமுக அடிபொடிகள் சரத் குமார்,போல் பேசு வது  ம் புரியாத புதிர் கள்.
கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொண்டு திரிபவர்களே இப்படி இரட்டை நாக்குடன் இருந்தால் இனப்பாசம் கொண்டவர்கள் நிலை எப்படி இருக்கும்.
இப்போதாவது கவனியுங்கள் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது அவரின் செயல்களை கேலி ப்படம் போட்ட தினமலர்,தினமணி தினசரிகளில் இன்றும் தினசரி கருணாநிதி அல்லது திமுக பற்றிய கேலி சித்திரங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன.
இதுவரை ஜெயலலிதாவை கிண்டல் செய்து ஒரு கேலிப்படம் கூட வரவில்லை.
அவர் ஆட்சில் இதுவரை ஒரு கேலி செய்து படம் போடும் அளவு ஒன்றும் நடக்கவே இல்லையா?
அமைச்சரவை மாற்றம்,அதி காரிகள் மாற்றம் திடீர் அறிவிப்புகள் எவ்வளவு இருக்கின்றன.
குற்றமே காணக்கிடைக்காத மனிதப் புனிதாரா ஜெயலலிதா?
ஆக இந்த ஊடகங்களின் [நமது  எம்ஜியார்  போன்ற ]ஒரு சார்பு நிலையை நீங்கள் கொஞ்சமாவது உணர வே ண்டும்.இவைகள் எழுதுவதை படித்தால் மட்டும் போதாது  .
அந்த செய்திகளை இவர்கள் நடையின் மூலம் தங்கள் கருத்துகளை உங்கள் மூளையில் ஏ ற்றி விடுவதை தவிர்க்க செய்திகளை நீங்களே எடை போட்டு உண்மையை உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
கோயபல்ஸ் பற்றி அடிக்கடி செய்திகள் வருவது பார்த்திருப்பீர்கள்.அவர் அப்படி என்ன பொய்களை சொல்லிவிட்டார் என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அவர்களுக்காக:
'ஹிட்லரின் அமைச்சர்களில் ஒருவரான கோயபல்ஸ் மிக திறமையானவர்.இவரின் துறையே ஹிட்லர் தனது சாம்ராஜ்யத்தை விரிவாக உதவியது.வானொலி மூலமும்,தினமலர்,தினமணி போன்ற ஜெர்மனியில் உள்ள பத்திரிக்கைகளில் ஹிட்லரின் புகழை ஓயாமல் இடைவிடாமல் எழுத வைத்தான்.சொல்ல வைத்தான்.
அடுத்த நாடுகளில் ஜெர்மானிய வானொலி ஹிட்லர் மகத்தானவன்,மிக திறமைசாலி,அவர் ஒருவரால்தான் மக்களின் துன்பங்களை களைய முடியும் .இப்போதைய ஆட்சியாளர் உங்களை வஞ்சிக் கிறார்கள்.ஏமாற்றுகிறார்கள்.
என்ற செய்திகள் பரபரப்பாக ஒலிபரப்பப் பட்டுக்கொண்டே இருக்கும்.எப்போதும் ஹிட்லர் பற்றிய புகழுரைகளே ஒளிபரப்பாகும்.அவர் வல்லவர்,நல்லவர்.அவர் நம்மை ஆண்டால் நாம் எங்கோ போ ய் விடுவோம்.முன்னேற்றம் மிக விரைவில் சாத்தியமாகும்.என்ற அளவில் ஓயாமல் ஒளிபரப்பாகும் -அச்சாகும் செய்திகள் அடுத்த நாட்டு மக்களை மூளைச்சலவை செய்து கொண்டெ இருக்கும்.அதன் மூலம் அவர்களின் அடி மனதில் "ஹிட்லர் நம் நாட்டை ஆள மாட்டானா?நாம் எப்படியெல்லாம் வாழலாம் "என்ற எதிர்பார்ப்பே உருவாகிவிடும்.பின் அந்த நாட்டின் பக்கம் உள்ள மக்கள் அனைவரும் ஹிட்லரின் அபிமானிகள்.ஹிட்லர் வருகிறார் என்றாலே அந்த நாடு அவரின் காலில் விழ தயாராகிவிடும்.இதுதான் கோயபல்சின் அதிரடி பிரச்சார பாணி.
அதையேதான் இந்த ஆரியக்கூட்ட ஊடகங்களும் கையில் எடுத்துக்கொண்டு கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்றி ஜெயலலிதாவை தங்கள் ஆளை அரியணையில் ஏற்றி விட்டார்கள்.
இன்னமும் மக்களிடம் சென்ற முறைபோல் வந்து விடக்கூடாது என்று தங்கள் பாணியை இன்னமும் கைவிடாமல் இருக்கிறார்கள்.
18 மணி மின்தடையா ,விலைவாசி ஏற்றமா,20 ரூபாய்க்கு விற்ற அரிசி 45 ரூபாயா,பேருந்து கட்டணமுயர்வு,பால் விலை உயர்வு,அடிப்படை தேவைகள் உயர்வா கவலையே படாதீர்கள் உங்கள் நன்மைக்காக ஜெயலலிதா பாடுபடுகிறார்.கருணாநிதி ஆளத்தெரியாமல் செய்த கோளாறை அம்மா சரி செய்து வருகிறார்.எதுதான் செய்தியாக வரும்.பேசவும் படும்.அதற்கு எதிர் கருத்து ஓரமாக கண்ணில் படாமல் பிரசுரமாகும்.அல்லது கண்டு கொள்ளவே படாது.
ஆக இப்போது பழைய கருணாநிதியின் தவறுகள்தான் இன்னமும் பூதாகரமாக கான்பிக்கப்பட்டு.சென்ற ஆட்சியில் ஜெயலலிதா செய்த அலங்கோலங்கள் பூசி மெ ழுக்கப்பட்டு விட்டன.இப்போதைய அலங்கோலங்கள் உங்கள் பார்வைக்கு வராமலே தடுக்கப்பட்டும் விடும்.
ஆக கருணாநிதி ரொம்ம நல்லவர்-உத்தமர் என்று சொல்லுவதற்காக இப்பதிவு அல்ல.அவர் தவறுகள் மட்டுமே இங்கு ஊடகங்களால் திரும்ப,திரும்ப காட்டப்பட்டும்,மக்களுக்கு நினைவு படுத்தப்பட்டும் வருகிற அபாயம் ஊடகங்களால் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.ஜெயலலிதா இதே ஈழப்போரின் பொது நடந்து கொண்ட முறைகள் திரைக்கு வரவே இல்லை.திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டத்தான் இப்பதிவு .
"போரின் பொது ஈழமக்கள் சாவது இயற்கை.இது சாதாரண நிகழ்வு."
"பிரபாகரனை கைது செய்து தமிழக அரசினிடம் ஒப்படைக்க வெண்டும்."
"எம்ஜிஆருக்கு மோரில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள்."
"எம்ஜிஆரால் செயல்பட முடியாது.என்னை தமிழக் முதல்வராக்குங்கள்"-ராஜிவுக்கு எழுதிய கடிதம்.
எல்லாமே சுத்தமாக மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டு விட்டன.அதுதான் இந்த "அவாள்'ஊடக கூட்டமைப்பின் சாதனை. 
இதை படிக்கும் நீங்களாவது இதில்  கூறப்பட்டதை பற்றி கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன்.உண்மையா?தவறா என்று.
------------------------------------------------------------------------------------------------------------------------------------.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...