வியாழன், 10 மார்ச், 2016

கொலைக் களம்

  "இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு :பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி பாண்டியன் கும்பலும், சுபாஷ் பண்ணையார் கும்பலும் நேருக்கு நேர் மோதல். வெடிகுண்டு வீசி தாக்குதல். பலருக்கும் அரிவாள் வெட்டு.பசுபதி பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பதிமூன்று கொலை வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையார் காயத்துடன் உயிர் தப்பினார்.சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளர்கள் ஆறுமுகச்சாமி, அய்யாக்குட்டி இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.ஒருவர் தலையை திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் என்ற இடத்தில் பசுபதி பாண்டியன் உருவப்படத்தின் முன்பு வைத்துள்ளதாக தகவல்.இருதரப்பு மோதலைத் தடுக்க காவல்படை குவிக்கப்பட்டுள்ளது."
இக்கொலைகள் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பழிக்குப் பழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
இதன் பின்னணியில் இரு சமுதாயம் மோதல் போல் தென்பட்டாலும் இவை இரு கூட்டத்தின் யார் பெரியவன் என்கிற மனப்பாண்மை மையமாக தென்படுகிறது.சாதி தாதாயிசத்தை மறைக்கும் ஒரு போர்வையாகத்தான் உள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் 2012 ஜனவரி 10ம் தேதி இரவில் கொலை செய்யப்பட்டார்.  திண்டுக்கல் புறநகர்ப் பகுதியான நந்தவனப்பட்டியில் வசித்துவந்த சி.பசுபதிபாண்டியன் இரவு சுமார் 8 மணி அளவில் தனது வீட்டின் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மர்மக் கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கி இவரைக் கொலை செய்தது. இந்தக் கொலையில் முக்கிய எதிரியாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் சேர்க்கப்பட்டுள்ளார். 
கொலையின் பின்னணியில் பலர் ஈடுபட்டு இருப்பதாக சந்தேகிக்கும் காவல்துறை முதல்கட்டமாக பிரபல ரவுடி கோழி அருள் உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் புலன் விசாரணையில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 
அக்கொலையின் எதிரொலியாகத்தான் தற்போதைய இரட்டைகொலைகளும் நடந்துள்ளது.
பசுபதிபாண்டியன்
தூத்துக்குடி அருகேயுள்ள கீழஅலங்காரத்தட்டு கிராமத்தை சேர்ந்த சிதம்பரம், வேலம்மாள் தம்பதியரின் மகன்பசுபதிபாண்டியன். பள்ளிப் படிப்பை முழுவதும் முடிக்காத பசுபதி இளமைக் காலத்திலேயே   ஆயுதம் ஏந்தி போராடியவர். 
பசுபதிபாண்டியன் ஆரம்ப காலத்தில் தூத்துக்குடியின் பிரபல தாதாவாக செயல்பட்ட கொம்புக் கோனார், அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த ஆறுமுகநயினார், தற்போது அதிமுகவின் மாநில மாணவரணி செயலாளர் சரவணப்பெருமாள், தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் ஜான்பாண்டியன் ஆகியோருடன்  இருந்தவர்.   
பின்னாளில் தனது தம்பி காசிப்பாண்டியன் உள்ளிட்டவர்களுடன் தனக்கென ஒரு கூட்டத்துடன் தூத்துக்குடி  மாவட்டத்தில் வலம் வந்தவர். 

 தேவேந்திர குல வேளாளர் சங்கத்தில் இருந்த பசுபதி, பின்னர் பா.ம.க. வில் இணைந்து அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலர் பதவி வகித்தார். இதன்பின், பா.ம.க.,விலிருந்து தீரனுடன் வெளியேறி, தமிழ் பா.ம.க.,வில் சேர்ந்தார். அ.தி.மு.க. அனுதாபியாகவும் சிறிது காலம் இருந்தார். கடந்த, 2006ம் ஆண்டு மார்ச் மாதம், மருதம் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை துவக்கினார். பின்னர், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை துவக்கி, அதன் நிறுவன தலைவரானார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நெல்லை தொகுதியில் இக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.

தூத்துக்குடி சோட்டையன்தோப்பு பகுதியில் தேவேந்திர சமுதாய மக்களின் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் நடந்த கரகாட்டத்தின் போது ஆட்டக்காரிக்கு பணம் கொடுத்தவர்களை புகழ்ந்து பாடுகின்ற வகையில் மிக்கேல் நாடார் என்பவர் புகழை கரகாட்டக்காரர்கள் பாடியுள்ளனர். 
அப்போது அங்கு ஏற்பட்ட மோதலில் 31-8-90ல் சிலுவைபட்டி மிக்கேல் என்பவரும் அடுத்து, 25-12-90ல் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமியும் கொலை செய்யபட்டனர். 
இரண்டு கொலை வழக்கிலும் பசுபதி பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களிடையே பசுபதி பாண்டியன் பெயர் பிரபலமானது.  

அதனைத் தொடர்ந்து கடந்த 97ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்சனையில்  கம்பெனிக்கு ஆதரவாக செயல்பட்ட தொழிற்சங்க தலைவர் பால்ராஜை கொலை செய்த வழக்கிலும் பசுபதிபாண்டியன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பசுபதிபாண்டியன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல், நிலத்தகராறு உள்ளிட்டவை தொடர்பாக, தூத்துக்குடி போலீசில் 18 வழக்குகள், நெல்லை போலீசில் 4 வழக்குகள், திண்டுக்கல் போலீசில் 2 வழக்குகள் என மொத்தம் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 
ஆனால், அவற்றில் பெரும்பாலான வழக்குகளில் விடுதலையானார். இதில் 9 கொலை வழக்குகளும் அடங்கும். 
இவ்வழக்குகள் தொடர்பாக, மூன்று முறை, குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கோர்ட்டில் முறையீடு செய்து, குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்தார். இந்த எல்லா வழக்குகளிலும், வக்கீலான இவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் உதவினார். 
.
புல்லாவெளி கிராமத்தில் உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் தொடங்கி, அசுபதி பண்ணையார் ரகசியமாக தொடர்பு வைத்திருந்த வள்ளிக்கொடி பிரச்சனை வரை நடந்த பஞ்சாயத்து வரை பசுபதியின் கை ஓங்கியுள்ளது. 
இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் 24-1-93ல் சிவசுப்பிரமணிய நாடார் மகன் அசுபதி பண்ணையாரை கொலை செய்தனர். இவர் சுபாஷ் பண்ணையாரின் தந்தையும், வெங்கடேஷ் பண்ணையாரின் சித்தப்பாவும் ஆவார். தொடர்ந்து 8-7-93ல் சிவசுப்பிரமணிய நாடாரைபசுபதிபாண்டியன் தரப்பினர் கொலை செய்தனர். 
இதற்கு பழிவாங்கிட தூத்துக்குடி சுப்பையாமுதலியார்புரத்தில்  21-4-93ல் பொன்இசக்கி, பிரையன்ட்நகரில் 12-5-93 அன்று ஸ்டேட் பேங்க் அதிகாரி ராஜகோபால், தென்திருப்பேரையில் 5-5-95 அன்று அரிஸ்டாட்டில், ஆறுமுகநேரியில் 31-8-97 அன்று பாம் கர்ணன், பழையகாயலில் 13-1-2001 அன்று காயல் பாலகிருஷ்ணன், புல்லாவெளி கோட்டார் என இருவர், தூத்துக்குடி மூன்றாவது மைலில் வைத்து 21-3-2003 அன்று பீர் முகம்மது, எப்போதும்வென்றானில்  7-4-2006 அன்று வழக்கறிஞர்.ஜெசிந்தாபாண்டியன், காயல் பெரியசாமி, அத்திமரப்பட்டி மணி , இப்போது பசுபதிண்டியன் என்று பண்ணையார் ஆட்களால் பழிக்குப்பழியாக பசுபதி தரப்பை சேர்ந்த பதினோரு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 பசுபதி பாண்டியனின் சித்தப்பா மகன் காசிப்பாண்டியன் தூத்துக்குடியில் வைத்து ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.  வெங்கடேஷ் பண்ணையார் போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  
பசுபதிபாண்டியனைக் கொல்வதற்கு கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 21-4-93ல் தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரத்தில் பசுபதிபாண்டியனை கொலை செய்ய முயற்சி நடந்தது. 
இதில் அவரது நண்பர் பொன்இசக்கி பலியானார். 
அடுத்து ஏரல் அருகே பசுபதி பாண்டியன் கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. வல்லநாடு அருகே ஒருமுறை வெடிகுண்டு வீசப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பசுபதிபாண்டியன் மனைவி வக்கீல்.ஜெசிந்தா பாண்டியன் கொல்லப்பட்டார். 
இதிலும் பசுபதிபாண்டியன் உயிர்தப்பினார்.

பசுபதிபாண்டியன் கொலையில் சரணடைந்த அருளானந்தம், ஆறுமுகச்சாமி ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், சுபாஷ் பண்ணையாரின் தூண்டுதலின்பேரில் பசுபதி பாண்டி யனை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜபாளையத்தை சேர்ந்த சண்முகமும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

இந்த கொலைக்கு மூளையாக இருந்து சதி செய்ததாக  நந்தவனம்பட்டியை சேர்ந்த சீலப்பாடி ஊராட்சி உறுப்பினர் நிர்மலா, திண்டுக்கல் யூனியன் கவுன்சிலர் கரட்டழகன்பட்டி முத்துப்பாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்து நிர்மலா திருச்சி மத்திய சிறையிலும், முத்துப்பாண்டி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
 முத்துப்பாண்டி  இதற்கு முன்பு ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திலும் பின்னர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலும் இருந்து நீக்கப்பட்டவர். 

"கடந்த ஓராண்டாகவே பசுபதி பாண்டியனை கொலை செய்ய நிர்மலா, முத்துப்பாண்டியன் ஆகியோருடன் சுபாஷ் பண்ணையார் திட்டம் தீட்டியுள்ளார். 
இதில் நிர்மலா, முத்துப்பாண்டிக்கு தலா ரூ.1 கோடி தரப்பட்டுள்ளது. இந்த பணத்தில்தான் நிர்மலா, 3 ஷேர் ஆட்டோ, 3 பிளாட், 2 சொகுசு கார் வாங்கியுள்ளார்" என்று சொல்லும் காவல்துறையினர் அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர். 

பசுபதி பாண்டியன் கொலையான அன்று இரவு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிர்மலா, “ஐயாவே போயிட்டார், இனி எங்களை காப்பாத்த யார் இருக்கா?‘ என கதறி அழுதுள்ளார். தீக்குளிக்கப் போவதாக கூறி கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றுவது போல நாடகமாடியுள்ளார். 
முத்துப்பாண்டியும் திண்டுக்கலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார். 
தனது காரை பயன்படுத்தாமல், வாடகைக்கு கார் பிடித்து ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு தூத்துக்குடி சென்றவர், அங்கும்  என்ன நடக்கிறது? என்பதை கடைசி வரை வேவு பார்த்துள்ளார். 

கடந்த ஆண்டு நிலப்பிரச்னையில் முத்துபாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது, எதிர்தரப்பினருக்கு ஆதரவாக பசுபதிபாண்டியன் பஞ்சாயத்து பேசியுள்ளார். அந்த நேரத்தில் முத்துபாண்டியனை தூக்கிச் சென்று பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். 
இதனால் அவர் மீது கோபத்தில் இருந்த முத்துபாண்டியை, சுபாஷ்பண்ணையார் தரப்பினர் சந்தித்துள்ளனர். 
அதன்பிறகு தான் நிர்மலாவை, சுபாஷ் பண்ணையார் தரப்பினருக்கு கவுன்சிலர் முத்துபாண்டி அறிமுகப்படுத்தியுள்ளார்.
பசுபதி பாண்டியன் கொலையின் தொடர்ச்சியாக மறுநாள் பசுபதிபாண்டியனின் ஆதரவாளர் முருகன் திண்டுக்கல் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். 
அதனையடுத்து நெல்லை தாழையுத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டுள்ளார். நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ராக்கெட் ராஜா, கோழி அருள் போன்றோருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஸ்டீபன் மீது தனது சொந்த ஊரிலும் கொலை வழக்கு உள்ளது. ஸ்டீபனை கொலை செய்தவர்கள் தங்கள் வாக்குமுலத்தில் "பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட அன்று ஸ்டீபன் திண்டுக்கல் சென்றிருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 
பசுபதி பாண்டியன் கொலை சம்பவத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்த நாங்கள் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்" என்று கூறியுள்ளனர். 
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் முத்துப்பாண்டி மதுரையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.

 சுபாஷ் பண்ணையார் ?

சுபாஷ்பண்ணையாரின் தாத்தா  சிவசுப்பிரமணிய நாடார், சுபாஷின் தந்தை அசுபதி பண்ணையார் ஆகியோர் பசுபதி பாண்டியன் தரப்பினரால் கொல்லப்பட்டனர். 
பசுபதிபாண்டியன் கொலையில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான சுபாஷ் பண்ணையாருக்கு முள்ளக்காடு சொந்த கிராமம் என்றாலும், ஆறுமுகநேரி, சென்னை கோயம்பேடு அபார்ட்மென்ட், ஆந்திராவில் விஜயவாடா, மும்பை என பல இடங்களில் தங்கி வருபவர். 
இவரது கூட்டாளி ராக்கெட் ராஜாவின் வீட்டில் பீகாரை சேர்ந்த ஆயுத வியாபாரிகள் மூலம் பதுக்கி வைத்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. வெங்கடேசப் பண்ணையாருக்கு ஜானகிராமன் என்ற பெயர் இருப்பதைப் போன்று சுபாஷ் என்ற சுபாஷ்பண்ணையாருக்கு சிவசுப்பிரமணியன் என்ற பெயரும் உள்ளது. 
சுபாஷ் தனது அம்மன்புரம் பண்ணைவீட்டில் வைத்து ஏற்பட்ட வெடி விபத்தில் இடது கை மணிக்கட்டுக்கு கீழே இழந்துவிட்டார். 
சென்னையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் கபிலன், ஆசைத்தம்பி ஆகியோருடன் சுபாஷ் தொடர்பு வைத்திருந்தார் எனவும், நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட ரவுடி லிங்கம், புத்தேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாகராஜன், ரவுடி பாரதி ஆகியோரைக் கொன்ற கொலைக் கும்பலுக்கும் சுபாஷ் பண்ணையாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறும் காவல்துறையினர், சந்தனக் கட்டை, யானைத் தந்தம், பிரவுன் சுகர், ஹெராயின் உள்ளிட்ட கடத்தல் வழக்குகளிலும், சென்னை தொழில் அதிபர்கள், சினிமா நடிகர்களை மிரட்டிப் பணம் பறித்த வழக்குகளில் சுபாஷ் பண்ணையார் சிக்கியதோடு தனது அரசியல் பின்புலத்தாலும், சமுதாயப் பெரியவர்களின் தயவாலும் தப்பித்து வந்ததாகவும் கூறுகின்றனர்.        


 கோழி அருள் 

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவைச் சேர்ந்த தேவராஜ், பூபதி தம்பதியரின் மகன் தான், ‘கோழி’ அருள். 
அவனுடைய அண்ணன் பெருமாள்புரம் பகுதியில் கோழிக்கடை வைத்திருந்தார். அந்தப்பகுதியில், ஏற்கெனவே அருள் என்பவன் சிறிய தாதாவாக உலா வர, இவனை வித்தியாசப்படுத்திக் காட்ட,‘கோழி’ அருள் என்று அவனது சகாக்கள் கூப்பிட ஆரம்பித்தனர். பெருமாள்புரம் பகுதியில் ஜான் பாண்டியனுக்கு நெருக்கமான வழக்கறிஞர் பெஞ்சமின் என்பவர் ‘கோழி’ அருள், ராக்கெட் ராஜா, சிங் நாடார் போன்றவர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டார். 
இதில் மூவரும் முழு தாதா இமேஜிற்குள் வந்தனர்.
நாசரேத் கபிலன், கராத்தே செல்வின் போன்றோரின் பாசறையில் முக்கியப் பங்கு வகித்த ‘கோழி’ அருள் பின்னர் வெங்கடேச பண்ணையாரின் அணியில் இடம் பிடித்தான். பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியானான். 
பலரை மிரட்டிப் பணம் வசூலிப்பதுதான் அருளுக்கு வேலை என்றாலும் அவனுக்கு எதிராகப் பலரும் போலீஸிற்கு போக பயந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி வழக்கறிஞரும், முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வியின் தீவிர ஆதரவாளருமாகிய வக்கீல் பிரபுவிடம் அருள் பணம் கேட்டு மிரட்ட அவர் போலீஸில் புகார் கொடுத்தார். உடனே பிரபுவின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 
 கோழி அருள் மீது 7 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 19 வழக்குகள் உள்ளன. இப்போது பசுபதிபாண்டியன் கொலை வழக்கிலும் அருள் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 
அருளின் தம்பி குட்டி என்பவன் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. 


 ராக்கெட் ராஜா

பசுபதி பாண்டியன் கொலையில் முதலில் சந்தேகத்திற்கு உள்ளான நபர் ராக்கெட் ராஜா. இவர் இந்தக் கொலை வழக்கில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்றாலும் காவல்துறையின்  சந்தேக வலையத்திற்குள்தான் இருக்கின்றார்.
ராக்கெட் ராஜாவின் சொந்த ஊர் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி. அவருடைய தந்தை ஜெகதீசன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. 
ஏழு சகோதரர்கள். நான்கு சகோதரிகள். 
இரு சகோதரர்கள் வழக்கறிஞர்கள். 
அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கராத்தே செல்வினை கொலை செய்த கட்டத்துரையை கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராக்கெட் ராஜா அந்த வழக்கிலிருந்து விடுதலையானார். 
வெங்கடேசப் பண்ணையாரின் தளபதியாய் இயங்கியவர். 
அப்புறம் சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து இயங்கினார். 
ராக்கெட் ராஜா மீது இருந்த அத்தனை வழக்குகளும் தள்ளுபடியாகிவிட்டன.  திசையன்விளை ஆனைகுடி கிராமத்தில் உள்ள ராக்கெட் ராஜாவின் வீட்டில்  24-2-2009 அன்று சோதனை போட்ட  காவல்துறை, அங்கு ஒரு பம்ப் ஆக்ஷன் ரைபிள், (இதன் குண்டு, ஒரு பேட்டரி செல் சைஸ் இருக்குமாம். சுட்டால் சேதாரம் அதிகம்) ஏ.கே.47 துப்பாக்கிக்கு உரிய காலி தோட்டாக்கள் 4 மற்றும் 59-ரவுண்டு தோட்டாக்கள், ஒரு கோடாரி ஆகியவற்றை கைப்பற்றினர். 
அங்கிருந்த ராக்கெட் ராஜா அண்ணன் கண்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 
 மேடையில் சபதம் போட்டு இளைஞர்களை சூடேற்றுவது இவரது ஸ்டைல். 
அதிவேகமாக கார் ஓட்டுவதினால் 'ராக்கெட்' ராஜா என்ற பெயர் ஏற்பட்டுள்ளதாம்.  மூன்று வருடங்களுக்கு முன்பு ‘நாடார் மக்கள் சக்தி இயக்கம்’ என்ற ஓர் அமைப்பை, கராத்தே செல்வின் நினைவு நாளன்று, வள்ளியூரில் மிகப் பெரிய கூட்டம் கூட்டி, தொடங்கி வைத்தார். மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய சினிமா ஃபைனான்ஸியர் (சேட்) மகளைக் காதலித்து மணம் முடித்தவர். அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.  தென்மாவட்டத்தின் அரசியல் மையம் என்றழைக்கப்படும் மணல் மாபியா வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனை பகைத்துக் கொண்டதால் தனது ஊர் பக்கம் அவ்வளவாக தலைக் காட்டுவது கிடையாது என்கின்றனர் அவரது கிரமாத்தை சேர்ந்தவர்கள்.  
                                                                                                                                    -இரா.குமாரவேல்,                                                                    
===========================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...