சனி, 17 நவம்பர், 2018

முதல் உலகப்போர்.

மறைக்கப்பட்ட வரலாறு



முதல் உலக யுத்தத்தில் 13 லட்சம் இந்திய சிப்பாய்கள் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக யுத்தத்தில் பங்கேற்றார்கள். 

இவர்களில் 74000 பேர் யுத்தக்களத்தில் கொல்லப்பட்டார்கள். 
மேலும் 70000 பேர் காயமுற்றார்கள்.
 யுத்தத்தில் உலகளவில் சிப்பாய்கள் உட்பட சுமார் 3 கோடியே 70 லட்சம் பேர் இறந்து விட்டார்கள்.

சமீபத்தில் பாரீசில் கூடிய உலக நாடுகளின் தலைவர்கள் (அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்டு 70 நாடுகள்) முதல் உலக யுத்தம்முடிவுற்ற நாளை கொண்டாடினார்கள். 


ஆனால் இந்தியாவிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நலனை பாதுகாக்கஅந்த யுத்தத்தில் கலந்து கொண்டதால் கொல்லப்பட்டவர்கள்பற்றி எந்த நாட்டு தலைவரும் பேசவில்லை. 

சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக இருந்த இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் நலனை பாதுகாப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு யுத்தத்திற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் இவர்கள். 

தமிழகத்திலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் இத்தகைய சிப்பாய்கள் ஐரோப்பாவிற்கு சென்றார்கள்.  முதல் உலக யுத்தத்தில் பிரிட்டனுக்கு போர் செய்ய இந்திய சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.அப்படி இந்தியர்கள் இங்கிலாந்துக்காக போர் செய்யப்போவதை இந்திய விடுதலைப்போராட்ட களத்தில் இருந்தவர்கள் எதிர்த்தனர்.

ஆனால்   காந்தி மட்டும் இங்கிலாந்துக்கு ஆதரவாக இருந்தார்.இந்தியர்கள் போருக்கு சென்று உயிர்விடுவதை ஆதரித்தார். 
ரவீந்திரநாத் தாகூர் இதனை விமர்சித்து எழுதினர்.

 எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் இந்தியர்களுக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத யுத்தத்தில்ஏன் கலந்துகொள்ள வேண்டும், ஏன் கொல்லப்படவேண்டும் என்பது பற்றி ஒரு நாவலே எழுதினார். 

முதல் உலக யுத்தத்திற்கு இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, இந்தியச் சிப்பாய்கள் உலக யுத்தத்தில் கொல்லப்பட்டது இந்தியமக்கள் நலனுக்காக அல்ல; மாறாக, இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக, நமது நாட்டைச் சார்ந்த சிப்பாய்கள் ஐரோப்பிய மண்ணில் கொல்லப்பட்டார்கள்.

உலக யுத்தம் ஏன்?


ஆஸ்திரிய நாட்டு இளவரசர் கொல்லப்பட்டதுதான் முதல் உலக யுத்தத்திற்கு அடிப்படைக் காரணமென்று மேம்போக்காக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள்.

இது உடனடியான காரணமாக இருந்தாலும், அடிப்படைக்காரணம் இதுவல்ல. 

18, 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆசிய,ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகள் பிரிட்டிஷ்சாம்ராஜ்யத்தின் காலனி - அடிமை நாடுகளாக இருந்தன. 

அடுத்தடுத்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்காபோன்ற நாடுகளிலும் முதலாளித்துவ வளர்ச்சி ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்தது.
 பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிக்காது என்ற நிலைக்கு போட்டி ஏற்பட்டது. 
இதர ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இங்கிலாந்து நாட்டுக்கும் இடையில் போட்டி ஏற்பட்டது. 

ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்த பன்னாட்டு கம்பெனிகள் தங்களது மூலதனத்தை காலனி நாடுகளுக்கு எடுத்துச்சென்று தொழிற்சாலைகள் துவங்குவதற்கும், ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பதற்குமான சந்தைகளாக காலனி நாடுகளை பயன்படுத்திட ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையில் போட்டிஏற்பட்டது. 

இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான போட்டிதான் முதல் உலக யுத்தத்திற்குஅடிப்படைக் காரணம்.வேறு வகையில் சொல்வதென்றால், ஆப்பிரிக்க - ஆசியகண்டங்களின் பின்தங்கிய - வளர்ச்சி அடையாத நாடுகளைதங்களுக்குள் மறு பங்கீடு செய்து கொள்ள, பங்குபோட்டுக்கொள்ள நடந்ததுதான் இந்த யுத்தம். 

இந்த யுத்தத்தில் மக்களின் நலன் ஏதுமில்லை.28.7.1914 அன்று துவங்கி 11.12.1918 அன்று முதல் உலக யுத்தம் முடிவுற்றாலும், உலக நாடுகளை ஏகாதிபத்தியநாடுகள் கொள்ளையடிப்பதற்கான போட்டி முடியவில்லை. அது தொடர்ந்தது. 

அதுதான் இரண்டாவது உலக யுத்தமாக வெடித்தது.

 மீண்டும் காலனி நாடுகளைபங்குபோட்டுக்கொள்ள வெடித்த இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிச ஹிட்லர் உலகத்தையே தனது ஆதிக்கத்தில் கொண்டு வர முயற்சித்தான். 

ஹிட்லரை வீழ்த்தி உலகத்தை பேரழிவிலிருந்து பாதுகாத்த பெருமைதோழர் ஸ்டாலின்தலைமையிலான சோவியத் யூனியனையேச் சாரும்

பாசிசத்திற்கு எதிரான யுத்தத்தில் சோவியத் நாட்டைச் சார்ந்த செஞ்சேனை வீரர்கள் உட்பட இரண்டு கோடிக்கு மேற்பட்ட அந்நாட்டு மக்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.

நவீன தாராளமயக் கொள்கை.

2வது உலக யுத்தத்திற்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும்பலமான நாடாக உருவானது. 
தற்போது உலக நாடுகள் மீது யுத்தத்தை தொடுப்பதும், அந்நாடுகளைஆக்கிரமிப்பதும், அங்குள்ள எண்ணெய், எரிவாயுஉள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதுமாகிய வெளியுறவுக்கொள்கையைத்தான் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. 

இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, இந்தியா உள்ளிட்ட பல காலனி நாடுகள் விடுதலை அடைந்தன. 
2வது உலக யுத்தத்திற்குப் பிறகு, பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, காலனி நாடுகள் விடுதலை அடைந்துபொதுவாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் சுதந்திரவேட்கை, விழிப்புணர்வு உருவான பின்னணியில் கடந்தகாலங்களைப் போல் பின் தங்கிய நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் காலனிகளாக அடிமைப்படுத்தி நேரடியாக ஆட்சி நடத்தும் சூழல் மாறிவிட்டது. 

இத்தகைய புதிய சூழலில்தான் காலனிகளாக ஆக்கிடாமல், புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மூன்றாவது உலக நாடுகளை சுரண்டவும் கொள்ளையடிக்கவும் ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கியதுதான் நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை. பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை பலமடங்கு உயர்த்தி பல நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்திய அரசு ஒரு வணிக யுத்தத்தையே தொடுத்துள்ளது. 
இத்தகைய அமெரிக்கஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இந்தியாவை இணைக்கின்ற கொள்கையைத்தான் மோடி அரசு கடைப்பிடித்து வருகிறது. உழைப்பாளி மக்களை ஒட்டச்சுரண்டுவதோடு, உலகநாடுகள் மீது யுத்தம் தொடுப்பது, ஆக்கிரமிப்பது, பலநாட்டு வளங்களை கொள்ளையடிப்பது தான் முதலாளித்துவம். இதன் உச்ச கட்டமாக வளர்ச்சியடைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் இத்தகையபோக்கை கடைப்பிடித்துள்ளன. 

இப்பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. நேரடி யுத்தத்தின் மூலமாக மட்டுமின்றி உலகமயம் என்ற பெயரில் நாடுகளை, மக்களை கொள்ளையடிப்பது தொடரும் நிலையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் கூர்மையடைய வேண்டியுள்ளது.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         -ஜி.ராமகிருஷ்ணன்
                                                                                                                                                                                                                                            அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.
                                                                                                                                                                                                                                            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...