புதன், 3 அக்டோபர், 2018

அம்பானியும் ஓடி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.



மல்லையா, நீரவ் மோடி வரிசையில் வெளிநாட்டுக்குத் தப்பலாம்!!
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், பெருமுதலாளிகளில் ஒருவருமான அனில்அம்பானி, இந்தியாவை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ‘எரிக்சன்’ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

தங்களுக்குத் தரவேண்டிய 1600 கோடி ரூபாயை, அனில் அம்பானி இன்னும் தராதநிலையில், இப்பிரச்சனையில் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடலாம் என்பதால், ‘எரிக்சன்’ நிறுவனம் இந்த தடை உத்தரவைக் கோரியுள்ளது.அனில் அம்பானி நடத்திவந்த ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்’ நிறுவனம் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்தது. 

சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடனும் ஏற்பட்டது. விஜயா வங்கியில் வாங்கிய அந்தக் கடனை இப்போதும் அம்பானி திருப்பிச் செலுத்தவில்லை.


இதனிடையே, ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்’ பயன்படுத்திய அலைக்கற்றை, மொபைல் கோபுரங்கள் உள்ளிட்டவற்றை விற்பதற்கு அனில் அம்பானி முடிவு செய்தநிலையில், அதனை ரூ. 25 ஆயிரம்கோடிக்கு, தனது ‘ஜியோ’ நிறுவனத்திற் காக வாங்கிக் கொள்வதற்கு அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானியேமுன்வந்தார். 

ஆனால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஏற்கெனவே பயன்படுத்திய அலைக்கற்றைக்கான கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 900 கோடியை, தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டதால், இது நடக்கவில்லை.

இதுதவிர, பிரபல ஸ்வீடிஷ் தொலைத் தொடர்பு சாதன உற்பத்தி நிறுவனமான எரிக்சனிடம், அனில் அம்பானி செய்து வந்த வர்த்தகத்தில், ரூ. 1600 கோடி பாக்கிவிழுந்தது. 
இவ்விஷயத்தில் எரிக்சன் நீதிமன்றம் சென்றபோது, செப்டம்பர் 30-க்குள்முதல் தவணையாக ரூ. 590 கோடியை வழங்குவதாக அனில் அம்பானி ஒப்புக் கொண்டார். 

நீதிமன்றமும் இதுதொடர்பாக அனில் அம்பானியை எச்சரித்திருந்தது. 

ஆனால், சொன்னபடி அனில் அம்பானி பாக்கியைத் தரவில்லை.இதையடுத்து எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளது. 

அதில், “நீதிமன்ற உத்தரவைரிலையன்ஸ் குழுமத்தினர் மதிக்காமல் நடந்து கொள்கின்றனர்; அதனால் நாங்கள்அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்; எனவே, ரிலையன்ஸ் குழும நிர்வாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.


இவருக்குத்தான் நிறுவனம் துவக்கிய 16 நாட்களில் ரபேல் விமான ஒப்பந்தத்தை மோடி அரசு கொடுத்து அழகு பார்த்ததுள்ளது.
மல்லையா,மோடிகள் போன்று அம்பானியும்  ஓடிவிடும் முன்னர் விழித்துக்கொள்ளுமா இந்திய அரசு.?

விவசாயிகள் மீது துல்லியத் தாக்குதல்!
மோடி அரசே விவசாயிகளுக்கு அளித்தவாக்குறுதி என்னாச்சு என்ற கேள்வியோடு தில்லியை நோக்கி பேரணி சென்ற விவசாயிகளின் மீது மத்திய அரசு காவல்துறையை ஏவி துல்லிய தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பாஜக விவசாயிகளை மீட்டெடுப்போம் என்ற பெயரில் 3 முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தது. 

அதில் விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவை போல் ஒன்றரை மடங்கு விலை கொடுப்போம். விதை, பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி உள்ளிட்ட அனைத்து இடுபொருள்களையும் குறைந்த விலையில் அளிப்போம். 
விவசாயத்திற்கு நிதிமற்றும் பொதுச் செலவினங்கள் அதிகரிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தது.

 ஆனால் மோடி பிரதமராக ஆட்சிப்பொறுப்பேற்று 4 வருடங்கள் முடிந்த நிலையிலும் இதுவரை விவசாயிகளுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 

விளைபொருட்களுக்கான விலை இரட்டிப்பாகும் என எதிர்பார்த்த நிலையில் விவசாயிகளின் தற்கொலையே இரட்டிப்பாகியிருக்கிறது. 

அதுமட்டுமா 2015 பிப்ரவரி 20ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு அளித்த வாக்குறுதி படி விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விளை என்னாச்சு என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

வாக்குறுதி எல்லாம் சும்மாதான், ஒன்றரை மடங்கு விலை என்பது சாத்தியமே இல்லை என சாதித்தது.
ஆனால் மறுபுறம், மோடி அரசு இந்தியாவின்ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்களின் கைகளுக்கு மடைமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. 
விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விதை மற்றும் உரத்திற்கான மானியம் கூட அதனை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட்களுக்கு நேரடியாக செல்கிறது. 

விவசாயத்திற்கான தண்ணீரின் உரிமையும் கூட படிப்படியாக கார்ப்பரேட்களின் வசம் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் எங்கள் கோரிக்கை மீதும் செவிசாயுங்கள் என உத்தர்கண்ட் விவசாயிகள் ஹரித்துவாரில் இருந்து 10 நாட்கள் நடைபயணமாக தில்லிக்கு வந்தனர். 

ஆனால் அவர்களின் கோரிக்கைதான் என்ன என்று கேட்பதற்கு மாறாக, மோடி அரசு தில்லி எல்லையிலேயே வைத்து விவசாயிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை தொடுத்திருக்கிறது. 

ஒருபுறம் இந்தியாவின் முதுகெலும்பேகிராமப்புற விவசாயிகள்தான் என்று சொன்ன அகிம்சாவாதிக்கு அஞ்சலி செலுத்துவது போல்,போஸ் கொடுத்துக் கொண்டே,மறுபுறம் விவசாயிகள் மீது தடியடியை ஏவிவிட்டு குருதிவெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்செய்யும் கொடூரத்தை மத்திய பாஜக அரசு அரங்கேற்றியிருக்கிறது. 

டெல்லி போலீஸ் பாஜகவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் வருகிறது.

தடியடி நடத்திய பின்தான் பேச்சுவார்த்தை என்பதன் நோக்கம் என்ன?

அப்போதும் கூட விவசாய கடனை தள்ளுபடிசெய்வது குறித்து எந்த உத்தரவாதமும் மோடி அரசு அளிக்கவில்லை. 

ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக்கடன் ரூ. 3லட்சத்து 16 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்திருக்கிறது. 

ஆக மோடி அரசு கார்ப்பரேட்களுக்கான அரசே தவிர, விவசாயிகளுக்கான அரசு அல்ல என்பதை மீண்டும் தடியடி மூலம் நிரூபித்திருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

46 வது உச்ச நீதிமன்றத்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைந்தது. 
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இன்று பதவியேற்றார்.அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.   ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதி ஆவார்.
1954-ம் ஆண்டு பிறந்த ரஞ்சன் கோகோய் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். 
1978-ல் பார் கவுன்சிலில் இணைந்த கோகோய், குவாஹாட்டி ஐகோர்ட்டில் பணியாற்றி வந்தவர். கடந்த 2010 செப்டம்பரில் பஞ்சாப், ஹரியாணா மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். 2011-ல் பஞ்சாப் – ஹரியானா கோர்ட் தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். 
பின்னர் 2012, ஏப்ரலில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முன்னாள் சிபிஐ அதிகாரி அளித்த வாக்குமூலத்தை விசாரித்த அமர்வில் இவர் இடம்பெற்றிருந்தார். 

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாகச் செயல்படுகிறார் என்று கடந்த ஜனவரி மாதம் போர்க்கொடி உயர்த்திய நீதிபதிகளில் ரஞ்சன் கோகோயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற ரஞ்சன் கோகாய் சொத்து மதிப்புக்களை அட்டர்னி ஜெனரல் வேணு கோபால் நேற்று வெளியிட்டார். 
ரஞ்சன் கோகாய் வீட்டில் எந்த தங்க நகையும் கிடையாது என்றும், அவரது மனைவிக்கு திருமணத்தின்போது பெற்றோர் அளித்த நகைகள் மட்டுமே உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோகாயின் மனைவியை விட, மிஸ்ராவின் மனைவியிடம் கூடுதலாக நகைகள் உள்ளன.
ரஞ்சன் கோகாய் மற்றும் தீபக் மிஸ்ராவிடம் சொந்த வாகனங்கள் ஏதும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இருவரும் அரசு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
அதே சமயம் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற கோகாய்க்கு சொந்தமாக வீடோ, வங்கிக் கடனோ, சொத்துக்கள் அடமானமோ ஏதும் இல்லை. 
எல்ஐசி பாலிசி, வங்கிச் சேமிப்பு என ரூ.30 லட்சம் மட்டுமே உள்ளது.
=======================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...