திங்கள், 15 அக்டோபர், 2018

அம்பானிக்கு மோடி கொடுத்த முப்பதாயிரம் கோடிகள்.

ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று மத்திய பாஜக அரசு எவ்வளவுதான் மூடிமறைக்க முயன்றாலும், உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், ரபேல் ஒப்பந்தப்படி இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய், ரிலையன்ஸ் குழுமக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் அம்பலமாகியுள்ளது.


பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல் ரக’ போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது.
ரபேல் விமானங்களை வாங்குவது காங்கிரஸ் அரசின் முடிவுதான் என்றாலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அதில் ஏராளமான மாற்றங்களை செய்தது.முந்தைய காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தில், மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க முடிவு செய்து- அதில் 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் பெற்றுக் கொள்வது, ஏனைய 108 விமானங்களை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொள்வது என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், மோடி அரசோ மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவதென்றும், அவற்றையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக் கொள்வதென்றும் ஒப்பந்தத்தை மாற்றியமைத்தது.
போர் விமானங்களைத் தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இருந்த ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட்’ நிறுவனத்தை கழற்றிவிட்டு, அந்த இடத்தில், திடீரென அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தைத் திணித்தது.
காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரபேல் ரக விமானத்திற்கு, 1670 கோடி ரூபாயை அள்ளி இறைத்தும் மோடி அரசு தாராளம் காட்டியது. இவை அனைத்தும் எதிர்க்கட்சிகள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தின.
526 கோடியாக இருந்த, ஒரு விமானத்தின் விலை, 1670 கோடி ரூபாயாக அதிகரித்தது எப்படி? 
அதேபோல எச்ஏஎல் நிறுவனம் இடம்பெற்றிருந்த இடத்தில் ரிலையன்ஸ் எப்படி வந்தது? 

75 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கிவிட்டு, ஆரம்பித்து 12 நாட்களே ஆன ரிலையன்ஸை, ‘டஸ்ஸால்ட்’ தனது கூட்டு நிறுவனமாக சேர்க்க வேண்டிய தேவை என்ன? 
போர் விமான தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில், 108 விமானங்களை இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று முன்பு ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில், மொத்தமே 36 விமானங்களை மட்டும் வாங்குவது; அவற்றையும் பறக்கும் நிலையிலேயே வாங்கிக் கொள்வது; என்று ஒப்பந்தத்தை மாற்றியது ஏன்? 
இந்தியாவில் ஒரு விமானமும் தயாரிக்கப்படாது எனும்போது, ‘மேக் இன் இந்தியா திட்டம்’ எதற்காக? அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்த்தது எதற்காக? 
என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.
ஆனால், ஒன்றுக்கும் மோடி அரசு உருப்படியான பதில் அளிப்பதாக இல்லை. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இடம்பெற்றது குறித்து தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று தப்பிக்கப் பார்த்தது.
ஆனால், இந்திய அரசு கூறியதன் பேரிலேயே ரிலையன்ஸை ஒப்பந்தத்தில் இணைத்தோம் என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டே உண்மையை போட்டு உடைத்தார். 
அவரைத் தொடர்ந்து ‘அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்’ என்ற இந்தியப் பிரதமரின் முன்நிபந்தனையின் பேரில்தான் ரபேல் ஒப்பந்தமே கையெழுத்தானது ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்தின் மூத்த அதிகாரியான லோய்க் சிகாலன் என்பவரும் உறுதிப்படுத்தினார். 
இதுதொடர்பாக பிரான்சின் ‘மீடியாபார்ட்’ என்ற புலனாய்வு செய்தி நிறுவனம் விரிவான செய்தியை வெளியிட்டது.
அந்தச் செய்தியை வழிமொழிந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி வைத்த முன்நிபந்தனை அடிப்படையில், 30 ஆயிரம் கோடி ரூபாயும் ‘டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ்’ கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு விட்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

உள்ளுக்குள் அதிர்ச்சி இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், வழக்கம்போல அதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார். ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பில் 10 சதவிகிதம் (ரூ. 3 ஆயிரம் கோடி) மட்டுமே டஸ்ஸால்ட் – ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறினார். 

டஸ்ஸால்ட் நிறுவனமும் அதற்கு ‘ஆமாம்’ போட்டது.
ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6 ஆயிரத்து 600 கோடி முதலீடு பெறப்பட்டதாக அறிவித்தது.
 இது, நிர்மலா சீத்தாராமன் மற்றும் டஸ்ஸால்ட் நிறுவனம் கூறியதைவிட 2 மடங்கு அதிகத் தொகை என்பதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த குழப்பம் தீர்வதற்கு உள்ளாக, ரிலையன்ஸ் நிறுவனனே தனது குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடியை முதலீட்டு பங்காக பெற்றிருப்பதாக கணக்கில் காட்டி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரபேல் விமானக் கொள்முதல் மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி என்ற நிலையில், அதில், 50 சதவிகிதத் தொகையை, அதாவது ரூ. 30 ஆயிரம் கோடியை, இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, சேவைகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். 
இதன்படி ரூ. 30 ஆயிரம் கோடி நாட்டின் பிற பாதுகாப்பு தளவாட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால், இந்த தொகை முழுவதும் அப்படியே ரிலையன்ஸ் குழுமத்திற்கு போயிருப்பது அவர்கள் அளித்த அறிக்கை மூலமே அம்பலமாகி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...