சனி, 6 அக்டோபர், 2018

‘தேசர்கதா’ வும் மோடியின் பாசிச அரசு தடையும்.

கருத்துரிமை பறிப்பை உச்சக்கட்டத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ள, பாசிசப் போக்கினை பகிரங்கமாக – எவ்வித கூச்சநாச்சமுமின்றி வெளிப்படுத்திக் கொள்கிற கொடிய ஆட்சிதான் மோடியின் ஆட்சி என்பதை நிரூபித்திருக்கிறது, திரிபுரா பாஜக அரசு, தேசர்கதா நாளிதழ் மீது ஏவியுள்ள தாக்குதல்.
40 ஆண்டுகளைத் தொட்டுள்ள ஒரு ஏட்டினை, சொத்தையான காரணங்களை முன்வைத்து, ஒரு மாவட்டத்தின் துணை ஆட்சியர் அளித்த உத்தரவின் அடிப்படையில், இந்திய பத்திரிகைகள் பதிவாளர் அலுவலகத்தின் ஒரு குறிப்பின் மூலம் தடை செய்து ஒரே நாளில் முடக்கிவிட முடியும் என்பதை, தேசர்கதாவை முடக்கியதன் மூலம் நாடு முழுமைக்கும் அறிவித்திருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.
இது தேசர்கதா என்ற நாளிதழுக்கு மட்டும் விடப்பட்ட சவால் அல்ல; மாறாக ஒட்டுமொத்த இந்திய பத்திரிகைகளுக்கும் ஊடக உலகிற்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டலாகும்.இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா) இதை மிகச் சரியாக உணர்ந்து கொண்டுள்ளது. அதனால்தான், ஊடக முதலாளிகள், தேசர்கதாவின் முடக்கத்தைப் பற்றி நாடு முழுவதும் தங்களது ஊடகங்களின் வாயிலாக உண்மையை எடுத்துச் செல்ல கவனமாக மறந்துவிட்டபோதிலும், பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், தேசர்கதா முடக்கத்தை மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக்குழு நடத்துகிற பத்திரிகையான தேசர்கதாவின் பதிவு உரிமத்தை, பத்திரிகையின் உரிமையாளர் தொடர்பான மாற்றம் அதிகாரப்பூர்வமின்றி செய்யப்பட்டுவிட்டது என்று ஒரு சொத்தையான – வெறும் தொழில்நுட்ப ரீதியான காரணத்தைக் காட்டி ரத்து செய்திருப்பது – இதற்காக இந்திய பத்திரிகைகள் பதிவாளர் அலுவலகத்தை பயன்படுத்தியிருப்பது அப்பட்டமான அராஜகம் என்று பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சாடியுள்ளது.
40 ஆண்டுகள் நீண்ட வரலாறு கொண்ட பத்திரிகை தேசர்கதா; 1979ல் வாரப் பத்திரிகையாகத் துவங்கி, பின்னர் நாளிதழான நிலையில், எத்தனையோ சோதனைகள், தாக்குதல்கள், நெருக்கடிகள் வந்த போதிலும் ஒரு நாள் கூட பத்திரிகை நின்றதில்லை. இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசத்தில் எல்லையோரத்தில் அமைந்துள்ள மலை மாநிலமாம் திரிபுராவில், சமவெளியில் வசிக்கும் உழைப்பாளி மக்களுக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்திய மாபெரும் அமைப்பாளனாக 40 ஆண்டுகாலம் சுற்றிச் சுழன்று வந்தது தேசர்கதா. தேசர்கதாவின் வளர்ச்சி திரிபுராவின் வளர்ச்சி.
திரிபுராவில் பழங்குடி மக்கள் மற்றும் சமவெளிப் பகுதி உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்தது தேசர்கதா. ஒவ்வொரு நாளும் அதிகாலை திரிபுராவின் மலைவெளி எங்கும் தேசர்கதாவின் முழக்கங்களே எதிரொலித்தன. தேசர்கதாவே பழங்குடி மக்களின் துயரத்தைப் பேசியது. அவர்களிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கொண்டு சென்றது. அவர்களை அணி திரட்டியது. திரிபுராவில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையெல்லாம் அம்பலப்படுத்தியது. அடக்குமுறைகளை எதிர்த்து நின்றது. அவசரநிலைக் காலத்தை முறியடிக்க களம் கண்டது. திரிபுரா இடதுமுன்னணியின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், திரிபுரா இடதுமுன்னணி ஆட்சியின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திற்குப் பின்னாலும், அந்த வளர்ச்சித் திட்டங்கள் திரிபுராவின் கடைக்கோடி மலைப்பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு ஆதிவாசி குடும்பத்திற்கும் சென்றடைந்தன் பின்னணியிலும் தேசர்கதா என்ற மகத்தான பத்திரிகை இருக்கிறது.
தேசர்கதா திரிபுராவின் உயிர் நாடி.
அத்தகைய வரலாறும் பாரம்பரியமும் கொண்ட பத்திரிகையை முடக்கினால்தான், திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை – இடதுமுன்னணியை முடக்க முடியும் என்று திட்டம் போட்டது ஆளும் பாஜக. இந்த சட்டமன்றத் தேர்தலில் சதிகள் பல செய்து, வன்முறைகளை அரங்கேற்றி, மத்திய பாஜக ஆட்சியின் அதிகாரத்தை துணைகொண்டு ஆட்சிக்கு வந்தது பாஜக. பதவியேற்றது முதல் திரிபுரா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுமுன்னணியின் பல்லாயிரக்கணக்கான அலுவலகங்களை அடித்து நொறுக்கியது; சூறையாடியது; தீக்கிரையாக்கியது. மாமேதை லெனின் சிலையில் துவங்கி திரிபுரா மக்களின் மகத்தான தலைவர் தசரத் தேவ் சிலை வரை இடதுசாரி இயக்கத்தின் ஒவ்வொரு அடையாளச் சின்னத்தையும் குறி வைத்து அழித்தது. இந்தத் தாக்குதலில் அளவிட முடியாத மிகப்பெரும் சேதத்தை சந்தித்தது தேசர்கதா நாளிதழ்.
அகர்தலாவிலும் அகர்தலாவுக்கு வெளியிலும் தேசர்கதா நாளிதழின் செய்திப் பிரிவு அலுவலகங்கள், முகவர்களின் வாகனங்கள், செய்தியாளர்களின் இருப்பிடங்கள் குறி வைத்து பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் தேசர்கதாவின் ஏராளமான செய்தியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். முகவர்கள் பத்திரிகைகளை எடுத்துச் செல்லும்போது தாக்கப்பட்டு, பத்திரிகை கட்டுகள் பறிக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்த சம்பவங்களையெல்லாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில், தேசர்கதா ஏட்டின் தலைமைச் செய்தியாளர் ராகுல் சின்கா ஒவ்வொரு வாரமும் எழுதிய வண்ணம் இருந்தார்.
அநேகமாக இந்தியாவில் எந்தப் பத்திரிகையின் மீதும் இப்படி ஒரு கொடூரமான தாக்குதல், ஒரு மாநில அரசால் தொடுக்கப்பட்டதில்லை எனக் கூறலாம்.மேற்குவங்கத்தில் மம்தா ஆட்சி இன்று வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான கணசக்தியை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கணசக்தியின் செய்தியாளர்கள், முகவர்கள், தாக்கப்படுவது தொடர்கிறது. ஆனால் கணசக்தி பத்திரிகையை முடக்குவதற்கு மம்தா இன்னும் துணிந்துவிடவில்லை.
திரிபுராவில் அதை பாஜக அரசு செய்துவிட்டது.
இதை தமது கண்டன அறிக்கையில் மிகச்சரியாக சுட்டிக்காட்டியுள்ள இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், தேசர்கதாவை தடை செய்திருப்பது சாதாரண விசயமல்ல; ஒரு பத்திரிகைக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் ஊடக சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் மிகக்கொடூரமான, சர்வாதிக்காரத்தனமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளது.
தவறான தகவல்களின் அடிப்படையில் தேசர்கதா மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களை உடனடியாகக் கைவிட்டு, பத்திரிகைப் பதிவை ரத்து செய்துள்ள உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்; தேசர்கதா மீண்டும் அச்சாக வேண்டும்; பத்திரிகைகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக திட்டமிட்டு இத்தகைய தாக்குதல்களை ஏவுவதை அரசு நிர்வாகங்கள் கைவிட வேண்டும் என்று பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சேகர்குப்தா, பொதுச் செயலாளர் ஏ.கே.பட்டாச்சார்யா, பொருளாளர் ஷீலா பட் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் சங்கங்களும் திரிபுரா பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன், தேசர்கதா நாளேட்டின் மீதான தடைவிதிப்பு, நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் மிரட்டலாகும்; கருத்துச் சுதந்திரத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் அப்பட்டமான அரசியல் சட்ட மீறலாகும் என்று சாடியுள்ளார். தமிழக பத்திரிகையாளர்கள் கண்டனம் முழங்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசர்கதாவைப் போலவே தமிழகத்தில் உழைக்கும் வர்க்க மக்களின் உயிர் நாடியாக, ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக திகழ்கிறது தீக்கதிர் நாளேடு. தேசர்கதாவின் தோழன் தீக்கதிர். தேசர்கதாவுடன் தோளோடு தோள் நிற்போம். பாஜக அரசின் அட்டூழியத்திற்கு எதிராக, தேசர்கதாவை மீண்டும் அச்சில் ஏற்றிட திரிபுரா தோழர்களின் போராட்டத்தோடு அனைத்து மக்கள் பத்திரிகையாளர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
  தீக்கதிரில் இருந்து                                                                                                     -எஸ்.பி.ராஜேந்திரன்                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...