வியாழன், 25 அக்டோபர், 2018

குற்றாலத்தில் தெளிந்தவர்கள்

தினகரன் தங்களை ஏமாற்றியது ஏன் என்று குற்றாலத்தில் தங்கியிருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் கொதித்து போயுள்ளனர். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் உடனடியாக குற்றாலத்திற்கு செல்லுமாறு கடந்த திங்களன்று தினகரன் உதவியாளர்களிடம் இருந்து உத்தரவு சென்றுள்ளது. 
ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


சிலர் நேரடியாக தினகரன் செல்போன் எண்ணுக்கே சென்றுள்ளனர். 

அப்போது இந்த வார இறுதிக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளது, தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும் என்று தினகரன் கூறியுள்ளார். 

தகுதி நீக்கம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏதேனும் ட்ரிக் செய்வார்கள் எனவே அனைவரும் ஒரே இடத்தில் தங்கியிருக்குமாறு தினகரன் அவர்களிடம் கூறியுள்ளார். 

அதற்கு தீர்ப்பு நமக்கு சாதகமாகத்தான் வருமா? 
என்று தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் திரும்ப திரும்ப கேட்டுள்ளனர். அதற்கு துளியளவும் சந்தேகம் வேண்டாம் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும் என்று உறுதியாக தினகரன சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்தே உற்சாகமாக தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் குற்றாலம் சென்றுள்ளனர். நெல்லை அ.ம.மு.க பிரமுகர் இசக்கிக்கு சொந்தமான குற்றாலம் ரிசார்ட்டில் 18 பேரையும் தங்க வைப்பதாக ஏற்பாடு.

 ஆனால் வெற்றிவேல் தான் குற்றாலம் செல்லவில்லை என்று கூறிவிட்டார். 
இதனை தொடர்ந்து தங்கதமிழ்செல்வன் தலைமையில், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 15 பேர் குற்றாலம் சென்றனர். 

அவர்களுடன் எம்.எல்.ஏக்களாக இருக்கும் மூன்று பேரும் இணைந்து கொண்டனர். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் என்று தினகரன் கூறியிருந்த காரணத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக 3 நாட்கள் பொழுதை கழித்துள்ளனர் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள். 

ஆனால் வியாழக்கிழமை அன்று காலை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் வழங்கிய தீர்ப்பு ஒட்டு மொத்த டி.டி.வி தரப்பையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 
தீர்ப்பை கேட்டு குற்றாலத்தில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் ஒரு கனம் ஆடிப்போய்விட்டனர். 

இதற்கு இடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது.
 இதனால் குற்றால ரிசார்ட்டில் இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் கொதித்துப் போய் ஆள் ஆளுக்கு ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டனர். 
தங்க தமிழ்செல்வனோ ரிசார்ட்டில் இல்லை. 


செந்தில்பாலாஜி மற்றும் பழனியப்பன் தான் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். 
ஒரு கட்டத்தில் தினகரனுக்கு தொடர்பு கொண்டு போனை கொடுத்துள்ளனர், 

அப்போது பேசிய சிலர், தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்றதால் தான் குற்றாலத்திற்கு வந்தோம், ஆனால் நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்கிற ரீதியில் பேசியுள்ளனர். 
ஆனால் ஏதோ தவறு நடந்துவிட்டது, பொறுமையாக இருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு தினகரன் போனை கட் செய்துள்ளார். 

ஆனால் எம்.எல்.ஏக்கள் ஒரு நிமிடம் கூட இனி குற்றாலத்தில் இருக்கப்போவதில்லை என்ற கூறியுள்ளனர். 
இதனை தொடர்ந்து மதுரைக்கு செல்லலாம் என்று கூறி அவர்களை செந்தில்பாலாஜி அழைத்துச் சென்றுள்ளார்.. 

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு குறித்து கேட்ட போது டி.டி.வி தினகரன்  தொலைக்காட்சிகளை பார்த்து தான் தெரிந்து கொண்டார். 
நேராக செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். அப்போது தெம்பாக பேசுவது போல் காட்டிக்கொண்டாலும் ,முகம் முழுக்க கவலைதான் தெரிந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற தினகரன் செல்போனில் வழக்கறிஞர்களிடம் பேசியுள்ளார். 
அப்போது சற்று கோபமாகவே என்னிடம் என்ன கூறினீர்கள்? 
இப்போது என்ன நடந்துள்ள? 
என்று சீறியுள்ளார். மோடியை எடப்பாடி சந்தித்ததுதான் இத்தீர்ப்பின் பின்னணி என்று ஆவேசப்பட்டாராம்.

அதற்கு இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை என்று பதில் அளித்துள்ளனர். 
பின்னர் நிதானத்திற்கு வந்த தினகரன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கூறுங்கள் என்று வழக்கறிஞர்களிடம் கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார் . 

அதன் பிறகு சிறிது நேரம் வெற்றிவேல் உள்ளிட்டோரிடம் பேசிவிட்டு தனது அறையில் தனிமையில் சிறிது நேரத்தை தினகரன் கழித்துள்ளார்.

ஆனால் ஏதோ பலனை எதிர்பார்த்து அவருக்கு ஆதரவு தந்து வந்து குற்றாலம் போய் தாமிரபரணி புஸ்கரத்தில் குளித்தும் பதவியை புஷ்வாணமாகி இழந்த சமஉ க்கள் நிலை பரிதாபகரமாகியுள்ளது.
இடைத்தேர்தலில் தாங்கள்  போட்டியிடமுடியாது என்ற பயமும் உள்ளது.

அப்படியே போட்டியிட்டாலும் தினகரனின் பெயரும்,20 ரூபாய் டோக்கனும் உண்டாக்கியுள்ள அதிருப்தியும்  மக்களிடம் இருந்து வாக்குகளை பெற்றுத்தரது என்றே எண்ணுகின்றனர்.

அதிமுகவில் ,மக்கள் மத்தியிலும் மதிப்பை இழந்து விட்டவர்களுக்கு இதுவரை பதவி மரியாதை மட்டுமிருந்தது.
இப்போது அதுவும் போய்விட்டது.

அதை பின்வரும் நிகழ்வு அப்பட்டமாக்கியுள்ளது.

 குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜெயந்தி தினகரன் ஆதரவாளர்.
குற்றாலம் இன்ப சுற்றுலாவில் இருந்து நொந்து போயுள்ளவர்.இவர்  வீட்டு முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். 

குடியாத்தம்  நரியம்பட்டு பகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ஜெயந்தி வீட்டு முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். 

மேலும் ஜெயந்தியின் உறவினர்கள் சிலர் சில காரணங்களைக்கூறி  வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இது போன்று சில தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் உறவினர்கள் பெட்டி வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
இது பதவியிழந்த எம்.எல்.ஏ க்களை மேலும் கவலையிலும்,,கோபத்திலும்  ஆழ்த்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...