ஞாயிறு, 24 டிசம்பர், 2017

படு தோல்வி.

தேர்தல் ஆணையத்தின் படு தோல்வி.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதெல்லாம் ஓடி மறைந்து விட்ட காலம் இது.
வாக்குக்கு பணம் மறைமுகமாக கொடுத்த காலம் போய்.
இன்று வாக்குக்கு பணம் வாங்குவது வாக்காளர் உரிமை என மாறி விட்டது.

வெளியில் வாக்குக்கு பணம் வாங்குவதை அசிங்கம் என்று நாணயமாக பேசுபவர்கள் கூட வாக்குக்கு நிர்ணயிக்கும் தொகை 5000,1000 என்று தெரிந்த உடன் மனம் அலைபாய்கிறது.
அவர் வீட்டில் 3 வாக்குகள் இருந்தால் 30,000/-ஆயிற்றே.
ஆர்.கே,நகர் இடைத்தேர்தல் அசிங்கம் இந்திய அளவில் அவமானம்.


அவமானம்  யாருக்கு என்பதில் யாருக்குமே ஐயம் வேண்டாம்.
அனைத்துப்புகழுமே இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே.
ஒரு தேர்தலில் பணம் பட்டுவாடா நடக்கிறது என்றால் அதை தடுப்பது யார்?

எதிர் தரப்பினர் பணம் கொடுப்பவர்களை பிடித்துக்கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை.இதில் எ மக்கள் வரிப்பணத்தில் குளிர் வாகனங்களில் தேர்தல் பார்வையாளர்கள்,கணக்கு அதிகாரிகள் என ஒரு கூட்டம்.
துணை ராணுவம் வரை ஆயிரக்கணக்கில் வைத்தும் பணம் பட்டுவாடா தடுக்க முடியவில்லை என்றால் அது யாரின் கையாலாகத் தனம்.?

உள்ளூர் அதிகாரிகளும் ,காவல்துறையினரும் ஒத்துழைக்கவில்லை என்பது சர்வாதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் சொல்வது சரியான காரணமாக அமையாது.
காரணம் தேர்தல் அறிவிக்கப் பட்டவுடனே தேர்தல் நடைமுறையில் அனைத்து அதிகாரவர்க்கமும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது.அவர்களை மாற்றுவது,நடவடிக்கைகள் எடுப்பது என  முதல் எல்லா அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம்தான்.

ஆர்.கே.நகரில் நடந்தது இந்தியா முழுக்க அறிந்ததுதான்.
சென்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஒரு அணியின் வேட்பாளர் தினகரன் 89 கோடிகள் வரை வாக்கு வாங்க அள்ளிவிட்டார் அதை தடுக்க முடியவில்லை என்பதால்தான் தேர்தலே ஒத்தி வாய்ப்பு.
சரி.அதுவரை தேர்தல் ஆணையம் பல கோடிகள் செலவிட்டும் தேர்தலையே ஒத்திவைக்க செய்த குற்றவாளியின் மீது இன்றுவரை தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

அவர் மீதும் அவருக்காக பணம் பட்டுவாடா செய்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி,விஜய பாஸ்கர் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்க சொன்னதாம்.தமிழக தேர்தல் ஆணையம் ராஜேஷ் லக்கானி தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி விட்டாராம்.
இதுதான் தினகரன் பழைய பணப்பட்டுவாடா மீது எடுத்த நடவடிக்கை.அவ்வளவுதான்.


இந்த பணப்பட்டுவாடா குற்றவாளிகள் மீது என்ன நவடிக்கை எடுத்தார்கள் என்பதை கவனிப்பது யார்?
அதைவிட மோசமான இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கை,சென்ற இடைத்தேர்தலையே ஒத்திவைக்க களமிறங்கி பணம் கொடுத்து மாட்டிக்கொண்ட தினகரனை இந்த இடைத்தேர்தலில் நிற்க  எப்படி அனுமதித்தது.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியும் கூட நிற்க அனுமதித்தது என்ன நியாயம்.

கையெழுத்து போட்டுவிட்டு அது என் கையெழுத்தில் என்றும் அதன் பின் மதுஸுதனன் மிரட்டலில் அப்படி சொன்னேன் என்றும் அதன் பின்பும்  தான் கையெழுத்திடவில்லை என்ற திலீப்பின் வாக்குமூலத்தை வைத்து நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்த ஆணையம் அதை விட  மிகப்பெரிய தவறை,சென்ற தேர்தலையே ஒத்தி வைக்க காரணியான தினகரனை போட்டியிட அனுமதித்தது ஏன்?
ஆக தினகரன் அதன் பின்னராவது நாணயமாக நடந்தாரா ?என்றால் இல்லைதான் .
குக்கரில் பணம் கொடுக்கிறார் என்ற குற்ற சாட்டு.

அவர் சார்பாக ,அதிமுக சார்பாக பணம் கொடுத்தவர்களை திமுகவினர் ,தேர்தல் பார்வையாளர்கள் பிடித்து கொடுத்தால் அவர்களுடன் வாக்குவாதம் செய்து பொதுமக்களே விடுவிக்க வைக்கிறார்கள்.சாலை மறியல் முதல் காவல் நிலையம் முற்றுகை வரை.

காரணம் அடுத்தவீடு வரை வாக்குக்கு 6000 கொடுத்து விட்டு 4 வாக்குகள் இருக்கும் தன வீட்டுக்கு கொடுக்கவிடாமல் செய்வது சரியா?24000 என்றால் சும்மாவா?என்ற வயிற்றெரிச்சல்தான்.

மக்களை இந்திய வாக்காளர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்?தேர்தல் ஆணையம்தான்.
ஏழைகள் நிறைந்த இந்தியாவில்,அதுவும் அன்றாட வேலைக்காரர்கள் வாழும் தொகுதியில் இது போன்று நடக்கத்தான் செய்யும்.காரணம் இது அவர்களின் இரு மாத சம்பளத்தை விட அதிகம்.

அதிலும் தினகரன் இன்றைய தேர்தலில் வாக்குக்கு  பணம் கொடுத்தலில் புதிய வழிகாட்டலை காட்டியுள்ளார்.அதற்கு ஹவாலா முறை என்று பெயர். இதுவரை கடைபிடித்த அழகிரியின் திருமங்கல முறையை விட இது கொஞ்சம் பாதுகாப்பு.

தேர்தலுக்கு முன்னர் வரிசை எண் உள்ள இருபது ரூபாய் தாள்களை வீடுகளுக்கு கொடுப்பது என்ன வெறும் இருப்பதா என்றவர்களை "குக்கருக்கு வாக்களித்து விட்டு அதை அலைபேசியில் சத்தியத்துடன் 20 ரூ தாளின் எண்களை  சொல்லி விட்டு  (ஹவாலா முறையில்) வந்து அந்த எண் 20ரூபாயை கொடுத்து விட்டு6000த்தை  வாங்கி செல்லாம் என்ற எளிய உத்திரவாதம்தான்,உதய சூரியன்,இரட்டை இலையை விட்டுவிட்டு குக்கரை நோக்கி பலர் கைகளை திருப்பி உள்ளது.


வாக்களிப்பு அன்றே பணம் பட்டுவாடா ?இப்போ என்ன செய்வீங்க என்பதுதான் தினகரனின் ஹவாலா பாணி .
இதற்கு அவரின் அந்நிய செலவாணி மோசடி பணம் அந்நிய நாடுகளுக்கு மாற்றிய அனுபவம்தான் காரணமாக இருந்திருக்கும்.
100ரூபாய் பிரியாணி பொட்டலுத்துக்காக மட்டுமே  வெயிலில் ஜெயலலிதா வருகைக்காக காத்து தங்கள் உயிரை இழக்கும் அளவு இருந்த  மக்களுக்கு இது எவ்வளவு எளிமையான பணவரவு.

வாக்காளர்களை   வாங்காதே கைது என்று தடுக்கும் ஆணையம் கொடுப்பவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பார்த்தால் பெரு வட்டம்தான்.

தேர்தல் அறிவித்ததுடன் தேர்தல் ஆணையம் தனது பணியை எந்த சமரசமும் இல்லாமல் செய்தாலே போதும்.
தீவிரவாதம் தலைதூக்கியுள்ள காஷ்மீர் ,நக்சல்பாரிகள் கைவசமுள்ள பகுதிகளில் எல்லாம் கூட தேர்தலை நடத்திக்காட்டியதுதான் இந்த தேர்தல் ஆணையம் அதற்கு ஆர்.கே.நகர் எல்லாம் சும்மாதான்.
அங்கு தேர்தலை நடத்த ஏன் இவ்வளவு திணறல்.?
ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிடுகையில் ஆளுங்கட்சிக்கு  அனுமதித்த விதி மீறல்கள் அனுமதித்தான் தொடர்கிறது.

இனி தேர்தல்களை ஒழுங்காக நடத்த முடியாதா?
கண்டிப்பாக முடியும்.அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தேவை சேஷன் போன்ற முதுகெழும்பு.

தேர்தல் அறிவிக்கும்போதே எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள்,காவலர்கள் பட்டியலை கொடுக்கிறது.
ஆனால் அந்த பட்டியலை ஆணையம் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறது.காரணம் சிலருக்கு ஆதரவான அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தில் இருப்பதுதான்.

தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்தாலும் அதே நிலைதான்.காரணம் மோடியின் நண்பர்,அவர் குஜராத் முதல்வராக இருக்கையில் உதவியாளர் என்பது  போன்ற காரணத்தால் தலைமைக்கு வந்த ஜோதி போன்றோரால் தான்.

தேர்தல் நடைமுறை வந்தவுடனே எதிர்க்கட்சிகள் இலக்கண அதிகாரிகளை மாற்றினால் போதுமே.மற்றவர்களுக்கு ஒரு ஒழுக்க உணர்வு வந்துவிடுமே.

அதைவிட்டு,விட்டு  இப்போதைய ஆர்.கே .நகர் தேர்தலில்  தேர்தல் நடக்க ஒருநாள் இருக்கையில் துணைக்காவல் ஆணையரை மாற்றியதுபோல் பெயரளவில் மாற்றுவது என்ன பயன்.
எல்லா சட்டவிரோதங்களும் நடந்து முடிந்திருக்கும்.
குதிரை திருட்டு போன பின் லாயத்தை மூடி பூட்டு போடுவதால் என்ன பயன்.
 சென்ற முறை தேர்தலை நடத்தமுடியாமல்  ஒத்திவைக்க அறிக்கை விடுத்த பிரவின் நாயரையே கொண்டுவந்து என்ன சாதித்தது ஆணையம்?

 நாலாயிரம்,12000 வரை அதிகரித்ததுதான் லாபம்.

இந்த முறை அதிகம் பணம் பட்டுவாடா என்று பார்வையாளர்கள் அறிக்கை தந்த பின்னரும்.தேர்தலை ஒத்திவைக்காமல் "சவாலாக ஏற்று தேர்தலை நடத்துவோம் "என்பது எவ்வளவு பெரிய மக்காளாட்சி ஏமாற்று வேலை.

இந்திய தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொள்வதால் மக்களாட்சி,வாக்குப்பதிவுகள் எல்லாமே ஊழல் கறைபடிந்து மறைந்து போகும்.
இதே நிலை தொடர்ந்தால் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக நடந்து கொண்டால் இனி மக்கள் வரிப்பணத்தை கொட்டி நடக்கும் தேர்தலே வேண்டாம்.தொகுதிகளை ஐந்தாண்டுகள்  குத்தகைக்கு சீலிட்ட உறை யில் கேட்பு முறை வைத்து விடலாம்.
அதிக பணம் கொடுப்பவர்களுக்கு தொகுதி.அரசுக்கு வருமானம்.

இவ்வளவு நோகலுக்கும் காரணம் சமீபகால இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்தான்.

இமாசல பிரதேச தேர்தலுடன் நடக்க வேண்டிய குஜராத் தேர்தல் தேதியை பிரதமர் மோடி குஜராத்துக்கு பல சலுகைகள் அறிவித்தப் பின்னர் அறிவித்தது.

பரப்புரை முடிவில் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்ததற்காக ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டது.
ஆனால் அதே போல் பேட்டி கொடுத்த பாஜக தலைவர்கள் அருண் ஜெட்லீ ,ராஜ்நாத் சிங்குக்கும் விளக்கம் கேட்காதது.


தேர்தலில் வாக்களித்து விட்டு கையை காட்டிக்கொண்டு ஊர்வலமாகப் போன பிரதமர் மோடியை எந்த கேள்வியும் கேட்காமல்,நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
என்று பல.
ஆனால் தேர்தல் ஆணைய ஒருபக்க சார்பை மக்களிடம் வெட்டவெளிச்சமாக்கியது "மோடி,அருண் ஜெட்லீ,ராஜ்நாத் சிங் மீது ராகுல்காந்தி போன்று நடவடிக்கை எங்கே" என்று காங்கிரஸ் கேட்டவுடன்
அவசரமாக ராகுல்காந்தி மீதான விளக்கம் கேட்பை திரும்ப பெற்ற இந்திய தேர்தல் ஆணைய செயல் தான்.

ஆனால் வாக்குக்கு காசு கொடுப்பவர்களை தடுக்க முடியாமல்,அப்படி கொடுத்து தினகரன் போல் மாட்டிக்கொண்டவர்கள் மீதும் கூட  நடவடிக்கையே எடாமல் "வாக்களிக்க காசு வாங்குபவர்களை கைது செய்ய ஆலோசிக்கிறோம்" என்ற ஆணைய அறிவிப்புதான் ஆணையத்தின் கையாலாகத் தனத்தை காட்டுகிறது.

காசு கொடுக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணையத்தை மதித்து சொல்லும் கட்சிகளுக்கு "திமுக காசு தராது" என்று பகிரங்கமாக அறிக்கை விட்ட ஸ்டாலினை பாராட்டி ஆர்.கே .நகர் மக்கள் கொடுத்தது போல் அதிகம் கொடுத்த சுயேச்சைக்கு முதலிடமும் பரவாயில்லாமல் கொடுத்த அதிமுகவுக்கு இரண்டாம் இடமும், கையை விரித்து மட்டுமே காட்டிய திமுகவுக்கு மூன்றாம் இடமும் என்ற நிலைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

ஐ சிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் கணவரின் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடியை முறைகேடாக வ...