புதன், 6 டிசம்பர், 2017

25 ஆண்டுகள் நிறைவு


மத நல்லிணக்கம் இடிப்பு -
.

1. நூற்றாண்டுப் புகைச்சல்
பாபரின் ஆணைப்படி அயோத்தியின் கவர்னர் மீர் பகியால் 1528-ல் பாபர் மசூதி கட்டப்பட்டதாக அங்கு பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. அதற்கு அடுத்த ஆண்டே அங்கு இந்து - முஸ்லிம் உரசல்கள் தொடங்கின. ஒருவகையில் இது பல நூற்றாண்டுப் புகைச்சல்!
               

2. வேலி வைத்த பிரிட்டிஷ் அரசு
பிரிட்டிஷ் நிர்வாக அதிகாரிகள் 1859-ல் மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவும் வெளியே இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதித்தனர். இரண்டு பகுதிகளுக்கும் இடையே வேலி அமைத்தனர்.
3. அனுமதி மறுத்தது நீதிமன்றம்
ராமருக்குக் கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று மஹந்த் ரகுபீர் தாஸ் என்பவர் தொடுத்த வழக்கை 1885-ல் தள்ளுபடிசெய்தது பைஸாபாத் மாவட்ட நீதிமன்றம்.
4. மூடப்பட்டது பள்ளிவாசல்
1949 டிசம்பர் 22-ல் பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலைகள் வைக்கப்பட்டன. அதற்கு அடுத்த நாளே இதையே காரணமாக்கி, மாவட்ட நீதிபதி கே.கே.நாயர் அந்த இடத்தைச் சர்ச்சைக்குரியதாக அறிவித்துப் பள்ளிவாசலை மூடச் சொல்லி உத்தரவிட்டார்.
5. சிலை வழிபாட்டுக்கு அனுமதியில்லை
1950, ஜனவரி 18-ல் கோபால் சிங் விஷாரத் என்பவர் ராமர் சிலைகளை வழிபட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
6. ராமருக்குக் கோயில்?
சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் 1984-ல் அறிவித்தது.
7. இந்துக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் நீதிபதி
1986-ல் பூட்டிக் கிடந்த இடத்தைத் திறந்துவிட வேண்டும், அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற இந்துக்களின் கோரிக்கையை மாவட்ட நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதற்கு எதிர்வினையாக, முஸ்லிம்கள், பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவைத் தொடங்கினார்கள்.
8. தேர்தல் அஸ்திரம்
சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு அருகே ராமர் கோயில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் 1989-ல் அடிக்கல் நாட்டியது. அந்த ஆண்டு நடந்த உ.பி. தேர்தலில் பாஜக பாபர் மசூதி பிரச்சினையைக் கையிலெடுக்கிறது.
9. தொடங்கியது ரத யாத்திரை
1990 செப்டம்பரில் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி நாடு தழுவிய அளவில் ரத யாத்திரையை மீண்டும் தொடங்கினார்.
10. ஒத்திகை
1990-ல் மசூதியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டன. அப்போதைய பிரதமர் சந்திரசேகர் மேற்கொண்ட சமரச முயற்சிகள் தோல்வியடைந்தன.
11. கையில் வந்தது அதிகாரம்
1991-ல் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது. பாபர் மசூதி விவகாரம் கொதிநிலையை அடைந்தது.
12. தகர்ந்தது மத நல்லிணக்கம்
பாஜக, விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா எனப் பல அமைப்புகள் பாபர் மசூதி விவகாரத்தில் ஒன்றுசேர்ந்தன. 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதையொட்டி நடந்த கலவரங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

13. விசாரணைக் குழு
மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க 1992 டிசம்பர் 16-ல் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.லிபர்ஹான் தலைமையிலான ஆணையத்தை அமைத்தது நரசிம்ம ராவ் அரசு.
14. தடைபட்டது குற்ற வழக்கு
மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை லக்னோ நகர சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தன்னைக் கலந்தாலோசிக்காமல் உத்தர பிரதேச மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பாணையைச் செல்லாது என்று 2001 பிப்ரவரி 12-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்தது.
15. தூண்டிவிட்டால் குற்றம் இல்லை?
2001 மே 4-ல், உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, இந்த வழக்கு விசாரணையிலிருந்து அத்வானி மற்றும் அவருடன் சேர்ந்த ஏழு பேர் உட்பட மொத்தம் 21 பேரை விலக்கி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையை மட்டும் தொடரலாம் என்றது.
16. கிடப்பில் போடப்பட்ட விசாரணை
2001 ஜூன் 16-ல், உயர் நீதிமன்றத்தைக் கலந்தாலோசித்து விசாரணைக்கான ஆணையைப் பிறப்பிக்கும்படி, உத்தர பிரதேச அரசை சிபிஐ கேட்டுக்கொண்டது. ஒன்றே கால் ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, மாநில அரசு இதை 2002 செப்டம்பர் 28-ல் நிராகரித்தது. 2010 மே 22-ல் இந்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த மறுபரிசீலனை கோரும் மனு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 9 ஆண்டுகள் விசாரிக்கப்படாமலேயே இருந்து, பின்னர் நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ நீண்ட காலத் தாமதத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவைப் பரிசீலிக்க உச்ச நீதிமன்றமும் கணிசமான காலத்தை எடுத்துக்கொண்டது.
17. தீவிரவாதத் தாக்குதல்
2003 ஆகஸ்ட்டில், சர்ச்சைக்குரிய இடத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

18. நீதிமன்ற இழுபறி
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்தவர்களைத் தூண்டிவிடும் வகையில் எல்.கே.அத்வானி பேசியதற்காகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து 2003 செப்.19-ல் அவரை ரேபரேலி தனி நீதிமன்றம் விடுவித்தது. அப்போது அவர் துணை பிரதமர். அத்வானியை விடுவித்து ரேபரேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, 2005 ஜூலை 6-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரத்துசெய்தார்.
19. திட்டமிட்டு நடந்த செயல்
எம்.எஸ்.லிபர்ஹான் குழு, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தம் 399 அமர்வுகளுக்குப் பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 1,029 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஜூன் 30, 2009-ல் அளித்தது. அவ்வறிக்கையின்படி, பாபர் மசூதி இடிக்கப்பட்டது தன்னிச்சையானது அல்ல, திட்டமிடப்பட்டதே என்று தெளிவானது. வாஜ்பாய், அத்வானி, சுதர்ஸன், கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 68 பேர் குற்றவாளிகள் எனவும் அந்தக் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியது.
20. மூவருக்கும் ஒரு பங்கு
சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு உரிமையுள்ளது என்று 60 ஆண்டுகள் நடந்த வழக்கில் 2010, செப்டம்பர் 30-ல் இடத்தை மூன்றாகப் பிரித்து முஸ்லிம்கள், இந்துக்கள், நிர்மோகி அகாரா ஆகிய மூன்று பிரிவினருக்கும் ஒவ்வொரு பகுதியைப் பிரித்து வழங்க உத்தரவிட்டது அலகாபாத் உயர் நீதிமன்றம். முன்பு, மசூதியாக இருந்த பகுதி இந்துக்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
21. தீர்ப்புக்குத் தடை
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் செய்த மேல்முறையீட்டின்படி 2010-ம் ஆண்டின் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்து 2011-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
22. தொடரும் சர்ச்சை
2015, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்து நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தைத் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில், இரண்டு டிரக்குகளில் செங்கல் ஏற்றப்பட்ட வாகனம் அங்கு சென்றது. ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகியான மகந்த் நிருத்திய கோபால் தாஸ், ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். ஆனால், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேச அரசு, கல் ஏற்றப்பட்ட வாகனங்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் நுழைவதற்கு அனுமதிக்கவில்லை.
23. அத்வானியின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி
2017 மார்ச் 6-ல் நீதிபதிகள் பி.சி.கோஷ், நாரிமன் அடங்கிய அமர்வுக்கு முன்பு பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அத்வானிக்கு எதிரான வழக்கைக் கைவிடக் கூடாது, தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, இந்த வழக்கு வேகம் எடுத்துள்ளது. அத்வானி குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீண்டும் விரைவுபடுத்தப்பட்டதால் அதோடு அத்வானியின் அரசியல் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
24. பேச்சுவார்த்தையில் முடித்துக்கொள்ளுங்கள்...
2017 மார்ச் 21, பாபர் மசூதி விவகாரம் தரப்பினர்களிடையே எளிதில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடிய ஒரு விஷயம். எனவே, நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தையின் மூலமாக சமரசத் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். ஆகஸ்ட் 11 அன்று கூடிய உச்ச நீதிமன்ற அமர்வு, விசாரணையை 2017, டிசம்பர் 5-க்குத் தள்ளிவைத்தது.
25. இரண்டு ஆண்டுகளுக்குள் முடியுமா?
2017, ஏப்ரல் 19-ல் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அறிவிப்பாணை குறைபாட்டைச் சரிசெய்ய மாநில அரசு தவறிவிட்டது, அதை எதிர்த்து சிபிஐயும் வழக்காடவில்லை” என்பதைச் சுட்டிக்காட்டியது. அத்வானி மற்றும் ஏழு பேர் மீதான வழக்கை ரேபரேலியிலிருந்து லக்னோ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதோடு, இரண்டாண்டு காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் இறுதிக்கெடு விதித்துள்ளது.
                                                                                                                                                                   - தொகுப்பு: செல்வ புவியரசன்
ன்றி:தமிழ் இந்து 
          பாஜக,அதிமுகவினருக்கும்  இடதுசாரிகளுக்கும் உள்ள நிர்வாக வித்தியாசம் இதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...