சனி, 19 மார்ச், 2016

பாரத் மாதா பச்சாக்கள்,,,?

காலை எழுந்தவுடன் நீங்கள்  'பாரத் மாதாக்கி ஜெ " என்று மூன்று முறை பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்கும் படி சொல்லித்தொலையுங்கள் .


இல்லாவிட்டால் 'காபி தா"என்று உங்கள் மனைவியிடம் சொல்ல நாக்கு இருக்காது.
இந்திய பாரத மாதா பக்தர்களால் நாக்கு அறுக்கப்பட்டிருக்கலாம்.
உங்கள் டூத் பேஸ்டில் உப்பு,கரி இல்லாவிட்டால் ஒடி வருவதை விட பாரத மாதா பக்தர்கள் வேகம் அதிகம்.

நம் தமிழ் நாட்டில் உள்ள அம்மா பக்தர்களிடம் பேசும் போது எப்படி நாமும் அம்மா என்று மனசாட்சிக்கு விரோதமாக சொல்லித்தொலைக்க வேண்டியிருக்கிறதோ அதை விட பாரத் மாதா பக்தர்களிடம் அதக கவனமாக இருக்க வேண்டும் .

காரணம் ஆட்டுக்கறியை சமைத்தவரையே மாட்டுக்கறி சமைத்ததாக கூறி கோமாதா வழியே சிவலோகம் போக வைத்த கூட்டம் இது.

ஆளும் இந்து இந்திய பிரதமர் மோடியின் 100% ஆதரவு பெற்ற காவிக்கும்பல் இது.

சரி இந்த பாரதமாதா,பாரதமாதா என்கிறார்களே அவர் யார் என்று உங்களுக்கு ஒரு அநியாயமான சந்தேகம் வந்திருக்கலாம்.

பொதுவாகவே ஒவ்வொருவரும் தங்கள் நாட்டை  தாய் திரு நாடு என்றுதான் சொல்லுகிறார்கள் .உலகம் முழுக்க இதுதான் பழக்கம்.யாரும் தந்தை திரு நாடு என்று சொல்லுவதில்லை.நோர்வேயோ,பின்லாந்தோ தான் தந்தை நாடு என்பதாக கேள்வி.

அப்படி விடுதலை போராட்டம் குமுறி எழுந்து நடந்து கொண்டிருந்த போது "தாய் நாட்டை பரங்கியர் கையில் இருந்து காப்பாற்ற குரல்கள் ஒழித்த போது "நம் பாரத தேசம்,தாய் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற கூப்பாடுகள் எழுப்பப் பட்டன.[சிலர் இதை கோஷம் என்பார்கள்.]

அப்போதுதான் அப்போதிருந்த மோடி போன்றோரின் காவி முன்னோர்கள் இடைச்செருகலாக பாரத நாட்டையும் ,தாய் நாட்டியும் இணைத்து பாரத மாதாக்கு ஜே வை உண்டாக்கி அதையே தேசத்தின் விடுதலை குரலாக ஒழிக்க வைத்தார்கள்.அதற்கு மாற்றாக  மற்றொரு வார்த்தையும்" வந்தே மாதரம்" என்று எழுப்பப்பட்டன.
பாரத மாதாகீ ஜே மற்றும் வந்தே மாதரம் என்பது பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்த பயன்படவில்லை; 

மாறாக நாட்டு மக்கள் இந்துக்கள்,முஸ்லீம்கள்,கிருத்துவர்கள் ஒன்றுபடுவதை தடுத்து சிறுபான்மையினரை பிளவு படுத்தவே பயன்பட்டது என்று வரலாற்று நிபுணர்கள் கருத்தாக் உள்ளது. 

வரலாற்று நிபுணர்கள் எரிக் ஹாப்ஸ்வம் உள்ளிட்ட பல வரலாற்றியல் அறிஞர்கள், வரலாற்று ரீதியாக இந்த கோஷம் எதனால் வந்தது என்றும் அதனால் இதுவரை என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆதாரத்துடன் கருத்துக்களை கூறியுள்ளனர். 
அவர்கள் கூறியுள்ளதாவது:பாரத மாதா என்பதும் வந்தே மாதரம் என்பதும் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தின. 

1875ல் வங்கக் கவிஞர் பக்கிம்சந்திர சட்டர்ஜி வந்தே மாதரம் என்ற பாடலை எழுதினார். அந்த பாடல் பெண் இந்து தெய்வம் துர்க்காவைப் போற்றி இந்திய நாட்டை அந்த துர்க்கையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும்.

இந்திய நாட்டை பாரத மாதா என்றும் அவளின் குழந்தைகள் அவளின் துயர்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற வேதனையை வெளிப்படுத்தியும் அந்நியருக்கு எதிராக விழிப்படைந்து கிளர்ந்தெழ வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 

இந்திய நாட்டின் தேசிய உணர்வை இந்து மத உணர்வுடன் அதனடிப்படையிலான தேசியமாக சுருக்கி பார்த்தது. இதனால் இயல்பாக அனைத்து சிறுபான்மையினரையும் இந்த கோஷமானது ஒருங்கிணைக்க முடியவில்லை. 

பாரத மாதா என்பதே மதவாத அடிப்படையை கொண்டிருந்ததால் 1937ல் தேசிய கீதத்தை எழுதிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர், அன்றைய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருக்கு மத அடிப்படையை கொண்டுள்ளதால் வந்தே மாதரத்தை தேசிய கீதமாக கொள்ள முடியாது என்று கடிதம் எழுதினார். 

வந்தே மாதரத்தின் அடிப்படை பெண் தெய்வமான துர்க்கையைப் போற்றிப் புகழ்வதாக உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

சாவர்க்கர்
இதனால் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தமதத்தினர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. 

இதனால் தாகூரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு வந்தே மாதரத்திலுள்ள மத அடிப்படையிலான கருத்துக்களை காங்கிரஸ் நீக்கியது.

ஆர்எஸ்எஸ் தலைவர் வினாய் சாவர்க்கர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அவர்கள் இந்திய தேசத்தை இந்து தெய்வத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவே விரும்பினர். 

1923ல் இந்துத்துவா கோட்பாடு உருவாக்கப்பட்டது. 

சாவர்க்கர் தனது இந்துத்துவ தேசியம் குறித்த நூலில் தேசியத்தை மதத்தின் அடையாளமாகவே உருவாக்கினார். 

`இந்திய நிலமானது புனிதமானது, அதில் இந்துக்களுக்கு மட்டுமே இடமுண்டு.
அதனால் இந்துஸ்தான் ஆகிறது. மற்ற நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து குடியேறியவர்களுமான கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இந்திய நாட்டினர் அல்ல. 

எனவே இந்துஸ்தான் என்பது புனிதமான தெய்வத்தின் மகள் ஆகும்‘ என்று அவர் எழுதினார். இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பக்கிம் சந்திராவின் பாரத மாதா அடையாளத்தை பெரிதாக்கினர். 

ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் பாரத மாதா தேசிய கொடியை அல்ல, காவிக் கொடியை ஏந்திய பதாகைகளுடன்தான் தொடங்குவர். 

அது இன்று வரை தொடர்கிறது. 

எனவே பாரத மாதாகீ ஜே என்பதும் வந்தே மாதரம் என்பதும் இந்துத்துவா சிந்தாந்தத்தின் அடித்தளமாகும். 

இதற்கும் இந்திய தேசத்துக்கும் ,தேச பக்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

விடுதலை பெற்ற பின்னர்  காங்கிரசு ஆட்சிக்கு வந்ததால் அடங்கிக்கிடந்த ஆர்.எஸ்.எஸ்,காவிக் கும்பல் தற்பொது அவர்களின் அரசியல் வடிவான பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தூங்கிக்கொண்டிருந்த பாரத மாதாவை குரல் எழுப்பி விழிக்க வைக்கிறார்கள்.

இவர்கள் கோட்டம் முந்தைய வாஜ்பேய் பாஜக ஆட்சியில் இவ்வளவு இல்லை.மோடி வந்தவுடன் இப்படி காவிக்கொடியுடன் துள்ளுகிறார்கள்.இரண்டு காரணங்கள்தான் அதற்கு.
1.வாஜ்பேய் மித காவிக்காரர்.அத்துடன் அவர் அரசு  சிறும்பான்மை அரசு.அவர் ஆட்சி செய்ய  பக்கபலமாக நின்றவர்கள் திமுக உட்பட்ட மதச்சார்பற்ற கட்சியினர்.அவர்களை மீறி காவிக்கும்பலால் ஒன்றும் செய்ய இயலவில்லை.அடக்கி வாசித்தது.

2.மோடி காவியிலேயே ஊறி அதையே தனது நிறமாக்கிக்கொண்டவர்.இந்திய மக்கள் கொடுத்த அசுர பெரும்பான்மை.

 சில நாட்களுக்கு முன்னர் பாரத மாதாகீ ஜே என்று கூக்குரல்  போட மறுத்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் மஜ்லீஸ் இ இத்தாத் முஸ்லீமான் என்ற கட்சியைச் சேர்ந்த வரிஸ் பதான் என்ற எம்எல்ஏ வை இடை நீக்கம் செய்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பேர் வழிகள் பாரத் மாதாக்கி  ஜே என்று கோஷம் போட மறுப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இங்குள்ள முஸ்லீம்கள்,கிருத்தவர்களை பாபர் கால வந்தேறிகள் என்று சொல்லும் காவிகள் ராமர் காலத்தில் கைபர் கனவாய் வழியே ஆப்கானிஸ்தான்,பாரசீகம் போன்றவற்றில் இருந்து சற்று முன்னதாக வந்தேறியவர்கள்தானே.

உண்மையான பாரத் மாதா பச்சாக்கள் திராவிடர்கள்தானே.வரலாறு காவிகளுக்கு மட்டுமல்ல.மற்றவர்களுக்கும்தெரியும்.வெறும் ராமாயானமும்,மகாபாரதமும் மட்டுமே இந்திய வரலாறு கிடையாதுங்க.

"சங்கறுப்பது எம் குலம் ,சங்கனாருக்கு ஏது குலம்' என்ற நக்கீரர் நாட்டில் நாக்கறுக்க ஒரு கூட்டமா?

======================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...