திங்கள், 28 மார்ச், 2016

20 மணி நேர உழைப்பும்

 சில குற்றசாட்டுகளும்.

"ஒரு நாளைக்கு 20 மணிநேரம் மக்களுக்காக உழைக்கிறேன் உங்கள் அன்பு சகோதரி"
இது தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்கு மூலம்.

அப்படி அவர் உழைப்பதினால்தான் அவரை கோட்டையில் கூட அத்திப் பூத்தாற்போல் பார்க்க முடிந்தது.
செம்பரம்பாக்கம் சென்னையை அழித்த போது கூட இந்த 20 மணி நேர உழைப்பால்தான் அவரால் வெள்ளச்சேதத்தை பார்க்க கூட வரமுடியாமல் போனதாக மக்கள் நெக்குருகிப் போயிருந்தார்கள்.
இந்த அத்திப் பூ விவகாரத்தை தொல்லைக்காட்சியில் சொன்னதால்தான் நாஞ்சில் சம்பத் கூட சிறிது ஓய்வு எடுக்க,காத்திருக்கவும்  கொட  நாட்டுக்கு மன்னிக்கவும் நாஞ்சில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் ஜெயலலிதா இப்படி உழைத்தும் கூட எப்போதும் நட்புறவில் இருக்கும் பாஜகவை ச் சேர்ந்த  அமைச்சர் ஒருவர்  மின் அதிர்ச்சியை தந்து:ள்ளார்.
அமைச்சர் பீயுஷ் கோயல்
டில்லியில், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு நடத்திய, 'யங் இந்தியா' மாநாட்டில், மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், '28 மாநில முதல்வர்களை சந்தித்துவிட்டேன்; தமிழக முதல்வரை மட்டும் சந்திக்கவே முடியவில்லை. 

பல முறை முயற்சி செய்த பின், அவரிடம் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்பு தான் வந்தது' என்று சோகப்பட்டார்.ஆட்டோ வராமல் அலைபேசி வந்ததற்கு ஆனந்தமல்லவா கொள்ள வேண்டும். 
தமிழகத்தில், முதல்வர், அலுவலகம் செல்வதே ஒரு பெரிய நிகழ்ச்சியாக கடந்த, ஐந்தாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அவரை வரவேற்க அமைச்சர்கள் அணிவகுப்பு என்ன, பூங்கொத்துக்கள் என்ன என்று, மகாமகத்திற்கு நிகரான அரிய நிகழ்ச்சியாக தான் கையாளப்பட்டு வருகிறது. 
அப்படி அலுவலகம் வந்தாலும், சராசரியாக, அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை தான் அலுவலகத்தில் இருப்பார்.

அமைச்சர்களின் ஐவர் அணி, அதிகாரி களின் மூவர் அணி, முதல்வரை பார்க்க அனுமதியுள்ள நம்பர் 1, 2, 3 அதிகாரிகள் என, முதல்வரின் சிறிய சந்திப்பு வட்டம் பற்றி பல்வேறு விஷயங் கள் ஏற்கனவே எழுதப்பட்டு, அனை வரும் அறிந்த விஷயங்கள் தான். நிலை இப்படி இருக்க, வெளிநாட்டு துாதர்கள், தொழிலதிபர் கள் என, எந்த கொம்பனாலும் முதல்வரை பார்க்க முடியவில்லை என்ற புகாரும் உள்ளது.

ஆனால், யாருக்கும் இதைப் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு, 'தில்' இல்லைசெம்பரம்பாக்கம் விவகாரத்தில் ஜெயலலிதா வெள்ளச் சேதத்தை எட்டி கூட பார்க்காததற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 
ஆனால்,அரசின்  அவதுாறு வழக்கு மூலம் அவை அமுக்கி வைக்கப்பட்டது. 
இதனால்தான் அதிமுக வழமை படி வாயே திறக்காத கொள்கையுள்ள முன்னாள் டிஜிபி நடராஜ் கட்சியை விட்டு தூக்கப்பட்டார்.ஆனால் அந்த வாய் வேற வாய் என்று தெரிந்து மீளவும் அதிமுகவில் நுழைக்கப்பட்டார்.அதையே சமாளிக்க எதையோ சொல்ல சம்பத் அத்திப்பூக்களைக்காண காத்திருக்க வைக்கப் பட்டார்.
ஆனால், இந்த, 'பார்த்த விழி பார்த்தபடி பூத்திருக்க' பட்டியலில் சேர்ந்துள்ள, மத்திய அமைச்சர் பீயுஷ் கோயல், தேர்தல் நேரமாக பார்த்து முதல்வர் தரிசனம் பற்றி  போட்டு உடைத்து விட்டார். 

இது பற்றி அவர் ஆவேசமாக பேசியது:​ -
"தமிழகத்தை பற்றிநிறைய விஷயங்களை பேசலாம். ஆனால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், சிலவற்றை மட்டும் கூறுகிறேன். 
ஒரு நாட்டுக்குள் தனி நாடாக தமிழகம் செயல்படுகிறது. 
நான் (உதய் மின் திட்டம்) திட்டம் குறித்து, மாநில முதல்வர்கள், மின் துறை அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறேன்.


கடந்த, 22 மாதங்களில், 28 மாநில முதல்வர்களை சந்தித்து உள்ளேன். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்னால், இதுவரை சந்திக்க முடியவில்லை.
தமிழக மின் துறை அமைச்சரிடம் பேசினேன். அவர், 'நான் அம்மாவிடம் பேசிவிட்டு, திரும்ப அழைக்கிறேன்' என்றார். ஆனால், பதில் வர வில்லை.

 அந்த கட்சி எம்.பி.,க்கள், பார்லிமென்டில், வாயை திறப்பதில்லை. அவர்கள் சென்னையில், தணிக்கை செய்து அனுப்பப்பட்ட அறிக்கையை, அப்படியே வாசிக்கின்றனர்.

தெரிந்தவர், அறிந்தவர் மூலமாக சந்திக்க முயற்சித்த பின், ஒரு வழியாக அவர் (ஜெ.,), என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 

அப்போது, நாங்கள் பரிந்துரைத்த திட்டம் குறித்து விவாதிக்க, ஒரு குழுவை அனுப்புவதாக தெரி வித்தார். அதன்படி, அந்த குழு வந்தது. 
மின் துறை சீர்திருத்தம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை, ஒப்பந்தத்தில், தமிழகம்கையெழுத்து இடவில்லை. 
அதேசமயம், எங்களின் அனைத்து விதிகளுக்கும் ஒப்பு கொள்வதாக, மற்ற மாநிலங்கள் உடனடியாக தகவல் தெரிவித்தன. 

உதாரணத்திற்கு, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், எனக்கு கடிதம் எழுதினார். அதில், 'மக்கள் நலனுக்கான திட்டம் என நம்புகிறேன். இதனால், உதய் திட்டத்தில், மகிழ்ச்சியுடன் இணைகிறோம்' என, தெரிவித்திருந்தார்.


பீஹார் தேர்தலில், எங்களை தோற்கடித்த கட்சியின் புதிய அரசு, பதவி ஏற்ற, 15 நாட்களுக்கு உள்ளாகவே, அந்த திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்தது.
இதுபோல், பல்வேறு அரசியல் மற்றும் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், அதை எல்லாம் மனதில் கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், நாங்கள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு உடனடியாக ஒப்பு கொண்டன.

 ஆனால், தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், இது சாத்தியமாகும் போல் உள்ளது"
.இவ்வாறு, மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் பேசினார். 

இது பற்றி, தி.மு.க., தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "'தமிழகத்திலே உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி, அ.தி.மு.க., அரசின் சார்பில் அவ்வப்போது, மத்திய அரசின் அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு பேசினால் தானே, தமிழகத்திற்குத் தேவையானதை செய்ய முடியும். 


மத்திய அரசின் மின் துறை அமைச்சரே முதல்வர் சந்திக்க வாய்ப்பு அளிக்கவில்லை என கூறியதற்கு, முதல்வர் பதில் அளிக்க வேண்டும்' என கிடுக்கிப் பிடியை போட்டுள்ளார்.
தேர்தல் நேரம் இப்படி உற்ற நண்பனான பாஜக அமைச்சரே போட்டுக்கொடுத்தால் எப்படி.
கூட்டணிக்கு வரவைக்கும் அழிப்பாக கூட இது இருக்கலாம்.
ஜெயலலிதா 20 மணி நேரம் உழைப்பு எங்குதான் போய்  சேர்ந்தது.?காலில் விழுந்து கிடப்பதாக எண்ணிய அமைச்சர்கள் தனக்கு தெரியாமல் போட்ட ஆட்டையை கண்டு பிடிக்க இந்த 20 மணிநேரம் உழைப்பு காணாது என்று எதிர்கட்சிகளுக்கும்,மக்களுக்கும் தெரியாமல் போனது ஏன் ?


இதுவரை அரசால் புரசலாக 9000 கோடிகள் மு.முதல்வர்,மின் தடை அமைச்சர் ஆகிய இவர்களிடமிருந்து மட்டுமே கருவூலத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.இன்னும் எத்தனை அமைச்சர்கள் சோதன வரிசையில் இருக்கிறார்கள்.பல முன்னாள்களுக்கும் இந்த சோதனைத்திட்டம் விரிவு படுத்தப் பட வேண்டியுள்ளது.

வெறுமனே இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், மலிவு விலை உணவகம் என, எத்தனை காலம் தான் தள்ள முடியும்? 

மின்சார வாரியத்தின் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனையும், எப்போதாவது அடைத்தாக வேண்டுமே! 
இந்த கடும் உழிப்பின் காலத்தில் போய் முதல்வரை சந்திக்க முடியவில்லை.போனில் ஒருதரம் பேசினார் என்பது சிறுபிள்ளைத்தனம்.


ஒரு முறை முதல்வர் போனில் பேசியதே மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் செய்த முன் வினைப்பயன்.இங்கு வெள்ளத் தண்ணீர் திறந்து விட கோப்புகளுடன் பல நாட்களாக காத்திருப்பவர்களை கேட்டு பாருங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை பற்றி பொறாமைக் கொள்வார் அவர்.

மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல் அவர்களுக்கு தேவை இல்லையென்றாலும் ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் .

அதிமுகவினர்  அலைபேசியில் எம்ஜிஆர்.படப்பாடல்கள் எல்லாம் காலர்டியுனாக இருக்கும்.ஒரே ஒரு பாடலைத்தவிர அது  "தூங்காதே தம்பி தூங்காதே". 

அதில்தானே "பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால், பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா'என்று தேவையற்ற வரிகளை டி .எம்.எஸ் சும் .பட்டுக்கோட்டையாரும் சேர்த்து தொலைத்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...