புதன், 8 ஆகஸ்ட், 2018

கலைஞர் மு கருணாநிதி

 மறைந்து விட்டார். 

கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.
காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. 

மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.

தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.
“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. 
அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.
“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை.
 “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.
அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.
தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.
அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.
பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.
ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? 
ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.

எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.

டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.

1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது.
 அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.

எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. 
அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.

ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. 
“திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.

கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

*****
 கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.

இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.
காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.

கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.

\-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------\
லைஞர் மு கருணாநிதி


1924 ஜூன் 3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம்.

1938: நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.

1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி.
1944 செப்டம்பர்: பத்மாவதி என்பவருடன் திருமணம் நடந்தது. மு.க. முத்து இவர்களின் மகன்.

1948 செப்டம்பர்: முதல் மனைவி மறைந்த நிலையில், தயாளு அம்மாளுடன் இரண்டாவது திருமணம். மு.க. அழகிரி, மு.க. தமிழரசு, மு.க. ஸ்டாலின், செல்வி ஆகியோர் இவர்களது பிள்ளைகள்.

1949 செப்டம்பர் 18: திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் துவங்கப்படுகிறது.

1950: கருணாநிதி கதை-வசனம் எழுதிய, எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரிகுமாரி" திரைப்படம் வெளியானது.

1952: கருணாநிதிக்கு புகழ் தேடித் தந்த, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய `பராசக்தி` படம் வெளியானது.

1953 ஜூலை 14, 15: "டால்மியா" புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும், குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.

1957: குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் மு. கருணாநிதி. இதற்குப் பிறகு போட்டியிட்ட எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.

1959: சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 100-க்கு 45 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, மாநகராட்சியைக் கைப்பற்றியது.

1962: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கருணாநிதி.

1963: திமுக நடத்திய அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற மு. கருணாநிதிக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை.

1965 பிப்ரவரி 16: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பிறகு ஏப்ரல் 15-ஆம் தேதி விடுதலையானார்.

1967: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

1969 பிப்ரவரி 10: அண்ணாவின் மறைவுக்குப் பின் , தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார் கருணாநிதி.

1971 மார்ச் 15: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.

1972 அக்டோபர் 14: திமுக-வில் இருந்து எம்.ஜி. ராமச்சந்திரன் நீக்கப்பட்டார்.

1974 ஆகஸ்ட் 15: மு. கருணாநிதியின் கோரிக்கையின் பேரில், முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் கருணாநிதி.

1976 ஜனவரி 31: கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது.

1986: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, ஈழத் தமிழர் ஆதரவு அமைப்பின் (டெசோ) மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி.

1988: வி.பி. சிங்கை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்ட தேசிய முன்னணியில் இணைந்து, மத்திய கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றது.

1989: எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 3-ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.

1991 ஜனவரி 30: திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
1996: சட்டமன்ற தேர்தலில் வென்று, 4-ஆவது முறையாக தமிழக முதல்வராக கருணாநிதி பதவியேற்றார்.

2001 ஜூன் 30: 2001-இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தது தமிழகக் காவல்துறை. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2006: சட்டமன்ற தேர்தலில், 5-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் கருணாநிதி.

2008-2009: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இந்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை அளிக்கவில்லை என கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

2010 மார்ச்: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் - சட்டமன்ற கட்டடத்தை, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

2010 ஜூன்: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தினார் கருணாநிதி.

2011: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது திமுக.

2013: தனக்குப் பிறகு, தனது அரசியல் வாரிசாக தனது மகனும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இருப்பார் என அறிவித்தார் கருணாநிதி.

2014-16: 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தோல்வியடைந்தது.

2016 அக்டோபர் 25: கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக உறுதிப்படுத்தியது.

2016 டிசம்பர் 1: உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 7ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

டிசம்பர் 15: மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்றுக்காக காவேரி மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டது.

2017 டிசம்பர் 16: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.

2018 ஜூலை 27 நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆகஸ்ட் 7: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.
கலைஞர்  கருணாநிதி முதல்வராக இருந்த, 21 ஆண்டுகளில், 36 அணைகளை கட்டி தமிழக மக்களின் குடிநீர், பாசன தேவையை பூர்த்தி செய்தார்.
 கலைஞர்முதல்வராக இருந்தபோது விவசாயத்தின் மீதும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டினார்.

 தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள், 115. அதில் இந்திய விடுதலைக்குப்  பின், கட்டப்பட்டவை 90.
 ஐந்தாண்டுத் திட்டங்களில் அணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 
அதனால்தான்   காங்., ஆட்சியில், 19 ஆண்டு களில், 25 பெரிய அணைகள் கட்டப்பட்டன. 


ஆனால் 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஐந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன.


முதல்வராக இருந்த 
கலைஞரின்  விடாமுயற்சியால், அவர் ஆட்சி செய்த, 21 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், உப்பாறு, மேல் ஆழியாறு, சோலையாறு, மணிமுக்தா நதி, சிற்றாறு, கீழ்கொடையாறு, மேல்கொடையாறு , கடனா, பரப்பலாறு, ஹைவேவிஸ், மணலாறு, பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, ஆனைக்குட்டம், அடவிநயினார் கோவில், செண்பகத்தோப்பு, இருக்கன்குடி உள்ளிட்ட36 அணைகள் கட்டப்பட்டு அவற்றை பாசனம், குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தேனி மாவட்டத்தில், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கியும், பணிகளை பார்வையிட்டும், திறந்தும் வைத்தார்.
எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆட்சிகளில் ஒரு அணை,மேம்பாலங்கள் ,புதிய சாலைகள் கட்டுமானம் ஒன்றும் நடைபெறவே இல்லை என்பதுதான் உண்மை.
ஜெயலலிதா ஆடசிகாலத்தில் திறந்து வைத்த அரசு  கல்லூரி ,அரசு கட்டிடங்கள்,சாலை எல்லாம் கலைஞர் திட்டம் திட்டி நிதி ஒதுக்கி கட்டப்பட்டவை திறப்பு விழா மட்டுமே பிறர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...