வெள்ளி, 24 ஜூன், 2016

"அமைதி பூங்கா " .

தமிழ் நாட்டின் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக  கூறியுள்ளார்.


ஆனால் தமிழகத்தில் அதிகரித்திருக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலையும் மறுபுறம் பெரும் கவலையையும் தோற்றுவிக்கின்றன. 

ஜெயலலிதா கூறும் அமைதி பூங்காவின் அர்த்தம் விளங்க மாட்டேன் என்கிறது.

தலைநகர் சென்னையிலேயே அடுத்தடுத்து நடந்துவரும் கொலைகள் காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
அதை கட்டுக்குள் வைத்திருக்கும் உள்துறையும் அதனை கட்டுப்படுத்தும் முதல் அமைசர் ஜெயலலிதாவும் என்னதான் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கடசியினர் கருத்துக்களை மறைத்து  தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக என்று பதிவு செய்தால் மட்டும் போதுமா?

காவல்துறையினர் ஜெயலலிதா சிறைக்கு சென்றால் கறுப்புக்கொடி குத்திக்கொள்வதிலும்,வெளியே வந்தால் வாழ்த்து பதாகை வைப்பதிலும் தான் சுறு,சுறுசுறுப்பாக செயல் படுகிறார்கள்.

அதிமுகவில் சட்டமன்ற தொகுதி கேட்டு காவல் ஆய்வாளர்கள் விண்ணப்ப மனு கொடுக்கிறார்கள்.
ஜெயலலிதா தொகுதியில் கரை வேட்டியுடன் விடுப்பு போட்டு வாக்கு சேகரிக்கிறார்கள்.ஆனால் கொலை,கொள்ளை தடுக்க அவர்கள் செய்வது ?

ஒன்றும் இல்லை.
பைக்,இன்னோவா கார்களில் வந்து கொலை செய்து,கொள்ளையடித்து விட்டு செல்லும் குற்றவாளிகளை பிடிக்க காவலர்களுக்கு சைக்கிள் வழங்குகிறது அரசு.
இந்த சைக்கிள் வைத்து குற்றவாளிகளை என்றைக்கு பிடிப்பது.இதனால் ஒரே நன்மை.காவலர்களின் தொப்பை குறையும்.

சென்னையில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் நான்கு வழக்கறிஞர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதேபோல தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

ஓசூரில் தலைமைக் காவலர் ஒருவரே, கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்.
சென்னையில் ஜூன் 6-ம் தேதி கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் முருகன், 8-ம் தேதி வடபழநியில் வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ், 15-ம் தேதி புழலில் வழக்கறிஞர் அகில்நாத், 22-ம் தேதி வியாசர்பாடியில் ரவி என்று விழும் கொலைகள் ஒவ்வொன்றின் பின்னணியும் வெவ்வேறானவையாக இருக்கலாம். ஒரு விஷயம் பொதுவானது: 

கூலிப் படையினர் எந்தப் பயமும் இல்லாமல் அனாயாசமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றனர்.
பொதுவில், ஆத்திரத்தில் அவசரப்பட்டுத் தாக்கிவிடுவதையோ அல்லது விபத்தாகவே மரணம் நேர்ந்துவிடுவதையோதான் பெரும்பாலான கொலைகளின் பின்கதைகளாக நம்மூரில் பார்த்துவந்திருக்கிறோம். 

ஒருகாலத்தில் அரசியல்வாதிகளும் ரௌடிகளும் தமக்குள்ளான ‘தொழில் போட்டி’யில் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திவந்த, நிழல் உலகம் மட்டுமே அறிந்த கூலிப் படையினரை இப்போது சாதாரணர்களும் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பது அபாயகரமானது.

சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் செயல்பாட்டாளர் ஒருவர் கூலிப்படையால் கொல்லப்பட்ட வழக்கில், மதுரை உயர் நீதிமன்றம் முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்தது. “
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம் இவற்றில் கூலிப்படையினரின் தொடர்பு பற்றி தமிழக உள்துறைச் செயலரும் காவல் துறைத் தலைவரும் அறிக்கை தர வேண்டும்” என்று சொன்ன நீதிமன்றம், “ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பொது அமைதி கெடும். 

கூலிப்படைகளை ஒடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏதேனும் உள்ளதா?” என்றும் அப்போது கேள்வி எழுப்பியது.

இதன் தொடர்ச்சியாக, கூலிப் படையினரைக் கண்காணிப்பதற்காக காவல் துறைத் தலைமை அலுவலகத்தில் தனியாக ஒரு பிரிவும் அப்போது தொடங்கப்பட்டது. 
எனினும், இந்தப் பிரிவு உண்மையில் இப்போது எப்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, கூலிப் படையினரை ஒடுக்க அது தொடர்ந்து மேற்கொண்டுவரும் செயல்திட்டம் என்னவென்பது எல்லாம் பொதுச் சமூகத்துக்குத் தெரியாததாகவே இருக்கிறது.
கூலிப்படைகள் போன்ற நிழலுலகச் செயல்பாடுகள் காலம் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கக் கூடியவை. குற்றங்கள் நடக்கும்போது களம் இறங்கிச் செயல்படுவதில் அல்ல; 

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணிப்பதும் உளவறிவதும் முன்கூட்டிச் செயல்படுவதும் குற்றங்களைத் தடுப்பதுமே நல்ல காவல் பணிக்கான இலக்கணம். ஆட்சியாளர்களையும் அரசியல் கட்சிகளையும் பொறுத்த அளவில் கொலை, கொள்ளைகள் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையாக இருக்கலாம்; மக்களைப் பொறுத்த அளவில் இது உயிர்ப் பிரச்சினை. தமிழக முதல்வர் நேரடியாகவும் உடனடியாகவும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விவகாரம் இது. 

ஆனால் ஜெயலலிதாவோ அமைதி பூங்கா கனவில் அதை கண்டு கொள்வதில்லை.காவலர் ஒருவரை  குற்றவாளியே குத்தி கொலை செய்ததற்கு காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பது அமைதி பூங்காவில் நடக்கும் செயல்களோ?

காவல் துறை விரிவான திட்டமிடல்களுடன் களம் இறங்க வேண்டும். 

குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும்!

காவல்துறை அதிமுக கட் சியின் ஒரு கிளை அமைப்பாக செயல்படுவதை உடனே  வேண்டும்.

ஜெயலலிதாவின் புகழ் பாடுவதை,பன்னிர் செல்வம் அளவு குனிந்து மரியாதை செய்வதை காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி விட்டு அவர்களுக்குண்டான பணிகளை செம்மையாக செய்தாலே போதும் தமிழ் நாடு அமைதி பூங்காதான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...