அம்மாவின் கடந்த ஐந்தாண்டு பொற்கால ஆட்சியில் இரண்டு தவணைகளில் 60 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்பகற்கொள்ளைக்கு எதிராகத் தமிழக மக்கள் எதிர்ப்பையும் வெறுப்பையும் உமிழ்ந்தபோது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்தான் மின் கட்டணத்தை உயர்த்தியதாகவும், தனது அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என விளக்கம் சொன்னார், ஜெயா. மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ, “மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை கூடிவிட்டதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது” என எதிர்ப்பவர்களின் வாயை அடைக்கும்படியான பதிலை அளித்தது. ஆனால், இந்த விளக்கங்கள் அனைத்தும் பச்சைப் பொய், மோசடி என்பது தற்போது அம்பலமாகியுள்ள நிலக்கரி இறக்குமதி ஊழல் வழியாகத் தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. இம்மின் நிலையங்களின் நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இந்தியாவில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படாமல், அத்தொழில் முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் அனல் மின் நிலையங்கள் தமக்குத் தேவைப்படும் நிலக்கரியில் ஒரு பகுதியை வெளிநாடுகளிலிருந்து இடைத்தரகர்கள் மூலம் இறக்குமதி செய்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
மின்சாரக் கொள்ளையர்கள்: (இடமிருந்து) அனில் அம்பானி, வினோத் சாந்திலால் அதானி, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.
இந்த இறக்குமதியில், குறிப்பாக இந்தோனேஷியா நாட்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை நடந்துள்ள நிலக்கிரி இறக்குமதி வணிகத்தில் மட்டும் 29,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதையும், இந்தப் பணம் முழுவதும் வெளிநாடுகளில் கருப்புப் பணமாகப் பதுக்கப்பட்டுவிட்டதையும் கண்டுபிடித்திருக்கிறது, இந்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம். இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு, குஜராத், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 80 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, ஹாங்காங்கிலும், துபாயிலும் இறக்குமதி நிறுவனங்களை நடத்திவரும் இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் குமார் கார்க் என்பவர் மைய அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
50 டாலர் மதிப்புள்ள ஒரு டன் நிலக்கரியை 87 டாலருக்கு வாங்கியிருப்பதாகக் கணக்குக் காட்டி இந்த ஊழலை நடத்தியதோடு, செயற்கையாகவும் மோசடியாகவும் அதிகரிக்கப்பட்ட நிலக்கரியின் விலையைக் காட்டி மின்சார கட்டணத்தை உயர்த்தி, அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பொதுமக்களைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த ஊழல் காரணமாகத் தமிழகம் உட்பட இந்தியாவெங்கும் மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 50 காசு முதல் ரூ.1.50 வரை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம்.
இந்தியாவை வறுமையிலிருந்து மீட்டு வல்லரசாக்கும் இரட்சகர்களாக யாரெல்லாம் மக்கள் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்களோ, அவர்கள்தான் – அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அனில் அம்பானி, அதானி குழுமத்தைச் சேர்ந்த வினோத் சாந்திலால் அதானி, எஸ்ஸார் குழுமத்தைச் சேர்ந்த ரூயா குடும்பம், ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த சஜ்ஜன் ஜிண்டால், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் உள்ளிட்ட தரகு முதலாளிகள்தான் இந்த ஊழலின் சூத்திரதாரிகள். தமிழ்நாடு, குஜராத், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த அரசு மின்சார வாரியங்கள் இந்த ஊழலில் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுள்ளன.
தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களும் அரசு மின் வாரியங்களும் இந்தோனேஷியாவிலிலிருந்து நேரடியாக நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை. அதற்குப் பதிலாக, சிங்கப்பூரிலும், ஹாங்ஹாங்கிலும், துபாயிலும், இந்தியாவிலும் உள்ள தரகு நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியைப் பெறுகின்றன. இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி கப்பலில் ஏற்றப்பட்டு, அந்தச் சரக்கு நேரடியாக இந்தியாவிற்கு வந்தாலும், அதற்குரிய ரசீதுகள் அப்படி வருவதில்லை. அது இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து துபாய்க்கோ போய், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல இந்தியாவை வந்தடைகிறது. அப்படி வருவதற்குள் இந்தோனேஷியாவில் 50 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு டன் நிலக்கரியின் விலை 87 டாலராக அதிகரித்து விடுகிறது.
ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு சரக்கு மாறும்போது விலை ஏறும்தானே என்று பொருளாதாரப் புலிகள் நியாயப்படுத்தலாம். ஆனால், இதில் அப்படியெல்லாம் வியாபாரம் நடக்கவில்லை. சரக்கு இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கோ, அங்கிருந்து ஹாங்ஹாங்கிற்கோ துபாய்க்கோ விற்கப்பட்டதாக செட்-அப் செய்யப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் நிலக்கரியின் விலையை உயர்த்தி, போலியான இறக்குமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஊழலால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,500 கோடி ரூபாய் எனச் செய்திகள் கசிந்துள்ளன. எனினும், இதில் போயசு தோட்டத்திற்குப் போன பங்கு எவ்வளவு என்பது மர்மமாக உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் உண்மை விலைக்கும் (50 டாலர்கள்), மோசடியாக உயர்த்தப்பட்ட விலைக்கும் (87 டாலர்கள்) இடையேயுள்ள வித்தியாசம் (37 டாலர்கள்) கருப்புப் பணமாக வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த தரகு நிறுவனங்கள், மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தரகு முதலாளிகளின் பினாமி நிறுவனங்கள் அல்லது கூட்டு நிறுவனங்கள் என்பது இந்த ஊழலின் இன்னொரு அம்சமாகும். குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மின் வாரியங்களுக்கு டாடா குழுமத்திற்குச் சொந்தமான கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனம் மின்சாரத்தை விற்று வருகிறது. இந்த நிறுவனம், புமி ரிசோர்சஸ் என்ற இந்தோனேஷிய நிறுவனத்திடமிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதாகக் கணக்கு காட்டுகிறது. இந்த புமி ரிசோர்சஸ் நிறுவனத்திலும், அதற்குச் சொந்தமான இந்தோனேஷியாவின் நிலக்கரி வயல்களிலும் 30 சதவீதப் பங்குகளை கடற்கரை குஜராத் மின்சக்தி நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா பவர் நிறுவனம் வைத்திருக்கிறது.
அதானி குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது பினாமி நிறுவனத்தின் மூலம் தனது குஜராத் மின்நிலையத்திற்கு இயந்திரங்களை இறக்குமதி செய்ததில், அந்த இயந்திரங்களின் இறக்குமதி விலையைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக 6,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. மேலும், அக்குழுமம் நிலக்கரி இறக்குமதி கொள்ளையை நடத்துவதற்கு வசதியாக ஆஸ்திரேலியாவில் நிலக்கரி வயல்களை வாங்கிப்போட முயன்று வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் இயந்திரங்களின் விலைகளைச் செயற்கையாக உயர்த்தி, அதன் வழியாக மின் கட்டண உயர்வை இந்திய மக்களின் மீது ஏற்றியிருக்கும் இந்த ஊழல்-மோசடிகளின் மூலம் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாயைத் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் சுருட்டிக் கொண்டுள்ளன. மனோஜ் குமார் கார்க் என்ற சுண்டெலி கைது செய்யப்பட்டதற்கு அப்பால், இந்த ஊழல் தொடர்பாக எந்தவொரு கார்ப்பரேட் பெருச்சாளிகள் மீதும் வழக்குப் பாயவில்லை.
கடந்த காங்கிரசு ஆட்சியில்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் நடந்தது. அப்பொழுதுதான் நிலக்கரி இறக்குமதி ஊழலும் நடந்திருக்கிறது. நிலக்கரி சுரங்க ஊழலில் காங்கிரசைக் குறிவைத்துப் பலமாக சவுண்டுவிட்டு வரும் பா.ஜ.க., நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து அடக்கியே வாசிக்கிறது. காரணம், அம்பானியும் அதானியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் குத்தகைக்கு எடுத்த ஆட்சியல்லவோ மோடியின் அரசு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக