புதன், 24 டிசம்பர், 2014

மீண்டும் கொளுத்துவோம்.

‘‘மநுஸ்மிருதி"யிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரீகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. 
இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இக்கூட்டம் அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. 
இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றை தீயிட்டுக் கொளுத்த தீர்மானிக்கிறது’’ என்று மகாராஷ்டிரா மாநிலம் மஹத் நகரில் கூடிய சத்யாகிரகிகளின் மாநாடு அம்பேத்கர் தலை மையில் மநுஸ்மிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25. 
மஹத் நகரின் சௌதார் குளம் சாதி இந்துக் களும் எல்லாச்சாதியினரின் விலங்குகளும் புழங்குவதற்குரியது. தலித்துகளுக்கோ புழங்குரிமை இல்லை.
இத்தடையை நீக்குவதென 1924ல் நகரசபை எடுத்த முடிவை நிறைவேற்ற சாதி இந்துக்கள் விடவில்லை. 
1927 மார்ச் 19,20ல் மஹத்தில் கூடிய மாநாட்டில் பங்கேற்ற தலித்துகளும் தலித் அல்லாதார் சிலரும் இரண்டாம்நாள் காலை அம்பேத்கர் தலைமையில் அந்தக் குளத்தில் நீரருந்தி நூற்றாண்டுக்காலத் தடையை உடைத்தனர்.
 ஆத்திரமடைந்த சாதிஇந்துக்கள், தலித்துகள் அடுத்ததாக வீரேஸ்வர் கோயிலுக்குள்ளும் நுழையப் போவதாக வதந்தியைக் கிளப்பி வன்முறையை ஏவினர்.
 ‘எமக்குள்ள இயல்பான உரிமைகளை நிலைநாட்டவே இந்தக் குளத்தில் இறங்கினோம். 
மற்றபடி இந்தத் தண்ணீர் அசாதாரண சிறப்பினை உடையதென நாங்கள் கருதவில்லை’ என்றார் அம்பேத்கர். 
சாதி இந்துக்களோ 108 கலயங்களில் பால், தயிர், மாட்டு மூத்திரம், சாணக்கழிசலை குளத்தில் ஊற்றி பரிகாரித்து தீட்டு கழித்தனர்.இதனிடையே மஹத் நகரசபை தலித்துகளை குளத்தில் புழங்கவிடும் முந்தைய தீர்மானத்தை 1927 ஆகஸ்ட் 4ல் ரத்து செய்தது. 
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த தலித்துகள் அங்கொரு சத்தியாகிரகத்தை 1927 டிசம்பர் 25, 26 தேதிகளில் நடத்துவதென தீர்மானித்தனர். மஹத் சத்தியாக்கிரகம் வெறும் தண்ணீருக்கானது அல்ல என்பதை உணர்ந்த சாதி இந்துக்கள் நீதிமன்றத் தடையாணை பெற்றனர்.
இடம், தண்ணீர், மளிகைப்பொருட்களை வழங்க மறுத்தனர்.
 ஆனால் ஃபதேகான் என்பவரது இடத்தில் திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியது. ‘இருண்டகாலத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை’ என்கிற அம்பேத்கரின் பயிலுரையால் மக்கள் ஆவேசமுற்றனர்.
 சகஸ்திரபுத்தே என்கிற பிராமணர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மநுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதை படித்துக் காட்டி அம்பேத்கரின் கருத்துக்கு வலு சேர்த்தார். இந்தப் பின்னணியிலேயே மநுஸ்மிருதி எரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் முன்னின்ற தோழர் ராம்சந்திர பாபாஜி மோரே பின்னாளில் தீரமிக்க மார்க் சிஸ்ட்டாக வாழ்ந்தவர். இறுதிவரையிலும் அம்பேத்கருடன் மாறாத்தோழமை கொண்டிருந்தவர். மநுஸ்மிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927ல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜாவிடமிருந்து வெடித்தது. 
மஹத்துக்கும் முன்னதாகவே 4.12.1927ல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியாதைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மநுஸ்மிருதியைக் கொளுத்தினார்.
 மஹத் மாநாட்டின் மீது இந்நிகழ்வுகள் தாக்கம் செலுத்தினவா, இந்த எதிர்வினைகள் 1927ல் முனைப்படைந்தது ஏன் என்பவை ஆய்வுக்குரியவை. மஹத்தில் மநுஸ்மிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது. காலவழிக்கொழிந்து போன மநுஸ்மிருதியை எரித்திருக்க வேண்டுமா என்ற தந்திரமான கேள்விக்கு, இந்த அங்கலாய்ப்பே அதன் இருப்பை உணர்த்துகிறது என்றார் அம்பேத்கர். 
இந்த எரிப்பினால் என்ன கிடைத்தது என்ற கேள்விக்கு ‘அந்நியத்துணி எரிப்பினால் காந்திக்கு எது கிடைத்ததோ அதுவே...’ என்றார்.
நிம்மதியிழந்த பிராமண பத்திரிகைகளால் பீமாசுரன் என்று இகழப்பட்ட அம்பேத்கர் சொன்னார்: மநுஸ்மிருதி எரிப்பு முற்றிலும் திட்டமிடப்பட்ட நிகழ்வே. நூற்றாண்டுகளாக எங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியின் சின்னமாக மநுஸ்மிருதியைக் கருதியதாலேயே எரித்தோம். 
அதன் போதனையின் காரணமாகவே நாங்கள் கொத்தியெடுக்கும் கோரக்கொடுமைக்கு, வன்னெஞ்ச வறுமைக்கு உள்ளாகியுள்ளோம். எனவே அதற்கு எதிராக வரிந்துகட்டினோம். 
உயிர்களை பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்கினோம், நினைத்ததைச் செய்துமுடித் தோம்... விலங்குகளை பலியிடும் யாகங்களை நடத்தி தட்சணையாக பொருள் ஈட்டுவதே வேதமதம்.
 அதை எதிர்த்தெழுந்த பௌத்தம்அசோகரால் மகதத்தின் அரச மதமாக்கப்பட்ட தால் உயிர்ப்பலி தடுக்கப்பட்டது. 
அரசுரீதியான ஆதரவுகளை இழந்த பிராமணர்கள் 140 ஆண்டுகள் புரோகிதத்தையும் வருமானத்தையும் அந்தஸ்தையும் இழந்தனர்.
அசோகமித்திரன், பத்ரி சேஷாத்திரி மொழியில் ‘ஒடுக்கப்பட்டனர்’. உயிர்ப்பலியிலும் சோம யாகத்திலும் நம்பிக்கையுள்ள சாமவேதி பார்ப்பனனாகிய புஷ்யமித்திர சுங்கன் அசோகரது வழிவந்த பிருகத்ரதனைக் கொன்று கி.மு.185ல் ஆட்சியைக் கைப்பற்றினான்.
 ஒவ்வொரு பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலைவைத்து கொல்வதாயிருந்தது அவனது பௌத்த வெறுப்பு. 
பார்ப்பனீயத்தின் வெற்றியாக அம்பேத்கரால் சுட்டப்படும் இவனது ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்பவரால் கி.மு. 170- கி.மு.150க்குள் எழுதப்பட்டதே மநுஸ்மிருதி.
பூமியின் கடவுள்களாக பிராமணர்களை விதந்துரைத்த மநுஸ்மிருதி மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தியது.
 யாகங்களால் ஆயுளை நீட்டிக்கவும் ஆட்சியை விஸ்தரிக்கவும் முடியும் என்கிற கட்டுக்கதைகளுக்கு இரையான சத்திரிய மன்னர்களால் அது நாடெங்கும் பரவியது. 
இத்தனைக்கும் அது சத்திரியர்களை, பரசுராமனால் கொல்லப்பட்டவர்களின் விதவைகள் பார்ப்பனர்களுடன் கூடியதால் முறையற்று பிறந்தவர்களென இழிவுபடுத்தியது. 
பட்டத்து மகிஷியைக் கன்னிகழிப்பதையும் அது பார்ப்பனர்களின் உரிமையாக்கியது.
பெண்கள் அனைவரையும் சூத்திரர்களையும் ‘உயிர் வாழ்தலுக்கும் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சியை நாடும் வாழ்விற்கும் உரிமையற்றவர்களாக’ மநுஸ்மிருதி மாற்றியதை அம்பலப்படுத்திய அம்பேத்கர் அதை கொளுத்துவதற்கு தலைமையேற்றது பொருத்தமானதுதான். 
ஒரு குறீயீட்டுரீதியான எதிர்ப்பாக மநுஸ்மிருதியை எரித்த போராட்டத்தை குடிமக்கள் யாவரும் சமம் என்கிற ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கித் தருவதுவரை அம்பேத்கர் முன்னெடுத்தார். 
அதேவேளையில் மநுஸ்மிருதிக்கு எதிராக கனன்றெரியும் நெருப்பின் உக்கிரத்தில்தான் இந்த சமத்துவத்தை எட்டமுடியும் என்று எச்சரித்தும் வந்தார். அதே டிசம்பர் 25, 1968ல் வெண்மணியில் மநுவாதச்சிந்தனை நம்மில் 44 பேரை எரித்து பழிதீர்த்துக்கொண்டது. 
ஆர்.எஸ்.எஸ் மநுஸ்மிருதியை பகவான் மநு அருளிய சட்டமெனப் போற்றுகிறது. அதேவேளையில் அரவணைத்து நெரிக்கும் தந்திரத்தோடு அது மநுஸ்மிருதியை கொளுத்திய அம்பேத்கரை வணங்குவதாகவும் பசப்புகிறது. பட்டியல் சாதிகளின் பெயருக்கு முன்னே இந்து என்கிற சொல்லைச் சேர்க்கும் அது, தலித்துகள் இந்துக்களல்ல என நிறுவிய அம்பேத்கரை அவமதிக்கிறது. 
இந்த மோசடியை ஜோடிப்பதற்கான நூல்களைப் புளுகியுள்ள பிஜய் சங்கர் சாஸ்திரி, முற்காலத்தில் பிராமண சத்திரிய உயர் சாதி யினரான இவர்கள் இஸ்லாமியராக மாற மறுத்ததால் வந்தேறிகளால் மலமள்ளும் இழிநிலைக்குத் தாழ்த்தப்பட்டனர் என்று திரிக்கிறார்.
 மட்டுமல்லாது, மநுஸ்மிருதியை உயர் சாதியினரின் புனிதநூலென அம் பேத்கரே சொல்லியிருப்பதால் முன்னாள் உயர்சாதியினரான தலித்துகளும் மநுஸ் மிருதியை ஏற்கவேண்டும் என்றும் வாதிடு கிறார்.
இப்படி உண்மைகளைக் கொல்லும் பொய்யர்களின் காலத்திற்கு வந்து சேர்ந் திருக்கிறோம். 
ஏற்கனவே ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கு சிலைவைத்த அவர்கள், தொன்மையான சட்ட வல்லுனர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கும் சிலைவைக்கக் கோரும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
 சமூகத்தை மீண்டும் மநுஸ்மிருதிக்குள் மூழ் கடித்துக் கொல்வதற்கான யுத்தத்திற்கு உகந்தகாலம் இதுவென்ற ஆணவம் அவர்களிடம் கொப்பளிக்கிறது.
 நமக்கான நெருப்பு மஹத்திலும், வெண்மணியிலும் இன்னமும் கனன்றுகொண்டே இருக்கிறது.
                                                                                                                              ஆதாரங்கள்: அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்: 7, 35குடிஅரசு:
நன்றி:தீக்கதிர்.
===================================================================================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...