சனி, 6 டிசம்பர், 2014

இலவச முறைகேடு?

ஆவின் பால்,முட்டை கொள்முதல்,பருப்பு கொள்முதல்,முறைகேடுகள் பட்டியலில் தற்போது மாண்வர்களுக்கு டாஸ்மாக் வருமானத்தில் வழங்குவதாக சொல்லப்படும் மடிக்கணினியும் சேர்ந்துள்ளதாக பயம் உண்டாகியுள்ளது.  

 மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப்களில்  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளம் பயன்படுத்துவது என்ற தமிழக  அரசின் முடிவால், மக்கள் பணம் ரூ.120 கோடி வீணாகிறது. 
அதோடு,  மாணவர்களுக்கு வழங்கப்படும்போது இந்த இயங்குதளம்  காலாவதியாகிவிடும் என்பதால், கையில் கிடைத்தும் அதன் பலனை  அனுபவிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 
அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2  மாணவ, மாணவிகள், அரசு மற்றும் உதவிபெறும் கலை அறிவியல்  கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்  கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கம்ப்யூட்டர் பயிற்சித்திறனை  அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும்  திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
 2011 செப்டம்பர் 15ம் தேதி அண்ணா  பிறந்தநாளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
 இத்திட்டத்தின் கீழ்,  2011-12ம் ஆண்டில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 790 லேப்டாப்களும், 2012-13ம்  ஆண்டில் 7 லட்சத்து 56 ஆயிரம் லேப்டாப்களும், 2013-14ம்  கல்வியாண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் லேப்டாப்களும் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது. 
இதுவரை மூன்று கட்டங்களில் 17 லட்சம்  லேப்டாப்கள் மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதன் மொத்த மதிப்பு ரூ.2,500 கோடி எனவும் அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது, 2014-15ம் கல்வியாண்டில் 5.50 லட்சம் லேப்டாப்கள் மாணவ,  மாணவியருக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 இதற்காக,  ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச லேப்டாப்  கொள்முதல் செய்யும் பொறுப்பு அரசு நிறுவனமான எல்காட்  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
இதன் டெண்டர் அறிவிப்பில்  இடம்பெற்ற நிபந்தனைகள், டெண்டரில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள்  உட்பட பல தரப்பினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 
அதில்,  ‘‘விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர் அல்லது அதற்கு மேம்பட்ட இயங்கு தளம்,  ஓராண்டுக்கான உரிமத்துடன் கூடிய ஆன்டிவைரஸ் மென்பொருள் நிறுவ  வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
‘‘ இதன்படி, ஒரு லேப்டாப்பின்  மதிப்பு ரூ.20,000. டெண்டரின் மொத்த மதிப்பு ரூ.2,200 கோடி. இதுகுறித்து,  யுனைடெட் டெலிகாம் நிறுவனத்தின் துணை தலைவர் (மார்க்கெட்டிங்)  திபேஷிஸ் சவுத்ரி கூறியதாவது: டெண்டர் அறிவிப்பில் விண்டோஸ் 7  என்ற மைக்ரோசாப்ட் நிறுவன இயங்குதளத்தை குறிப்பிட்டிருப்பதன் மூலம்  தமிழ்நாடு அரசின் வெளிப்படைத்தன்மை விதிமுறை மீறப்பட்டுள்ளது. 

இப்படி, விண்டோஸ் 7 இயங்குதளம் கண்டிப்பாக வேண்டும் என்று  வலிந்து சேர்க்கப்பட்டிருப்பதால், ஒரு லேப்டாப்புக்கு குறைந்தபட்சம்  ரூ.1,200 அதிகரிக்கும். 

இலவசமாக கிடைக்கும் மென்பொருளை  விட்டுவிட்டு விண்டோஸ் பயன்படுத்துவது செலவு அதிகரிப்பதோடு,  மாணவர்களுக்கு விண்டோஸ் மற்றும் ஆன்டிவைரஸ் அப்டேட் செய்ய  கூடுதலாக செலவு செய்வதை தவிர வேறுவழியே இல்லை என்ற நிலை  ஏற்படும். 
ஒப்பந்தப்புள்ளிக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தின்போது  ‘இலவசமாக லினக்ஸ் இயங்குதளம் இருக்க, பணம் கொடுத்து வாங்க  வேண்டிய விண்டோஸ் 7 பயன்படுத்துவதற்கு அவசியம் என்ன?  
இதன்மூலம், இலவசமாக லேப்டாப் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில்  சாப்ட்வேர் அப்டேட் செய்ய கூடுதலாக செலவு செய்யவேண்டி வரும்‘  என்று கேள்வி எழுப்பினோம். 
ஆனால், அரசு தரப்பில் இருந்து  திருப்திகரமான எந்த பதிலும் வரவில்லை. அதுமட்டுமின்றி, விண்டோஸ் 7  இயங்குதளத்துக்கான சேவையை ஜனவரி 2015ம் தேதியுடன்  மைக்ரோசாப்ட் நிறுத்திக்கொள்கிறது. இவ்வாறு திபேஷிஸ் சவுத்ரி  தெரிவித்தார்.

இலவச இயங்குதளம் வழங்கும் மைக்ரோசாப்ட்டுக்கு நேரடி போட்டி  நிறுவனமாக விளங்கும் ‘உபுன்டு‘வின் இந்தியா மற்றும்  தெற்காசியாவுக்கான மண்டல இயக்குநர் பிரகாஷ் அத்வானி கூறுகையில், 

 ‘‘தமிழக அரசின் இலவச லேப்டாப்களின் பலனையும் சிறந்த  அனுபவத்தையும் மாணவர்கள் முழுமையாக பெறுவதற்கு ஏற்ப அதில்  இடம்பெறவேண்டிய இயங்குதளத்தை அரசு முடிவு செய்யவேண்டும்‘‘  என்றார். விண்டோஸ் 7 இயங்குதளத்துக்கான ஆதரவை மைக்ரோசாப்ட்  நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதியுடன் நிறுத்தி விடும். 
இந்த  டெண்டரில் முடிவு செய்யப்பட்டு பெறப்படும் லேப்டாப்கள் எப்படியும் மார்ச்  அல்லது ஏப்ரல் மாதத்துக்கு பிறகுதான் வழங்கப்படும்.
 எனவே,  மாணவர்கள் கையில் லேப்டாப் கிடைக்கும்போது அதன் இயங்குதளம்  காலாவதியானதாக இருக்கும். 
அதற்கு சில ஆயிரங்களை செலவு  செய்தால்தான் கணினியை அவர்களால் முழுமையாக பயன்படுத்த  முடியும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தமிழக அரசின் ஐ.டி. செயலாளர் சில  மாதங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு  தெரிவித்துள்ளார்.
 இவர், எழுதிய 2014 மார்ச் 12ம் தேதியிட்ட கடிதத்தில்,  இலவசமாக கிடைக்கும் "லினக்ஸ்" இயங்குதளம் பெரும்பாலும் வைரஸ்  தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவதில்லை. 
இத்தகைய இயங்குதளத்தை  பயன்படுத்தினால் கணினியில் சேமித்து வைத்த தகவல்களை சைபர்  கிரிமினல்கள் திருடுவது போன்றவை தடுக்கப்படும் என்று  குறிப்பிட்டுள்ளார்.
 ஆனால், மக்கள் பணம் பாழாகாமல் தடுக்கவும்,  திட்டச்செலவை குறைக்கவும் அளிக்கப்பட்ட இந்த நியாயமான பரிந்துரை  அரசால் பரிசீலிக்கப்படாதது ஏன் என்பது மர்மமாக உள்ளது. 
மாணவர்களின்  நலனுக்காக இலவச லேப்டாப்களை வழங்கும் அரசு இலவச  மென்பொருளை ஏற்காதது, முறைகேடு நடத்துவதற்காகவே திட்டமிட்டு  செயல்படுத்தப்படுகிறதா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களை  எழுப்பியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் வணிக நோக்கத்தை பிரதானமாக கொண்டு  தனது சாப்ட்வேர் சேவையை அவ்வப்போது நிறுத்திக்கொள்வதும்  புதிதல்ல. 

இந்த நிறுவனம் விண்டோஸ் எக்ஸ்பிக்கான சேவையை 14-4- 2009 அன்றும், விஸ்டாவுக்கான சேவையை 10-4-2012 அன்றும்  நிறுத்திவிட்டது. விண்டோஸ் 8 சேவை 2018 ஜனவரி 9ம் தேதியுடன்  நிறுத்தப்பட்டு விடும் என அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 13ம் தேதி  காலாவதியாகும் விண்டோஸ் 7 ஹோம் எடிஷன் விலை தற்போது சுமார்  ரூ.5,500 ஆக இருக்கிறது. 
இது காலாவதியான பிறகு விண்டோஸ் 8  நிறுவுவதற்கு ரூ.6,500 வரை செலவிடவேண்டி வரும். 
எனவே, இலவச  லேப்டாப் வாங்கிய ஏழை மாணவர்கள் அதை வெறும் காட்சிப்பொருளாக  வைக்க வேண்டிவரும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
பிரச்னை இல்லாத இலவச இயங்குதளம்

"லினக்ஸ் இயங்குதளம் கடந்த 1991ம் ஆண்டு வெளியிடப்பட்டது.  முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இது, காலத்துக்கேற்ப வடிவமைத்து  வழங்கப்படுகிறது. கடைசியாக, கடந்த மாதம் 21ம் தேதி லினக்ஸ் புதிய  அப்டேப் வெளியிடப்பட்டுள்ளது. இதை கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதால்  எந்த சிக்கலும் இல்லை. 

முற்றிலும் இலவசம் என்பதால் இதற்கு  எதிராகவோ, இதை குறிவைத்தோ வைரஸ்கள் எதுவும்  ஏற்படுத்தப்படுவதில்லை. 

ஆனால், இதற்கு நேரெதிரானது மைக்ரோசாப்ட் விண்டோஸ். இதில்  இலவச சேவை என்பதே கிடையாது. 

அதோடு, வைரஸ் தாக்குதலுக்கு  அதிகம் ஆளாகும் இயங்குதளமாக இது உள்ளது. 
எனவே,  கம்ப்யூட்டரையும், அதிலுள்ள தகவல்களையும் பாதுகாக்க தனியாக  வைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்துவது கட்டாயமாகிவிடும்.

ஆக இந்த முறை தமிழக அரசு கொடுக்கும் மடிக்கணினி என்ன காரணத்தினால் இயஙுகு தளம் விலை கொடுத்து வாங்கி மாற்றித்தரப்படுகிறது என்பதும் அதே நேரம் இப்போது புதிதாக உள்ள விண்டோஸ் தளத்தை வாங்காமல்  சேவை நிறுத்தப்பட்ட காலாவதியான விண்டோஸ் இயங்கு தளம் வாங்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.அதற்கு ஆதாயம் காணத்தான் இயங்கு கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.


இது முட்டை சத்து மாவு முறைகீடு விபரம்.

தமிழகத்தில் முட்டை, சத்துமாவு சப்ளை செய்யும் நிறுவனம் ஏற்கனவே கர்நாடக அங்கன்வாடி மையங்களுக்கு உணவு சப்ளை செய்ததில் முறைகேடு செய்ததாக கூறி, அதன் ஒப்பந்தத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அந்த நிறுவனம் மற்றும் அந்த மாநில அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்களும் தெரிய வந்துள்ளது.
தேசிய அளவில் 1975ம் ஆண்டு சத்து குறைவான குழந்தைகளுக்கான ஒரு மிகப்பெரிய திட்டம் கொண்டுவரப்பட்டது. நாடெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க அந்தந்த மாநிலங்கள் அங்கன்வாடி மையங்கள் அமைத்தன.
 மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டன. 
அ  ங்கன்வாடி மையங்களில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், 15 முதல் 44 வயது வரை உள்ள சத்து குறைபாடு உள்ள பெண்கள் ஆகியோருக்கு இலவசமாக சத்துணவு மதிய உணவாக வழங்கப்படுகிறது. புள்ளி விவரங்களின் அடிப்படையில், கர்நாடகாவில் மட்டும் 70 ஆயிரம் குழந்தைகள் சத்து குறைபாடு உள்ளன என்று கூறப்பட்டது.
 இதற்காக, கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் 54,260 அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டன. 
 இந்த மையங்கள் மூலம் 33 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கர்நாடக மாநிலத்தில் இந்த அங்கன்வாடி மையங்களுக்கு சத்து உணவுகளை தயாரித்து வழங்கும் பணியை கர்நாடக மாநில கார்ன் புராடக்ட்ஸ் நிறுவனம் செய்து வந்தது. இந்த நிறுவனம் கர்நாடக மாநிலத்தின் ஒரு நிறுவனமாகும். 
இந்நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. 

இதையடுத்து, சத்துணவு தயாரித்து வழங்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு தர கர்நாடக அரசு முடிவு செய்த து. 
அதன் அடிப்படையில், கடந்த 2007ல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும்கிறிஸ்டி ஃபுட்கிராம் இண்டஸ்ட்ரி என்று நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ.600 கோடி மதிப்பீட்டில் கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்தது. 
இதன் மூலம் 176 தாலுகாக்களில் 139 சத்துணவு உற்பத்தி மையங்களை இந்த நிறுவனம் அமைத்தது.
 மகிளா துணை சத்துணவு தயாரிப்பு மற்றும் பயிற்சி மையம் என்ற பெயரில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டன. 

ஆனால், மையங்களில் தயாரிக்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதாக புகார்கள் வந்தன.
 பெருமளவில் தமிழகத்திலிருந்து உணவுகள் தயாரிக்கப்பட்டு இந்த மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு தரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த தயாரிப்பு மையங்களில் பணியாற்றும் பெண்கள் படிப்பறிவு இல்லாத ஏழைகள். சேவை அடிப்படையில், ஒப்பந்தத்தை பெற்று விட்டு லாப நோக்கில் இயங்க தொடங்கிய இந்த நிறுவனம் அதிகாரிகளை சரிக்கட்டுவதிலும் கைதேர்ந்திருந்தது. 
தாலுகா அளவில் உள்ள குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு மாதமும் கிறிஸ்டி ஃபுட்கிராம் இண்டஸ்ட்ரி கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது.  
அதே நேரதில், தரமற்ற உணவுகளை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்ததால் பல குழந்தைகளும், கர்ப்பிணிகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 
அதில் சத்துணவு திட்டத்தில் இடைத்தரகர்கள் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மனித உரிமை, கல்வி கண்காணிப்பு அமைப்பின் தென்னிந்திய பிரிவு கர்நாடக லோக் ஆயுக்தாவில் புகார் செய்தது. 

புகாரின்படி, கர்நாடக மாநில லோக் ஆயுக்தா தீவிர விசாரணை நடத்தியது. அதில், கிறிஸ்டி ஃபுட்கிராம் இண்டஸ்ட்ரி தயாரித்து அனுப்பும் பாக்கெட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட துத்தநாக பூச்சு அதிகமாக இருந்ததும், இது, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றும் தெரியவந்தது. மிக தரமற்ற உணவுகளை குழந்தைகளுக்கு தந்ததால் பெரும்பாலான குழந்தைகள் அந்த உணவை சாப்பிட மறுத்துவிட்டன. உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, சளி ஆகியவையும் ஏற்பட்டதும், உணவு கலப்படச் சட்டத்திற்கு முரணாக உணவுகள் தயாரிக்கப்பட்டதும் அம்பலமானது. 

விசாரணையில், இந்த தரமற்ற உணவுகளை சப்ளை செய்வதை கண்டுகொள்ளாமல் இருக்க கர்நாடக மகளிர் மற்றும் பெண்கள் மேம¢பாட்டுத் துறை முன்னாள் இயக்குநர் சல்மா இக்பால், துணை இயக்குநர் உஷா பட்வாரி, உதவி இயக்குநர் முனிராஜு ஆகியோருக்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துள்ளனர்.
 இதையடுத்து, சல்மா இக்பால் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்கம், வைரம் மற்றும் ரூ.60 லட்சம் வங்கிக் கணக்கு, ஆடம்பர கார் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சப் பணத்தை கொடுக்கும் பணியில் கிறிஸ்டி ஃபுட்கிராம் இண்டஸ்ட்ரி ஊழியர்கள் குமாரசாமி, மணி ஆகியோரை நிறுவனம் ஈடுபடுத்தியதும் தெரிந்து.
 
இந்நிலையில், இந்த நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தத்தை கர்நாடக அரசு ரத்து செய்து, கடந்த 2012 மே 31ம் தேதி ஆணை வெளியிட்டது. 
அந்த நிறுவனம் கர்நாடக மாநில அரசின் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் இந்த நிறுவனம் இனிமேல் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்ய முடியாது.
 இந்த நிறுவனம்தான் தற்போது தமிழக அரசுடன் ஒப்பந்தமிட்டு முட்டை, சத்து மாவுகளை சப்ளை செய்து வருகிறது. 
ஒரு மாநிலத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிறுவனத்தை தமிழக அரசு வரவேற்று ஒப்பந்தம் போட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலும் இந்த நிறுவனம் சத்து மாவுகளை வழங்குவதால், அதன் தரமும் சந்தேகத்துக்கிடமாகி உள்ளது.
 தர்மபுரியில் குழந்தைகள் இறப்புக்கு முக்கிய காரணம் எடை குறைவாக பிறந்ததுதான் என்று தெரியவந்துள்ளது. 
இந்த எடை குறைவுக்கு, குழந்தைகளின் அம்மாவுக்கு வழங்கப்பட்ட மாவில் தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 ஒரு மாநிலத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிறுவனத்துக்கு அதே பொருளை சப்ளை செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் போட்டிருப்பது அனைவரையும் சந்தேகம் கொல்ளச் செய்கிறது.
===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...