புதன், 24 டிசம்பர், 2014

என் பெயர் அலி.


 எனக்கு வயது 12.
அன்றைய தினம் பள்ளியில் எங்கள் வகுப்பறையில் முதல் பாடவேளையின்போது பாடங்களை படித்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென வெடிச்சப்தத்தை கேட்டோம். 
அந்த சப்தம் மிகக் கடுமையாக இருந்தது. 
பயங்கரமாக இருந்தது. 
அது என்ன சப்தம் என ஊகித்திடுவதற்கான நேரம் கூட எங்களுக்கு இருக்கவில்லை.
அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்த சப்தத்தை எங்களது வகுப்பறைக்கு மிக அருகே கேட்க முடிந்தது. 
எங்கள் எல்லோரையும் மேசைக்கு அடியில் ஒளிந்து கொள்ளுமாறு வகுப்பாசிரியர் கூறினார்.“மேசைகளுக்கடியில் ஒளிந்து கொள்ளுங்கள். வேகமாக ஒளிந்து கொள்ளுங்கள்” என ஆசிரியர் அவசரத்தோடும் திகிலோடும் சொன்னார். 
நாங்கள் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தோம்.
சிலர் குழப்பமடைந்தும், திகிலடைந்தும் நின்று கொண்டிருந்தோம். “என்ன நடக்கிறது” என ஆசிரியரைப் பார்த்து கேட்கத் துவங்கினோம்.
எங்களுக்கு அடுத்திருந்த வகுப்பறையிலிருந்து வந்த மாணவர்களின் அலறல் சப்தம்-மரணஓலம்- எங்களை அதிர்ச்சியடையச் செய்தது. நான் மிகவும் பயந்து போனேன். 
வாயடைத்துப் போய் சப்தம் எதுவும் எழுப்ப இயலாது மௌனமாக நின்றேன்.
எங்களது வகுப்பறையின் கதவை மூடித் தாளிட வகுப்பாசிரியர் முனைந்த தருணத்தில், மூன்று பேர், துப்பாக்கியோடு அங்கு முற்றுகையிட்டனர்.
அவர்கள் தங்களது துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தனர். எனது வகுப்பாசிரியரும், எனது சக மாணவர்களும் நேரடியாகக் காயமடைவதையும், பின் கீழே சரிவதையும் கண்டேன்.
நாங்கள் பலர் எங்களது மேசைகளுக்குக் கீழ் ஒளிந்து கொண்டோம்.பல மணி நேரங்களுக்கு அசைவு எதுவுமின்றி பிணத்தைப் போல நான் நடித்தேன். எனது சகமாணவர்களை, அவர்களது நெற்றியில், நெஞ்சில், தோள்பட்டையில், கால்களில், வயிற்றில் சுட்டனர். 
எல்லோரும் தரையில் கிடந்தனர். எங்களில் பலர் உயிரோடிருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். 
அதன் பிறகு தலையின் கபாலப் பகுதியைக் குறி வைத்து நேராக சுடத் துவங்கினர். 
துப்பாக்கிக் குண்டுகள் எங்களது தலைகளுக்கு மேல் சென்றன. “இறந்ததைப் போல நடி” என எனது உற்ற நண்பனும், வகுப்பறையில் எனக்கு அடுத்து அமர்ந்திருப்பவனுமான இர்ஃபான் உல்லா கூறினான்.
 நான் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன்.
 வகுப்பறையின் கடைசி வரிசையில் எங்களது இருக்கைகள் இருந்தன.
“அசையாதிரு அலி, அசையாதிரு” என அவன் எனது காதுகளில் கிசுகிசுத்தான்.
 நான் தலைகீழாகப் புரட்டப்பட்டேன். 
எல்லாம் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 
அவர்கள் தீவிரவாதிகள் என்பதும், தலிபான்கள் என்பதும் எனக்குத் தெரிந்தது.
எனது நண்பனும் துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டான். 
ஆனால், அவனது உடலின் எந்தப் பகுதியை துப்பாக்கிக் குண்டு துளைத்தது என்பது எனக்குத் தெரியவில்லை. 
அவனால் பேச இயலவில்லை. 
எனக்கடுத்து இருந்த அவன் விடும் மூச்சு சப்தத்தை நான் கேட்க முடிந்தது. “அந்தப் பையன் இறந்துவிட்டானா?” 
என தீவிரவாதிகளில் ஒருவன் மற்றொருவனைப் பார்த்துக் கேட்டான். 
அதன் பிறகு குண்டுகள் துளைக்கும் சப்தத்தையும், மேலும் பல முறை சுடும் சப்தத்தையும் கேட்டேன். 
நான் செத்துவிட்டதாகவே உணர்ந்தேன். 
பஸ்டூனிய மொழியில் பேசிய அவர்கள், சல்வார் கமீஸ் அணிந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மிக நீளமான, பழுப்பு நிறத்திலான தாடி வைத்திருந்தார்கள்.
அவர்கள் அந்த அறையைவிட்டு வெளியேறிய பின், நான் இர்ஃபானின் காதுகளில் கிசுகிசுத்தேன்.
ஆனால், அதற்கு அவனிடமிருந்து எந்தவொரு பதிலும் இருக்கவில்லை. இறந்தது போலவே இன்னமும் அவன் நடித்துக் கொண்டிருக்கிறான் என்றே நான் நினைத்தேன். 
நானும் இறந்துவிட்டது போன்ற நாடகத்தைத் தொடர்ந்தேன்.
அவர்கள் அங்கே மீண்டும் திரும்பி வருவார்களோ என எண்ணி நான் மிகவும் பயந்திருந்தேன். 
எனது நண்பன் எப்போது இறந்தான் என்று எனக்குத் தெரியவில்லை. 
அவன் எனது உயிரைக் காப்பாற்றினான்.
நான் இறந்து போய்விட்டதாகவே கருதினேன். 
ஆனால், எனது இதயமோ மிக வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. 
என்னால் அசைய முடியவில்லை.
பல மணி நேரங்களுக்கு உயிரற்ற பிணம் போல அசைவு எதுவுமின்றி நடித்துக் கொண்டிருந்தேன். ஆபத்திலிருந்து காப்பாற்றிட ராணுவ வீரர்கள் அங்கே வந்தபோதும், நான் அசையாது இருந்தேன்.
 அவர்கள் உண்மையான ராணுவ வீரர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. மேலும், என்னால் வாய் திறந்து எதுவும் பேச இயலவில்லை.
எனது வகுப்பறைக்கு வெளியே தொடர்ந்து குண்டுகளின் சப்தத்தை நான் கேட்டேன். 
ஆனால், எனது கண்களைத் திறந்து என்ன நடக்கிறது என்று பார்க்கின்ற துணிவு எனக்கு இருக்கவில்லை. மிகப் பெரிய குண்டு வெடிப்பு அங்கே நிகழ்ந்தது.
உலகமே இன்று வெடித்துச் சிதறிவிடும் என்று கருதினேன். என்னை யாரோ தூக்கியபோது, நான் எனது கண்களை இறுக மூடிக் கொண்டேன். என்னைத் தூக்கியவர்கள் ராணுவ வீரர்கள்.
நான் அழத் துவங்கினேன். 
அவர்கள் என்னை எனது பெற்றோரிடம் அழைத்துச் சென்றனர்.நான் இங்குள்ள மருத்துவமனையை வந்தடைந்துள்ளேன். 
தங்களது ரத்தத்தை பெருமளவு இழந்த எனது சகமாணவர்களில் பலர் இங்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு நான் எனது ரத்தத்தை தானமாகக் கொடுக்கின்றேன்.
எங்களது வீட்டிற்கு நாங்கள் சென்றுவிட வேண்டும் என எனது பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். 
அவர்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். 
நானும் அஞ்சுகிறேன். 
ஆனால், அதே நேரத்தில் மருத்துவமனையில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் குறித்து கவலை கொண்டுள்ளேன்.
தலிபான்கள் தீயவர்கள்
எனது நண்பர்களைக் கொன்று குவித்திட்ட இந்த தீவிரவாதிகளை எதிர்த்து நான் போராடுவேன்.
இவர்களை கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

-பெஷாவர் ராணுவப்பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடிய படுகொலையில்உயிர் பிழைத்த 12 வயதேயான அலி என்ற சிறுவனின் வாக்குமூலம். 
கிரண் நாஜிஷ் என்ற பத்திரிகையாளர் இதைப் பதிவு செய்துள்ளார். 
இவர் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து போர் மற்றும் மனித உரிமை குறித்த செய்திகளைத் தரும் பத்திரிகையாளர்ஆவார்.
========================================================================================================
டிசம்பர் 25: 
  • உலகையே சிரிக்க வைத்த 
  • சார்லி சாப்ளின் 
  • நினைவு தினம் -

துளி மீசை கொண்டிருந்த இருவர் உலகை ஆட்டிப்படைத்தார்கள். ஒருவர் ஹிட்லர், இன்னொருவர் சாப்ளின். ஒருவர் பத்தாண்டுகளில் காணாமல் போய்விட்டார். இன்னொருவர் காலங்களைக்கடந்து கண்கலங்க வைப்பார்.
அப்பாவும் அம்மாவும் பிரிந்த பொழுது பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அம்மாவிடம் வந்து சேர்ந்தது .க்ளப்களில் திருமணத்துக்கு முன் பாடிக்கொண்டிருந்த அவர் மீண்டும் பாடப்போன பொழுது குரலே பண்ணிய குறும்புகள் எல்லாரையும் கவர்ந்துவிட்டன. காசுகளை அவர்கள்வீசிய பொழுது அள்ளிக்கொள்ள குனிந்த அந்த நாயகனை வாழ்க்கை தொடர்ந்து குட்டிக்கொண்டு தான் இருந்தது
பிரிந்த பெற்றோர்,துரத்திய வறுமை ,பசி ,தோற்ற காதல்கள் ,மனநலம் குன்றி நின்ற தாய்,கல்வியே கிடைக்காத வாழ்க்கை இவ்வளவும் இருந்தும் அதன் ஒரு சாயல் கூட இல்லாமல் ஸ்க்ரீனில் ரசிகனை சிரிக்க வைத்த நாயகன் அவர் .
மார்க் சென்னெட்டிடம் நடிக்க சேர்ந்து வேகமான படம் எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் நிதானமான தன் பாணியை காப்பாற்றி கொண்ட இவரின் தனித்துவம்;அன்றைய ஹாலிவூட் நடிகர்களில் அதிக பணம் பெற்ற பொழுதும் ஒற்றை அறையில் வாழ்ந்த எளிமை ,ஒரே வருடத்தில் பன்னிரெண்டு படங்கள் எடுத்து எல்லாவற்றிலும் சமூகத்தின் வலியை சொன்ன சினிமா போராளி !
ஹைட்டியுடன் நிறைவேறாத காதல் ,உலகமே கொண்டாடியும் மனநலம் குன்றிய அம்மாவுக்கு தான் புகழின் உச்சத்தில் இருப்பதை புரிய வைக்க முடியாமல் கதறி அழுத பொழுது அவரின் மனநிலையை நீங்கள் யூகித்து கொள்ளலாம் .
பேசும் படங்கள் உலகை முற்றுகையிட்ட பொழுது மவுனமாக ரசிகனிடம் மவுனப்படங்களின் மூலம் சாதிக்க முடியும் என சவால் விட்டார் .ஒரு அரங்கு கூட கிடைக்காமல் தடுத்தார்கள் .எப்பொழுதும் நிரம்பாத ஹென்றி சி. கோவன் அரங்கு தான் கிடைத்தது ;சிட்டி லைட்ஸ் திரையிடப்பட்டது கூட்டம் அரங்கை தாண்டி அலைமோதியது ; அவரின் மாஸ்டர் பீஸ் என உலகம் கொண்டாடியது . அரசுகள் கலையின் மூலம் குரல் கொடுக்கும் கலைஞர்களை எதிரியாகவே பார்த்திருக்கின்றன. அதிலும் சாப்ளின் எனும் மகா கலைஞனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் என்று அவரை நாடுகள் துரத்திக்கொண்டே இருந்தன
வாழ்க்கை முழுக்க அழுகையால் அவரின் அகவாழ்வு நிரம்பி இருந்தது. ஸ்க்ரீன் முன் தோன்றிவிட்டால் அது எதையும் காட்டாமல் சாப்ளின் மட்டுமே தெரிவார். ""நான் மழையில் தான் நடக்கிறேன் ;நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது" என்று சொன்னார் அவர்.
பசி என்றால் என்னவென்று சாப்ளினுக்கு தெரியும், வறுமை என்பது என்னவென்று அனுபவித்து உணர்ந்தவர் அவர். எப்படி ஒரு நாயை போல தொழிலாளியின் வாழ்க்கை கழிகிறது என்று ஒரு படத்தில் காட்டினார் என்றால் உலகின் தலைசிறந்த மேதைகள் என கொண்டாடப்பட்ட மக்கள் எழுத்தாளர்களின் எழுத்துக்களை விடாமல் வாசித்தார். அவற்றை திரைக்கு கடத்தினார் அவர்.
தொழிலாளிகளுக்கு நேரும் அநீதிகளை படத்தில் காட்டினார். முதலாளிகளை கிண்டலடித்து மாடர்ன் டைம்ஸ் எடுத்தார் அவர். அதில் எல்லாரும் பேசுவார்கள். சாப்ளின் மவுனமாகவே திரையில் தோன்றுவார். சொந்த மகனின் இறப்பின் வலியைக்கூட திரைப்படமாக எடுக்கும் வித்தை அவரிடம் இருந்தது. அரசாங்கங்களை அவரின் படங்கள் உலுக்கி எடுத்தன. அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து இருந்தாலும் அவர் பிரிட்டன் குடிமகனாகவே இருந்தார். நம்புங்கள் இன்றைக்கும் ஹவுஸ்புல்லாக ஓடும் அவரின் படங்கள் ஊமைப்படங்கள் அவை பேசிய கதைகள் தான் எக்கச்சக்கம. ஹிட்லரை தி கிரேட் டிக்டேடர் படத்தில் நொறுக்கி எடுத்தார்.
ஹிட்லர் ரஷ்யா மீது பாய்ந்த பொழுது ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது ; எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் அமெரிக்கா உதவிக்கு போக வேண்டும் என்றார் மனிதர். அப்பொழுதே சந்தேக விதை விழுந்தது. கோர்ட்டில் வழக்கு போட்டு பத்து வருடங்கள் அலைய விட்டார்கள். அடுத்தது அவரின் படங்கள் வேறு அவர் ஏழைகளுக்கு ஆதரானவர் கம்யூனிஸ்ட் என்கிற எண்ணத்தை தீவிரமாக்கின.
அமெரிக்கா நாற்பது வருடங்கள் அவர்கள் தேசத்தில் வாழ்ந்து இருந்தாலும் அவரை மீண்டும் தன் மண்ணுக்குள்  அனுமதிக்க மறுத்தது . அப்பொழுது அவரின் ,"அறச்சிந்தனை களங்கப்பட்டு இருப்பதாகவும் ,அவர் அரசியல் சாய்வு தன்மை உள்ளவர் ""என்றும் அமெரிக்கஅரசு தெரிவித்தது. சாப்ளின் ,"நான் புரட்சியாளன் இல்லை !மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே !"என்றார். பின் ஏசுவே ஆண்டாளும் அமெரிக்கா போக மாட்டேன் என அவர்
தெரிவித்து விட்டு சுவிட்சர்லாந்து தேசத்தில் தங்கிவிட்டார்.
அவரின் ஐரோப்பியாவில் இருந்து தயாரித்த முதல் படத்தை அமெரிக்காவில் வெளியிடவே முடியாத அளவுக்கு அவரை வில்லனாக்கி இருந்தார்கள் ! இறுதியில் இறப்பதற்கு 6 வருடங்கள் முன்பு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கி தன் தவறை ஓரளவிற்கு சரி செய்துகொண்டது அமெரிக்கா. அப்பொழுது அங்கே அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று பன்னிரெண்டு நிமிடங்கள் கைதட்டினார்கள்.
தி கிரேட் டிக்டேடர் படத்தில் அவர் எத்தகைய உலகத்தை கனவு கண்டார் என்று பேசியிருப்பார் :
ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும் . அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்
                                                                                                                                                             - பூ.கொ.சரவணன்
=============================================================================================================
1968 ஆம் ஆண்டு டி சம்பர் 25 ஆம் நாள் அது நடந்தது. 
கீழ்வெண்மணியில் விவசாயக் கூலிகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் குடிசையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.
 இதில் 20 பேர் பெண்கள். 
19 பேர் குழந்தைகள். 
தீயிட்டு கொளுத்தும் அளவுக்கு அவர்கள் செய்த கொடுமை.?
விவசாய கூலிகளான தங்களுக்கு கால் வயிற்றை கூட  நிரப்பாத கூலி யில் அரைபடி நெல்லை  கூலி உயர்வுக்காக கேட்டுப் போராடியது.அதுவும் பொதுவுடமை கட்சியின் செங்கொடியின் கீழ் திரண்டு பண்ணையார்களுக்கு எதிராக நின்று நியாயம் கேட்டதுதான்.
 செங்கொடியைக் கைவிட மறுத்ததால்தான் இச்சம்பவமே  நடந்தது. அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் சுயமரியாதைக்காக தலை நிமிர்ந்ததால் அது நடந்தது. 
சாதி ஒடுக்குமுறைக்கும் அதற்கு எதிரானப் போராட்டத்திற்குமான நினைவைத் தாங்கி நிற்கிறது கீழ வெண்மணி. 
சாதிக்கும் வர்க்கத்திற்குமான உறவைச் சொல்லும் இரத்த சாட்சியாக வெண்மணி தீ எரிந்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...