வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மார்ட்டின் : மர்மங்கள்,


ilaignan_audio_launch_stills_pics_11

யார் இந்த மார்ட்டின் ? 43 வயதாகும் மார்ட்டின் இந்தியாவின் மிகப் பெரிய லாட்டரி அதிபர்.    அசைக்க முடியாத சக்தியாக நேற்று வரை விளங்கியவர்.   இவர் பிறந்த அன்று, பர்மாவைச் சேர்ந்த மார்ட்டினின் பெற்றோர்களுக்கு 1000 டாலர் லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறது.  அதனால், லாட்டரிக்கும் மார்ட்டினுக்கும் நெருக்கம் மிக மிக அதிகம்.

பர்மாவில் லாட்டரி விற்பனை நெருக்கடிக்கு உள்ளானதால், மார்ட்டினின் பெற்றோர், இந்தியாவுக்கு வருகின்றனர்.  முதலில் அருணாச்சலப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.  பின்னர் மார்ட்டின் கோயம்பத்தூருக்கு தன் தளத்தை மாற்றுகிறார்.    அவரின் மைத்துனர் ஜான் பிரிட்டோ என்பவரையும் தன்னோடு அழைத்துக் கொள்கிறார்.   சட்டவிரோத லாட்டரிகளை நடத்தி வந்த மார்ட்டின், அரசியல் செல்வாக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து, அரசியல் தொடர்புகளை மெள்ள மெள்ள வளர்க்கிறார்.  எந்த அளவுக்கு தன் செல்வாக்குகளை மார்ட்டின் வளர்த்துக் கொள்கிறார் என்றால், மார்க்சிஸ்ட் கட்சியின் தேசாபிமானி இதழுக்கு 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கும் அளவுக்கு மார்ட்டினின் செல்வாக்கு வளர்கிறது.
 IMG_0001

IMG_0002

மார்ட்டின் மற்றும் அவர் மைத்துனர் இடையே லாட்டரி தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தம்
பல்வேறு அரசியல் கட்சிகளோடு தன் தொடர்புகளை வளர்த்து, இந்திய முழுக்க அசைக்க முடியாத சக்தியாக வளர்கிறார் மார்ட்டின்.   மார்ட்டினோடு தொழில் பங்குதாரராக இருப்பவர் பயானி ட்ரேடர்ஸ்.  இந்த பயானி ட்ரேடர்ஸின் வேலை, இந்தியாவில் எந்த மாநிலத்தில் லாட்டரி அனுமதிக்கப் படுகிறதோ, அந்த மாநிலத்துக்கு லாட்டரி டிக்கெட்டுகளை அச்சடித்து தருவது.  ஐதராபாத்தில் ஸ்ரீநிதி ப்ரின்டர்ஸ் மற்றும் கே.எல் ஹைடெக் செக்யூர் ப்ரின்டர்ஸ் என்ற நிறுவனங்கள் லாட்டரி டிக்கட்டுகளை அச்சடிக்கின்றன.  சிவகாசியில் மஹாலட்சுமி ப்ரின்டர்ஸும், பெங்களுரில் சாய் செக்யூரிட்டி ப்ரின்டர்ஸும், சென்னையில் வைரம் ப்ரின்டர்ஸும், டெல்லியில் சாய் செக்யூரிட்டி மற்றும் நியூ டெக் ப்ரின்டர்ஸும் டிக்கட்டுகளை அச்சடிக்கின்றனர்.

இவ்வாறு அச்சடிக்கப் பட்ட டிக்கட்டுகள், கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப் படுகின்றன.  கொல்கத்தாவிலிருந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன.   லாட்டரி டிக்கட்டுகள் தடை செய்யப் பட்ட மாநிலங்களில், இந்த வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் பத்து ரூபாய் விலை உள்ள லாட்டரி டிக்கட்டுகள் 500 ரூபாய் வரை கள்ள மார்கெட்டில் விற்கப் படுகின்றன.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில்  கபில் கண்ணா என்பவர் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி விற்பனையைப் பார்த்துக் கொள்கிறார்.    ஜக்தீஷ் டால்மியா என்பவர் மார்ட்டினின் வரி விவகாரங்களை பார்த்துக் கொள்கிறார்.

மாணிக்கம் என்பவர் தமிழ்நாட்டில் லாட்டரிகள் அச்சடிப்பது, டிக்கட் விநியோகம் ஆகியவற்றை பார்த்துக் கொண்டு, தமிழ்நாட்டு பிசினெசின் பொறுப்பாளராக இருக்கிறார்.

ப்ரேம்ராஜ் பம்போலி என்பவர், பஞ்சாப் மாநில விவகாரங்களை பார்த்துக் கொள்கிறார்.  இவர் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி எதிரில் ராஜ் மந்திர் ஜ்வெல்லரி என்ற பெயரில் நகைக்  கடை வைத்துள்ளார். இவருக்கு வேலை, மார்ட்டினின் லாட்டரி வியாபாரங்களில் வரும் பணத்தை நகையாக மாற்றித் தருவது.

சேப்பாக்கத்தில் உள்ள நியூ பார்க் ஹோட்டலின் முதலாளி மூர்த்தி பண்டாலம் கொரியர் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்.  இவருக்கு ரகு என்பவர் உதவியாக இருக்கிறார்.  இவரது பணி, கொரியர் நிறுவனம் மூலமாக, மார்ட்டினின் பணத்தை இந்தியா முழுக்க கடத்துவது.
 illaignan_Audio-Launch09
வேதமுத்து மற்றும் நாகராஜ் ஆகியோர் மார்ட்டினின் லாட்டரி தொழிலின் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் செயல்பாடுகளை பார்த்துக் கொள்கிறார்கள்.  இவர்களது அலுவலகத்தின் பெயர் ப்யூச்சர் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் ஆகும்.

பெஞ்சமின் என்பவர் மார்ட்டினின் நெருங்ககிய சகா.  மார்ட்டின் சார்பாக கட்டப் பஞ்சாயத்து செய்வது, ஆட்களை விட்டு அடிப்பது, நிலங்களை அபகரிப்பது, சினிமா தயாரிப்புகளை பார்த்துக் கொள்வது ஆகியற்றை பெஞ்சமின் செய்து வருகிறார். இது தவிரவும், அரபு நாட்டில் இருக்கும் இவரது மகனுக்கு கருப்புப் பணத்தை ஹவாலா வழியில் அனுப்பும் வேலையையும் இவர் பார்த்துக் கொள்கிறார்.

செல்வம் மற்றும் விசுவாசம் ஆகியோர், மார்ட்டினின் அரசியல் தொடர்புகளையும் ஹவாலா ஆபரேஷன்களையும் பார்த்துக் கொள்கின்றனர்.

மனோகரன் என்பவர், க்ராம்பிள்ஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் கம்ப்யூட்டர் தொடர்பான விவகாரங்களை பார்த்துக் கொள்கிறார்.  இவருக்கு அரசு என்பவர் உதவியாக பணி புரிகிறார்.

ஜான் பிரிட்டோ என்பவரும், ஜான் கென்னடி என்பவரும் கோவையை மையமாகக் கொண்டு, ஒட்டு மொத்த பண விவகாரங்களை பார்த்துக் கொள்கின்றனர்.   ஷாஜஹான் என்பவர், மார்ட்டினின் சட்ட விவகாரங்களை பார்த்துக் கொள்கின்றார்.  இது தவிரவும், லாட்டரி ரிசல்டுகளை பார்த்துக் கொள்வதற்கென்று, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித் தனியே ஆட்களை நியமித்திருக்கிறார் மார்ட்டின்.   சிக்கிம் ரவி, சிக்கிம் மாநிலத்துக்கும், மதியழகன் நாகாலாந்துக்கும், ப்ரேம் அருணாச்சல பிரதேசத்துக்கும், கண்ணபிரான் பூட்டான் மாநிலத்துக்கும், ராஜீவ் கேரள மாநிலத்துக்கும் என மார்ட்டின் நியமித்துள்ளார்.


சென்னை மாவட்டத்தில் மார்ட்டினின் லாட்டரி விவகாரங்களை நிர்வகிக்க என்று தனியே ஒரு குழு நியமிக்கப் பட்டுள்ளது.   சென்னையின் வியாபார வருமானங்கள் அனைத்தும், நியூ பார்க் ஹோட்டலின் அதிபர் மூர்த்தி பார்த்துக் கொள்கிறார்.  மூர்த்தியின் வீடு, ஹோட்டல், லாரி ஷெட், மற்றும் கொரியர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை நடக்கிறது.

தாம்பரத்தைச் சேர்ந்த ராசி ரங்கா, வண்ணை பாலு  மற்றும் ஐயயப்பன் ஆகியோர் சென்னை லாட்டரி விற்பனைனை மேற்பார்வை செய்கின்றனர்.  சைதை குமார் மற்றும் சைதை சேகர் ஆகியோரும் சென்னை வியாபாரங்களை பார்த்துக் கொள்கின்றனர்.

திருச்சியைப் பொறுத்தவரை கம்போர்ட் பர்னிச்சர் என்ற கடை ஒன்று இருக்கிறது.  இந்தக் கடையை சேகர் மற்றும் சேவியர் ஆகிய இருவரும் பார்த்துக் கொள்கின்றனர்.   இந்தக் கடையில் உண்மையில் நடப்பது லாட்டரி வியாபாரமே. ஒரு வாரத்துக்கான இந்தக் கடையின் வசூல் 4 கோடி.
 illaignan_Audio-Launch15
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு ஜெயா என்பவர் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள கடையில் வைத்து வியாபாரத்தை நடத்துகிறார்.    கூடுவாஞ்சேரியில், முனியாண்டி விலாஸ் ஹோட்டிலின் பின்புறம் இந்த கள்ள லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  இதே போல தமிழ்நாடு முழுக்க தனக்கான தனித் தனிப் பிரிவுகளை ஏற்படுத்தி லாட்டரி வியாபாரத்தை அமோகமாக நடத்தி வருகிறார் மார்ட்டின்.

டிக்கெட்டுகளை அனுப்புவதில், ஈடுபடும் மற்றொரு கொரியர் நிறுவனம் குட் லக் கொரியர்ஸ்.  மீரான் பாய் என்பவர் இந்த பொறுப்பை மேற்கொள்கிறார்.  பெரும்பாலும், ரயில் வண்டி மூலமாகவே டிக்கட்டுகள் அனுப்பப் படுகின்றன.

விற்பனையாகாத லாட்டரி டிக்கட்டுகள் குறித்த விபரங்களை தினந்தோறும் 3 மணிக்கு கம்ப்யூட்டரில் ஏஜென்டுகள் ஏற்ற வேண்டும்.  இவ்வாறு ஏற்றப் படும் விபரங்கள், கோயம்பத்தூரைச் சேர்ந்த ஏபிடி இன்போ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாகவும், கொல்கத்தா பயானி ட்ரேடர்ஸ் மூலமாகவும் சரி பார்க்கப் படுகின்றன.

ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்க்கு மார்ட்டின் கள்ள லாட்டரிகளை விற்கிறார்.  இந்த பணத்தை வைத்து, கோவை, திருச்சி, சென்னை, பெங்களுர் மதுரை, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் அடி மாட்டு விலைக்கு மார்ட்டின் பல்வேறு சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளார்.

இது போக, கேரளா, கர்நாடகா ஆகி மாநிலங்களில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளார்.  இந்த மார்ட்டின் மதுரை உத்தங்குடியில் கோயில் சொத்துக்களை அபகரித்து, அழகிரியின் மனைவிக்கு எப்படி விற்றார் என்ற விபரங்களை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

சரி ….  மாநில அரசுக்கு இந்த விபரங்கள் தெரியாதா ?  ஏன் இத்தனை நாள் அமைதியாக இருந்தார்கள் என்று கேட்பீர்கள்.

அதற்கான விடை, அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய இளைஞன் என்ற படத்தை தயாரித்தார்.  கருணாநிதியின் மருமகளுக்கு நிலத்தை விற்றிருக்கிறார்.   அதனால் கருணாநிதி மார்டடினை செம்மொழி மாநாட்டு விழா ஏற்பாட்டுக்கு குழு உறுப்பினராக்கி அழகு பார்த்துள்ளார்.
 martin1
தற்போது மார்ட்டின் நில அபகரிப்புப் புகாரில் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், இப்போதாவது காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்து, மார்ட்டினின் சட்ட விரோத லாட்டரி சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி:சவுக்கு,
                                                  
                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...