புதன், 8 நவம்பர், 2017

ஓராண்டை எட்டியத் துயரம்!

2016 ஆண்டு இதே நாளில் தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அதிர்ச்சி தரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 


ரூ.1000,ரூ.500 நோட்டுகள், இனி செல்லாது என்பதே அந்த அறிவிப்பு. 
ம் 4 முக்கியமான காரணங்களை அவர் அடுக்கினார்.

1) கருப்புப்பணம் ஒழிப்பு, 
2) கள்ள நோட்டு ஒழிப்பு, 
3) தீவிரவாதத்திற்கு நிதி தடுப்பு 
4) லஞ்ச, ஊழல் ஒழிப்பு.
மக்கள் இந்த அறிவிப்புகளை நம்பினார்கள், சில நாட்கள்துன்பத்தை தாங்கிக் கொள்ளலாம் என்றும் கூட நினைத்தார்கள்.

பிரதமர் மோடி தனது அறிவிப்பை கமுக்கமாக வைத்திருந்ததாக கூறப்பட்டது, ரிசர்வ் வங்கியை கட்டாயப்படுத்திஇதற்கான தீர்மானம் போட வைக்கப்பட்டு, அனைத்து அமைச்சர்களும் நவம்பர் 7 ஆம் தேதி மாலை அழைக்கப்பட்டனர் .

அவர்களின் கைபேசிகளை காவலர்கள் பெற்றுக்கொண்டனர். 
5 நிமிடங்களில் எல்லாம் முடிந்தது.

நாட்டிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் தொலைக்காட்சியின் வழியாகத் தான் இந்தச் செய்தியை அறிந்துகொண்டன. 
அதுவரைபுழக்கத்திலிருந்த பணத்தில் 86 விழுக்காடு செல்லாதென்றால், அதன் விளைவு மிகக் கடுமையாக இருக்கும்என்பதை பொருளாதார வல்லுநர்களும், இடதுசாரிகளும்விமர்சித்தோம்.இந்திய நாட்டுக் குடிமகன், தான் உழைத்து சம்பாதித்த,சேமித்த பணம் செல்லாது என்று அரசு அறிவித்தது. 

மக்களாட்சி நடப்பதாக சொல்லப்படும் ஒரு நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு எப்படி மக்களை ஏமாற்றமுடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட கடுமையாக சாடினார்.
இங்கிலாந்தில் பிரதமர் மார்கரெட் தாட்சர் இப்படியான அடாவடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியபோது அவருடைய ஆலோசகர்கள் சொன்ன எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது. 
அவர்கள் ‘ஜனநாயகமும், கட்டற்ற சந்தையும் கூட்டாளிகள் அல்ல, எதிரிகள்’ (Democracy and the free market are rivals, not allies) என்று எச்சரித்தனர். 

அரசின் இந்த முடிவால் மக்கள் வங்கிகள் முன் காத்துக்கிடக்கும் நிலைமை ஏற்பட்டது. 
தான் சேமித்த பணத்தை தவணை முறையில் பெற்றுக்கொண்ட அவலம் அரங்கேறியது. பொதுமக்கள், சிறுவர்த்தகர்கள், வங்கி ஊழியர்கள் என பலரையும் பணமதிப்பு நீக்கம் பலிகொண்டது. 

மற்றொரு பக்கம், புதிய ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாகபெற்று கோடீஸ்வரர்கள் செழித்தனர். 
சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப் பட்ட புதிய நோட்டுகள் எப்படி அவரிடம் வந்தன என்பதற்கு ரிசர்வ் வங்கியிடமே பதிவுகள் இல்லை என்கிறார்கள்.

செல்லா நோட்டு அறிவிப்பு, கருப்புப் பணத்தை தடுக்கவில்லை மாறாகபுதிய கருப்புச் சந்தையை உருவாக்கியது. கள்ள நோட்டுகளும் உடனே புழக்கத்துக்கு வந்தன. 
இந்த அறிவிப்பு வாரச் சந்தைகளைத்தான் நிலைகுலையச் செய்தது. பணப்புழக்கம் இல்லாத இந்தியா என்ற அடுத்த முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். 

டிஜிட்டல் இந்தியா,ஆதார் இணைப்பு என எல்லாமே பெரு முதலாளிகளுக்கு பயன்கொடுக்கும் அறிவிப்புகளாகவே அமைந்தன.
அவற்றின் தொடர்ச்சியாக, ‘சரக்கு மற்றும் சேவை வரியும்’ கூட்டுறவு கூட்டமைப்பு முறை என்றவிளம்பரத்துடன் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் அரசாங்கம், எந்த சர்வாதிகாரியாலும் செய்ய முடியாத வேலைகளை கடந்த 12 மாதங்களில் செய்து முடித்துவிட்டது. 
காங்கிரசின் பலவீனமும், மாநிலக் கட்சிகள் பாஜகவுடன் செய்துகொண்ட சமரசங்களும், 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதும் அதற்கு அந்த துணிவைக் கொடுத்திருக்கிறது.

அந்நிய முதலீடுகளுக்கு வசதியாக தொழிலாளர் சட்டங்கள் உட்படஅனைத்துச் சட்டங்களும் திருத்தப்படுகின்றன. இந்திய, பன்னாட்டு பெருமுதலாளிகள், மோடியின் அரசாங்கம் நம்முடையது என வர்க்கபாசத்துடன் பாராட்டு மலர்களைத் தூவுகின்றனர். 


உலகவங்கியும், பன்னாட்டு நிதியமும் பாராட்டுகிறார்கள். ஊடகங்களோ அரசின்பிரச்சனைகளை அனுசரித்து, அதற்கேற்ற வகையில் நடந்துகொள் கின்றன. 

இதையெல்லாம் தாண்டி, மறைக்க முடியாத வகையில் இந்தஅரசின் தோல்விகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. சில வார இதழ்களும், பொருளாதார இதழ்களும் அதனை வெளிப்படுத்துகின்றன.
இந்தியா தொழில் நடத்த சாதகமான நாடு என்று உலகவங்கி சான்றிதழ் கொடுத்தபின்னரும், உற்பத்தித் துறையில் எந்த அசைவும் ஏற்படவில்லை. 

சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்குதலால் உற்பத்தி உயர்வும்இல்லாமல் ஆகிவிட்டது. பொருளாதாரத் தேக்க நிலை, பிஎம்ஐ (PURCHASING MANAGERS INDEX) வழியே வெளிப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடத்தப்பட்ட ஆய்வு, அங்குசெயல்படும் தோல் பொருள் நிறுவனங்கள், உள்ளாடைதயாரிப்பு, இஞ்சினியரிங் தொழில்கள், விவசாயம் மற்றும் சோடா தயாரிப்பு என அனைத்தும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், நத்தை வேகத்தில் நகர்வதாகவும் தெரிவிக்கிறது. 

இந்தியாவில் மொத்த தோல் பொருள் ஏற்றுமதியில் 16 விழுக்காடு கான்பூரிலிருந்து ஏற்றுமதியாகிறது. தோல்பொருள் தயாரிப்பில் 4 லட்சம் பேர்வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 

இதில் கடந்த ஆண்டுநவம்பர் முதல் 400க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்டதொழில்கள் இயங்கவில்லை. 
உள்ளாடைத் தயாரிப்பில் இருந்தவர்களில் பலர் கடந்த 6 மாதமாக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்கள், சுமைப்பணியாளர்கள் நிலைமை பரிதாபமாக ஆகியுள்ளது.

திருப்பூர் குறித்து ஆய்வு செய்தபோது, கடந்த ஆண்டுநவம்பரில் 1200 நிறுவனங்கள் உள்ளாடை தயாரிப்பில்ஈடுபட்டன. ரூ.15000 கோடி மதிப்பிலான வர்த்தகம்மேற்கொள்ளும் திருப்பூரில் இப்போது 40 விழுக்காடாவது மிச்சமுள்ளதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 


செல்லா நோட்டு அறிவிப்பிற்கும் பின், சுற்றோட்டத்தில் பணம் உறிஞ்சப்பட்டதால், ஜாப் வொர்க் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

நிட்டிங், பிரிண்டிங், பேக்கிங் என ஏராளமான ஜாப் வொர்க் நிறுவனங்களானதே திருப்பூராகும்.6 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்புகளைக் கொடுத்துவருகிற திருப்பூர்இப்போது நெருக்கடியில் இருக்கிறது. 

இதில்வியப்பு என்னவென்றால், திருப்பூரின் முதலாளிகள்சங்கத்தின் தலைவர்கள், தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்குஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள்.

திருப்பூரும் குஜராத்தைப் போல வளர்ச்சியடையும் என்று பிரச்சாரம் செய்தார்கள். மோடியின் ‘குஜராத் மாடல்’ திருப்பூரை சூறையாடிவிட்டது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் நிலவரமும் மிக மோசமானது. இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகத்தில் 15 விழுக்காடு வரை உல்லன்துணி உற்பத்தியாகும்.
அங்குள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் 1.6 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களின்வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி பற்றி தெளிவு இல்லைஎன முதலாளிகள் புலம்புகின்றனர். தெளிவுபெற்றிட உதவியாக ஜி.எஸ்.டிஅலுவலர்களும் நடந்துகொள்வதில்லை, தில்லியிலிருந்தும் உதவிகள் இல்லை என்கிறார்கள் அவர்கள்.

மகாராஷ்டிராவின் பிவந்தி, பவர் லூம் தொழில்கள் இயங்கிவரும் பகுதியாகும். இங்கே 50 விழுக்காடு வர்த்தகம் செல்லா நோட்டு அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. 
28 நாட்கள் தொடர்ந்து இயங்கும் தறிகள், வேலை நாட்கள் பாதியாகக் குறைந்துவிட்டன.
2 சிப்ட் வேலைஇருக்கும் இடங்களில் தற்போது ஒரே சிப்ட் மட்டும் ஓட்ட முடிகிறது. 

1982 ஆம் ஆண்டுகளில் மும்பை வேலை நிறுத்தங்களைத் தொடர்ந்து பிவந்திக்கு ஆலைகள் இடம்மாறின. 2.5 லட்சம் பவர் லூம்கள் அங்கே செயல்படுகின்றன.

 செல்லா நோட்டு அறிவிப்பு அனைத்தையும் சிக்கலாக்கியிருக்கிறது. ஜாப் வொர்க் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி பெரும்தடையாக வந்திருக்கிறது. 
30 கோடி மீட்டர்கள் துணி உற்பத்தி நடைபெற்ற இடத்தில் இப்போது 17.5 கோடி மீட்டர் துணி உற்பத்திதான் நடந்திருக்கிறது.

4 மாநிலங்களில், 4 மிக முக்கியமான தொழில் பிரதேசங்களின் நிலையை மட்டுமே இங்கே உதாரணமாக குறிப்பிட்டுள்ளேன். இது நாடுமுழுமைக்குமான பாதிப்பின் ஒரு பகுதியாகும். 
அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பல சிதைந்திருக்கின்றன, சில பாதிக்கப்பட்ட நிலைமையில் உள்ளன. 

மோடி அறிவித்தபடி, பணமற்ற பொருளாதாரம் உருவெடுக்கவில்லை என்பது மிக முக்கியமான உணரவேண்டிய விசயமாகும்.
இந்தியா போன்ற வளரும் நாட்டில் 70 விழுக்காடு கிராமப்புறம் வேளாண்மையை நம்பியிருக்கும் ஒரு நாட்டில், மேற்கத்திய சந்தைப்பொருளாதாரத்தைத் திணிக்க முயற்சிப்பது, பெரும்பகுதி இந்தியர்களை,தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதரவற்றநிலையில் கொண்டு விடும். 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற மோடியின் பகட்டு வார்த்தைகளை மக்கள் நம்பினார்கள். 

வேலைவாய்ப்புக்கான நியாயமான ஏக்கம் மக்களிடம் இருக்கிறது.
ஆனால் இந்த அரசு புதிய வேலைகளை உருவாக்காதது மட்டுமல்ல, இருக்கும் வாய்ப்புகளையும் பறித்துள்ளது. இதைக் கண்டித்து வலுவானகுரல்கள் ஒலிக்க வேண்டும். 
மாற்றுக் கொள்கைக்கான போராட்டம் வலுப்படவேண்டும்.


    இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அளித்துள்ள தகவலின் படி, இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை சுமார் 15 லட்சம் பேர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. 


ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் பணி புரிவோர் எண்ணிக்கை 40,65,00,000 லிருந்து 40,50,00,000 ஆக குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே கால கட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்தோரை விட இது பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த வேலை இழப்பு அனைத்து பிரிவுகளிலும் மற்றும் அனைத்து பெரிய நிறுவனங்களிலும் ஏற்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் மருந்து உற்பத்தி மற்றும் மோட்டார் வாகனத் துறை ஆகிய இரு துறைகளிலும் ஓரளவு வேலை வாய்ப்பு அதிகமாகி உள்ளது என்றும் தகவல் அளித்துள்ளது. 


தினசரி ஊதியம் பெறுபவர்களும், கீழ் மட்ட பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அதிகமாக காணப்படுவதாகவும், குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் அளித்துள்ளது. 


தகவல் தொழில் நுட்பத் துறை அனைத்து மட்டத்தில் உள்ள ஊழியர்களும் பணி இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல உற்பத்தித் துறையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல மூடப்பட்டதால் வேலை இழப்பு அதிகம் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 



இந்த வேலை இழப்புக்கு காரணம் மோடி 2016  நவம்பரில் அறிவித்த பணமதிப்பிழப்பும்,அதானால் ஏற்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட பணத்தட்டுப்பாடும்தான் காரணம் என்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.


தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு சேகர் ரெட்டி,சசிகலா,போன்றவர்களுக்கு ஏற்படவில்லை என்பதும், பணத்தட்டுப்பாடு காலத்தில் ஒருவர் இரண்டாயிரம் மட்டும்தான் புதிய பணம் பெறலாம் என்று இருந்தக்காலத்தில் சேகர் ரெட்டி 300 கோடிகளுக்கு புதிய 2000 தாட்களை வங்கிகளில் இருந்து பெற்றது எப்படி என்று தெரியவில்லை.


அதை விட அசிங்கம் அவருக்கு அவ்வளவு பணம் எப்படி போனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று புதிய பணத்தை களத்தில் இறக்கிய,புதிய பணத்தை வெளியிட்டு இந்தியா முழுக்க வங்கிகள் மூலம் மக்களுக்கு வழங்கிய பொறுப்பு மிக்க இடத்தில் உள்ள   ரிசர்வ் வங்கி பொறுப்பே இல்லாமல் சொல்வதுதான்.


இந்த ஒரு வார்த்தையே பணமதிப்பிழப்பு யாருக்கு நனமை செய்துள்ளது என்பதை அறிய.

122 உயிர்கள் கணக்கில் தெரிந்து போனதற்கு இந்த பணமதிப்பிழப்புதான் கரணம்.அதை தவிர இதனால் இந்தியாவுக்கு கிடைத்ததது ஒன்றுமே இல்லை.      
                                  

செவ்வாய், 7 நவம்பர், 2017

பாரடைஸ் பேப்பர்ஸ்'



பாரடைஸ் பேப்பர்ஸ்,வெளிநாட்டு முதலீடுகள்,அம்பலம்,714, இந்திய தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள்,மோசடி,Paradise Papers


மத்திய அமெரிக்க நாடான பனாமாவைச் சேர்ந்த, 'மோசக் பென்சேகா' என்ற சட்ட, வர்த்தக ஆலோசனை நிறுவனம், போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்யும் மோசடியில் ஈடுபட்டது குறித்து, சர்வதேச பத்திரிகையாளர்கள் சங்கம், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் அம்பலப்படுத்தியது. 

பனாமா பேப்பர்ஸ்' மூலம், போலி நிறுவனங்கள் பெயரில், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, மோசடி செய்தது, 

கடந்தாண்டு மே மாதம் அம்பலப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் சங்கம், 'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில், புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என, 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், 500க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.உலகெங்கும் மிகப் பெரிய புயலை, பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், பதவியை இழக்க நேரிட்டது. 
ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சர்வதேச புலனாய்வு நிருபர்கள் சங்கம் நடத்திய விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த மோசடி அம்பலபடுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி பத்திரிகைக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தீவான பெர்முடா மற்றும் ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மூலம், பல்வேறு நாடுகளில் போலியான நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்த மோசடி தொடர்பான தகவல்கள் கிடைத்தன.

இவ்வாறு, 1.34 கோடி தகவல்களின் அடிப்படையில், 96 புலனாய்வு நிருபர்கள், 10 மாதங்களாக ஆய்வு செய்தனர்.
'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில், இந்த மோசடி அம்பலபடுத்தப்பட்டுள்ளது. 
மொத்தம், 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக கிடைத்த தகவல்களில், அதிக பெயர்கள் இடம்பெற்றுள்ள நாடு என்ற அடிப்படையில், இந்தியா, 19வது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில், 714 தனிநபர்கள், இந்திய நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன.
பெர்முடாவைச் சேர்ந்த ஆப்பிள்பே என்ற நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசியாசிட்டி என்ற நிறுவனமும், 19 நாடுகளில், போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடுகள் செய்தது 
தெரியவந்துள்ளது.உலகெங்கும் உள்ள பிரபல தொழிலதிபர்கள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர், தங்கள் கறுப்புப் பணத்தை, இந்த நிறுவனங்கள் மூலம், போலி நிறுவனங்களின் பெயர்களில்முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தொடர்பான ஆய்வை, பிரபல ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்கள் விசாரித்தனர்.இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மோசடிகள் குறித்து, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்றவை ஏற்கனவே விசாரித்து வருகின்றன.

இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள, நந்த் லால் கெம்காவின் சன் குழுமம், 118 போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆப்பிள்பே நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளர்களில், இரண்டாவது இடத்தில் இந்த நிறுவனம் உள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையிலும், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், இந்த மோசடி வெளியாகியுள்ளது.
இது, தேசிய அரசியலில் புதிய புயலை வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில், போலி நிறுவனத்தில் முதலீடு மோசடியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் உள்ள வர்த்தக அமைச்சர், வில்பர் ராஸ் மற்றும் ரஷ்யா இடையேயான தொடர்பு, பிரிட்டன் ராணி எலிசபெத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், சவுகத் அஜீஸ் உட்பட, 120 அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

'பாரடைஸ் பேப்பர்ஸ்' அம்பலப்படுத்தியுள்ள மோசடியில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள், தனிநபர்கள் பெயர் பட்டியல்:-

● நந்த் லால் கெம்காவின் சன் குழுமம், 118 போலி நிறுவனங்கள் பெயரில் கணக்கு துவக்கியுள்ளது.

● ஏர்செல் - மேக்சிஸ் மோசடி தொடர்பான வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்.

● எஸ்ஸார் - லுாப் 2ஜி வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்.
● எஸ்.என்.சி., லாவ்லின் வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்; இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

● ராஜஸ்தானில் நடந்த ஆம்புலன்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய, 'ஜிகுஸ்டா ஹெல்த்கேர்' என்று நிறுவனம். இதன் இயக்குனர்களான, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

● ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்பாக, சி.பி.ஐ., சமீபத்தில் நடத்திய விசாரணையில் தொடர்புடைய நிறுவனங்கள்.

● மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர், ெஜயந்த் சின்ஹா, முன்பு, ஓமிட்யார் நெட்வொர்க் என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். அந்த நிறுவனம் போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
அதன் இயக்குனராக, ெஜயந்த் சின்ஹா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

● பா.ஜ.,வின் ராஜ்யசபா எம்.பி.,யும், எஸ்.ஐ.எஸ்., என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான, ஆர்.கே.சின்ஹா.

● வர்த்தக நிறுவன புரோக்கர், நீரா ராடியா.

● பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தில்னாஷின் என்ற அவருடைய பழைய பெயரில் பட்டியலில் உள்ளார்.

● இந்தி  நடிகர் அமிதாப் பச்சன் பெர்முடாவைச் சேர்ந்த நிறுவனத்தில் முன்பு செய்திருந்த முதலீடுகள்.
இவர் உ.பி.மாநில முதியோர் ஓய்வுஊதியம் வாங்கி வருகிறார்.
மேலும் ஏழை விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் இலவச 5ஏக்கர் நிலமும் பெற்ற பரம ஏழை.
முன்னாள் இந்தி திரையுலக மிகவும் ஏழை உச்ச நட்சத்திரம் .
இவரது மகன் அபிஷேக் பச்சன்,மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் ஏழை நடிகர்கள்தான் .

● வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கிய, டியாஜியோ நிறுவனம்.

● ஜி.எம்.ஆர்., குழுமம்.

● இவற்றைத் தவிர, ஜின்டால் ஸ்டீல்ஸ், அப்பல்லோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜா, எம்மார் எம்.ஜி.எப்., வீடியோகான், ஹீராநந்தினி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
                                                  "ஆசையே துன்பத்துக்கான வழி."

திங்கள், 6 நவம்பர், 2017

அமுக்குவான் பேய்....,

ஒரு நாள் படுத்தால்போதும் எனக் கலைத்துப்போய் நீங்கள் சோர்வுடன்  படுக்கையில் தஞ்சமடைகிறீர்கள்.

 விளக்குகள் அணைக்கப்பட்டதும், நீங்கள் தழுவிக் கொண்ட போர்வையைப்போல தூக்கமும் உங்களைத் தழுவியதாய் நினைப்பு. 
இருளில் உங்கள் உணர்வுகளை நழுவவிடுகிறீர்கள்.
அரை மணி நேரம் கடந்திருக்காது.

 விழித்தோமா இல்லையா என்று புரியாத ஓர் இருட்டில் முழிப்பு வருகிறது. ஆனால், நகர முடியவில்லை. இப்போது அந்தத் தனியறையில் நீங்கள் தனியாக இல்லையென்ற ஓர் உள்ளுணர்வு. 
எழுந்து பார்க்கலாம் என்று முயன்றால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சவ நிலை என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலை, உங்கள் உடலுக்கு மட்டும். 
இது போதாதென்று முகத்தை யாரோ எதையோ வைத்து அமுக்கியது போன்ற எண்ணம்வேறு உதயமாகிறது. 
உயிர்க்காற்று உள்ளே செல்ல மறுக்கிறது. மூச்சுத் திணறல். கதற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்தும் குரல் உங்கள் குரல்வளையை விட்டு வெளியே வர மறுக்கின்றது.
சிறிது நேரத்தில், அறையில் யாரோ இருப்பதாய் தோன்றிய உள்ளுணர்வு உயிர் பெறுகிறது, ஏற்கெனவே, உங்களுக்கு சர்க்கஸ் கோமாளிகள் என்றால் பயம். அப்படி ஓர் உருவம், முதலில் அருவமாக, நிழலாகத் தோன்றி பின்பு உயிர் பெறுகிறது. 
உங்களை அது நெருங்குகிறது. நெருங்க நெருங்க உங்கள் மூச்சுக் குழாய் இறுகுகிறது. 
பயத்தின் உச்சமாக இப்போது வெளியே இடி, மின்னல், மழை என ஒன்றின் பின் ஒன்றாக. வித்தியாசமாக முதலில் இடிக் கேட்கிறது, பின்புதான் மின்னல். 
அந்த நொடி, உங்களுக்கு உண்மையை உரைக்கிறது. ஒளிக்குப் பின்னர்தானே ஒலி?
கட்டிலின் விளிம்பைத் தேடிப்பிடித்து, சட்டென எழுகிறீர்கள். இப்போது அந்த உருவம் இல்லை. 
வெளியே இடி, மின்னல், மழை இல்லை. முகத்தைக் கழுவிவிட்டு, ஒரு குவளை நீர் குடித்து திரும்பப் படுத்தவுடன் தூக்கம் நன்றாக வருகிறது. அதன்பிறகு, எல்லாமே சுபம்தான். 
ஏதோ கதைபோலத் தோன்றினாலும், அந்த ஒளி, ஒலி வேறுபாட்டைத் தவிர, மீதி அனைத்தும் நிச்சயம் உங்களின் வாழ்விலும் நடந்திருக்கும். 
அந்தக் கோமாளி உருவத்துக்குப் பதில் வேறு ஓர் உருவம், அவ்வளவே! இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், “அமுக்குவான் பேய்ப்பா அது… தெரியாதா? வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கணும்” என்பார். 
ஆனால், இந்த நிலை எதனால் ஏற்படுகிறது? 
இதற்கான அறிவியல் விளக்கம் என்ன?
ஆங்கிலத்தில் இதை ‘Sleep Paralysis’ என்று அழைக்கிறார்கள். 
இது ஏற்பட முக்கியக் காரணம் உடல் அடுத்தடுத்த உறக்க நிலைகளுக்குச் சீராக செல்ல மறுப்பதுதான். 
ஆனால் பல நூற்றாண்டுகளாக இதன் அறிகுறிகள் பேய் பிடித்த நிலை, சாத்தானின் தலையீடு, ஏவல் செய்ததால் துரத்தும் துஷ்ட சக்திகள் போன்றவற்றுக்கு தொடர்புப்படுத்தப்பட்டு வருகின்றன.
 ஆனால், இது உடல் சோர்வினால் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பிரச்னைதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த நிலை ஏற்பட முக்கியமான காரணமாக கூறப்படுவது, உணர்வுகளைக் கடத்தும் நம் நியூரான் செல்களில் ஏற்படும் குழப்பம்தான். 
தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் அதைச் சரிவர செய்யாமல் போவதால், பல்வேறு தூக்க நிலைகள் சீராக ஏற்படாமல், ஒன்றோடு ஒன்று பிணைந்து குழப்பம் ஏற்படுத்துகிறது. 
விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் நடுவில் நீங்கள் தடுமாறுவதால், இங்கே உங்கள் உடல் தூக்கத்தில் இருக்கிறது, 
உங்கள் ஆழ்மனது முழு விழிப்பு நிலையில் இருக்கிறது.
தூக்கத்தின் முதல் நிலையான REM ஸ்லீப் எனப்படும் ‘கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை’ தாண்டி இங்கே அடுத்த நிலைக்கு உறக்கம் செல்லவில்லை.
 மூச்சு விடுதல் போன்ற இயல்பான உடல் இயக்கங்கள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், உங்கள் உடல் செயல்பட மறுக்கிறது. ஏனென்றால், அதற்கு அப்போது ஓய்வு தேவை. 
கிட்டத்தட்டத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் போலதான் நம் உடலும் இங்கே வேலைநிறுத்தம் செய்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இங்கே நம் மூளை ஒரு விந்தையை நிகழ்த்துகிறது.
 உங்களின் உடல் எழ வேண்டும், நீங்கள் தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே அதன் விருப்பம். எனவே, உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. 
மிகுந்த சிரமத்துக்கு உண்டானாலும், உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. 
உடனே, உங்கள் மூளை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறது. 
உங்கள் அறைக்குள் யாரோ இருப்பது போன்றும், அந்த உருவம் உங்களைத் தாக்க வருவது போன்றும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டுகிறது. 
அதிலிருந்து தப்பிக்க, அல்லது திரும்பத் தாக்க உடல் எழுந்துதானே ஆக வேண்டும்? 
இது மிரட்டி மடியாத செல்லப் பிள்ளையை அடி கொடுத்து வேலை வாங்குவது போலதான்.
பெரும்பாலோனோர்க்கு இந்த நிலையிலேயே உடல் இயக்கம் வந்துவிடும். 
எழுந்து விடுவார்கள். 
அப்படியும் உடல் ஒத்துழைக்க மறுத்தால், மீண்டும் பயமுறுத்த மூளை தயாராகும். 

சுற்றுப்புறத்தில் ஒரு பெரிய ஆபத்து சூழ்ந்திருப்பது, கால்கள் மற்றும் கைகளில் ஏதேனும் பொருள்கள் கொண்டு வலி உருவாகும் வகையில் தாக்குதல் நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, விதவிதமான அச்சம் ஏற்படுத்தும் எண்ணங்களைத் தோற்றுவிப்பது என எல்லா முயற்சிகளையும்எடுக்கும். 
ஒரு வழியாக உங்களைக் காப்பாற்றியும் விடும். உடல் இயக்கத்தை சீராக்கி விடும்.
 சரி, இந்த ‘Sleep Paralysis’ எதனால் ஏற்படுகிறது?
தூக்கமின்மை, அதீத உடல் உழைப்பு, சரியான நேரத்தில் உணவு உண்ணாதிருத்தல், உறங்காது இருத்தல், மன அழுத்தம் போன்றவை இதற்கு வழிவகுக்கும். 
மிகவும் அரிதாக மட்டுமே, இது மனநோய்கள் உடன் இணைத்துப் பேசப்படுகிறது. 
இந்த நிலை ஏற்பட்டால், எதுவும் பயப்படத்தேவை இல்லை. சீரான உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 
எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்யுங்கள். 
இப்பிரச்னை தொடர்ந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள்.
                                                                                                                            நன்றி:  ர.சீனிவாசன்(விகடன்)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 30 அக்டோபர், 2017

சும்மா கிடக்கும் சங்கை .....

ட்டபொம்மனில் ஆரம்பித்த போக்குவரத்துக் கழகங்கள்,மாவட்டங்கள்  பெயர்,பெரும்பிடுகு வரை போய் 500பேர்கள் மட்டுமே உள்ள சாதியினர் கூட தங்கள் சாதி தலைவர் பெயரை வைக்கக்கோரி போராடும் அளவு போனது.
அம்பேத்கார் பேருந்து மீது பசும்பொன் முத்துராமலிங்கம் பேருந்து ஆதரவாளர்கள் கல்வீசவும்,அவர்கள் திருப்பி இவர்கள் பேருந்தை  எரிப்பதுமாக போர்க்களமாகியது தமிழகம் .

எந்தப்பேருந்தை எந்த சாதிக்காரன் தாக்குவனோ என்ற பயம் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் அளவு தமிழகம் பாதுகாப்பில்லாமல் போனது பலருக்கு மலரும் நினைவில் இருக்கலாம்.

சாதி தலைவர்கள் பெயரை சூட்டுவதால் உண்டான பலனை தமிழகம் அனுபவித்தப்பின்னர்தான் தலைவர் கலைஞர் மாவட்டங்கள்,போக்குவரத்துக்கழகங்களில் இருந்து அவர்கள் பெயரை நீக்கி கலவரங்களுக்கு முடிவு கட்டினார்.
ஆனால் அதை அவரது மகனே மீண்டும் துவக்குவது சரியல்ல. 



விடுதலைப் போராட்ட வீரர்கள்,அரசியல் தலைவர்களை சாதிய ரீதியில் அணுகும் போக்கு தலை தூக்கி உள்ள நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கும் வேலையை தளபதி செய்யக் கூடாது.
ஏற்கனவே மதுரை விமான நிலையத்துக்கு காரராஜர் பெயரை வைக்க கோரி நாடார் சங்கங்கள் கோரிக்கை நிலுவையில் உள்ளதை தளபதி நினைவில் கொள்ளவில்லையே.


காமராஜர் தற்போது தமிழத்தின் பெருந்தலைவராக இல்லை.நாடார் சங்கங்கள் அவரை தங்கள் சாதி தலைவராக குறுகிய வட்டத்தில் அடைத்து விட்டார்கள்.


இந்திய அரசியலிலே பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர் காமராஜர் படத்தை வீடுகளில் வைத்ததற்காக என்னை நீ அந்த சாதியா என்று கேட்டவர்கள் பலர்.கல்விக்கண் திறந்த காமராஜருக்கே அந்நிலை என்றால் தனது வாழ் நாளில் தனது சாதிக்காக  உழைத்த காங்கிரஸ்,பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த தலைவர் முத்துராமலிங்கம் நிலை எப்படி என்று தெரியாதா?

சுபாஷ் சந்திர போஸின் பார்வர்ட் பிளாக் கட்சியில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தது போய் பார்வர்ட் பிளாக் என்றால் தேவரின அமைப்பாக மாறிப்போனது வரலாறு.


முத்துராமலிங்கத் தேவர்,காமராஜர்,வ.உ.சி.போன்றோரை சாதிகள் முன்னிறுத்தும் போக்கு இருக்கையில் வீண் குழப்பத்தை உண்டாக்காமல் இருக்க தலைவர்கள் பெயரை சூட்டாமல் அந்தந்த இடத்தின்,ஊரின் பெயர்களை வைப்பதுதான் அமைதிக்கான வழி .அதுமட்டுமல்ல வெளி நாடுகளில் உள்ளவர்கள் யார் பெயர் எந்த ஊர் என்று குழம்பாமல் இருக்கவும் உதவும்.


தேவர் பிறந்தநாளில் ஏதாவது சொல்லவேண்டும் என்று அரசியல்வாதிகள் சொல்வது எதிர்தரப்பை அவர்கள் மீது அவநம்பிக்கையை வைக்கத்தான் உதவும்.
தொகுதிகளை சாதி வாக்குகளை
கணக்கிட்டு பார்த்துக்கொடுப்பதே தவறு.


சொல்லப்போனால் பிற சாதியினர் வாக்குகள் ஒட்டு மொத்தமாக அதிகமாகத்தான் இருக்கும்.அவர்கள் திட்டமிட்டு கட்சிகளின் சாதி வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தால்?


அந்நிலை விரைவில் வரப்போகிறது.சாதி வெறியை அரசியல் கட்சிகள்தான் தூண்டுகின்றன.அதற்கு திமுகவும் விலக்கல்ல என்ற அவப்பெயர் வேண்டாம் தளபதி அவர்களே?


வெள்ளி, 27 அக்டோபர், 2017

மூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும்,

வரலாற்றில் மூலதனத்தின் இடமும்.

150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்



கட்டுரைக்குள் நுழையும் முன்பாகச் சில வார்த்தைகள்…
மாமேதை கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் தொகுதியின் முதல் பாகம் வெளியிடப்பட்டதன் 150 – ஆவது ஆண்டு நிறைவு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மூலதனத்தின் மரணத்தைப் பிரகடனம் செய்த இந்நூல், தொடர்ந்து உலக முதலாளி வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
முதலாளித்துவத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்துத் தனது மூலதனம் நூல் வழியாக உலகிற்கு எடுத்துரைத்த மாமேதை காரல்மார்க்ஸ்.
மூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல, தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் மூலதனத்தைப் படிப்பதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர்.
1867, செப்டம்பர் 14-ஆம் தேதியன்று மூலதனத்தின் முதல் தொகுதி ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி அந்த மாபெரும் படைப்பை இருட்டடிப்பு செய்து விட முதலாளி வர்க்கம் முயன்றது. இருப்பினும், 1872-இலேயே அதன் ரசிய மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது. தொடர்ந்து பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகின.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை மார்க்ஸால் முடிக்க இயலவில்லை. முற்றுப்பெறாத கையெழுத்துப் படிகள் அனைத்தையும் எங்கெல்ஸிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார் மார்க்ஸ்.
தனது சொந்த ஆய்வுப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை முடிப்பதை மட்டுமே தனது வாழ்நாள் கடமையாக்கிக் கொண்டார் எங்கெல்ஸ். “இதற்கு மேல் மார்க்ஸின் கையெழுத்துப் பிரதியில் தொடர்ச்சியில்லை” என்ற எங்கெல்ஸின் துயரம் தோய்ந்த குறிப்புடன் நின்று போகிறது மூன்றாவது தொகுதி.
1867 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனம் – முதல் தொகுதியின் முகப்பு அட்டை.
முதல் தொகுதி வெளிவந்த இரண்டாண்டுகளில் மார்க்ஸ் ரசிய மொழி கற்கத் தொடங்கினார். 1870-இல் சிக்பிரீட் மேயர் என்ற தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார் மார்க்ஸ். “ஜெர்மன்-ரோமானிய மொழிக் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு மொழியை கற்றுத் தேர்வதற்கு இந்த வயதான காலத்தில் நான் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். இருப்பினும் நிச்சயமாக இது பயனுள்ள முயற்சிதான்.
ரசியாவில் தற்போது தோன்றியிருக்கும் அறிவுத்துறை இயக்கம், அந்தச் சமூகத்தின் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருக்கும் கொந்தளிப்புக்குச் சான்று பகர்கிறது. கண்ணுக்குத் தெரியாத இழைகள் மூலம் மனிதர்களின் உடல்களுடன் அவர்களது சிந்தனைகள் இணைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன” என்று அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.
அந்த மாமேதையின் புரட்சிகர உள்ளுணர்வு வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் உண்மையென்று பின்னாளில் ரசியப் பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. இது மூலதனம் நூலின் 150-ஆவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு. மூலதனம் பயில்வோம். மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்துவோம்!

***

“தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட, பெரிதும் தூற்றப்பட்ட மனிதர் மார்க்ஸ்” என்று அவருடைய கல்லறையில் நிகழ்த்திய உரையில் எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.
அத்தகைய வெறுப்புக்கும், தூற்றுதலுக்கும் மார்க்ஸ் இலக்கானதற்குக் காரணம், முதலாளித்துவ சமூகத்தின் உயிர்நிலையையே தாக்கும் இரண்டு விஷயங்களைத் தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தியதுதான்.
முதலாவதாக, முதலாளித்துவம் மனித குல வரலாற்றில் இயல்பாகப் பரிணமித்ததோ, காலத்தால் அழியாததோ அல்ல என்பதை மார்க்சின் ஆய்வு நிறுவியது.
ஏனென்றால், பெரும் திரளான மக்களை, அவர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களிலிருந்து பலவந்தமாகவும், மோசடியாகவும் பிரித்து வீசி, அந்தச் சாதனங்களைத் திருடிக் கைப்பற்றித் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டவர்களைச் சார்ந்து வாழும்படி மக்களைக் கட்டாயப்படுத்திய வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் மீதுதான் முதலாளித்துவம் நிற்கிறது.  இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையின் அடிப்படையில் உருவான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தவிர்க்க முடியாமல் தன் முடிவைச் சந்திக்கும் என்கிறது மார்க்ஸின் ஆய்வு.
தோழர் ஏங்கெல்ஸ்
இவ்வாறு முதலாளித்துவம் அழிந்துபடும்போது, மனித குலத்தையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.
இரண்டாவதாக, தொழிலாளர்கள் உபரி மதிப்புக்காக எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், அவ்வாறு சுரண்டப்பட்ட உபரி மதிப்பை (இலாபம்) தமக்குள் பிரித்துக் கொள்வதில் ஆலை முதலாளிகளும், வணிகர்களும், நிலவுடைமையாளர்களும், வட்டிக் கடன்காரர்களும் எவ்வாறு போட்டி போடுகிறார்கள் என்பதையும், இந்த முரண்பாடுகள் சர்வதேச அளவில் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான போட்டியாகவும், காலனி ஆதிக்கமாகவும் ஏகாதிபத்தியமாகவும் வெளிப்படுவதையும் இயக்குகின்ற முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பான விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.
அதாவது, முதலாளித்துவத்தை இயக்குவது வெறும் உலகளாவிய அரசியல் பொருளாதாரமல்ல; அரசுகளையும் அவற்றுக்கிடையிலான உறவுகளையும் மையமாகக் கொண்ட அரசியல் பொருளாதாரம் என்பதை அவர் நிறுவினார்.
150 ஆண்டுகளுக்கு முன்பு, 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட “மூலதனம்” நூலின் முதல் பாகம் மேற்கண்ட முதல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு, மேற்கண்ட இரண்டாவது முடிவை விளக்கிக் கூறுகிறது.
இந்த முடிவுகள் இரண்டுவிதமான பொருட்களில் வரலாற்றுப் பூர்வமானவை. முதலாவதாக, முதலாளித்துவம் என்பது காலத்துக்கு அப்பாற்பட்டதோ, என்றென்றும் நிலைத்திருப்பதோ அல்ல. முதலாளித்துவத்தின் தோற்றம் என்பது வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தைச் சார்ந்தது. மனிதகுல வரலாற்றின் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தோற்றம் பெற்றதைப் போல, எதிர்காலத்தில் அதற்கு ஒரு முடிவும் உண்டு.
வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்களும் குறிப்பிட்ட வர்க்கத்துக்குள் நடக்கும் போராட்டங்களும் தேசங்களுக்கிடையேயான போராட்டங்களும் ஒரு தேசத்துக்குள்ளேயே நடக்கும் போராட்டங்களும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் நிரம்பிய கொந்தளிப்பான வரலாற்றை நமக்குக் காட்டுகின்றன. முதலாளித்துவம் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் வர்க்கங்கள் அடங்கிய மனித குலம், தனது தெரிவின் மூலம் அதனை முடித்து வைக்கவும் இயலும் என்பதை “மூலதனம்” நூல் நமக்குக் காட்டுகிறது.
அதனால்தான், “மூலதனம்” என்ற இந்த நூல் வேறெந்த நூலைக் காட்டிலும், முதலாளித்துவ உலகத்தின் வரலாற்றிலிருந்தே பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்கி வருகிறது. அதனால்தான் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1990-களுக்கு முன்பு வரை, சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கும் பாட்டாளி வர்க்க இயக்கங்களும், புரட்சிகளும், மக்கள் போராட்டங்களும் மார்க்ஸின்  “மூலதனம்” பாய்ச்சிய ஒளியில்தான் நடைபோட்டன.
மார்க்ஸ் விடை கண்ட கேள்விகள்
இன்று புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்டன. முதலாளித்துவத்தின் தாயகங்களாக விளங்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இளம்தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கோர்பின் (பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர்), சாண்டர்ஸ் (அமெரிக்க சமூக ஜனநாயகவாதி) போன்ற தலைவர்கள் மற்றும் சோசலிச கட்சிகளின் பின்னால் அவர்கள் திரண்டு வருகின்றனர். இந்தச் சூழல், இந்நாடுகளின் வரலாறுகளுக்குள்ளே மார்க்சின் மூலதனத்தை மீண்டும் அழைத்து வருமா?
150 ஆண்டுகளாக “மூலதனம்” நூலின் உள்ளடக்கத்தை மேற்குலகம் திரித்துப் புரட்டியிருக்கிறது. அந்தத் திரிபுகள் மூலதனம் நூலின் மீது குவிந்து, அதனை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அகற்றுவதென்பது, நமது அறிவுத்துறை பாரம்பரியம் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவற்றையும், மார்க்சிய மைய நீரோட்டம் என்பனவற்றையும் அகற்றுவதாக இருக்கும். இவ்வாறு அகற்றப்படவேண்டியவை நாம் கற்பனை செய்வதை விட மிகவும் அதிகமானவையாக இருக்கும்.
செவ்வியல் பொருளாதாரவியல் 17-ம் நூற்றாண்டில் வில்லியம் பெட்டி-யின் எழுத்துக்களில் தொடங்கி, 1776-இல் பதிப்பிக்கப்பட்ட ஆடம் ஸ்மித்தின் “தேசங்களின் வளங்கள்” என்ற நூலில் உருப்பெற்று, 19-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் ரிக்கார்டோ மரபினரால் வளர்த்துச் செல்லப்பட்டது.
இந்தக் கட்டத்தில், “மதிப்பு என்பது என்ன? உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது? முதலாளித்துவ நெருக்கடிகள் ஏன் நிகழ்கின்றன? ஒரு நாட்டில் இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் போக்கை எப்படி விளக்குவது?” என்பன போன்ற சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் செவ்வியல் பொருளாதாரம் தடுமாறி நின்றது.
கனடா – மாண்டிபா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுத்துறை பேராசிரியர் ராதிகா தேசாய்
மார்க்சின் மூலதனம் அனைத்துக்கும் விடையளித்தது. மதிப்பு என்பது என்ன, உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது, நெருக்கடிகள் ஏன் ஏற்படுகின்றன, இலாப விகிதம் ஏன் குறைகிறது, ஊதியங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடையளித்தது. சுரண்டல் தன்மை வாய்ந்ததும், நெருக்கடிகளிலிருந்து தப்ப முடியாததும், சர்வதேச வல்லாதிக்கத் தன்மை வாய்ந்ததுமான முதலாளித்துவத்தின் இயல்பை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், செவ்வியல்
முதலாளித்துவத்தின் உண்மை இயல்பு உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட்டது. உழைக்கும் வர்க்கங்கள் மென்மேலும் தமது வர்க்கநலன் குறித்துத் தெளிவு பெறத் தொடங்கினர். முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதென்பது மென்மேலும் சாத்தியமற்றதாக மாறத் தொடங்கியது. முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற புதியதொரு பொருளாதாரக் கோட்பாடு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது. சொல்லி வைத்தாற்போல அது வந்து சேர்ந்தது.
மார்க்சின் மூலதனத்தை எதிர்கொள்ள கொச்சைப் பொருளாதாரவியல்!
“மூலதனம்” நூல் வெளியான மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே 1870-இல் இங்கிலாந்தின் ஜெவோன்ஸ் தலைமையிலான அறிவுஜீவிகள் குழு உருவாக்கிய மார்ஜினலிச கோட்பாடு, வேண்டலை (Demand) ஆளும் விதிகளையும் வழங்கலை (Supply) ஆளும் விதிகளையும் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தி, பொருளின் விலை இதன் வழியே தீர்மானிக்கப்படுவதாகக் கூறியது.
இதைப் புரிந்து கொள்ள  “சரக்குகளின் மாய்மாலம்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது அகிலத்தின் மார்க்சியத் திரிபுகளை எதிர்த்துப் போராடிய தோழர் ரோசா லக்சம்பர்க்
முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களில் மனித உழைப்பு சமூகமயமாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு எளிய சட்டையில், அதன் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்கள், பருத்தி-நூல்-துணி, பிளாஸ்டிக்-பட்டன், இரசாயனம்-சாயம், உலோகங்கள்-தையல் எந்திரம் என நூற்றுக்கணக்கான பொருட்களின் உற்பத்தி சங்கிலிகள் ஒவ்வொன்றிலும் ஈடுபடும் உழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான ஏன், இலட்சக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவும் இந்தச் சமூகமயமான உற்பத்திச் சங்கிலியில் ஒரு சிறு பகுதி உழைப்பை செலுத்தி, அதற்குப் பதிலாக ஒட்டு மொத்த சமூக உற்பத்தியில் உருவாக்கப்படும் பொருட்களில் ஒரு பகுதியைத் தமது பங்காகப் பெற்றுக் கொள்கின்றனர்.
இவ்வாறு முதலாளித்துவ சமூகத்தில், உழைப்பின் சமூகத்தன்மை பொருட்களைச் சந்தையில் விற்பதற்கான சரக்குகளாக உற்பத்தி செய்வதன் மூலம் வெளிப்படுகிறது; எனவே, மனிதர்களுக்கிடையேயான சமூக உறவாக வெளிப்படாமல், சரக்குகளுக்கிடையேயான சமூக உறவாகவும் மனிதர்களுக்கிடையேயான பொருளாயத உறவாகவும் வெளிப்படுகிறது; வெளிப்பார்வைக்கு புலப்படாமல் மறைக்கப்படுகிறது; இதிலிருந்து பல போலியான தோற்றங்களும், பொய்யான கருத்துக்களும் பரவி ஆதிக்கம் செலுத்துகின்றன.
மூலதனம் நூலில் சரக்குகளின் மாய்மாலம் (Commodity fetishism) என்ற தலைப்பின் கீழ், கொச்சைப் பொருளாதாரவியல் (Vulgar economics) என்று மார்க்ஸ் சாடிய, எள்ளி நகையாடிய இந்த போலித் தோற்றங்களையும், பொய்யான கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட தொகுப்புதான் மார்ஜினலிசம் எனப்படுவது.
கொச்சைப் பொருளாதாரவியலை உருவாக்கிய குழுவின் தலைவர் வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ்
இந்தப் போலி பொருளாதாரவியல், சரக்கு சந்தையில் விற்கப்படுவதை ஆய்வு செய்யும் போது, பொருளின் உற்பத்தியையும், வாங்குபவரின் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியையும் விட்டு விடுகிறது. விலைகளை ஆய்வு செய்யும்போது விலைகளுக்கு அடிப்படையான மதிப்புகளை புறக்கணிக்கிறது. (இந்த அணுகுமுறையின் வக்கிரத்தைப் புரிந்து கொள்ள ஜுலை, 2017, பு.ஜ. இதழில் வெளியான விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.) உற்பத்தியில் ஈடுபடும் சமூக வர்க்கங்களை புறக்கணித்து விட்டு, தனிநபர்கள் மீது கவனத்தைக் குவிக்கிறது.
“வேண்டலும், வழங்கலும் சமமாகும் போது விலை தீர்மானிக்கப்படுகிறது” என்ற கொச்சையான, அறிவியலுக்குப் புறம்பான சமநிலை கோட்பாடு, முதலாளித்துவத்தில் அடங்கியிருக்கும் உள்ளார்ந்த முரண்பாடுகளையும், நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் நிகழ்ச்சிப் போக்கையும் புறக்கணிக்கிறது. இருப்பினும், நெருக்கடிகள் இருப்பதை மறுக்கவியலாமல், போர், பஞ்சம், மோசடி போன்ற வெளிப்புற காரணிகள்தான் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறது இந்த கொச்சைப் பொருளாதாரவியல்.
பொருளாதாரத்திலிருந்து சமூகவியலைப் பிரிக்கிறார் மேக்ஸ் வேபர் !
19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், பொருளாதாரத்துறையில் பயிற்சி பெற்றவரான மேக்ஸ் வேபர், பொருளாதாரவியலிலிருந்து சமூகவியலைப் பிரித்தெடுத்து ஒரு புதுவிதமான சமூக அறிவியல் உழைப்புப் பிரிவினையைத் தோற்றுவித்தார். “நவீன முதலாளித்துவ சமூகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியாக இயங்குவதால், அவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வாதிட்டு, சமூகவியல் என்ற புதிய துறையைத் தனியாக உருவாக்கினார்.
ஏனென்றால், பொருளாதாரவியல் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவது முதலாளிகளுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஏனென்றால், இந்த வழிமுறையின் மூலம்தான் தமது பொருளாதார நடவடிக்கைகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலேயே, பொருளாதாரத்தின் வேகத்தையும் தன்மையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவர்கள் தங்கள் கையில் வைத்துக்கொள்ள முடியும்.
முதலாளித்துவ சமூகவியல் துறையை உருவாக்கிய மேக்ஸ் வேபர்
இத்தகைய செயற்கையான அறிவுத்துறை பிரிவினை தோற்றுவிக்கும் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆய்வாளர்கள் மேலோட்டமாகவே உணர்ந்திருக்கின்றனர். சமூக அறிவியல் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது குறித்து புலம்புகின்றனர். “துறைகளுக்கிடையேயான ஆய்வு’’, “பல்துறை ஆய்வு” போன்ற வித்தைகளின் மூலம் இந்தக் குறைபாட்டைச் சரிக்கட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், சமூகத்திலிருந்து வரலாற்றைப் பிழிந்து வெளியேற்றியிருக்கும் மேற்கண்ட ஆய்வுமுறை ஏற்படுத்தியிருக்கும் பெருந்தீங்கைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்
மார்க்ஸ் முன்வைக்கும் வரலாற்றியல் ஆய்வு முறை என்ன? வர்க்கங்கள், கட்சிகள், அரசுகள் முதலான அமைப்பாகத் திரண்ட மனிதக் குழுக்கள், தமக்கு வரலாற்றுவழியில் கையளிக்கப்பெற்ற சூழலில் இயங்குகிறார்கள். தமது முடிவுகளாலும் செயல்பாடுகளாலும் எதிர்கால வரலாற்றைப் படைக்கிறார்கள்.
மேக்ஸ் வேபர் போன்றோர் பெற்றெடுத்த புதிய சமூக அறிவியல்களின்படி, “முந்தைய தலைமுறை மனிதர்கள் மேற்கொண்ட வரலாற்று வழியிலான முடிவுகளும், செயல்பாடுகளும், அந்தப் பின்புலத்திலிருந்து பிய்த்தெடுக்கப்படுகின்றன. அவையனைத்தும் வரலாற்றுத் தேர்வுகளின், முடிவுகளின் விளைவுகளே என்பதற்குப் பதிலாக, மண்டியிட்டு நிறைவேற்ற வேண்டிய விதிகளாக நம் முன் நிறுத்தப்படுகின்றன.”
“வரலாற்றின் கருவிகளாக இயங்கும் மனிதர்களின் நடவடிக்கை, இனி வரவிருக்கும் வரலாற்றின் செயற்களத்தை மாற்றியமைத்த வண்ணம் இருக்கிறது என்ற உண்மையையும் மறுக்கிறது. இப்போதைய வரலாற்றை முந்தைய காலத்து கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் உருவாக்கிச் சென்றிருப்பதைப் போல இப்போதைய கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் தமது செயல்களால் எதிர்கால வரலாற்றை உருவாக்குகின்றன என்பதை அது கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை.”
“இத்தகைய சமூக அறிவியல் அனைத்தையும் ஒரு எளிய நிகழ்கால மொழியில் சித்தரிக்கிறது. கட்சிகள் இதைச் செய்கின்றன – அரசுகள் இப்படிச் செய்கின்றன – பணவீக்கம் – வேலையில்லாத் திண்டாட்டம் இப்படிச் செய்கிறது – என்று பேசுகிறது. ஒரு காலகட்டத்தில் தோன்றும் பணவீக்கம் அல்லது வேலைவாய்ப்பின்மை முந்தைய காலகட்டங்களின் பணவீக்கம் அல்லது வேலை வாய்ப்பின்மையிலிருந்து வேறுபட்டது என்பதைப் புறக்கணிக்கிறது.”
வரலாற்று வழியில் தோன்றியிருக்கும் தேசிய வர்க்கங்களும் கட்சிகளும் அரசுகளும் தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளின் மூலமாக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கையாள்கின்றன என்ற உண்மையை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்கிறது இந்த அறிவியல்.  மார்க்ஸின் மூலதனம் கையாளும் ஆய்வுமுறைக்கும் வேபர் வகைப்பட்ட இந்த அறிவியலுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.
நிதி மூலதனத்தின் தோல்வி : அமெரிக்காவில் நடந்த வால் வீதி முற்றுகைப் போராட்டத்தில், முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்துவரும் போரை நிறுத்தக் கோரும் பதாகையை ஏந்திவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 
முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக உற்பத்தி முறைகளிலிருந்து முதலாளித்துவத்தைப் பிரித்துக் காட்டுவது, அது பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்வதாக இருப்பதுதான் என்பதை மார்க்சின் மூலதனம் எடுத்துக் காட்டியது.
முந்தைய சமூகங்களில் (உதாரணம் : இந்திய கிராம சமுதாயம், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை) பயன் மதிப்பை உற்பத்தி செய்யும் மனிதர்கள், சமூக உறவுகளின் அடிப்படையில் (சாதிய உறவுகள் அல்லது பண்ணையடிமை முறை) அவற்றை தமக்குள் பரிமாறிக் கொள்வது முதன்மையாக உள்ளது. சந்தை பரிவர்த்தனைக்கான உற்பத்தி மிகக் குறைந்த அளவே உள்ளது.
மாறாக, முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருட்களின் பயன் மதிப்பை (எ.கா – சட்டையின் பயன்மதிப்பு உடலுக்கு பாதுகாப்பு, அழகு) உருவாக்கும் மனித உழைப்பின் (ஆலை உற்பத்தி, வடிவமைப்பு, தையல்) நேரம், அந்தப் பொருள் சந்தையில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பைத் தீர்மானிக்கிறது.
அதாவது உழைப்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட பொருட்களுக்குள் உறைந்திருக்கும் உழைப்பின் அளவீடுதான் அது.
முதலாளிகளுக்கிடையேயான சந்தைப் போட்டி, புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் பொருட்களின் மதிப்பு, சமூகரீதியில் அவசியமான அளவுக்கு வீழ்த்தப்படுகிறது. அதாவது அவற்றின் உற்பத்திக்குத் தேவையான சமூகரீதியிலான உழைப்பின் அளவு தொடர்ந்து குறைந்து செல்கிறது; சமூக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது, புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள் என உற்பத்தி சக்திகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.
முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான சுரண்டல் உறவு தோற்றுவிக்கும் முரண்பாடு – ஒற்றுமை, முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் தேசிய அரசுகளின் கீழ் திரண்டு செயல்படும் மூலதனங்களுக்கிடையேயான போட்டி மற்றும் ஒற்றுமை என்ற இரண்டு வகை முதலாளித்துவ முரண்பாடுகளை உள்ளடக்கிதான் முதலாளித்துவம் மதிப்பை உற்பத்தி செய்கிறது. தனக்கேயுரிய அராஜகம் மற்றும் அநீதியின் காரணமாக, ஒரு நெருக்கடி முடிவதற்குள் இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடுகிறது. தன்னுடைய இருத்தலுக்கான நியாயத்தையும் இழக்கிறது.
மூலதனத்தின் ஆய்வுமுறையை மறுக்கும் முதலாளித்துவ மார்க்சியர்கள் !
வரலாற்றுரீதியாக முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பாக அமைவதும், முரண்பாடாக இருப்பதும், அதனை முன்னோக்கி செலுத்தும் சக்தியாக விளங்குவதும், அது, “பரிவர்த்தனை மதிப்பை” உற்பத்தி செய்கிறது என்பதுதான். புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடுகள், இந்த தனிச்சிறப்பான தன்மையை முதலாளித்துவத்திடமிருந்து அகற்றிவிடுவதால், முதலாளித்துவம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாகவும், நிலையானதாகவும், நிரந்தரமானதாகவும், மாற்றமில்லாததாகவும் நமக்கு காட்டப்படுகிறது. இதன் காரணமாக நெருக்கடிகள், போர்கள், ஒடுக்குமுறைகள் நிரம்பிய முதலாளித்துவத்தின் கொந்தளிப்பான வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான மையச் சரடை நாம் இழந்து விடுகிறோம்.
அறிவுத்திறன் வறண்டுபோன மேற்கண்ட சமூக அறிவியல்களின் புரிதல்கள், மார்க்சின் மூலதனத்துக்கு அருகில் நிற்பதற்குக் கூட அருகதையற்றவை. ஆனால், மார்க்சியவாதிகள் எனப்படுவோரே, எதிரிகளின் படைக்கலன்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதிய செவ்வியல் பொருளாதாரம் என்ற டிரோஜன் குதிரையை, மார்க்சிய கோட்டைக்குள் உருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களே!
மார்க்சியம் தோன்றிய ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதனால் ஈர்க்கப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் வந்து சேர்ந்த அறிவுத்துறையினர் பலர் தமக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்பட்ட கொச்சைப் பொருளாதாரவியலைத் தம்மோடு இழுத்து வந்தார்கள். இளம் வயதிலேயே பதிய வைக்கப்பட்ட இந்தக் கல்வி, அதற்குரிய விளைவை ஏற்படுத்தியது.
அறிவியல் அடிப்படையிலான மார்க்சிய ஆய்வுமுறையைக் கற்று, தமது முந்தைய கொச்சைப் பொருளாதாரக் கல்வியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மார்க்சியத்துக்கு நேரெதிரான அந்தக் கொச்சைப் பொருளாதாரக் கோட்பாடு மற்றும் ஆய்வு முறையியல் சட்டகத்துக்குள் மார்க்சியத்தைப் பொருத்துவதில் அவர்களில் சிலர் ஈடுபட்டனர்.
1889-ல் உருவாக்கப்பட்டு 1916 வரை நீடித்த இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்திலேயே இந்தப் போக்கு ஆரம்பித்திருந்தது.
முதலாளி தான் குவித்திருக்கும் பணத்தைப் பயன்படுத்தி உற்பத்திச் சாதனங்களையும், கூலி உழைப்பையும் சந்தையில் வாங்கிய பிறகுதான் உற்பத்தி நடைபெறுகிறது, தொழிலாளியிடமிருந்து உபரி உழைப்பைக் கறப்பதன் மூலம் போடப்பட்ட முதலீட்டை விட அதிக மதிப்பை உள்ளடக்கிய சரக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இச்சரக்குகளை சந்தையில் விற்றுப் பணமாக மாற்றி, அந்தப் பணம் மீண்டும் மூலதனமாக மாற்றப்பட வேண்டும். இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற்றால்தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்க முடியும்.
இந்த மூலதனத்தின் மறுஉற்பத்தி சுற்றோட்டம் பற்றிய பகுப்பாய்வு, மார்க்சின் இறப்புக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளிலிருந்து தொகுத்து எங்கெல்சால் “மூலதனம்” 2-ஆம் பாகமாக வெளியிடப்பட்டது. இந்தப் பகுப்பாய்வுக்காக மார்க்ஸ் உருவாக்கிய முறையியல், மூலதன மறுஉற்பத்திச் சுற்றோட்டத்தில் அடங்கியிருக்கும் முரண்பாடுகளையும் விகிதாச்சார குலைவையும் வெளிப்படுத்துகிறது.
ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளின்போதே, இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை மறுதலித்து, புதிய செவ்வியல் பொருளாதாரவாதமான முதலாளித்துவ உற்பத்தியே அதற்கான சந்தை வேண்டலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை தூக்கிப்பிடித்தனர். இதை எதிர்த்து ரோசா லக்சம்பர்க் போராடினார். அறிவியலையும், வரலாற்றையும் பிரிக்கும் பாசிட்டிவிசமாக இரண்டாம் அகிலத்தின் மார்க்சியம் மாறியதற்கும்கூட இந்தப் போக்கு பின்புலமாக இருந்தது.
இன்று இது, “மார்க்சிய விரோத மார்க்சியப் பொருளாதாரவியல்” ஆக வளர்ந்து, “மூலதனம்” நூல் குறித்துக்கொச்சைப் பொருளாதாரவியல் அடிப்படையிலான பல அபத்தமான கேள்விகளை முன்வைத்து விவாதிக்கிறது.
முதலாவதாக, உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் மதிப்பு, சந்தை போட்டியில் விலையாக எப்படி உருமாறுகிறது என்ற பிரச்சினை மூலதனத்தில் விளக்கப்படவில்லை என்ற  வாதம்.
இரண்டாவதாக, முதலாளித்துவ உற்பத்தியில் மிகை உற்பத்தியும் வேண்டல் பற்றாக்குறையும் இல்லை என்ற அடிப்படையிலான வாத பிரதிவாதங்கள்.
மூன்றாவதாக, இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் பிரச்சினையை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை என்ற வாதம்.
நான்காவதாக, மார்க்சின் பணம் பற்றிய கோட்பாடு சரக்கு அடிப்படையிலானது என்ற வாதங்கள்  என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
இன்னும் சில, ‘மார்க்சிய’ ஆய்வாளர்கள், “பொருளாதார நிர்ணயவாதம்” குறித்து எச்சரிக்கின்றனர். “பொருளாதார நிர்ணயவாதம்” என்ற பேச்சே பொருளாதாரவியலைப் பிற சமூக அறிவியல்களிலிருந்து பிரித்து ஆய்வு செய்யும் முதலாளித்துவ அணுமுறையில்தான் சாத்தியமாகும்.  “மூலதனம்” நூலுக்கும் இத்தகைய அணுகுமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மேலே சொன்ன போக்குகளின் ஊடாக, “மூலதனம்” நூலைப் பல பத்தாண்டுகளாக மாணவர்களுக்குக் கற்பித்தவர்களான சில நட்சத்திர அறிஞர்கள், “மூலதனம்” நூலில் வரலாறே இல்லை என்று சாதிக்கும் கண்கொள்ளாக் காட்சியும் நமக்குக் காணக் கிடைக்கிறது.
மூலதனத்தில் உறைந்திருக்கும் வரலாற்றை மீட்போம்! 
முதலாளித்துவத்திலிருந்தும் மீள்வோம்!
சரி. இன்றைக்கு மூலதனம் நூலினைப் படிக்க விரும்புகிறவர் மேற்கூறியவற்றிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும்? தன்னோடு சேர்த்து ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இந்த பூமிப்பந்தையும் அழிவுக்குக் கொண்டு செல்வதற்கு முன் முதலாளித்துவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால்,  “மூலதனம்” கற்பிக்கும் ஆய்வின் வழியிலான வரலாற்றை நாம் படைக்க வேண்டும். மூலதனம் மீண்டும் வரலாற்றுக்குள் நுழைய வேண்டுமானால், மூலதனம் நூலுக்குள் உறைந்திருக்கும் மூலதனத்தின் வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
இதற்கு வரலாற்று நீக்கம் செய்யப்பட்ட பொருளாதாரவியல் கல்வியையும், சமூக அறிவியல் கல்வியையும் உங்கள் மூளையிலிருந்து கழற்றி வாசலிலேயே விட்டுவிட்டு, அதன் பின்னர் மூலதனம் நூலுக்குள் நுழையுங்கள். தற்போது இருக்கும் இடத்துக்கு மனிதகுலம் எப்படி வந்து சேர்ந்தது என்பதையும், எத்தகைய எதிர்காலத்தை நோக்கி நாம் செல்லக்கூடும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு அந்தக் கல்விகள் ஒருபோதும் உதவாது. மார்க்ஸ் கற்பிப்பதைப் படியுங்கள். “மூலதனம்” நூல் கடினமானது, என்று சொல்பவர்களின் பேச்சைக் கடுகளவும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் சொல்ல வருவதெல்லாம், “நான் எழுதிய புத்தகத்தை முதலில் படியுங்கள்” என்பதுதான்.
நம்மிடம் இருக்கும் அவகாசம் மிகக் குறைவு, அதை “மூலதனம்” வாசிப்பதற்குச் செலவிடுவோம். ஒரு அறிமுக நூலைப் படிப்பது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், எர்னஸ்ட் மன்டேலின் அறிமுகத்தைப் படியுங்கள். அது சுருக்கமானது. இக்கட்டுரையில் நாம் விவரித்துள்ள பிரச்சினைகள் இல்லாதது.
நினைவிற்கொள்ளுங்கள். மூலதனம் நூல் ஒரு தொழிலாளர் பத்திரிகையில் (1872-இல் பிரெஞ்சு தொழிலாளர் பத்திரிகையில்) தொடராக வெளியிடப்பட்டிருக்கிறது.  நீங்கள் இன்றைய தொழிலாளி வர்க்கம். வரலாற்றின் உள்ளே வாருங்கள் என்று உங்களை வரவேற்கும் அழைப்பிதழ்தான் – மூலதனம்.
கட்டுரையாளர், பேராசிரியர் ராதிகா தேசாய், கனடாவின் வின்னிபெக் மாநிலத்தில் உள்ள மான்டிபா பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வுத் துறை பேராசிரியர். 150-வது ஆண்டில் மார்க்சின் “மூலதனம்’’: “மூலதனத்தில்” வரலாறும், வரலாற்றில் “மூலதனம்” நூலும் –  என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது. அவசியமான இடங்களில் மட்டும் வாசகர்களின் புரிதலுக்காகக் கூடுதல் விளக்கங்கள் சேர்த்து தரப்பட்டுள்ளது.
மொழியாக்கம்:  அப்துல்                                                                                                                நன்றி:வினவு,    

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...