வியாழன், 21 ஆகஸ்ட், 2014

"'லைக்கா'" பற்றி

காய்ந்ததமிழன்" தெனாலி சோமன் "

கடந்த காலங்களில் லைக்கா குழுமத்தின் மீது “ராஜபக்சவின் பங்காளி” என்று கூறும் அளவிற்கு புலம்பெயர் தமிழர்களினால் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை லைக்கா குழுமத்திற்காக பேசிய அதிகாரி ஒருவர் ஊடகங்களில் மறுத்திருந்தார். ஆனால் பல சர்வதேச செய்தி நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியன லைக்காவுக்கும் இலங்கை ராஜபக்ச அரசுக்குமான நெருக்கமான உறவை பலத்த ஆதாரங்களுடன் வெளியே கொண்டுவந்து அவர்களின் இலங்கை அரசுக்கு ஆதரவான சுயரூபத்தை மக்களுக்கு காட்டியிருக்கின்றனர்.
suran

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் லைக்கா நிறுவனத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் தமிழ் மக்களை தம்; பக்கம் சாய்க்கும் ஒரு தவிர்க்க முடியாத தேவை இவர்களிற்கு ஏற்பட்டிருக்கிறது. ராஜபக்சவின் மைத்துனரின் கட்டுபாட்டில் இருக்கும் சிறீலங்கன் எயார்லைன்சின் பங்குகளை வாங்கி அதனை லைக்கா fபிலை என்று தமது பெயரில் இயக்கி வருகிறார்கள். இலங்கையின் தொலைத்தொடர்பு அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவற்றை வெற்றிகரமாக நடத்தி லாபத்தை திரட்டுவதானால் சுற்றுலா செல்லும் தமிழ்மக்களின் ஆதரவைத் திரட்டவேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் ராஜபக்ச அரசுடன் இவர்கள் ஏற்படுத்தியிருக்கும் நெருங்கிய தொடர்பினால் இழந்த நற்பெயரை மீளப்பெறுவது என்பது இவர்களுக்கு கடினமானது. 
இதனால் லைக்கா குழுவினர் இளையவர்களை தம்வசப்படுத்துவதன் மூலம் மீண்டும் தமிழ்மக்களை தம்பக்கம் சாயப்பதற்கு முயற்சிக்கின்றனர். அதேவேளை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலை (அதாவது இனப்படுகொலைக்கு வெள்ளையடித்தல், ஈழத்தமிழர்கள் என்ற அடையாளத்தையும் அவர்களின் ஈழ கோரிக்கையையும் மறக்கடித்தல் ) முன்னெடுத்து செல்வதற்கான ஒரு வழியினை தேர்ந்தெடுத்துள்ளனர் லைக்கா நிறுவனத்தினர். 
அதற்காக தற்போது இளையவர்கள் பலர் மிகவும் ஆர்வமாக இயங்கிவரும் கலைத்துறையின் பக்கமும் – விளையாட்டின் பக்கமும் இவர்களின் பார்வை திரும்பியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஈழக்கலைஞர்களையும் அவர்களின் படைப்பையும் ஊக்குவிக்குப்பதற்கு புலம்பெயர் ஈழ இளைஞர்களினால் நடத்தப்பட்ட ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியை (சாதனைத் தமிழா) அவர்களின் வலையில் வீழ்த்தும் முயற்சி நடந்தது. இது அந்த நிகழ்சியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களின் தவறல்ல. 
ஈழக்கலைஞர்களின் படைப்புக்களிற்கும் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிற்கும் அங்கீகாரம் அளித்து அவர்களை ஊக்குவித்து வளரவைப்பதாக சொல்லி பல வியாபார நிறுவனங்கள் தமது விளம்பரத்தை முன்னெடுப்பது பொதுவாக நடந்துவரும் ஒன்றே. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் ஏதோ ஒரு வகையில் தாம் தொடங்கியதை செய்து முடித்தே ஆகவேண்டும் என்ற நிலமையில் சில மோசமான வியாபாரிகள் வலையிலும் தெரியாது விழுந்து விடுகிறார்கள். 
எமது மக்கள் இந்தியக் குப்பைக் கலைகளுக்கு வழங்கும் ஆதரவின் ஒரு பங்கினையாவது ஈழக் கலைஞர்களுக்கு வழங்கியிருந்தால் இவ்வாறான வலைக்குள் விளையாட்டு கழகங்களோ கலைஞர்களோ விழவேண்டிய நிலமை வந்திருக்காது. இதனைப் புலம்பெயர் ஈழதமிழ்மக்கள் நன்றாக விளங்கிகொள்ளல் வேண்டும்.
ஆக இந்த சாதனைத்தமிழா விழாவிற்கு லைக்கா குழுமத்தினர் ஆதரவு வழங்குவதை அறிந்த சமூக ஆர்வலர்கள், ஈழகலைஞர்கள், எழுத்தாளர்கள், இளைஞர்கள் தாம் ஒன்றிணைந்து அந்நிகழ்விற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்தனர். முதலில் எதிர்ப்பினை பொருட்படுத்தாத ஏற்பாட்டு குழுவினர் மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அணுசரணையாளர்கள் பட்டியலில் இருந்து லைக்கா நிறுவனத்தினை நீக்கியிருந்தனர். 
(இலங்கை அடையாளத்தை திணிக்கும் வகையில் பரதநாட்டியம் கிரிக்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை லைக்கா நடத்த தொடங்கியிருக்கிறது) இதனை சாதனைத்தமிழா ஏற்பாட்டுக் குழுவினரிடம் இவ்வாறு லைக்காவை முதலில் எதிர்க்கத் தொடங்கியது யார் என கேட்டு அறிந்து சிலர் மூலம் வன்முறையின் மூலம் அடக்கலாமா என சிந்தித்தனர். தூஷன வார்த்தைகளால் திட்டி தீர்த்து எதிர்ப்பாளர்களை பண்புகள் சரியில்லாதவர்கள் என பொய் பரப்பிப் பார்த்தனர்.
suran
இதைத் தொடர்ந்து லைக்கா குழுமத்தின் விளம்பரங்களை தயார் செய்து கொடுக்கும் ஒருவர் தமக்கு எம்மைத் தெரியும் எனக்கூற அவர் மூலம் எம்மை ஒரு கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. உரையாடல் மூலம் பேசித் தீர்க்க முடியும் என எமக்கு நம்பிக்கையிருக்கா விட்டாலும் பேசிப்பார்ப்பதற்கு சம்மதித்தோம்.
அந்தக் கலந்துரையாடல் 12-June-2014 திகதி அன்று லண்டனில் உள்ள லைக்கா நிறுவனத்தின் சந்திப்பு அறையில் நடைபெற்றது. அங்கு நடந்தவற்றை மக்களுக்கு அப்படியே தெரிவிக்கும் கடமை இருப்பதால் அவற்றை நாம் உங்களிற்கு தருகிறோம். 
அன்றைய கலந்துரையாடலிற்கு நாங்கள் ஒருமணி நேரம் தாமதமாகவே சென்றிருந்தோம். இந்தச் சந்திப்பில் சதா, சந்தோஷ் செங்கோடன், சேனன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
லைக்கா தரப்பில் பிரேம் மற்றும் அவர்களது முக்கிய ஆலோசகர் ஒருவரும் உரையாடலுக்கு வந்திருந்தனர். லைக்காவின் முதலாளி அல்லிராஜா சுபாஷ்கரன் வந்திருந்த போதும் அவர் நேரடியாக எம்மை சந்திக்காமல் தனது அறைக்குள் சென்றிருந்தார். அனேகமாக அவர் எமது அறையில் இருந்த கண்காணிப்பு கமரா மூலம் அனைத்தையும் பார்த்துக் கேட்டுகொண்டிருந்திருப்பார் என நம்புகிறோம். 
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்தபின் தொடர்ந்த கலந்துரையாடலில் லைக்கா நிறுவனம் தாம் தமிழ் மக்களின் நல்லென்னத்துக்காக இயங்குவதாக ஒரு போடு போட்டனர்.
தமது நோக்கம் மக்களுக்கு உதவுவதே என்பதுபோல் அவர்கள் வாதிட்டனர். அதற்கு சான்றாக இலங்கையில் தாம் ஆரம்பித்திருக்கும் “சமூக நலன்” நடவடிக்கைகள் பற்றிய ஒளிப்படமொன்றையும் எமக்கு காட்ட முயற்சித்தனர். அந்தப் படத்தை முழுமையாக பார்க்க நமக்கு நேரமில்லை என்று நாம் தடுத்த போதும் ஒரு சில பகுதிகள் எமக்கு காட்டப்பட்டது. லைக்காவின் பெயிரில் அவர்களது பெரிய விளம்பர அட்டைகளோடு எடுக்கப்பட்ட படங்கள் எமக்கு காட்டப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 670 மாணவர்களுக்கு தாம் கல்வி உதவி செய்வதாகவும் 290 விதவைகளுக்கு மறு வாழ்விற்கான உதவி செய்வதாகவும் அவர்கள் கூறினர். 
பிரித்தானிய ஆசிய ட்ரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பள்ளிக்கூடங்களை திருத்தி அமைப்பதற்கான நிதி உதவி மற்றும் யுத்தத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்களுக்கான உதவி ஆகிய உதவிகளைச் செய்துவருவதாக கூறினர். இந்தத் தொண்டு நிறுவனம் இலங்கையில் “நல்லிணக்கத்தை” ஏற்படுத்துவதற்காக இயங்குவதாக சொல்வது இங்கு குறிப்பிடத்தக்கது. நல்லிணக்கம் என்ற போர்வையில் மக்கள் பிரச்சினைகளை தொண்டு நிறுவனங்களிடம் தள்ளிவிட்டு அரசு வேடிக்கை பார்த்திருப்பது தெரிந்ததே. 
இது தவிர மேலும் எட்டு நிறுவனங்கள் தொண்டு ஒழுங்காக நடக்கிறதா என கவனித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விபரங்களை நிறுத்தி உரையாட வந்தவற்றை உரையாட நாம் முயன்றபோதும் தாம் செய்யும் வேலைகளை நாம் பார்க்கவேண்டும் என எமக்கு மேலும் தகவல்கள் வற்புறுத்தித் தரப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கு 2000 தையல் இயந்திரங்களை வழங்குவதாகவும் -பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு 1000 சைக்கிள் ஒரு மில்லியன் பென்சில் ஒரு மில்லியன் பேனை வழங்க இருப்பதாகவும் கூறினர். 
100 கிணறுகள் வெட்ட இருப்பதாகவும் மற்றம் அரசியல் கைதிகளுக்கு உதவி வழங்க இருப்பதாகவும் கூறினர்.
நீங்கள் தொண்டுகள் செய்வதானால் அதை வரவேற்கிறோம். நாம் அது பற்றி பேசவரவில்லை என்பதை நாம் கூறினோம். தவிர மேற்சொன்ன விபரங்களைத் தனிப்பட்ட முறையில் நாம் அறிந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது. ஆகையால் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டியதுதான். இப்படியான உதவிகளை தாம் செய்து வருவதாக கூறிய லைக்கா குழுமத்தினர் தம்மீது சில ஊடகங்களும் செயல்பாட்டாளர்களும் அபாண்டமான பழி சுமத்துவதாக தெரிவித்தனர்.
suram

இது பழி சுமத்தும் வேலை இல்லை என்றும் எவ்வாறு அவர்களது தொடர்புகள் வெளிவந்திருக்கின்றன என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம். அவர்கள் எவ்வாறு இலங்கை இராணுவத்துடன் இலங்கைக்குள் சுற்றித்திரிந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டினோம். 
தாம் மக்களிற்கு உதவி செய்வதற்காகவே சென்றதாகவும் தம்முடன் வந்த தம் நிறுவன உறுப்பினர்கள் 50 பேருக்கு கிட்ட இருந்ததால் குறுகிய நேரத்தில் சுற்றி பார்ப்பதற்கு வேறுவழியில்லாமல் விமானப்படையின் ஹெலிஹொப்டர்களை பயன்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தனர். (சென்றவர்கள்; லைக்கா நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என அவர்கள் கூறியபோதும் அது பிரித்தானியாவில் இருந்து சென்ற முதலீட்டாளர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. அங்கு துரித கதியில் மக்களிடம் இருந்து காணிகள் பறிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களிற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவர்களிற்காகவே வடக்கு கிழக்கில் இராணுவம் நிறுத்தப்பட்டு பலவந்தமாக பறிக்கப்படுகின்றதோ என்ற பலத்த சந்தேகங்களும் எமக்கு உண்டு.) 
தாம் யுத்தம் நிறைவடைந்ததில் இருந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகளை வழங்க முயற்சித்ததாகவும் ஆனால் ராஜபக்ச அரசாங்கத்தின் தடைகளினால் அது முடியாமல் போக அவர்களுடன் சேர்ந்து இயங்கவேண்டிய நிலமை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ( ஆனால் லைக்காவும் ராஜபக்ச அரசும் 2007 இல் இருந்தே நெருங்கி செயற்படுகின்றன.) அதனைவிட ராஜபக்ச அனுமதியின்றி அங்கு தொண்டு நிறுவனங்களை ஒருபோதும் நடத்த முடியாது என்ற காரணத்தினால் ராஜபக்ச சகோதர்ர்களுடன் நெருங்கிபழகவேண்டி வந்தது என்றும் காரணம் கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து நாம் லைக்கா நிறுவனத்தினரின் நடவடிக்கைகள் இலங்கை அரசின் இனப்படுகொலையை வெள்ளையடிக்கும் முயற்சிக்கு எப்படி துணைபோகின்றது என்பதனை சுட்டிகாட்டி அதனை நிறுத்துமாறு சொன்னோம்;. லைக்கா நிறுவனம் இலங்கைக்குள் மூலதனமிடுகிறதா இல்லையா என்ற நேரடிக் கேள்விக்கு எமக்கு நேரடிப் பதில் கிடைக்கவில்லை. நீங்கள் தொண்டு நோக்கில் செய்யும் செயல்களுக்கு நாம் எதிரியல்ல. மாறாக லாப நோக்கில் மக்களின் உரிமைகளை பின்தள்ளும் உங்கள் முயற்சியை நாம் எதிர்க்கிறோம். கொலை கார அரசை நீங்கள் பலப்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். நாம் இந்த படுகொலை அரசுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். இத்தருனத்தில் அப்படுகொலை அரசைப் பலப்படுத்தும் அனைத்தையும் நாம் எதிர்ப்போம். 
அதுவும் தமிழ் வியாபாரிகள் என்று கூறிக்கொண்டு தமிழ் பேசும் மக்களிடம் இருந்து லாபத்தை திரட்டிக்கொண்டு அவர்கள் நலன்களுக்கெதிராக இயங்குவதை நாம் மேலும் வன்மையாக கண்டிக்கிறோம் எனச் சொன்னோம்.
லைக்கா குழுமத்திற்காக கதைக்க வந்தவர்களின் தொணி மாறத்தொடங்கியது. தாம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல எல்லா ஆசிய மக்கள் மத்தியிலும் வியாபாரம் செய்வதாகவும் தமிழர் ஆதரவு இன்றிக்கூட தமக்கு லாபம் வரும் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். நாம் அதை ஏற்றுக்கொண்டோம். ஆம் நீங்கள் பல்வேறு வழிகளில் லாபம் பெருக்குகிறீர்கள். அதை நாம் தடுத்து நிறுத்த முடியாதுதான். ஆனால் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உங்கள் பலத்தை உடைக்க எம்மால் முடியும். ஏனெனில் தற்போதய இலங்கைப் படுகொலை அரசை மக்கள் மனதார வெறுக்கிறார்கள். இந்த உணர்வு ஓங்கியிருக்கும் மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு வக்காளத்து வாங்கும் யாரையும் எம்மால் முறியடிக்க முடியும். உங்களுக்கு எங்கள் சமாதானம் வேண்டுமானால் உடனடியாக இலங்கை அரசுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டியுங்கள் -அதன்பிறகு மிகுதியைப் பேசலாம் எனச் சொன்னோம்.
வேறு வழியின்றி தாம் அது பற்றிப் பரிசீலிப்பதாக கூறினர். ஆனால் எல்லாவற்றிற்கும் மண்டையை மண்டையை ஆட்டிய லைக்கா குழுமம் தொடர்ந்தும் தனது லாபத்திற்காக உரிமைகளை உடைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது.
மேற்சொன்ன சம்பவத்தை தொடர்ந்து எம்மை பணத்தின் மூலம் மடக்கும் முயற்சி ஒன்றும் நடந்தது. நாம் இன அழிப்பிற் கெதிரான கடும் கோபம் கொண்ட கலைஞர்கள். நாம் எமது சம காலத்தில் கொத்து கொத்தாக சனங்கள் சாகடிக்கப்பட்டதை தடுக்க முடியாமல் தவித்தவர்கள். நாம் உயிருள்ளவரை இதற்கெதிரான குரலை உயர்த்த உறுதி கொண்டிருப்பவர்கள். எங்களைப் பணம் கொண்டு வாங்கலாம் என நினைத்த லைக்காவின் மந்த புத்தியை எண்ணி எமக்கு சிரிப்புத்தான் வந்தது.
தாம் எமது கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்ன லைக்கா அதை தற்போது முற்றாக நிராகரித்த நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகிறது. பணத்தை வைத்து எம்மை உடைக்கவும் ஏதோ ஒரு வழியில் எமது போராட்டத்தை முடக்கவும் அவர்கள் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
எங்கெங்கு எதிர்ப்பிருக்கிறது என்பது லைக்கா குழுமத்திற்கு தெரியும். அவர்கள் ஒன்றையும் தெரியாமற் செய்யவில்லை. பணத்திமிருடன் அவர்கள்தான் எம்மீது ஒரு யுத்தத்தை கட்டவிழ்த்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களை ஆக்கிரமிக்க கோடம்பாக்கத்து குப்பைக் கலைக்கு பணம் வீசவும் அவர்கள் தயாராக இருப்பதைத்தான் கத்தி படம் சுட்டிக் காட்டுகிறது. ராஜபக்ச அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக இதை மக்கள் பார்க்க வேண்டும். 
லைக்கா முதலான பல்நாட்டு நிறுவணங்களின் லாபப் பேராசையை பாவித்து ராஜபக்ச குடும்பம் உங்கள் வீடுகளின் தொலைக் காட்சிகளுக்குள் புகுந்துகொள்ள முயற்சிக்கிறது. தமிழ் பேசும் மக்களின் ஆதரவை திரட்ட முடியாத இயலாமையை லைக்கா முலம் நிவர்த்திக்கப் பார்க்கிறது இலங்கை அரசு. இதை வேறு பக்கம் திருப்பி எதிர்ப்பவர்களை உடைக்கும் முயற்சியும் நடக்கிறது.
லைக்கா மற்றும் இந்திய சினிமாவை எதிர்த்தும் எமது கலைகளிற்கான அடையாளம் கோரியும் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர் சிக்கலான நிலமையை உணர்ந்த முருகதாஸ் பிரச்சனையை வேறு ஒரு பக்கம் திருப்புகிறார்கள். ஆனால் இந்த போக்குகளாலும் கத்தி படத்தின் தொடர் நிகழ்வுகளாலும் நாம் ஆடிப் போய்விடப் போவதில்லை. 
அவர்களின் பணபலத்தால் எம்மை நசுக்கி விட முடியாது.
லைக்கா மட்டும் அல்ல – ராஜபக்ச நடத்தும் இலங்கை அரச தீவிரவாத்த்தை தாங்கும் அனைத்து பல்தேசிய நிறுவனங்களிற்கு எதிராகவும் போராட்டங்களை நடத்த நாம் தீர்மானித்துள்ளோம். ஆகவே எமது மக்கள் குழம்பாது ராஜபக்ச பங்காளி லைக்காவினை புறக்கணிப்பதோடு மட்டும் இல்லாமல் எமது சமூகத்தை முன்னேற்றும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிNறோம்.
கோடம் பாக்கத்து குப்பைகள் தரும் அற்ப சந்தோசத்துக்கா உரிமைகளை விட்டுக்கொடுக்காதீர்கள் – ஏமாற்றப்பட்டு விடாதீர்கள்.
                                                                                                                                          செங்கோடன்.[இனியொரு -தளத்தில்.]

ஈழ வியாபாரி தெனாலி சோமனின் [சீமானின்]  லைக்கா ஆதரவு அறிக்கை: இதோ:
"‘கத்தி’ படத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார். இது குறித்து சீமான் கருத்து வெளியிட்ட போது, “‘கத்தி’ படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகளோ கருத்துகளோ இருந்தால் அதனை எதிர்க்கிற முதல் ஆளாக நான் தான் இருப்பேன். அந்தப் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் யாரோ கிளப்பும் சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை எதிர்க்க நான் ஒன்றும் ஏதும் தெரியாத மூர்க்கன் அல்ல.
தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வெளியான மெட்ராஸ் கபே, இனம் உள்ளிட்ட படங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி எப்படிப் போராடியது என்பது எல்லோருக்குமே தெரியும். ‘கத்தி’ படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை படம் வெளியான பிறகுதான் அறிய முடியும். படத்தின் கதாநாயகனான தம்பி விஜய்யும் இயக்குநரான தம்பி முருகதாசும் நம்முடைய சொந்தத் தமிழ்ப் பிள்ளைகள்.
படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் பற்றி ஏதேதோ சொல்லி, ‘கத்தி’ படத்தை சீமான் எதற்கு எதிர்க்கவில்லை எனக் கேட்பது முட்டாள்தனம். என்னை விரல் நீட்டிக் கேட்பவர்கள் எதற்காக எனக்காகக் காத்திருக்க வேண்டும். அவர்களே வீதியில் இறங்கிப் போராட வேண்டியதுதானே.
எல்லோரும் உசுப்பிவிட்டு ரசிப்பதற்கு நான் என்ன கோயில் காளையா..? ஈழ அழிப்புப் போர் தீவிரமானபோது இலங்கை அரசுக்கான தகவல் தொடர்பு உதவிகளைப் பெரிய அளவில் ஏர்டெல் நிறுவனம் செய்தது. அதனைக் கண்டித்து அந்த நிறுவன சிம்கார்டுகளை நாங்கள் உடைத்தெரிந்தோம்.
ஆனால், அந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்காக தமிழகத் தொலைக்காட்சிகளும் இதர ஊடகங்களும் எத்தனை நிகழ்ச்சிகளில் ஏர்டெல் நிறுவனத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. இதைக் கண்டிக்க இணையதளப் புரட்சியாளர்கள் எவருக்கும் துணிவில்லையா?
என்னுடைய அடுத்த படத்தை லைக்கா மொபைல் தயாரிக்க இருப்பதாக செய்தி கிளப்பும் இணையதளப் புரட்சியாளர்கள் அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு திரைக்கதை எழுத வந்துவிடலாம். கற்பனைகளுக்கு என்று ஒரு அளவில்லையா? அடுத்த படத்துக்கு வாய்ப்பு கேட்டுத் துண்டு போட்டு வைக்கும் வழக்கம் திரைப்படத்துறைக்கு நான் அறிமுகமான காலத்திலேயே என்னிடத்தில் இருந்தது கிடையாது.
இப்போதும் இரண்டு வருடங்களாக அண்ணன் கலைப்புலி தாணு என்னைப் படம் பண்ணச் சொல்லி வருகிறார். அப்படியிருக்க அடுத்த நிறுவனத்துக்கு நான் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எதையாவது வம்படியாகக் கிளப்பிவிட்டால் சீமான் சிலிர்த்துக் கொண்டு கிளம்பிவிடுவார் என யாரும் கனவு காண வேண்டாம். எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்பது நானும் என் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய விசயம்.
‘சீமான் எதற்கு ’கத்தி’ படத்தை எதிர்க்கவில்லை?’ என பலரும் உசுப்பேற்றுவதற்காக நான் என் சொந்தத் தம்பிகள் மீது பாய முடியாது. லைக்கா மொபைல் நிறுவனம் தமிழகத்தில் இல்லை. அப்படியிருக்க அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்பவர்கள் அந்த நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொள்ளும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும்."

           லைக்கா நிறுவனம்.சோமனின் வாதப்படி சென்னையில் இல்லையா?

கத்தி படம் தொடர்பாக நமது மறத்தமிழன் சீமான் மீண்டும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார். கத்தி படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் தமிழகத்தில் இல்லை என்றும் லண்டனில் எதிர்ப்பைக் காட்டுங்கள் என்றிருக்கிறார். 2009 ஆண்டிலிருந்து சீமான் நடத்த ஆரம்பித்த சந்தர்ப்பவாத அரசியல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற மிகப்பெரும் பொய்யை தமிழர்களுக்குக் கூறுவதிலிருந்து தொடங்கியது.
திரைப்பட இயக்குனராகத் தனது தொழிலை ஆரம்பித்த சீமான் சந்தர்ப்பவாத அரசியலை இயக்க ஆரம்பித்த போதே புலம்பெயர் பிழைப்புவாதிகள் கோரஸ் போட ஆரம்பித்தனர். இன்று லைக்கா/கத்தி விவகாரம் சீமானை நம்பியிருந்த அப்பாவிகளுக்கும் அவரை நிர்வாணமாகக் காட்டியுள்ளது. லைக்கா தமிழ் நாட்டில் இல்லை என்று பச்சைத் தமிழன் கூறிய பச்சைப் பொய்க்கான ஆதரம் இதோ:
லைக்காவின் இந்திய அலுவலகம் தமிழ் நாட்டிலேயே உள்ளது. அதன் முகவரி இதோ:
New No.5 (Old No.2),
9th Avenue, Ashok Nagar,
Chennai – 600 083
லைக்காவின் இந்திய இணையத்தள முகவரி இதோ:
http://lycatelecom.in/
லைக்காவின் துணை நிறுவனமான லைக்கா பிளையின் பதிவு இலக்கம் மற்றும் முகவரி விபரங்கள் இதோ:
Company Name Lyca Fly Private Limited
CIN U63040TN2007PTC065877
Registration Date 31-12-2007
லைக்கா ஹொட்டேல் என்ற மற்றைய நிறுவனத்தின் பதிவு இலக்கம் இதோ:
Company Name: LYCA HOTELS PRIVATE LIMITED
Cin : U55101TN2006PTC061776
Registration Date : 19/12/2006
இது தவிர கத்தி படத்தைத் தயாரிக்கும் லைக்கா புரடக்ஷன் நிறுவனத்தின் பதிவு மற்றும் தொடர்புகள் இதோ:
Company Name Lyca Productions Private Limited
CIN U92120TN2007PTC062756
Registration Date 16-03-2007
தமிழகத்தில் பிலின்ரொன் குளோபல் ரெக் பார்ட்னேர்ஸ் என்ற நிறுவனத்துடன் லைக்கா ஒப்பந்த செய்துகொண்டதற்கான ஆதாரம் இதோ:
http://www.thehindu.com/todays-paper/tp-business/plintron-global-tech-partners-lycamobile/article2427879.ece
இவை எல்லாம் பச்சைதமிழன் சீமானுக்குத் தெரியாமல்  காய்ந்த  தமிழனாக மாறிவிட்டாரோ?
சரி அப்படியே சீமான் இதெல்லாம் தெரியாத அப்பாவி என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் ராஜபக்ச தமிழகத்தில் இல்லை இலங்கையில் நீங்கள் போராட்டத்தை நடத்துங்கள் என்று லைக்காவிற்குச் சொன்னது போல சீமான் சொல்வாரோ என தொண்டர்கள் அச்சமடைவது நியாயமா இல்லையா?
நன்றி: இனியொரு 

suran
-------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...