திங்கள், 18 ஆகஸ்ட், 2014

'' ஜெயலலிதா மீறல்கள்!''


 மத்திய தணிக்கைத்துறை அறிக்கை .
ஜெயலலிதா
மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வருமான வரி என நாம் கஷ்டப்பட்டு அரசாங்கத்துக்குக் கட்டிய வரிப் பணத்தை எல்லாம் ஆட்சியாளர்கள் எப்படி வீணடிக்கிறார்கள் என்பது பற்றிய அதிர்ச்சி அறிக்கை. இது.
இந்த அறிக்கை இதுவரை தமிழக ஊடகங்களில் வெளியாகவே இல்லை.காரணம் விதிகளை மீறி செய்தித்தாட்களுக்கு ஜெயலலிதா தரும் விளம்பரக் காசுதான்.
2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல், இஸ்ரோ அத்துமீறல், இத்தாலி ஹெலிகாப்டர் கொள்முதல் முறைகேடு, காமன்வெல்த் போட்டி, விவசாய கடன் தள்ளுபடி தகிடுதத்தம் என அரசின் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளங்களில் ஏற்றியது சி.ஏ.ஜி. அரசு செயல்படுத்தும் பல்லாயிரக்கணக்கான கோடி திட்டங்களின் கணக்குவழக்குகள் சரியாக இருக்கின்றனவா என்பதைத் தணிக்கை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் Comptroller and Auditor General of India. . சுருக்கமாக... சி.ஏ.ஜி. இதன் கட்டுப்பாட்டுக்குக் கீழே வருவதுதான் இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறை. ஒவ்வொரு வருடமும் கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறது தணிக்கைத் துறை. கடந்த வாரம் தமிழக சட்டசபையின் இறுதிநாளில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை அதிர்ச்சிகளை அள்ளித் தெளித்திருக்கிறது. தமிழக அரசை போஸ்ட்மார்ட்டம் செய்த தணிக்கைத் துறை அறிக்கையின் அம்சங்களை அலசுவோம்.
கறவை மாடு திட்டத்தின் தில்லுமுல்லு!
கிராம ஏழைப் பெண்களுக்கு ஐந்தாண்டு​களுக்குள் 60 ஆயிரம் கறவை மாடுகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார் ஜெயலலிதா. இதன்படி ஒரு பயனாளிக்கு ஒரு மாடு வாங்க போக்குவரத்துச் செலவு எல்லாம் சேர்த்து 35 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை தணிக்கைத் துறை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. 2011 - 12, 2012 - 13 இரண்டாண்டில் 24 ஆயிரம் மாடுகள் வாங்கப்பட்டன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 1,170 பயனாளிகளில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே கறவை மாடுகள் வைத்திருந்தார்கள். குறிப்பிட அளவுக்கு மேல் நிலம் வைத்திருந்த 210 பேர் தகுதியற்றவர்கள் என்பது தணிக்கையில் கண்டறியப்பட்டது. 'தேவையான பால் தரும் பசுக்கள் ஆந்திராவில் இல்லை. அதனால், மாடுகள் வாங்க ஆந்திரா ஏற்ற இடம் அல்ல’ என பசு மாடுகளை வாங்குவதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு சொல்லியிருந்தது. இந்தக் குழுவின் பரிந்துரையைப் புறக்கணித்துவிட்டு ஆந்திராவில் உள்ள புங்கனூர், பலமனேர், பீலேரு சந்தைகளில் மாடுகள் வாங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் தரம் குறைந்த மாடுகள் வாங்க நேரிட்டது. பசு மாட்டின் ஆரோக்கிய நிலை, தரும் பாலின் அளவு போன்றவற்றை நான்கைந்து நாட்கள் கவனித்து அறிந்த பிறகுதான் மாடுகள் வாங்க வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்துக்காக அவசரமாக மாடுகள் வாங்கப்பட்டன. பசு மாடுகள் வாங்கும்போது ஐந்து வயதுக்கும் மேற்படாமல் இருக்க வேண்டும் என்பது திட்டத்தின் வழிகாட்டு நெறி. ஆய்வு செய்தபோது 950 பசுக்களில் 329 பசுக்கள் ஐந்து வயதுக்கும்  மேற்பட்டவை. ஐந்து மாவட்டங்களில் வாங்கப்பட்ட 441 கறவை மாடுகளில் 86 பசுக்கள் மடி வற்றிய மலட்டு மாடுகள். ஒரு நாளைக்கு குறைந்தது 10 லிட்டர் பால் தரும் பசுக்களை, தொடர்ந்து மூன்று வேளை பால் கறந்து சரிபார்த்து வாங்க வேண்டும் என்பது திட்டத்தின் விதி. ஆனால், பசுக்களை வாங்குவதற்கு முன் ஒரு தடவைகூட பால் கறந்து சரிபார்க்கவில்லை என்று 364 பயனாளிகளில் 235 பேர் தெரிவித்தனர்.
சோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில், வாங்கப்பட்ட 6,689 பசுமாடுகளில் 190 மாடுகள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே பயனாளிகளால் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்​பட்டது. குறைவான பால் உற்பத்தி, நோய்வாய்படுதல் காரணமாக விற்கப்பட்டன என பயனாளிகள் தெரிவித்தனர். மொத்தத்தில் 'பயனாளிகளைத் தேர்வுசெய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் திட்டத்தின் பலன்கள், தேவையும் தகுதியும் உடைய பயனாளிகளுக்குப் போய் சேரவில்லை. கறவை மாடுகள் வாங்கும் முறையில் குறைபாடுகள் இருந்தால், தரம் குறைந்த மாடுகள் மற்றும் குறைந்த அளவு பால் தரும் மாடுகள் வாங்கப்பட்டன. இதனால், கிராமப்புற ஏழைப் பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல் மற்றும் மாநிலத்தின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கம் நிறைவேறவில்லை’ என்று சுட்டிகாட்டியிருக்கிறது தணிக்கை அறிக்கை
காணாமல் போன கணினிமயம்!
'அரசு கேபிள் மூலம் பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும்’ என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இணையதள வசதியைக்கூட ஒழுங்காக பயன்படுத்தவில்லை என தணிக்கை அறிக்கை தமிழக அரசை சாடியிருக்கிறது. 'மாநகராட்சிகளில் கணினிமய திட்டம் தோல்வி அடைந்ததோடு, வரி வசூலில் 62.73 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கிறது’ எனச் சொல்லியிருக்கிறது. பிறப்பு, இறப்பு பதிவு, கட்டட அனுமதி, சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை கட்டணம் வசூலிப்பு, வியாபார உரிமங்கள் வழங்குதல் ஆகியவற்றுக்காக கணினிமயமாக்கப்பட்ட சேவை அளிக்கப்படுகிறது. சேலம், நெல்லை, மதுரை, கோவை, திருச்சி மாநகராட்சிகளில், 2013 வரை அமல்படுத்தப்பட்டுள்ள கணினி முறையை, தணிக்கைத் துறை ஆய்வு செய்தது. கணினிமயமாகி எட்டு ஆண்டுகளாகியும், இதுவரை முழுமை பெறவில்லை. 2008 - 13 வரை கணினிமயமாக்கலுக்கு, 3.74 கோடி ரூபாய் செலவிட்டும்கூட பலன் கிடைக்கவில்லை.
மாநகராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் தரமின்றி இருந்ததால், தகவல் ஒருங்கிணைப்பு செய்ய முடியவில்லை. சொத்து வரி, குடிநீர் வரி, பாதாளச் சாக்கடை கட்டணம், காலியிடங்களுக்கான வரி ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. இதனால், 62.73 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பத்திரப்பதிவு முறைகேடுகள்!
2012 - 2013-ம் ஆண்டில் 135 சார்பதிவாளர் அலுவலகங்களின் பதிவுருக்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தோம். 351 இனங்களில், 1,271.27 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை குறைவாக மதிப்பிடுதல், தவறாக வகைப்படுத்துதல் போன்ற முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இதில், 93 இனங்களில் சொத்துகளை குறைவாக மதிப்பிட்டதில் 11.07 கோடி ரூபாயும், 124 இனங்களில் ஆவணங்களைத் தவறாக வகைப்படுத்திய வகையில் 1,243.50 கோடி ரூபாயும், 132 இனங்களில் பிற வழிகளில் 16.70 கோடி ரூபாயும் முறைகேடுகள் நடந்துள்ளன.
ஆவணப் பதிவுக்காக விவரங்கள் சேகரிக்க 'பயோ மெட்ரிக்’ கருவிகள் 108 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டன. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கருவிகளைப் பயன்படுத்தாததால் 85.61 லட்சம் ரூபாய் முடங்கிப்போனது. 22 சார்பதிவாளர் அலுவலகங்களை ஆய்வுசெய்ததில், 1,949 ஆவணங்கள், விடுமுறை நாட்களில் பதிவுசெய்யப்​பட்​டிருந்தன. பதிவுசெய்யப்பட்ட 1,232 ஆவணங்களுக்கான ரசீதுகள், விடுமுறை நாட்களில் உருவாக்கப்பட்டிருந்தன.
சி.எம்.டி.ஏ வருவாய் இழப்பு!
அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளித்தது, தளபரப்பு குறியீடு கணக்கிடுதல், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலத்துக்கான கட்டணம், உள்கட்டமைப்பு கட்டணம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய அமைப்புக்கான கட்டணம், காப்புறுதி காசோலைகளை பணமாக்காதது, தினக்கூலித் தொழிலாளர்களை அமர்த்தியது உள்ளிட்ட வகைகளில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும (சி.எம்.டி.ஏ)  அதிகாரிகளின் குளறுபடி காரணமாக, அரசுக்கு வர வேண்டிய, 33.17 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்குவது போன்ற பணிகளில் மின் ஆளுகை முறையை (மீரீஷீஸ்மீக்ஷீஸீணீஸீநீமீ) செயல்படுத்தியதில் சி.எம்.டி.ஏ தோல்வி கண்டது. கட்டடங்களுக்குத் திட்ட அனுமதி கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் சி.எம்.டி.ஏ நிர்வாகத்துக்கு காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதைத் தவிர்க்கும் வகையில், விண்ணப்பங்களைத் துரிதமாகப் பரிசீலிக்கும் மென்பொருள் நிறுவப்பட்டது.
இந்த மென்பொருள் மின் ஆளுகை முறையுடன் இணைக்கப்படாமல் தனியாக செயல்படுவதால், விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. விண்ணப்பதாரர்களும் தங்களின் விண்ணப்ப நிலையை ஒவ்வொரு கட்டத்திலும் ஒளிவுமறைவின்றி ஆன்லைனில் தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. 1 கோடிக்கு மேல் செலவிடப்பட்டும் மின் ஆளுகைக்கான இலக்கை சி.எம்.டி.ஏ. நிர்வாகத்தால் எட்ட முடியவில்லை.
- இப்படி ஒவ்வொரு துறை வாரியாக தணிக்கை அறிக்கை தலையில் கொட்டுகிறது!
- எம்.பரக்கத் அலி
தணிக்கை அறிக்கை துளிகள்!
வாணியம்பாடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு 2012 அக்டோபரில் திறந்து வைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு நுழைவு சாலை அமைத்துக்கொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து இசைவு பெறாமலேயே இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதன் விளைவாக 3.30 கோடி முதலீடு பயனற்றுப் போனதோடு கடைகள், உணவகங்கள் போன்றவற்றை குத்தகைக்கு விடாததன் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட வருவாயும் கிடைக்காமல் போனது.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் நாகலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்று லட்சம் மதிப்பில் சமையற்கூடம் மே 2013-ல் கட்டப்பட்டது. அந்த வளாகத்தில் ஒரு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வந்த நிலையில், அதன் அருகிலேயே சமையற்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது பள்ளியில் பயிலும் மாணவர்களின் உடல்நலத்துக்கு உகந்தது அல்ல. இந்த சமையற்கூடத்தில் தயாரிக்கப்படும் உணவு மாணவர்களுக்கு நோய் தொற்ற ஏதுவாகும்.
சி.ஏ.ஜி-யும் ஜெயலலிதாவும்!
முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2002 - 2003-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வைக்கப்பட்டபோது, பெரிய கொந்தளிப்புகள் உண்டாகின. சட்டசபையில் அப்போது தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கை குறித்து அப்போது தமிழக தணிக்கை கணக்காயராக இருந்த தீர்த்தன், 'தமிழக நிதிநிலை கவலைக்கிடமாக இருக்கிறது. முறையாக வரிகள் விதிக்கப்படாததன் காரணமாக, ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என மீடியா​விடம் சொல்ல.. கொதித்துபோன ஜெயலலிதா தீர்த்தனைக் கண்டித்து காட்டமாக அறிக்கை விட்டார். ''தமிழகத்தில் கணக்காயர் பிரஸ்மீட் நடத்தியது இதுவரை நடந்தேயிராத ஒரு நிகழ்வாகும். அனைத்து வரைமுறைகளும் மீறப்பட்டுள்ளன. இது அரசியல் சாசனத்துக்கு முரணானது'' என அந்த அறிக்கையில் சீறியிருந்தார் ஜெயலலிதா. பாயின்ட் பாயின்டாக சொல்லி ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, பத்திரிகைகளில் முழுமையாக வெளியாகவில்லை. வெறுத்துப்போன ஜெயலலிதா தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக அவருடைய அறிக்கையை நாட்டின் அனைத்து பத்திரிகைகளிலும் முழுப்பக்க அளவுக்கு விளம்பரமாக வழங்கினார்.
இது கடந்த ஆண்டு அறிக்கை!
தி.மு.க ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கொடுப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் தொலைக்காட்சிகளை இந்த அதிமுக ஆட்சி பயனாளிகளுக்கு வழங்காமல் குடோன்களிலேயே கிடப்பில் போடப்பட்டதால் 4 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கிறது. 
தற்போது  தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் போலி ஆட்கள் பெயரில் பணம் சுருட்டப்பட்டது என கடந்த 2012ம் ஆண்டு தணிக்கை துறை குற்றம்சாட்டியிருந்தது.
நன்றி:விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...