வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நினைக்கவே பகீரென்கிறதே!.

நாள் முழுவதும் மின்வெட்டு; அதைத் தாங்க முடியாத ஒருவன் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிடம் சொன்னானாம்: ""ஐயா, ஏழெட்டு மணி நேரமா "பவர்' இல்லை; இருக்க முடியலை''.
மன்மோகன் சிங் சொன்னாராம்: ""எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாகவே "பவர்' இல்லை; இருக்க முடியாமலா போயிருச்சு?''
தலைமையமைச்சரின் நிலைக்கு இன்று இந்திய ரூபாயும் வந்துவிட்டது. அதற்கும் "பவர்' குறைந்துவிட்டது.
அரசின் நிதி தொடர்பான பொருளாதாரத்தை பேரளவுப் பொருளாதாரம் என்று கூறுவார்கள். அது கடந்த இரு வாரங்களுக்குள்ளாக பேரழிவுப் பொருளாதாரமாக காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால் மாறிக் கொண்டிருப்பது இந்தியாவைப் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைமையமைச்சரும் நிதியமைச்சரும் விழுந்து விட்ட ரூபாய்க்கு முட்டுக் கொடுக்க நாள் ஒன்றுக்கு மூன்று தடவை ஆலோசனை நடத்துகிறார்களாம்.
வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கலாம் என்றிருந்தது ஒரு தூரத்துக் கனவு. விடுதலை அடைந்து 65 ஆண்டுகளுக்குள் ரூபாய் 65 மடங்கு விழுந்திருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் எழுபதைத் தொடும் என்று வேறு எதிர்பார்ப்பு!
தங்க இறக்குமதியைத் தடுத்து விட்டால் ரூபாய் கீழ்நோக்கி பாய்வதைத் தடுத்து விடலாம் என்பது ப. சிதம்பரத்தின் கையிலிருக்கும் ஒரே தீர்வு!
தங்க இறக்குமதிக்கு நான்கு விழுக்காடு வரி விதித்தார்;

suran
அடுத்த இரண்டு நாட்களில் ஆறு விழுக்காடாக்கினார்; எட்டாக்கினார்; பத்தாக்கி விட்டார்; பதிற்றுப் பத்தாக்கினாலும், சரிக்குச் சரி வரி விதித்தாலும், காதலியை "என் தங்கமே' என்று கொஞ்சுகிற ஒரு நாட்டில் தங்கத்தின் மீதுள்ள பற்று குறைய முடியுமா?
ஒரு பவுன் ரூ.19,000லிருந்து 24,000 ஆகியதுதான் கண்ட பயன். கெடுபிடிகளுக்குத் தக அது ரூ.30,000ஐத் தொட்டுத் தன் எல்லையை ரூ.35,000 ஆக வரையறுத்துக் கொள்ளும் என்கிறார்கள்!
இனி அடுத்த கட்டமாக வரிவிதிப்பைத் தாண்டி தங்க இறக்குமதியையே தடை செய்து விடலாம் நம்முடைய நிதியமைச்சர். அது ஒன்றும் பிழையில்லை; தங்கம் ஒன்றும் இன்றியமையாப் பொருளில்லை.
நம்முடைய அன்னியச் செலாவணியை தின்பவை தங்கமும், கச்சா எண்ணெயும்தான். கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்க முடியாது. உற்பத்தியிலிருந்து போக்குவரத்து வரை அனைத்திற்கும் அதுவே உந்து விசை.
இதுவரை கச்சா எண்ணெய் 170 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தாற்போல் தங்கம் 60 கோடி டாலருக்கு இறக்குமதி ஆனது.
ஒரு நாடு நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும்போது தங்கத்தின் இறக்குமதிக்கு டாலர் ஒதுக்கீடு என்பது பேதைமையிலெல்லாம் பேதைமை என்பதால் தங்கத்திற்கு நிதியமைச்சர் கொடுத்த நெருக்கடி நேரியதே!
ஆனால் அதற்கு ஒரு படி மேலே சென்று, பொன்னின் மீது கொண்டுள்ள மோகத்தைத் தீய்த்துவிடுங்கள் என்று முத்தம்மாளுக்கு ஞானோபதேசம் செய்யப் புறப்பட்டாரே சிதம்பரம், அது தபோவனத்திலிருந்து கொண்டு தாயுமானவர் பேச வேண்டிய பேச்சு; நிதியமைச்சர் சிதம்பரம் பேசக் கூடாது!
""தங்கம் என்பது தாமிரம், இரும்பு, வெண்கலம், அலுமினியம் போல ஒரு உலோகந்தானே'' என்று மூன்றாங் கிளாஸ் வரையே படித்த முத்தம்மாளுக்கு ஆர்ட்வர்டில் படித்த பெருமிதத்தில் பாடம் எடுத்திருக்கிறார் சிதம்பரம்!
அவள் திரும்ப நிதியமைச்சரிடம், "தங்கம் என்பது உலோகந்தான்; ஆனால் ரூபாய் என்பதும் வெறும் தாள்தானே' என்று கேட்டு விட்டதாகச் சொல்லுகிறார்கள். அதற்கு நிதியமைச்சர் என்ன சொன்னார் என்பது பதிவாகவில்லை!
தலைகுப்புற வீழ்ந்து கொண்டிருந்த திரிசங்குவுக்கு "நில்' என்று விசுவாமித்திரர் கட்டளை இட்டது போல, தலைகுப்புற வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய்க்கு "நில்' என்று நிதியமைச்சர் கட்டளை இட்டுத்தான் பார்க்கிறார். அது கேட்டால்தானே!
suran
ஆகவே ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்க சிதம்பரம் பன்னாட்டு நிதியத்திடம் இருநூறு டன் தங்கத்தை அடமானம் வைக்கப் போகிறாராம்!
இதைக் கேட்டு விட்டு முத்தியாலுப்பேட்டை முத்தம்மாள் சிரியாய் சிரிக்கிறாள்!
ஒரு அவசரம் ஆத்திரம் என்பது நிதியமைச்சருக்கு மட்டும்தானா? முத்தம்மாளுக்கும் இருக்காதா? முத்தம்மாளுக்கு ஒரு வட்டிக் கடை; நிதியமைச்சருக்கு உலக வங்கி! இவ்வளவுதானே வேறுபாடு!
தாமிரம் போன்றதுதான் தங்கம் என்றாரே நிதியமைச்சர்; தாமிரத்திற்கு உலக வங்கியில் கடன் கொடுக்கிறானா என்று வேறு கேட்டுவிட்டாளாம் அந்த முத்தம்மாள்!
உண்மையான செல்வம் என்பது உற்பத்திப் பொருள்கள்தாம்! அதைப் பிரதிநிதித்துவப் படுத்த வந்தவையே ரூபாய்த் தாளும் தங்கமும்!
தங்கமும் தாமிரமும் ஒன்று என்பது குதிரையும் கழுதையும் ஒன்று என்பது போன்றது!
தங்கத்திற்கு பன்னாட்டு ஏற்புடைமை உண்டு. அதற்குள்ள பல சிறப்புகளும், அதனுடைய கிடைப்பருமையுமே அதற்குக் காரணம்!
லண்டனிலுள்ள மார்கரெட் அதைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக் கொள்கிறாள்; முத்தியால்பேட்டை முத்தம்மாள் அதைக் கழுத்திலும் காதிலும் தொங்க விட்டுக் கொள்கிறாள். அவ்வளவுதான்!
இந்த ரூபாய்த் தாளை எவன் நம்புவான்? நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என்று எல்லாரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஒரு நெருக்கடியை ஈடுகட்ட வக்கு வகை தெரியாதபோது, அச்சகம்தான் கையிலிருக்கிறதே என்று விருப்பத்திற்கு அச்சடித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்; சோமாலியா நாட்டு ரூபாய்த் தாளைப் போல் நம்முடைய நாட்டு ரூபாய்த் தாளும் ஆகி விடாதா? சோமாலியாவில் சோம்பு வாங்கப் போனால் பலசரக்குக் கடைக்காரன் அமெரிக்க டாலர் வைத்திருக்கிறாயா என்று கேட்கிறானே! அந்த நிலை இந்தியாவுக்கு வந்து விடக் கூடாது என்றாலும், எதற்கும் முத்தம்மாள் எச்சரிக்கையாக இருக்க நினைப்பது குற்றமா?
எப்படியோ, சிதம்பரத்திற்கும் சிக்கல் தீர்ந்தது. கையிருப்பு இல்லாத நிலையில் தங்கம் வாங்குவதற்கு இனி 60 கோடி டாலர் செலவழிக்க வேண்டியதில்லை. ஆகவே முத்தம்மாளின் தங்க மோகத்தால்தான் நாடு முழுகிவிட்டது என்று சிதம்பரம் இனிமேல் சொல்ல முடியாது. புதிய காரணம் கண்டுபிடித்தாக வேண்டும்;

suran
இல்லையென்றால் நம்பத்தக்க விதமாகப் புதியதொன்றைப் படைத்து மொழிய வேண்டும்!
முத்தம்மாளுக்கும் பெரிதாக ஒன்றும் பிரச்னை இல்லை; அவள் மகள் கலியாணத்திற்குத் தேவையான கொஞ்சம் போல தங்கம், இனி வங்களாகுடா கடல் வழியாக வந்துவிடும்!
பொதுவாக நம்முடைய நாட்டின் பொருளாதாரம் கவலை அளிப்பதாகவே உள்ளது. நடப்புக் கணக்கில் பற்றாக்குறை என்பது அதிலுள்ள மிகப்பெரிய ஓட்டை. மீண்டும் நாடு 1991 நிலையை நோக்கி விரைகிறதோ எனறு அஞ்சுபவர்களும் இருக்கிறார்கள்!
பணவீக்கம் மோசமான நோய்; இப்போதையப் பணவீக்கம் பத்து விழுக்காடு; தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க மன்மோகன் அரசால் முடியவில்லை.
பணவீக்கம் முலாயம் சிங் மாதிரி; பயமுறுத்தி முலாயமைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது போல, கடுமையான நடவடிக்கைகளால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மட்டுமீறிய பணவீக்கத்தில் நாட்டில் எந்தப் பொருளும் கிடைக்காது; ஆனால் எல்லோரிடமும் பணம் இருக்கும்! மக்கள் படிப்படியாகப் பண்டமாற்று முறைக்கே போய் விடுவார்கள்!
பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டிலிருந்து குறைந்து இப்போது 4.5 விழுக்காடு ஆகிவிட்டது. இது பத்தாண்டுகளாக இல்லாத நிலை.
தொழில் உற்பத்தி குறைந்து குறைந்து வெறும் "ஒரு' விழுக்காடு ஆகி விட்டது. உற்பத்தியே இந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால் எதை ஏற்றுமதி செய்வது? ஏற்றுவதற்கு இனி மனிதர்களைத் தவிர வேறொன்றும் இருக்காதோ என்பது குறைந்த கவலை அல்லவே!
கார் உற்பத்தி கூட 12 விழுக்காடு விழுந்து விட்டது. இப்போதைய அளவு உற்பத்தி கூட, ஊராட்சித் தலைவர்கள், நகராட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் என்று இவர்களிடமுள்ள "வற்றாத பணப்புழக்கத்தை' நம்பியே நடக்கிறது. இந்தியாவில் "சனநாயகம் தழைத்தோங்குவதன்' பக்கவிளைவு இது!
சுருங்கச் சொன்னால் ஏற்றுமதி குறைந்து விட்டதால் அயல்நாட்டுப் பணத்தின் வரத்துக் குறைந்துவிட்டது;

suran
 இறக்குமதி குறையாததால் டாலரின் தேவை கூடுதலாகி நெருக்கடி உண்டாகிவிட்டது!
பத்து இருபது நாள்களுக்கு முன்னர் அமெரிக்க நாட்டு "பெடரல் ரிசர்வில்' சில வர்த்தக சமிக்ஞைகள் வெளியாயின! பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலைகிற பண முதலைகளை ஈர்க்கும் வண்ணம் அந்தச் சமிக்ஞைகள் அமைந்திருந்தன.
அமெரிக்கப் பொருளாதாரம் தன்னுடைய சோர்வை அகற்றிக் கொண்டு விட்டது. ஆகவே வளரும் நாடுகளிலுள்ள முதலீடுகள் உறிஞ்சப்படுவதும் தொடங்கிவிட்டது.
2003க்கும் 2008க்குமிடையே, வற்றி வறண்டு போயிருந்த இந்தியப் பொருளாதாரம் கொஞ்சம் சதை போட்டு மினுமினுக்கத் தொடங்கியதற்கு இந்த முதலீடுகளே காரணம்! இந்த காலகட்டத்தில் பொருளாதார அதிசயம் இந்தியாவில் நிகழ்ந்து விட்டதாக தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு அதிசயித்துப் போனார் மன்மோகன் சிங்.
ஆகஸ்ட் 14 ஆம் நாளில் முதலீடுகளை இறுக்கிப் பிடிக்கிற முயற்சியில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குப் பெரும்பணம் கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்தும் வண்ணம் நிதித்துறை அதிகாரிகள் சில கட்டளைகள் பிறப்பித்தனர்.
வாத்தியார் ஒரு பிள்ளையை உதைத்தால், அடுத்த பிள்ளையும் அஞ்சுவது போல, இந்திய நிறுவனங்களுக்கு நேர்ந்தது நமக்கும் நேர்ந்து விடுமோ, நம்முடைய கணக்குகளும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடுமோ என்றஞ்சிய வெளிநாட்டு முதலீடுகள் ஓட்டம் பிடிக்கத் தலைப்பட்டன. 1998ல் மலேசியா நிதி நெருக்கடியில் சிக்கியபோது அன்னிய முதலீடுகளை வெளியேறிவிட முடியாதபடி மூடி வைத்து விட்டனர். ஆசியாக்காரனெல்லாம் ஒரே மாதிரிதான் என்பது வெளிநாட்டுக்காரனின் எண்ணம்!
 இந்த உத்தரவுக் குழப்பத்திற்குப் பிறகு இன்றுவரை ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் இந்தியப் பொருளாதாரத்தின் முன்பற்களில் மூன்று காணாமல் போய்விட்டது.
 சிதம்பரத்தின் வளர்ப்புப் பிள்ளையான பங்குச் சந்தை அடுத்தடுத்த நாள்களில் 1,630 புள்ளிகளை இழந்துவிட்டது. வங்கிப் பங்குகள் வாயைப் பிளந்தது வியப்பல்லவே!
 பதறிப்போன ரிசர்வ் வங்கி, கையிருப்பிலுள்ள டாலரை விற்று, அதற்குப் புழக்கத்தை ஏற்படுத்தி ரூபாயைச் சரிவிலிருந்து மீட்டு விடலாமா என்று முயல்கிறது.
 இது ஒரு சிறு கால ஏற்பாடாகவே இருக்க முடியும்! தொடர்ந்து செய்தால் டாலர் கையிருப்பு குறைந்து இந்திய ரூபாய் மீண்டும் குட்டிக்கரணத்தைத் தொடங்கிவிடும்!
suran
 ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஏற்படுத்திய தொடர் விளைவுகளில் ஒன்றுதான் சிதம்பரம் முத்தம்மாளுக்குத் தங்கம் குறித்து ஞானோபதேசம் செய்ததும், அதற்கு அடுக்கடுக்காக வரி விதித்ததும்!
ஆனால் ஆகஸ்ட் 14-இல் நிதித்துறை பிறப்பித்த உத்தரவைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்திய ரூபாயின் பல்டிகளுக்குக் காரணம் என்பது மிகவும் மேம்போக்காகச் சொல்லப்படுவது!
பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசமும் கிடையாது; தேசபக்தியும் கிடையாது. பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நாடு நாடாக அலையும் நாடோடிகள் அவர்கள்! நாம் ஒரு விடுதியில் தங்கி விட்டு ஒட்டுபற்று இல்லாமல் காலி செய்து விட்டு வந்து விடுவது போன்றதுதான் அவர்கள் முதலீடு செய்கிற நாடுகளோடு அவர்களுக்குள்ள உறவும்! எது இலாபகரமானது என்று பார்த்து வருவார்கள்; இங்கே மேய்ந்து முடிந்த பிறகு பச்சை தெரிகிற இன்னொரு நாட்டுக்குப் போய் விடுவார்கள்!
அமெரிக்கா சுணக்கமாக இருந்தபோது இங்கே வந்தார்கள்; சுணக்கம் நீங்கி நிமிர்ந்து விட்டது என்றவுடன் புறப்பட்டு விட்டார்கள்! வளரும் நாடுகளைவிட வளர்ந்த நாடுகள் சிறந்தவைதானே!
suran
பழ.கருப்பையா.
இந்தியா இயந்திரவியலில், தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நாடு. மேலைநாட்டாரிடம் போய்ச் சப்பான் கற்றுக் கொண்டதுபோல, டெங் ஜியாபிங்கின் சீனாவும் கற்றுக் கொண்டதுபோல, நாமும் அவர்களை அவர்களுடைய முதலீட்டோடும் தொழில்நுட்பத்தோடும் பிடித்துக் கொண்டு வந்து, கன்னத்தில் அரகரா போட்டுக் கொண்டுகூட கற்றுக் கொள்ளலாம்!
அந்த முதலீடும் ஓரளவு நிலையானதாக இருக்கும்!
வர்த்தக முதலீடுகளுக்கு அவர்களின்மீது சாய்ந்திருந்து விட்டு முட்டை உருவி விட்டானே என்று சொல்வதில் பயனில்லை!
அமெரிக்க பெடரல் ரிசர்வின் ஒரு சிறு சமிக்ஞை இந்தியாவை மட்டுமா ஆட்டியது? பிரேசிலில் இருந்து இந்தோனேசியா வரை பல நாடுகள் படபடத்துப் போய் விட்டனவே!
ஆனால் இவ்வளவு குறுகிய நாள்களில் மிகவும் பாதிப்படைந்தது இந்தியாதான்! பிடி என்ன நம்முடைய நிதியமைச்சர் சிதம்பரத்திடமா இருக்கிறது?
இந்திய ரூபாய் முழுக்கால் அளவுக்கு வேட்டி கட்டியிருந்தது; அது இப்போது முழங்கால் அளவுக்குக் குறைந்து துண்டாகிவிட்டது! இதுவும் குறைந்து கோவணமாகி விடுமோ என்னவோ!
நினைக்கவே பகீரென்கிறதே!
                                                                                                                                  -பழ.கருப்பையா.
நன்றி:தினமணி
                                                                                                                                                 கட்டுரையாளர்: சட்டப்பேரவை உறுப்பினர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உடலையும், மனதையும் நலமாக்கும் இசை!

------------------------------------------------------------------

இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
suran
கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியல்துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 207 நபர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
அதில் 21 நபர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்த இசையை அரைமணிநேரம் கேட்டனர். இரண்டு வாரங்கள் அவர்கள் தொடர்ந்து இசையை கேட்டனர். அதே எண்ணிக்கையுள்ளவர்கள் இசையை கேட்காமல் வேறு வழிகளில் ரிலாக்ஸ் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இசையை கேட்டவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருந்தது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தது.
இதேபோல் இசையை கேட்காதவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இசையானது மனதை லேசாக்குவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தினசரி அரைமணி நேரமாவது இசையை கேட்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பைல்கள் காணாமல் போனது உண்மைதான்.
---------------------------------------------------------------------------------------------------------
 நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சில பைல்கள் காணாமல் போனது உண்மைதான் என்று சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
 கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2009-ம் ஆண்டு வரை மத்திய நிலக்கரி சுரங்க இலாகா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்தது. அப்போது நிலக்கரி சுரங்கங்கள் உரிமம் வழங்கப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது.
suran
 இதனையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டது தொடர்பாக பல பைல்களை காணவில்லை என்று நிலக்கரி சுரங்க இலாகா அறிவித்துள்ளது.
 இதற்கும் பிரதமர் மன்மோகன் சிங்குதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஊழலை மறைக்க பைல்களை காணாமல்போக செய்திருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.  இந்தநிலையில் பைல்கள் காணாமல் போனது குறித்து சுப்ரீம்கோர்ட்டில் பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான சில பைல்களை காணவில்லை. அ வைகளை தேடிப்பிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் காணாமல் போன பைல்களை தேடிப்பிடிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க உரிமம்கோரி தனியார் கம்பெனிகள் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 173 ஐ காணவில்லை. இவைகளில் 157 விண்ணப்பங்கள் கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டவைகளாகும்.
 அந்த விண்ணப்பதாரர்களுக்கு நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்படவில்லை என்று மத்திய நிலக்கரி சுரங்க அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக 47 பைல்களை சி.பி.ஐ. கோரியுள்ளது. இதில் 7 பைல்களை காணவில்லை. விசாரணையை முடிக்க சி.பி.ஐ. கேட்கும் 9 பைல்களை தேடிப்பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பைல்கள் காணாததாலும் சி.பி.ஐ. விசாரணைக்கு அந்த பைல்களை கொடுக்க முடியாததாலும் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
 மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பிரமாண பத்திரத்தை நீதிபதி லோதா தலைமையிலான சிறப்பு பெஞ்ச் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது.
suran
 காணாமல் போன பைல்களை தேடிப்பிடிப்பதற்காக நிலக்கரி சுரங்க கூடுதல் செயலாளர் தலைமையில் அமைச்சகங்களுக்கான கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கிடையில் நிலக்கரி சுரங்க அதிகாரிகள் சிலர் மீது வழக்கு தொடர்வதில் மத்திய அரசுக்கும் சி.பி.ஐ.க்கும் மோதல் போக்கு உருவாகி உள்ளது.
 நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வையில் நடந்து வருவதால் ஊழலில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது வழக்கு தொடர முன்அனுமதி பெறத்தேவையில்லை என்று சி.பி.ஐ. கூறி வருகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...