வியாழன், 11 மே, 2017

வரலாறு காணாத வெயிலுக்குக் காரணமென்ன?

அரியானா, சண்டிகர், தில்லி, இராசஸ்தான், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, மராட்டியம், தெலங்கானா, இராயலசீமா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இந்தாண்டு கடும் வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என கடந்த 15.04.2016 அன்று, இந்திய வானிலை ஆய்வுத்துறை (India Meteorological Department - IMD),, எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
ஏற்கெனவே, கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெப்ப அலைகள் காரணமாக, இந்தியத் துணைக் கண்டத்தில் சற்றொப்ப 2300 பேர் உயிரிழந்தனர். இதுவே உலகின் 5ஆவது மிகப்பெரும் வெப்பத்தாக்கம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், இந்தாண்டு வெப்பத்தால் நடைபெற்று வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட மேலும் உயரக்கூடும் என்ற அளவிற்கு கடும் வெப்பம் வீசி வருகின்றது.
வடநாட்டில் தொடங்கி ஆந்திரா வரை சற்றொப்ப 300க்கும் மேற்பட்டவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். ஒரிசாவின் தட்லாகர் என்ற பகுதியில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 119.3 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. மே 6 (2016) வரை, தெலங்கனாவில் 249 பேர் வெப்பத்தாக்கதால் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வீட்டைவிட்டு வெளியில் செல்லாதீர்கள் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடும் அளவிற்கு, கடுமையான வெப்பம் வீசி வருகின்றது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (Japan Meteorological Agency - JMA), கடந்த 1891-ஆம் ஆண்டு முதல் தற்போதைய ஆண்டு வரையிலான சராசரி வெப்ப நிலையை ஆய்வு செய்து ஓர் அறிக்கையை 15.04.2016 அன்று வெளியிட்டது. அதில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த மார்ச் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 1.07 டிகிரி செல்சியஸ் அதிகரித் துள்ளதாகவும், இது மிகவும் ‘அதிர்ச்சிகர மானது’ மட்டுமல்ல, இது ‘ஒருவகையான பருவ நெருக்கடி நிலை’ என்றும் எச்சரித்துள்ளது. வட அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஐ.நா.வின் உலக வானிலைக் கழகம் (World Meteorological Organisation) ஆகிய அமைப்புகள், ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் முடிவுகளை உறுதி செய்தன.
இந்தளவிற்கு கடுமையான வெப்பம் ஏற்படுவதற்கு, காடுகள் அழிப்பு  பொதுவான காரணமாக சொல்லப் பட்டாலும், குறிப்பான காரணங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளின் தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளின் காரணமாக வெளியேறும் கரியமில வாயுவின் அதிகரிப்பே, இந்த வெப்ப நிலை உயர்வுக்கு முகாமையான காரணம் என அறிவியலாளர்களும், ஆய்வுகளும் கருத்துத் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வானிலை ஆய்வு சங்கம் (American Meteorological Society) வெளியிட்டு வரும் Journal of Climate என்ற பருவநிலை குறித்த ஆய்விதழில் வெளியிடப் பட்ட ஓர் ஆய்வு, ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்டவை மின் உற்பத்திக்காக அதிக அளவில் நிலக்கரியை எரிப்பது அப்பகுதியில் மட்டு மல்லாது உலக அளவில் கூட மழையின் அளவைக் கடுமையாக குறைத்து வருகிறது என்று தெரிவிக்கிறது. (காண்க: http://phys.org/news/2016-04-higher-coal-asia-stress.html)
அனல் மின்சார உற்பத்தி காரணமாக வெளி யேற்றப்படும் சல்ஃபர் டையாக்சைடு வாயு, மக்களின் உடல்நலத்திற்கு நேரடி அச்சுறுத்தல் என்பதோடு மட்டுமின்றி, உள்நாட்டு மற்றும் உலக அளவிலான பருவநிலை மாற்றத்துக்கும் அது மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக இந்த ஆய்வு முடிவு உறுதிப் படுத்துகிறது. இந்த வாயு வெளியேற்றத்தின் அளவைக் குறைக்க பருவ நிலைக்கான பாரீசு மாநாட்டில் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், அதன் மெய்நடப்பு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
சல்ஃபர் டையாக்சைட் வாயுவின் அதிக வெளி யேற்றம் விண்வெளியின் கீழடுக்கு, மேலடுக்கு ஆகிய வற்றின் மீது இரு தீவிர எதிர்நிலைகளில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்றும், இதன் காரணமாக தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் ஒருபுறம் குளிரையும் அதிகமாக உணர முடியும் என்றும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அதாவது, ஒருபுறம் மழையைக் குறைக்கும், கடலின் மேல்புற வெப்பநிலையை அதிகரிக்கும், இன்னொருபுறத்தில், சில பகுதிகளில் குளிரையும் அதிகப்படுத்தும். இப்படியாக கணிக்க முடியாத ஒரு பரிமாணத்தில் இதன் விளைவுகள் இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
வரும் காலங்களில் இந்த நாடுகளின் எரிசக்தி உற்பத்தி தெரிவைப் பொறுத்துதான் பருவநிலையும் தீர்மானிக்கப்படும் வாய்ப்புள்ளதாக, இந்த ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள் ளதும் குறிப்பிடத்தக்கது.  
வெப்பத்தைக் குறைப்பதற்கு மரம் நடுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை! தொழிற்சாலைகளின் மின் நுகர்வைக் குறைத்தல், மின் உற்பத்தியை பசுமை வழிகளில் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல பணிகளை அரசு மேற்கொண்டால்தான், வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். புவியைப் பாதுகாக்கவும் முடியும்!
                                                                                                                                                  இளந்தமிழன்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்.
====================================================================================================================================

தாஜ்மஹால்  மர்மங்கள்!

ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தான் பேகம் நினைவாகக் கட்டிய தாஜ்மஹாலில் பல மர்மங்கள் புதைந்துள்ளன.

தாஜ்மஹாலில் பல மர்மங்கள் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவற்றை கண்டறியும் முயற்சிகளை மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. அவ்வாறு முயற்சி எடுக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.



அவற்றில் சில

1) அல்லாவின் 99 பெயர்கள் தாஜ்மஹாலின் சுவர்களில் பலவித வண்ணங்களில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்லாம் மதப்படி, கடவுளுக்குப் பெயர் எதுவும் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

2) இப்போது இருக்கும் வெள்ளை தாஜ்மஹாலைப் போல, கருப்பு தாஜ்மஹால் ஒன்றை கட்ட ஷாஜகான் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரை வீட்டுச் சிறையில் தள்ளி, அந்த திட்டத்தை அவுரங்கசீப் தவிடுபொடியாக்கிவிட்டார்.

3) 300 ஆண்டுகளுக்கு முன்பே, தாஜ்மஹாலின் மதிப்பு 32 பில்லியன் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இது 65 பில்லியனாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

4) தாஜ்மஹாலில் சிறு தவறு கூட நேராத வகையில், கட்டிடப் பணிகளில் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள சமச்சீரான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.

5) இந்த கட்டிடத்தை கட்ட 22 வருடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுபோன்ற சிறப்பான ஒரு கட்டிடத்தை வேறு யாரும் கட்டக்கூடாது என்பதற்காக, தாஜ்மஹால் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களின் கைகளை, ஷாஜகான் வெட்டிவிட்டதாகவும் கதைகள் உலாவுகின்றன.

6) தாஜ்மஹால் உள்ளேயும் சிறு ஓடை ஒன்று ஓடுவதாகக் கூறப்படுகிறது. ஷாஜகானை பழிவாங்கும் வகையில் கட்டிட சிற்பிகள் இந்த வேலையை செய்துள்ளனர்.

7) கட்டிடத்தின் உள்ளே ஓடும் சிறு ஓடையின் மூலம் எங்கே உள்ளது என்பது யாருக்குமே தெரியவில்லை. இதனால், கட்டிட வடிவமைப்பாளரை ஷாஜகான் கொல்லாமல் உயிருடன் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

8) தாஜ்மஹாலின் உள்ளே, பெண் ஒருவர் அடிக்கடி அழும் சத்தம் கேட்பதாக, தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனை சில சுற்றுலாப் பயணிகளும் உறுதி செய்துள்ளனர்.

9) தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாகவும், அதனை உருமாற்றி, தாஜ்மஹாலாக ஷாஜகான் மாற்றிவிட்டார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

10) மேலும், தாஜ்மஹாலை ஷாஜகான் புதியதாக கட்டவில்லை என்றும், ஏற்கனவே இருந்த கோவிலை உருமாற்றி, சலவை கற்களை பதித்து, தாஜ்மஹால் என மாற்றிவிட்டார் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

எது எப்படியோ, பலவித மர்மங்களை கொண்டிருந்தாலும், வெளியே இருந்து தாஜ்மஹாலை பார்க்கும்போது கிடைக்கும் மன அமைதி வேறு எங்கும் கிட்டாத ஒன்று என சுற்றுலாப் பயணிகள் பரவசத்துடன் தெரிவிக்கிறார்கள். அதுவே உண்மை…
===========================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...